தோளொன்று தேளானது 17

தோளொன்று தேளானது 17
தோளொன்று தேளானது! 17
ஜேப்பியின் அழைப்பை ஏற்குமுன், எடுக்கலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்த எஸ்ப்பி, ‘இப்ப எடுக்கலைன்னா, பய எதாவது நம்மைத் தப்பா புரிஞ்சிப்பான்’ என எண்ணியவாறே தனக்கான தனியறையை நோக்கிச் சென்றார்.
சற்றுமுன்தான், ஆதிகேசவன் அவரை அழைத்து தான் செய்யாத அனைத்தையும் செய்ததாகக் கூறியிருந்தமைக்கான மீதத் தொகையை உண்டியல் முறையில் விரைவில் தந்துவிடுமாறு பேசிவிட்டு வைத்திருந்தான்.
முன்பணம் மட்டுமே இதுவரை ஆதிக்கு எஸ்ப்பி கொடுத்திருக்க, விபத்து நடந்த அன்று எஸ்ப்பியிடம் விசயத்தை மட்டும் பகிர்ந்து கொண்டதோடு சரி.
அதன்பின் நான்கு நாள்களுக்கு முன்பு விபத்து நடந்த இடத்திலிருந்து ஆதி எடுத்து அனுப்பிய நம்பத் தகுந்த படங்கள் அனைத்தையும் தகுந்த தொழில்முறை நபர்களைக் கொண்டு பார்வையிட்டு உறுதிசெய்தவர், பணத்தையும் உரிய வழியில் அனுப்பப் பணித்துவிட்டு சற்று நிறைவாக எஸ்ப்பி அமர்ந்திருந்தபோதுதான் ஜேப்பி அழைத்திருந்தான்.
எடுத்ததுமே, “நான் ஜேப்பி” தன்னை தெரியாத நபரிடம் அறிமுகம் செய்வதுபோலத் துவங்கிய பேரனின் செயலில் மனம் அடிவாங்கினாலும், அதைக் காட்டிக்கொள்ளாது, “ம்ம்… தெரியுது. தொரை பெரிய ஆளாயிட்ட. இந்த கிழவனுக்கு எதுக்குப்பா இப்ப போன் பண்ணே” எள்ளலாகவே கேட்டார் எஸ்ப்பி.
“ஏன்னு இன்னுமா தெரியாம இருக்கீங்க?” குத்தலாகவே கேட்டான் ஜேப்பி.
சம்பவம் நடந்து முடிந்து பதினைந்து நாள்களுக்கு மேல் சென்றிருக்க, இதற்குமுன் தனக்கு ஜேப்பி அழைப்பான் என ஒவ்வொரு தினமும் எதிர்பார்த்துதான் இருந்தார் எஸ்ப்பி.
அவன் ஒவ்வொரு நாளும் அழைக்காமல் ஏமாற்றவே, ‘என்ன அடிச்சாலும் அசரமாட்டான் போலயே’ என ஒரு பக்கம் எரிச்சலும், மறுபக்கம் கோபமுமாகவே நேரத்தைக் கடத்தியிருந்தார்.
இன்றுவரை அவர்களின் வீட்டில் மகன்கள், மற்றும் மற்ற மகன்வழிப் பேரன்கள் அனைவரும் எஸ்ப்பியை அண்டியே அனைத்தையும் செய்துவர, ஜேப்பியின் தனியொருவனாக வலம் வரும் பாணியை, சுய முயற்சியை, முன்னேற்றத்தை அறவே வெறுத்தார் எஸ்ப்பி.
தன்னை அவர்கள் பொருட்டாக எண்ணாத நிலையில், தான் எனும் அதிகார வெறியும், தன்னை மதிக்காததுபோல எண்ணிக்கொண்டு குமைந்த எதிர்மறை உணர்வும், அவ்வாறு எஸ்ப்பியை நினைக்கத் தூண்டியிருந்தது.
