Rose – 3

3dd087ef9a7e3362cdca08fbc9e38773-840b227c

Rose – 3

அத்தியாயம் – 3

காற்றின் வேகம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க, அதுவரை வானில் சூழ்ந்திருந்த கார்மேகங்கள் கலைந்தோடியது. இருள் கொஞ்சம் விலகியதில் மேற்கில் மறைய சென்ற சூரியனும் பளிச்சென்று முகம் காட்டியது.

பச்சைப்பசையேல் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்திருந்த தேயிலைத் தோட்டம். தன் அறையின் ஜன்னலின் வழியாக அதைப் பார்த்த மீனாலோட்சனியின் மனதில் பாரம் ஏறியது.

“மே ஐ கமின்” என்ற குரல்கேட்க, “எஸ்” என்றார் மீனாலோட்சனி கம்பீரமான குரலில்.

அவரின் அனுமதியின் அறைக்குள் நுழைந்த தீபிகா, “நாளைக்கு நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொல்லிட்டேன் மேடம்” என்றாள்.

“ஓகே! நீங்க உங்க இடத்துக்குப்போய் வேலையைக் கவனிங்க” அவர் கட்டளையிட, சரியென்று தலையசைத்து தன் இடத்தில் சென்றாள் தீபிகா.

கணவன் மட்டுமே உலகம் என்று வாழ்ந்த நாட்களில் கூட, அவர் இவ்வளவு தூரம் கலங்கியது இல்லை. தன் காதல் கணவனை இழந்தபிறகு தான், அவர் விட்டுச் சென்ற கடன் அவரின் கழுத்தை நெரித்தது. அதை மகனின் தலையில் சுமத்த அவருக்கு மனமில்லை. இந்த தொழில் பற்றிய அரிசுவடு அறியாமல், தன்மீது மட்டும் நம்பிக்கை வைத்தார்.

இன்று நஷ்டத்தில் இருந்த நிறுவனத்தை மீட்டெடுத்து, வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்தார். ஊட்டியில் இருக்கும் நிறுவனங்களில் பட்டியலில் இப்போது இந்த நிறுவனமும் இருக்க காரணம் மீனாலோட்சனியின் அயராத உழைப்பும், அர்பணிப்பும் மட்டுமே! 

இன்று அதே தொழிலை விற்க நெருடுகிறது என்ற எண்ணமே, அவரை நிம்மதியிழக்க செய்தது. தன் தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தப் பிள்ளையைப் பிரிவதுபோன்ற உணர்வு அவரை ஆக்கிரமிக்க, அதற்குமேல் அங்கிருக்க மனமின்றி வீட்டிற்கு சென்றார்.

அன்று வழக்கத்திற்கு மாறாக விரைந்து வந்த மீனலோட்சனி, ஹாலில் அமர்ந்திருந்த மகனைப் பார்த்து வியந்தார். நடுஹாலில் இருகரங்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்த மகனின் தோற்றம் நெஞ்சைப் பிசைய, “யாதவ்” என்றழைத்தார்.

தாயின் கனிவான குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்தவனின் விழிகளில் ஒருவிதமான வெறுமை. அவன் முகத்தில் இருந்த பரிதவிப்பும், மீனாவின் மனதை வெகுவாகப் பாதிக்க, இரண்டே எட்டில் மகனை நெருங்கினார்.

அவனின் தலையை வருட எழுந்த கரங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “என்ன தலை வலிக்குதா? நான் சூடா காஃபி போட்டு எடுத்துட்டு வரட்டும்மா?” அக்கறையுடன் கேட்கும்போதே, வேலையாள் கொண்டு வந்து காஃபியைக் கொடுத்துவிட்டு போனார்.

தாயின் இதமான பேச்சும், அதில் இழையோடிய அக்கறையும் அவனை என்னவோ செய்தது. தன் பார்வையில் தாயைக் கூட தள்ளி நிறுத்தும் விடும் யாதவ் விழிகளில், ஏதோவொரு தேடல் இருந்தது. அது என்னவென்று அவரால் இனம்காண முடியவில்லை. ஆனாலும் மகன் மனம் காயப்பட்டு இருப்பதை மட்டும் உணர்ந்தார்.

