விழிகள் 09

விழிகள் 09
இன்னும் கேளிக்கை விருந்துக்கு ஒருநாளே இருக்க, அன்று அலுவலகத்தில்,
“அகி, வாட் இஸ் திஸ்? எல்லாமே எரர். இத்தனை நாளாகியும் உனக்கு வேலை தெரியலயாடா? உன்னெல்லாம் வச்சிக்கிட்டு…” அலைஸ் கையிலிருந்த ரிபோர்ட்டை மேசையில் தூக்கியெறிந்து காட்டுக் கத்து கத்திக்கொண்டிருக்க,
“நான் என்ன வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன், முன்னாடியே சொன்னேன், தெரியலன்னு. சொல்றதை கேட்டா தானே!” ஸ்விங்கத்தை சப்பிக்கொண்டு தெனாவெட்டாக வந்த அகஸ்டினின் பதிலில் பொங்கிவிட்டார் அவர்.
சரியாக அதேநேரம், “மேடம், மே ஐ கம் இன்?” என்று கேட்டவாறு அலீஷா உள்ளே நுழைய, “மிஸ்.அலீஷா, வாங்க வாங்க, உங்களுக்காகதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” பற்களை கடித்துக்கொண்டுச் சொல்லி, அவள் சமர்ப்பித்திருந்த ரிபோர்ட்டை தூக்கிப் போட்டார் அலைஸ்.
அலீஷாவோ விழி விரித்து மிரட்சியாக நோக்க, “ஒரே கேள்விதான். உனக்கு வேலை தெரியுமா, தெரியாதா?” கோபமாக அவர் கேட்க, “ஹிஹிஹி… மேடம், என்னாச்சு? நான் சரியாதானே…” அலீஷா பேசி முடிக்கவில்லை, அடுத்த விழுந்த திட்டுக்களில் காதிலிருந்து அவளுக்கு இரத்தமே வந்துவிட்டது.
“இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைன்னு வேலைய தப்புத் தப்பா பண்றதுலயே தெரியுது.” அலைஸ் கடுப்பாகச் சொல்ல, தான் சமர்ப்பித்த ரிபோர்ட்டை உதட்டை பிதுக்கி புரட்டி புரட்டிப் பார்த்தாள் அலீஷா.
அவளுடைய கவனம் தன் மேல் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவர், அகஸ்டினிடம் விழிகளால் அலீஷாவைக் காட்டி, ‘லவ்வுதானே ஜெஸ்ஸி?’ என்பது போல் விழிகளாலே கேட்க, “மாம்…” பற்களை கடித்தான் அவன்.
சட்டென அலீஷா அகஸ்டினையும் அலைஸையும் மாறி மாறிப் புரியாதுப் பார்க்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… ஓகே இனிமேலாச்சும் ஒழுங்கா வேலை பாருங்க. நவ் யூ மே கோ!” என்றுவிட்டு திரையில் பார்வையை பதித்தார் அவர். அகஸ்டின் விறுவிறுவென வெளியேற, திட்டு வாங்கியதில் முகத்தை தொங்க போட்டவாறு சோகமே உருவமாய் வெளியே வந்தாள் அலீஷா.
ஆனால், வாசலில் தனக்காகவென காத்திருந்த அகஸ்டினைப் பார்த்ததுமே அவளுக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ள, அடுத்தநொடி அவன் சொன்ன விடயத்தில் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
“இன்னைக்கு ஈவினிங் நான் உன்னை ட்ரோப் பண்றேன். வெளியில வெயிட் பண்ணணும். கொட் இட்?” அதிகாரத் தோரணையில் அவன் சொல்ல, அதில் பதறியவள், “எது… எதுக்கு? நான் பஸ்லயே போவேனே!” என்றாள் திக்கித்திணறி. அதில் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்தான் அகஸ்டின்.
“நான் சொன்னது சொன்னதுதான். வெயிட் பண்ணு! வருவேன். ஏதாச்சும் அதிகப்பிரசங்கிதனமா நடந்துக்கிட்ட… அவ்வளவுதான்.” அமைதியான அதேசமயம் அழுத்தமான குரலில் அகஸ்டின் மிரட்ட, எச்சிலை விழுங்கிக்கொண்டாள் அவள். சரியாக, “அகி…” என்ற ஆத்வியின் குரல்.
