தோளொன்று தேளானது 14
தோளொன்று தேளானது 14
தோளொன்று தேளானது! 14
சுமித்ராவின் கேள்வியில் நிதானித்தவன், “தெரிஞ்சிட்டே எதுக்கு கேக்குற சுமீ?” என்றதும்,
“இப்டித்தான் நான் கேக்கறதுக்குப் பதில் சொல்லாம, எதாவது ஏடாகூடாம எதிர் கேள்வி கேப்பேன்னு எதிர்பார்த்தேன்” என்றவளின் குற்றஞ்சாட்டும் தொனியினைக் கண்டு எதிர்முனையில் ஜேப்பி சிரிக்க,
“சிரிக்காதே! வர கோபத்துக்கு நேருல மட்டும் நீ கிடைச்சா, உன்னை…” எனப் பல்லைக் கடித்தவளின் பேச்சைக் கேட்டு,
“உனக்கு கோபம்லாம் வருமா சுமீ” என்றவன், “என்னை நேருல பாத்தா கோபத்துல என்ன செய்யறதா இருக்க?” குரலை மாற்றிக் கேட்டதும், அதில் இருந்த தாபத்தை உணர்ந்தவள், “ச்சேய்” என தலையில் அடித்துக் கொண்டாள்.
கணவனின் மீது கடினமான வார்த்தைகளை பிரயோகித்துவிடக் கூடாதே என தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டதோடு, வாயைத் திறந்தாளில்லை சுமித்ரா.
திறந்தால், தான் எதாவது ஜேப்பியை பேசிவிடக்கூடும் என மௌனமாக இருந்தவளிடம், தான் பேசியது பிடிக்காமல் அமைதியாக இருக்கிறாள் என எண்ணிக் கொண்டவன், பேச்சை திசைதிருப்பிட எண்ணி, “சொல்லாம, நானா என்னோட முடிவுக்குப் பண்ணது, உன்னை இங்க கூட்டிட்டு வந்தது மட்டுந்தான் சுமி” என்றிட,
ஜேப்பியின் வார்த்தையைக் கேட்டதும், எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தாற்போலாக, “கூட்டிட்டு வந்தேன்னு சொல்லாத, கடத்திட்டு வந்தேன்னு சொல்லு” எனத் திருத்தியவள்,
“நீ இங்கேயிருந்து கிளம்பும்போது எங்கிட்ட சொல்லிட்டா போன?” ஜேப்பியிடம் உக்கிரமாகக் கேட்டாள் சுமி.
“அது என்னோட தனிப்பட்ட விசயம் சுமி. அதனால அதையெல்லாம் உங்கிட்டச் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்” என்றவன்,
“உன் சார்ந்த விசயத்தை மட்டுந்தான் அப்டிச் சொன்னேன்.” தான் கூறியது எதை என்பதைப்பற்றி விளக்கினான் ஜேப்பி.
ஜேப்பியின் விளக்கத்தினைக் கேட்டவளுக்கு, அவனது அகங்கார பேச்சினை ஏற்க முடியாமல், “வெளியில பெத்த கம்பெனி பேரு ஜேஜேனு வச்சிட்டு, இப்டியெல்லாம் அடிமட்டமா பண்றது நல்லாவா இருக்கு ஜேப்பி” குத்தலாகக் கேட்டாள்.
“உங்கிட்ட வந்து என்னை நான் அப்டி, இப்டின்னு எப்போடீ சொன்னேன்.” என்றவனிடம், அதற்குமேல் அவனது தனிப்பட்ட குணாதிசங்களைப் பற்றிப் பேச விரும்பாமல் கட்டுப்படுத்தியவாறு இருந்தவளுக்கு இதயத்தைச் சுற்றிலும் ஏதோ அழுத்தமாக உணர்ந்தாள்.
