ராட்சசியே உன் ரட்சகன் நான் 5

ராட்சசியே உன் ரட்சகன் நான் 5
ராட்சசியே உன் ரட்சகன் நான் 5
காலையில் எழுப்போதே வேணிக்கு காய்ச்சலில் உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்திருக்க, கல்லூரிக்கு விடுமுறை சொல்லிவிட்டு சோர்வோடு படுத்துக் கிடந்தாள்.
அவள் எண்ணம் முழுவதும் கதிர் மட்டுமே. அவன் சாப்பிட்டானா? தூங்கினானா? இன்னும் அழுது கொண்டே இருப்பானா? பாண்டி கதிரை அடித்து துன்புறுத்துவானா? என்று அவள் மனம் பதறி தவிக்க, அவள் உடல்நிலை மேலும் மோசமாகிக் கொண்டு போனது.
இங்கே, தூக்கம் கலைந்து எழுந்தவுடனேயே, கதிர் தன் அலப்பறையைத் தொடங்கி இருந்தான். “வேணி… வேணி… வேணும்…” என்று சத்தம்போட்டு கத்தி அழ தொடங்கினான். பாண்டி, மங்கா, நைனா யாருடைய சமாதானத்திற்கும் அடங்காமல் கத்தினான். அட்மபிடித்தான்.
புது இடம், புது மனிதர்கள், தன் தாயை பிரிந்த ஏக்கம் என அந்த சிறுவன் மனம் கலங்கி தவித்து இருந்தது. அவனை எப்படி சமாளிக்க என்று புரியாமல், பாண்டியும் ஒரு நிமிடம் விழிபிதுங்கி நின்று விட்டான். பின்னர், கதிரை அப்படியே தூக்கிக் கொண்டு, பண்ணையில் இருந்த மாடு, கன்றுகளை அவனுக்கு வேடிக்கை காட்டினான். முதலில் அவற்றை பார்த்தும் அடங்க மறுத்த கதிர், மெல்ல மெல்லமாக அவற்றை எல்லாம் அதிசயம் போல பார்த்து கண்கள் விரித்து, கையால் தொட்டு விளையாட ஆரம்பித்தான்.
அந்த ஒற்றை சிறுவனை குளிக்க வைத்து, உணவூட்டி, விளையாட்டு காட்டி, சமாளித்து தூங்க வைப்பதற்குள், அந்த ஒரு நாளிலேயே பாண்டிக்கும் மற்றவர்களுக்கும் நாக்கு தள்ளிப்போனது.
***
அடுத்த இரண்டு நாட்களில், வேணியின் காய்ச்சல் குறைந்திருக்கவும், கதிரை எப்படி அவனிடமிருந்து மீட்கலாம் என்பதே அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்றை மறந்தவளாக நெற்றியில் அடித்துக் கொண்டாள். உடனே தாத்தாவின் கைபேசியை எடுத்து, எண்களை அழுத்தினாள்.
மறுமுனையில் எடுத்ததும், “ஜீவா…” என்று அவள் குரல் பரிதவிப்பாக அவன் பெயரை உச்சரித்தது.
“வேணி நீயா?” என்று கேட்டவன் உடனே, “அறிவிருக்கா உனக்கு? ரெண்டு நாளா கால் பண்ணா எந்த ரெஸ்பான்ஸூம் இல்ல. மெஸேஜ் பண்ணா ரிப்ளே இல்ல. காலேஜ்ல விசாரிச்சா நீ லீவ்னு சொல்றாங்க… எனக்கு இங்க பைத்தியம் பிடிக்குது, எங்க போய் தொலைஞ்ச?” என்று கோபமாக கத்தினான்.
அவனது காட்டு கத்தல் அவளை பாதித்ததாக தெரியவில்லை. “ஜீவா, கதிரை… அவன் தூக்கிட்டு போயிட்டான்.” என்று கலங்கிய குரலில் சொன்னாள்.
“கதிருக்கு என்னாச்சு? யார் தூக்கிட்டு போனது?” ஜீவா எதுவும் புரியாமல் விசாரிக்க, நடந்தது அனைத்தையும் வேணி சொல்லி முடிக்கவும், அவனிடம் பதில் மொழியில்லை.
“என்ன ஜீவா, எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” வேணி பரிதவிப்பாக கேட்க,
“என்னை என்ன சொல்ல சொல்ற வேணி?” அவனும் அவளிடம் அதே கேள்வியை வைத்தான்.
