உடையாத(தே) வெண்ணிலவே – எபிலாக்

உடையாத(தே) வெண்ணிலவே – எபிலாக்

லஷ்மி திருமண மாளிகை!

வானில் மிதக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாய் மினுங்கி கொண்டிருந்தது அந்த கட்டிடம்.

வாசலில் கட்டப்பட்ட வாழை மரம் காற்றுக்கு தோதாய் தலையாட்டியதில் வந்தவர்களை வரவேற்கும் தோரணை.

அந்த வரவேற்பை ரசித்தபடி உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர் ஆரனாஷியின் நண்பர்கள் தீப்தி மற்றும் பிரவீன்.

அவர்களை பார்த்து முகம் மலர்ந்த ஆரனாஷி, “வாடி தீப்தி.. வாடா பிரவீன்” என்றாள் ஆசையாக.

“நீ கொடுத்து வைச்சவ ஆஷி. நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே உன் அம்மா அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே, நீ  பார்க்கணும்ன்றதுகாக மறுபடியும் பண்ணிக்கிறாங்க” பொறாமையும் ஏக்கமும் ஒரு சேர வெளிப்பட்டது அவர்கள் குரலில்.

ஏற்கெனவே அவர்களை  சமாளிப்பதற்காக  சொன்ன பொய்யை மேலும் உண்மையாய் மாற்ற முற்பட்டாள்.

“ஆமாம் ஆமாம் நான் பார்க்கலைன்றதுக்காக என் அம்மாவும் அப்பாவும் இதே மாதிரி ஒவ்வொரு வருஷமும் இனி கல்யாணம் பண்ணிப்பாங்க” சமாளிக்க முயன்றவள்,

“நீங்க உட்காருங்க. நான் இதோ ஜுஸ் கொண்டு வந்துடுறேன்” வேகமாய் ஓடியவளின் கண்கள் யார் மீதோ மோதி நின்றது.

நிமிர்ந்துப் பார்க்க ஸ்வேதாவின் தாய் லஷ்மி.

ஆரனாஷியை கண்டு முகம் மலர்ந்தவர் “இப்படி வேகமா ஓடக்கூடாதுடா செல்லம். ஹார்டுக்கு நல்லதில்லை” என்றுரைத்தபடி பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து ஆஷியை தூக்கி மடியில் வைத்து கொண்டார்.

அவளது இதயத் துடிப்பை ஒவ்வொரு முறையும் அருகிலிருந்து உணரும் தருணத்தில் கண்களிலிருந்து

நீர் தளும்பிவிடும்.

இன்றும் அதே போல் லஷ்மி கண்ணீர் குளத்திலிருந்து நீர் உடைய பார்க்க ஆஷி வேகமாய் தன் கைகளால் அணைப் போட்டாள்.

“லட்சுமா… என் லட்டுமாலே. அழக்கூடாது சரியா” ஆசையாய் ஆரனாஷி கட்டிக் கொள்ள லஷ்மியின் முகமெங்கும் நேச பூக்கள்.

இங்கே இவர்களுக்குள் இப்படியொரு பாசப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்க அங்கே நர்ஸ்களிடையே வார்த்தை போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

“அங்கே பாரு ஷ்யாமுக்கு 35 மான்யாவுக்கு 28. அரைகிழவன், ஆன்டி வயசான அப்புறம் நம்ம ஷ்யாம் சாருக்கு இந்த கல்யாணம் தேவை தானா?” மோகனாவின் மூக்கில் பொறாமையின் பெருமூச்சு.

“ஏன் இந்த வயசு வித்தியாசம் ஷ்யாம் சாரை  சைட் அடிக்கும் போது உறுத்தலையாக்கும். அப்போ மட்டும், வாவ் ஹேன்ட்சம், மேன்லினு அவரைப் பார்த்து ஜொல்லு விட்டுட்டு இருந்தவள் தானே நீ!” என்றாள் பிரியங்கா கேள்வியாக.

“ஓய் லூசை மெடிக்கல் ஃபீல்ட்லே இருக்கிற டாக்டர்ஸ் மோஸ்டா ஸ்டெடிஸ் முடிச்சுட்டு செட்டில் ஆன அப்புறம் தானே கல்யாணம் பண்ணிப்பாங்க” என்றாள் ப்ரீத்தி யோசனையாக

“நீங்க வேற நானே அவருக்கு கல்யாணம் ஆகப் போகுதே, ஏதாவது சொல்லி மனசை சமாதானப்படுத்தனும்ணு நொண்டி காரணம் சொல்லிட்டு இருக்கேன். நீங்க வேற வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க” வராத கண்ணீரை துடைத்து கொண்டு மோகனா சொல்ல பிரியங்கா கை நீட்டி எச்சரித்தாள்.

“நீ ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி தான் ஆகணும். இல்லைனா மான்யா சைட் அடிக்கிற உன் கண்ணை நோண்டிடுவா ஜாக்கிரதை” பிரியாங்கா மோகனாவை கேலி பேசவும் அங்கே ஒரு ஆனந்த சிரிப்பொலி எம்பி அடங்கியது.

“ஆனாலும் நம்ம மானு ஷ்யாமை சேர்ந்து பார்க்கும் போது அவ்வளவு க்யூட்டா இருக்குலே. மேட் ஃபார் இச் அதர் ரெண்டு பேரும்”

சிலாகித்து பேசிக் கொண்டிருந்தவர்களின் வார்த்தைகள் மீனாட்சியம்மாளின் காதுகளில் விழவும் இருவரையும் நிமிர்ந்து பார்த்தார்.

அக்னியின் தகதகப்பில் அவர்கள் இருவரது முகமும் தங்கமாய் ஜொலித்து கொண்டிருந்தது.

அரக்கு சேலையில் மான்யா சரசரக்க, ஷ்யாம் வேட்டியில் மிளிர்ந்து கொண்டிருந்தான்.

