Kalangalil aval vasantham 33

Kalangalil aval vasantham 33

ஒரு வாரமாக மூவரின் பேசிகளையும் அதாவது ரவி, சைலேஷ் மற்றும் சரண் ஆகியோரின் பேசிகளை ஹேக் செய்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் ஷான் மற்றும் ஆல்வின். ப்ரீத்தியும் கூடவே தான் இருந்தாள். மகேஷ், இந்த மூவரின் மொத்த வரலாற்றையும் தேடியெடுக்கும் பணிக்கு முடுக்கிவிடப்பட்டு இருந்தான். அவனது மொத்த படையையும் இறக்கியிருந்தான் இந்த பணியில்.

கிடைத்த தகவல்கள் அனைத்தும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டிருந்தன.

மூவரின் சொத்து விவரங்கள். அவர்களது அரசியல் தொடர்புகள். அவர்களது ஹவாலா பண பரிமாற்றங்கள். மற்ற பெட்டிங் குழுக்களோடு இருந்த தொடர்புகள் என வெளிப்பட்ட உண்மைகள் அனைத்தும் மலைக்க வைத்தன. அத்தனையும் பக்காவாக பதிவாகி கொண்டிருந்தன.

அதிலும் கருப்பு பணத்தை ரவி எப்படி ட்ரஸ்ட் அக்கௌன்ட்டுக்கு கொண்டு வந்து வெள்ளையாக்கினான் என்பதையும் அறிந்த போது அதிர்ந்து போனான் ஷான்!

அவர்களது ட்ரஸ்டிகளில் பல வகைகள் உண்டு.

பெண்களுக்கான ட்ரஸ்ட், குழந்தைகளின் கல்விக்கான ட்ரஸ்ட், ஊனமுற்றவர்களுக்கான ட்ரஸ்ட், விஞ்ஞான ஆராய்ச்சிக்களுக்கான ட்ரஸ்ட், கோவில் திருப்பணிகளுக்கான ட்ரஸ்ட் என்று பல உண்டு!

வரிஏய்ப்பு நடப்பது பெரும்பாலும் இது போன்ற ட்ரஸ்ட்களில் தான் என்பது ஷான் அறிந்தது தான். அவர்களே நிறைய நேரங்களில் அதை செய்திருக்கிறார்கள்! சிஎஸ்ஆர் எனப்படும் கார்பரேட் சோசியல் ரெஸ்பான்சிப்ளிட்டி பண்ட் என்ற ஓட்டை தானே இப்போது அத்தனை கார்பரேட்களின் தந்திரமாகி இருக்கிறது! அந்த சிஎஸ்ஆரை ஆடிட்டர் கணக்கில் கூட காட்டத் தேவையில்லையே.

கணக்கில் கொண்டு வரக்கூடாது எனப்படும் பணத்தை சிஎஸ்ஆருக்கு என செக் போட்டு, அதை எதாவது ட்ரஸ்ட்டுக்கு கொடுத்து விட்டால் போதும். அதை கணக்கில் கொண்டு வர தேவையில்லை. நிறுவனங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது இது. ஆனால் வரி கட்டாமல் தப்புவதற்காக தான் உபயோகமாகிறது.

பணத்தை வாங்கிய ட்ரஸ்ட் அந்த பணத்தில் கமிஷனை கழித்து விட்டு, அதை ஃபாரின் டைரக்ட் இன்வஸ்ட்மென்டாக அந்த நிறுவனத்துக்கு அனுப்பி விடும். இது தான் இப்போது நடந்து கொண்டிருப்பது.

அதே போல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக நடத்தப்படும் ட்ரஸ்ட்களுக்கு தரும் டொனேஷன்களுக்கும் நூறு சதவித வரிச்சலுகை உண்டு!

அதனால் இவையெல்லாம் அவனுக்குப் பெரியதாக தெரியவில்லை. அதை ரவி மற்றவர்களுக்காக கருப்பு பணத்தை வெள்ளையாக்க பெரிய அளவில் உபயோகப்படுத்தி இருக்கிறான் என்பது தான் அவனது கோபம். அதை எப்படி செய்தான் என்று ஆராயும் போது தான் கோவில் ட்ரஸ்ட் கண்ணில் பட்டது.

