Kalangalil aval vasantham 31
Kalangalil aval vasantham 31
அந்த நட்சத்திர விடுதி, ஆடம்பரத்தில் குளித்திருந்தது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அடி. நடுநாயகமாக விடுதி. சுற்றிலும் நெருக்கமான பச்சையம். அண்டர்கிரௌண்ட் பார்க்கிங்கோடு முன்னாலும் இருந்தது பார்க்கிங் ஏரியா. கிண்டியின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, அந்த அரண்மனை. இதமான இரவு நேரத்தில், ஸ்பாட் லைட், ஃபோகஸ் லைட் என்று மின்னிக் கொண்டிருந்தது. நின்றிருந்தவை அனைத்தும் உயர்ரக வெளிநாட்டுக் கார்கள்.
கிரிக்கெட் புக்கீக்களுள் ஒருவனான ராகேஷ் வரசொல்லியிருந்தான். ஷான் கூறிய அமௌன்ட் அதிகமென்பதால், அவனுக்கு மேலே இருக்கும் புக்கீயை பார்ப்பதற்காக அந்த இடத்தை அவன் தான் தேர்ந்தெடுத்து இருந்தான். காரை நிறுத்தியவன், இறங்கி ரிசெப்ஷன் நோக்கிப் போனான், ஷான். உடன் ப்ரீத்தி.
தங்க நிற ஜார்ஜெட் சேலையில் சிற்பமாக அவனுடன் நடந்தாள். சேலை அவளது மெல்லிடையில் வழுக்கியபடி இருக்க, அவ்வப்போது அவனது பார்வை அவளை தழுவி மீண்டது. முடியை தளர பின்னி ஜாதிமல்லியை வழிய விட்டிருந்தாள். அந்த வாசனை வேறு அவனை மயக்கிக் கொண்டிருந்தது.
கண்களுக்கு மை. உதட்டுக்கு லிப்கிளாஸ். கழுத்தில் மெல்லிய சிறு செயின். ஒரு கையில் டைட்டன் ராகா, மெலிதாக! இன்னொரு கையில் மெல்லிய வளையல்கள் இரண்டு.
இன்றைய அவளது அலங்காரம் அவனுக்காக மட்டும் தான். தன்னை அலங்கரித்துக் கொள்ளும் போதே, அவன் பார்க்க வேண்டும் என்று தான் நினைத்தாள். முன்னெல்லாம் இப்படி நினைத்ததில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. ஒவ்வொன்றும் அவனுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்து கொள்ள தோன்றியது. ஏனோதானோவென போக அவளுக்கு விருப்பமில்லை.
அவனது காதல் பார்வையை ருசித்துப் பார்க்க ஆசை வந்தது!
ஷான் தனக்குள் எந்தளவு நிரம்பியிருக்கிறான் என்பதை லிப்ட்டுக்குள் அவன் இறங்கிய போது தான் உணர்ந்தாள்.
அவனின்றி ஓரணுவும் அசையாது அவளுக்கு என்பதற்கு செயல்முறை விளக்கம் கொடுத்திருந்தான் அவன்!
அதே நேரத்தில் ஷானை பொறுத்தவரை, செய்யப்போகும் வேலைக்கு, அவனது மனைவியாக நடிக்க தான் இந்த அலங்காரம் என்றாலும், உள்ளுக்குள் ஒரு மாதிரியாக சில்லென்ற உணர்வு!
இது உண்மையாக வேண்டுமென்ற எண்ணம் அவனுக்குள் ஏக்கமாக மாறிக் கொண்டிருந்தது!
ப்ரீத்திக்கோ வேறு மாதிரி!
காதலிக்கிறேன் என்று அவன் சொன்னபோதும் அவளுக்கு இப்படித் தோன்றவில்லை, காதலிக்கிறேன் என்று அவள் சொன்னபோதும் அவளுக்கு இப்படித் தோன்றவில்லை. ஆனால் இப்போது ஏதேதோ தோன்றியது. ஜீன்ஸ், டிஷர்ட்டில் இருந்தவனை அவ்வப்போது அவனை பார்வையால் கபளீகரம் செய்து கொண்டிருந்தாள்.