அவரது மடியில் தலை சாய்த்து கொள்ள மனம் ஏங்கியபோதும், அதை வாய்விட்டு சொல்லவிடாமல் ஏதோவொன்று அவனைத் தடுத்தது. டீபாயில் வைத்திருந்த காஃபியைப் பருகிய யாதவ் எழுந்து செல்ல, மீனாவும் தன் அறைக்குள் சென்று மறைந்தார்.

தன் படுக்கையறைக்குள் நுழைந்தவனை தனிமை சூழ்ந்து கொண்டது.

அவன் மனமோ அவளைச்சுற்றி மட்டுமே வட்டமிட்டது. அவனுக்குள் புதைந்திருந்த காதல் விதை, இந்த ஆறுமாத பிரிவில் விருட்சமாய் வளர்ந்து நின்றது. தன்னையே சுற்றி வந்தவளின் காதலைப் புரிந்துகொள்ளாமல் போனோமே என்ற கழிவிரக்கம், அவனைக் கொல்லாமல் கொன்றது.

தன் உள்ளம் முழுக்க காதலைச் சுமந்திருந்தவளை வார்த்தைகளால் வதைத்துவிட்டு வந்தது நினைவிலாடியது. தான் பேசிய வார்த்தைகள், அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கும் என்ற நினைவே அவன் நிம்மதியைப் பறித்தது.

அவள் தன்னை யாரோபோல பார்க்கும்போது, உள்ளுக்குள் இருக்கும் மனம் சுக்குநூறாக உடைந்தது. தாய்க்கு நிகரான அன்பைப் பொழிந்தவள், இன்று தன்னைப் பார்த்த பார்வை. அதை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

அவனின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், அவளின் அரவணைப்பிற்கு ஏங்கியது. தந்தையின் இறப்பும், தாயின் பிரிவும் தான் அவனை மனதளவில் வெகுவாக பாதித்த விஷயங்கள்.

அதன்பிறகு அவன் வாழ்க்கையில் வந்தவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் மேகங்கள் போலவே இருந்தால், யாருக்கும் அவன் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர்களின் பிரிவை ஒரு பொருட்டாக மதித்ததும் கிடையாது.

மதுரயாழினியின் எதிர்பாராத சந்திப்பும், அது நெஞ்சினில் ஏற்படுத்திய தாக்கம் அனைத்தும் காதலென்று உணராமல் இருந்தான். தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களைப் போலவே, அவளை இயல்பாக கடந்துவிட்டதாக நினைத்தான்.

அது அவ்வளவு சுலபமான விஷயமன்று என, அவளைப் பிரிந்து வந்த பிறகே உணர்ந்தான். அமெரிக்கா நாட்டின் கலாச்சாரம் மீது ஏற்பட்ட ஈர்ப்புதான், தன் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பிழையை செய்ய காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மை மனதைச் சுட்டது.

அவளோடு வாழ்ந்த நாட்களின் நினைவில் படுக்கையில் சரிந்து விழி மூடினான். இரு விழிகளின் நடுவே வந்து நின்றவளின் பிம்பம், அவனது கன்னம் கிள்ளி சிரித்து, காற்றில் அசைந்த தலைமுடியில் விரல் நுழைத்து கோதியது. நெஞ்சினில் பசுமையாக மணம் வீசிய அவளின் நினைவுகள் அவனைத் தாலாட்டிட, தன்னையும் மறந்து உறங்கினான்.

***

ராம்குமாரின் மொத்த குடும்பமும் திருமண வேலையில் பிஸியாக இருந்தனர். இந்நிலையில், மறுநாள் காலை வழக்கம்போலவே எழுந்தவள், தன் உடல்பயிற்சிகளை முடித்துவிட்டு கீழிறங்கி வந்தாள்.

வீடு அமைதியாக காட்சியளிக்க, “எல்லோரும் எங்கே போனாங்க?” தனக்கு காஃபி எடுத்து வந்த வேலையாளிடம் கேட்டாள் யாழினி.