இதுவரை ஜேப்பியின் செயல்களில் எதையும் அவளால் நல்லவன் என தீர்மானிக்க முடியாததாகவே இருந்ததை எண்ணிப் பாத்திருந்தாலும், அவளால் அவனை, ‘அவன் எப்டியிருந்தா நமக்கென்ன?’ என அவன்போக்கில் விடமுடியாமல் தவித்தாள். அந்தத் தவிப்பு தற்போது அவனது பேச்சில் மீண்டும் எழுந்து, அவளை அலைக்கழித்தது.
தன்னை ஏதோ ஒரு காரணத்திற்காக மனைவி எனும் அந்தஸ்தைத் தந்து ஏற்றுக் கொண்ட ஜேப்பி, ஷ்யாமை ஏற்றுக் கொள்ள மறுப்பதை எண்ணியதும் ஏதோ ஒவ்வாமை உணர்வு மனதில் நிரம்பி வேதனையாக உணர்ந்தாள் சுமி.
மூன்றரை ஆண்டுகள் வளர்த்தாயிற்று. தற்போது அவனை பொறுப்பு துறப்பாக எவ்வாறு விடுவது என சுமியின் மனதில் ரணம். ஆனால், ஜேப்பி அதனை இலகுவாகக் கூறிக் கடப்பதைக் காண்பவளுக்கு ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுமாறினாள்.
அதனால், அங்கிருக்கவே விருப்பமில்லாமல் போனது. “நீ எப்டி வேணா இருந்துக்கோ. அது உன்னோட விருப்பம் ஜேப்பி” என்றவள், “உன் வீட்ல நீயிருக்காம, நானும் ஷ்யாமும் இருக்கறது நல்லாவா இருக்கு. உனக்கு பிடிச்ச மாதிரி இங்க வந்து இருந்துக்கோ. நான், ஷ்யாமோட பழையபடி அங்கேயே போயிறேன்” என்றாள்.
“உன்னை யாரு வெளியில விடற ஐடியால இருக்கான்னு, இதையெல்லாம் வந்து எங்கிட்டச் சொல்லிட்டுருக்க?” ஜேப்பி சிரித்தபடியே கேட்டபோது, அந்த அடக்குமுறையான பேச்சில் மனம் மேலும் வெகுண்டது சுமிக்கு.
“எதுக்கு எங்களை இப்படி அடைச்சு வச்சிருக்க ஜேப்பி?” தாங்கவொண்ணா துயரத்தோடு கேட்டாள் சுமி.
“உன்னை யாரு அடைச்சு வச்சிருக்கா. உன்னோட வீட்ல, நீ இருக்க. அதாவது, இந்த ஜேப்பி, அவனோட மிஸ்ஸஸ்காக கட்டுன வீட்டுல, முழு உரிமையோட சுதந்திரமா இருக்க!” விளக்கினான் ஜேப்பி.
“நீ சொல்லக்கூடிய சுதந்திரம் உன்னோட வார்த்தையில மட்டுந்தான் இருக்குது ஜேப்பி. உண்மையில, கடுகளவுகூட இருக்கறதாத் தெரியலை. அதனால எனக்கு இங்க இருக்க பிடிக்கலை.
இப்டியே அடைஞ்சு கிடந்தா பைத்தியமே பிடிச்சுரும் எனக்கு. நான் பழையபடி வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். அதனால, இங்க காவக் காக்குறவங்கிட்ட என்னையும், ஷ்யாமையும் விட்டுறச் சொல்லு. உனக்குப் புண்ணியமாப் போகும்” தீர்மானமாகவே உரைத்தாள் சுமி.
“ம்மா தேவதை. உனக்கு வேலைதான வேணும். வீட்டைச் சுத்தி நூறு ஏக்கர் இடம் கிடக்கு. அதுல உனக்கு என்ன வேணாலும் செய்யி.
இல்லை வீட்ல வச்சி எதாவது செய்யறதா இருந்தாலும் சொல்லு. ஏற்பாடு பண்ணித் தாரேன். நீ பாட்டுக்கு கிளம்பிப் போறதுக்கா இவ்ளோ கஷ்டப்பாடுபட்டு, உன்னை இங்க கொண்டு வந்திருக்கேன்.” என்றவன்,
நேரங்கருதி, “இதுக்குமேல என்னால இப்போ கண்டினியூ பண்ண முடியாது சுமி. நேரங்கிடைக்கும்போது அடுத்து லைன்ல வரேன்.” என்றவாறு ஒரு பை கூட கூறாமல் வைத்துவிட்டான் ஜேப்பி.
