ஜீவநதியாக நீ…
அத்தியாயம் – 28
ரவி கூறி சென்ற வார்த்தைகளில் கீதா அதிர்ச்சியோடு அமர்ந்துவிட்டாள். அவளுள் பிடிவாதம் எழுந்தது. ‘அண்ணன் விஷயத்தில், தாரிணி விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை, நிச்சயம் ஷங்கர் விஷயத்தில் எனக்கு இருக்காது. நான் அப்படி இருக்கவும் மாட்டேன்.’ அவள் மறுப்பாக தலையசைக்க, அவள் தோள்களை தொட்டான் ரவி.
அவள் எழுந்து கொள்ள, “கீது, பார்த்துக்கலாம் விடு. ஷங்கர் எதுவும் சொல்லவே இல்லை. அதுக்குள்ளே நாமளே ஏன் கற்பனை பண்ணனும்?” ரவி கேட்க, ‘காதலால் நம் வீட்டில் இருக்கும் இழப்புகள் அப்படி…’ என்ற எண்ணம் வந்தாலும், ‘ரவி சொல்வதும் சரி தான்’ என்ற எண்ணம் தோன்ற கீதாவும் தலையசைத்தாள்.
“அப்பா… அப்பா….” என்று அங்கு வந்தாள் யாழினி. “என்ன யாழு?’ என்று ரவி கேட்க, “உஷ்…” என்று தன் வாயில் கை வைத்து கண்களை உருட்டினாள் யாழினி. ரவியையும், கீதாவையும் அவள் பின்னே வரும்படி செய்கை காட்டி, அவர்களை தன் அறைக்குள் அழைத்து சென்றாள். அங்கு ஜன்னல் வழியாக அவள் கைகாட்ட, அங்கு ஷங்கர் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
“ஹீ… ஹி…ஹீ… இப்படித்தான் அண்ணா சிரிக்குறான். அவன் கால் தரையில் கோலம் போடுது பாருங்க. அப்படியே நெளியாறான் பாருங்க அப்பா. அப்பா, நான் உறுதியா சொல்றேன். அவன் எனக்கு அண்ணியை உஷார் பண்ணிடாண்ன்னு தான் நான் நினைக்குறேன். அப்பா, அவனை கூப்பிட்டு கேளுங்க அப்பா. அவன் யார் கிட்ட பேசுறான்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.” யாழினி பிடிவாதமாக கூற, “உங்க அண்ணன் இருக்கிற வேகத்தை பார்த்தால் அந்த பெண்ணை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவானு நினைக்குறேன்.” ரவி கூற, “இரண்டு பேரும் அவங்கவங்க வேலையை பார்க்க போறீங்களா?” கீதா ஆணையாக கூறிவிட யாழினி முகத்தை சுளித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்ப தயாரானாள்.
ஷங்கர், அலைபேசியில் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்க, “ஷங்கர், எனக்கு காலேஜ்க்கு லேட்டாகிரும். நான் வைக்கவா?” சத்யா எதிர்முனையில் கேட்க, ‘ஐயோ, நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லவே இல்லையே.’ ஷங்கர் சுதாரித்துக் கொண்டான்.
“சத்யா, இன்னைக்கு நான் சாயங்காலம் உன்னை பார்க்க வரேன். கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கோ.” அவன் விஷயத்தை கூற, “உங்க காலேஜ் ப்ராஜெக்ட் விஷயமா? நம்ம காலேஜில் மீட் பண்றோமா?” சத்யா ஆர்வமாக கேட்க, “காலேஜில் மீட் பண்ணுவோம். ஆனால், அதுக்கு அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.” என்று ஷங்கர் கூற, “அது என்ன சர்ப்ரைஸ்?” என்று சத்யா கேட்க, “சொல்லிட்டா அது எப்படி சர்ப்ரைஸ் ஆகும்?” ஷங்கர் அதிபுத்திசாலியாக கேட்க, “ஷங்கர், நீங்க என்னை வீட்டில் மாட்டிவிடாம இருக்க மாடீங்க போல?” அவள் குரல் சிணுங்கியது.
