எந்நாளும் தீரா காதலாக!! – 10

எந்நாளும் தீரா காதலாக!! – 10

💝10

அர்ஜுனின் அறைக்குச் சென்ற சிவாத்மிகா, தனது அறை போலவே அந்த அறையும் இருப்பதும், அதை அர்ஜுன் மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பதையும் பார்த்தவள், ‘பரவால்ல.. நல்லா தான் கிளீன்னா இருக்கு.. இந்த பேச்சிலர் ரூம் எல்லாம் அங்க அங்க துணி இருக்கறது போல இல்ல.. பரவால்ல ஹீரோ சார் பொறுப்பு தான் போல..’ என்று நினைத்துக் கொண்டே, அவனது கட்டிலைப் பார்த்தாள்.

அந்த அறைக்குப் பொருத்தமான படுக்கை விரிப்பும், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த தலையணையும், அருகில் அழகாக அணைத்துக் கொள்ள, வளைந்தது போல இருந்த அந்த தலையைனையைப் பார்த்தவள், அந்த படுக்கையில் அமர தயங்கிக் கொண்டே ஜன்னலின் அருகே சென்றாள்.

“இங்க இருந்து பார்த்தா நம்ம ரூம் தெரியுமோ?” என்று நினைத்துக் கொண்டே ஜன்னலைத் திறந்துப் பார்க்க, அவளது அறையின் ஜன்னல் தெரியவும்,

“சிறப்பு..” என்று முணுமுணுத்தவள்,

“நம்ம ரூம் சூப்பரா தெரியுதே.. ஹீரோ சார் அதை கவனிச்சு இருப்பாரோ?” என்று யோசித்தவள், அதன் அருகில் இருந்த ரீடிங் டேபிளில் அமர்ந்து, அங்கிருந்த புத்தகங்களைப் பார்வையிடத் துவங்கினாள்.

ஏதோ சில திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் பைல்கள் இருக்க, அதை எடுத்துப் பார்த்தவள், “டைம் பாஸ்க்கு நிறைய இருக்கு.. புது ஸ்டோரி எல்லாம் படிக்கலாம்.. அர்ஜுன் போன் பண்ணினா, படிச்சுப் பார்க்கவான்னு பெர்மிஷன் கேட்டுக்கலாம்.. பொழுது போகும்” தனக்குள்ளே பேசிக் கொண்டிருக்க, கதவுத் தட்டப் படவும், எழுந்து எட்டிப்பார்த்தவள், நிர்மலா நிற்கவும்,

“என்னம்மா.. என்னாச்சு? நீங்க ஏன் மேல படி ஏறி வரீங்க? என்னைக் கூப்பிட்டு  இருக்கலாம்ல..” என்று கேட்க,

“இல்லம்மா.. சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்.. வா.. அப்படியே உட்கார்ந்து சாப்பிடலாம்..” என்று அவனது அறையில் ஓரத்தில் இருந்த சிறு சோபாவைக் காட்ட,

“நீங்க ஏன்ம்மா தூக்கிட்டு வந்தீங்க? என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்லம்மா.. போங்கம்மா.. சொன்ன பேச்சே கேட்கறது இல்ல..” என்று சலித்துக் கொண்டவள், அவரது கையில் இருந்து கவரை வாங்கிக் கொண்டு அமர்ந்து, அவருக்கு பரிமாறத் துவங்கினாள்.

“நீயும் சாப்பிடு..” என்று நிர்மலா சொல்லவும்,

“எனக்கு பசிக்கவே இல்லம்மா.. தொண்டை எல்லாம் வலிக்குது..” என்று அவள் மறுக்க,

“இப்போ நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிடல..” என்று நிர்மலா வற்புறுத்தவும், நாவில் சுவையே தெரியாமல் இரண்டு இட்லிக்களை விழுங்கியவளிடம்,

“இந்தா.. ராதா பழம் கட் பண்ணி கொடுத்திருக்கா.. கொஞ்சம் சாப்பிடு..” என்று நிர்மலா எடுத்துக் கொடுக்கவும், அதை வாயில் போட்டுக் கொண்டவளுக்கு, அந்த புளிப்பு சற்று நன்றாக இருக்க, ராதா கொடுத்த பழங்களை உண்டு முடித்தாள்.  

