Neer Parukum Thagangal 8.1

NeerPArukum 1-88034cf3

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 8.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்

‘சொல்றதுல என்ன இருக்கு?’ என்ற செல்வி, “ம்ம், எட்டு வயசா இருக்கிறப்போ பைக் ஆக்சிடென்ட்ல என் அப்பா இறந்திட்டாங்க” என ஆரம்பித்ததும், ஓரளவு அவளைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அவள் பேசுவதைக் கவனித்தான்.

“அதனால நானும் அம்மாவும் எங்க தாத்தா வீட்டுக்கு வந்திட்டோம். அப்போ பாட்டி உயிரோட இல்லை. தாத்தா மட்டும்தான். என் பெரியப்பா சிங்கப்பூர்ல வேலை பார்த்ததால, தாத்தா வீட்டுப் பக்கத்திலயே பெரியம்மா வீடு எடுத்து இருந்தாங்க” என்றாள் ஓர் சுருக்கமான அறிமுகமாய்!

“அப்ப, ‘செல்வியோட அக்கா-ன்னு’ என்கிட்ட பேசினது உங்க பெரியம்மா பொண்ணா?”

“ம், ஆமா” என்றவள், “ரொம்ப நாள் அம்மாவையும் என்னையும் தாத்தா-தான் பார்த்துக்கிட்டாரு. சொத்து-ன்னு எதுவும் பெருசா கிடையாது. சின்னச் சின்ன வேலைக்குப் போய் எங்க எல்லா தேவையையுமே அவர்தான் கவனிச்சாரு!  

அந்த வயசுல எங்களுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டாரு. ஒரு கட்டத்தில வர்ற வருமானம் வீட்டுச் செலவுக்கு, என் படிப்புக்கு, அவர் மாத்திரை மருந்துக்குப் பத்தாமா போய் வெளிய கடன் வாங்கிறாருனு தெரியவும்… பெரியம்மா கூட சேர்ந்து அம்மாவும் மில்லு வேலைக்குப் போனாங்க.

வாடகைக்குத் தனியா வீடு எடுக்காம எங்க தாத்தா வீட்ல இருந்துகிட்டு, மத்த செலவை அம்மா பார்க்க ஆரம்பிச்சாங்க. இப்படித்தான், கொஞ்ச கொஞ்சமா அப்பா இல்லாத வாழ்க்கை-க்கு பழக ஆரம்பிச்சோம்” என்று நிறுத்தினாள்.

“அப்பா வேணும்னு கேட்டு… நீங்க அடம்பிடிப்பீங்களா? ஏன்னா, பாட்டிகிட்ட அம்மா-அப்பா வேணும்னு நான் அடம்பிடிச்சதா சொல்வாங்க”

“ம், அடம்பிடிச்சேனா?” என ஒருமுறை அவளுக்கு அவளே கேள்வி கேட்டவள், “அப்படி எதும் இல்ல” என்றதும், “அப்பா ஞாபகமே வந்ததில்லையா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“அப்படியும் இல்லை” என்றவள், “தாத்தா, பெரியம்மாக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். நாங்க இங்க வந்தப்பவே, ‘அப்பா வேணும்னு கேட்டு… அம்மாவைக் கஷ்டப்படுத்த கூடாது. அம்மா சொல்றதைக் கேட்டு நடக்கணும். அவங்களை எதிர்த்து எதும் பேசக் கூடாது’னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பாங்க”

“அந்த வயசிலேவா?” என்றான் ஆச்சரியமாக!

“ம்! அதனாலயோ என்னமோ, நான் அம்மாகிட்ட பேசினதை விட அக்காகிட்ட பேசினதுதான் அதிகம். அவங்க நிறைய ஆறுதல் சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்ல! சேர்ந்தே ஸ்கூல் போறது, படிக்கிறது, விளையாடறது-னு நாங்க ரொம்ப க்ளோஸ்!” என்று அக்கா மீதுள்ள பாசத்தைப் பேசினாள்!

அந்தப் பேச்சிலிருந்து, அவளுக்கு அவளது அக்காவை நிரம்ப பிடிக்குமென்று தெரிந்ததும், “அப்ப உங்க அம்மாகூட பேசறதே இல்லையோ?” என்று தயக்கம் குறைந்து கொஞ்சம் சகஜமாகக் கேட்டான்.