அனுமதி பெற்ற பொது கோவில்களுடைய ட்ரஸ்ட்கள் எவ்வளவு டொனேஷன் பெற்றாலும், அது நூறு சதவித வரி சலுகைக்கு உட்பட்டது. அதாவது அந்த ட்ரஸ்ட்கள் வாங்கிய பணத்துக்கு வரி கட்ட தேவையில்லை. அனுமதி பெற்ற கோவில்கள் என்பது பொது கோவில்கள். தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட இடங்களிலிருக்கும் கோவில்கள் இந்த வரைமுறையில் வராது. கோவில்கள் மட்டுமில்லை, சர்ச்சுகள், மசூதிகள், குருத்வாராக்கள் என அனைத்தும் இந்த வரிசலுகையில் வரும். அதில் உள்ள பெரிய ஓட்டை என்னவென்றால் அந்த டொனேஷனுக்கு பெயர் கூட தேவையில்லை என்பதுதான்! அதாவது அனானிமஸ் டொனேஷன்.

இப்போது அரசாங்கம் கொஞ்சம் இறுக்கிப் பிடித்திருந்தாலும், பெரும்பாலான ட்ரஸ்ட்கள் வரிஏய்ப்பு செய்வதற்கான களமாகவே இருந்திருக்கின்றன, இன்னமும் இருக்கின்றன.

“இந்த அளவு பண்றதுனால என்ன யூஸ் ஷான்? ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும் இந்த ரவி?” ப்ரீத்தி கேட்க,

“கமிஷன் அமௌன்ட் தான்டா. ஒரு ட்ரான்சாக்ஷன் பண்ணி தந்தா இருபதுலருந்து முப்பது பர்சன்ட் கமிஷன். ஒரு கோடி ரூபாய் பணத்தை வெள்ளையாக்க அவங்களுக்கு 20 ல இருந்து 30 லட்சம் கமிஷன். கோடிக்கணக்குல கருப்பு பணம் வெச்சுருக்க அரசியல்வாதிங்க, நிழல் உலக தாதாக்களுக்கு அந்த கமிஷன் பெரிய அமௌன்ட் கிடையாது. ஏன்னா அது அவங்க உழைச்சு வர்ற பணமில்ல.

அவங்களை பொறுத்தவரை அந்த பணம் வெள்ளையானா தான் அதை வெளிய எடுக்க முடியும். அதை வெள்ளையாக்க தான் அந்த கமிஷனை கொடுக்கறாங்க. ஒரு ப்ரோசீஜர் சொல்றேன் கேட்டுக்க…” என்றவன்,

“அந்த பணத்தை இங்க இருக்க டெம்பிள் ட்ரஸ்ட் எதாவதுல டொனேஷனா கொடுப்பாங்க… அந்த டெம்பிள் ட்ரஸ்ட் பொதுவான ஒரு கோவிலோட ட்ரஸ்ட்டா இருக்கணும். தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமானதா இருக்க கூடாதுன்னு தான் சட்டமிருக்கு. ஆனா அந்த பகுதியை யாரும் மதிக்கறது இல்ல…” என்று நிறுத்த,

“அதனால அந்த டொனேஷன் கொடுக்கறவங்களுக்கு என்ன யூஸ்?” புரியாமல் பார்த்தாள் ப்ரீத்தி.

“அப்புறம் தான் இருக்கு கதையே…!” என்று நிறுத்தியவன், “இங்க கமிஷன கழிச்சுட்டு அந்த பணத்தை ஹவாலா மூலமா வெளிநாட்டு ஏஜென்ட்ஸ்க்கு மாத்துவாங்க இந்த ட்ரஸ்ட் ஓனர்ஸ். அந்த ஏஜென்ட்ஸ் அங்கருந்து, இங்க இருக்க, சம்பந்தபட்டவங்க கம்பெனிக்கோ, இல்லைன்னா அவங்க பேப்பர் கம்பெனிக்கோ ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் மாதிரி அனுப்பி விடுவாங்க. இதுக்காகவே நிறைய நாட்டுல பேப்பர் கம்பெனிஸ் இருக்கும்.

