Neer Parukum Thagangal 4.2

NeerPArukum 1-88ed61dc

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 4.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன் & மினி ஜோசப்!

சிறிது நேரமாக லக்ஷ்மி-மினி இருவருமே கையில் அலைபேசியை வைத்தபடி ‘என்ன செய்ய, ஏது செய்ய?’ என்று தெரியாமல், புரியாமல் ஒரு அதிர்ச்சியுடன் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அவன் பார்க்கும் பார்வை சரியில்லை. அவன் பார்வை தவறானது. அது நல்ல எண்ணம் கொண்டவன் பார்வை அல்ல! அல்லவே அல்ல! பார்கின்றவனுக்கும் அது தெரியும்! பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அது புரிந்தது!!

‘ஷட்டர்’ திறக்கின்ற வரை இவருடனா இருக்க வேண்டுமென்று இருந்த மினி, அந்த நேரத்தில்… அந்த இடத்தில் அந்தப் பையனைப் பார்த்ததும், “ஆண்ட்டி” என்று குரல் நடுங்க அழைத்து, அவரை ஒட்டிக் கொண்டு நின்றாள்.

தனது அதிர்ச்சியை அப்புறப்படுத்திவிட்டு, “டென்சன் ஆகாத! ஒன்னுமில்லை. உன் அப்பாக்கு ஃபோன் பண்ணு. நான் போலீஸ்-க்கு ஃபோன் பண்றேன்” என அவசர அவசரமாக அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசினார்.

“ம்ம்… சரி ஆண்ட்டி” என்று அலைபேசி தொடுதிரையைத் தொடும் பொழுதே, விறுவிறுவென அந்தப் பையன் மினி முன்னே வந்து நின்று, அவளிடமிருந்த அலைபேசியை பறித்து தூர தூக்கி எறிந்தான்.

எறிந்த வேகத்தில் சற்றுத் தள்ளி தரையில் வீழ்ந்த அலைபேசி சுக்கு நூறாக உடைந்ததைப் பார்த்து, “டேய்! அது என் அப்பா கிஃப்ட் பண்ணது-டா! ஏன்டா இப்படிப் பண்ற? எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியாதா?” என கோபம் அதிகமாகி, கொந்தளித்து போய் கத்தினாள்.

“மினி… மினி, நீ டென்சன் ஆகாத!” என்று படபடவென்று சொல்லி, அங்கிருந்து அவளைத் தள்ளி அழைத்துச் சென்று, “பயப்படாத மினி. தைரியமா இரு” என, அவளைத் தோளோடு தோளாக அரவணைத்து நின்று கொண்டு, கடவுச்சொல் கொடுத்து தன் அலைபேசியைத் திறந்தார்.

வேகமாக வந்து லக்ஷ்மி முன் நின்றவன், அவர் அலைபேசியையும் பிடுங்கப் பார்த்தான். ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக இருந்ததால்… மினியிடம் செய்தது போல் அவரிடம் செய்ய இயலவில்லை!

மேலும் லக்ஷ்மி, ‘ப்ளார்’ என்று அவன் கன்னத்தில் அறை கொடுத்து, “ஒழுங்கா இரு!! இல்ல… இன்னும் அடி வாங்குவ” என்று கடுங்கோபத்துடன் சொன்னதும், அதுவரை, ‘பின்னால் வராதே’ என சொன்னவள் மீதிருந்த கோபம், அக்கணம் அவனை அடித்தவர்… எச்சரித்தவர்… மீது திரும்பியிருந்தது!!

அந்தக் கோபத்தினால், வெறியுடனும் மூர்கத்தனத்துடனும் மீண்டும் மீண்டும் அவர் கையிலிருந்த அலைபேசியை பிடுங்க முயற்சிதான்.

லக்ஷ்மியும் அவனது முயற்சியையெல்லாம் முறியடித்துக் கொண்டே வந்தார். இருவருக்கும் இடையே போராட்டம் ஆரம்பித்தது. “ஆண்ட்டி” என்று பயத்தில் அழைத்து… ஊடே வரப் பார்த்தவளை, “நீ வராத… நான் பார்த்துக்கிறேன்” என அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் தடுத்துவிட்டார்.

அவரது வயதிற்கு… அப்படியொரு முரட்டுத்தனத்துடன் இருக்கும் பையனுடன் மோதுவது மிக கடினமாக இருந்தது! இருந்தாலும் போராடினார்! தன்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி, அவனை எதிர்த்து நின்றார்!