குரல் வந்த திசையை நோக்கியவன், “ஹாய் பார்லர், என்ன இந்த பக்கம்?” உற்சாகமாகக் கேட்க, ஆத்வியை மேலிருந்து கீழ் விழிகளை சுருக்கி அலீஷா பார்த்தாள் என்றால், அவளை முறைத்தவாறு அகஸ்டினின் பக்கத்தில் வந்து நின்றாள் ஆத்வி.
‘ஒருவேள, இதுதான் அந்த அலீஷாவோ?’ தனக்குத்தானே கேள்விக் கேட்டு, “அலீஷா?” ஆத்வி கேள்வியாக இழுக்க, ‘அட! இவங்களுக்கு நம்மள தெரிஞ்சிருக்கு.’ நினைத்து விழி விரித்தவாறு தலையை மேலும் கீழும் ஆட்டினாள் அவள். ஆனால், ஆத்விக்குதான் அன்று கைக் கோர்த்து பார்த்ததோடு இன்றும் இருவரையும் ஒன்றாக பார்த்ததில் இரத்த கொதிப்பே வந்துவிட்டது.
முகத்தில் எதையும் காட்டாது, “நாளைக்கு பார்ட்டிக்கு ட்ரெஸ் எடுக்கணும். ஷாப்பிங் போகலாமா?” சற்று தயக்கத்தோடே அவள் கேட்க, பக்கத்திலிருந்த அலீஷாவை ஒரு பார்வைப் பார்த்தான் அகஸ்டின். அவளோ இருவரையும்தான் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சோரி ஆத்வி, முக்கியமான வேலை இருக்கு. நீ சைத்து கூட போ!” என்றுவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்காது ‘எனக்காக இன்னைக்கு நீ வெயிட் பண்ற.’ விழிகளால் அலீஷாவிடம் சைகை செய்தவாறுச் செல்ல, இருவரின் விழி மொழியை வயிறெரிய பார்த்துக்கொண்டிருந்தாள் ஆத்வி.
அலீஷாவை முறைத்துப் பார்த்தவள், “ஸ்டே இன் யூவர் லிமிட்ஸ்!” அழுத்தமாக உரைத்துவிட்டுச் செல்ல, ‘ஙே’ என போகும் அவளை பார்த்திருந்த அலீஷாவுக்கு ‘பைத்தியமா இவ?’ என்றுதான் இருந்தது.
அன்று மாலை,
‘எப்போ பாரு நமக்கு முன்னாடி வந்து நம்மள ஓட வச்சிதான் பஸ்லயே ஏத்துவானுங்க. ஆனா, இன்னைக்குன்னு பார்த்து இம்புட்டு நேரம்? அய்யோ! அந்த வெள்ளைக்காரன் வர்றதுக்குள்ள போயாகணும். கொஞ்சநாளா அவன் நடவடிக்கையே சரியில்லை.’ தனக்குத்தானே புலம்பியவாறு அலீஷா பஸ் நிலையத்தில் நிற்க, அடுத்தகணம் முன்னால் வந்து நின்ற புல்லட்டில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
எச்சிலை விழுங்கி மிரட்சியாக அவனை அவள் நோக்க, புல்லட்டில் அமர்ந்தவாறு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி, “அவ்வளவு சொல்லியும் என் பேச்சை மீறி இங்க வந்து நிக்குற? திமிரு…” என்று கேட்டு அகஸ்டின் முறைக்க, “ஹிஹிஹி… அப்படியெல்லாம் இல்லையே!” அப்பட்டமாக அசடுவழிந்தாள் அவள்.
“ஆஹான்! வந்து வண்டியில ஏறு!” அவன் கட்டளையாகச் சொல்ல, அதில் பதறியவள், “அது… இல்லை வேணாம். நான் பஸ்லயே…” திக்கித்திணறி இழுக்க, அடுத்து அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு வார்த்தைகள் வந்தால் தானே!