கார்த்தியும், ஜேப்பியை அவனது தொழில் திறமையை, உழைப்பை நம்பி அண்டியதால், சிவபிரகாசத்தை அதிகம் அணுக மாட்டான். சிவப்பிரகாசம் காட்டிய வழிகளைக் காட்டிலும், அதிக நுணுக்கமான, நுட்பமான வழிகளை இலகுவாகப் பின்பற்றியே குறைந்த காலத்தில் எஸ்ப்பியே வியக்கும் வகையில் தொழிலில் தங்களுக்கான இடத்தை நிலைநாட்டியிருந்தான் ஜேப்பி.
‘இவைங்க மட்டும் எப்டி இந்த மாதிரி வளந்தானுங்க. மத்தவங்க எல்லாரும் என் காலைச்சுத்திட்டு கழுவிக் குடிச்சா, இவனுக மட்டும் மதிக்காமத் திரியறானுங்க’ எனும் எண்ணம் மனதில் வேரோடிப் போயிருந்தது எஸ்ப்பிக்கு.
ஆனால், இதுவரை இருவரையும் குறை சொல்ல வேண்டி, விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு குற்றத்தைத் தேடினாலும் எதுவும் கிடைக்காமல் போக, மனம் சலித்தாலும் அதனை மனதிற்குள்ளாகவே வைத்திருந்தவருக்கு, ஜேப்பியின் திருமணம் விசயம் அவலாக அமைந்து போயிருந்தது.
இதை அனைத்தையும் அறிந்திருந்த ஜேப்பி, ஆரம்பம் முதலே சில விசயங்களை எஸ்ப்பியின் பார்வைக்கு எடுத்துச் செல்லாமல், தானாகவே தனியொருவனாக சமாளித்து வந்திருந்தான்.
ஜேப்பியின் தற்போதைய நிலையைக்கூட அவரின் மனம் கண்டுகளிக்க எண்ணியதே அன்றி, துளியும் வருத்தமின்றியே இருந்தார் எஸ்ப்பி.
தலைமுறை வேறுபாடு, இடைவெளி சில குறுகிய உள்ளங் கொண்டோரை இப்படித்தான் வழிநடத்துமோ!
ஜேப்பி இன்று தன்னிடம் அவனாகவே அழைத்துப் பேசியதும், சற்று நிறைவான மனதோடு, தெரிந்த விசயத்தை தெரியாமல் காட்டிக் கொண்டு, அதிலுள்ள சுகத்தை, இதத்தை அனுபவித்தவாறே பேரனிடம் பேச்சைத் தொடர்ந்திருந்தார் எஸ்ப்பி.
“தலைய சுத்தி மூக்கைத் தொடாம நேரா விசயத்துக்கு வா. நிறைய வேலை கிடக்கு” பேரனிடம் பேச விருப்பமில்லாததுபோல விட்டேற்றியாகப் பேசினார் எஸ்ப்பி.
“உங்களோட பேரையோ, அந்தஸ்தையோ எங்கயும் யூஸ் பண்ணாம, நான் உண்டு என் வேலையுண்டுனு சிவனேன்னு ஒதுங்கித்தான இருக்கேன். அப்புறம் எதுக்கு என்னோட வழியில கிராஸ் பண்றீங்க. என்னை நிம்மதியா வாழவிடமாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு எதுக்கு பின்னாடியே இன்னும் தெரியறீங்க?” காரமாகவே கேட்டான் ஜேப்பி.
“டேய். யாருகிட்ட என்ன பேசுறோம்னு புத்தியோடதான் பேசிறியா?” என்றவர், “சுண்டக்கா சைசுல இருக்க உன் பின்னாடி நூல் புடிச்சு வரதுக்கு இங்க யாரும் வேலைவெட்டியில்லாம இல்லை. நீயா எதையாது நினைச்சிகிட்டுப் பேசாம, வேற வேலையிருந்தா போயிப் பாரு.” முகத்திலடித்தாற்போல கூறியவர்,
“நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கிறேன்” சற்று இடைவெளிவிட்டு, “எனக்கு முன்ன நிக்கறவன், என் அளவுக்கு எல்லாத்துலயும் சரிசமமா இருக்கறவனாத்தான் இருப்பான். இருக்கணும்.
