Rose – 16

images (93)-37f14728

Rose – 16

அத்தியாயம் – 16

நியூயார்க் நகரில் தரையிறங்கியது விமானம். இரண்டு ஆண்டுகளில் இடைவிடாத முயற்சினால், அவன் விரும்பிய அமெரிக்கா மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தான். அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் நுழைவது என்பது அவ்வளவு இலகுவாக நடக்கக்கூடிய விஷயமில்லை.

பத்தாம் வகுப்பு முடிந்ததில் இருந்தே தன்னுடைய திறமையைப் படிப்படியாக வளர்த்திக் கொண்டான் யாதவ். ஆங்கிலப் புலமை தேர்வுகளும் தேர்ச்சி, டென்த் அண்ட் பிளஸ் டூ தேர்வுகளில் ஐம்பது சதவிதத்திற்கும் அதிகமான தேர்ச்சி பெற்று, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

MCAT தேர்வில் நல்ல மார்க் எடுத்து, அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தான். தன் கனவு நினைவாக மாறியதை நினைத்து மனம் மகிழ, மனக்கண்ணில் தந்தையின் பூமுகம் தோன்றி மறைய, ‘அப்பா இங்கே படிக்க வந்திருக்கிறேன். அதை முடிக்கும் வரை எனக்கு எந்தவிதமான இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுடையது’ வேண்டிக் கொண்டான்.

வழக்கம்போலவே ராம்குமாரின் வீட்டில் சென்று தங்கிக் கொண்ட யாதவ், யுனிவர்சிட்டி பக்கத்தில் வீடு ஏதாவது வாடகைக்கு கிடைக்கிறதா என விசாரிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான். ராம்குமாரும், யாதவ் இருவரும் பல்கலைகழகம் சென்றுவர துவங்கினர்.

அனைத்து வகுப்புகளும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட, அவர்கள் இருவரும் தடுமாற்றம் இன்றி வகுப்புகளைக் கவனித்தனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஜார்ஜும், டெல்லியில் இருந்து படிக்க வந்திருந்த தேவதர்ஷினியும் அவர்களின் நண்பர்களாக மாறிப் போகவே புதிய நண்பனிடம் விஷயத்தைச் சொல்லி வீடு தேடும் பணியில் தீவிரமாக இறங்கினான் யாதவ்.

“நீ என்னோடு வந்துவிடு. இப்போது இருக்கும் வீட்டில் நானும் ராகுலும் இருக்கிறோம்” அவனது பிரச்சனைக்கு இலகுவான முறையில் தீர்வு சொன்னதோடு நில்லாமல், அன்று மாலையே வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மூவருக்கும் தனித்தனியாக படுக்கையறை என்று சகலவசதியுடன் இருந்த வீட்டைப் பார்த்ததும் யாதவிற்கு பிடித்துப் போனது. மூவரும் செலவு மற்றும் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற கண்டிசன் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

அனைத்தையும் முறைப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதால், முதல் வேலையாக டாக்குமெண்டேசன் அனைத்தையும் செய்து முடித்தான் யாதவ்.

அன்று இரவு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயம் தன் முடிவினை அறிவிக்க, “என்ன யாதவ் எங்க யாரிடமும் கேட்காமல் முடிவெடுத்திருக்கிற?” சிவசந்திரன் சங்கடத்துடன் கேட்க, அவரின் கைகளைப் பிடித்து அழுத்தினான் சின்னவன்.

“அங்கே போய் தங்குவதுதான் சரின்னு மனசுக்கு தோணுதுப்பா. விடுமுறை நாட்களில் உங்களை எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறேன். பல்கலைகழகத்தில் ராமை சந்தித்துவிடுவேனே! அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்ல, நீங்களும் என்னை நினைத்து கவலைப்படாதீர்கள்” அவர்களை சமாதானம் செய்து எழுந்தவன், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான்.

அவனது முடிவை அறிந்த மொத்த குடும்பமே திகைத்து போயிருக்க, “தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு வரக்கூடாது என்பது வயதிற்கு மீறிய பக்குவம். பின்நாளில் இவனோட வாழ்க்கை நன்றாக அமையணும்” வாய்விட்டு புலம்பிய வைஜெயந்தி சமையலறையை சுத்தம் செய்ய சென்றார்.

