Neer Parukum Thagangal 4.1

Neer Parukum Thagangal 4.1
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 4.1
சுயமரியாதை பேசும் செல்வி – சரவணன்
செல்வி கேட்டு திடுக்கிட்ட அந்தச் சத்தம், ‘ஏங்க… என்ன பண்றீங்க?’ என்ற சத்தம்தான்! பயத்தில் இறுக மூடிய கண்களைத் திடுக்கிட்டுத் திறந்தவள் முன்னே சரவணன் நின்று கொண்டிருந்தான்!
‘இவன் எப்படி?’ என்ற கேள்வி வந்தது. உடனே அறையைச் சுற்றிப் பார்த்தாள். கிரைன்டர், தோசைக்கல், அடுப்பு, இட்லி கொப்பரை, மிக்சி… என்று சமையல் பாத்திரங்களாக இருந்தது. அடுத்த நொடியே, ‘ஓ! இது இவன் சித்தப்பா கடை’ என்று கேள்விக்குப் பதில் கிடைத்தது.
கண்களில் பயத்தோடு அறையையே பார்த்தவளிடம், “சீக்கிரம் என்னென்னு சொல்லுங்க?” என்று சரவணன் குரல் உயர்த்திக் கேட்டதும், “வெ… வெளியே… சத்தம்… ஆளுங்க கையில கட்டை…” என்று திக்கித் திணறினாள்.
தேம்பித் தேம்பி அழும் கைக்குழந்தையையும்… பயத்தில் நடுங்குபவளையும் பார்த்ததும், “பின்னாடி பைப் மாட்டிக்கிட்டு இருந்தேன். கிரைன்டர் ஓடுறதால முதல எதும் கேட்கல. இப்பதான் ஆளுங்க அலற சத்தம் கேட்டு வெளிய போக வந்தா… நீங்க இப்படி!?” என்றான் அமைதியான குரலில்!
அதே குரலில், “வெளிய என்ன நடக்குது? நீங்க ஏன் உள்ளே வந்து நிக்கிறீங்க? சீக்கிரமா சொல்லுங்க” என அவள் பயத்தைப் புரிந்து கேட்டான்.
சரவணன் அமைதி ஒரு ஆசுவாசத்தைக் கொடுக்க… தேம்பி அழுகின்ற மகன் முதுகைத் தேய்த்து விட்டபடியே, “முகமூடி போட்டுக்கிட்டு ஆ… ஆளுங்க கட், கட்டை… வச்சி… கண்ணாடி உடைக்கிறாங்க. ஏன்னு தெரியலை-ங்க. வெளிய போக முடியலை. அதான் இங்க” என்றாள் நடுங்கும் குரலில்!
கூடவே துப்பட்டாவால் வியர்வையைத் துடைத்தபடி, “அப்போ சொன்னீங்கள எதும் உ… உதவி வேணும்னா கேளுங்கனு. எ… எங்கள எப்படியாவது வெளிய கூட்டிட்டுப் போறீங்களா?” என்று கேட்டாள்.
கதவின் மேல் சாய்ந்து நின்றவளிடம், “சரி, நீங்க இந்தப் பக்கம் வாங்க. நான் பார்க்கிறேன்” என அவன் சொன்னதும் செல்வி நகர்ந்து கொள்ள, கதவருகே சென்றவன், ‘திறக்கவா? வேண்டாமா?’ என்ற சிறு தயக்கத்துடனே, ஒரு இன்ச் அளவு இடைவெளி இருக்கும்படி கதவைத் திறந்து பார்த்தான்.
ஆட்கள் சத்தம் கொஞ்சமாக கேட்டது. ஆனால் அவள் சொல்வது போல் முகமூடி போட்டுக் கொண்டு யாருமே இல்லை! எனவே இன்னுமும் கொஞ்சம் திறந்து, தலையை வெளியே நீட்டிப் பார்த்தான். அப்பொழுதும் யாரும் இருப்பது போல் இல்லை.
அவன் செயல்கள் கண்டு, “யா… யாரும் நிக்கிறாங்களா?” என்று பயத்துடன் கேட்டதற்கு, ‘இல்லை’ என்று தலையசைத்தான். மேலும், “வாங்க, அப்படியே போயிடலாம்” என்று அவளை அழைத்தான்.
ஓரளவு தேம்புவது குறைந்திருந்த மகனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, அவனைப் பின்பற்றி அவளும் அந்த அறையிலிருந்து வெளியேறி, கடையின் முன்பகுதிக்கு வந்தாள்.
