Rose – 17

Rose – 17
அத்தியாயம் – 17
தன்னுடைய நண்பர்கள் பட்டாளத்துடன் பேசியபடியே சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வையைப் படரவிட்டாள். ஆறடிக்கு குறையாத உயரத்துடன் கம்பீரமாக நடந்து சென்றவனைப் பார்த்தவள், “அழகன்டா” என்றாள் ரசனையுடன்.
அவளின் பார்வை சென்ற திக்கைக் கவனித்த மிருதுளா, “ரொம்ப அழகாக இருக்கான் இல்ல” என்ற கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்தாள் யாழினி.
தன் தோழியின் அருகே தலையை சரித்து, “எவ்வளவு மார்க் கொடுக்க போறே” மிருதுளா கிசுகிசுப்பாக வினாவிட, “100/ 100” தன்னையும் மறந்து சொல்லிவிட்டாள்.
அதைக்கேட்ட கீர்த்தனாவோ, “யாதவ் அண்ணாவிற்கு யாழினி அக்கா எவ்வளவு மார்க் கொடுத்தாங்க தெரியுமா?” என்று கேட்க, தோழிகள் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே வந்ததில் இருந்தே இருவரின் ரகசியப் பேச்சு வார்த்தையைக் கவனித்த கீர்த்தனா, “நான் சொல்லட்டுமா?” குறும்புடன் வினாவிட, ‘யாதவ் இங்கே வந்திருக்கிறானா?’ என்று திரும்பிப் பார்த்தான் ராம்குமார்.
யாழினி முயன்று வரவழைத்த தைரியத்துடன், “ஆமா நூறு மார்க் கொடுத்தேன் தான். அவன் எங்கப்பா மாதிரியே அழகு. அவரோட குணம் அறிந்த பிறகுதான் சொன்னேன்.நீ என்னைப் போட்டுக் கொடுத்தால், நீ ஸ்கூலில் சைட் அடிக்கும் விஷயத்தை வைஜெயந்தி அம்மாவிடம் சொல்லிடுவேன்” என்று சொல்ல, இம்முறை மிருதுளாவின் பார்வை யாதவ் மீது படிந்து மீண்டது.
சற்றுத் தொலைவில் நின்றிருந்த யாதவைக் கைகாட்டி, “நீ சொன்ன அந்த பர்சன் இவரா?” மெல்லிய குரலில் கேட்க, யாழினியும் தலையாட்டி வைத்தாள்.
தன் நண்பர்களின் புடைசூழ ஹோட்டலைவிட்டு யாதவ் வெளியே செல்வதைக் கண்டு, “யாழினி உனக்கு ஒரு மாப்பிள்ளை பொம்மை வாங்கித் தர்றேன்னு சொன்னேன் இல்ல. அது இவன்தான்” ராம்குமார் சிரிக்காமல் சொல்ல, “ரியலி” என்றாள் யாழினி குதூகலத்துடன்.
அவனும் சிரித்தபடி தலையசைத்து, “உன்னோட ராமண்ணா சொல்றேன். உனக்கு மாப்பிள்ளை அவன்தான் போதுமா. நான் இங்கிருந்து போகும்போது, என் செல்ல தங்கையை இந்தியாவுக்கு கூட்டிட்டு போயிடுவேன். அவளுக்கு இந்த இயந்திர வாழ்க்கை வேண்டாம்”அவளின் தாடையைப் பற்றி செல்லம் கொஞ்சினான்.
அதைப் பொறாமையுடன் பார்த்த மிருதுளா, “அப்போ என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டீங்களா?” மற்றவர்கள் அறியாமல் ராம்குமாரிடம் கேட்டாள்.
“என் வாழ்க்கையே நீதான்னு முடிவெடுத்திருக்கேன். ஆனால் அதை செயல்படுத்த கொஞ்ச வருடங்கள் ஆகும். அதுவரை எனக்காக காத்திருப்பாயா?” என்று கேட்க, அவளும் ஒப்புதலாக தலையாட்டினாள்.
அந்த சமயத்தில் யாதவ் கொள்கைகளைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கவில்லை. அத்துடன் யாழினி விளையாட்டுப் பெண் என்பதால், எதையும் யோசிக்காமல் சொன்னான். ஏனோ அது அவளின் ஆழ்மனதில் விதையாக விழுந்து விருச்சமென்று வளர்ந்தது.