“ஏறப் போறியா, இல்லையா?” அழுத்தமாக அகஸ்டின் கேட்க, “அது வந்து, எனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் பார்த்தா பிரச்சினை ஆகிரும் தினு. நல்ல குடும்பத்து பொண்ணு நானு. எங்க குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு.” தீவிர முகபாவனையுடன் படபடவென அவள் பேசிக்கொண்டேப் போக, “ஆஹான்?” இப்போது அகஸ்டின் கேட்ட தோரணையில் அத்தனை கேலி பொதிந்திருந்தது.
கேள்வியிலிருந்த கேலியை உணர்ந்தவளுக்கு அதற்கு மேல் பேச நா எழவில்லை. அவனும் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் நோக்க, “ரைட்டு…” என்றவாறு அமைதியாக வந்து அவன் பின்னால் ஏறிக்கொண்டாள் அலீஷா.
வண்டியைச் செலுத்திக்கொண்டே கண்ணாடி வழியாக அவள் வதனத்தை பார்த்த அகஸ்டினுக்கு, தன் உடலோடு உடலை ஒட்டாது கிட்டதட்ட வண்டி நுனியில் அமர்ந்தவாறு வந்தவளைப் பார்த்ததும் குறும்புக் குணம் தலைத் தூக்கி ஒரு யோசனை தோன்றியது.
வேகமாக வண்டியைச் செலுத்திக்கொண்டுச் சென்று திடீரென ப்ரேக் போட்டு அவன் புல்லட்டை நிறுத்த, மொத்த உடலும் அவன் உடலோடு ஒட்டி உரச, பயத்தில் அவன் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டாள் அலீஷா. “பர்ஃபெக்ட்!” என்றுவிட்டு இதழுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் சாதாரண வேகத்தில் இப்போது அகஸ்டின் வண்டியைச் செலுத்த, ‘குசும்பு பிடிச்சவன்!’ மானசீகமாக அவனை வறுத்தெடுத்தாள் அவள்.
அடுத்த சில நிமிடங்களில் பெரிய மாலின் முன் அவன் வண்டியை நிறுத்த, இறங்கி சுற்றி முற்றி புரியாதுப் பார்த்தவள், “இங்க எதுக்கு…” கேள்வியை முழுதாக கேட்டு முடிக்கவில்லை, அவள் கரத்தை பற்றி தரதரவென உள்ளே இழுத்துச் சென்றான் அவன்.
அங்கிருந்த ஆடை கடையொன்றிற்குள் இழுத்துச் சென்றவன், கேளிக்கை விருந்துகளுக்கென பெண்கள் அணியும் மேல்நாட்டு ஆடைகளை பார்வையிட, அலீஷாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.
“வேண்டப்பட்டவங்களுக்கு வாங்கணும்னா தனியா வந்து வாங்கியிருக்கலாமே! எதுக்கு என்னை கூட்டிட்டு…” மெல்ல அவன் காதுகளுக்கு விழவே அவள் முணுமுணுக்க, விழிகளை நிமிர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்த அகஸ்டின், உடலோடு உடல் உரச நெருங்கி நின்று, “நாளைக்கு ஆஃபீஸ்ல நடக்க போற பார்ட்டிக்கு நான் எடுத்து கொடுக்குறதைதான் நீ போட்டு வரணும்.” சற்று அழுத்தமாகச் சொன்னான்.
அதிலேயே அவளுக்கு புரிந்துப் போனது, அவன் சொல்ல வருவது. ‘இதை இரண்டு ஸ்டெப் தள்ளி நின்னு சொன்னாதான் என்னவாம்?’ தனக்குள்ளேயே கேட்டவாறு அங்கிருந்த ஆடைகளை அவள் ஆராய, அவனும் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு அவளையேதான் பார்த்திருந்தான்.
அந்த ஆடைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தவள், சேலைகள் இருக்கும் பக்கம் சென்று அதை ஆராய, அதில் புருவத்தை நெறித்த அகஸ்டின் அப்போதும் எதுவும் பேசவில்லை. சரியாக, கற்கள் பதிக்கப்பட்ட தங்கநிற சேலை அவள் விழிகளுக்குள் சிக்க, அதைப் பார்த்தவளுக்கோ விழிகள் மின்ன ஆரம்பித்தது.