அவளது பார்வை மாறுபாட்டை கண்டுகொண்டவனுக்கு உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை! அவனது பார்வைகளை சந்தித்தப் போது அவளுக்குள் உள்ளுக்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறந்தது. அந்த பார்வை அவளை தீண்டிய போது, அவள் மொத்தமாக கொள்ளை போவது போலவும் இருந்தது.
புக் செய்த அறைக்கான கீகார்டை வாங்கிக் கொண்டு அறையை நோக்கிப் போக, அவளது கால்கள் பின்னிக் கொண்டன. மனதுக்குள் சிறு நடுக்கம்.
ராகேஷ் தான் அங்கு ரூம் புக் செய்து காத்திருக்குமாறு சொன்னான். அதனால் தான் அறையை பதிவு செய்ததும். ஆனால் இப்போது ஏதோ திருட்டுத்தனம் செய்வது போல அவளுக்கு தோன்றியது.
இருவருக்குமிடையில் மௌனம் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தது.
அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த சோபாவில் சரிந்தான் ஷான். நாளெல்லாம் அலைந்த சோர்வு வேறு!
ப்ரீத்திக்கு தான், உள்ளே நுழைய தயக்கமாக இருந்தது. சொர்க்கமாக காட்சியளித்த அறை, அவளை தழுவிய அவனது பார்வைகள். அவளது மனதுக்குள் புகுந்து கொண்ட கள்ளத்தனம் எல்லாம் சேர்ந்து அவளை ஏதோ செய்தது.
அவனுடன் தனித்து இருந்ததே இல்லை என்றெல்லாமில்லையே. அது எப்போதும் நடப்பதுதான். ஆனால் இது அவளை வேறு விதமாக அலைகழித்தது.
“உள்ள வா ப்ரீத்தி…” என்றவனின் குரலும் கிறங்கியிருந்தது.
அந்த ஏசிக் குளிரிலும் அவளுக்கு வியர்த்தது. தயக்கமாக அவள் உள்ளே நுழைய கதவு தானாக மூடிக் கொண்டது. ஆட்டோ லாக்.
அறைக்குள் கும்மென்ற ஜாதிமல்லி வாசனை. கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்து ரசித்தான். அவனுக்கு மிகவும் பிடித்த வாசனை. ப்ரீத்தியின் வாசனை!
மெளனமாக ஜன்னலருகே போய் நின்று கொண்டாள். அவனது முகத்தை பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை. இது போல அவள் உணர்ந்ததுமில்லை.
வெளியே தெரிந்த நிலவும் இரவும் அவளை குளிர செய்வதற்கு பதில் சூடாக்கியது. இது சரியில்லை என்று மூளை அவளை கட்டுப்படுத்தியது. ஆனால் மனதுக்குள் யாரோ ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தனர்.
அவனும் அதே நிலையில் தானிருந்தான். அதற்கு மேலும் பொறுமையாக அமர்ந்திருக்க முடியாமல், அவளை நோக்கி எழுந்து வந்தான்.
அந்த ஆளுயர கண்ணாடி ஜன்னலின் பின்னே இருந்த இரவு வானத்தில் கண்களை பதித்து நின்று கொண்டிருந்த ப்ரீத்தியின் பின்னே நெருக்கமாக நின்றான்.
அவனது மூச்சுக்காற்று அவளை தீண்டியது. அவனது உடற்வெப்பத்தை உணர்ந்தாள். ப்ரீத்தியின் கைகள் சில்லிட்டது. சற்று தள்ளி நிற்க முயன்றாள். அவளது முயற்சியை தடுத்தவன், மென்மையாக பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான். அந்த மென்மையில் பெரும் வன்மை ஒளிந்திருந்தது. அது வெளிவர நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
“ப்ரீத்தி…” அவளது காதில் கிசுகிசுத்தான்.