“உனக்கு இன்னைக்கு சாயங்காலம் நேரம் இருக்கு தானே சத்யா?” அவன் தன் காரியத்தில் கண்ணாக கேட்க, “அதெல்லாம் இருக்கு.” அவள் கூற, “அப்ப நாம பார்ப்போம். யார்கிட்டயும் மாட்டிக்க மாட்ட. நானே எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறேன்” ஷங்கர் கெத்தாக கூறிவிட்டு அலைபேசி பேச்சை முடித்தான். அப்பொழுது அவன் அருகே வந்தார் ஷண்முகம். “என் பேரன் யார் கிட்ட பேசிகிட்டு இருக்கான்?” அவர் கேட்க, “தாத்தா, ஃபிரெண்ட். இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வராங்க” கூறிவிட்டு மாயமாக மறைந்துவிட்டான். தாத்தாவிடம் முழு விஷயத்தை கூற அவனுள் அச்சம்.
தன் தாயிடம் சென்று, “அம்மா, என் ஃபிரெண்ட் இன்னைக்கு வராங்க” கூறிவிட்டு சீட்டியடித்தபடி, தன் அறைக்குள் சென்று வேகவேகமாக தன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.
***
சத்யா, கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். ஜீவாவும், வருணும் அவளிடம் இயல்பாக பேச, தாரிணி எதுவும் பேசாமல் அவளுக்கு உணவு பரிமாறினாள். “அம்மா” அவள் கைகளை பிடித்தாள் சத்யா. “என்ன சத்யா?” தாரிணி கேட்க, “அம்மா, நான் எந்த தப்பும் பண்ணலை. தப்பும் பண்ண மாட்டேன்.” அவள் கூற,
“எனக்கு என் பொண்ணை பத்தி தெரியும். ஆனால், உன் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் வந்திற கூடாதுனு நினைக்குறேன் சத்யா. அந்த பயம் தான். உங்க அப்பா மாதிரி ஒரு நல்ல கணவர் இருந்தும், நான் செய்த தப்புக்களால் என் வாழ்க்கை சரி இல்லை. அந்த கஷ்டம் உனக்கு வந்திற கூடாதுன்னு தான் நான் பயப்படுறேன்.” தாரிணியின் கண்கள் கலங்க, “அம்மா, நான் உங்க கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்.” அவள் எழுந்து தன் தாயின் கழுத்தை கட்டிக்கொள்ள, “காலேஜ்க்கு கிளம்பு சத்யா” தாரிணி அவள் நெற்றியில் இதழ் பதித்து கூற, அவளும் இன்முகத்தோடு கிளம்பினாள்.
ஜீவா அவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டிருக்க, “அப்ப்பா, இந்த வீடு ரொம்ப மோசம். நேத்து உங்க எல்லாருக்கும் டின்னருக்கு பாஸ்தா செய்து கொடுத்தது நான். கட்டுப்பட்டியா இருக்கிறது நான். ஆனால், கொஞ்சலும் செல்லமும் மட்டும் அவளுக்கு” என்று வருண் உரிமையோடு செல்லமாக கோபித்து கொள்ள, “அது ஆண்கள் வாங்கி வந்த வரம் மகனே” என்று ஜீவா பெருங்குரலில் சிரிக்க, “உண்மை தான் அப்பா” வருணும் தன் தந்தையோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்.
“உங்க இரண்டு பேருக்கும் வேற வேலை இல்லை. எனக்கும் என் மகளுக்கும் ஆயிரம் இருக்கும். நீங்க உங்க வேலையை பாருங்க” தாரிணி கண்டிப்போடு கூற, மீண்டும் அங்கு சிரிப்பலை பரவியது. ‘அப்பாவும் பையனும் சேர்ந்துட்டா நாம அவ்வுளவு தான்.’ தாரிணி அவள் கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தாள்.
***
அன்று மாலை,
சத்யா கல்லூரி வாசலில் ஷங்கருக்காக காத்திருந்தாள்.