இப்பதான் நீ முளைச்சு வர. ரெண்டு எலைகூட விடாத உங்கூட சரிக்கு சமமா நிக்கறதுக்கு எனக்கு என்ன கிறுக்காடா புடிச்சிருக்கு.” பேரனிடம் அவனை மட்டந்தட்டிப் பேசி தன் மனதைக் குளிர வைக்க முயன்றார் எஸ்ப்பி.
“எனக்கு முன்ன எதித்து நிக்கறதுக்கான வயசோ, அனுபவமோ, அந்தஸ்தோ, தில்லோ இன்னும் இப்டி முக்கியமான எதுவுமே உங்கிட்ட கடுகளவுக்குக்கூட இல்லை” என்று பேசிக்கொண்டே சென்றவருக்கிடையே புகுந்தவன்,
“அது எல்லாம் இல்லைனுதான், அந்த ஆதிகேசவனை எனக்கெதிரா திருப்பி விட்டீங்களா?” ஜேப்பி வினவினான்.
ஆதிகேசவன் அனுப்பிய ஆள்கள் நால்வரை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஜேப்பி, மிகுந்த பிரயாசைக்கு நடுவில் அவர்களின் மனதை மாற்றி, கூடுதலாக பணம் தருவதாகக் கூறி, ஆதியின் அனைத்தை திட்டங்களையும் முன்பே தெரிந்து கொண்டிருந்தான்.
அனைத்தையும் முந்தைய தினத்தில் அறிந்து கொண்டு விழிப்போடு இருந்துமே தனது திட்டம் தோல்வியடைந்ததில் சற்றே தளர்ந்து போயிருந்தான் ஜேப்பி.
அவர்கள் கூறிய திட்டத்தினை அப்படியே செயலாக்கவில்லை என்பதுதான் இந்த சேதாரங்களுக்கான காரணம். அதற்கான தண்டனையாக அவர்களை வீராவிடம் ஒப்படைத்துவிட்டு, “உசிரு போகக்கூடாது. ஆனா ஏண்டா உசிரோட இருக்கோம்னு யோசிக்கற அளவுக்கு பண்ணணும். ரொம்ப மோசமான ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணு. சரியானதும் பழையபடி ஆரம்பிச்சிரு” கூறிவிட்டு கிளம்பியிருந்தான் ஜேப்பி.
நால்வரின் நடவடிக்கையில் உண்டான மாற்றங்களை கவனித்துவிட்டு, ஆதிகேசவன் தனது திட்டத்தை ஒத்தி வைத்திருந்தான். அதை அறியாத நால்வரும், முன்பே திட்டமிட்டதைச் செய்து வசமாக ஜேப்பியிடம் மாட்டியிருந்தனர்.
ஆதிகேசவனும் தன்னிடம் வழமையாக பணியில் இருப்பவர்களைக் கொண்டு செய்யாமல், புதிய நபர்களையே இத்திட்டத்திற்கு பயன்படுத்த எண்ணியிருந்தான். ஆகையினால், நால்வரைப் பற்றிய நிலை தற்போது அறிய நேர்ந்தாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் விசயம் தெரியவருமுன் பணத்தைப் பெறுவதிலேயே குறியாகச் செயல்பட்டு இருந்தான்.
ஜேப்பி பேசியதைக் கேட்டு எதிர்முனையில் சற்று நேரம் அமைதி காத்தார் எஸ்ப்பி. ‘இது எப்டி பயலுக்கு தெரிய வந்துச்சு’ மனதிற்குள் ஓடிய நிலையில், தன்னை எளிதில் சமாளித்துக் கொண்டவர், “யாரது?” எனக் கேட்டார்.
