Rose – 2
Rose – 2
அத்தியாயம் – 2
தன்னை நேரில் கண்டவுடன் கோபத்தில் கொந்தளித்து, தகாத வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குவாள் என்ற நினைவே அவனுக்கு உதறலைத் தர, ‘இன்னும் சில நிமிடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளது’ வானிலை அறிக்கை வாசித்தது அவனது மனம்!
எந்தவிதமான சலனமும் இன்றி அவள் இலகுவாக அந்த நொடிகளைக் கடந்துவிட, அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளது பேச்சும், செயலும் அவன் மனதை வெகுவாகக் காயப்படுத்தியது.
அவளது சூர்கேசை எடுத்துகொண்டு ராம், “நீ பயணம் செய்து ரொம்ப களைப்பாக இருக்கிற… வா வந்து ரெஸ்ட் எடு!” அவன் முன்னே செல்ல, மற்றவர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.
அவள் சென்ற திசையை நோக்கியவனின் விழிகள் வலியைப் பிரதிபலிக்க, ‘அதற்குள் என்னை மறந்துவிட்டாளா?’ அந்த நினைவே அவனைக் கொல்லாமல் கொன்றது.
‘ஓ நீ செய்த காரியத்துக்கு இன்னும் அவ உன்னை நினைச்சிட்டு இருப்பா பாரு, இதுக்கெல்லாம் காரணமானவன் நீதான், நல்லா அனுபவி’ அதுவரை அமைதியாக இருந்த மனம், அவனை சாடியது.
யாழினி தந்த அதிர்ச்சியில் சிலையாகி நின்றவன், வீட்டின் வாசலில் நியூஸ் பேப்பர் விழும் சத்தத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டான். ஹாலில் அவன் மட்டுமே இருப்பதைக் கண்டு, ‘நான் இப்படி நிற்பதைக் கண்டு யாராவது ஏதாவது கேட்டால், சத்தியமாக பதில் சொல்ல முடியாது’ பெருமூச்சுடன் நினைத்தான்.
மருத்துவமனையில் ஒரு இருதய அறுவை சிகிச்சை இருப்பது ஞாபகம் வந்தது. அவள் வருகின்ற விஷயம் தெரியும் முன்பே தெரியும் என்பதால், சகலவசதிகளுடன் கூடிய அறையை அவளுக்கென்று ஏற்பாடு செய்திருந்தனர்.
யாழினியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் கீழே சென்றனர். அறையின் கதவை அடைத்துவிட்டு அதன்மீது சாய்ந்து நின்றாள். சிலநொடிகள் அந்த இடத்தில் அமைதி நிலவியது.
“நான் சீக்கிரமே ஹாஸ்பிட்டல் போகணும்” அவன் பேச்சுக்குரல் அவளது கவனத்தை ஈர்க்க, தன் கால்களை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு விழிமூடினாள்.
நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் குறைய, மெல்ல விழிதிறந்து பார்த்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த முண்டாசு பாரதியின் ஓவியம் கண்டவுடன், கவலைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அவளது பழைய நிமிர்வு வரவே, யாழினியின் உதடுகள் முனுமுனுத்தன.
“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?” அந்த வரிகள் அவளுக்கு புத்துயிர் கொடுக்க, இதழ்களில் புன்னகை தானாக மலர்ந்தது. எங்கோ சென்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு, தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
பயணம் செய்த களைப்புத்தீர வெந்நீரில் குளியல்போட்டு, படுக்கையில் வந்து விழுந்தவளை அரவணைத்துக் கொண்டாள் நித்திராதேவி. யாதவ்வை நேரில் சந்தித்ததில் உண்டான நிம்மதியோ, தினம்தோறும் அவனை சந்திக்க போகின்ற திருப்தியோ ஏதோவொன்று சுகமாக அவளைத் தாலாட்டியது.
வெகுநேரம் உறங்கிய யாழினி கதவு தட்டப்படும் ஓசைகேட்டு கண்விழித்தாள். கடிகாரம் மணி பிற்பகல் மூன்று என்றதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“அடக்கடவுளே! இவ்வளவு நேரம் தூங்கியிருக்கேனே…” தலையில் அடித்துக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்துசென்று கதவைத் திறக்க, வைஜெயந்தி புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தார்.