“கதிர் எனக்கு வேணும்… அவனை எப்படியாவது நம்மகிட்ட அழைச்சிட்டு வந்திடணும், அதுக்கு ஏதாவது வழி சொல்லு ஜீவா.”
“இதுல எடுத்தோம் கவுத்தோம்னு நம்மால எதுவும் செய்ய முடியாது வேணி. கொஞ்சம் பொறுமையா இரு, யோசிச்சு செய்யலாம்.” அவன் அவளுக்கு எடுத்துச் சொல்ல, “ம்ம்” என்று தலையாட்டினாள்.
“இப்ப முதல்ல நீ உன் ஹெல்த்த பார்த்துக்க, எதையும் போட்டு குழப்பிக்காம ரெஸ்ட் எடு. நாம மீட் பண்ணி இதைபத்தி பேசலாம்.” என்று சமாதானம் கூறி, வைத்துவிட்டான். ஜீவாவிற்கும் இதைப்பற்றி நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.
ஜீவாவிடம் பேசியதும் வேணிக்கு தெம்பாக தோன்றியது. அவன் தனக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் உதவுவான் என்ற நம்பிக்கை வந்திருந்தது. அந்த நம்பிக்கையில் சற்று தெளிந்தவள், அன்று மாலையே ஜீவாவை சந்தித்து பேச கிளம்பி விட்டாள்.
அதிக நாட்கள் கதிரை பாண்டியிடம் விட்டு வைப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. இப்போதே அவனை அழைத்து வர அவளுள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. அதனாலேயே ஜீவாவிடம் பேச வந்துவிட்டிருந்தாள்.
ஜீவா பார்க்க, அறிவுக்களை சொட்டும் முகத்துடன் பிரகாசமான தோற்றத்தில் இருந்தான். மடிப்பு கலையாத சட்டையும், கண்களில் அணிந்திருந்த கண்கண்ணாடியும் அவனை மரியாதைக்குரியவனாக காட்டியது. இரண்டு நாட்களில், முகம் களையிழந்து, உடல் மெலிந்து, சோர்வான தோற்றத்தில் தன்முன் வந்து நின்றவளைப் பரிவாக பார்த்தான்.
“முதல்ல உட்காரு வேணி, பார்க்கவே ரொம்ப டல்லா இருக்க, குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரவா?” ஜீவா அக்கறையாக கேட்கவும்,
“ம்ம் ஹாட் சாக்லேட் கிடைக்குமா இங்க? ஸ்வீட்டா சூடா ஏதாவது குடிக்கணும் போல இருக்கு.” என்று கேட்டவளை புன்னகை ததும்ப பார்த்தவன், “சரி வெயிட் பண்ணு, நான் கேட்டு வாங்கிட்டு வரேன்.” என்று நகர்ந்தான். போகும் அவனையே அவள் கண்கள் பார்த்து இருந்தன.
இருவரும் பூங்காவிற்கு தான் வந்திருந்தனர். அவர்கள் காதலித்த இந்த இரண்டு வருடத்தில் பெரிதாக எங்கும் வெளியே சுற்றியதில்லை. இல்லை என்பதைவிட இருவருக்கும் நேரம் கிடைக்கவில்லை. இருவரும் கல்லூரி ஆசியர்களாக பணிபுரிபவர்கள், வெவ்வேறு கல்லூரியில்.
ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் தான் இருவருக்கும் அறிமுகமானது. ஏதோவொரு விதத்தில் ஜீவாவிற்கு வேணி தனித்து தெரிந்தாள். அவளை பார்த்தான், பேசினான், அவளிடம் பழக வேண்டும் என்று ஆர்வம் கொண்டான். ஆர்வம் எப்போது ஆசையானது, ஆசை எப்போது காதலாக மாறியது என்று அவனுக்கும் தெரியவில்லை. நேராக அவளை சந்தித்து, தன் காதலை கண்ணியமாக சொல்லியிருந்தான்.
வேணிக்கு முதலில் சற்று திகைப்பு தான். பின்பு யோசிப்பதாகச் சொன்னாள். யோசித்து பார்க்கையில் அவன் தோற்றம், பேச்சு, படிப்பு, வேலை எல்லாம் அவளுக்கு பிடித்திருந்தது. அவனிடம் பெரிதாக குறை காணவும் முடியவில்லை அவளால். ஆனாலும் அவன் காதலை அவள் சட்டென்று ஏற்றுக்கொள்ளவில்லை.