“அப்படிச் சொல்ல முடியாது. ம்ம்” என்று யோசித்தவள், “அம்மா வேலைக்குப் போய்க்கிட்டே… வீட்டு வேலையும் பார்த்து, தாத்தாவையும் கவனிச்சிக்கிட்டு கொஞ்சமும் ரெஸ்ட்டே இல்லாம ஓடுனாங்க” என்று ஒற்றைப் பெற்றோராய் அம்மாவின் கஷ்டத்தைப் பேசியவள், “எனக்காகத்தான அதெல்லாம்?” என்று அம்மாவின் அன்பைச் சொன்னாள்.

“உங்க பெரியம்மா ஹெல்ப் பண்ணலையா?”

“பணம் விஷயத்தில பெரியப்பா ரொம்ப கறார் பேர்வழி. தாத்தா ஆஸ்பத்திரி செலவுக்கே பெரியம்மாவைக் கொடுக்க விடமாட்டாரு. அதனால அவருக்குத் தெரியாம அம்மாக்காக என்ன உதவி செய்ய முடியுமோ அதைப் பெரியம்மா செஞ்சாங்க” என்று நிறுத்தினாள்.

சற்றுநேரம் இருவருக்கும் இடையே உரையாடல் இல்லாமல் இருந்தது!

ஒரு சிறு மௌனத்திற்குப் பின், “பேசுவோம். அதெல்லாம் நானும் அம்மாவும் பேசுவோம்” என்று அப்பொழுது சரவணன் கேட்ட கேள்விக்குச் செல்வி பதில் சொல்ல, “அம்மாவைப் புரிஞ்சிக்க முடியுதுங்க. கிட்டத்தட்ட என் பாட்டியோட நிலைமையும் இப்படித்தான் இருந்தது” என்றான்.

ஒரு சிறு தலையசைப்புடன் அடுத்து எதைச் சொல்லவென யோசித்தவள், “ம், பெரியப்பா பெரியம்மா ரெண்டு பேரும் வேலை பார்த்ததால, அக்கா டுவல்த் முடிச்சதும் காலேஜ்ல சேர்ந்தாங்க. எனக்கும் காலேஜ் போய் படிக்க ஆசையா இருந்தது. ஆனா, ‘அது நம்மளால முடியாது, பாலிடெக்னிக் படி’-ன்னு அம்மா சொன்னதும், சரின்னு ஒத்துக்கிட்டேன்” என்றாள்.

“ஆசைப்பட்டதைப் படிக்க முடியலைனா வருத்தம் இருக்குமே?! அம்மாகிட்ட கேட்டுப் பார்த்திருக்கலாமே?” என செல்விக்காக ஒரு கேள்வி கேட்டான்.

“வருத்தம் இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா அம்மாக்கு எவ்வளவு கஷ்டம்? அந்தக் கஷ்டத்தலயும் படிக்க வைக்காம விட்டாங்களா? முடிஞ்சளவு படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்கதானே?” என்ற கேள்வியிலே சரவணன் கேட்ட கேள்விக்கான பதில் இருந்தது.

கிடைக்காததை நினைத்து மனம் கணத்துப் போய் பாரமாகி உடைந்து போக விடாமல், கிடைப்பதைக் கொண்டு மனதினை களைப்படையாமல் பார்த்துக் கொள்கிறாள் என்று சரவணனுக்குப் புரிந்தது.

“அப்புறம்” என யோசித்துவிட்டு, “அக்காவோட படிப்பு முடிஞ்சி அவங்களுக்கு மேரேஜ் நடந்து பக்கத்து ஊருக்குப் போனதும், லைஃப் போர் அடிச்சது. ஆனா படிப்பு முடிஞ்சி நானும் வேலைக்குப் போனதுமே அது சரியாடுச்சி. அப்புறம் வாழ்க்கை அப்படியே போய்க்கிட்டு இருந்தது.

ரெண்டு பேர் வேலை பார்த்ததால வீட்டு நிலைமையும் ஓரளவுக்கு மாறிச்சி. அதனால சம்பாதிக்கிற காசுல கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்சி ஒரு யூஜி கோர்ஸ் படிக்க நினைச்சேன். ஆனா அதுக்குள்ள…” என்று நிறுத்தினாள்.