“சத்யா…” அழைப்பினோடு அவள் அருகே வந்தான் ஷங்கர். சத்யா அவனை கூர்மையாக பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த காதலை அவள் மனம் படம் பிடித்து கொண்டது. ஆனால், அவன் முகத்தில் தெரிந்த உற்சாகம், உரிமை வழக்கத்தை விட அவளுக்கு அதிகப்படியாக இருந்தது.
“என்ன ஷங்கர், ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது?” அவள் கேட்க, “அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது?” அவன் இன்னும் பெரிதாக புன்னகைக்க, “அப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?” அவள் கேள்வியாக நிறுத்த, “எஸ்… உனக்கு ஒரு சர்ப்ரைஸ். வா என் கூட.” அவன் உரிமையாக அழைக்க, “எங்க?” அவள் கேள்வியோடு புருவத்தை உயர்த்தினாள்.
“என் மேல நம்பிக்கை இல்லையா? எங்க என்ன ஏதுன்னு கேட்டுட்டு தான் வருவியா?” அவன் குரலில் கொஞ்சம் கோபம். “நான் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்கேனா இல்லையாங்கிறது இரண்டாவது விஷயம். ஆனால், என் அம்மா அப்பா என் மேல் நம்பிக்கை வச்சிருக்காங்கறது முதல் விஷயம். நான், அவங்க கிட்ட சொல்லாம எப்படி வர முடியும்?” அவள் புன்னகையோடு கேட்க, அவள் வாதம் அவனுக்கு பிடித்திருந்தது.
“சரி, உன்னை வேற எங்கையும் கூட்டிகிட்டு போகலை. என் வீட்டுக்கு தான் கூட்டிகிட்டு போறேன். ஷண்முகம் அண்ட் ரவி இண்டஸ்ட்ரிஸோட வீட்டுக்கு தான் போறேன்னு உங்க வீட்டில் சொல்லு.” அவன் பெருமிதத்தோடு கூற, “நீங்க என்னை பத்தி கேட்கவே இல்லையே ஷங்கர்?” அவள் கேட்க, “நீ தானே எனக்கு பழக்கம். உங்க குடும்பம் இல்லையே? அதெல்லாம் நான் அப்புறம் தெரிஞ்சிக்குறேன். இன்னைக்கு என் ஃபிரெண்டை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்கேன். என் அம்மாவும், அப்பாவும் காத்துகிட்டு இருப்பாங்க. நீ உங்க வீட்டில் சொல்லிட்டு வா” அவன் அவளை அவசரப்படுத்தினான். அவன், ‘ஃபிரெண்ட்’ என்று கூறியதை அவள் மனதில் குறித்துக் கொண்டாள்.
“நான் எங்க அம்மா அப்பா கிட்ட கேட்குறேன். அவங்க சரின்னு சொன்னால் தான் வருவேன்.” அவள் உறுதியாக கூறிவிட்டு, தன் தாய்க்கு அலைபேசியில் அழைத்தாள். தாரிணியின் அலைபேசி, ‘ஸ்விட்ச் ஆஃப்.’ என்று வந்தது. தாய்க்கு விஷயத்தை குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு, தன் தந்தைக்கு அழைத்தாள்.
ஜீவா அவள் அழைப்பை உடனடியாக ஏற்க, “அப்பா, ஷண்முகம் அண்ட் ரவி இண்டஸ்ட்ரிஸ் ஓனர் அப்புறம் எம்.டீ. ஷங்கர் எனக்கு ஃபிரெண்ட். என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுறாங்க. நான் போகட்டுமா அப்பா?” சத்யா கேள்வியாக நிறுத்த, ஜீவாவின் இதயம் நின்று துடித்தது.
‘தாரிணிக்கு மட்டும் விஷயம் தெரிந்தது அவ்வுளவு தான்’ அவன் மூச்சை விட மறந்து நிற்க, “அப்பா, போயிட்டு வரட்டுமா?” சத்யாவின் குரலில் இருந்த ஆசையும், ஏக்கத்தையும் ஜீவா குறித்துக்கொண்டான். ‘ஆக, சத்யா தினமும் பேசுறது ஷங்கர் கிட்ட தானா? கிழிந்தது செய்தி…’ அவன் சிந்தை தன் மகளுக்கு பதில் கூறாமல், எங்கெங்கோ செல்ல, “அப்பா…” மீண்டும் ஒலித்தது சத்யாவின் குரல்.