“சரிம்மா.. மாத்திரை போட்டு படுத்து தூங்கு.. நானும் போய் படுக்கறேன்..” என்ற நிர்மலா, அந்த டப்பாக்களை அவளது கையில் எடுத்துக் கொள்ள,

“நான் கீழ தான போறேன்.. அப்படியே நான் போட்டுடறேன்.. உன் முகமே சரி இல்ல.. நீ பேசாம போய் தூங்கு..” என்றவர், மெல்ல அனைத்தையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்க, சிவாத்மிகா அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.  

“அம்மா.. உங்களுக்கு ஏதாவது வேணும்ன்னா கேளுங்கம்மா.. நான் வரேன்..” எனவும், தலையை அசைத்தவர்,

“நீ போய் நல்லா தூங்கு.. காலையில அவசரம் இல்லாம எழுந்துக்கோ.. நீ எழுந்ததுக்கு அப்பறம் நான் வரேன்” என்றபடி தனது அறைக்குள் நுழையவும், அவரைப் பார்த்துவிட்டு, அவனது பெட்டில் படுக்கத் தயங்கியபடி நின்றிருக்க, அவளது செல்போன் இசைக்கத் துவங்கியது.

அதை எடுத்துப் பார்த்தவள், அதில் அர்ஜுனின் பெயர் ஒளிரவும், “அது எப்படி கரெக்டா சாப்பிட்ட உடனே கூப்பிடறார்?” என்று தனக்குள் பேசிக் கொண்டே, எடுத்து காதிற்கு கொடுத்தவள்,

“சிட்டு.. வீடியோ கால் ஆன் பண்ணு..” எனவும், “ஹ்ம்ம்..” என்ற முணுமுணுப்புடன், அவள் விடியோ காலை இயக்கினாள்.

அவளது கை தன்னால் உயர்ந்து தலை முடியை ஒதுக்கிக் கொள்ள, வீடியோ காலை இயக்கி, “ஹ்ம்ம்.. சொல்லுங்க..” என்றவளின் முகத்தைப் பார்த்தவன், பதறிப் போனான்.

“என்னம்மா.. என்ன இப்படி இருக்க? முகம் எல்லாம் வாடி இருக்கு.. கண்ணு எல்லாம் ரொம்ப சோர்ந்து இருக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கலாம்லம்மா..” என்று பதறியவனிடம்,

“நான் ரொம்ப கேர்ஃபுலா தான் இருந்தேன் அர்ஜுன்.. எப்படின்னே தெரியல.. அம்மா ரூமுக்கு போயிட்டு வந்தா உடனே ஹான்ட் வாஷ் பண்ணினேன்.  ரொம்ப தலைவலிக்குது அஜ்ஜு.. தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது.. உடம்பு எல்லாம் அப்படி இருக்கு” அவனிடம் சிறு குழந்தை போல சொல்ல, அர்ஜுன் பதறிப் போனான்.

“என்னடாம்மா.. நீ தைரியமா இருப்பன்னு பார்த்தா இப்படி இருக்கியே.. நான் என்ன பண்ணுவேன்? கொஞ்சம் அடிக்கடி ஸ்டீம் பண்ணிடும்மா.. இப்போ ஏதாவது சாப்பிட்டியா? டேப்லெட் போட்டியா?” அவன் வரிசையாக கேள்விகளை அடுக்க,

“ஹ்ம்ம்..ஹ்ம்ம்..” என்று அவள் பதில் சொல்லவும்,

“அம்மா யூஸ் பண்ணின ஸ்டீமர் வேண்டாம்.. நான் வேற ஆர்டர் பண்றேன்.. இப்போ எதுவும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடு என்ன? நான் நாளைக்கு நைட் வந்துடறேன்.. தைரியமா இரு.. சரியா? இருப்பியா?” அவன் இதமாகச் சொல்ல, அவள் கண்களில் கண்ணீர் முட்ட மண்டையை ஆட்டவும்,

“ஒண்ணும் இல்லம்மா.. சரியா போயிடும்.. நான் நாளைக்கு வந்துடறேன்.. ஒரே ஒரு நாள்..” அவன் மீண்டும் அவளை ஆறுதல் படுத்த, கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“ஹ்ம்ம்.. நான் தைரியமா இருக்கேன்.. நீங்க சொல்லுங்க.. சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“நான் நைட் தோசை சாப்பிட்டேன்.. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.. இன்னைக்கு ஃபுல்லா நைட் ஷூட் இருக்கு..” என்றவன்,