ஜேப்பி பதில் கூறாமல் மௌனம் காக்க, பிறகு எஸ்ப்பியே தொடர்ந்தார். “எவனையும் நான் அண்டிப் போக வேண்டிய அவசியமில்லை. எப்டி, எங்க, எந்த நேரத்தில என்னத்தைப் பாக்கணும்னு தெரியாமயா தொழில் முறையில வந்த பிரச்சனை எல்லாத்தையும் இத்தனை வருசமா சமாளிச்சிட்டு இருக்கோம்” தெனாவட்டாக ஜேப்பியிடம் பேசினார்.
“உங்க சமாளிப்பெல்லாம் எங்க ரத்தத்திலயுந்தான ஓடுது” இடைவெட்டி ஆத்திரத்தோடு பேசினான் ஜேப்பி.
ஜேப்பியின் பேச்சில் வெகுண்டவர், “வாழையடி வாழையா வம்சத்துக்குனு இருந்த பேரை கலங்கப்படுத்தி தலையிறக்கமாக்கிட்டு, உன்னோட சந்தோசம் மட்டுமே பெரிசுன்னு போனவனை ஒன்னுமில்லாம பண்றதுக்கு ஒரு நிமிசம் போறாது எனக்கு.
ஆனாலும், பெருந்தன்மையா உன்னை விட்டு வச்சிருக்கேன். தேவையில்லாம என்னைச் சீண்டாத. அப்புறம் உனக்குத்தான் பெரிய லாஸ்” என்றுவிட்டு,
“இதைக் கேக்கத்தான் பேசினியா. இல்லை வேற எதுவும் பேசணும்னு போன் போட்டியா?” என அப்போதும் நல்லவராக வேடம் தரித்தார் எஸ்ப்பி.
தனது பேரன் தன்னிடம் வந்து, தனது மனைவி மற்றும் தத்துப்பிள்ளை இருவரும் எதிர்பாரா விபத்தில் மரித்ததைக் கூறி அழுகையில் ஓவெனக் கரைவான். அவனுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி எதுவுமே நடவாததுபோல சில மாதங்கள் கடந்தபின், தான் நினைத்தாற்போல நல்ல அந்தஸ்தான பெண்ணைத் தேடி பேரனுக்கு மணம் முடிக்கும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தவருக்கு, ஜேப்பியின் ஆத்திரத்தோடுடனான ஒட்டாத பேச்சில் ஏமாற்றமே.
“நீங்க இல்லைதானா! அத்தோட ஒதுங்கீக்கங்க. இனி என்னோட ஆட்டம் அமர்க்களமா ஆரம்பிக்கப் போகுது. (இடையில்)எடையில யாரு வந்தாலும், பின்வாங்க மாட்டேன்.
அப்புறம் இப்டி நடந்திருச்சேனு யாரு வருத்தப்பட்டாலும், அதுக்கு நான் பொறுப்பாக முடியாதுனு சொல்லத்தான் கூப்பிட்டேன்.” என்ற ஜேப்பி,
“என்னைச் சார்ந்தவங்க மேல கைய வச்சது நீங்க இல்லைனா எனக்கு ரொம்ப சந்தோசந்தான்” இடையில் நிறுத்தியவன்,
“ஆனா கைய வச்சவனை மட்டுமில்ல. அவனை ஏவி விட்டவனோட வம்சத்தையும் வேரறுக்காம சும்மா விடமாட்டேன். அவனோட தலைமுறையே தரைமட்டமாப் போகப் போகுது.
நடந்த அநியாயம் எல்லாத்துக்கும் பதில் சொல்றதுக்கு குடும்பத்துல இருக்கற நண்டு, சிண்டுல இருந்து, எல்லாரும் தயாரா இருந்துக்கச் சொல்லத்தான் போட்டேன். இப்பதான் நீங்க இல்லைனு சொல்லிட்டீங்களே” ஜேப்பி மறைமுகமாக எச்சரித்ததோடு, எஸ்ப்பி பொறுப்பு துறப்பாய் சொன்ன பதிலையும் சொல்லிக் காட்டியிருந்தான்.