“அம்மா கிட்ட கேட்டியா சத்யா?” அவன் கேட்க, “அம்மாவுக்கு தான் முதலில் கூப்பிட்டேன். அம்மா மொபைல் சுவிட்ச் ஆஃப்” சத்யாவின் குரல் அழுது வடிய, எல்லாம் ஏதோ காரணமாகத் தான் நடப்பது போல் தோன்ற, “போயிட்டு வா சத்யா” என்றான் ஜீவா. “தேங்க்ஸ் அப்பா… தாங்க்யூ ஸோ மச்” அவள் தன் தந்தைக்கு நன்றி கூறி, ஷங்கரோடு அவன் வீட்டிற்கு கிளம்பினாள். ஷங்கர் அவனோடு ஏதோ பேச ஆரம்பிக்க, சத்யாவின் தோழி அழைக்க, அவள் தன் அலைபேசியை சைலென்டிற்கு மாற்றி விட்டு ஷங்கரோடு பேசியபடி அவர்கள் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.
***
வீட்டுக்கு வந்த வருண், தன் தங்கையை காணாமல், அவளுக்கு அலைபேசியில் அழைத்தான். ஆனால், சத்யாவிடமிருந்து பதிலில்லை.
அப்பொழுது தான் தாரிணி உள்ளே நுழைந்தாள்.
“அம்மா… அம்மா… தங்கையை காணும்” அவன் குரலில் பதட்டம்.
மகனின் பதட்டம் தாயை தொற்றி கொண்டது. “வீடு முழுக்க தேடிட்டேன். அவ எங்கையும் இல்லை. ஃபோன் பண்ணேன் எடுக்கலை ” மகனின் பதட்டத்தில், அன்று காலை நடந்த சம்பவமும் அவள் கண்முன் தோன்ற அவள் உறைந்து நின்றாள்.
தன் அலைபேசியை பார்த்தாள். அது உயிர்ப்பில்லாமல் இருக்க, “மீட்டிங் அப்ப சுவிட்ச் ஆஃப் பண்ணேன்.” அவள் அதை உயிர்ப்பிக்க, சத்யா அனுப்பிய குறுஞ்செய்தி வந்தது.
அவள் பார்த்த குறுஞ்செய்தியில் அவள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க, அவள் கண்கள் கண்ணீரை சொரிய மறந்து, அவள் ஸ்தம்பித்து நிற்க, அவன் அங்கு வந்தான் அழுத்தமான காலடிகளோடு.
‘எத்தனையோ கஷ்டங்களையும், சவால்களையும், அவமானங்களையும் தாண்டி வந்த பாதை என் பாதை’ என்பது போல் அவன் ஒவ்வொரு காலடியும் அழுத்தத்தை காட்டியது.
பலம் இழந்த அவள் கால்களுக்கு எப்படி தான் அத்தனை வழு வந்ததோ? அவன் காலடி ஓசையில், உறைந்து நின்ற அவள் அவன் மார்பில் சாய்ந்து கதறினாள். அவன் அருகாமையில், அவள் தன்னிலையை உணர முயற்சித்தாள்.
அவன் தன் விரல்களால் அவள் தோள்பட்டையை அழுத்த, சிவந்த அவள் மேனி அவன் விரல் தடத்தை ஏந்திக்கொண்டு நின்றது.
காதல் பேசிய அவன் விரல்கள், பல நேரங்களில் அவள் தேகத்தை வருடி கணவன் என்னும் உரிமையை அவளிடம் நிலை நாட்டிய அவன் கைகள், உனக்கு நான் இருக்கிறேன் என்று அவள் கை பிடித்த அவன் கரங்கள், இன்று வலிப்பது போல் அவளை அழுத்தி, அவன் பாரத்தையும் அவள் மேல் இறக்கி, ‘நான் இருக்கிறேன். ஒன்றும் ஆகாது.’ என்று அவளுக்கு நம்பிக்கை ஊட்டியது. தாரிணியின் செய்கை இப்படித்தான் இருக்கும் என்றறிந்தவன் போல் நிதானம் காத்தான்.