இருவரையும் பார்த்து பூரித்து ஒரு கணம் நின்றவர் பின்பு நினைவு வந்தவராக  தாம்பூலப்பை தயாராகிவிட்டதா என்று பார்ப்பதற்காக வாசலை நோக்கி சென்றார்.

அங்கே தயக்கத்துடன் வெங்கட்ராம் தன் மனைவி சாந்தி மற்றும் மீராவோடு உள் நுழைந்து கொண்டிருந்தார். அவரை கண்டு மீனாட்சியம்மாளின் முகம் சுருங்கிப் போனது.

ஆனால் அருகிலிருந்த மீராவை கண்டதும் மலர்ந்து போனார்.

“வாமா மீரா” என்று உளமார அழைத்தவர் தயங்கி நின்ற சாந்தியைப் பார்த்து மெல்லியதாக முறுவலித்து,

“மீரா என்னை அவள் அம்மா மாதிரி அவ்வளவு பத்திரமா பார்த்துக்கிட்டா. நானும் அவளை பொண்ணா தான் பார்க்கிறேன். அப்போ நீங்க எனக்கு தங்கச்சி முறை தானே வேணும். எந்த தயக்கமும் இல்லாம நம்ம பையன் ஷ்யாம் கல்யாணத்துக்கு வாங்க” என்றழைக்க சாந்தியின் முகத்திலிருந்த நெருடல் மொத்தமாய் விலகி மலர்வாய் உள்ளே சென்றார்.

ஆனால் இப்போது அங்கே வெங்கட்ராமன் மட்டும் தனியாளாய் தவித்தபடி.

சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருக்க தான் மட்டும் தனிதீவாய் நிற்பதைப் போன்ற பிரம்மை அவருக்குள்.

இதுவரை பணத்திற்காக சுயநலமாய் ஓடிய பந்தயத்தில் சுற்றியிருந்த உறவுகள் அனைவரையும் இழந்துவிட்டேனோ!

கேள்வி முட்கள் சுருக்கென  தைக்க அவர் இதயத்திலும் அந்த வலி பிரதிபலித்தது. காலையில் சாப்பிட்ட கிழங்கு வகை வேறு அவருக்கு அதீத வாயுவை நிரப்பியிருக்க வலி தாங்கமாட்டாமல் இதயத்தைப் பிடித்துக் கொண்டார்.

லஷ்மியின் மடியில் அமர்ந்தபடி அவர் முகமாற்றங்களை கவனித்து கொண்டிருந்த ஆரனாஷி, அவர் இதயத்தைப் பிடித்துக் கொண்டதும் வேகமாய் அருகில் ஓடி வந்தாள்.

“தாத்தா ஹார்ட் ரொம்ப வலிக்குதா? நல்லா இழுத்து மூச்சுவிடுங்க சரியாகிடும்” என்று சொன்னபடி அவரின் கையை வேகமாக இழுத்து நகங்களை ஆராய்ந்தாள்.

“நெயில்ஸ் ஸ்பூன் ஷேப்லே இருந்தா மானுமா ஹார்ட் ப்ராப்ளம் இருக்கும்னு சொல்லி கொடுத்து இருக்காங்க. பட் உங்களுக்கு அப்படியில்லை தாத்தா. நீங்க பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” தன் உடல்நிலைக்கு சான்றிதழ் கொடுத்த அந்த சின்னஞ்சிறு உருவத்தையே குற்றவுணர்வோடு பார்த்தார்.

இத்தனை அனுபவமும் வயதும் நிரம்பியிருந்தும் அவளுக்கு மருத்துவம் செய்ய தவறியவன் நான். ஆனால் இவள் எனக்கு சிறுவயதிலேயே மருத்துவம் பார்த்து குணப்படுத்த முயல்கிறாளே.

இவள் என் மீது .காட்டும் இத்தனை அக்கறைக்கும் பாசத்திற்கும் நான் தகுதியானவன் தானா?

கண்ணீர் மேகங்கள் அவர் முகத்தை சூழ விக்கித்து நின்றவரின் கண்கள், மேடையில் சந்தோஷமும் வெட்கமும் போட்டிப் போட்டு கொண்டு நின்ற மான்யாவையும் ஷ்யாமையும் கலக்கமாய் பார்த்தது.

மகன் நல்லாயிருக்க வேண்டும் என்ற நட்பாசையில் மான்யாவிற்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்து இருக்கக்கூடாதோ?

அப்படி மட்டும் தான் செய்யாதிருந்தால் மான்யா ஷ்யாமை விட்டு விலகிப் போய் இருக்க மாட்டாளே. மூன்று வருடங்களுக்கு முன்பே இவர்களின் முகத்தில் இந்த சந்தோஷம் ஒளிர்விட்டு இருக்குமே.

அவர்களின் முகத்தைக் கண்டு மெல்ல மெல்ல குற்றவுணர்வில் அவர் மனம் மூழ்கிக் கொண்டிருக்க, இங்கோ மேடையில் அமர்ந்திருந்த நம் நாயகனும் நாயகியும் குறும்பு பேசி சிரித்து கொண்டிருந்தனர்.

அக்னிப் புகை அவர்கள் இருவரது முகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைக்க துவங்க மான்யாவின் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தான் அவன்.

“ஓய் இன்டெர்ன், ஒழுங்கா உளறாம மந்திரத்தை சரியா சொல்லு. கண்டே பத்நாமி க்கு பதிலாக கண்டேன் பத்மினியேனு உளறிட்டு இருக்கிற. ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம சொல்ல கத்துக்கோ” திருத்தி சொல்லிக் கொண்டிருந்தவனின் தொடையை யாருக்கும் தெரியாமல் கிள்ளி வைத்தாள்.