“நான் சொல்றதை கேளு.. நேரா அந்த டிரெஸ்ஸிங் டேபிள் கிட்ட இருக்கிற அந்த செல்ஃப் திற…” எனவும், 

“எதுக்கு?” என்று அவள் கேட்க,

“அதுல டெட்டால் எல்லாம் இருக்கு.. குளிக்கும்போது யூஸ் பண்ணிக்கோ.. அதேபோல பாத்ரூம்ல ரெட் நாப் வெந்நீர்..” அர்ஜுன் சொல்லி முடிப்பதற்குள்,

“ஓ.. எங்க வீட்ல எல்லாம் பச்சை கலர்ல இருக்கும் அஜ்ஜு..” அவள் இழுத்து விழிகள் விரியச் சொல்லவும், சிரித்தவன்,

“வாலு..” என்று அவளைக் கொஞ்சி விட்டு,   

“சரி.. எல்லார் வீட்லயும் ரெட்ல தான் இருக்கும்.. தெரியாம சொல்லிட்டேன் தாயே.. இப்போ என்ன சொல்ல வரேன்னா.. காலையில நல்லா சூடா தண்ணி ஊத்தி குளிச்சேன்னா கொஞ்சம் உடம்பு ஃபிரெஷா இருக்கும்.. உடம்பு வலி எல்லாம் இருக்காது.. சரியா?” ஒரு குழந்தையிடம் கேட்பது போலக் கேட்டவன், அவள் தலையசைக்கவும், அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான்.

“நல்லா ஸ்க்ரீன் இழுத்து விட்டுட்டு தூங்கு.. ஃபோன சைலென்ட்ல போடு.. அம்மா நீயா எழுந்துக்கற வரை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. நல்லா தூங்கி எழுந்திரு.. மத்தியானம் எழுந்தா கூட ஓகே.. எழுந்த அப்பறம் ராதா அக்கா காபி தருவாங்க.. ரூம்ல ரெண்டு தண்ணி பாட்டில் வச்சிக்கோ.. நிறைய தண்ணி குடி.. ஜூஸ் குடி.. சமத்தா கஷாயம் குடிப்பியாம்.. இல்ல நான் வந்தேன்னா மூக்கை பிடிச்சு ஊத்தி விட்ருவேன்..” அவன் அடுக்கிக் கொண்டே போக, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவள் கேட்க,  

அவளைப் பார்த்து சிரித்தவன், “என்ன நான் பேசறது உனக்கு கதை சொல்றது போல இருக்கா?” அர்ஜுன் கேலியாகக் கேட்க,

“இல்ல லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது.. அது தான்.. நான் டு டூ லிஸ்ட்ல போட்டு வைக்கணும் போல.. அதுவும் கஷாயம் எல்லாம் யாரு குடிப்பா?” என்று முகத்தைச் சுளித்தவனைப் பார்த்து பொய்யாக முறைத்தவன்,

“சொல்றதைக் கேளு சிட்டு.. அப்பறம் அந்த சோபா பக்கத்துல டேபிள் மேல சின்னதா எலெக்ட்ரிக் கெட்டில் இருக்கு. அப்போ அப்போ சூடா தண்ணி வச்சு குடிச்சிக்கோ.. அப்பறம் ராதா அக்கா கிட்ட சொல்லி கொஞ்சம் உப்பு வாங்கி கொப்பளி..

கீழ இருக்கற டிரால காபி போடற எல்லா திங்க்ஸ் இருக்கும்.. உனக்கு நைட் பசிச்சா போட்டுக்கோ.. ரொம்ப ஓஹோவா இருக்காது.. ஆனா.. அந்த நேரத்துக்கு நல்லா இருக்கும்..” என்று அவன் சொல்லவும், அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவள், அவன் சொன்ன காபி விஷயத்தில் கண்களை விரித்தாள்.

“இங்க உட்கார்ந்து காபி போட்டு குடிச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?” அவள் கேலியாகக் கேட்க,

“ஹான் படம் பார்ப்பேன்..” அவன் இடக்காக சொல்ல,

“நீங்க நடிச்ச படத்தை நீங்களே பார்ப்பீங்களா?” அவள் வம்பு வளர்க்க, அவளை முறைத்தவன்,

“இப்போ மட்டும் உனக்கு தொண்டை வலிக்காதே..” என்று கேட்க, அவள் வாய் பொத்திச் சிரிக்கவும்,

“இல்ல படத்துக்கு சில அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லாம் ஸ்க்ரிப்ட் கொண்டு வந்து கொடுப்பாங்கல்ல.. அது நைட் தான் படிப்பேன்.. அப்போ போய் வெளிய நான் கிட்சென்ல குடைஞ்சா மாணிக்கம் எழுந்து வந்துடுவான்.. அவன் தூக்கம் கெடும்.. அது தான்.. இங்கயே நான் போட்டுப்பேன்..” அவன் விளக்கம் சொல்லவும், ஏனோ அந்த சிறு செயலே அவன் மீது மதிப்பைக் கூட்டியது.  