தன் குடும்பத்தைப் பற்றி அவனிடம் விவரித்தாள். தன் அம்மா, தாத்தா மற்றும் தந்தையின் இறப்பு பற்றி சொன்னாள். தன் அக்காவின் வாழ்க்கையைப் பற்றியும் சொன்னவள், கதிரை தான் தான் வளர்க்க போவதாக தன் முடிவையும் உரைத்தாள்.
இத்தனையும் கேட்ட ஜீவா, அவள் சூழ்நிலையை ஓரளவு புரிந்த பின்னர், கதிரை வளர்ப்பது பெரிய பிரச்சனை இல்லை என்றிருந்தான். அதற்கு பின்னர் கூட, உறுதியாக ஒரு வார்த்தை சொல்லாமல் மாத கணக்கில் தாமதித்தவள், ஒரு நல்ல நாளில் அவன் காதலை ஏற்றுக்கொண்டிருந்தாள்.
வேணிக்கு ஜீவாவை பிடித்திருந்தது. அவனது நேர்த்தியாக தோற்றம், தெளிவாக பேச்சு, எதிலும் ஆழ யோசித்து செய்படும் அவன் பொறுமை அவளுக்கு பிடித்திருந்தது. அவனோடு கைசேர்ந்தால் தன் வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்று நம்பினாள். ஜீவாவிற்கும் அந்த நம்பிக்கை இருந்தது.
ஜீவா அவளிடம் நீட்டிய ஹாட் சாக்லேட்டை, பருகியவளின் மனதிலும் இனிப்பு சுவை இதமாக பரவியது. தனக்கானவன் தன்னருகில் இருக்கிறான் என்ற எண்ணமே அவளை திடப்படுத்தியது.
அவள் பருகி முடிக்கும் வரை அமைதி காத்தவன், “சொல்லு வேணி, நீ என்ன யோசிச்சு வச்சிருக்க?” என்று மென்மையாக வினவினான்.
“என்னால எதையுமே யோசிக்க முடியல ஜீவா, மைண்ட் ஜாம் ஆன மாதிரி இருக்கு. எங்க கதிரை இழந்திடுவேனோனு பயமா இருக்கு.” என்றவளின் கையை ஆதரவாக பற்றியவன்,
“ஜஸ்ட் ரிலாக்ஸ் வேணி, உங்க வீட்ல, அம்மா, தாத்தா என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.
“அவங்க என்ன சொல்லுவாங்க, கதிர்மேல அவங்க அப்பாக்கு தான் முதல் உரிமைங்கிற மாதிரி தாத்தா சொல்றாரு. அந்த ரௌடி கூட பிரச்சனை வேணா கதிரை அவனே வளர்த்துக்கட்டும்னு அம்மா சொல்றாங்க.” வேணி ஏமாற்றமாக சொன்னாள்.
“சரி, நீ என்ன முடிவெடுத்து இருக்க?” என்று கேட்டவனின் முகத்தை ஏறிட்டவள், “எனக்கு கதிர் வேணும் ஜீவா!” என்றாள் பரிதவிப்பாக.
ஜீவா அவளை ஆழமாக பார்த்தான். அவளின் பரிதவிப்பு அவனுக்கு புரிந்தது. கூடவே நிதர்சனத்தை அவள் ஏற்க மறுக்கும் பிடிவாதமும் அவனுக்கு புரிந்தது.
“நான் சொல்லறதை பொறுமையா கேளு வேணி. நீ ஒத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் கதிர்மேல முழு உரிமையும் அவனோட அப்பாவுக்கு தான் இருக்கு.” என்று அவளுக்கு எடுத்துச் சொல்ல முயல,
“என்ன நீயும் இப்படியே சொல்ற ஜீவா?” வேணி தவிப்பாக கேட்டாள்.
“நீ கதிர் மேல எமோஷனலா அட்டாச் ஆகி இருக்க வேணி, அதனால தான் நாங்க சொல்றதை உன்னால ஏத்துக்க முடியல. நீ அவனை வளர்த்து இருந்தாலும், கதிரை உன்னால உரிமை கொண்டாட முடியாது. சட்டப்படி கதிர்மேல முழு உரிமையும் அவனோட அப்பாவுக்கு தான் இருக்கு.” என்று தெளிவாக சொன்னான்.
“இல்ல ஜீவா, நீ சொல்றதெல்லாம் சாதாரண அப்பாவுக்கு பொருந்தும். ஆனா இவன் ரௌடி, என் அக்காவ வாழவிடாம துடிக்க துடிக்க சாக விட்டவன், அவன்கிட்ட கதிருக்கு பாதுகாப்பில்ல, அந்த சூழ்நிலையில வளரது கதிரோட எதிர்காலத்துக்கும் நல்லதில்ல.” என்ற வேணியும் தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.