ஜேப்பியின் பேச்சில் உண்டான கோபத்தில் இடையிட்ட எஸ்ப்பி, “இதையெல்லாம் இங்க வந்து எதுக்குடா சொல்லுற?” எகிற,
“எங்கிட்ட நேருல மோதுற அளவுக்கு வேற யாருக்கும் தில்லு இல்லை” என இழுத்தவன், “ஒன்னு என்னைப்பத்தி தெரியாதவனா இருக்கணும். இல்லைனா…” என அப்படியே விட்டவன், “வைக்கிறேன்” அழைப்பைத் துண்டிக்குமுன்னே,
வேறொரு கால் வெயிட்டிங்கில் இருப்பதாக வர, “உங்களுக்கு இனி அடுத்தடுத்து போன் வரும். டென்சனாகாம எல்லாத்தையும் கூலா அட்டெண்ட் பண்ணுங்க” என்றவாறு ஜேப்பி வைக்குமுன்னே,
“வேற ஒருத்தன் பொண்டாட்டியைத் தூக்கிட்டு வந்து தாலி கட்டினா, அவன் கைய சூம்பிட்டு வேடிக்கையா பாப்பான். ஒருவேளை அவந்தான் எதாவது கோவத்துல வாலை ஆட்டியிருப்பானா இருக்கும்” எனத் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார் எஸ்ப்பி.
“அப்டியா சொல்றீங்க” எதிர்முனையில் தாடையைத் தடவியபடியே சிரித்தவன், தனதருகில் இருந்தவனிடம் ஏதோ ஜேப்பி சமிக்கை காண்பிக்க, சற்று நேரத்தில் “டமார்” எனும் பெரும் சத்தம் எதிரிலிருந்த எஸ்ப்பிக்கு கேட்டது. ஒன்றும் புரியாமல் காதில் உண்டான வலியோடு அமர்ந்திருந்த எஸ்ப்பியின் காதிலிருந்து இரத்தம் வடியத் துவங்கியிருந்தது.
சத்தம் வந்ததில் ஒரு பக்கக் காதினுள் உண்டான வலியை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தவர், நடப்பிற்கு வருமுன்னே வெயிட்டிங்கில் வந்த அழைப்பு நின்றதை அறிந்து எடுத்துப் பார்த்தான் ஜேப்பி.
அதனைப் பார்த்தவாறே, ஜேப்பி அடுத்த பணியினை கவனிக்க எழுந்தான்.
அதேநேரம் பேசி மீண்டும் அழைக்க, அதில் தெரிந்த பெயரைக் கண்டதும் அவனறியாமலேயே இதழில் இதமான புன்னகை தோன்றியது. சுமித்ராதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
***
அழைப்பை ஏற்றதும், “யாருகூட இவ்ளோ நேரமா கடலை போட்டுட்டு இருந்த?” எனத் துவங்கினாள் சுமி.
“எவ்ளோ நல்ல அபிப்ராயம் எம்மேல உனக்கு” ஜேப்பி சிரிக்க,
நேரடியாக விசயத்திற்கு வந்தவள், “இந்த ப்ருத்வினு ஒருத்தன் இருந்தானே. அந்த நல்லவனோட போன் ஸ்விட்ச் ஆஃப்னே வருது. நம்பர் மாத்த வாய்ப்பில்ல. என்ன ஆயிருப்பான்னு தெரிஞ்சிக்க, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாம்னு இருக்கேன். உனக்கு இதுல எதாவது அப்ஜெக்சன் இல்லைல.” என்றவள், “வேற..” என அடுத்து பேசத் துவங்க,
“நல்ல வேளை கேட்ட. அவனை கொஞ்ச நாளைக்கு கண்டுக்காம இரு. சிச்சுவேசன் சரியானதும் பாக்கலாம்” ஒரே வார்த்தையில், அவளின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் ஜேப்பி.