“சிட்டு..” அவன் அழைக்கவும்,

“ஹான்.. நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்ன்னு நினைச்சேன்.. உங்க டேபிள்ல இருக்கற ஸ்க்ரிப்ட் ஃபைல் நான் படிச்சுப் பார்க்கவா? இன்டெரெஸ்ட்டிங்கா இருக்கும்ல..” என்று கேட்க, அர்ஜுன் கண்களை விரித்தான்.

“வாவ்.. உனக்கு படிக்கிற ஹாபிட் இருக்கா? அப்போ சூப்பர்டா அர்ஜுனே.. உனக்கு வேலை மிச்சம்.. உனக்கு எந்த கதை பிடிச்சு இருக்குன்னு படிச்சு சொல்லு….” என்றவன்,

“அங்க புக்ஸ் எல்லாம் கூட இருக்கு படிம்மா.. உனக்கும் பொழுது போகும்.. ஆனா.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதே.. தலவலி வேற இருக்கு.. அது கொஞ்சம் சரி ஆன அப்பறம் படி..” என்றவனைப் பார்த்து சிவாத்மிகா புன்னகைத்தாள்.

“என்ன சிரிக்கிற?” அர்ஜுன் கேட்க,

“இல்ல.. சின்னக் குழந்தைக்கு சொல்றது போல சொல்றீங்களே.. அதை நினைச்சேன்..” என்றவள்,

“ஹான்.. ஆமா.. அது என்ன சிட்டுன்னு கூப்பிடறீங்க?” என்று அவள் கேட்க,

“சார்.. ஷாட் ரெடி..” என்ற குரல் கேட்க,

“தெரியல.. எனக்கு உன்னை அந்த பேர் சொல்லி தான் கூப்பிடனும்ன்னு தோணுது.. கூடவே லட்டு.. ஸ்வீட்டு எல்லாம் கூப்பிடுவேன்…” என்றவன், அவள் அசந்து நிற்கும் பொழுதே,

“சரி சிட்டு.. ஷாட் ரெடி.. நான் கிளம்பறேன்..” எனவும்,

“நைட் ஷூட் போகுதா?” அவள் கேட்க,

“ஹ்ம்ம்.. அதான் சொன்னேனே.. கண்டின்யூஸ் ஷூட்.. நாளைக்கு ஈவெனிங் முடியும்..” என்றவன்,         

“சரி.. நல்லா இழுத்து போர்த்திட்டு தூங்கு.. நீ மெசேஜ் பண்ணின அப்பறம் கால் பண்றேன் ஓகே வா.. நான் வினய் கிட்டயும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிடறேன்.. நீ மாத்திரை போட்டுக்கிட்ட தானே.” போனை வைக்க மனம் இல்லாமல் அவன் பேச்சை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் ஆச்சு அர்ஜுன்.. நீங்க போங்க.. அவங்க கூப்பிட்டு நேரமாகுது.. நான் பத்திரமா இருக்கேன்..” என்றவளைப் ஆழ்ந்து நோக்கியவன், ‘குட் நைட்..’ என்று போனை வைக்க, சிவாத்மிகா போனையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் எனக்கு அவர் பேசறது எல்லாம் அவ்வளவு இதமா இருக்கு? அவர் ஏன் என் மேல இவ்வளவு உரிமையும் அக்கறையும் எடுத்துக்கறார்?’ என்று நினைத்துக் கொண்டே, அத்தனை நேரம் இருந்த தயக்கம் விலகி, அவனது பெட்டில் அமர்ந்தவள், மெல்ல தலையணையில் தலை சாய்த்தாள்.

அந்த பெட்டும் தலையணையும் அவளது உடல் வலிக்கு அவ்வளவு சுகமாக இருக்க, லைட்டை அனைத்தவளுக்கு, அந்த வானவில், இதய பைண்டிங் இருட்டினில் ஒளிர, ‘வாவ்..’ என்றபடி அதை ரசித்துப் பார்த்தவள், அப்படியே கண்ணுறங்கிப் போனாள்.            