மறுநாள் அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பிய யாதவ், அடிக்கடி ராமின் வீட்டிற்கு தவிர்த்தான். ஏற்கனவே தனிமையில் அனைத்து வேலைகளையும் தனியொரு ஆளாக செய்யப் பழகியது, இப்போது அவனுக்கு கை கொடுத்தது.

ஆனால் தாயின் மீதான வெறுப்பு மட்டும் எள்ளளவும் குறையவில்லை. அதனால் ஏற்படப்போகும் பாதிப்பு என்னவென்று மற்றவர்களுக்கு தெரியாமல் போனதுதான் விதியின் விளையாட்டு.

அந்த நாட்டின் நடைமுறைகள் மற்றும் கலாச்சாரம் அனைத்தும் அவனை வெகுவாகக் கவர்ந்தது. ராம் குடும்பத்தினர் வெளியிடங்களுக்கு செல்லும்போது யாதவ் அவர்களோடு இணைந்து கொள்வான். அதைத் தவிர்த்து பண்டிகை தினங்களில் அவர்களின் வீட்டில் நேரத்தை செலவிடுவான்.

அவனது வசீகரமான புன்னகைக்கு பெண்கள் மதி மயங்கிய போதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.

படிப்பு ஒன்று மட்டுமே பிரதானம் என்று யாதவ் கடினமாகப் படிக்க, ராம்குமாரின் வீட்டைப் பல்கலைகழகத்திற்கு அருகில் மாற்றினர். பக்கத்து வீட்டிற்கு புதிதாக தமிழ் குடும்பம் ஒன்று குடிவந்திருப்பதாக தந்தை சொல்லவே, பால்கனியில் நின்று அந்த வீட்டைப் பார்த்தாள் யாழினி.

“மதுராமுகம் அலம்பிட்டு வந்து காஃபியைக் குடி” என்ற ரவீந்தர் மகளின் கையில் கப்பை திணித்துவிட்டு சமையலறைக்குள் சென்று மறைந்தார்.

கொஞ்ச நேரத்தில் மிருதுளாவும் வந்து சேர, டிவிடியில் பாடலை ஒலிக்க விட, “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” பாரதியாரின் பாடல் ஒலி மெல்ல காற்றில் கசிந்து வந்து இருவரின் மனதையும் உருக்கியது.

அதை கேட்டபடி பாத்திரங்களை விளக்கி வைக்க தொடங்கினார் ரவீந்தர். மிருதுளா காஃபி கப்பை கையில் எடுக்கவும், காலிங்பெல் அடிக்கவும் சரியாக இருக்க, “மதும்மா கதவைத் திறந்து யாருன்னு பாரு!” என்றார்.

தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை வீசிவிட்டு மிருதுளாவின் தட்டில் இருந்த மிச்சரை வாயில் போட்டுவிட்டு யாழினி வாசலுக்கு ஓட, “அப்பா இந்த யாழினியைப் பாருங்கப்பா, யாழி என் தட்டில் இருந்து மிச்சர் எடுத்துட்டுப் போறா” மிருதுளா சிறுபிள்ளைபோல குற்றப்பத்திரிக்கை வாசிக்க, ரவீந்தருக்கு சிரிப்புதான் வந்தது.

“உனக்கு ஸ்பெஷலாக சமோசாக செய்து தர்றேன் மிரும்மா. அவளிடம் சண்டை போடாதே!” ரவீந்தர் கூற, மிருதுளா தோழியைப் பார்த்து பழிப்பு காட்டினாள்.

யாழினி ஓடிச்சென்று கதவைத் திறக்க, லாங் ஸ்கர்ட் அண்ட் ரவுண்ட் நெக் டாப் கழுத்தைச் சுற்றி சால்வையை போட்டு நின்றிருந்தாள் கீர்த்தனா.