பேப்பர் கம்பெனினா அது பேப்பர்ல மட்டும் தான் இருக்கும். நிஜத்துல இருக்காது. மொரிஷியஸ், பனாமா, கேமன் ஐலாண்ட்ஸ், வெர்ஜின் ஐலாண்ட்ஸ் மாதிரி நிறைய நாடுகள்ல சுத்தமா வரிங்க்றதே கிடையாது. பேப்பர் கம்பெனிஸ் மூலமா நீ எவ்வளவு வேணும்னாலும் ட்ரான்சாக்ஷன் பண்ணிக்கலாம். இப்ப கருப்பும் வெள்ளையாச்சு, அதை பிசினஸ்லயும் கொண்டு வந்தாச்சு… இங்க ட்ரஸ்ட்டுக்கும், அந்த ட்ரஸ்ட்ட காட்டி கொடுக்கற ப்ரோக்கருக்கும், ஹவாலா, ஃபாரின் பேப்பர் கம்பெனிக்காரன், இவங்க எல்லாருக்கும் தான் அந்த கமிஷன்…”

“ஓ மை கடவுளே…” என்று அதிர்ச்சியில் வாயை பிளந்தாள் ப்ரீத்தி.

“இதை தான் நம்ம ட்ரஸ்ட் வெச்சு பண்ணிட்டு இருந்திருக்கான் ரவி.”

“அப்படின்னாலும் இங்க டொனேஷன் வாங்கும் போது யார் கொடுக்கறாங்கன்னு சொல்லித்தான ஆகணும் ஷான். அப்படி இருக்கும் போது இத்தனை ஆயிரம் கோடிய எப்படி ஏமாத்தி உள்ள கொண்டு வர முடியும்?”

“அங்க தான் இருக்கு இன்னொரு ஓட்டை…” என்று பீடிகையோடு ஆரம்பித்தவன், “பப்ளிக் டெம்பிள் ட்ரஸ்ட்ல ரெசிப்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்ல. அதாவது யாரோ சம் எக்ஸ் கொடுத்தாங்கன்னு கணக்குல எழுதிட்டு, இங்க பணத்தை உள்ள கொண்டு வர முடியும். உண்டியல்ல வர்ற பணத்துக்கு என்ன கணக்கு கொடுக்க முடியும்? யார் கொடுத்தாங்கன்னு சொல்ல முடியும்? அப்படித்தான் சாமியாருங்க எல்லாம் ட்ரஸ்ட் மூலமா பெரிய ஆளாகறது. நித்தியானந்தா எல்லாம் எப்படி கைலாசா ஒனர் ஆனாராம்? இப்படித்தான்…” என்று நிறுத்தியவன், “இதே முறையை தான் பெட்டிங் மாட்ச் பிக்ஸிங் மூலமா வர்ற பணத்தை எல்லாம் வெள்ளையா மாத்த யூஸ் பண்ணிருக்காங்க ரவி, சைலேஷ் அப்புறம் சரண்சிங்!” என்று முடித்தான்.

ப்ரீத்தி மெளனமாக இருந்தாள்.

“என்ன தலைவரே… சைலன்ட்டாகிட்டீங்க?” சிரித்தான்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், “டீ குடிக்க பத்து ரூபாய் இல்லாம பட்டினி கிடக்கறதும் இந்த நாட்டுல தான். ஆயிரக்கணக்கான கோடிய அசால்ட்டா ஏமாத்தி பாக்கெட்ல போட்டுக்கறதும் இந்த நாட்டுல தான். ஏன் ஷான் இவ்வளவு வேறுபாடு?”