“அம்மா கோவிலுக்கும், பெரிய ஐயா ஆபீஸிற்கும், ராம் தம்பி மருத்துவமனைக்கு போயிருக்காங்க. கீர்த்தனா பாப்பா இன்னும் தூங்கிட்டு இருக்குதுங்க!” பணிவுடன் பதில் தரவே, “ஓ” என்றாள்.

“சரிங்க அண்ணா! நீங்க போய் உங்க வேலையைக் கவனிங்க” யாழினி நியூஸ் பேப்பரை எடுத்துப் புரட்ட, அதில் இருந்த விளம்பரம் அவளின் கண்ணில்பட்டது.

கோகுலம் எஸ்டேட் மற்றும் பேக்டரி விற்பனைக்கு என்ற தகவலை வாசித்தவளின் முகம் பூவாக மலர்ந்தது.

இந்த ஃபேக்டரி விலைக்கு வாங்குவதன் மூலமாக, இந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்க முடியும். அத்துடன், தன்னால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, தான் விரும்பிய குடும்பச்சூழல் மனதிற்கு நிறைவைத் தரும் என நினைத்து அவள் உள்ளம் குழந்தைப்போல குதூகலித்தது.

அதே சமயம்,எஸ்டேட் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றும் போதே, அது எவ்வளவு தூரம் சரிவரும் என்று சிந்தித்தாள். முன்னிரவு தூங்காமல் இணையத்தின் மூலமாக அந்த துறையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தாள்.

தேயிலை தோட்டம் மற்றும் டீ பேக்டரி இரண்டையும் திறம்பட நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்தபிறகுதான் உறங்கியது ஞாபகம் வந்தது. அந்த விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு,  மீனலோட்சனியைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கினாள்.

அந்த பேப்பரில் இருந்த முகவரியைக் குறித்துக் கொண்டாள். அன்று காலை பதினோரு மணிக்கு வர சொல்லவே, அவளின் பார்வைக் கடிகாரத்தின் மீது படிந்து மீண்டது. மணி ஒன்பது என்றது கடிகாரம்!

சட்டென்று எழுந்து அறைக்குச் சென்ற யாழினி, தன்னிடமிருந்த காட்டன் புடவையை அணிந்தாள். அவளின் கைகள் முடியைப் பின்னலிட, அவளின் நினைவுகளோ எங்கோ சென்றது.

திடீரென்று நிகழ்ந்த தந்தையின் மரணம், யாதவின் பிரிவு இவையணைத்தும், ‘இந்த வாழ்க்கையில் யாருமே நிரந்தரமில்லை’ என்ற மிகப்பெரிய தத்துவத்தை ஆழ்மனதில் பதிய வைத்த நாட்கள்!

அமெரிக்காவில் இயந்திரம்போல வாழும் வாழ்க்கையை வெறுத்து, இனி இங்கே திரும்ப வரக்கூடாது என்ற முடிவுடன் இந்திய மண்ணில் கால் பதித்தாள். முதல் வேலையாக அமெரிக்கா நாட்டின் குடியுரிமையை இந்தியாவிற்கு முதலில் மாற்றினாள்.

அடுத்ததாக, தன் தந்தையின் பெயரில் இருந்த சொத்துகள், வீடு என்று அனைத்தையும் விற்றாள். அந்த பணத்தை வங்கியில் கணக்கு தொடங்கி, அதில் போட்டு வைத்தாள். இங்கே இருக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாகப் பெற்ற பிறகுதான், கீர்த்தனாவின் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தாள்.

தன் முடியை பின்னலிட்டு, கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். நெற்றியில் பொட்டு வைத்தவளின் ஒப்பனை அவளுக்கு திருப்தியைக் கொடுத்தது. காட்டன் புடவை அவளுக்கும் கம்பீரத்தைக் கொடுக்க, முகத்தில் புன்னகையைத் தவழ விட்டாள்.