‘ஆம்… ஒன்றும் ஆகாது. எதுவும் தப்பா நடக்காது.’ அவன் அருகாமையில் அவள் மனம் நிம்மதி அடைந்தாலும், அவள் சிந்தை அலைப்புற்று, அவள் அவன் முகம் பார்த்து தன் விழிகளை விரித்தாள் பாவை.
தன் மனையாளின் சிந்தையை அறிந்தவன் போல், அவன் மறுப்பாக கண்களை அங்குமிங்கும் அசைக்க, ‘உன் கட்டளைக்கு இணங்குபவளும் நானே! உன் கட்டளையை மீறுபவளும் நானே’ என்பது போல் மனம் அவன் பக்கம் சரிந்து, அவள் சிந்தை தன்னவனின் கட்டளையை மீறி பின்னோக்கி சென்று, பழைய நினைவுகள் மேலே எழும்ப எழும்ப அவள் மயங்கி சரிந்தாள்.
“வருண் தண்ணீர் கொண்டு வா…” என்று ஜீவா கூற, வருண் தண்ணீரை எடுத்து வர, “தாரிணி… தாரிணி….” அவள் கன்னத்தை தட்டினான். அவன் தண்ணீரை தெளிக்கவும் அவள் விழித்து கொண்டாள். மயங்கினாலும், அவள் சிந்தை அனைத்தையும் அசைபோட்டே மீண்டது.
“பழசை நினைக்காத நினைக்காதான்னு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்?” அவன் குரலில் கோபம் கொப்பளிக்க, “சத்யா யார் கிட்ட கேட்டுட்டு அவங்க வீட்டுக்கு போனா?” தாரிணி கோபம் கொண்டு கத்தினாள்.
“வருண், நான் ஆபிஸ் வேலைகள் சிலதை அப்படியே வச்சிட்டு வந்தேன். நீ லேப்டாப்பில் கனெக்ட் பண்ணி அதை கொஞ்சம் முடிச்சிடேன்.” ஜீவா, சாதுரியமாக தன் மகனை அங்கிருந்து அனுப்பினான்.
“தாரிணி, சத்யா என் கிட்ட கேட்டுட்டு தான் போனா” ஜீவா அழுத்தமாக கூற, “ஏன் ஜீவா இப்படி பண்ற? அந்த வீட்டின் சவகாசம் வேண்டாமுன்னு தானே நாம இத்தனை வருஷம் இருக்கிறோம். ஒரே ஊரில் வாழ்ந்து கூட உன் அம்மா அப்பாவையும், என் அம்மா அப்பாவையும் நம் பிள்ளைகள் பார்க்காம தானே வளருறாங்க. போதும் ஜீவா. என்னால், நீ பட்ட கஷ்டமும் போதும். அவமானமும் போதும். அதை என் பிள்ளைகளும் படணுமா? என் பிள்ளைகளுக்கு கஷ்டம் மட்டும் போதுமே அவமானம் வேண்டாமே ஜீவா. அவளை ஏன் ஜீவா அங்க அனுப்பின?” அவள் தலையில் அடித்து கொண்டு கதறினாள்.
“தாரிணி” அவன் குரலில் கண்டிப்பு இருக்க, “அவளை போக வேண்டாமுன்னு சொல்லுங்க. கூப்பிட்டு வர சொல்லுங்க” தாரிணி உணர்ச்சிவசப்பட்டு பதறினாள். “இப்ப எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற?” ஜீவா நிதானமாக கேட்க, “ஜீவா நீ எப்படி டென்ஷன் இல்லாம இருக்கன்னு தான் தெரியலை.” அவள் கேட்க, அவன் அழுத்தமாக நின்றான்.