“மேரேஜ் வந்துடுச்சா?” என்று சரவணன் சரியாக கணிக்கவும், “ஆமா, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்… எனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கணும்… நான் சந்தோஷமா வாழறதைப் பார்க்கணும்னு என் அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க.

அவங்களுக்கு எப்பவும் என்னைப் பத்தி மட்டும்தான் யோசனை. நான் நல்லா இருக்கணும், நான் சந்தோஷமா இருக்கணும். இப்படி!” என்றாள் கொஞ்சமாய் கமறிய குரலில்!

“படிக்க யோசிச்சி வச்சதை நீங்க சொல்லலையா?”

“மேரேஜ்தான! வாழ்க்கை ஆரம்பம்தான?! அதுக்கப்புறம் வேலைக்குப் போய் படிக்க முடியாதா என்ன?” என்றாள் ஓர் மென்னகையுடன்!

வாழ்க்கை தரும் எல்லா விடயங்களையும், செல்வி நேர்மறை எண்ணத்துடன் அணுகுவது போலிருந்தது. அந்த அணுகுமுறை அவனுக்கு வியப்பைத் தந்தது!

மடியில் உறங்கும் மகனின் நெற்றியை வருடிவிட்டபடி, “அம்மா வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. மாப்பிள்ளையும் வந்தது. எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்தான். கல்யாணம்னு முடிவானதும் நிறைய கனவோடு இருந்தேன்” என்றவள், “ம்ம், எல்லாருக்கும் இருக்கும்தானே?” என்று சரவணனைப் பார்த்துக் கேட்டாள்.

“ம்ம்ம், நிச்சயமா!” என்றான் எதார்த்தமாக!

“என் விஷயத்தில கனவு கனவாவே இருந்தது. நிஜத்தில…” என கண்கள் மூடிய செல்விக்கு, கருவிழிகளின் காரிருளுக்குள் தெரிந்த கடந்த காலத்தைக் காண சகிக்காமல் கண் திறந்து, சரவணனைப் பார்த்துக் கடுகளவு புன்னகைத்துக் கொண்டாள்!!

******************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

சேது சிரித்துக் கொண்டதால் அந்த அறை முழுதும் ஒரு இலகுத்தன்மை சில நிமிடங்கள் நிலவியது!

ஆனால் அதன்பின், “ம்ம்ம் அப்புறம்?” என்று முணுமுணுத்தவள், “நெக்ஸ்ட் டே ஈவினிங் கான்ஷியஸ் வந்தவுடனே அப்பாவைத்தான் தேடினேன். என்னமோ அப்பா என் பக்கத்தில இருந்தா… அப்பாகிட்ட அழுதா எல்லா சரியாயிடும்னு தோணிச்சி” என்றாள் அன்றைய மெய் வலியினைக் காட்டும் குரலில்!

சேது செய்வது அறியாமல் அவளையே பார்த்திருந்தான்!

“ஆனா பாரு… அம்மா மட்டும்தான் என் பக்கத்தில இருந்தாங்க. அப்பாவைக் காணும்” என்றாள் விழிகளை விரித்து!

“என்ன சொல்ற, காணுமா?” என்று சேது அதிர்ச்சி ஆனதுமே, “இல்லை இல்லை அங்கதான் இருந்தாரு” என கண்மணி நிதானமாக சொல்ல, “ஷ்ஷப்பாடி” என அவன் நிம்மதி அடைகையில், “ம் ம், அதே ஹாஸ்பிட்டல்-ல அப்பாவும் அட்மிட் ஆகியிருந்தாரு” என்றாள் அன்றிருந்த அடங்கா துயரை வெளிப்படுத்தும் குரலில்!

“புரியிற மாதிரி சொல்றியா?”

“எனக்கு நடந்ததைக் கேட்டதும், ஷாக்-ல அப்பாக்கு மைல்டு ஸ்ட்ரோக் வந்து ஒரு பக்க காலும் கையும் மூவ் பண்ண முடியாம போயிடுச்சி. ஸோ… ” என்று ஏதோ சொல்ல வந்தவளின் பேச்சு, தந்தையை எண்ணி தடைபட, “ஸோதான்” என்றாள் சோகமாக!