ராம்குமார் பேசுவதைக் கேட்ட ரவீந்தரோ, “என் பெண்ணை இந்தியாவில் கட்டிக் கொடுத்துட்டு, என்னால் இங்கே எப்படி இருக்க முடியும்?! யாழினி எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும், அதனால் இங்கேயே இருக்கும் பசங்களாக பார்த்து தான் கட்டிக் கொடுப்பேன்” தன் மகளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
அவர் பேசும் வாக்கியம் கொஞ்சம் கொஞ்சம் புரிய, “அப்பா நம்ம இந்தியாவே போலாம். இந்த இயந்திர வாழ்க்கை வேணாம்” தன் பக்க கருத்தைக் கூறினாள்.
“உன்னோட சந்தோசம் அங்கேதான்னா, அப்பாவும் அங்கே வந்துவிடுகிறேன் போதுமா?” ரவீந்தர் கேட்கவும், அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவு வரவும் சரியாக இருந்தது.
அங்கிருந்த உணவுகளை ஆர்வமகா சுவைத்த கீர்த்தனா, “அக்கா இந்த சாப்பாடு டேஸ்ட் பண்ணிப் பாரு சூப்பராக இருக்கு. இங்கிருந்து போனதும் இதை எல்லாம் சமைத்துக் கொடுப்பாயாம். நான் டெஸ்ட் பார்த்து மார்க் போடுவேணாம்” சிரிக்காமல் சொல்ல, “ஓகே” என்றாள் யாழினி.
யாழினி – மிருதுளாவும் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ எடுத்து மேல்படிப்பைத் தொடர, வருடங்கள் உருண்டோடியது. அவர்கள் இருவரும் மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தனர்.
யாதவ் – ராம்குமார் இருவரும் நான்கு ஆண்டுகளில் டாக்டர் ஆப் மேடிசன்(MD) படிப்பை முடித்துவிட்டு, FMGE எனப்படும் தேர்வை எழுதி இந்தியா கிளம்பினர்.
இத்தனை ஆண்டுகாலமாக சம்பாரித்த பணத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க நினைத்த சிவசந்திரன் சொந்த மண்ணிற்கு செல்ல ஆசைப்பட, வைஜெயந்தி முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி தெரிந்தது. ராம் பல்கலைகழகத்தில் படிப்பை முடித்திருக்க, கீர்த்தனா பள்ளிப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றாள்.
ராம்குமாரின் குடும்பம் மற்றும் யாதவ் ஐவரும் இந்தியா செல்வது என்று முடிவானது. அந்த முடிவை அறிந்த நாளில் இருந்தே, ராம்குமாரிடம் எப்படி பேசுவது என்ற சிந்தனையில் வலம் வந்தாள் மிருதுளா.
அன்று மாலை வழக்கம்போலவே தன் தோழியுடன் வீட்டிற்கு செல்ல, இருவரையும் புன்னகை முகமாக வரவேற்றார் வைஜெயந்தி. மொத்த குடும்பமும் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மிருதுளாவின் பார்வை ராமைத் தேடி அலைபாய்ந்தது.
அவளின் பின்னோடு வந்த யாழினி வைஜெயந்தியை கட்டியணைக்க, “உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் நல்ல படிக்கணும். அதை முடிச்சபிறகு உங்க மனசுக்கு பிடித்த வேலையை செய்ங்க. மத்ததை உங்க பெத்தவங்க பார்த்துப்பாங்க” தாய்க்கு நிகரான அறிவுரைகளை வழங்க, இரு பெண்களும் சரியென்று தலையாட்டினர்.
அந்த நேரத்தில் அங்கே வந்த கீர்த்தனாவோ, “அக்கா நீயில்லாமல் இந்தியாவில் எப்படி இருக்க போறேனோ தெரியல. இங்கே படிப்பை முடிச்சிட்டு அங்கே வந்திடுங்க அக்கா” என்றாள்.
“அப்போ நான் வர வேண்டாமா?” மிருதுளா வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, அவளின் பார்வையோ தமையனின் மீது படிந்து மீண்டது. அதைக் கவனித்துவிட்ட யாழினி சத்தமில்லாமல் சிரிக்க, மிருதுளாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
ராம்குமார் – மிருதுளா இருவரும் ஒருவரையொருவர் விரும்பும் விஷயம் அறிந்ததால், கடைசியாக தன்னவனிடம் தனியாகப் பேச வேண்டும் என்ற தோழியின் ஆசையை நிறைவேற்ற நினைத்தாள் யாழினி. அதனால் தான் அவளைத் தன்னுடன் அழைத்து வந்தாள்.
“ஏய் வாலு! எப்போ கிளாஸ் முடிச்சிட்டு வந்தே!” அங்கே வந்தான் ராம்குமார்.