தன் செல்போனைக் கையில் எடுத்துக்கொண்டு கீழிறங்கி வந்தவள், “அம்மா வந்தால் நான் ஒரு முக்கியமான வேலை விஷயமாக வெளியே போயிருக்கேன்னு சொல்லுங்க” என்றவள் நில்லாமல் விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தாள்.

அவள் புக் செய்திருந்த கால்டாக்சி வரவும், டிரைவரிடம் முகவரி சொல்லிவிட்டு காரின் பின்புறம் அமர்ந்தாள். அங்கிருந்து கொஞ்ச நேர பயணத்தின் முடிவில் ஓரிடத்தில் வண்டி நின்றது.

“அம்மா இதுக்குமேல் நீங்க நடந்ததுதான் போகணும்” டிரைவர் கூறவே, அவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி நடந்தாள்.

சிறிய குன்றுபோல காட்சியளித்த இடத்தின் மேல் டீ பேக்டரியும், அதைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் அமைந்திருந்தது. அங்கே தலையில் துணியைக் கட்டிக்கொண்டு தேயிலைப் பறிக்கும் பெண்களின் மீது பார்வையைப் பதித்தபடி மெல்ல நடந்தாள்.

“சொந்தம் என்று தென்றல் என்னைத் தாலாட்டுத்தே…

துள்ளும் நதி என்னைத் தொட்டு பாராட்டுதே…

பச்சைநிற பாய்விரித்து கச்சேரிதான் சோலைக்குள்ளே…

ஓ பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…” தேயிலைப் பறித்த பெண்களில் ஒருத்தி பாடிக்கொண்டிருக்க, மற்றவர்கள் அதை ரசித்தபடி அமைதியாக வேலையைத் தொடர்ந்தனர்.

“என்னவோ அக்கா நீ பாடுவதால், கொஞ்சம் வேலையாகுது! இல்லன்னா அவ்வளவுதான்” ஒருத்தி கூற,

“ஏண்டி உனக்கு வேலையாக நான் காட்டு கத்து கத்தணுமா?! என்னால முடியாது சாமி” என்றாள் பாடல் பாடிய பெண்மணி.

“அக்கா நீயாவது பரவால்ல… நான் பாடினால் பொள்ளாச்சியிலிருந்து கழுதை சொல்லாமல் வந்திடும்” இன்னொருத்தி கிண்டலாக கூற, இதைக்கேட்ட யாழினிக்கு சிரிப்புதான் வந்தது.

அதைக் கேட்ட அந்தப் பெண்மணியோ சிரித்தபடி, “இப்படி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டீங்களேடா” வடிவேல் பாணியில் கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

அதன்பிறகு நேராக பேக்டரிக்கு சென்று மீனலோட்சனியை சந்திக்க வேண்டும் என்று கூறினாள். அவளைக் காத்திருக்க சொல்லிவிட்டு, மீனலோட்சனி இருக்கின்ற இடத்திற்கு சென்றாள்.

அந்த வார இறுதியில் அனுப்ப வேண்டிய டீத்தூள்கள் அனைத்தும் சரியாக பேக்கிங் செய்திருக்கிறார்களா என்று சரிபார்த்துக் கொண்டிருந்த மீனாவிடம் சென்று, “மேடம் உங்களைப் பார்க்க, மதுர யாழினின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க” என்றாள் தீபிகா.

அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால், “அந்தப் பெண்ணை என்னோட கேபினில் உட்காரச் சொல்லு. நான் இந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்” என்றவர் அந்த வேலையை முடித்துவிட்டு அலுவலக அறைக்குள் சென்றார்.

அவரைப் பார்த்தும் எழுந்து நின்ற யாழினியிடம், “உட்காரும்மா!” என்றவர் கூற, அவளும் அமைதியாக அமர்ந்தாள்.

அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவரிடம், “இந்த நிறுவனத்தை விற்க போவதாக பேப்பரில் விளம்பரம் பார்த்தேன், அதுதான் விலைக்கு வாங்கலாம்னு வந்தேன்” அவள் வந்த விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைக்க, அவரின் முகம் சட்டென்று மாறியது. 

அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவருக்குப் பிடித்துப் போக, “உன்னை இதுக்கு முன்பு இங்கே பார்த்ததே இல்லையே…” என்றார்

“அப்பா – அம்மா இருவரும் இங்கேதான் கோயம்பத்தூரைச் சேர்ந்தவங்க. ஆனால் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்கா தான். இந்த கலாச்சாரம் எனக்கு பிடித்ததால், தமிழ் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டேன்” சிறிது இடைவெளிவிடவே, அவளின் நிமிர்வான பேச்சு அவரை வெகுவாகக் கவர்ந்தது.

“இந்த தொழிலில் முன் அனுபவம் இருக்காம்மா?!” அவர் நேரடியாக கேட்க, சட்டென்று நிமிர்ந்து அவரின் விழிகளைச் சந்தித்தாள்.

“இதுவரை தெரியாது மேடம். இனிதான் கத்துக்கணும்” என்றாள் புன்னகையுடன்.

“மீன் குஞ்சிற்கு நீந்த கற்றுத்தரணுமா என்ன? ஆரம்பத்தில் எனக்கு இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய தெரியாது. நானும் உன்னை மாதிரிதான் மெல்ல கத்துக்கிட்டேன். தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கைக்காகவே உனக்கு நான் ஹெல்ப் பண்றேன். உன்னை கைடு செய்ய இங்கே ஒருத்தங்க இருக்காங்க” மீனலோட்சனி இண்டர்காமில் அழைத்து தகவல் சொல்ல, மீனலோட்சனி பேச்சும், செயலும் மதுர யாழினிக்கு புதிய தெம்பைக் கொடுத்தது.

கொஞ்ச நேரத்தில் அங்கே வந்த சௌந்தர்யாவைப் பார்வையால் அளந்தாள் யாழினி. அவரின் வயது கிட்டத்தட்ட ஐம்பது இருக்குமென்று மனதினுள் கணக்கிட்டாள்.

இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்த மீனாவோ, “இந்த இடத்தைச் சுற்றிக் காட்டிவிடு. இந்த பொண்ணு நிர்வாகம் படிச்சிருந்தாலும், இந்த தொழில் பற்றி தெரியாதாம். நீ கொஞ்சம் கூடவே இருந்து கைடு பண்ணு” என்று கூற, அவரும் சரியென்று தலையசைத்தார்.

“சரிம்மா முதலில் நிறுவனத்தைச் சுற்றிப் பாரு!” என்று கூற, அவரின் சம்மதத்தை மறைமுகமாகத் தெரிவிக்க, அதைப் புரிந்துகொண்ட யாழினியின் முகம் பூவாய் மலர்ந்தது.

தேயிலைப் பயிர்களின் விளைச்சல், அதை பராமரிக்கும் முறை. தேயிலையைத் டீத்தூளாக மாற்றும் முறை என்று அனைத்தைப் பற்றியும் கூறியபடி, அந்த நிறுவனத்தை சுற்றிக் காட்டினார் சௌந்தர்யா.

அடுத்த சில தினங்களில் ரிஜிஸ்டரேஷன் வைக்கலாம் என்று கூற, “இல்ல முதலில் நிர்வாக கணக்குவழக்குகளை சரிபார்க்கலாம் மேடம்” மீனாலோட்சனி அதற்கும் சம்மதம் சொன்னார்.

அதற்கு சரியாக ஒரு வாரம் எடுத்துக் கொண்ட யாழினி, அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள முடிவெடுத்தாள். சரியாக கீர்த்தனாவின் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பே எஸ்டேட் மற்றும் டீ பேக்டரியை ரிஜிஸ்டரேசன் முடிந்தது.

“நீ மென்மேலும் வளர என் வாழ்த்துகள்” என்ற மீனாலோட்சனி சந்தோசமாக அவளிடம் விடைபெற்றார். இந்த விஷயம் எதுவுமே அவர்களைச் சுற்றி இருக்கின்ற மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது.   அந்த உண்மை யாதவிற்கு தெரிய வரும்போது, யாழினியின் நிலை?!

Leave a Reply

error: Content is protected !!