போனை வைத்துவிட்டு ஷூட்டிற்கு ரெடி ஆன அர்ஜுனின் முகத்தில் புன்னகை மிச்சமிருப்பதாய்.. நெடுநேரமாக அவன் யாரிடமோ புன்னகை முகமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்த ஹிரோயின், “என்ன அர்ஜுன்? யார் கூட இந்த நேரத்துல இவ்வளவு ஹாப்பியா பேசிட்டு இருந்தீங்க.. இன்னும் உங்க ஃபேஸ்ல அந்த ஸ்மைல் இருக்கே.. கொஞ்சம் ப்ளஷ் இருக்கற மாதிரி இருக்கு? யாரு? ஏதாவது விசேஷம் இருக்கா?” கேலியாகக் கேட்கவும், பதில் பேசாமல் சிரித்து,

“ஷூட்டிங் போகலாம்..” என்று சொல்லிவிட்டு, அவன் கேமராவைப் பார்க்க, அதற்கு மேல் வேகமாக படப்பிடிப்பு நடந்தது..  

மறுநாள் காலையில் பத்து மணியளவில், கண்களை மலர்த்தி சிவாத்மிகா, பிரண்டு படுக்க, அப்பொழுதும் அறை இருட்டாகவே இருந்தது.. அறையைச் சுற்றி பார்வையை ஓட்டியவள், மீண்டும் கண்களை மூட, ராதாவிடம் இருந்து அவளது மொபைலுக்கு அழைப்பு வந்தது..

“அவ தூங்கிட்டு இருக்கப் போறா.. நல்லா தூங்கட்டும்.. அர்ஜுனும் எழுப்ப வேண்டாம்ன்னு சொன்னான்ல.. இப்போ ஏன் கூப்பிடணும்? அவளே எழுந்து கூப்பிடுவா..” வினயின் குரல் கேட்க, அதைக் கேட்ட சிவாத்மிகாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

‘அய்யா.. நல்லா ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் எல்லாம் போட்டு இருக்கார் போல..’ என்று நினைத்துக் கொண்டவள்,

“ஹலோ.. அக்கா..” என்ற அவளது குரலில்,

“அவ முழிச்சு தான் இருக்கா.. உங்களை நம்பி நான் என் பாப்பாகிட்ட பேசாம இருந்திருப்பேன்..” என்று ராதாவின் குரல் கேட்கவும், சிவாத்மிகாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

“ஹலோ அக்கா.. நான் இப்போ தான் முழிச்சேன்.. திரும்ப தூங்கலாமான்னு பார்த்தேன்.. அதுக்குள்ள உங்க போன் வந்துச்சு.. இன்னும் விடியவே இல்ல போல இருக்கே.. அதுக்குள்ள என்னாச்சு போன் பண்ணிட்டீங்க?” அவள் சொல்லவும், அதைக் கேட்ட ராதா,

“என்னது விடியலையா? மணி பத்தேகால் ஆகுது பாப்பா.. உன்கிட்ட இருந்து போனைக் காணும்ன்ன உடனே பயமா போச்சு..” என்று பதட்டத்துடன் சொல்லவும்,

“அவன் ரூம்ல வெளிச்சமே வராது..” வினயின் குரல் கேட்க,

“என்னை பாப்பா கூட பேச விடுங்களேன்.. ஏன் குறுக்கால குறுக்கால பேசிக்கிட்டு இருக்கீங்க?” ராதா அங்கு வினயிடம் சண்டைப் போடுவதில் மும்முரமாக, அடித்து பிடித்து எழுந்தவள், வேகமாக ஜன்னலின் அருகே வந்து, ஜன்னல் கதவைத் திறந்து,

“அக்கா.. என்னை என்  ரூம் ஜன்னல்ல இருந்து பாருங்க..” என்றவள், தனது முகத்தைக் காட்ட, நிம்மதிப் பெருமூச்சு விட்ட ராதா,

“அப்பாடா.. இது நல்லா இருக்கே.. இங்க இருந்தே நாம பார்த்துக்கலாம்.. சரி சொல்லு.. உனக்கு காபி எடுத்துட்டு வரவா? காலைல என்ன சாப்பிடற?” என்று கேட்க,

“ஹையோ அக்கா.. இவ்வளவு நேரம் ஆச்சு.. அம்மா சாப்பிடாம இருப்பாங்களே” என்று பதறவும்,

“அம்மாவுக்கு காலையில டிபன், பழம் எல்லாம் கொடுத்தாச்சு.. அம்மா சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இருக்காங்க” என்றவளிடம்,

“ஹப்பாடா..” என்ற சிவாத்மிகா யோசிக்கத் துவங்கினாள்.