ஒருவகையில் அவள் சொல்வதும் ஜீவாவிற்கு சரியெனப்பட்டது. “ஓகே, இந்த பாயிண்ட்ஸ வச்சு, கதிரை உன்கிட்டயே ஒப்படைக்கச் சொல்லி கோர்ட்ல கேஸ் போடலாம். பட் அந்த கேஸ் எந்தளவுக்கு உனக்கு சாதகமா வரும்னு சொல்ல முடியாது. ஏன்னா கிங் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். அவன் எதையும் நேர்வழியில செய்றவன் இல்ல. நீ அவனுக்கெதிரா கேஸ் கொடுத்தா உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு எனக்கு பயமாயிருக்கு வேணி.” என்றான்.
வேணி சற்று யோசித்தாள். “கேஸ் கொடுக்கறதை தவிர வேற வழியே இல்லையா?” என்று கேட்டாள். எப்போது வழக்கு முடிந்து, எப்போது கதிர் அவளிடம் வருவது என்று தவிப்பாக இருந்தது.
“எனக்கு தெரிஞ்சு, கோர்ட் மூலமா தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். கிங் மாதிரி நம்மால அவன் வீட்டுக்குள்ள போய் கதிரை தூக்கிட்டு வர முடியாது.” என்றான் ஜீவா.
அவளுக்கும் அது புரிந்தது. அவளை கீழே தள்ளிவிட்டு, எத்தனை சுலபமாக கதிரை தூக்கிக்கொண்டு போய்விட்டான் என்று நினைக்க, அவள் உள்ளம் கொதித்தது. “கேஸ் போடலாம் ஜீவா, கதிருக்காக எவ்வளவு ரிஸ்க் வேணா நான் எடுக்க தயாரா இருக்கேன்.” என்றாள் உறுதியாக.
“ஓகே, நான் வக்கீல் கிட்ட பேசிட்டு சொல்றேன் வேணி, பட்… நீ கேஸ், கோர்ட்னு அலையறதுல எனக்கு உடன்பாடு இல்ல. உன் விருப்பத்துக்காக மட்டும் தான் ஒத்துக்கிறேன்.” என்று தன் நிலை பற்றியும் அவளிடம் உணர்த்தினான்.
அவன் வெளிப்படையாக சொன்னதில், அவளுக்கு சங்கடமானது. “சாரி ஜீவா, என்னால கதிர் எப்படியோ போகட்டும்னு உங்க எல்லார் மாதிரியும் விட்டுட முடியாது.” என்றவள், அவனிடம் தலையசைத்துவிட்டு நடந்தாள். எதற்காகவும் அவளால் கதிரை விட்டுவிட முடியாதே.
***
இன்னும் இரண்டு நாட்கள் சென்றது. வேணி கல்லூரிக்கு வந்தும் வகுப்பில் முழுகவனம் செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இப்போதே கதிரைப் பார்க்க வேண்டும் என்று அவள் மனது ஒவ்வொரு நிமிடமும் துடித்துக்கொண்டு இருந்தது. ஆனால் எப்படி என்றுதான் அவளுக்கு தெரியவில்லை. அன்று கிங் அவளை கடத்தி சென்றபோது, வழியைச் சரியாக கவனித்துக் கொள்ளாத தன்னை இப்போது நொந்து கொண்டாள்.
குறைந்தபட்சம் வழி தெரிந்தாலாவது, கதிர் எப்படி இருக்கிறான் என்று கண்டு வரலாமே என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான், அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக பியூன் சொல்லிச் சென்றான்.
கல்லூரி வராண்டாவில், கார் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த பாண்டியைப் பார்த்ததும், அவள் நடையின் வேகம் கூடியது.
அவனிடம் ஓட்டமும் நடையுமாக வந்து மூச்சு வாங்க நின்றவள், “கதிர்… கதிர் எங்க? அவன் எப்படி இருக்கான்?” என்று திக்கி திணறி கேட்டவளை, கூர்மையாக பார்த்த பாண்டி, கார் கதவைத் திறந்து விட்டான்.
காரின் பின் இருக்கையில், கதிர் கண்கள் மூடி படுத்திருந்ததைக் கண்டவள், பதறி அவனைத் தூக்கி மடியேந்திக் கொள்ள, அவன் உடலில் காய்ச்சலின் வெப்பம் தெரிந்தது.