“ஹாஸ்பிட்டெலிலே தான் எனக்கு சீனியரா இருந்து குறை சொல்லிட்டு இருந்தேனா, இங்கேயும் வந்து எல்லாத்தையும் கரெக்ட் பண்ணிட்டு இருப்பியாடா? நானே உன் பக்கத்துலே உட்கார முடியாம வெட்கத்திலே தவிச்சு உளறிட்டு இருக்கேன். நீ வேற கடுப்பாத்தாதே” அவளின் வார்த்தையில் அவன் இதழ்கள் புன்னகையில் வளைந்தது.

“ஓஹோ வெட்கமா… அது ஏன்டி இப்போ பட்டுக்கிட்டு அது பட வேண்டிய நேரத்திலே பட்டா போதும்” மான்யாவை பதிலுக்கு பதில் சீண்டிவிட்டு நிமிர்ந்தவனின் பார்வை புன்னகை சுமந்திருந்த மீராவின் முகத்தை கண்டு லேசாய் மாறியது.

என்ன தான் அவள் உதட்டில் புன்னகை அலை அடித்துக் கொண்டிருந்தாலும் கண்ணின் கரையில் நீர்முத்து தேங்கிக் கொண்டிருப்பதை அவனால் நன்றாக உணர முடிந்தது.

வெங்கட்ராமன், பத்து வயதில் அவன் கையில் மீராவை கைக்குழந்தையாய் கொடுத்த போதே அவனுக்கு இன்னொரு குழந்தையாகிப் போனாள் மீரா.

அவளது சிறு சிறு அசைவுகளும் அத்துபடியாய் அறிந்தவனுக்கா, உள்ளுக்குள் உடைந்து போய் இருக்கும் மீராவின் கண்ணீர் தெரியாமலா போய்விடும்?

அவனுக்கு தெளிவாய் அவள் வருத்தம் புரிந்தது. ஆனால் எப்படி அந்த கண்ணீரை துடைப்பது என்ற கேள்வி மனதை குடைந்த நேரம், “பொண்ணு வீட்டுக்காரங்களை கூப்பிடுங்க” என்று ஐயர் கத்தினார்.

அந்த வார்த்தைகள் மான்யாவின் ஒளி கூடிய முகத்தை இருள செய்த நேரத்தில் வேக வேகமாய் எழுந்து வந்தனர் டியூட்டி நர்ஸ்கள்.

“நாங்க எல்லாரும் பொண்ணு வீட்டு சைடு”  மோகனா, பிரியங்கா, ப்ரீத்தி முவரும் ஒரு சேர கூற மான்யாவின் முகத்தில் நெகிழ்வு நெம்பியது.

மான்யாவின் உணர்வுகளை வரிக்க வார்த்தைகளில்லாமல் தவித்து கொண்டிருந்த போது “பொண்ணோட அண்ணன் இல்லாட்டி தம்பியை அழைச்சுட்டு வாங்கோ” என்று ஐயர் சொன்ன நேரம், அந்த மண்டபத்திற்குள் விஷ்வக் நுழைந்து கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பின்பு அவனைப் பார்த்த ஷ்யாமின் விழிகள் ஆனந்தத்தையும் அதிர்வையும் ஒரு சேர சுமந்து நின்றது.

தன் காதலனை பல வருடங்கள் கழித்து கண்ட மீரா திகைத்து எழுந்து நிற்க, நேராக மணவறையை நோக்கி வந்த விஷ்வக்கோ, “நான் தான் பொண்ணோட அண்ணா” என்றான் ஒருவித வாஞ்சையோடு.

மான்யாவின் கண்ணீர் ததும்பிய விழிகளைப் பார்த்தவன், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மான்யா. என் தங்கச்சியோட இந்த ஸ்பெஷல் மொமெண்ட்லே அவளை தனியா உணர வைக்க மாட்டேன்” நெகிழ்வாய் சொல்லிவிட்டு திரும்பியவனின் பார்வை ஷ்யாம் மீது விழுந்தது.

தன்னையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தை, சில கணங்கள் மௌனமாய் பார்த்த விஷ்வக் புன்னகை ஊறிய குரலோடு, “சீனியர் கங்ராட்ஸ், என் மாப்பிள்ளை ஆக போறதுக்காக” என்றான் நிறைவான முகத்தோடு.

அதுவரை அவனில்லாத மனக்குறையை மறைத்துக் கொண்டு புன்னகைத்து கொண்டிருந்த அந்த திருமண ஜோடிகளுக்கு அவன் வருகை வரமாய் மாற, முழுப்புன்கையுடன் அடுத்தடுத்த  சடங்குகளில் கலந்து கொண்டனர்.

விஷ்வக் தன் தங்கை மான்யாவிற்காக எல்லாவற்றையும்  செய்து முடித்துவிட்டு கீழிறங்கிய நேரம் மீனாட்சியம்மாள் அவனையே ஒரு வித பரிதவிப்போடு பார்த்து கொண்டிருந்தார்.

அவன் முதத்தில் நொடிப் பொழுதில் ஏகமாய் ரசாயன மாற்றங்கள். 

“என்னை மன்னிச்சுடுபா” மீனாட்சியம்மாளின் குரல் உடைய முயன்ற போது வேகமாய் வந்து அவரது கையைப் பற்றி கொண்டான்.

அதிலேயே அவனுக்கு உண்மைகள் தெரிந்துவிட்டது என்பது புரிய மௌனமாய் புருவத்தை நெறித்தார் மீனாட்சியம்மாள்.

“மான்யா நான் எந்த கால்கும் ரெஸ்பான்ஸ் பண்ணலைனதும் எனக்கு லெட்டர் போட்டா. அதுலே அவள் எழுதியிருந்த எல்லா உண்மையும் படிச்சுட்டேன்” என்றவனின் பார்வை கலக்கமாய் ஆரனாஷி மீது விழ கண்ணீர் புகை அவன்  குரலை மறைத்தது.