“ரெண்டு பேரும் பேசிக்கிற தூரத்துல தானே இருக்கீங்க? எதுக்கு போன்? உங்களை வச்சிக்கிட்டு.. ஹயய்யையோ..” வினய் கேலி செய்ய, தலையில் அடித்துக் கொண்ட சிவாத்மிகா,

“அண்ணா நீங்க நல்லா ராதா அக்கா கையாள அடி வாங்கப் போறீங்க.. உங்களுக்கு காலைல சாப்பாடு கிடைக்காது பார்த்துகோங்க..” என்று கேலி செய்ய,

“அதெல்லாம்.. சூடா பொங்கலும் சட்னியும் வயிறு முட்ட சாப்பிட்டேன்.. இப்போ கொஞ்சம் கண்ணைக் கட்டற போல இருக்கு.. உன்னைப் பார்த்துட்டு தூங்க போகலாம்ன்னு இருக்கேன்.. மதியம் பிரியாணி செஞ்சித் தராங்களாம்.. மெனு எல்லாம் கேட்டு வச்சிட்டேன்..” என்றவன், சிவாத்மிகா சிரிக்கவும்,

“சும்மா சொல்லக் கூடாது.. ராதா சூப்பரா சமைக்கிறாங்க.. எனக்கு உன்னைப் பார்த்தா தான் நீ ஒழுங்கா சாப்பிடறியான்னு டவுட்டா இருக்கு.. ராதா சாப்பாட்டை சாப்பிட்டா இன்னேரம் நீ குண்டா இருக்கணும்..” கேலியை அவன் தொடர்ந்துக் கொண்டே செல்ல, ராதா அவனை முறைத்தாள்.     

“இப்போ நான் அவகிட்ட பேசவா.. இல்ல நீங்க பேசிட்டே இருக்கப் போறீங்களா? பாப்பா இன்னும் சாப்பிடல.. வெறும் வயித்தோட இருக்கா..” என்று ராதா பல்லைக் கடிக்க, வினய் வாய் மீது விரலை வைத்துக் கொண்டு நிற்க,

“நீ சொல்லு பாப்பா..” என்று ராதா கேட்கவும், 

“அக்கா.. எனக்கு கொஞ்சம் புளிப்பா தக்காளி சட்னி செய்யறீங்களா? வாய்க்கு ஒண்ணுமே பிடிக்கலக்கா.. டேஸ்ட்டே தெரிய மாட்டேங்குது.. புளிப்பு கொஞ்சம் நல்லா இருக்கு..” பாவமாக அவள் சொல்ல, ராதா அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“சரிடா பாப்பா.. உனக்கு காபியும், இட்லியும் ஊத்தித் தரேன்.. அம்மா காலையிலேயே சாப்பிட்டாங்க.. நீ குளிச்சிட்டு வா.. நான் எல்லாம் செஞ்சு எடுத்து வரேன்.. மதியத்துக்கு சூடா ரசம் செஞ்சுத் தரேன்..” என்றவள், வேகமாக நகர்ந்து சென்று வேலை செய்யச் செல்ல, வினய் ராதாவிற்கு உதவ அவள் பின்னோடு செல்ல, அவர்களைப் பார்த்து சிரித்தவள், தனது மொபைலைப் பார்த்தாள். அர்ஜுனிடம் இருந்து இரண்டே இரண்டு மெசேஜ் இருக்கவும், புன்னகையுடன் அதைத் திறந்தாள்.

அவன் காலை வாழ்த்து சொல்லி இருக்க.. அவனுக்கு பதில் அனுப்பியவள், ஹீட்டரைப் போட்டு விட்டு, தனது துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். 

அதற்குள் அர்ஜுன் ஐந்து முறை அழைத்திருக்க, குளித்துவிட்டு வந்தவள், தனது போனைப் பார்த்து உடனே அவனுக்கு அழைத்தாள்.