ஆனாலும் ஒருகட்டத்தில் அவன் கை ஓங்கியிருந்ததால்… லக்ஷ்மியிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கி, தூரத் தூக்கி எறிந்தான். அது கண்ணாடிக் கதவில் பட்டுக் கீழே விழுந்து உடைந்தது. அதை லக்ஷ்மி பார்த்த நொடியே, வலுவுடன் அவரைப் பிடித்து தள்ளிவிட்டான்.

லக்ஷ்மி நிலைதடுமாறி, துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பலகையில் மோதி விழுந்தார். இடித்த வேகத்தில் அவரது நெற்றியில் சிறு கீற்றாய் ரத்தம் கசிந்தது! தலை கிறுகிறுத்தது! உடல் வெடவெடத்தது!!

“ஐயோ ஆண்ட்டி என்னாச்சு?” என்று பதறிப்போய் ஓடி வந்தவளிடம், “மினி, நீ இங்கே இருக்காத! ட்ரையல் ரூம் போ… போ… லாக் பண்ணிக்கோ” என அந்த நிலையிலும் உத்தரவிடும் பாணியில் சொன்னார்.

“ஆண்ட்டி… நீங்க?” என்று இன்னும் போகாமல் இருந்தவளை, “சொன்னதைக் கேட்கவே மாட்டியா?” என கடிந்து கொண்டு, அந்தப் பையனைப் பார்த்தார்.

மினியும் அவனைப் பார்த்தாள். அவன் பார்வை முழுதும் அவளிடம் மட்டுமே இருந்தது. இனி அவளுக்கு உதவ யாருமில்லை என்ற சூழ்நிலையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, அவன் பார்வை இருந்தது.

ஒத்திகை அறைக்குள் செல்வது மட்டுமே தப்பிக்க இருக்கும் ஒரே வழி என்று மினிக்குப் புரிந்த நொடி, வேகமாக எழுந்து ஓடினாள். அவள் மீதே கண்களை வைத்திருந்தவனும், அவள் பின்னேயே ஓடினான். 

ஓடுகின்றவர்களுக்கு இடையில் பெரிய இடைவெளி ஏதும் இல்லை என்பதால், இரண்டொருமுறை மினியை பிடித்து இழுக்கப் பார்த்தான். அதிலிருந்து தப்பி ஒத்திகை அறைக்குள் புகுந்து, கதவை மூடும் நேரத்தில் அங்கே வந்தவன், அவள் தாழிட முடியாமல் கதவை வலுவாகப் பிடித்துக் கொண்டான்!

இக்கணத்திலிருந்து இருவருக்கும் இடையே போராட்டம் தொடங்கியது!!

*******************************

வணிக வளாகத்தின் வெளியே

சூரியன் மறையும் வேளை என்பதால் செக்கச் செவேர் என்று வானம் சிவந்து இருந்தது. வணிக வளாகத்திலிருந்து சற்றுத் தள்ளி, மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றனர். வெளியே வந்தவர்களில் சிலர் ‘எப்படியோ தப்பிச்சாச்சு’ என்ற ஒரு எண்ணத்துடன் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால் சிலர் அங்கேயே நின்று கொண்டனர்.

வணிக வளாகம் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்ததால், அந்தச் சாலை வழியே சென்ற சிலர் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். மேலும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிருந்து சிலபேர் ‘என்னாயிற்று?’ என அறிந்துகொள்ள வந்திருந்தனர்.

அதனால்தான் இந்த மக்கள் கூட்டம்!

தப்பி வந்தவர்களிடம், ‘என்ன நடந்தது?’ என கேட்டறிந்தனர். ஒவ்வொருவரும் ஒருவொரு விதமாக நடந்ததைச் சொன்னார்கள். யாரிந்த முகமூடி நபர்கள்? எதற்காக இப்படிச் செய்தார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதனைப் பற்றிய பேச்சுகளும், யூகங்களும் கிளம்பியிருந்தன.

அந்த மக்கள் கூட்டத்திலிருந்த ஒருவர், உள்ளே மாட்டிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் காவல்துறைக்கு அழைத்து, இங்கே நடந்ததைப் பற்றித் தகவல் கொடுத்தார்.

*******************************

அந்த மூன்று முகமூடி உருவங்கள்?

நினைத்தது போலவே முதற்கட்ட திட்டம் நிறைவேறியதும், அந்த உருவங்கள் செய்தது… அனைத்து தளங்களின் நடைகூடப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, வணிக வளாக முன்வாயில் ஷட்டரை இறக்கிவிட்டதுதான்!