“கஷ்டம்தான்” என்றான் தன்னையறியாமல்!

“மூணு பேருக்குமே கஷ்டம்னாலும், எங்க ரெண்டு பேரை விட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க” என்றதும், அவன் புரியாமல் கண்கள் சுருக்கிட, “அவ்வளவு கவலையிலும் எங்களைப் பார்க்கணும்ல, அதைச் சொல்றேன். ஆனா அம்மா ஸ்டராங்கா நின்னு பார்த்தாங்க” என்றாள் மெலிதான குரலில்!

“ரிலேட்டிவ்ஸ்?” என்று ஒரே வார்த்தையில் அவன் கேட்டதற்கு, “அம்மா, அப்பா லவ் மேரேஜ் பண்ணதால பேமிலி சப்போர்ட் கிடையாது சொன்னேனே?!” என அவள் முன் கூறிய வார்த்தைகளை நினைவு படுத்தினாள்.

“ஓ! ஓகே!! போலீஸ் கம்பளைன்ட் கொடுத்தியா?”

“நான் கண்விழிச்சதும் போலீஸ் வந்து விசாரிச்சாங்க. அந்த ரெண்டு பேரோட அடையாளத்தையும் சொன்னேன். எல்லா டீடெயில்ஸூம் கேட்டு எழுதிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் எஃப்ஐஆர், அரெஸ்ட் அவ்வளவுதான்!” என்றாள்.

அதற்குப்பிறகு இருவரிடமே ஓர் பலத்த மௌனம்!

அதன்பின், “இருபது நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தோம். அப்புறமா எங்களோட டிஸ்சார்ஜ் நடந்தது. அப்பா சரியாகிறதுக்கு கொஞ்ச நாளாகும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஸோ அதுவரைக்கும் அவர்கூடவே யாராவது ஒருத்தர் இருந்து அவரைப் பார்த்துக்க வேண்டிய சிச்சுவேஷன்.

ஹாஸ்பிட்டல் ரூம் ரென்ட், டாக்டர்ஸ் பீஸ், என்னோட கவுன்சலிங், அப்பாக்கு மெடிசின்-னு நிறைய செலவு. சமாளிக்க முடியாம ரொம்பவே திணறினோம். பட் அப்பா அவரோட ஜாப் ரிசைன் பண்ணதால கம்பெனில செட்டில்மென்ட் அமௌன்ட் கொஞ்சம் தந்தாங்க. அதை வச்சி ஓரளவு சமாளிச்சோம்.

ஆனா அதுக்கப்புறம் லைஃப் ரன் பண்றது எப்படிங்கிற கேள்வி வந்தது. என்ன செய்யன்னு தெரியாம கொஞ்ச நாள் போனது. அப்புறம் பீஜிய டிஸ்கன்டினியூ பண்ணிட்டு இருக்கற டிகிரியை வச்சி நான் வேலைக்குப் போகணும், அம்மா அப்பாவைப் பார்த்துக்கணும்னு முடிவு எடுத்தேன்” என நிறுத்தம் இல்லாமல் கண்மணி சொல்லி முடித்தாள்.

“அதுக்கு அம்மா, அப்பா ஓகே சொன்னாங்களா?”

“கவலைப்பட்டாங்க… லைஃப் இப்படி மாறும்னு எக்ஸ்பெஃக்ட் பண்ணலை-ல? ஸோ ரொம்ப கவலைப்பட்டாங்க” என்று வருந்தியவள், “இப்போ எனக்கு ஒரே ஒரு ஆசைதான். அப்பாக்கு சரியாகணும். எனக்கு அதுவே போதும்” என்றாள் பெருந்துயர் குரலில்!

“சரியாயிடும்…” என அவள் துயராற்ற சொன்னான்.