தன் வீட்டின் வாசலில் அவளைக் கண்டவுடன் முகம் பிரகாசமாக, “ஏய் வாலு! நீ எப்படி எங்கே வீட்டைக் கண்டுபிடிச்சே?” தமிழில் உற்சாகமாக கேட்க, அவளின் பின்னோடு நின்றான் ராம்குமார்.

அவளது உற்சாக குரல்கேட்டு எட்டிப் பார்த்த மிருதுளாவோவோ, “அப்பா யாழி யாரோ ஒரு இங்கிலீஷ்கார பையனிடம் பீட்டர் விடுறா என்னன்னு கவனிங்க!” போட்டுக் கொடுக்க, ரவீந்தர் கையைக் கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தார்.

தன் தோழியைக் கோபத்துடன் முறைத்த யாழினி, “ஏய் இவ எனக்கு தமிழ் சொல்லித் தந்த வைஜெயந்தி மேமோட மகள்” என்றவள் தந்தைக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.

“இந்த பொண்ணு பெயரைப் பார்த்தால் தமிழ்நாடு என்று சொல்லலாம். கிட்டத்தட்ட சாயல்கூட ஒத்துப் போகுதே…” மகளிடம் கேட்டவரின் கூர்மையான பார்வை, அண்ணன் – தங்கை இருவரையும் அளவிட்டது.

“அப்பா அவங்க தமிழ் குடும்பம் தான்” விளக்கம் கொடுத்துவிட்டு, அவள் எப்படி அங்கே வந்தால் என்பதை ஆங்கிலத்தில் விசாரிக்க, கீர்த்தனா  பக்கத்து வீட்டிற்கு குடிவந்திருக்கும் விஷயத்தைக் கூறினாள்.

“இது என்னோட அண்ணா ராம்குமார்” கீர்த்தனா அறிமுகம் செய்து வைக்க, மிருதுளாவின் பார்வை அவனின் மீது படிந்து மீண்டது. அதற்குள் இருவருக்கும் காஃபி பொட்டு எடுத்து வந்தார் ரவீந்தர்.

“பக்கத்தில் தமிழ் பாடல் கேட்டுச்சு. ஏற்கனவே இந்த ஏரியாவில் உங்க வீடு இருப்பதாக அம்மா சொன்ன ஞாபகம். அதுதான் அக்கா பார்க்கலாம்னு வந்தேன்” என்றவள் விளக்கம் கொடுக்க, ராம்குமார் தங்கையைக் கண்டிக்கும் விதமாக நோக்கினான்.

அதற்குள் அவர்களைத் தேடி வந்த சிவசந்திரன் – வைஜெயந்தி அங்கே வைத்தனர். ரவீந்தரின் தோற்றத்தைக் கண்டவுடன், சில காரணங்களால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ் குடும்பம் என்பதை புரிந்துகொண்டனர்.

அவர்களை வரவேற்ற மதுர யாழினி, “இவர் என்னோட அப்பா ரவீந்தர், இவள் என்னோட தோழி மிருதுளா மேம்” அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றனர் சிவசந்திரனின் குடும்பம்.

அதற்கு அருகிலேயே யாழினியின் சொந்த இல்லம் இருந்ததால், இரண்டு குடும்பங்களுக்கு நடுவே நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டது. வைஜெயந்தி மூலமாக அவர்களின் குடும்பத்திற்கு அறிமுகமான யாழினி, ராம்குமாருக்கு தங்கையாக மாறிப் போனாள்.

அதன்பிறகு அவர்களைப் பற்றி பேசுவது நண்பனின் வழக்கமாக இருக்க, யாதவின் பொறுமை மெல்ல குறைய தொடங்கியது. யாரோ ஒரு பெண்ணைப் பற்றி தினமும் புலம்புபவனிடம், “தேனியா திருச்சியா அவ பேரு என்ன சொன்னே?” என்றான் புருவம் தூக்கியபடி.

ராம் கோபத்தில் முகம் சிவக்க அமைதியாக இருக்கவே, அவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க தொடங்கினர் தேவதர்ஷினியும், ஜார்ஜும்!