“என்ன சொல்றதுடா? சிஸ்டமை முழுசா ரீவாம்ப் பண்ணனும். உண்மைக்கும் நேர்மைக்கும் மரியாதை கிடைக்கணும். தப்புன்னா அது தப்பு தான். ரைட் கிடையாதுங்க்றது நம்ம மக்கள் மனசுல பதியனும். பேசிக்கா மனுஷத்தன்மைக்கு மதிப்பு கொடுக்கணும். இதெல்லாம் மத்தவங்க செய்யனும்ன்னு எதிர்பார்க்க கூடாது. நாம முதல் ஆளா இருக்கணும். சமுதாய பொறுப்புங்கறது நம்ம முதல் மூச்சுலருந்து ஆரம்பிக்குது ப்ரீத்தி…” என்று நிறுத்தியவன்,

“நம்ம மூலமா நல்ல காரியங்கள் செய்ய ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ட்ரஸ்ட் எல்லாம். ஒவ்வொன்னும் நூறு வருஷத்துக்கும் மேல வயசான ட்ரஸ்ட்ஸ். ஆனா அதை கூட எப்படியெல்லாம் யூஸ் பண்ணிருக்காங்க பாரு…” என்று நிதானித்தவன், “அந்த பணத்தை எல்லாம் அவங்க கிட்டருந்து நாம ஆட்டைய போட்டுடலாமா?” என்று கண்ணடித்தான்!

திடுக்கிட்டாள் ப்ரீத்தி!

“ஏதாவது பிரச்சினையாகிற போகுது ஷான்…”

“ப்ச்… பார்த்துக்கலாம். நம்மளை இவ்வளவு சுத்தல்ல விட்டவங்களை நாம எப்படிம்மா சும்மா விடறது?” என்றவன் அடுத்த திட்டத்தை விவரிக்க துவங்கினான்.

“எல்லாம் சரி. ஆனா அவங்க பணத்தை நாம ஆட்டைய போடறது தப்பு… அது வேண்டாம்…” ஒரு மாதிரி குரலில் ப்ரீத்தி கூற,

“தப்பை சரியா செஞ்சா அது தப்பில்ல தலைவரே…” என்றவன் சில்மிஷமாக புன்னகைத்தான்.

அப்போதும் அவளது முகம் தெளியாமலிருக்க, “ஒரு ஜோக் சொல்லட்டா புஜ்ஜிகுட்டி?” என்று அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் சிவந்திருந்தது. முறைத்தாள். இத்தனை நாட்களில் ஜோக் சொல்கிறேன் என்று ஆரம்பித்து, அவனடிக்கும் கூத்தையெல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்.

முன்பும் கூட ஏ ஜோக் சொல்வான் தான். ஆனால் இப்போதெல்லாம் ட்ரிப்பில் ஏ ஜோக் சொல்லி முகம் சிவக்க வைத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

அதனாலேயே, “ஒன்னும் வேண்டாம். நீ ரொம்ப ரொம்ப மோசமாகிட்ட…” என்று அவள் திரும்ப முயல, அவளை இழுத்து பின்னாலிருந்து அணைத்தப்படி, தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

“இப்ப கேட்காட்டி ப்ராக்டிகல்ஸ் தான்…” என்று மிரட்ட,

“அடப்பாவி. அராஜகம் பண்ற நீ…” என்று கோபமாக கூறுவது போல தோன்றினாலும், அவன் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் போவாள். அவன் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிப்பாள். அவனது காதலில் விழுந்தவள் எழவே விருப்பப்படவில்லை. கருந்துளையாக அவளை உள்ளிழுத்துக் கொண்டிருந்தான் அவன்!

“இப்ப என்ன சொல்ற? தியரியா பிராக்டிகலா?” என்று கேட்க,

“கூறும்… கூறித் தொலையும்…” அவனைப் போலவே கூறினாள்.

“அந்த பாஸுக்கு திடீருன்னு ஆஃபீஸ்லையே மூடு வந்துருச்சாம்.” என்று அவன் ஆரம்பிக்க,

“உனக்குன்னு எப்படிடா இப்படி ஜோக்ஸ் எல்லாம் கிடைக்குது?” சிரித்தபடி சலித்துக் கொண்டாள்.