முயற்சி செய்து முறுவல் ஒன்று தந்துவிட்டு, “அதுக்கப்புறமா ஜாப் கிடைச்சது! வேலைக்குப் போறேன்! சேலரி வருது! அப்பாக்கு மருந்து… வாடகை… கோர்ட் கேஸ்… லைஃப் இப்படித்தான் போகுது” என்று கடகடவென பேசி… காயத்தின் சுவடுகள் தெரிகின்ற பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு, “இதோ இப்போ உன் முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

“கிரேட்!” என சேது மெச்சியதும், ‘எதற்கு?’ என்பது போல் அவள் புருவங்களை உயர்த்த, “வீட்டுக்குள்ளயே இருக்காம, வெளிய வந்து லைஃபை பேஸ் பண்ற! அதுக்கு!” என்றான்.

சங்கடத்தை வெளிப்படுத்தும் சிரிப்பொன்றை சிரித்துவிட்டு, “ஆனா மனசில நிறைய வலி, அழுத்தம் இருக்கு” என்றாள் சோர்வு செறிந்த குரலில்!

மேலும் அட்டைப் பெட்டிகளை வெறித்துப் பார்த்தபடியே, “சிலநேரம் மனசில இருக்கிற பாரத்தை யார்கிட்டயாவது சொல்லி ஓ-ன்னு கத்தி அழணும் போல தோணும். ஆனா யார்கிட்ட சொல்ல?” என்றாள் அவன் விழிகளைச் சந்தித்து!

“அம்மா, அப்பாகிட்ட ஷேர் பண்ணலாமே?” என்றான் உள்ளத்தைச் சொல்ல உனக்கென உறவு இருக்கிறதே என்ற தொனியில்!

“ஹாஸ்பிட்டல்ல வச்சே அப்பாகிட்ட சொல்லி அழணும்னு தோணிச்சி. ஆனா   இப்ப நிதானமா யோசிச்சா, அவர் முன்னாடி அழுதா தாங்குவாரானு… நான் அழறதைப் பார்த்து திரும்ப அவருக்கு எதும் ஆயிடுமோனு பயமா இருக்கு” என்றாள் உள்ளதைச் சொன்னால் உறவு தாங்காது என்ற தொனியில்!

‘அம்மாகிட்டயாவது சொல்லலாமே?’ என்பது போல் அவன் பார்க்கவும், “நான் தைரியமா இருக்கிறதா நினைச்சிதான் அவங்க நடமாடிக்கிட்டு இருக்காங்க. அப்புறம் எப்படிச் சொல்ல?” என்றாள் அந்த கேள்விக்கு!

“ம்ம்ம் பிரண்ட்ஸ் யாரும் இல்லையா?” என்றான் அடுத்ததாக!

“இருந்தாங்க. இந்த இன்சிடென்ட்டு-க்கு அப்புறமா டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ற மாதிரி தோணுது. ஜாப் கிடைக்கிறதுக்கு முன்னகூட மணி சார்ட்டேஜ்-னு கேட்டுப் பார்த்தேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அதோட விட்டுட்டேன். என்னென்னா என்ன… அவ்வளவுதான்!” என்றாள் அதற்கும்!

“வேலை பார்க்கிற இடத்தில?” என்றான் அடுத்தடுத்து என்ன கேட்க என்று தெரியாமல்!

“இருக்கிறாங்க. நிறைய ஜென்ஸ்தான். பேசலாம் செய்வாங்க. பட் என்னோட பலவீனத்தை வெளிய காட்டினா… ம்ம், அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு, அவங்க பலத்தை காட்டிடுவாங்களோ-ன்னு பயமா இருக்கு. அது ரொம்பவே பயம்” என்றாள் குனிந்தபடி!

ஒரு நொடி கண்மூடித் திறந்தவன், “கண்மணி” என்று அழைத்ததும், ‘ம்ன்’ என கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தவளிடம், “நீ உன்னோட பலவீனத்தை என்கிட்ட காட்டலாம். என்னோட பலத்தை காட்ட மாட்டேன்” என்றான் பூடகமாக!

புரிந்ததா? இல்லை, புரியவில்லையா? என தெரிந்து கொள்ள முடியா பார்வை பார்த்தவளிடம், “கண்மணி யார்கிட்டயாவது ஓ-ன்னு கத்தி அழணும்னு அப்ப சொன்னியே… அந்த யாரோவா நான் இருந்திட்டுப் போறேன்” என்றான் சேது சற்றே வெளிப்படையாக!!

*****************************