“நாலு நாளா வீட்டுப் பக்கமே வராம எங்கடா இருக்க?” என்றாள் சுமி.
“இத்தனை நாளும் கேக்காம, இப்ப அதையேன் கேக்குறேன்னு சொல்லு?” சிரித்தான் ஜேப்பி.
“உன்னைத் திட்டாம, அடிக்காம தூக்கமே வரமாட்டிங்குது. ஒரு புல்ஃபில் ஆகாதமாதிரி லாஸ்ட் ஃபோர் டேஸூம் ஒரே போரா இருக்கு. அதான்” சுமியும் தனது மனதை அப்படியே உரைக்க,
“நாங்கூட வேற எதுவோனு நினைச்சிட்டேன்” மெல்லிய குரலில் தனக்குத்தான் ஜேப்பி பேசியது சுமிக்கும் கேட்டது. ஆனால் அவளும் அதனைக் கேட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
பிறகு அவனே தொடர்ந்து, “திட்டத்தான தேடற. போன்லயே திட்ட வேண்டியதுதான” சலிப்பாக கூறினான் ஜேப்பி.
“நேருல வச்சித் திட்டும்போது, இஞ்சித் தின்ன குரங்காட்டமா உம்முகம் போறதைப் பாக்கற சுகமே அலாதிதான். அதான் கேட்டேன். சீக்கிரமா வந்து சேரு. நீ போனதும் தொணைக்கு விட்டுப்போன உன் ஆளோட தொந்திரவு தாங்க முடியலை” கடுப்போடு கூறினாள் சுமி.
“அவ ஏன் ஆளு கிடையாதுன்னு எத்தனை தடவை உங்கிட்டச் சொல்றது” சலித்தவாறு, “ஏன் என்ன பண்றா?” ஒன்றுமறியாதவன்போல கேட்டான் ஜேப்பி.
“எங்கிட்டயே வந்து, உங்கூட வாழறதுக்கும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் ஸ்கெட்ச் போட்டுக் கேக்குது லூசு. எப்பவும் ஒரே மாதிரி நான் இருக்கமாட்டேன்னு அதுக்குத் தெரியலை. நான் பாட்டுக்கு கோவத்துல, டைனிங்ல இருக்கற நைஃப் எடுத்து வீசிட்டா, அவ நிலைமை!” என்றவளின் பேச்சைக் கேட்டவனுக்கு அத்தனை சிரிப்பு.
“கொலைகாரியா மாறிருவியோனு பயப்படறியா?” என்றான்.
“பேச்சை மாத்தாம சீக்கிரமா வந்து சேரு. அவளைச் சமாளிக்க என்னால முடியலை” வைத்துவிட்டாள் சுமி.
***
வீராவுடன் மருத்துவமனைக்குச் சென்றவன், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களைப் பார்த்துவிட்டு மருத்துவரைச் சந்தித்தான்.
நம்பிக்கையின்றிப் பேசிய மருத்துவரின் வார்த்தைகளைக் கேட்டவன், “வேற எங்க போயி ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ணலாம்” வினவ
“ஒரு டாக்டரா எங்களால முடிஞ்சதைப் பெஸ்ட்டாத்தான் பேஷண்ட்கு ரெகமண்ட் செய்யறோம். அதுக்குமேல கடவுளைத்தான் நம்பணும்” எனப் பேசிய அந்த ஐம்பதைக் கடந்த மருத்துவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு வெளியில் வந்தவன், கார்த்திக்கின் அழைப்பைக் கண்டு முகம் சுழித்தவாறு அழைப்பை ஏற்றான்.
“என்ன கார்த்தி?”
“தாத்தாவுக்கு முடியலைன்னு வீட்ல இருந்து போன் வந்ததுடா. அதான் நாளைக்கு சண்டேனால, போயிப் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன். நீ இங்க வர ஐடியால இருக்கியானு கேக்கத்தான் கூப்பிட்டேன்” கார்த்தி ஜேப்பியிடம் கேட்டான்.