“இது எவ்வளவு அண்ணா?” அந்த சேலையை வருடியவாறு ஆர்வமாக அலீஷா கேட்க, அடுத்து அங்கிருந்த ஆடவன் சொன்ன விலையில் அவளுக்கு தலையே சுற்றிவிட்டது. ‘ஆத்தீ! இந்த விலைக்கு வீட்டு பக்கத்துல ஒரு சேலைக் கடையே போட்டுரலாம் போல!’ உள்ளுக்குள் நினைத்து, “ஹிஹிஹி… என் நிறத்துக்கு இது பொருத்தம் இல்லை. கோஸ்ட்லியா ஐநூறு ரூபாய்க்குள்ள சேலை இருந்தா காட்ட முடியுமா?” சொல்லிவிட்டு அசடுவழிந்தாள் அவள்.
அந்த ஆடவனோ முகத்தை சுழித்தவாறு அவளை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்க்க, ‘ஓ கோட்! என் மானத்தையே வாங்குறா.’ கடுப்பாக நினைத்து வேகமாக அலீஷாவின் அருகில் வந்தவன், “இதையே பேக் பண்ணுங்க.” என்றுவிட்டு அவளை அங்கிருந்து சற்று தூரமாக இழுத்துச் சென்றான்.
“அய்யோ தினு, அதோட விலைய பார்த்தீங்களா? ஃப்ரோடு பயலுங்க! ஏமாத்துறானுங்க.” அலீஷா தன்னிலை மறந்து, இடம் பொருள் மறந்து கத்த, அவள் வாயைப் பொத்தியவன், “உன் அப்பன் வீட்டு காசா என்ன? நான்தானே செலவு பண்றேன். ஷட் அப் இடியட்!” என்றான் பற்களை கடித்துக்கொண்டு.
அதற்கு மேல் அவளும் எதுவும் பேசவில்லை. இருவரும் அங்கிருந்து வெளியேறி மின்தூக்கியில் ஏற, அகஸ்டினோ தன் பக்கத்திலிருந்தவளையே விழிகளை சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை அவளுக்கு புரிந்ததோ, என்னவோ? அவன் புறம் திரும்பவேயில்லை அவள்.
அடுத்த சில நொடிகளில் மின்தூக்கியிலிருந்த மற்றவர்கள் ஒவ்வொரு தளங்களில் இறங்கிக்கொள்ள, இப்போது இவர்கள் இருவர் மட்டுமே!
“ஏய் எலி!” அகஸ்டின் அழைக்க, “எதே, எலியா?” அவனுடைய அழைப்பில் கோபமாக திரும்பப் போனவள், அடுத்தகணம் தோளைப் பற்றி சுவற்றில் சாய்த்து அவள் கன்னத்தில் அவன் கொடுத்த அழுத்தமான முத்தத்தில் ஆடிப் போய்விட்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை முத்தமிட்டு விலகிய அகஸ்டின், சற்று நேரத்திற்கு முன் எதுவுமே நடக்காதது போலான பாவனையில் அலைப்பேசியை நோண்டியவாறு நிற்க, இவளுக்குதான் தன்னை சுதாகரிக்கவே நிமிடங்கள் எடுத்தது. அதேநேரம் மின்தூக்கியின் கதவுகளும் திறக்கப்பட, இப்போதும் அவள் அனுமதியை பெறாது அவள் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றான் அவன்.
ஆனால், இவன் அலீஷாவை கைப்பற்றி இழுத்துச் செல்லும் காட்சி தன் நண்பர்களுடன் வந்த ஆத்வியின் பார்வையில் சரியாகச் சிக்கியது. கொஞ்சமும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ‘இதுதான் அகி உன்னோட முக்கியமான வேலையா?’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவளுக்கு ஆறுதலே மஹிதானே! அடுத்தகணம் அவனுக்கு அழைத்து புலம்பித் தள்ளிவிட்டாள்.