“ஏய் டிஸ்டர்ப் பண்ணாம கேளுடி…” என்றவன், “அதனால அவரோட செக்ரட்டரிய கூப்பிட்டு, இப்ப எனக்கு உன்னோட உடனே சோ அன்ட் சோ பண்ணனும். ரொம்ப நேரமெல்லாம் தேவையில்லை. ஆயிரம் ரூபாய கீழ போடுறேன். நீ அதை எடுத்து முடிக்கறதுக்குள்ள நான் முடிச்சுக்குவேன்ன்னு சொன்னாராம்…”

“டேய் திருடா… பாஸ்னா செக்ரட்டரிய கண்டம் பண்ணியே தான் ஆகணுமா? ஏன் இவனுங்களுக்கெல்லாம் ஆம்பிளை செக்ரட்டரியே கிடைக்க மாட்டாங்களாமா?” கொதித்தவளை பார்த்து சிரித்தவன்,

“நடுவுல பேசினா ப்ராக்டிகல் கிளாஸ் தான்டி. என்ன சொல்ற?” என்று அவன் மிரட்ட, அவள் தனது வாயை கையால் மூடிக் கொண்டாள். “உடனே அந்த செக்ரட்டரி, ஒரு நிமிஷம் பாஸ்ன்னு சொல்லிட்டு அவளோட பாய்பிரண்டுக்கு கால் பண்ணி விஷயத்த சொல்லிருக்கா. அதுக்கு அவன், நீ ரெண்டாயிரம் கேளு, அந்தாள் போட்டு முடிச்சு எடுக்கறதுக்குள்ள எதுவும் பண்ண முடியாது. உனக்கு டபுள் அமௌன்ட் கிடைக்கும்ன்னு சொன்னானாம்…”

“நல்ல லவ்வர்… பயபுள்ள என்னமா யோசிக்குது…” லைவ் கமெண்ட்ரி கொடுத்தாள்.

“உள்ள வந்த செக்ரட்டரி, பாஸ் நான் ரெடின்னு சொன்னாளாம்.” என்று நிறுத்தியவன், அவளை குறும்பாக பார்த்தபடி, “அரைமணி நேரம் போச்சாம். பாய்பிரண்ட் கால் பண்ணானாம். என்னாச்சுன்னு கேட்டானாம்…” சில்மிஷமாக புன்னகைக்க,

“என்னாச்சாம்?” இவளும் கேட்டு வைத்தாள்.

“இன்னும் முடியலப்பா. இந்த பரதேசி இரண்டாயிரத்தையும் சில்லறையா போட்டுட்டான். எடுத்து முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்ன்னு தெரியலன்னு சொன்னாளாம்…” என்று நிறுத்தியவன், “அப்ப அந்த பாய்ப்ரென்ட் நிலைமைய நினைச்சு பாரு…” குறும்பாக முடிக்க,

“செத்தான்டா சேகரு…” என்று வாய்விட்டு சிரித்தாள் ப்ரீத்தி.

“இதுல இருந்து என்ன தெரியுது?” கதையின் நீதியை ஷான் சில்மிஷமாக கேட்க,

“என்ன தெரியுதாம்?” என்று கேட்டாள் ப்ரீத்தி.

“கைல நிறைய சில்லறைய வெச்சுக்கணும்ன்னு தெரியுது…” என்று கூற, அவனை மூக்கை சுருக்கியபடி குறும்பாக முறைத்தவள்,

“உன்னோட லைப்டைம்ல லேடி செக்ரட்டரிய நினைச்சும் பார்த்திடாத மகனே…” என்று கூறியபடி எழுந்து அமர்ந்தபடி, சோபாவில் இருந்த குஷனால் அவனை மொத்து மொத்தென்று மொத்தினாள். அவளை அவனது நெஞ்சோடு இழுத்து அணைத்தவன்,

‘வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே

தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா’

அவனது செல்போன் ரிங்டோனை அவளது காதில் கிசுகிசுப்பாக பாட, அவளது உடல் சிலிர்த்தது. அந்த நொடி, அந்த நிமிடம், அந்த க்ஷணம் அவனுக்காக மட்டுமே தான் பிறந்ததாக தோன்றியது. சோபாவில் அமர்ந்தபடி பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், அவளது பின் கழுத்தில் முத்தமிட, மயக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்!