“உங்க மேல எனக்கு முன்னாடி நிறைய கோவமிருந்தது. ஆனால் இப்போ நிச்சயமா இல்லை” பொறுமையாக சொன்னவனின் முகம் தூரத்தில் நின்றிருந்த வெங்கட்ராமை கண்டு ரௌத்திரமாய் மாறியது.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு அம்முகுனி மாதிரி அங்கே நின்னுட்டு இருக்காரே அவர் தான்மா தண்டனை அனுபவிக்கனும். நீங்க இல்லை” வெங்கட்ராமை வெறுப்பாய் சுட்டிக்காட்டியவனின் கைகள் மீனாட்சியம்மாளின் விரல்களை தனக்குள் அடக்கி கொண்டது.

“உங்களுக்கு இப்படி ஆனதுலே எனக்கும் பங்கு இருக்கோனு நினைச்சு குற்றவுணர்வா இருக்குமா. சின்ன வயசுலே இருந்து என் அம்மாவை கொன்ன டாக்டரை நான் சபிச்சுட்டே இருந்ததாலோ தான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சோ” விக்கித்த குரலோடு கேட்டவனின் தோள்களை ஆதரவாய் மீனாட்சியம்மாள் பற்றி கொள்ள அங்கே அவர்களுக்குள் அன்பின் கொடி படர்ந்து நேசப் பூக்கள் பூக்க துவங்கியது.

அவர்களிருவருக்குள் ஊடாடிய பாசபிணைப்பை கண்டு மீராவின் கண்களில் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேர போட்டியிட்டது.

அவர்கள் இருவரும் இணைந்துவிட்டாலும் ஆனால் இன்றும் விஷ்வக்கிடமிருந்து தான் விலகி தானே நிற்கிறோம்!

எண்ணம் எழுந்த அடுத்த நொடியே விழகளில் வறட்சி.

‘வெங்கட்ராமனுக்கு மகளாய் பிறந்ததை தவிர்த்து நான் என்ன பாவம் செய்தேன். அதற்கு ஏன் விஷ்வக் இத்தனை பெரிய தண்டனை எனக்கு கொடுத்தான்’ ஆற்றாமையோடு எண்ணியவளின் அருகே மெல்ல அடி எடுத்து வைத்து வந்தான் விஷ்வக்.

ஆனால் அவனை கண்ட அடுத்த நொடியே அவளிடம் விலகல்.

“மீரா” கலக்கமாய் அவன் கையைப் பிடிக்க வேகமாய் உதறிவிட்டு பக்கத்திலிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

வாடிய முகத்துடன் உள்ளே வந்தவனை கொல்லும் பார்வை பார்த்தாள்.

“அப்படி மூஞ்சை வெச்சு சிம்பதி க்ரீயேட் பண்ண ட்ரை பண்ணாதே. என்னை பத்தி கொஞ்சமும் யோசிச்சு பார்க்காம

என்ன ஏதுனும் கேட்காம அப்படியே விட்டுட்டு போயிட்டேலேடா. நான் என்ன பாவம் பண்ணேன்?”  கண்ணீரில் நனைந்திருந்தது குரல்.

“அந்த நியூஸ்பேப்பர் பார்த்த அப்புறம் என்னாலே என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை மீரா. ஷ்யாம் இத்தனை நாள் என்னை பார்த்துக்கிட்டது குற்றவுணர்வுலே இருந்து வெளியே வரணு நினைச்சுட்டேன். நீயும் என் கிட்டே அதே மாதிரி மறைச்சுட்டியோனு…” குற்றவுணர்வோடு அவன் நிறுத்தினான்.

“சத்தியமா எனக்கு அந்த உண்மை தெரியாது விஷ்வக், நான் உன் கிட்டே நடிக்கலை. என் அன்பு உண்மை. ஆனால் நீ அதை புரிஞ்சுக்காம போயிட்டேல.  அப்படி என்னடா உனக்கு அவசரம்” அவள் சட்டையைப் பிடித்தாள்.

“பயமா இருந்தது மீரா. இங்கேயே இருந்தா உன் கிட்டே தடுமாறிடுவனோனு. அதான் வேகமா போயிட்டேன்” தயக்கமாக உரைத்தவனை நோக்கி ஆங்காரமாய் கத்தினாள்.

“அப்போ போடா, ஏன் இன்னும் என் முன்னாடி நிற்கிற. நான் என்னடா தப்பு பண்ணேன்… என் அப்பாவுக்கு பொண்ணா பிறந்ததை தவிர” அவள் தேம்பி அழவும் நெருங்கி வந்து கண்ணீர் துடைக்க முயன்றான்.

“கிட்டே வராதே. தள்ளி போ, என் காதலை புரிஞ்சுக்காம என்னை விட்டுட்டு போயிட்டல. உனக்காக நான் நம்ம ஹாஸ்பிட்டலையை விட்டு கொடுக்க தயாரா இருந்தேன்டா. ஆனால் நீ…” கோபமாய் நிறுத்தியவள் ஆத்திரமாய் அவனை முறைத்தாள்.

“ஆனால் நீ ஏன்டா என்னை கொஞ்சமும் நம்பல?” அவள் கதறியழ வேகமாய் நெருங்கி அவள் முகத்தை தாங்கிப் பிடித்தான்.

“மீரா என்னாலே உன் ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க முடியுதுடி. இனி அப்படி நடந்துக்க மாட்டேன்” என்றான் அவள் நெற்றியில் தன் நெற்றியை சாய்த்துக் கொண்டு.

“இல்லை நீ புரிஞ்சு இருந்தா இப்படி பிரிஞ்சு போய் இருக்க மாட்டே. நான் உனக்கு வேணாம். நாம ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்” கேவலோடு அவன் மார்பிற்குள் ஒன்றினாள்.

பிரியலாம் என்று சொல்லிவிட்டு இப்படி நெருங்கி வந்து தன் மார்பில் செல்லமாய் முட்டும் காதலியை நினைத்து அவனுக்குள் காதல் ததும்பியது.