இங்கு, அலீஷாவின் வீட்டை நோக்கி அகஸ்டின் வண்டியைச் செலுத்த, இவளுக்குதான் என்ன உணர்வென்றே தெரியவில்லை. இருவருக்குமான முதல் சந்திப்பு அவளுடைய நினைவில் தோன்ற, மெல்லிய புன்னகை சிந்தியவள், “என்னை நிஜமாவே நியாபகம் வந்திருச்சா தினு?” குறும்புப் புன்னகையுடன் கேட்டாள். அதில் கண்ணாடி வழியாக அவளை நோக்கியவன், எந்த பதிலும் சொல்லவில்லை.
‘என்ன பதிலையே காணோம்? ஒருவேள, நியாகம் வந்திருந்தா கண்டிப்பா இவனோட ரியாக்ஷன் இப்படி இருக்காது. சோ, வாய்ப்பேயில்லை.’ தனக்குத்தானே பேசி ஒரு முடிவெடுத்தவள், மீண்டும் கண்ணாடி வழியாக அவனையே ரசனையாகப் பார்த்திருந்தாள்.
அவளுடைய தெருமுனையில் அகஸ்டின் வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள், “தேங்க்ஸ்!” என்றுவிட்டு அவனை ஒருவித தயக்கத்தோடு ஏறிட, அவனும் அவளையேதான் பார்த்திருந்தான். அலீஷாவின் விழிகளில் அவன் மேலிருக்கும் ஆர்வம் அப்பட்டமாகத் தெரிய, அகஸ்டினின் பார்வையில் என்ன இருக்கின்றதென அவளால் சுத்தமாக உணர முடியவில்லை.
ஆனால், அவன் நடந்துக்கொள்ளும் முறை ‘அவள் மேல் அவனுக்கு காதல்’ என்றுதான் அடித்துச் சொல்லியது.
“நாளைக்கு பார்ட்டில சந்திக்கலாம். உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு.” அகஸ்டின் பொடி வைத்துப் பேச, அவனை கேள்வியாக நோக்கியவள், பின் “நான் வர்றேன் தினு.” என்றுவிட்டு நகர போனாள். ஆனால், அவளால் போக முடிந்தால் தானே!
அகஸ்டின் அவள் கரத்தை இறுகப் பற்றியிருக்க, சுற்றி முற்றி பார்த்தவள், அந்த தெருவிலிருந்த அத்தனைப் பேருடைய பார்வையும் அவர்கள் மேல் படிவதை உணர்ந்து, “தினு…” என்றவாறு விலக முயற்சித்தாள். அடுத்தகணம் அவளை அருகே இழுத்தெடுத்து, “என்கிட்டயிருந்து நீ தப்பவே முடியாது.” ஹஸ்கி குரலில் அகஸ்டின் சொல்ல, அதில் விழி விரித்து அவனை நோக்கியவளின் இதயம் படு வேகமாக அடித்துக்கொண்டது.
“சும்மா லுல்லுயாக்கு…” என்றுவிட்டு அவளின் அதிர்ந்த முகத்தை கண்டுக்கொள்ளாது அங்கிருந்து மின்னல் வேகத்தில் அகஸ்டின் நகர்ந்திருக்க, ‘நம்மள பதட்டத்துலயே வச்சிருக்கான். பாவி!’ பெருமூச்சுவிட்டுக்கொண்டாள் அலீஷா. ஆனால், அவளுடைய இதழில் மெல்லிய புன்னகை!
அன்றிரவு,
அகஸ்டினுடைய விரல்கள் அலைப்பேசி விளையாட்டில் இருந்ததென்றால், சிந்தனையோ வேறெங்கோ இருந்தது.
சரியாக ஹோலின் டீபாயின் மேலிருந்த மஹியின் அலைப்பேசி ஒலிக்க, “எங்க போனான் இவன்?” வாய்விட்டே கேட்டவாறு சுற்றி முற்றி பார்த்தவன், வழக்கமாக செய்வது போல் அவனுடைய அலைப்பேசியை ஏற்று காதில் வைத்தான். ஆனால், மறுமுனையில் என்ன சொன்னார்களோ, ஏது சொன்னார்களோ? யோசிப்பதற்கு அடையாளமாக அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டது.