கடையை விட்டு வெளியே போய்விடலாம் என நினைத்த நேரத்தில், அருகில் இருந்த கடைகளின் கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்படும் பயங்கிற சத்தம் கேட்டது. மேலும் அதிலிருந்து சின்னதும் பெரியதுமாக சிதறிய கண்ணாடிச் சில்லுகள் இந்தப் பக்கமும் வந்த விழுந்தன.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டவள், சிதறித் தெறிகின்ற கண்ணாடிச் சில்லுகள் மகன் மேல் பட்டுவிடாமல், தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மீண்டும் அறைக்குள்ளேயே போய்விட்டாள்.
அவள் செயல் கண்டு, “ப்ச், ஏன் உள்ளே போறீங்க?” என எரிச்சலுடன் கேட்டு, அவனும் உள்ளே வந்த அடுத்த நொடியே, செல்வி வேகமாகச் சென்று யாரும் வராமலிருக்க பாதுகாப்பிற்காய் கதவை மூடி, அதன் முன் நின்றாள்.
சரவணன், “ஏங்க… என்னங்க பண்றீங்க?” என்று சலிப்புடன் கேட்டதும், மகன் முதுகை அழுத்தி அரவணைத்துப் பிடித்தபடி, “இப்படி நடக்கிறப்போ எப்படிப் போறதுங்க? ரொம்ப பயமாயிருக்கு” என்றாள் அச்சத்தின் குரலில்!
“போய்த்தான் ஆகணும். வேற வழியில்லை” என்றான் அவசரமாக!
“நான் மட்டும்-னா நிச்சயமா இவ்வளவு பயப்படவோ… தயங்கவோ மாட்டேன். இவனை வச்சிக்கிட்டு போறதுக்கு பயமா இருக்கு” என்றாள் அரண்டு போய்!
“புரியுது! குழந்தை வச்சிக்கிட்டுப் போறதுக்குப் பயமாதான் இருக்கும். ஆனா அதைத் தாண்டி எப்படியாவது போய்த்தான் ஆகணும். இங்கயே நிக்கிறதும் பாதுகாப்பு கிடையாது! புரிஞ்சிக்கோங்க!” என்றான் அவசியமாய்!
அவன் பேச்சைக் கேட்டதும்… முகமூடி உருவங்களின் திட்டம் என்னவென்று தெரியாமல் இங்கிருப்பது தவறென தோன்றியதால், “சரி போயிடலாம்” என பயத்தோடு சம்மதித்த பின்னும், சரவணன் அசையாமல் நின்றான்.
கண்களைச் சுருக்கி எதையோ உன்னிப்பாக கவனிப்பது போல் அவன் முகம் மாறியதும், “என்னாச்சு?” என்று செல்வி கேட்க, “வெளியில… ஆளுங்க சத்தம் கேட்குதா?” என்றவன், ஓடும் கிரைன்டரை ஆஃப் செய்தான்.
மகனைப் பிடித்துக் கொண்டு, கதவில் சாய்ந்தபடியே வெளியில் நடப்பதைக் கேட்கப் பார்த்தவளிடம், “நீங்க… இந்தப் பக்கம் வாங்க. நான் வெளிய போய் பார்த்திட்டு கூப்பிடறேன். உடனே வந்திடுங்க. திரும்ப இந்த மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க” என்றான் அவசர அறிவுரையாய்!
அவள், ‘சரியென்று’ தலையசைத்து நகர்ந்து கொண்டதும், கதவைத் திறந்து வெளியே சென்றவன், முன்பகுதியை அடைந்து அந்தத் தள நடைக் கூடத்தை எட்டிப் பார்த்தால் பொதுமக்கள் யாருமே இல்லை.
அந்த மூன்று முகமூடி உருவங்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன!
பயங்கிற எரிச்சலுடன் உள்ளே வந்தவன்… கதவைத் மூடி வைத்து, “எல்லாரும் போய்ட்டாங்க. வெளிய வெறிச்சோடி இருக்கு. நீங்க சொன்னீங்களே முகமூடி ஆளுங்க. அவங்கதான் இருக்காங்க” என்று படபடத்தான்.
“பயந்துக்கிட்டே இருந்து நேரத்தை வீணாகிட்டேனோ? என்னாலதான் இப்படி ஆயிடுச்சா?” என அவள் சொல்வதைக் கவனிக்காமல், சரவணன் அலைபேசி எடுக்க சட்டைப் பைக்குள் கையைக் கொண்டு போகையில், சித்தப்பாவிடம் அதைக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்தது.