அதை முடித்த பின்பு, ‘எங்கே?!’ என்பது போல் ஒரு உருவம் பார்க்க, மற்றொரு உருவமோ நான்காவது தளத்தைக் கைகாட்டியது. மூன்று முகமூடி உருவமும் எஸ்கலேட்டர் வழியே நான்காவது தளத்தின் ஒரு இடத்தில் வந்து நின்றன.

அந்த இடம் கேக்-ஷாப்!!

அந்தக் கடையின் வெளிப்பக்கமே நின்று கொண்டன. ஒவ்வொரு உருவத்தின் கையிலிருந்த உருட்டுக்கட்டையும் தூக்கிப் போடப்பட்டது. மேலும், துப்பாக்கி வைத்திருந்த உருவம் அதையும் சேர்த்து தூக்கிப்போட்டது. பின்னர் அவ்வளவு நேரம் போட்டிருந்த முகமூடியை மூன்று உருவமும் கழட்டியது.

மூன்று உருவங்களின் முகமும் வியர்த்திருந்தது. மேலும் முகமூடி முகத்தை இறுக்கிப் பிடித்திருந்ததால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு முகம் ஒருமாதிரி தெரிந்தது. இதுகூடவே முகம் முழுதும் கோபம் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடந்தது!

சற்றுநேரம் மூன்று உருவமும் ஆசுவாசப்படுத்திக் கொண்டன!

அந்த இளைப்பாறலால் வியர்வைத் துளிகள் குறைந்திருந்தன. இரத்த ஓட்டம் சீரானது. ஆனால் அந்தக் கோபம் சிறிதும் மாறாமல், துளியும் குறையாமல் முகமூடி போல் முகத்தை மறைத்து மண்டியிருந்தது!

அதன்பின் அந்த மூன்று உருவத்தில் இரண்டு உருவங்கள் பேச ஆரம்பித்தன. தற்பொழுது நடந்ததைப் பற்றிப் பேச்சு இருந்தது. பேசியதுதான் என்றாலும் இனி நடக்க வேண்டியது குறித்துப் பொதுவாகவும் பேச்சு இருந்தது.

இதற்கிடையே பேச்சில் கலந்து கொள்ளாத மூன்றாவது உருவத்தின் கண்கள் மட்டும் தரையைக் கூர்ந்து பார்த்திருந்தது. பளிச்சென்ற டைல்ஸில் சொட்டுத் சொட்டாகத் தென்பட்ட இரத்த துளிகளைப் பார்த்தவுடனே, அந்த உருவத்தின் கண்களானது சூழ்நிலையை சந்தேகத்துடன் ஆராய ஆரம்பித்தது.

அதோட மட்டுமில்லாமல் பேசிக் கொண்டிருந்த பேச்சை நிறுத்தச் சொல்லி சைகை செய்தது. அந்த உருவங்களும் சட்டென்று பேச்சை நிறுத்தின.

மூன்று உருவங்களின் அமைதியுடன்… அந்தத் தளத்தின் அமைதியும் சேர்ந்து கொண்டதில், ஆராய்ச்சி பார்வை பார்த்திருந்த உருவத்திற்கு கேக்- ஷாப்பில் யாரோ ஒருவர் இருப்பது போல் தோன்றியது.

அந்த உருவத்தின் முக மாற்றங்களைக் கண்ட மற்ற உருவங்கள், ‘என்னாச்சு?’ என்று கேட்டதற்கு… தரையிலிருந்த இரத்தக் கறைகளைச் சுட்டிக் காட்டி தன் சந்தேகத்தை சைகையாலே புரிய வைத்தது. அடுத்தகணம் மூன்று உருவமும் உருட்டுக் கட்டையை கையில் எடுத்துக் கொண்டன.

ஒரு உருவம் கண்ணாடிக் கதவைத் திறந்து முன் செல்ல, மற்ற இரண்டும் பின் தொடர, மூன்றுமே கேக்-ஷாப்பிற்குள் வந்தன! அங்கு வரிசையாகத் தண்ணீர் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே ஒரு பெண் இருப்பதைப் பார்த்துவிட்டன!

‘பேசியதைக் கேட்டிருப்பாளோ?’ என்ற ஓர் கேள்வியுடன் அப்படி-இப்படி என கருவிழியை அசைக்காமல் மூன்றும் அவளையே பார்த்திருந்தன!!

கடைக்குள் ஆட்கள் அரவம் கேட்டு கண் விழித்திருந்த அப்பெண்… அதுதான் மஹிமா, ‘இனி என்னாகுமோ?’ என்ற பயத்தில் திருதிருவென முழித்திருந்தாள்!!!

*******************************