சுமி அழைப்பைத் துண்டித்துவிட்டவனைத் திட்டியவாறு இருப்பதைக் கண்ட ஷ்யாம் , “மீ, எதுக்கு தென்சனா இதுக்க. லைன்ல யாது?”
“ஒன்னுமில்லைடா” சிரிக்க முயல, சுமி பதில் கூறாததால் அவனாகவே, “உங்கப்பனா அது?” என்று கேட்ட ஷ்யாமைக் கண்டு சிரித்துவிட்டாள் சுமி.
சுமியின் சிரிப்பில் சேர்ந்து கொண்ட ஷ்யாமிற்கு, சுமியின் சிரிப்பு எதனால் என்பது தெரியாமலேயே சிரித்தான். பிறகு, “அது உங்கப்பன்தான். ஆனா மீக்கிட்ட கேக்கும்போது, எங்கப்பனா அப்டினு கேக்கணும். என்ன?” என ஷ்யாமிடம் கேட்க, அவனும் தலையை ஆட்டி ஆமோதித்தான்.
பிறகு சுமீயை நோக்கி, “எங்கப்பனா அப்தீனு கேக்கணும் இனி” தாயிடம் அவனாகவே கூறியதோடு, சிரித்துக் கொண்டான் ஷ்யாம்.
அதன்பின், ஷ்யாமை அழைத்துக் கொண்டு, நூறு ஏக்கர் பரப்புள்ள ஜேப்பிக்கு சொந்தமான பரந்து கிடந்த பகுதியில் கால்போன போக்கில் பேசியவாறு இருவரும் நடந்தார்கள்.
ஆனால் அவர்களைக் கண்காணித்தவண்ணம் பணியில் கவனமாக இருந்த பணியாளர்களை உணர்ந்த சுமித்ராவிற்கு வேதனையாக இருந்தது. ‘என்ன மாதிரியான வாழ்க்கை இது’ என்பதுபோல விரக்தியாய் மனம் உணர பிடிப்பில்லாமல் பேருக்காக ஷ்யாமோடு நடந்து திரிந்தாள்.
ஷ்யாம் அவளைத் தொந்திரவு செய்யாமல் இருக்கும் நேரத்தில், தனது அலுவலக எண்ணை முயன்று நினைவில் கொண்டு வந்தாள் சுமி.
‘மொபைல் போன் வந்ததுல இருந்து, எந்த நம்பரும் நினைவுல வச்சிக்காம ரொம்பக் கஷ்டமா இருக்கு’ தனக்குத்தானே நினைத்துக் கொண்டவள், தோராயமாக நினைவுகூர்ந்த எண்களை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த நாள் ஷ்யாம் பள்ளிக்குச் சென்றிருந்தபோது தான் பணிபுரிந்து கொண்டிருந்த கட்டிட நிறுவனத்திற்கு அழைக்க முயன்றாள். ஆனால் அழைப்பு செல்லவில்லை.
அனைத்தையும் சிசிடிவி மூலம் கண்டு கொண்டவன், சுமித்ராவின் எதிர்பார்ப்பினை அறிந்திருந்தபோதிலும் அடுத்து அழைத்தபோது அதைத் தெரிந்தாற்போல காட்டிக்கொள்ளாமல் பேசிவிட்டு வைத்திருந்தான் ஜேப்பி.
அதன்பின் பாதுகாப்பு அம்சங்கள் மேலும் கடுமையாகியிருந்தது. சுமித்ராவின் எண்ணைத் தவிர்த்து, பிருத்வியின் எண்ணுக்கு வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாமென தகவல் பிறப்பித்ததோடு, அந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு பேசி அணைத்து வைத்திருப்பதாகச் செய்தி வரும்படி செட் செய்யப் பணித்திருந்தான்.