யாரிடமாவது உதவி கேட்டாவது இவர்கள் இருவரையும் சீக்கிரமாக வெளியே அழைத்துப் போய்விட வேண்டுமென்ற அவசரத்தில், “உங்ககிட்ட மொபைல் இருக்கா?” என்று செல்வியைப் பார்த்து கேட்டான்.
“அது… இவனுக்கு ஊட்டிக்கிட்டு இருக்கிறப்போ அக்கா ஃபோன் பண்ணாங்க” என்று நடந்ததை ஞாபகப்படுத்திப் பார்த்தவள், “பேசிட்டு டேபிள்ல வச்சேன். அவசரமா வந்ததால… அதை எடுக்கலை” என்றாள், அழுது அழுது சோர்ந்து போயிருந்த மகனின் முதுகை வருடியபடி!
கூட்டத்தோடு போயிருக்க வேண்டும். இனி போவது சரியென்று சரவணனுக்குப் படவில்லை. நெற்றியைப் பிடித்தபடி, ‘என்ன செய்யலாம்?’ என நின்றவன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு… அங்கிருந்த காலி சிலிண்டர், காய்கறிகள் நிரப்பிய பெட்டிகள் போன்ற கனமான பொருட்களை எடுத்து கதவிற்கு அணைவாக வைத்தான்.
இங்கிருந்த பொருட்களைக் கொண்டு கதவை எளிதாகத் திறக்க முடியாமல் செய்ததும், சரவணனுக்கு ஓரளவிற்கு பாதுகாப்பு உணர்வு வந்தது. இருந்தும் இது முழுமையான பாதுகாப்பு அல்ல என்றும் தெரிந்தது.
கூடவே… ‘ஏன் இப்படி நடக்க வேண்டும்? இதுபோல் இங்கே நடந்ததில்லையே? இன்று ஏன்?’ என்ற கேள்விகள் ஒரு பக்கமும், ‘உள்ளே மாட்டியதால் வேறேதும் பெரிய ஆபத்து வந்துவிடுமோ?’ என்ற பயம் மற்றொரு பக்கமும் இருந்தது.
காற்றோட்டம் சிறிதும் இல்லாத அறை! நாள்தோறும் சமையல் என்பதால் கரி படிந்திருந்த சுவர்கள்! சமையலுக்கான பல உபகரணங்களால் நிரம்பியிருந்த சமையல் மேடை! கீழேயும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரே, கோணிப்பைகள், நாளிதழ்கள் மற்றும் வாரஇதழ்கள்!
இத்தகைய அடையாளங்களுடன் இருக்கின்ற அறையினுள், ‘இப்படி மாட்டிக் கொண்டோமே?’ என்று சரவணனும், ‘தன்னால்தான் இவனும் மாட்டிக் கொண்டானோ?’ என்று கைக்குழந்தையுடன் செல்வியும் நின்றனர்.
***************************
கருத்தாய் பேசும் கண்மணி, சேது!
சேது பேசிச் சிரித்த விதத்தில், கண்மணியின் உடல் பயங்கொண்டு உதற ஆரம்பித்தது. அட்ரினலின் சுரப்பு அதிகரித்ததால் வியர்வையும், இதயத் துடிப்பும் இன்னும் அதிகரித்தது. பயத்தினால் தொண்டைக் குழியில் எச்சில் விழுங்குவது வெளியே தெரிந்தது. சுவாசம் சீராக வராமல் சூறாவளி போல் சுற்றிக் கொண்டு வந்தது!
இத்தனை பதற்றமான உடல்மொழிகளுடன் கண்மணி நின்றாலும், அவன் எவ்வித உணர்வுகள் இன்றி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நொடி கூட அங்கே, அந்த அறையில், அவன் இருக்கும் அறையில் இருக்க விருப்பமில்லாமல் திரும்பி நின்று, ‘ஹெல்ப் ஹெல்ப்’ என கதவை வேகமாக தட்டி, ‘ப்ளீஸ் டோர் ஓபன் பண்ணுங்க’ என்று கத்தினாள்.
இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தட்டிய பின்பு, ‘கதவு திறக்கப்படாது’ என்று புரிந்ததும், காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என நினைத்து கைகள் நடுங்க கைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்தாள்.