அடுத்தநொடி, “என் ஃபோன்ல யார் கூட பேசிக்கிட்டு இருக்க?” தனக்கு பின்னால் கேட்ட மஹியின் குரலில் நிதானமாக திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாது அமைதியாக இருக்க, வேகமாக வந்து அவன் கையிலிருந்த அலைப்பேசியை பிடுங்கி திரையைப் பார்த்தான் மஹி.
ஆனால், அலைப்பேசி திரையில் எந்தவிதமான அழைப்புகளும் இல்லை. அகஸ்டினை கேள்வியாக நோக்கிய மஹி, “யாருன்னு தெரியல. ஏதோ பேசிட்டு கட் பண்ணிட்டாங்க. வொய்ஸ் க்ளியரா கேக்கல. அப்றம் கட் ஆகிருச்சு.” என்ற அகஸ்டினின் பதிலில், பதிலேதும் பேசாது அங்கிருந்து நகர போனான். ஆனால், அகஸ்டினுக்கு அவனிடத்தில் ஏதோ அன்னியத்தன்மை தோன்றியது.
“உனக்கு வர்ற கோல்ல நான் ஆன்சர் பண்றது ஒன்னும் புதுசு கிடையாது. இப்போ நீ நடந்துக்குறது ரொம்ப வித்தியாசமா இருக்கு. முன்னாடியிருந்த ஏதோ ஒன்னு இப்போ நமக்குள்ள இல்லையோன்னு எனக்கு தோனுது. என்னாச்சு சைத்து உனக்கு? நான் ஏதாச்சும் உன்னை ஹர்ட் பண்ணேணா என்ன?” அமைதியான குரலில் அகஸ்டின் கேட்டாலும் அந்த குரலிலிருந்த ஏதோ ஒன்று மஹியை வாட்ட, “நத்திங், நீயா ஏதும் நினைச்சிக்காத!” என்றுவிட்டு தனதறைக்குள் சென்று அடைந்துக்கொண்டான்.
ஆத்வி அகஸ்டினை காதலிப்பதாக சொன்னதிலிருந்து அவனால் தன் தோழனுடன் இயல்பாக பழக முடியவில்லை என்பது உண்மைதான். ஏனோ, ‘ஆத்வியை இழந்து விடுவோமோ? என்ற ஆத்திரத்தில் அகஸ்டினை காயப்படுத்திவிடுவோமோ?’ என்ற பயம் அவனுக்குள்.
மூடிய கதவையே அகஸ்டின் புரியாது நோக்க, இங்கு தனதறை கட்டிலில் விட்டத்தை வெறித்தவாறு அகஸ்டினைப் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள் அலீஷா.
‘கண்டிப்பா அவன் நம்மள லவ்வுதான் பண்றான். ஆனா, அதெப்படி சட்டு புட்டுன்னு அவனுக்கு லவ்வு வந்திச்சு? காதல் என்ன சொல்லிட்டா வரும். அதுவா வரும். அவன் நடந்துக்கொள்ளுறதும் அப்படிதானே இருக்கு. பொதுவா கட்டிக்கப் போறவன்தான் சேலை வாங்கி கொடுப்பான்னு அம்மா சொல்வாங்க. அப்போ இது லவ்வுதானே ஜெஸ்ஸி?’ தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவள்,
‘ஐ க்னோ, அகஸ்டின் லவ்ஸ் அலீஷா. ஆனால், இரண்டு பேருல யாராவது ஒருத்தராச்சும் தைரியமா லவ்வ சொல்லணும். அவனும் ஏதோ சப்ரைஸ்னு சொன்னான். கண்டிப்பான் நாம நினைச்சதாதான் இருக்கும். அதுக்குள்ள நம்ம லவ்வ சொல்லிருவோம். கூடவே, நம்மள பத்தின உண்மையும். நம்மள பத்தி தெரிஞ்சா ஏத்துப்பானா?’ அவளின் ரகசியத்தை நினைத்து அவளுக்கு அத்தனை பதட்டம்!
‘கண்டிப்பா ஏத்துக்கணும். வேற வழி!’ ஒரு உறுதியோடு வெற்றிப்புன்னகைப் புரிந்தவள், நிம்மதியாக உறங்கிப் போனாள், நாளை நடக்கப் போகும் சம்பவத்தை அறியாது.