வெகுநாட்களுக்கு பிறகு அவள் நிம்மதியாக உறங்கி இருப்பதுபோல தோன்றவே, “ஒருவழியாகத் தூக்கம் தெளிந்துவிட்டதா? முதலில் போய் முகம் கழுவிட்டு வா…” என்றார் கனிவு மாறாத குரலில்.
‘தன்மீது பாசத்தைப் பொழியும் குடும்பத்தினரிடம் உண்மையை மறைத்துவிட்டேனே!’ அந்த நினைவே அவளை நிம்மதியிழக்க வைத்தது. இன்று இல்லையெனினும் பின்நாளில் உண்மைத் தெரிய வந்தால், என்ன நடக்குமென்று யோசிக்கும்போது இதயத்தின் ஓரம் சுருக்கென்று வலித்தது.
“கொஞ்ச நாளாகவே நிம்மதியான தூக்கமில்ல. உங்களையெல்லாம் பார்த்த சந்தோசத்தில் என்னையும் மறந்து நல்ல தூங்கிட்டேன்” எல்லாம் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவள், பக்கத்திலிருந்த அறையில் உடைமாற்றிவிட்டு வந்தாள்.
அவள் அணிந்திருந்த சிகப்பு நிறச் சுடிதார் அவளது அழகை மெருகூட்டியது. அன்றில் மலர்ந்த அலரைப்போல காட்சியளித்த யாழினியின் கன்னம் வருடி, “ரொம்ப அழகாக இருக்கிறம்மா” என்றவரின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.
அவளை அழைத்துக்கொண்டு வைஜெயந்தி கீழே செல்ல, டைனிங் டேபிளில் சிவசந்திரன், ராம்குமார், கீர்த்தனா மூவரும் அவளின் வரவிற்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்.
யாழினி புன்னகையுடன் ஒரு இருக்கையில் அமர, “அக்கா அநியாயம் இவ்வளவு நேரம் தூங்குவீங்கன்னு முன்னாடியே தெரியாமல் போயிடுச்சு. நீங்க எழுந்து வரும்வரை சாப்பிடக்கூடாதுன்னு வைஜெயந்தி ஐ.பி.எஸ் சொல்லிட்டாங்க” வராதக் கண்ணீரைத் துப்பட்டாவில் துடைத்தாள் கீர்த்தனா.
அவளது குறும்புத்தனம் மற்றவர்கள் அறிந்ததே. இன்று எதுவரைப் போகிறது என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மூவரும் மெளனமாக இருக்க, “நான் வரவில்லைன்னா என்ன? நீங்க சாப்பிட்டுவிட்டு அப்புறம் வேலையைக் கவனிக்க வேண்டியதுதானே…” படபடவென்று எண்ணெயிலிட்ட அப்பளமாகப் பொறிந்தாள் யாழினி.
அவளது முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த ராம் வந்த சிரிப்பை அடக்கி முயற்சிக்க, “இதையேதான் நான் அப்பாவிடமும், அண்ணாவிடமும் சொன்னேன். அவங்க நான் சொன்னதைக் காதிலேயே வாங்கல தெரியுமா?” – கீர்த்தி சோகமாகக் கூறினாள்.
ஆண்கள் இருவரின் பார்வையும் வைஜெயந்தியின் மீது மையம்கொள்ள, அவரது பார்வையைக் கவனித்துவிட்ட யாழினிக்கு சுர்ரென்று கோபம் வர, “அம்மா நீங்களும் கூட்டா?” என்றாள்.
அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிவிட்டு அருகே அமர்ந்த வைஜெயந்தி, “இவங்க சாப்பிடாமல் இருக்கும் ஆளுன்னு நினைச்சியா?” – என்றார் பொறுமையாகவே.
கீர்த்தியின் திருவிளையாடல் என்றுணர்ந்த யாழினி, “கொஞ்ச நேரத்தில் என்னை பதற வச்சிட்டே!” என்று கூற, சின்னவளோ கலகலவென்று சிரித்தாள்.