அவளை தன்னுள் புதைத்து கொண்டவன், “ஓகே மீராமா. நாம ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்” என்றான் அவள் நெற்றியில் செல்லமாக முட்டியபடி.

அவன் கண்களையே ஏக்கமாக பார்த்தவள், “நாம முதலிலேயிருந்து காதலிக்கலாமாடா? இந்த நெருடல் விலகல் எதுவும் இல்லாம புதுசா நம்ம காதலை தொடங்கலாமா? என்றாள் காதலை கண்ணில் தேக்கி.

அதில் தன்னை மறந்தவன் “கண்டிப்பா டி” என்றான் அவள் நெற்றியில் இதழ் பதித்து.

இருவரும் காதலில் மூழ்கி தங்களை மறந்து நின்ற நேரம் நாதஸ்வரத்தின் டெசிபல் கூட வேகமாய் வெளியே ஓடி வந்தனர்.

தாலிக்கொடியை கைகளில் எடுத்த ஷ்யாம் சித்தார்த் கண்களில் ஒரு வித தேடலோடு பார்வையை சுழற்றி கொண்டிருந்தான்.

புன்னகையோடு வந்த  மீரா, விஷ்வக்கை கண்டு அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்ற சந்தோஷத்தோடு மான்யாவின் புறம் திரும்பினான்.

“இன்டெர்ன், என் விஷ்வக் எனக்கு திரும்ப கிடைச்சுட்டான்” என்றவனை நோக்கி அவள் காதலாய் புன்னகைத்த நேரம் ஐயரின் கெட்டிமேளம் கெட்டிமேளம் சப்தத்தில் மீரா வேகமாய் மேடைக்கு ஓடி வந்தாள் நாத்தனார் முடிச்சு போடுவதற்காக.

மங்களநாணை தன் கழுத்தில் பூட்டி ஆசையாய் முடிச்சை ஷ்யாம் சித்தார்த் போட துவங்க மான்யாவின் நினைவில் மின்னி அடங்கியது அந்த நாள்.

தன் பின்னால் நின்று முதன் முறையாக தையல் போட கற்றுக் கொடுத்த ஷ்யாமின் ஸ்பரிசம் நெஞ்சில் உரச உரச காதல் கசிந்தது அவள் முகத்தில்.

அவனுக்கும் அவள் எதை நினைத்து சிரிக்கிறாள் என்பது தெளிவாக புரிய ,”இதே மாதிரி நிறைய ஸ்வீட்சர் போட கத்து கொடுக்கிறேன்” காதலாய் கிசுகிசுக்கவும் அவள் முகத்தில் நாணத்தின் நாணல் வளைந்தது.

மனம் நிறைந்த புன்னகையுடன் மீனாட்சியம்மாளின் காலில் விழ, அவர் கண்ணீரோடு மான்யாவையும் ஷ்யாமையும் இறுக அணைத்துக் கொண்டார்.

“நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்” வாஞ்சையாய் தலையை வருடியபடி சொல்ல ஷ்யாம் அந்த ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனான்.

அதே போல் சாந்தி

யின் கால்களில் ஆசிர்வாதம் வாங்க விழ போக அவரோ தயக்கத்துடன் தன் கணவரைப் பார்த்தார்.

“அம்மா எனக்கு உங்களோட ஆசிர்வாதம் மட்டும் போதும். சில சுயநலகாரங்களோட நிழலை கூட தீண்ட எனக்கு இஷ்டமில்லை” என்றான் வெங்கட்ராமை சொல்லால் குத்தியபடி.

தன் பிள்ளையே தன்னை இப்படி வெறுக்கின்றானே! எத்தனை பணம் இருந்து என்ன?

தந்தைக்கு மகனாய் நிமிர்ந்து இந்த கல்யாணத்தில் நிற்க முடியவில்லையே!

யாரோ ஒரு விருந்தாளியாய் ஓரத்தில் தானே நின்று கொண்டிருந்த தன் நிலையை எண்ணி  உடைந்து நின்ற வெங்கட்ராமின் கையை ஆதரவாய் ஆஷி பிடித்து ஷ்யாமின் முன்பு கொண்டு நிறுத்தினாள்.

“அப்பா எல்லார் கிட்டேயும் ஆசிர்வாதம் வாங்குன, நீங்க ஏன் தாத்தா கிட்டே ப்ளெஸிங் வாங்கல?” மகளின் கேள்விக்கு ஷ்யாம் மௌனத்தையே பதிலாக தந்தான்.

“ப்ளீஸ்பா எனக்காக” ஆஷி முகம் சுருக்கி கெஞ்சவும் எப்போதும் போல் இப்போதும் அதில் வீழ்ந்துப் போனவன் மனதேயில்லாமல் தந்தையின் காலில் ஜோடியாக விழுந்து எழுந்தான்.

வெங்கட்ராமனிடம்

விக்கிப்பு.

அவர் இதயத்தை லேசாக சூழ துவங்கியிருந்த குற்றவுணர்வு ஆஷியின் செயலில் விஸ்தாரமெடுக்க மொத்தமாய்  சிதைந்து போனார்.

உள்ளுக்குள் உறுத்தத் தொடங்கிய அந்த குற்றவுணர்வு முள்ளை, காலம் முழுக்க எடுக்கவும் முடியாமல் வலியை அடக்கவும் முடியாமல் தவிப்பது தான் காலம் தனக்கு கொடுத்த குற்றவுணர்வு என்று புரிய விரக்தி புன்னகை வளையமிட்டது அவர் உதடுகளை.

💐💐💐💐💐💐💐💐

இரவு ஒன்பது மணி.

கட்டில் முழுக்க வண்ணப் பூக்கள். அறை முழுக்க தாழம்பூவின் மயக்கும் வாசனை

ஆனால்

அந்த நறுமணத்தையே தோற்கடிக்கும் சுகந்தத்தோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் மான்யா.

ஆளை சாய்க்கும் அழகை கண்டு மூச்சு முட்ட நின்றவனின் அருகே வந்தவளோ மெல்லிய தயக்கம் காட்டினாள்.