பதற்றத்துடன் தொடுதிரையில் எண்களைத் தொடும் போதுதான் தெரிந்தது, அலைபேசியில் சுத்தமாகச் சமிக்கை இல்லை என்று! ‘ஐயோ!! இது வேறயா?’ என நொந்து கொண்டு, அலைபேசியை அங்கும் இங்கும் உயர்த்திப் பிடித்துப் பார்த்தாள்.
எந்த ஒரு பலனும் இல்லை!
அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பி சமிக்கை கிடைக்க முயற்சி செய்தாள். அதற்கும் பலனில்லை. ஆனால் அப்படித் திரும்பையில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்க நேர்ந்தது.
சில அட்டைப் பெட்டிகள் அடுக்கியும்… பல பெட்டிகள் அடுக்காமலும் இருந்த இடத்திற்கு ஊடே நின்று கொண்டு காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்ட சிறு சாளரம் பக்கமாக அலைபேசியைத் தூக்கிப் பிடித்து சமிக்கை கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென கதவு தட்டப்படும் சத்தமும், உதவி கோரும் கத்தலும் கேட்கவில்லை என்பதை உணர்ந்தவன், திரும்பிப் பார்த்தான். பட்டென்று கண்மணி கதவை நோக்கித் திரும்பி நின்றாள். ஆனாலும் அவன் விடாமல், “ஹலோ… எதுக்காக என்ன பார்த்துக்கிட்டு இருந்த?” என்றான் மிகச் சாதரணமாக!
ஒரு பதிலும் சொல்லாமல் மீண்டும் கதவைத் தட்ட போனவளிடம், “நீ எவ்ளோ தட்டினாலும் திறக்க மாட்டாங்க. உனக்கும் அது தெரிஞ்சிருக்கும். அப்புறமும் ஏன் தட்டிக்கிட்டு இருக்க?” என்றான்.
சட்டென்று திரும்பி, “டோர் லாக் பண்றப்போ… ‘நான் உள்ளே இருக்கேன்’-னு சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லாம இருந்த?” என அவனது கேள்வியைப் புறந்தள்ளிவிட்டு, அவன்மீது குற்றம் சாட்டினாள்.
“உள்ள ஒருத்தன் இருக்கிறதைக்கூட பார்க்காம, சொடுக்கு போடற நேரத்தில டோர் லாக் பண்ணி… அவங்களையும் லாக் பண்ணவச்சி ட்டு… என்னையும் உன்கூட சேர்த்து மாட்ட வச்சிருக்க! நீ… என்னை சொல்றியா?” என்று அவள் மீது குற்றத்தை திருப்பினான்.
மேலும், “ஆக்சுவலா நான்தான் கோபப்படணும்! நீ இல்லை. ஓகே?!” என்றதும், அவன் பேச்சுகளையும் உடல்மொழியையும் பார்த்தவள், “நீ ஏன் இங்க வந்து நிக்கிற?” என்று சந்தேகப்பட்டு கேட்டாள்.
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி, மீண்டும் அலைபேசியை அங்கே இங்கே என்று தூக்கிப் பிடித்தவன், “உன் மொபைல்-ல சிக்னல் இருக்குதா?” என்று சாதாரணமாக அவன் கேட்க, “ம்கூம்” என்று அவள் சொன்னாள்.
உடனே, “நல்லா மாட்டியாச்சு” என்றான்.
இவன் யாரைச் சொல்கிறான்? தன்னை மட்டுமா? இல்லை… இருவரையுமா? யாரிவன்? நல்லவனா… கெட்டவனா? கதவைத் திறந்து வைத்து ஏன் இங்கே இருக்க வேண்டும்? அதற்கான தேவை என்ன? இப்படி நிறைய பதில் தெரிய முடியாத கேள்விகள் கண்மணியிடம் இருந்தன!
இன்னமும் அலைபேசியில் சமிக்கை வந்துவிடுமா? என்று ஆராய்ந்தவனைப் பார்த்து, எதற்கும் இவனிடம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்… ஒருவித அயர்வு வந்ததில், “ப்ச்” என கதவில் சாய்ந்தாள்.
பின், “ஏழு மணிக்கு வந்துடுவேன்னு அம்மாகிட்ட சொல்லியிருந்தேன். நான் போகலைன்னா பயந்திடுவாங்க. என்ன செய்ய?” என்று புலம்பி, அப்படியே கண்மணி சரிந்து அமர்ந்தாள்.
கண்மணி புலம்பலைக் கேட்டதுமே, அலைபேசி சமிக்கையைப் பார்ப்பதை விட்டுவிட்டு சேது அவளையே பார்த்திருந்தான்!