“ம்ஹ்ம்ம்…” அவளது பேச்சு சிறைபட்டிருந்தது.
“இன்னொரு தடவை டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா?” மீண்டும் கிசுகிசுத்தான்.
“ம்ஹூம்ம்ம்…”
“ஏன்?” என்றவன், அவளது பின் கழுத்தில் லேசாக முத்தமிட, அவளது தேகம் இன்னும் நடுங்கியது. அந்தரத்தில் மிதப்பது போல தோன்றியது. கால் விரல்களை ஊன்றி நிற்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. தேகம் சிலிர்க்க, அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
ஜாதிமல்லியின் வாசம் ஷானை கிறுகிறுக்க செய்தது. அந்த கிறக்கத்தில், தன்னை மறந்தான். அந்த நிமிடமே அவளை தன் வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல்… ஆசை… பேராசையாக மாறியது!
அவளை தன் முகம் நோக்கி மென்மையாக திருப்பியவன், அவளது முகத்தை நிமிர்த்தினான். ஆனால் அவளால் அவனது முகத்தை பார்க்க முடியவில்லை. கண்களை தாழ்த்திக் கொண்டாள். அவளது ஈரமான உதடுகள் அவனை முத்தமிட வாவென்று அழைத்தன. அவளது வெற்றிடையை வலக்கையால் இறுக்க, அவள் தேகம் நடுங்கியது. இடக்கையால் அவளது பின் கழுத்தை பற்றி தன்னை நோக்கி அவளது முகத்தை பற்றியிழுத்து,
“கிஸ் மீ…” என்றான்.
ஆனால் அவளால் பதில் கொடுக்க முடியவில்லை. முத்தமிடவும் தைரியமில்லை. உடலிலிருந்த சக்தி அனைத்தும் வடிந்து விட்டது போல தோன்றியது. கால்கள் தொய்ந்து போனது.
“ம்ஹூம்ம்ம்…” நிமிர்ந்து பார்க்காமல் மறுத்து தலையாட்டினாள்.
“கிஸ் மீ…” அவளது இடையை தன்னோடு இறுக்கியவன், அவளை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக்கி கேட்க, அவளது உதடுகள் நடுங்கியது. ரத்தமனைத்தும் முகத்தை நோக்கி வந்துவிட்டது போல தோன்றியது. முகச்சிவப்பை மறைக்க அவள் போராடினாள்.
“ம்ஹூம்ம்ம்ம்…”
அவளது அந்த வெட்கமும் நடுக்கமும் அவனை இன்னும் கிறங்க செய்தது.
அவளது முக வடிவை அளந்தவன், “ஷால் ஐ?” என்று கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
பார்வைகள் கௌவ்விக் கொண்டன. உடல் சிலிர்த்தது.
இருவருக்குமே அதுவொரு மாயநிலை!
அவனது மென்புன்னகை அவளை வசீகரித்தது, அவனுக்குள்ளே இழுத்துக் கொள்ளப் பார்த்தது. அவளையும் அறியாமல் முகம் சிவக்க, இதழோரத்தில் வெட்கப் புன்னகை மலர்ந்தது!
அவளது இடையை மென்மையாக வருடியவன், தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொள்ள, ப்ரீத்தியின் கண்கள் தானாக மூடிக் கொண்டன, நாணத்தில்!
‘கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல’ தானே!
அவளது முகத்தை இடக்கையால் ஏந்தி, அவன் முன்னிருந்த அந்த ஈர அதரங்களை கவ்விக் கொண்டான்.
முதல் முத்தம் தயக்கமாக… அடுத்தடுத்தது மயக்கமாக!
நெருங்கினான்… தள்ளிப் போனாள்!
அவன் தள்ளி நின்றான்… தானாக அணைத்துக் கொண்டாள் அவள்!
அவளை முழுவதுமாக விழுங்கிவிட முயன்றான் அவன். விருப்பமாக இசைந்து கொடுத்தாள் அவள்.