“ஷ்யாம் ஆஷி எப்பவும் உங்க கூட தானே படுத்து தூங்குவா. இப்போ குழந்தையை திடீர்னு தனியா விட்டா நல்லா இருக்காதுலே. நாம போய் கூட்டிட்டு வந்துடலாமா?”

அவளின் கேள்வியில் ஷ்யாம் அகமலர்ந்து பார்த்தான். அவனுக்குள் இருந்த அதே தயக்கத்தை காதலியே கேட்டுவிட அவன் முகம் மேலும் இலகுவானது.

“சோ என் இடியட் இன்டெர்ன், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பதிலா ஃபர்ஸ்ட் டே கொண்டாட நினைக்கிறா? ஆம் ஐ ரைட்” அவன் அவள் நெற்றியை முட்டி சொல்ல அவளை வெட்கம் வந்து கவ்வியது.

“ரோபோவுக்கு கொழுப்பு தான்”,

செந்தாமரையாய் மலர்ந்த தன் வதனத்தை அவனுக்கு காட்டாமல் மறைக்க முயன்றவளின் தாடையை தூக்கிப் பிடித்து, “ஐ லவ் யூ இன்டெர்ன்” என்றான்  காதலாக.

அவள் கையைப் பிடித்து கொண்டு ஆஷியை தேடிப் போக, அங்கோ அவள் மீனாட்சியம்மாளின் அணைப்பில் சுருண்டபடி காதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆஷிமா வாடா நாம தூங்க போகலாம்” என்று ஷ்யாம் அழைக்க “போங்கபா உங்களை விட மீனு பாட்டி சூப்பரா கதை சொல்றாங்க. நான் இனி பாட்டி கூட தான் படுக்க போறேன்” என்றாள் மீனாட்சியை கட்டிக் கொண்டு.

அவர்கள் இருவருக்குள்ளும் கிளைக்க துவங்கிய பாசத்தை கண்டு நெகிழ்வோடு பார்த்தவனின் தோளை ஆதரவாய் மான்யா  தொட்ட நேரம் ஆஷியின் குரல் ஒலித்தது.

 

“ஓஹோ அப்போ நம்ம ராஜா உண்மையா நடிக்கலையா, ராணி காயப்படக்கூடாதுனு தான் எல்லா வலியையும் மறைச்சுக்கிட்டாரா?” ஆஷி ஆவலாய் கேட்க மீனாட்சியம்மாளின் கண்கள் எதிரில் நின்றுருந்த இருவரையும் நெகிழ்வாடு தொட்டு ஆஷியிடம் சென்று நின்றது.

“ஆமாம்டா அப்புறம் ராணி எல்லா உண்மையும் தெரிஞ்ச அப்புறம் ராஜாவை சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இனி அவங்க வாழ்க்கை முழுக்க சந்தோஷம் தான்” மீனாட்சியம்மாள் கதையை முடித்துவிட்டு அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தார்.

மனம் நிறைந்த சந்தோஷத்துடன்  மான்யா அறைக்குள் நுழைய அவளின் பின்னே வந்து வேகமாய் கதவை சாத்தினான் ஷ்யாம்.

அவள் திகைத்து திரும்பி முடிக்கும் முன்பே, அடுத்த நொடி அவன் கைக்குள் பூக்குவியலாய் கிடந்தாள் மான்யா.

அவளை மென்மையாக கட்டிலில் மீது கிடத்தி காதலோடு பார்த்துக் கொண்டிருந்தவனின் மூக்கை குறும்பாக ஆட்டி, “பரவாயில்லை ரோபோவுக்கு ரொமான்ஸ்லாம் வருதே” என்றாள் சீண்டலாக.

அவளை செல்லமாய் முறைத்தவன், “இந்த ரோபோவுக்குள்ளே எவ்வளவு உணர்ச்சி தேங்கி கிடக்குதுனு இன்னைக்கு பார்க்க தானே போறே இன்டெர்ன்” தாபத்தோடு உரைத்தவன், அவள் முன்பு மூன்று கிஃப்ட் பாக்ஸை எடுத்து வைத்தான்.

“நீ இல்லாத மூனு வருஷமும் உன் பர்த்டேக்காக நான் வாங்குன கிஃப்ட் இன்டெர்ன். ஒவ்வொரு முறை உன்னை மிஸ் பண்ணும் போதும் உன் ரூமிலே வந்து சுருண்டு படுத்துப்பேன்” கடந்து போன நாட்களின் வேதனையின் பாரத்தை இறக்கியவனை தன் மடியில் கிடத்தி வாஞ்சையாய் அணைத்து கொண்டாள்.

“உனக்காக என்ன வாங்குனேனு திறந்து  பார்க்க ஆசையில்லையா இன்டெர்ன்?” அவன் கேள்விக்கு புன்னகையே பதிலாக தந்தாள்.

“திறந்து பார்க்கமயே உள்ளே இருக்கிறதை அன்னைக்கே கண்டு பிடிச்சுட்டேன் ஷ்யாம். ஒன்னு முத்தே இல்லாத கொலுசு, இன்னொன்னு கம்மியா முத்து இருக்கிற கொலுசு. மூனாவது அதிகமா முத்து இருக்கிற கொலுசு. கரெக்டா” அவள் பதில் அவன் முகத்தில் மெச்சுதலை வரவைத்தது.

“எப்படி இன்டெர்ன்?” என்றான் ஆச்சர்யம் தாங்காமல்.

“இது என்ன பிரமாதம். இங்கே மூனு கொலுசு மட்டுமில்லாம நாலாவதாவும் ஒரு கொலுசு இருக்கு ஆம் ஐ ரைட்?” புருவம் உயர்த்தி கேட்டவளிடம் மொத்தமாய் சரணாகதி அடைந்தான் அவன்.