அவள் ஹலோ சொல்வதற்கு முன், “சிட்டு.. என்ன பண்ற? என்னாச்சு? குட் மார்னிங் சொன்னதுக்கு அப்பறம் இவ்வளவு நேரம் போனே எடுக்கல?” பதட்டத்துடன் அவன் கேட்க,

“அச்சோ.. அர்ஜுன் பயந்துட்டீங்களா? நீங்க ஷூட்ல இருப்பீங்கன்னு மெசேஜ் பண்ணிட்டு அப்படியே குளிக்க போயிட்டேன்.. சாரி..” அவன் நேரில் இருப்பது போலவே அவள் முகத்தைச் சுருக்க,

“சரி.. உடம்பு இப்போ எப்படி இருக்கு? வீடியோ கால் வா..” என்றவன், அவள் பதில் பேசுவதற்கு முன்பே வீடியோ காலில் அழைத்திருக்க, பதட்டத்துடன் ஆன் செய்தவள், அவசரமாக காமெராவின் பக்கத்தைத் திருப்ப, அந்த ஓரிரு நொடிகள் அவளது முகத்தைப் பார்த்தவனின் இதழ்களில் சிரிப்பு பொங்கியது.

‘முகத்தை கூட ஒழுங்கா துடைசிக்கல.. ஈரம் சொட்டுது..’ என்று நினைத்துக் கொண்டவன்,

“சாரி.. ராங் டைம் கால் பண்ணிட்டேனா?” கேலியாக கேட்க,

“சொல்லுங்க..” என்று அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் பெட்டில் அமர, அவளைப் பார்த்தவன், கேலியை கை விட்டு,

“உடம்பு பரவால்லையா? இப்போ கொஞ்சம் முகம் நல்லா இருக்கே..” என்று கேட்க,

“கொஞ்சம் ஃப்ரெஷா இருக்கறது போல இருக்கு.. ஆனா தொண்டை வலிக்குது.. வாய்க்கு எதுவுமே சாப்பிட பிடிக்கல.. தலை வலிக்குது..” அவள் பரிதாபமாகச் சொல்ல, அர்ஜுன் பரிதவித்துப் போனான்.

“இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணும்மா.. நான் நைட் வந்துடறேன்..” அவன் சமாதானப்படுத்த,

அவனை கேள்வியாகப் பார்த்தவள், “நீங்க வந்தாலும் இங்க எப்படி வருவீங்க? இங்க தான் நான் இருக்கேனே..” அவள் இழுக்க,

“அதுனால என்ன? நான் உனக்கு கம்பனி கொடுக்கறேன் சிட்டு.. நாம டேட் போகலாம்.. காபி டேட்.. பிரேக்பாஸ்ட் டேட்.. டின்னெர் டேட்ன்னு நாம வேலா வேளைக்கு டேட் போகலாம் ஓகே வா?” அவன் கேட்க,

“இல்ல. எனக்கு புரியல.. டேட்டா? என்ன விளையாடறீங்களா?” சிவாத்மிகா குழம்பினாள்.

அவளது முகத்தைப் பார்த்தவன், “உன் ரூம்ல தானே தங்கப் போறேன்.. உன் ரூம் ஜன்னல்ல நான் உட்கார்ந்துக்கறேன்.. நீ அங்க அப்படியே ஜன்னல்ல உட்காரு.. நாம சோசியல் டிஸ்டன்ஸ்ல டேட் பண்ணலாம்.. எப்படி என் ஐடியா?” அவன் கேட்கவும், முதலில் அவன் கூறியதைக் கேட்டு திகைத்தவள்,

புரிந்த பின்போ, “எப்படிங்க இப்படி எல்லாம் திங்க் பண்றீங்க? அப்படியே உங்க மூளையை ம்யூசியம்ல வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துக்கோங்க” அவள் கேலி செய்ய, தனது சட்டையின் காலரை தூக்கி விட்டுக் கொண்டவன்,

“ஷூட்டிங் கேப்ல தூங்கக் கூடாதுன்னு உன் கூட எப்படி டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சேனா.. அப்போ தோணின ஐடியா.. அடுத்த டப்பிங் எல்லாம் போக கொஞ்சம் டைம் இருக்கு.. சோ உன்னை கவனிக்கிறது மட்டும் தான் என் வேலை..” என்று அவன் சொல்லவும், சிவாத்மிகாவின் உள்ளுக்குள் எதுவோ செய்தது..