சித்தம் கலைத்த முத்தம்!
மென்மையாக ஆரம்பித்த அந்த முத்த யுத்தம், வன்மையாக மாறியது யாரால்? இருவருமே அறியவில்லை!
சிந்திய முத்தங்களை எல்லாம் எடுக்கவோ? கோர்க்கவோ?
அவன் சொன்ன அந்த மேஜிக்கல் முத்தம் என்பதன் அர்த்தத்தை அப்போதுதான் அறிந்து கொண்டாள் ப்ரீத்தி. ஒரு முத்தத்தில் கூட இவ்வளவு மென்மையும் வன்மையும் இருக்குமென்பதையும் அப்போதுதான் தெரிந்து கொண்டாள். அது உயிரை உறுக்கி உருவி வெளியே எடுக்குமொரு மந்திரம் என்பதை உணர துவங்கியவளை ஏதோவொரு அலையடித்து செல்வது போல தோன்றியது.
இத்தனை நாட்கள் பழகிய ஷான் இல்லை இவன் என்று கூறியது அவளது மனது!
இவன் வேறு! ஆள்மயக்கி!
அவனது காதல் வெள்ளத்தின் வேகம் தாளாமல் தள்ளாடினாள் பெண்!
அவனது பார்வை வெவ்வேறு அர்த்தத்தங்களை அவளுக்கு கற்பித்தது. தொடுகை ஏதேதோ உலகங்களுக்கு கூட்டிச் சென்றது.
“மயக்கறடி…” என்று ஜாதிமல்லியின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து தனக்குள் நிரப்பியபடி கிசுகிசுக்க, அவளது மனதுக்குள் மத்தளம் கொட்டியது.
“இப்ப மட்டும் என் கண்ல ஸ்பார்க் தெரியுதாக்கும்?” கிசுகிசுப்பாக உதட்டை சுளித்தபடி அவள் கேட்க, சுளிந்த உதட்டை அழுந்த பற்றியிழுத்து முத்தமிட்டவன்,
“அதான் பத்திகிச்சே…” அவளைப் போலவே கிசுகிசுத்தபடி, வெண்சங்குக் கழுத்தில் முத்தமிட, அவளது உடல் சிலிர்த்தது.
“இருக்கா இல்லையான்னு செக் பண்ணுன்னு சொல்ல வேண்டியது. ஆனா கேப் கிடைச்சா கெடா வெட்ட வேண்டியது…” என்றவளின் கை விரல்களை பற்றியவன், ஒவ்வொரு விரலையும் பற்றி முத்தமிட, தாள முடியாமல் தள்ளாடினாள்.
“இன்னும் வெட்டவே ஆரம்பிக்கலையே. வெட்டிறட்டா?” என்று கேட்டான் குறும் புன்னகையுடன்!
“ச்சீ…” என்றவள், அவனை தள்ளி விட, ‘கிர்ர்ர்ர்’ அறையின் அழைப்பு மணி அழைத்தது…
பூஜைவேளை கரடி!
சட்டென மாயவலை அறுபட்டது போல தோன்றியது இருவருக்கும்!
வந்த காரணம் என்ன? செய்து கொண்டிருந்த காரியம் என்ன?
முயன்று தன்னை மீட்டுக் கொண்டிருந்த ஷானை நிமிர்ந்தும் பார்க்கவில்லை ப்ரீத்தி. அவளால் சட்டென தன்னை மீட்டுக் கொள்ள முடியவில்லை. பாட்டிலிலிருந்த தண்ணீரை வாயில் கவிழ்த்துக் கொண்டாள். பாதி பாட்டிலை முடித்தவள், காபி டேபிளின் மேல் வைத்தாள்.
அழைப்பு மணி இன்னமொரு முறை அடித்தது.
உடைகளை சரிபார்த்துக் கொண்டான் ஷான்.
“சாரிய கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்க…” உரிமையாய் கூறியவன், கைகளால் தலையை அழுத்தமாக வாரிக் கொண்டான்.