“பாவி! குழந்தைய என்ன பண்ண? ஏன் இப்படி கண்ண திறக்காம கிடக்கான்?” என்று கேட்டவளின் கண்கள் கலங்கின.
“ஏய் சும்மா சீன போடாத, அவனுக்கு சாதாரண ஜுரம் தான். டாக்டர்கிட்ட காட்டிகினு தான் வந்துகினே. இப்ப அசதியில தூங்கினு கீறான். நீ பாசத்தை காட்டிக்கிறேன்னு அவனை டிஸ்டர்ப் பண்ணிக்காத.” காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்ட பாண்டி, அவளிடம் எரிச்சலாக சொன்னான்.
இரண்டு நாட்கள் அப்படி இப்படி என்று விளையாட்டு, கார்ட்டூன், கன்றுக்குட்டிகளைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவன், அவ்வப்போது வேணியை கேட்டு அடம்பிடித்து கொண்டும் இருந்தான். பாண்டியும் கூடுமானவரை சமாதானப்படுத்தி, அவன் கவனத்தை திசை திருப்பி வைத்திருந்தான்.
ஆனால் நேற்று மாலையில் இருந்து, கதிருக்கு காய்ச்சல் அடிக்க தொடங்க, வேணி பெயரைச் சொல்லி அனத்த ஆரம்பித்திருந்தான். இரவே மருத்துவரிடம் அழைத்து சென்று, மருந்து கொடுத்தும், அவன் அனத்தல் குறைவதாக இல்லை. காலையிலிருந்து எதையும் அவன் சாப்பிடவும் இல்லை.
ஓடியாடி விளையாடி கத்திக்கொண்டு இருந்த பிள்ளையை இப்படி சோர்ந்து துவண்டு பார்க்க, பாண்டியின் மனது பொறுக்கவில்லை.
“உனக்கு வேணி தான வோணும், அவகிட்ட உன்ன கூட்டிகினு போறேன், அதுக்கு முதல்ல இத்த சாப்பிடு.” என்று கூறியும், கதிர் கேட்கவில்லை.
“நீ பொய் சொல்ற போ, நான் உன்ன நம்ப மாத்தேன்.” என்று முணுமுணுத்தவனிடம் பாண்டியின் கெத்து செல்லுபடி ஆவதாக இல்லை. வேறுவழியின்றி அவனை அழைத்துக்கொண்டு வேணியிடம் வந்து விட்டான்.
வேணி பாண்டி சொன்னதை காதில் வாங்காமல், “கதிரு… எந்திரி கதிரு, இங்கபாரு.” என்று அவனை எழுப்பினாள்.
மெல்ல கண் திறந்த கதிர், “வேணி… நாம வீத்துக்கு போலாம்.” என்று மெல்லிய குரலில் சொல்ல, அவனை அள்ளி தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
“நாம வீட்டுக்கு போலாம் கதிரு. நான் எப்பவும் உன்ன விட்டுட மாட்டேன். நீ பயப்படாத.” என்றவள், “இரு நான் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று காரிலிருந்து இறங்கி உள்ளே விரைந்தாள். தன் பொருட்களை எடுத்துக் கொண்டவள், அன்றைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வெளியே விரைந்து வந்தாள்.
காரின் ஜன்னல் வழி அவளையே ஏக்கமாக பார்த்தபடி கதிர் உட்கார்ந்து இருக்க, பாண்டிக்குத் தான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. பெற்ற அப்பன் தன்னை கண்டுகொள்ளாமல் எவளையோ தேடுகிறானே என்று. வேணி காருக்குள் வந்து அமர்ந்ததும், எதுவும் கேட்காது காரை செலுத்தினான்.
வேணியும் அவனை கண்டு கொள்ளவில்லை. நான்கு நாட்கள் பிரிந்திருந்த மகனை இப்படி காய்ச்சலில் பார்ப்பது அவளுக்கு தவிப்பாக இருந்தது. அவனுக்கு தண்ணீர் புகட்டி, தன் உணவு டப்பாவில் இருந்த உணவை கொஞ்ச கொஞ்சமாக ஊட்ட, அவனும் மறுக்காமல் சாப்பிட்டான்.
அவர்கள் இருவரும் தன்னை சற்றும் சட்டை செய்யாமல், ஏதேதோ பேசிக்கொண்டு, சாப்பிட்டு கொண்டு இருக்க, பாண்டிக்கு காதில் புகை வராத குறையாக இருந்தது. சற்று நிழலான இடமாக பார்த்து காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, திரும்பி மகனை பார்த்தான்.