அவள் அவனையே வெறித்துக் கொண்டிருக்க, “பாப்பா.. பாப்பா..” என்ற ராதாவின் குரல் கேட்க, அவள் மெல்ல ஜன்னலில் சென்று எட்டிப் பார்த்தாள்.  

“நீ கேட்டது போல செஞ்சிட்டேன்.. நான் தான் கொண்டு போய் கொடுப்பேன்னு உங்க பாசமலர் தூக்கிட்டு வந்திருக்கார்.. போய் வாங்கி சாப்பிடு.. காபி உன்னோட கப்ல வச்சிருக்கேன்.. சூடா இருக்கும்.. தோச சாப்பிட்டு குடிச்சிடு..” என்று சொல்லவும், சிரித்துக் கொண்டே,

“சரிக்கா..” என்றவளிடம்,

“அவர்கிட்ட கொஞ்சம் எல்லாத்துக்கும் என்கிட்டே போட்டி போடாம இருக்கச் சொல்லு பாப்பா.. ரொம்ப படுத்தறார்.. அவர் கூட பேசியே எனக்கு டயர்ட் ஆகுது” என்று ராதா குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“சரிக்கா.. நான் அண்ணாகிட்ட சொல்றேன்.. நீங்க கோபப்படாதீங்க..” என்று அவள் சமாதானம் செய்ய, ராதா அடுத்த வேலையை கவனிக்கத் துவங்கினாள்.   

“என்னாச்சு?” என்று அர்ஜுன் கேட்கவும், சிவாத்மிகா, இருவரின் சண்டையையும் சொல்ல, அர்ஜுன் சிரிக்கத் துவங்கினான்.

“எனக்கு நல்ல டைம் பாஸ் இருக்கும் போலயே… அங்க வந்த அப்பறம் எனக்கு ஒரு வாரம் டைம் இருக்கு..” என்றவன், அவள் படிகளில் கீழே இறங்கிச் செல்லவும்,

“சரி.. சிட்டு.. சாப்பிட்டு பேசாம படுத்துத் தூங்கு.. ஷூட்க்கு டைம் ஆச்சு.. நான் முடிச்சிட்டு இன்னைக்கு ராத்திரி வந்துடறேன்.. என்ன? நல்லா தூங்கி ரெஸ்ட் எடுப்பியாம்..” எனவும்,

“சரி.. நீங்களும் அங்க ஜாக்கிரதை.. ஒழுங்கா எல்லாம் க்ளீனா இருக்காங்களா? அடிக்கடி செனிடைஸ் பண்ணிக்கோங்க.. மாஸ்க் எல்லாம் நல்லா கவர் பண்ணிக்கிட்டு நீங்க ப்ளைட்ல வாங்க..” என்று சொல்லவும்,

“சரிம்மா.. பத்திரமா வரேன்.. இப்போ பை..” என்றவன், போனை அனைக்க, பேசிக் கொண்டே வாசலை நோக்கி வந்த சிவாத்மிகா, நிர்மலா தனது அறையில் உறங்கி இருப்பதைப் பார்த்து விட்டு, கதவைத் திறக்க, வினய் அவளை கேலியாக பார்த்துக் கொண்டே உணவை வைக்கவும், அதை கண்டுக் கொள்ளாமல்,

“அக்காகிட்ட சண்டைப் போடாதீங்கண்ணா.. அவங்க பாவம்.. தனியா எல்லாம் பார்த்துக்கறாங்க இல்ல.. கொஞ்சம் வம்பு பண்ணாம இருங்களேன்..” எனவும்,

“என்னன்னே தெரியலம்மா.. எனக்கு வம்பு இழுக்கத் தோணுது.. உனக்காக கொஞ்சம் குறைச்சிக்கறேன்.. கொஞ்சம் தான்..” என்றவன்,

“சரி.. போய் சாப்பிட்டுத் தூங்கு.. நானும் தூங்கறேன்.. பொங்கல் வயித்துல மதமதன்னு இருக்கு..” என்றவன், ஒரு கொட்டாவியுடன் நகர்ந்து செல்ல, அவனைப் பார்த்து தலையசைத்தவள், உணவை தனது எடுத்துக் கொண்டு அறைக்கு வந்து, உண்டு விட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு அமர்ந்தவளுக்கு, அர்ஜுனின் வரவுக்காக அவளை அறியாமலே அவளது மனம் எதிர்பார்க்கத் துவங்கியது.

Leave a Reply

error: Content is protected !!