***

இரவு மணி இரண்டை தாண்டி இருந்தது. அனைவரும் அசந்து உறங்கும் நேரம். ஈ காக்கைகளை கூட தேட முடியாது அந்த நேரத்தில். அதிலும் சரண்சிங்கின் அந்த கெஸ்ட் பங்களா அமைந்திருந்த அந்த இடத்தில் பகலிலேயே ஆட்களை பார்க்க முடியாது. இரவில் எங்கிருந்து?

ஆனால் பங்களா பக்கா பாதுகாப்பானது என்பதை இந்த பத்து நாட்களில் அறிந்து கொண்டார்கள்.

பங்களாவை சுற்றிலும் உள்ளுக்குள் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. பங்களாவின் வெளியே இருந்து பார்த்தால் அது தெரியாது. அதுவும் அது சாதாரண கம்பி வேலியல்ல. அந்த வேலியே ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் போல தான். அதை தாண்டும் அத்தனையையும் முழுக்க படமெடுத்து விடும். உடனே அதை சரணின் எண்ணுக்கு வீடியோ பைலாகவும் அனுப்பி விடும்.

அதை தாண்டினால், சுற்றிலுமுள்ள சிசிடிவி கேமராக்கள். அவை மிகவும் அட்வான்ஸ்ட் கேமராக்கள். துல்லியமாக இருட்டிலும் படம் பிடிக்க கூடியவை. அவையும் மொபைலால் கட்டுப்படுத்தப்படுபவை. யாரவது உள்ளே வந்தால், வீடியோ சரணது போனுக்கு உடனடியாக தகவல் போய்விடும். அவர் ஓகே கொடுத்தால் தான் அந்த நபர் அதை தாண்டி வரவே முடியும்.

அதன் பின், வீட்டிற்குள் செல்ல ஒரே கதவு தான். பின் கட்டு கதவு என்றெல்லாம் எதுவுமில்லை. அந்த கதவுக்கும் பிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமே. அந்த பிங்கர்பிரிண்ட் சென்சார் அப்ரூவ் செய்ததையும் சரணின் மொபைல் உறுதி செய்ய வேண்டும்.

அதன் பின் உள்ளே உள்ள அனைத்தும் சரணின் செல்பேசி ஆட்டுவிப்பதே. ஒவ்வொரு அறையும் சென்ட்ரல் யூனிட் கண்ட்ரோல்ட்.

இத்தனை பாதுகாப்புக்கு காரணம் இல்லாமல் இல்லையே!

பலரின் மொத்த கறுப்புப் பணமும் அங்கேதான் அல்லவா இருக்கிறது.

சரணும் ரவியும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட வகையில் தற்போது அங்கே ஐநூறு கோடி பணமாக இருக்கிறது. அதை மட்டுமே குறி வைத்தான் ஷான்.

நம்பர் இல்லாத அந்த போர்ஸ் ட்ராவலர், அந்த தெருவுக்குள் உள்ளே வரும் போதே ஜாமர் கருவியை ஆன் செய்து விட்டான் ஆல்வின். ஜாமர் கருவி என்பது ஒரு குறிப்பிட்ட அலைகற்றைகளை வெளியிடும். அந்த இடத்தில் அதே அலைகற்றைகளை வெளியிடும் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால், அதன் அலைகற்றைகளை அவை கேன்சல் செய்துவிடும். அதாவது அந்த எலக்ட்ரானிக் கருவிகள் செயல்படாது. இந்த ஜாமர் இருபது மீட்டருக்குள் இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் கருவிகளையும் செயலிழக்க செய்துவிடும். ஆனால் ஜாமர் உபயோகிப்பது சட்டத்துக்கு புறம்பானது.

ஜாமரை ஆன் செய்தவுடன், சுற்றிலுமிருந்த அத்தனை சிசிடிவி கேமராக்களும் உறக்கத்தை தழுவின. அந்த ஜாமரோடு சரண் வீட்டுக் கதவு முன்னால் நிற்க, அங்கிருந்த கம்பி வேலியும் அதோடு உள்ளிருந்த சிசிடிவி கேமராவும் கூட உறக்கத்தை தழுவிக் கொண்டன.