உணர்வுகள் சற்று மட்டு பட்டதை போல தோன்றியது. லேசாக கலைந்திருந்த அவளது தலைமுடியை கொஞ்சம் சரி செய்து விட்டவன், அவளது கன்னத்தில் அவசரமாக அழுத்தமாக முத்தமிட்டான்.
அவள் வைத்திருந்த நீரை கொஞ்சமாக அருந்தி விட்டு, “ரெடியாகிக்க ப்ரீத்.” என்றவன், ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்தான். மனம் வசப்பட துவங்கியது. முகத்தை அழுத்தமாக துடைத்தவன், அவளை பார்த்து புன்னகைத்தபடி, முற்றிலுமாக மாறிப் போனான். தனது சட்டையில் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பை கேமராவை ஆன் செய்தபடி கதவை நோக்கி போனான்.
ப்ரீத்தி ஆழமாக மூச்சுக்களை இழுத்துவிட்டு தனது உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் அவளால் முடியவில்லை. புதியதாக தூண்டிவிடப்பட்ட உணர்வுகளை கட்டுப்படுத்த அவள் இன்னும் பழகவில்லை.
அவசரமாக கண்ணாடியை பார்த்து தன்னை சரி செய்து கொண்டவள், கைப்பையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்தாள். தேகத்தினுள் இன்னும் அவன் விட்டுச்சென்ற இன்ப அலைகள் மீதமிருந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் எதற்காக வந்தாள் என்ற நினைவு மழுங்கி விடும் போல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தாள் ப்ரீத்தி. முகமெங்கும் வெட்க பூரிப்பு!
அதற்குள் ஷான் கதவை திறக்க, ராகேஷ் நின்றிருந்தான். உடன் ஐம்பதுகளின் மத்தியிலிருந்த ஒருவர்.
“ஹலோ சர்…” சிரித்தபடி ராகேஷுக்கு கைக் கொடுத்தான் ஷான்.
“ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?” புன்னகையோடு ராகேஷ் கேட்க,
“இல்ல… ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் இருக்கும். வி வேர் ஜஸ்ட் ரிலாக்சிங்…” என்றவன், சோபாவை கைகாட்டினான்.
“இவர் தான் இந்த ஹோட்டல் ஒனர் ராஜ்குமார் ஹெக்டே.” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ராகேஷ்.
“ஹலோ சர். ஐ ம் அர்ஜுன். இன்வஸ்ட்டர்…” என்று கைக்கொடுக்க, அவரும் புன்னகையோடு அவனுக்குக் கை கொடுத்தார். “அன்ட் ஷீ இஸ் மை ஒய்ப்…” என்று அவளையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“வணக்கம் மேடம்.” கைகளை குவித்து வணக்கம் கூறினார் ஹெக்டே.”
பதிலுக்கு ப்ரீத்தியும் மரியாதையாக வணக்கத்தை தெரிவித்தபடி, தண்ணீர் பாட்டிலை அவர்களுக்கு கொடுக்க, யாருமறியாத நேரத்தில், அருகிலிருந்த டேபிளின் மேல் ஸ்பை கேமராவை ஒட்ட வைத்தாள்.
இருவருக்கும் பின்னால் வந்த ரூம் சர்விஸ் ஆட்கள், விதவிதமான மதுபானங்களை காபி டேபிளின் மீது வைத்தனர்.
“ஷால் ஐ செர்வ் இட் சர்…?” என்று கேட்டவர்களுக்கு,
“எஸ்…” என்றார் ஹெக்டே! ராகேஷுக்கும் ஹெக்டேவுக்கும் அவர்கள் எப்போதும் விரும்பும் பானத்தை ஊற்றிக் கொடுத்துவிட்டு, ஹெக்டேவை கேள்வியாய் பார்த்தனர், வந்த இருவரும்.