“இப்ப ஷங்கர் நம்ம பெண்ணை லவ் பன்னறேன்னு சொல்லி அறிமுகப்படுத்தினா என்ன ஆகுமுன்னு யோசிசீங்களா? எங்க அப்பா ருத்ரதாண்டவம் ஆடிருவாங்க. அதுவும் நம்ம பொண்ணுன்னு தெரிஞ்சா, நம்ம வளர்ப்பை குறை சொல்ல மாட்டாங்களா? நம்ம பெண்ணை நாமளே அங்க அனுப்பி வச்ச மாதிரி பேச மாட்டாங்களா?” அவள் அவன் மார்பில் சாய்ந்தே கதறினாள்.
“ஜீவா, நாம சேர்ந்து தானே எப்பவும் முடிவு எடுப்போமுன்னு சொல்லுவியே ஜீவா. சத்யாவை என் வீட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி என்கிட்டே ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்கு தோணலையா ஜீவா?” அவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து கேட்க, “நான், நம்ம பெண்ணை என் தங்கை மகனோட என் தங்கை வீட்டுக்கு அனுப்பிவச்சிருக்கேன். என் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வராது. வந்தாலும், அதை என் தங்கை பார்த்துப்பா. அப்படி இல்லைனா, அதை என் பெண்ணே பார்த்துப்பா” ஜீவாவின் குரலில் இருந்த அழுத்தமும் உறுதியும் தாரிணியை அசைத்து பார்த்தது.
சட்டென்று சுதாரித்து கொண்டவள், “ஒரு மண்ணும் நடக்காது ஜீவா. என்னால், நீ அவமான பட்ட மாதிரி, அசிங்க பட்ட மாதிரி இன்னைக்கு என் பெண்ணும் அசிங்க படுவா.” தாரிணி ஆவேசமாக கூற, “இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? இப்படியே வாழ சொல்றியா? நமக்கு யாருமில்லை யாருமில்லைன்னு நீ தினம் தினம் மருகுற. உன் உடம்புக்கு ஏதாவது வந்திருமுன்னு எனக்கு பயமா இருக்கு. அங்க கீதாவும் என்கிட்டே இந்த பிரச்சனைக்கு முடிவே கிடையாதானு மருகுறா.” ஜீவா எங்கோ பார்த்தபடி கூற, “அதுக்கு என் பொண்ணு பணயக்காய்யா?” தாரிணி அவனிடம் மல்லுக்கு நின்றாள்.
“விஷயம் சிக்கல் தான். என்னவேணுமினாலும் நடக்கலாம். இத்தனை வருஷம் யாரும் சந்திக்கலை. பிரச்சனை வேண்டாமுன்னு நாமளும் ஒதுங்கி நின்னுட்டோம். குற்ற உணர்ச்சி, பாசம், வாக்குன்னு இத்தனை வருஷம் நம்மளை பல விஷயங்கள் கட்டி போட்டிருச்சு. இன்னைக்கு தானா சந்தர்ப்பம் அமையும் பொழுது அதை, விட எனக்கு மனசு வரலை. தாத்தாவும் பேத்தியும் சந்திக்கட்டுமே. உன் அண்ணனுக்கும் என் தங்கைக்கும் சத்யாவை தெரியும். சத்யாவுக்கு தான் அவங்க யாருனு தெரியாது. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு” ஜீவா ‘என்ன நடக்குமென்று பார்த்து விடலாம்’ என்பது போல கூற,
“நம்ம பொண்ணுன்னு அப்பாவுக்கு தெரிஞ்சிருச்சுன்னா?” தாரிணி கண்களை விரிக்க, “பேத்தின்னு ஏத்துக்கலாம். இல்லை, கண்ணாபின்னானு திட்டலாம்.” ஜீவா கூறிமுடிக்க, தாரிணி மீண்டும் தலையை பிடித்து கொண்டு அமர, எங்கு மீண்டும் தாரிணி மயங்கிவிடுவாளோ என்ற அச்சம் அவனுள் கிளம்பியது.
“தாரிணி, ஏன் உங்க வீட்டை சொன்னாலே இப்படி அலறுற?” அவன் அவளை தாங்கி பிடித்து கேட்க,”என் அனுபவம் அப்படி ஜீவா. எனக்கு பயமா இருக்கு. என்னை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போறியா?” அவள் படபடப்போடு கேட்க
இத்தனை வருடங்களில் அவன் கேட்டும் அவள் மறுத்த விஷயத்தை அவளாகவே கேட்க அவன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.