***
ஷ்யாம், “மீ பித்துவீப்பாகிட்ட எப்போ போவோம்?” எனத் துவங்க
“இனி நமக்குத் தெரிஞ்ச யாரையும் பாப்போமானே எனக்கு சந்தேகமா இருக்குடா” மனதில் தோன்றியதை, சத்தமாக உரைத்த சுமித்ரா, “ஏம்மா அப்திச் சொல்லுத” கேட்ட ஷ்யாமின் பதிலில் நடப்பிற்கு வந்தவள்,
“போன் இருந்தாலாவது அவங்கிட்ட பேசலாம். மீயோட போன் மிஸ் ஆகிருச்சு” சோகமாக உரைத்தவள் அதன்பின் வேறு பேச்சிற்று மாறினாலும், ஷ்யாமின் மனதில் அது ஆழமாகப் பதிந்து போயிருந்ததை சுமித்ரா அறிந்திருக்கவில்லை.
பத்து நாள்கள் அப்படியே கடந்திருக்க, அன்று விடுமுறையில் இருந்த சிறுவன் தேவியின் அலட்சியத்தால் அடுக்களையில் அலட்சியமாக வைக்கப்பட்டு இருந்த அவளின் போனை எடுத்து வந்து சுமியிடம் தந்தவன், “மீ, இந்தா போன். நாம இப்ப பித்துவீப்பாகித்த பேசலாமா?” எனக் கேட்டு குஷியாக ஒப்படைத்திருந்தான்.
சுற்றிலும் பார்வையை செலுத்தியவாறு, தங்களின் அறைக்குள் சென்றவள், பிருத்வியின் எண்ணுக்கு அழைத்தாள்.
அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததும், ‘ச்சேய். இவனோட போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருதே.’ மனபாரத்தோடு சற்று நேரம் இருந்தவள்,
‘இன்னைக்கு சாட்டர்டே. பாதி பேருதான் ஆபிஸ் வந்திருப்பாங்க. அந்த நம்பருக்காவது போன் பண்ணிப் பாக்கலாம்’ என அவளின் அலுவலக தரைவழிதொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டாள்.
அழைப்பை ஏற்ற வரவேற்புப் பணிப்பெண், அவள் தனது நிறுவனப் பெயரை அறிமுகம் செய்து கொள்ள, சுமித்ரா தான் யார் என்பதைக் கூறினாள்.
எதிர்முனையில் சந்தோசக் கூச்சலோடு, “ஹாய் சுமித்ரா. ஹேப்பி மேரீட் லைஃப். எப்டியிருக்கீங்க. வேலைய விட்டுப் போனபின்ன எங்க நினைப்பெல்லாம் வந்து கால் பண்ணிருக்கீங்க.”
அவளைத் திக்குமுக்காடச் செய்த எதிர்முனையின் பேச்சில் அமைதியாக என்ன பேசுவது எனப் புரியாமல், “ம்ஹ்ம். தாங்க்ஸ். நல்லாயிருக்கோம். ஆபீஸ் எப்டிப் போகுது” பொதுநல விசாரிப்பினை மேற்கொண்டாள் சுமி.
“எப்பவும்போல போகுது” என்றவள், “உங்க ஹப்பி, அப்புறம் விட்ல எல்லாம் நல்லாயிருக்காங்களா? எப்டி பழகுறாங்க?” எனும் கேள்வியை சுமியிடம் கேட்டதும்,
‘இதல்லாம் நாம சொல்லாமலேயே இவளுக்கு எப்டி தெரிஞ்சது?’ என தனக்குத்தானே திகைப்போடு இருந்தவள், கேட்டவளுக்கு பதில் கூற வேண்டிய நிர்பந்தத்தில், “எல்லாரும் நல்லா இருக்கோம்” என்றாள்.
சுமியின் தயங்கிய பதிலைக் கண்டவள், “நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீங்க என்ன விசயமா கால் பண்ணீங்க சுமித்ரா” விசயத்திற்கு நேராக வந்து கேட்டாள்.