“வாட் ஈஸ் யுர்ஸ் அர்ஜுன்?” ஹெக்டே கேட்க,
“டூ யூ ஹேவ் போர்பன்?” என்று ஷான் கேட்க, ஹெக்டே ரூம் சர்விஸ் ஆட்களை பார்த்தார்.
“எஸ் சர்…” என்று அவர்களில் ஒருவர் கூற,
“ஒன் போர்பன், ஆன் தி ராக்ஸ்…” என்று ஷான் சொன்னதை கேட்டவர், போர்பன் எனப்படும் அந்த விஸ்கியை ஐஸ் கியூப்ஸ் போடப்பட்ட விஸ்கி க்ளாசில் ஊற்றி அவன் முன் வைத்து விட்டு நகர்ந்தார்கள்.
ப்ரீத்தி சற்று தள்ளியிருந்த கவுச்சில் அமர்ந்து கொண்டாள். இது போன்ற நேரங்களிலும் ஷானோடு இருந்திருக்கிறாள். பிசினஸ் பேசும் போதெல்லாம் எப்போதும் நடப்பதுதான் என்பதால் அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.
“உங்க மனைவிக்கு?” என்று ஹெக்டே சந்தேகமாய் இழுக்க,
“நோ… ஷீ வோன்ட்…” புன்னகைத்தபடி கூறினான். அவள் விரும்பினால் அதை அவன் தடுத்ததில்லை. ஆனால் எப்போதுமே ப்ரீத்தி மதுவகைகள் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை. விளையாட்டுக்கு, ‘உனக்கும் ஆர்டர் பண்ணட்டுமா?’ என்று அவன் கேட்டதுண்டு. அதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக தந்திருக்கிறாள். ஆனால் அதை காட்டிலும், அவர் மனைவி என்று விளித்தது தான் அவனது புன்னகைக்குக் காரணம் என்பதை அந்த மனிதர் அறிய மாட்டார்.
இது போன்ற இடங்களில் மது அருந்தாமல் இருந்தாலும் மரியாதையில்லை. அருந்தினால் வந்த காரியம் கெட்டுவிடக் கூடும். அதனால் சியர்ஸ் சொல்லியவன், நிதானமாக கொஞ்சமாக அருந்தினான்.
“அர்ஜுன், உங்களைப் பற்றி ராகேஷ் சொன்னார்.” என்று ஹெக்டே ஆரம்பித்தார். பதிலுக்கு புன்னகைத்தான் ஷான்.
“உங்க இன்வெஸ்ட்மென்ட் அதிகம் அர்ஜுன். ஐம்பது லட்சம் வரைக்கும் தான் நான் டீல் பண்றேன். அதுக்கு மேல போனா ஹெக்டே சர் தான் டீல் பண்ணுவார்…” ஷானுக்கு இன்னொரு முறை விளக்கினான் ராகேஷ்.
“ராகேஷ்…” என்று மிதமான குரலில் ஆரம்பித்தவன், “பணத்தை வச்சு விளையாடறது எனக்கு பெரிய விஷயமில்ல. ஆனா எனக்கு பெட்டிங்ல பெரிய அனுபவம் இல்ல. நானா விட்டேன்னா எவ்வளவு போனாலும் எனக்கு கவலை இல்ல. ஆனா சின்னதா கூட ஏமாறக் கூடாது. ஏமாற மாட்டேன்…” என்று கறாராக முடித்தவனை பார்த்து புன்னகைத்தார் ஹெக்டே.
“எங்க சர்கிள் சின்னது கிடையாது அர்ஜுன் சார். சின்ன ஆட்டோகாரர்ல இருந்து மினிஸ்டர்ஸ் வரைக்கும் இருக்காங்க. அதுக்கு காரணம், நம்ம நாணயம் தான். நீங்க ஒரு தடவை டீலிங் பண்ணுங்க. அப்புறம் பாருங்க…”
ஹெக்டே கூறியதை கேட்டவன் ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தினான்.
“மினிஸ்டர்ஸ் கூடவா?”
அவனது அந்த வியப்பான கேள்வி, ஹெக்டேவை ஊக்கியது.