சில நொடிகள் சிந்தித்தான். “வேண்டாம் தாரிணி. நாம இப்ப அங்க போறது அவ்வளவு சரியில்லை. சத்யா யாருன்னு உங்க அப்பாவுக்கு தெரியாது. அது அப்படியே இருக்கலாம். தெரிந்தும் போகலாம். ஆனால், நாம அங்க இப்பா போனால் பிரச்சனை தான். பெரிய பிரச்சனை வரும். நாம இப்ப அங்க போக வேண்டாம்” ஜீவா முடிவாக கூற,
“ஜீவா, நீ என்னை பல தடவை எங்க வீட்டுக்கு போய் பேசிப் பார்ப்போமுன்னு கூப்பிட்டிருக்க. எனக்கும் என் வீட்டுக்கு போகணும்னு அவ்வளவு ஆசை உண்டு. என் அம்மா மடியில் படுக்கணும். நான் வயிற்றில் குழந்தையோட இருக்கும் பொழுது என் அம்மா கையால் ஒரு உருண்டை சாப்பிடணும். என் அப்பா காலில் விழுதாவது என்னை ஏத்துக்கோகங்கனு கதறணும்னு. ஆயிரம் ஆசைகள் உண்டு ஜீவா. இது உனக்கும் தெரியும். இதை எல்லாம் என்னை சோர்வடைய விடாம நீ என்னை பார்த்துகிட்டே ஜீவா. ஆனால், என் ஆசைகள் எல்லாம் ஆசைகள் தான்.” அவள் மூச்சு உள்ளிழுத்து தன் கண்ணீரை அடக்க முயற்சித்தாள்.
“எனக்கு என் ஆசைகளை விட, நீ முக்கியம் ஜீவா. நான் எனக்காக உன் வாழ்க்கையையே திசை திருப்பிட்டேன். உன்னை யாரும் இல்லாத அனாதையாகிட்டேன். இனி உனக்கு அவமானமுன்னு ஒன்னு வரவே கூடாது. நீ அவமான பட கூடாதுன்னு தான் நான் என் வீட்டுக்கு போகவே வேண்டாமுன்னு சொல்லிட்டேன் ஜீவா. ஆனால், இப்ப அங்க போயிருக்கிறது என் பொண்ணு ஜீவா. என்னை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போ ஜீவா. என் பெண்ணை யாரும் அசிங்கப்படுத்தி அவமான படுத்தறதுக்குள்ள நான் அவளை கூட்டிகிட்டு வந்துடறேன் ஜீவா. என்னை மன்னிச்சிரு ஜீவா. எனக்கு உன்னை விட, என்னை விட நம்ம பொண்ணு முக்கியம் ஜீவா. சத்யா ஒரு வார்த்தை தாங்க மாட்டா ஜீவா.” அவள் அவன் முன் மண்டியிட்டு கண்ணீர் சிந்த, “தாரிணி…” அவன் அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.
“என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவியா ஜீவா?” அவள் கெஞ்ச, “என்னம்மா இது?” அவன் கேட்க, “நான் எங்க வீட்டுக்கு போகணும். திரும்பவும், உன்னை நான் அவமானப்பட வைக்க போறேன். காயப்படுத்த போறேன்.” அவள் இயலாமையோடு விம்ம, ‘என் காதல் மனைவிக்காக நான் எத்தகைய அவமானத்தையும் தாங்குவேன்’ என்பது போல் அவன் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
நடக்கும் சம்பத்தில் வேர் அறுந்த கொடி போல் அவள் அவன் மீது சாய, ‘எத்தனையோ வலிகளையும் அவமானத்தையும் சந்தித்திருக்கிறோம். இதையும் தாங்குவோம்’ என்பது போல் அவன் அவளை தாங்கி கொண்டான்.
தாரிணியின் வேண்டுதலுக்கு ஜீவா இசைந்து கொடுப்பானா?
நதி பாயும்…