“என் போன் மிஸ் ஆகிருச்சு நிரூ. எல்லாரோடைய நம்பரும் அதுலதான் இருக்கு. ஆபீஸ் நம்பரைத் தவிர வேற யாரு நம்பரும் எனக்கு நினைவில்லை. அதான் ஆபீஸ்கு கால் பண்ணேன்” சமாளித்தவள், தான் கூறாமலேயே திருமண விசயம் தனது அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டிருந்ததை அறிந்து கொண்டாள்.
மேலும், தனக்கு அலுவலக விடுப்பு என ஆரம்பத்தில் கூறிவிட்டு, பிறகு திருமணத்தைச் சாக்கிட்டு விலகியது என அனைத்தும் தான் சுயமாக செய்ததுபோல துல்லியமாகச் செய்யப்பட்டிருந்ததைக் கேட்டறிந்து கொண்டவளுக்கு, ‘இது நிச்சயமா நான் செய்யலை.
அப்ப இதையெல்லாம் இந்த ஜேப்பி கேடிதான் பண்ணிருக்கணும். இதையெல்லாம் எதுக்கு என்னோட நாலெட்ஜ் இல்லாமப் பண்ணணும். ஏதோ இவங்கிட்ட தப்பு இருக்கு. ஆனா அது என்னானுதான் தெரியலை’ என மேலும் ஜேப்பியின்மீது வருத்தமும், கோபமும் ஒரேசேரத் துளிர்த்தது சுமிக்கு.
அதன்பின் மீண்டும் ஒருமுறை ப்ருத்வியின் திறன்பேசிக்கு அழைத்துப் பார்த்தாள். அப்போதும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது.
மீண்டும், மீண்டும் அழைத்தபோதும் அதே செய்தி வரவே, ‘எங்க தொலைஞ்சு போனான். இவன நம்பி இங்க பைத்தியம் புடிக்காத குறையா உக்காந்திருக்கேன். இவன் என்னடான்னா, போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு என்ன பண்றான்” என்பதாக இருந்தது சுமிக்கு.
‘இவன் ஒரு பக்கம் வச்சு செய்யறான்னா, கூடவே இருந்த அந்த ப்ருத்வி இத்தனை நாளா நம்மகூட இருந்த பொண்ணைக் காணோமேன்னு தேடக்கூட இல்லைபோல.
இல்லை, தொல்லை விட்டுச்சுன்னு அக்கடான்னு இருக்கானோ’ என ப்ருத்விக்கும் தனது அர்ச்சனைகளைத் தொடர்ந்திருந்தாள் சுமி.
தான் செய்த இச்செயலால், பிற்பாடு வரப்போகும் எதிர்பாரா விபரீதங்கள் அறியாமல், சுமி எடுத்த இடத்தில் கொண்டுபோய் பேசியை வைத்துவிட்டு, தேவியுடன் சமையலறையில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தாள்.
தேவியின் பேசி மட்டுமல்லாது, அங்கு பணியில் உள்ளவர்களின் பேசிகளுக்கு வரும் அழைப்புகள், மற்றும் அவர்களது எண்ணிலிருந்து செல்லும் அழைப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல்கள் அனைத்தும் உரிய வழிமுறையில் பெற விண்ணப்பித்து இருந்தமையால், சூம் நிறுவனத்திற்கு அது பற்றிய தகவல்கள் அனைத்தும் மாதந்தோறும் கிடைக்கும்படி செய்திருந்தான் ஜேப்பி.
அது மாத இறுதியில் ஜேப்பியின் பார்வைக்கு வருமுன்னே, விசயம் கைமீறிப் போகப் போவதை அறியாதவர்கள், அவரவர் நிலையில் பணியில் மூழ்கி அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவசரத்தோடு ஜேப்பியும், எதற்கும் உரிய விளக்கம் இன்றி தனிமையில் விரக்தியோடும், சலிப்போடுமாய் சுமியும் இருந்தார்கள்.
***