“எஸ். தமிழ்நாடு மட்டுமில்ல. இந்தியா முழுக்க…” என்றவர், பலரது பெயர்களை கூற,
“வாவ்…” என்றான், அவரது கோப்பையில் மதுவை ஊற்றியவாறு!
“எல்லாருமே விவிஐபிங்க அர்ஜுன். சோ நீங்களும் தயங்காம புக் பண்ணுங்க. வந்தா மலை போனா…” என்று நிறுத்தியவர், சிரித்துக் கொண்டே, “ஹேர்…” என்றார்.
வாய்விட்டு சிரித்தான் ஷான் உடன் ராகேஷும் கேட்டுக் கொண்டான்.
“மேக்சிமம் எவ்வளவு பண்ணலாம்?” ஹெக்டேவை பார்த்து ஷான் கேட்க,
“எவ்வளவு வேண்ணா பண்ணலாம். நோ லிமிடேஷன்.” என்றார்.
“ஓகே. இப்போதைக்கு ஒரு அஞ்சு கோடி போடறேன். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அதிகப்படுத்திக்கலாம். சப்போஸ் வின் பண்ணா எவ்வளவு நாள்ல பணம் கிடைக்கும்?” என்றதும் அவரது கண்களில் மின்னல். ஐந்து கோடிக்கு அவர்களுக்கு கமிஷனே நல்ல அமௌன்ட்டாக வருமே என்ற சந்தோஷம் தான்.
“சின்ன அமௌன்ட்ன்னா உடனே செட்டில் பண்ணிடுவோம். கொஞ்சம் பெரிய அமௌன்ட்ன்னா இட் டேக்ஸ் சம் டைம். 2 வீக்ஸ் ல இருந்து 3 வீக்ஸ் வரைக்கும். ஆனா சியூரா செட்டில் பண்ணிருவோம்.” ஹெக்டே தெளிவாக கூறினார்.
“அமௌன்ட் கொடுக்கறது, வாங்கறது எல்லாம் உங்க கிட்ட தானா?”
“ம்ம்ம் எஸ். தேவைன்னா மெயின் புக்கி கிட்ட போகலாம்.”
“ம்ம்ம்… மெயின் புக்கீன்னா, நீங்க இல்லாமயா ஹெக்டே?” வியப்பாக கேட்டான்.
“எஸ் அர்ஜுன். அவர் மெயின். எல்லா ஊர்லயும் எங்களை மாதிரி புக்கீஸ் இருப்பாங்க. ஒரு ஊர்ல இருக்க அத்தனை பேரையும் மேனேஜ் பண்ணி அமௌன்ட் கலெக்ட் பண்ணி மெயின் புக்கிக்கு அனுப்பி விட ஒரு ஆள் இருப்பாங்க. மெயின் புக்கி கிட்ட தான் அத்தனை ஊரோட பணமும் வந்து சேரும். அவர் மூலமாத்தான் மொத்த டிரான்சாக்ஷனும் நடக்கும். நம்ம சர்கிள் மாதிரி இந்தியா முழுக்க, நிறைய சர்கிள்ஸ் இருக்கு அர்ஜுன். ஒவ்வொரு சர்கிளுக்கும் ஒவ்வொரு ஊர் கேப்பிடலா இருக்கும். மோஸ்ட்லி மும்பை இதுல முக்கியமான கேந்திரம். நம்ம சர்கிளுக்கு சென்னை தான் கேபிடல். மெயின் புக்கி இங்க இருந்து தான் ஆப்பரேட் ஆகறாங்க.”
பேச்சை வளர்த்தி, அவரை குடிக்க வைத்து, எப்படிஎப்படியோ பேசி, ஹெக்டே வாயால் பல உண்மைகளை கக்க வைத்தான்.
இதுதான் நடக்கிறது என்பதை தெளிவாக புரிய வைத்தார் ஹெக்டே, அவன் நிரந்திரமாக பெட் செய்வான் என்ற நம்பிக்கையில்!