காலைக்கும் இப்போதைக்கும் அவன் முகம் நன்றாகவே தெளிந்து தெரிந்தது. ‘அவள் மீது அத்தனை மனதை வைத்திருக்கிறானா?’ என்று தோன்ற, பாண்டியின் பார்வை வேணி மீது திரும்பியது. அதேநேரம் அவளும் அவனை பார்த்தாள்.
“டாக்டர் என்ன மருந்து கொடுத்தாங்க?” என்று அவனிடம் கேட்டாள். அவளுக்கு பதில் சொல்லாதவன், கார் டேஷ் போர்டில் இருந்த மருந்து பையை எடுத்து அவளிடம் நீட்டினான். அந்த பையில் இருந்த மருந்துகளையும் மருந்து சீட்டையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து, அளவு பார்த்து கதிருக்கு கொடுத்தாள்.
மருந்து என்றதும் முகத்தை சுளித்துக் கொண்ட கதிர், “வேணா வேணி, கசக்கும்.” என்றான்.
“நீ இந்த மருந்து குடிச்சா தான ஃபீவர் குணமாகும்.” அவள் சொல்ல,
“இப்ப தான் எனக்கு பீவர் இல்லையே.” கைகளை விரித்து கதிர் சொன்ன விதத்தில், பாண்டிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கதிர் அவளிடம் எத்தனை உரிமையாக பேசுகிறான், தன்னிடம் அப்படி பேசவில்லையே, என்றெண்ணி கவலையும் தோன்றியது அவனுக்கு.
ஏதேதோ சொல்லி வேணி அவனுக்கு மருந்தைப் புகட்டி விட, கதிர் உடனே உமட்டி கொண்டு வாந்தி எடுத்து விட்டான்.
“அடபோடா, வாந்தி எடுத்துட்டியா, போச்சு போ.” என்று சலித்தவள், காரை விட்டு வெளியே இறங்கி பாட்டிலில் இருந்த தண்ணீர் கொண்டு அவனது வாயையும் உடையையும் துடைத்து விட்டு, தன் உடையையும் துடைத்து விட்டு கொண்டாள். அதற்குள் பாண்டியும் காரின் இருக்கையைத் துடைத்து சுத்தப்படுத்தி இருந்தான்.
“டேய் கதிரு, இப்ப எப்பிடி கீது? மறுபடி வாந்தி வருதா?” என்று பாண்டி பதறி கேட்க, இல்லையென்று தலையசைத்தான்.
தன் பையை எடுத்துக்கொண்ட வேணி, “இனி கதிரை நான் பார்த்துகிறேன்.” என்று மொட்டையாக சொல்லிவிட்டு, குழந்தையுடன் அவள் நகர முற்பட, பாண்டி அவள் முன்வந்து நெருப்பாக முறைத்தான்.
“ஏய்ய் என்னா லந்தா? மறுபடி என் புள்ளய பிரிச்சு கூட்டிக்கினு போக பாத்தன்னா, மவளே பொளந்து கட்டிடுவேன் உன்ன.” என்று பாண்டி சீறிக்கொண்டு நிற்க,
“ஏன் இப்பவும் புரிஞ்சிக்காம பேசுற, வெறும் நாலு நாள் கூட உன்னால கதிரை உருப்படியா பார்த்துக்க முடியல. சும்மா வீம்புக்கு குழந்தை வாழ்க்கையோட விளையாடாத. தயவுசெஞ்சு கதிரை என்கிட்டயே கொடுத்துடு.” அவள் பொறுமையாகவே கேட்டாள்.
“என் புள்ளய உன்னாண்ட கொடுக்கிற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல.” பாண்டியின் பதில் பட்டென வந்தது.
“அய்யோ, கதிருக்கு இப்ப உடம்பு முடியல, உன் ரௌடி தனத்தை கதிர் விசயத்துல காட்டாத.” வேணி காட்டமாக சொல்ல, அவளைப் பிடித்து காருக்குள் தள்ளி விட்டான் பாண்டி.
அவள் என்னவென்று சுதாரிக்கும் முன்னே, கதிரை தூக்கிக்கொண்டு அவள் பக்கத்தில் வந்தமர்ந்தான். வேணி அவனை மிரண்டு பார்க்க, “கதிருக்கு உடம்பு சரியாகுற வரைக்கும் நீ கதிர் கூட தான் இருப்ப.” என்றவனை அவள் அதிர்ந்து பார்த்தாள்.
***