தன் மகளைக் கண்டிக்கும் விதமாக, “அடுத்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டுப் போகப்போறே, இன்னும் விளையாட்டுத்தனம் கொஞ்சம்கூட குறையல!” அவளின் தலையில் நறுக்கென்று கொட்டினார் வைஜெயந்தி.
“அம்மா” கீர்த்தனா சத்தமாக அலற, மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
சாப்பாடு, கத்தரிக்காய் சாம்பார், தக்காளி ரசம், உருளைக்கிழங்கு வறுவல், தயிர் மற்றும் இனிப்பு வகைகளில் அரிசி பாயாசமும், கேசரியும் இலையில் இடம்பெற்று இருக்க கண்டு அவளது விழிகள் வியப்பில் விரிந்தன.
தனக்கு பிடித்த உணவு பதார்த்தங்களைக் கண்டு, “அப்பா இருந்தபோது இதெல்லாம் சாப்பிட்டது, ரொம்ப தேங்க்ஸ்ம்மா!” யாழினி குரலில் வருத்தம் இழையோடியது.
அவள் வருந்துவதைப் பார்க்க பிடிக்காமல், “நாங்க இருக்கும்போது நீயேன் தேவையில்லாமல் வருத்தப்படுற? அப்பா சொல்றேன் இலையில் இருக்கிற எல்லாத்தையும் சாப்பிட்டிட்டு தான் எழுந்திருக்கணும்” சிவசந்திரன் கட்டளையிட, யாழினியின் விழியோரம் கண்ணீர் கசிந்திட சரியென்று தலையாட்டினாள்.
அவர்கள் உணவை முடித்துக்கொண்டு எழுந்த சிறிதுநேரத்தில், உறவினர்களும் வீட்டிற்கு வர தொடங்கினர். புதிய நபர்களுடன் இயல்பாகப் பேச முடியாமல் தடுமாறிய யாழினிக்கு திடீரென்று அழைப்பு வந்தது.
திரையில் தெரிந்த பெயரைக் கண்டவுடன் முகம் மலர, “ஒரு நிமிஷம்” என்றவள் வேகமாக எழுந்து முன் வாசலுக்குச் சென்றாள்.
“ஹலோ மேடம்! என்ன அதிசயம், இன்று விடியற்காலையில் எழுந்துட்டீங்க” தன் தோழியை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.
வெகுநாட்களுக்கு பிறகு அவளின் குரலில் இருந்த உற்சாகம் கண்டு, “உன்னிடம் பேசத்தான் அலாரம் வச்சு எழுந்தேன். ஆமா இந்தியா கிளைமேட் உனக்கு ஓகேவா? ராம் அண்ணாவின் வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?” கேள்வி கேட்டே யாழினியைத் திணறடித்தாள் மிருதுளா.
“இங்கே எல்லோரும் ரொம்ப நல்லா இருக்காங்க. இந்த ஊரின் கிளைமேட் சும்மா ஜில்லுன்னு இருக்குடி” தோட்டத்தில் இருந்த பூக்களின் மீது பார்வையைப் பதித்தபடி கூறினாள்.
தன் தோழியின் மாறுதலை நினைத்து சந்தோசப்பட்ட மிருதுளா, “நான் சொன்னதைக் கேட்காமல், இங்கிருந்த அனைத்து சொத்தையும் வித்துட்டு அங்கே போயிட்டே அடுத்து என்ன பிளான்?” என்றாள்.
சிறிதுநேரம் சிந்தனைக்குப் பிறகு, “இன்னும் எதையும் யோசிக்கல!” என்றாள் யாழினி எங்கோ பார்த்தபடி.
அவளின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டுகொண்டவளோ, “இங்கே நடந்த எதுவும் ராம் அண்ணா குடும்பத்திற்கு தெரிய வேண்டாம். நீயும் நடந்ததை மறந்துட்டு, கொஞ்சநாள் உன் மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய். என்ன நான் சொல்றது புரியுதா?!” மிருதுளா கண்டிப்புடன் கூறினாள்.