முந்தைய தினம் பேசும்போது அப்படித்தான் கூறியிருந்தான் ஜேப்பி கார்த்திக்கிடம். அதனால்தான் இந்த அவசர உண்மைத்தன்மை அறிதலுக்கான பேச்சு.
தான் வேறு வேலையில் இருப்பதால் வருவதற்கான வாய்ப்பு இல்லை என உரைத்தவன், “நல்லா பாத்துக்கோங்கடா அவரை. ஏனோ தானோனு பாக்காம விட்டு, வயசானவரை கொன்னுறாதீங்கடா” என்ற ஜேப்பியின் பேச்சில் இருந்த இக்கை உணர்ந்துகொள்ளாமல்,
“காதுல இயர் டிரம் ஏதோ டேமேஜாம்டா. எப்டி திடீர்னு அப்டி ஆகும். கேட்டா வாயே திறக்க மாட்டுறாராம்” எஸ்ப்பியின் தற்போதைய நிலையினைப் பற்றி ஜேப்பி கேளாமலேயே அனைத்தையும் ஒப்பித்திருந்தான் கார்த்தி.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், “சரி நீ போயிப் பாரு கார்த்தி. நான் சென்னை வரதா இருந்தா நிச்சயமா கால் பண்ணிட்டு வறேன்” என்றுவிட்டு, கார்த்தி எப்போது கிளம்புகிறான் என்பதைக் கேட்டுக்கொண்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் ஜேப்பி.
***
எஸ்ப்பியைச் சுற்றி குடும்பமே மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தது. மீனாட்சி, ‘கடவுளே, தெரியாம இந்த மனுசன் பண்ணதையெல்லாம் மன்னிச்சுரு. இனி எந்தக் கஷ்டமும் வராம, பழையபடி அவரு வீட்டுக்கு வந்திரணும்’ வேண்டுதல் வைத்தபடி, கணவரது அருகே அமர்ந்து விநாயகர் அகவல் படித்துக் கொண்டிருந்தார்.
பேரன்கள் அனைவரும், ஓடியாடி மருத்துவமனையில் அவருக்கு வேண்டியதைச் செய்ய, மகன்கள், மருமகள்கள் அனைவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
எஸ்ப்பியை மகன்கள் தாங்க, மருமகள்களில் உணவிற்கு என ஒருவரும், பழச்சாறு பிழியும் பணியில் இன்னொருவரும், மாமியின் துணைக்கு ஒருவருமாக இருந்தனர்.
எஸ்ப்பியின் உள்மனதிற்குள் உறைந்துபோன பழிவெறியை உணராதவர்கள், இயல்பாக இருந்தனர். அவரோ, ‘வச்ச பாசம் தடுத்ததால, இவனை விட்டு வச்சது தப்போ’ என யோசித்தவாறு மருந்தின் வீரியத்தில் உறக்கம் வர, அதை ஏற்க இயலா மனதோடு தடுமாற்றத்தோடு இருந்தார்.
டெஸ்ட்கள் அனைத்தும் எடுத்து முடித்திருக்க, மருத்துவரின் நேரடி வருகையை நோக்கி மகன்கள் காத்திருக்க, மகன்களில் யாரேனும் ஒருவரை மட்டும் வந்து பார்க்கும்படி செவிலியர் மருத்துவர் கூறியதாக வந்து கூற, மூத்த மகன் தந்தையிடம் சொல்லிக்கொண்டு வெளியேறினார்.
மருத்துவர் கூறப்போவதை அறியாமல், பகல் கனவில் திட்டங்களைத் தீட்டியவாறு அரைத்தூக்கத்தில் இருந்தார் எஸ்ப்பி.
நடப்பதனைத்தும், ஜேப்பியின் திட்டம் என்பதை அவர் அறிய நேருமா?
***