“அவ தமிழ் கத்துகிட்டு இப்போ என்ன செய்ய போறா? அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல” என்றவனை இடைமறித்து ராம் ஏதோ சொல்ல வர, அவனைக் கையமர்த்தி தடுத்தான் யாதவ்.

“சும்மா அவ புராணமே பாடதேடா… இங்கே பாரு காதில் ரத்தம் வருது” காதில் சுண்டு விரலைவிட்டு ஆட்டியபடி அவனை கேலி செய்ய, தன் கையில் இருந்த நோட்டினால் அவன் முதுகில் நான்கு அடியைப் போட்டான் ராமிற்கு அப்போதும் கோபம் அடங்க மறுத்தது.

ஒருவேளை அவன் சொல்ல வரும் விஷயத்தைக் காதுகொடுத்து கேட்டிருந்தால், பின்நாளில் நடக்கவிருக்கும் பிரச்சனைகளைத் தடுத்திருக்கலாமோ?

“அவளைப் பற்றி ஏன் பேச வேண்டாம்னு சொல்றே” அவன் கடுப்புடன் காரணம் கேட்க, “ஒரு பெண்ணைப் பற்றி வாய் ஓயாமல் நீ பேசுவதைப் பார்த்து எனக்கு பொறமை அதுதான்” யாதவின் கண்கள் சிரிக்க, முகத்தை சீரியசாக வைத்துகொண்டு கூறினான்.

அவனது அசைவிற்கு ஆயிரம் அர்த்தம் கற்கும் ராமோ, “ஒருநாள் அவளைப் பற்றி தெரிந்துகொள்ள நீ என்னிடம் வருவே இல்ல அப்போ கவனிச்சுக்கிறேன்” மிரட்டிவிட்டு அவன் எழுந்துகொள்ள, அதைகேட்டு வாய்விட்டுச் சிரித்தான் யாதவ்.

“நீ சொன்னது இந்த ஜென்மத்தில் நடக்க வாய்ப்பில்ல ராஜா” நமட்டுச் சிரிப்புடன் கூறியவன், கட்டை விரலை தலைகீழாகக் காட்டினான்.

“வாழ்க்கையின் சுவாரசியமே நாளை என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் இருப்பதுதான். எனக்கென்னவோ நீ கண்டிப்பாக அவளைப் பற்றி என்னிடம் கேட்கும் நாளும் வரும்னு தோணுது” ராம் உறுதியாக கூற, மற்ற மூவரும் வேற்றுகிரகவாசியை போல பார்த்தனர்.

அவனது குரலில் இருந்த மாறுதல் மனதைப் பிசைய, “இவ்வளவு உறுதியாக சொல்றீயே அதுக்கு என்ன காரணம்?” என்றான் யாதவ் எரிச்சலோடு.

“அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள் தமிழையும் கற்று, நம்ம நாட்டின் காலச்சாரத்தை பின்பற்றி வாழ நினைக்கிறாள். நீயோ இந்தியாவில் பிறந்திருந்தாலும், இந்த நாட்டின் காலச்சாரத்தில் வாழ விருப்பபடுகிறாய். இந்த இரு விஷயமும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கிறதே…” என்றவன் விளக்கமே யாதவின் குழப்பத்தை அதிகரிக்க செய்தது.

“எங்களுக்கு ஒண்ணுமே புரியலடா” என்று தர்ஷினி ஒருபக்கம் புலம்ப, “எனக்கும் தான்” என்றான் ஜார்ஜ்.

“எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்ற கோட்பாட்டின் படி, லவ் என்ற மேஜிக் உன் வாழ்க்கையிலும் நடக்கும். இரு வேறு குணம் உடைய இருவர் சந்தித்தால் அங்கே காதல் மலர்வது இயல்புதானே…?!” என்று சொல்லி கண்ணடித்த ராமைத் துரத்தி அடிப்பது இப்போது யாதவின் முறையானது.

அதைக்கண்டு மற்ற இருவரும் வாய்விட்டுச் சிரிக்க, “என்னோட வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ எதிர் துருவ கோட்பாடு சொல்றீயா?” யாதவ் அடிக்க துரத்திட, அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டினான்.