“நீ என் நலன் விரும்பின்னு நல்லாவே புரியுது!” கிண்டலாக கூறிய யாழினி சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
புல்தரையில் நின்று பார்வையைச் சுழற்ற, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மலைத்தொடர்கள் அழகாக காட்சியளித்தது. மலைகளின் நிமிர்வு அவளுக்குப் புத்துயிர் தந்தது. ஊட்டி குளிர் பிரதேசம் என்ற காரணத்தால் கிளைமேட் சில்லென்று இருந்தது.
மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கே வெயிலின் தாக்கம் குறைவென்று உணர்ந்தாள். தன் கண்முன்னே புன்னகைத்த பூக்களை மெல்ல தீண்டி, பின் செடிக்கு வலிக்காமல் பூவிதழ்களில் முத்தமிட்டு கைகளை எடுக்கின்ற வேளையில் ரோஜாமுள் அவளது விரல்களைப் பதம் பார்த்தது.
‘அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற ஏழுநிலை நிலைகளிலும், அவை மனிதர்களின் மனதை மென்மையாக மாற்றி, பிரச்சனைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுகிறது’ பிரம்மிப்புடன் நினைத்தபடி, “ஷ்!” வலியுடன் கையை உதறினாள்.
அதன்பிறகும் அவளின் மனம் பூவின் அழகினை ரசிக்கவே செய்தது.
வெகுநேரமாக யாரோ தன்னைப் பார்ப்பது போன்ற எண்ணம் தோன்ற, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். மெல்ல காரின் கதவைத் திறந்து இறங்கிய யாதவின் முகம் இறுகியிருக்க, ‘இவளை…’ பல்லைக் கடித்தவன் அழுத்தமான காலடியோசையுடன் அவளை நெருங்கினான்.
அவனது கம்பீரமான தோற்றம் வழக்கம்போலவே அவள் மனதைச் சலனப்படுத்தியது. அவன் மீது கடலளவு கோபம் இருந்தபோதும், தன் மனம் அவனை வெறுக்கவே இல்லை என்பதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தாள்.
அவள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு நிமிர, “என்னை உனக்கு தெரியாதா?” அவனின் கேள்வியில், இதயத்தின் ஓரமாக ஒரு வலியை உணர்ந்தாள்.
தன் கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, “நீங்க அண்ணாவோட நண்பர். நீங்க இந்த ஊரில் பெரிய இருதய நிபுணர்ன்னு அண்ணா சொன்னதாக ஞாபகம்” அவன் விழிகளைப் பார்த்தபடியே கூறியவள், வீட்டின் உள்ளே செல்ல திரும்பினாள்.
அவன் விழிகள் வலியைப் பிரதிபலிக்க, “ஆறு மாதத்தில் அனைத்தையும் மறந்துவிட உன்னால் எப்படி முடியுது?” என்ற கேள்வி அவளின் மனதைப் பாதித்தது.
சட்டென்று அவன் பக்கம் திரும்பிய யாழினி, “ஸாரி நீங்க என்ன பேசறீங்கன்னு புரியல” அவளின் முகத்திலிருந்து எதையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது காதலியின் இந்த பரிமாணம் பிரமாஸ்திரமாக மாறி அவனை வீழ்த்தியது.
அவளது பார்வையும், பேச்சும், செயலும் அவனைக் காயப்படுத்தியது. தன் வலியை மறக்க அவன் போராடுவது கண்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
“ஒரு பொருள் கேட்டதும் கிடைத்துவிட்டால், அதற்கு மதிப்பில்லைன்னு சொல்வாங்க. நீ அருகில் இருக்கும் வரை உன்னோட அருமை எனக்கும் தெரியாமல் போயிடுச்சு” என்றான் வேதனை நிரம்பிய குரலில்.