“எப்படிடி இப்படி எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிற?” என்ற கேள்வியோட தன் பாக்கெட்டுக்குள் இருந்த கொலுசை எடுத்தான்.

முத்துக்கள் அதிகமாய் நெருக்கமாய் கோர்க்கப்பட்ட அந்த கொலுசை அவள் விழி விரித்துப் பார்த்து கொண்டிருந்த நேரம், ஷ்யாம் அவளது காலை மென்மையாய் பற்றி கணுக்காலில் பூட்டிவிட்டு தன் இதழ்களை அங்கே ஆழமாய் பதித்து நிமிர்ந்தான்.

சிலிர்த்து சிவந்தவளை ரசித்து பார்த்தவன் “இந்த கொலுசு அதிகமா சிணுங்குதா, இல்லை அதைவிட நீ அதிகமா சிணுங்குறியானு இன்னைக்கு பார்த்துடணும் இன்டெர்ன்” என்றான் தாபத்தை கண்களில் தேக்கி.

அந்த வார்த்தைகளில் அவள் தேகம் முழுக்க வெட்க செல்கள் பரவ துவங்க வேக வேகமாய் அந்த வெண்ணிலவை அவன் காதல் கரங்கள் மேகமாய் தழுவ துவங்கியது.

உருக துவங்கியதோ வெண்ணிலவு!

💐💐💐💐💐💐💐💐💐

மதுரா மருத்துவமனை!

ஒருவித நேர்த்தியோடும் சீர்மையோடும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

மருத்துவர்கள் ஒரு புறம் நோயாளிகளுக்கு கவனத்தோடு சிகிச்சையளித்து கொண்டிருக்க, செவிலியர்கள் நோயாளிகளுக்கு தேவையான  எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தனர்.

அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி நிமிர்வாய் நடந்து கொண்டிருந்தார் அந்த மருத்துவமனையின் நிர்வாகி மீனாட்சியம்மாள்.

சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அவருக்கு வணக்கம் வைக்க மெல்லிய தலையாட்டலுடன் நடந்தவரின் கண்கள் சுவரின் பின்னால் மறைந்து நின்று மீராவை ரசித்த விஷ்வக்கை கண்டு மலர வேகமாய் மீராவை நோக்கி வந்தார்.

“மீரா, விஷ்வக் உன்னை ஒளிஞ்சு நின்னு சைட் அடிச்சுட்டு இருக்கான்” புன்னகையோடு காதில் சொல்லிவிட்டு போக மீராவிற்கோ முகம் சிவந்துப் போனது.

நாணத்தில் தன் உதடுகளை கடித்துக் கொண்டவள் சுவற்றின் பின்னால் மறைந்திருக்கும் பூனைக்குட்டியின்  காதுகளை பிடிப்பது போல் விஷ்வக்கின் செவியை அழுத்திப் பிடித்தாள்.

“டேய் உன் பொண்டாட்டிடா நானு. அது மறந்துட்டு இப்படி ஒளிஞ்சு நின்னு சைட் அடிச்சு ஜுனியர் நர்ஸ்களுக்கு முன்னாடி மானத்தை வாங்குறீயேடா” என்றாள் தலையில் அடித்துக் கொண்டு.

“அது மீரா உன்னை ஒளிஞ்சு நின்னு திருட்டு பார்வை பார்க்கும் போது தான் ஒரு மாதிரி கிக்கா இருக்கு” என்றவனின் வார்த்தைகளை கேட்டு வேகமாய் தலையிலடித்து கொண்டாள்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு டயலாக் வேற. கிக்கா வேணும் இரு இதோ தரேன்” அவள் கையை முறுக்க அவன் ஓரடி பின்வாங்கினான்.

“கராத்தே தெரிஞ்ச பொண்ணை கல்யாணம் பண்ணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேனோ?” அவன் கேள்வியில் மேலும் அவனை அடித்து துவைக்க அங்கே விஷ்வக், மீராவின் காதல் பேஷண்டாக சுகமாக சிகிச்சை பெற்று கொண்டிருந்தான்.

ஷ்யாம் சித்தார்த் அறையில்!

அங்கே மான்யா கேள்வியாய் அவனைப் பார்த்து கொண்டிருந்தாள்.

“எதுக்காக ஷ்யாம் என்னை கூப்பிட்டிங்க” அவளின் கேள்வியில் எழுந்து நின்றவன்,

“பெட் நம்பர் சிக்ஸ்ல இருக்கிற பேஷன்டை அடிச்சியா?” என்றான் கேள்வியாக.

“அது என்னை கேட்டா?” அவள் முகத்தில் பாதரச நழுவல்.

“அடிச்சவங்களை தானே கேட்க முடியும். உண்மையை சொல்லு மான்யா” அவன் கோபமாய் கத்த,

“அது, அவன் நர்ஸ்ங்க கிட்டே தப்பா பிஹேவ் பண்ண பார்த்தான். அதான் அடிச்சேன். ஆனால் அடிக்கிறதுக்கு முன்னாடி பொறுப்பா டாக்டர் கோட்டை கழட்டி வெச்சுட்டேன் ஷ்யாம்” முகத்தில் அபிநயம் பிடித்து சொன்னவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.

“என் உயிரை வாங்குறதையே வேலையா வெச்சு இருக்கியா இன்டெர்ன். ஒழுங்கா போய் அந்த பேஷன்டை பொறுப்பா பார்த்துக்கிற, இல்லைனா பதிலுக்கு பதில் பேசுற வாய்க்கு மொத்தமா ஒரு சர்ஜரி பண்ணிவிட்டுடுவேன்” அவன் அவளை மிரட்ட அவளோ சளைக்காமல் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தாள்.

“இங்கே பாருங்க இந்த மிரட்டுற வேலை எல்லாம் என் கிட்டே வேணாம். நீங்க வேணா ரோபோவா இருக்கலாம். ஆனால் நான் அப்படியில்லை. அடுத்த தடவை என் கிட்டே ட்ரீட்மென்டுக்கு அனுப்புனீங்க அவனை அடிச்சே கொன்னு போட்டுவேன்” மான்யா சீற்றமாய் பேச ஷ்யாம் சித்தார்த் கோபமாய் முன்னால் வந்தான்.