“வாழ்க்கையில் இருக்கும் சுவாரசியமே நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் இருப்பதுதானே…? அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்” ராம் கொடுத்த விளக்கம் மற்றவர்களையும் திகைப்பில் ஆழ்த்த, தன் நண்பனின் குறும்பை ரசித்த யாதவ் அதுக்குமேல் எதுவும் சொல்லவில்லை.

அந்த சண்டைக்குப் பிறகு இரு நண்பர்களிடமும் எந்தவிதமான மனக்கசப்பும் ஏற்படவில்லை. அப்போதே யாதவ் காதுகொடுத்து கேட்டிருந்தால், பின்நாளில் ஏற்பட இருந்த பிரச்சனைகளை நடக்கவிடாமல் தடுத்திருக்கலாம்.

விதி அவனது வாழ்க்கையில் விளையாட நினைத்ததால், கடைசிவரை அவன் அந்தப் பெண் யாரென்று அறிந்து கொள்ளாமல் போனான். இரண்டு ஆண்டுகள் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது

அன்று விடுமுறை நாள் என்பதால் ராம்குமாரின் குடும்பமும், மிருதுளா – யாழினியும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அவர்களிடம் ஏதோ வருவதாக சொல்லிவிட்டுச் சென்ற யாழினி, கொஞ்ச நேரத்தில் ரவீந்தரை உடன் அழைத்து வந்தாள்.

அந்த ஹோட்டலின் உரிமையாளர் ரவீந்தர் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது. அங்கிருக்கும் உணவுகள் அனைத்தும் தென்னிந்திய முறையில் தயாரிக்கப்பட, அதை ரசித்து உண்பதற்கு அங்கே தனி பட்டாளமே இருந்தது.

ரவீந்தரின் கைமணம் அங்கிருக்கும் தமிழர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்க, “சாரி இதுவரை இது உங்க ரெஸ்டாரன்ட் என்று எனக்கு தெரியாது” – சிவசந்திரன்

“அதனால் என்னங்க… இந்த ஊரில் பல கிளைகள் திறந்திருந்தாலும், இந்த கடை எனக்கு ரொம்ப ஸ்பெசல். சரி என்ன சாப்பிடுறீங்க” அவர்களை அமரவைத்து உபசரிக்க தொடங்கினார்.

“ஒரு தமிழர் கடல்கடந்து வந்து அமெரிக்கா நாட்டில் ஹோட்டல் வைப்பது சாதாரண விஷயம் இல்லங்க” வைஜெயந்தி இலகுவாகக் கூற, அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.

“இது என் மனைவியோட ஆசை. அவளுக்கு இயல்பாகவே சமையல் நல்லா வரும். இந்த நாட்டிற்கு வந்து நல்ல உணவுகளை சாப்பிடுவது அரிது என்று புரிந்ததும், எனக்காக நீங்க ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்கனும்னு சொன்னதன் வெளிப்பாடுதான் இப்போ நீங்க பார்க்கும் இந்த வளர்ச்சி” அதை சொல்லும் போது அவரின் கண்ணில் தெரிந்த காதலை மற்றவர்களால் உணர முடிந்தது.

அவர்களுடன் தன் மகளையும் அமர வைத்துவிட்டு, மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றார். ஆர்டர் கொடுத்த உணவுகள் வரும் வரை பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, கீர்த்தனா வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தாள்.

வழக்கம்போலவே தோழிகள் இருவரும் அங்கே வந்திருந்த ஆண்களுக்கு குறும்புடன் மார்க் போட, ராம்குமாரின் பார்வை தன் எதிரே அமர்ந்திருந்த மிருதுளாவின் மீது படிந்தது.

“எனக்கு எவ்வளவு மார்க்?” ராம்குமார் ஆர்வமாக கேட்க, “100/0” – மிருதுளா.

தன்னைக் குனிந்து பார்த்த ராம், “அவ்வளவு மோசமாகவா இருக்கேன்!” என்று கேட்க, தன் சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி திரும்பிய யாழினியின் பார்வையில் மின்னல் வெட்டியது.

Leave a Reply

error: Content is protected !!