அவன் பேசுவதைக்கேட்டு காதல் கொண்ட மனம் பரிதவிக்க, தன் உணர்வுகளை இலகுவாக மனதினுள் மறைத்துவிட்டு, “என்னோட அருமையா? ஹலோ மிஸ்டர் அவ்வளவுதான் மரியாதை. ஏதோ அண்ணாவோட நண்பன் நின்று பேசினால், நீங்க என்னவோ சேர்ந்து வாழ்ந்த மாதிரி பேசறீங்க?” அவனிடம் எகிறினாள்.
‘இவளுக்கு என்னாச்சு?! என்னை அடையாளம் தெரியாதது மாதிரியே பேசறாளே…’ அவன் சிந்திக்கும்போது, காரணமே இல்லாமல் காலையில் கண்ட கனவு ஞாபகம் வந்தது.
“ஸாரி உங்களுக்கு சமீபத்தில் ஆக்ஸிடென்ட் ஏதாவது நடந்ததா?” குழப்பத்துடன் அவளை ஏறிட்டான்.
அவனது தவிப்பை மனதிற்குள் ரசித்தபடி, “ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்தது” யாழினி சர்வசாதாரணமாக கூற, யாதவ் மூளை வேலை நிறுத்தம் செய்தது.
தன்னவளுக்கு விபத்து நடந்தபோது தான் அருகில் இல்லாமல் போனோமே என்ற கவலையோடு, ‘ஒருவேளை அந்த விபத்தில் இவளுக்கு தலையில் பெரிய அடிபட்டு என்னை மறந்துவிட்டாளோ?!’ என்ற சந்தேகம் மனதில் முளைவிட, தன் எதிரே நின்றவளை சிந்தனையுடன் ஏறிட்டான்.
அவள் வில்போன்ற புருவங்கள் மேலே உயர, “உங்க பார்வை, பேச்சு எல்லாமே வித்தியாசமாக இருக்கு. இன்னும் கொஞ்சநேரம் இங்கே நின்றால், எனக்கு தலைவலி வருவது நிச்சயம்!” வேகமாக அவள் அங்கிருந்து செல்ல, யாதவின் பார்வை அவளைப் பின்தொடர்ந்தது.
நெஞ்சமென்னும் சோலையில் காதல் என்ற கொடியில் மலர்ந்த அலரின் சுகந்த வாசனையை சுவாசிக்கும் முன்பே, அதை கருகிப் போக செய்தால் அவனின் காதலி. அவளை இப்படி பார்க்கும்போது மனம் வலிக்கவே செய்தது.
“உயிர் கொண்ட ரோஜாவைப்போல இருந்தவளை, என் முட்டாள்தனமான குணத்தால் இழந்துவிட்டேனோ!” யாதவ் உதடுகள் முணுமுணுக்க, அவனது கால்கள் அந்த இடத்திலேயே வேரோடிப் போனது.
யாதவிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த யாழினி, “சபாஷ் யாழினி! அவனுக்கு இந்த ஷாக் தேவைதான். என்னைத் தவிக்க விட்டுட்டு வரும்போது, எனக்கும் இப்படிதானே வலிச்சிருக்கும். நல்ல அனுபவிக்கட்டும்!” தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள்.
‘யாதவ் ரொம்ப பாவம்ப்பா!’ அவனுக்காக பரிந்து வந்த மனசாட்சியை பார்வையால் எரித்துவிட்டு, “கொஞ்ச நாளைக்கு இப்படி குழப்பத்துடன் சுத்தட்டும். அப்போதான் இந்த யாழினியின் அருமை தெரியும்” அடுத்து என்ன செய்யலாம் தீவிரமான சிந்தனையுடன் அறைக்குள் அங்குமிங்கும் நடைபயின்றாள்.
மெல்ல ஜன்னலின் அருகே சென்றவள், வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தாள். பச்சைப்பசையேல் என காட்சியளித்த தேயிலைத் தோட்டங்கள் அவளின் கவனத்தை ஈர்க்க, அவளின் மூளையில் மின்னலடித்தது.
‘தேயிலை எஸ்டேட்டுடன் கூடிய ஃபேக்டரியை விலைக்கு வாங்கலாமா?’ என்ற எண்ணமே அவளின் மனதில் விதையாக விழுந்து விருச்சமாக வளைந்து நின்றது.