ஷான், சரணின் பேசியை ஹேக் செய்த கையோடு, சர்வைலன்ஸ் எமெர்ஜென்சி நம்பரை மாற்றியிருந்தான். அதனால், இந்த தகவல்கள் எதுவும் சரணுக்கு போகவில்லை. இவனது பிங்கர்ப்ரின்ட்டையும் அவரது போனில் இணைத்து விட்டதால், நேரடியாக கேட் திறந்தது.

“ஏய் என்னடா அலிபாபா குகைக்குள்ள போற மாதிரி இருக்கு?” ஆல்வின் ஷானிடம் பயந்தபடி கேட்க,

“இது நிஜமாகவே அலிபாபா குகைத்தான் டா…” என்று சிரித்தான் ஷான்.

நேராக கதவுக்கு போனவர்கள், சிலிக்கான் த்ரீடி கைரேகையை வைக்க, ஷானின் செல்பேசிக்கு கன்பர்மேஷன் மெசேஜ் வந்தது. ஆனால் அந்த செல்பேசி வீட்டுக்கு வெளியே இருபது மீட்டர் தள்ளி நின்றிருந்த போர்ஸ் டிராவலரில் இருந்தது. அதை ப்ரீத்தி வைத்திருந்தாள். ஏனென்றால் அந்த ஜாமர் இருபது மீட்டருக்கு உட்பட்ட அனைத்து சாதனங்களையும் செயலிழக்க செய்துவிடும். ஆகையால் அவன் உள்ளே கொண்டு சென்றாலும் உபயோகம் இல்லை என்பதால் அதை பிரீத்தியிடம் கொடுத்திருந்தான். அந்த மெசேஜுக்கு அவள் ஓகே கொடுக்க, கதவு திறந்தது.

கதவை தள்ளிக் கொண்டு, நேராக லாக்கர் ரூமுக்கு சென்றவர்கள், சிலிக்கான் பிங்கர் பிரிண்ட்டை உபயோகப்படுத்தி கதவை திறந்தனர்.

அறைக்குள் பார்த்தால் சுற்றிலும் வெறும் சுவராகத்தான் தெரியும் வெளிப் பார்வைக்கு. அங்கு வைக்கபட்டிருந்த கேமராவின் மூலம், லாக்கரை திறக்கும் ரகசியம் தெரிந்ததால், க்ளவுஸ் அணிந்த கையால் ஓரத்திலிருந்த சிறு பட்டனை அழுத்தினான். பாஸ்கோடும் கேமரா மூலம் அத்துப்படியாகி இருந்தது.

திறந்திடு சீசேம்!

அலிபாபா குகை திறந்தது!

மொத்தம் பத்து மிகப்பெரிய பிரம்மாண்ட லாக்கர்கள்.

அத்தனையும் அவர்கள் முன்!

ஐநூறு கோடியையும் எடுக்காமல், அதில் முந்நூறை மட்டும் பைகளில் நிரப்பி எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் பணத்தை, வீடியோ காமெராவில் அனைத்தையும் படமெடுத்துக் கொண்டான்.

மொத்த வீட்டையும் வீடியோ எடுத்து முடித்தவுடன், கிளம்பினார்கள், இருவரும்!

வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள்!

வந்த எந்த சுவடையும் விட்டு வைக்காமல் தான் போனார்கள்!

இது நடந்தது மெகா ஏலத்துக்கு முதல் நாளிரவு! மறுநாள் ப்ரெஸ், மீடியா, சோசியல் மீடியா என அனைத்தும் தீப்பிடித்துக் கொண்டது!

அடுத்த நான்காவது நாள் மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஆல்வினின் ஜி7 நிறுவனத்துக்கு நூறு கோடியும் மகேஷின் நிறுவனத்துக்கு ஐம்பது கோடி ரூபாயும் பாரின் டைரக்ட் இன்வஸ்ட்மென்ட்டாக வந்தது. அதே கம்பெனியிலிருந்து ஜுபிடர் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு நூற்றைம்பது கோடி ரூபாய் இன்வஸ்ட்மென்ட் வர, ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தின் ஷேர்கள் ப்ரீத்திக்கு மாற்றப்பட்டது!

error: Content is protected !!