“இன்டெர்ன் ஒரு சீனியர் ஆர்டரை கூட உன்னாலே சரியா செய்ய முடியாதா?”

“நோ. உங்க ஸ்டைல் வேற, என் ஸ்டைல் வேற. என்னாலே கண்டிப்பா உங்க ஆர்டரை ஃபாலோ பண்ண முடியாது” அவள் படபடவென பேசியவள் மூச்சு வாங்கியபடி தள்ளாட, அதுவரை கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் சட்டென்று ஒரு மாறுதல்.

“ஹே என்னடி ஆச்சு? ஏன் இப்படி மூச்சு வாங்குற. முடியலையா மானு குட்டி?” அவன் அவள் கன்னத்தை தாங்கி பிடிக்கவும் வேகமாய் தட்டிவிட்டாள்.

“இங்கே பாருங்க இது ஹாஸ்பிட்டல் இங்கே பர்சனலையும் ப்ரொஃபஷனலையும் கலக்கக்கூடாது. போங்க தள்ளி”

“என் இன்டெர்னுக்கு கோவமா. நான் வேணா இன்னைக்கு சர்ஜிகல் ஸ்டிரிங் 2 வெச்சு தையல் போட சொல்லி தரட்டுமா?” அவள் இதழை ஆசையாய் நெருங்கியபடி.

“ஏற்கெனவே உன் கிட்டே தையல் க்ளாஸ்க்கு வந்து தான் இப்போ அஞ்சு மாச வயித்தோட நிற்கிறேன். அதுக்குள்ளேயே இன்னொன்னா?” என்றாள் மேடிட்ட தன் வயிற்றை சுட்டி காட்டியபடி.

அவள் கேலியில் சிரித்தவன் வயிற்றில் கை வைத்த அடுத்த நொடி அவன் பார்வையில் ஒரு வித நெகிழ்வு.

“நம்ம ஸ்வேதா குட்டி கையிலே வர நாளுக்காக ஆசை ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன்டி” என்றவனின் சிகையை ஆதூரமாக கோதிவிட்டவள், “ஆஷி ஏன் இங்கே இன்னும் வரலை?” என்றாள் கேள்வியாக.

“அவள் தாத்தா கூட ஏதோ பண்ணிட்டு இருக்கலாம். முடிச்சுட்டு அவரோட வரேனு அரை மணிநேரம் முன்னாடி சொன்னா. இன்னும் கொஞ்சம் நேரத்திலே வந்துடுவா” என்றான் எங்கோ பார்த்தபடி.

அவனுக்கு இன்னும் வெங்கட்ராமனின் மீது முழுமையாக கோபம் போகவில்லை. ஒரு மகனாக அவரிடமிருந்து தள்ளியிருந்தாலும், ஒரு தகப்பனாக பேத்தியை தாத்தாவிடமிருந்து பிரிக்க மனம் வராமல் தள்ளியே இருந்தான்.

அவன் மனம் புரிந்து அவளும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்ற நேரம் ஆரனாஷி வேகமாக உள்ளே ஓடி வந்தாள்.

“மானுமா, அப்பா சீக்கிரமா வாங்க. உங்க எல்லாருக்கும் ஒரு சப்ரைஸ் வெச்சு இருக்கேன்” என்று ஆஷி அழைக்க, மருத்துவமனைக்கு முன்னே குழுமிய அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தது.

அங்கே பில்டிங் ப்ளாக்ஸ் கொண்டு மதுரா மருத்துவமனையை மிக பிரம்மாண்டமாக வடிவமைத்து இருந்தாள் ஆரனாஷி.

அனைவரும் ஆனந்த அதிர்வில் திகைத்துவிட வேகமாய் மான்யாவிடம் ஓடி வந்து, “என் தங்கச்சி ஸ்வே குட்டிக்கு என்னோட கிஃப்ட்” என்றாள் மான்யாவின் மணி வயிற்றில் முகம் புதைத்தபடி.

மான்யாவின் விழிகள் கண்ணீரில் நனைந்த நேரம்

“மானுமா எல்லாருக்கும் ஒரு ஹார்ட் பீட் தான் இருக்கும். ஆனால் நம்ம ஸ்வே பாப்பாவுக்கு மட்டும் ரெண்டு ஹார்ட் பீட்லே” ஆசையாய் கேட்ட ஆஷியைஅள்ளி அணைத்துக் கொண்டவள்,

“ஆமாம்டா ஒரு இதயத்துடிப்பு உன் கிட்டே இருக்கு. இன்னொரு இதயத்துடிப்பு இதோ அம்மா வயித்துலே இருக்கு” என்றாள் கண்ணீர் மல்க.

அந்த நெகிழ்வான தருணத்தில் சிக்குண்டு கலங்கிப் போய் இருந்த எல்லாரையும் விஷ்வக் வேகமாய் கலைத்தான்.

“நம்ம ஆஷி குட்டி கட்டி முடிச்ச பில்டிங் முன்னாடி நின்னு எல்லாரும் ஃபோட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்ட அடுத்த நொடி எல்லாரும் மோன நிலையிலிருந்து  கலைந்து அந்த மருத்துவமனை முகப்பில் வந்து நின்றனர்.

சூரியனின் ஒளிப்பட்டு புன்னகையுடன் மிளிர்ந்த முகங்களை தனக்குள் வாறி சுருட்டிக் கொண்டது கேமரா.

இனி இந்த புன்னகையில் அழிவில்லை. வெண்ணிலாவில் தேய்வில்லை.

காதல் வெண்ணிலா உடையாமல் ஒளிர்ந்ததோ!

—— முற்றும்—–

Leave a Reply

error: Content is protected !!