“அம்மா நான் அண்ணாவிடம் கொஞ்சம் பேசணும்” என்றவளின் முகத்தில் இருந்த கலக்கமே, அவளது மனநிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
அவளை சிந்தனையுடன் ஏறிட்ட மகனிடம், “உன்னோட அண்ணனிடம் பேச என்னிடம் எதுக்கு பர்மிசன் கேட்கிற?” செல்லமாக கடிந்துகொள்ள, அவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“சரி நீங்க போய் பேசிட்டு வாங்க. நான் காஃபி போட்டு வைக்கிறேன்” என்றார் வைஜெயந்தி. கீர்த்தனா புரிதலோடு விலகிச் செல்ல, மற்ற மூவரும் பின் பக்கம் அமைந்திருக்கும் தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் மிருதுளாவை உட்கார சொல்லிவிட்டு, “மிருதுளா உன்னிடம் ஏதோ பேசணுமாம்” தன் தோழியை மாட்டிவிட, அவளின் எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
இருவருக்கும் தனிமையைத் தந்து யாழினி விலகிச் செல்ல, “அங்கே போனதும் என்னை மறக்க மாட்டீங்க இல்ல” மிருதுளா படபடப்புடன் கேட்க, அவனோ மறுப்பாக தலையசைத்தான்.
மெல்ல மிருதுளாவின் கையைப் பிடித்து அழுத்திய ராம்குமார், “என்னை நீ நம்பலாம். என் தங்கை திருமணம் முடிந்ததும், வீட்டில் விஷயத்தைச் சொல்லி உங்க வீட்டில் முறைப்படி பேசறேன். அதுவரை உங்க வீட்டில் சமாளிக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு” என்றான்.
தன்னவனின் பிரிவை நினைத்து மிருதுளாவின் விழிகள் கலங்கிட, “ஷ்..” அவளின் கண்ணீரைத் துடைத்துவிட, சட்டென்று அவர்களின் அருகே வந்து அமர்ந்தாள் யாழினி. ராம்குமாரின் பக்கத்தில் கீர்த்தனா ஓடிவந்து அமரவும், வைஜெயந்தி வரவும் சரியாக இருந்தது.
அவர்களைக் காப்பாற்றும் விதமாக, “ஏன் யாழினி அக்கா உங்களுக்கு இந்த நாடு பிடிக்கல” என்றாள் கீர்த்தனா.
சின்னவளின் பார்வையைப் புரிந்துகொண்ட யாழினி, “சின்ன வயதில் இருந்தே யாரும் இல்லாத அனாதைபோல வளர்ந்த எனக்கு உறவுகளோடு இணைந்து வாழ ஆசை. என் அம்மாவுடன் பிறந்தவங்க இன்னும் இந்தியாவில் தான் இருக்காங்களாம்” இடைவெளிவிட, வைஜெயந்தி நால்வருக்கும் காஃபியைக் கொடுத்தார்.
யாழினி படிப்பு முடிந்ததும் இந்தியா வந்துவிடுவதாக சொல்ல, “சூப்பர் அக்கா! ஆனால் இங்கே நல்ல டெவலப்மெண்ட் இருக்கே” கீர்த்தனா சிந்தனையுடன் கூற, இந்த கேள்விக்கு யாழினியின் பதில் என்னவாக இருக்குமென்று ஒருவரையொருவர் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“அப்பா என்னைக் கொண்டுபோய் கிரீச்சில் விட்டுட்டுப் போயிடுவாங்க. நமக்கு தேவையானதை நம்மாலே செய்து வளரும்போது, அதில் ஒரு இயந்திர தன்மை வந்துடுது… உயிர்ப்பு இல்லாத வாழ்க்கை!” அதைச் சொல்லும்போது, அவளின் கண்ணில் இருந்த வலி மற்றவர்களைப் பாதித்தது.
“இங்கே பல விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும், ஏதோவொரு பாதுகாப்பு இல்லாமல் வளர்ந்துவிட்டேனோ என்ற எண்ணம்” எங்கோ பார்த்தபடி சொன்னவள், கடைசியாக சொன்னது ராமிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
“தனிமையில் இருந்து தப்பிக்க ரேட்டிங் போலாம், பசங்ககூட சேர்ந்து லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழலாம் தான். வயதும், இளமையும் இருக்கும் வரைதான் இது எல்லாமே சாத்தியம். அதுக்குப் பிறகு?” என்ற கேள்வியில் இருந்த நியாயம், வைஜெயந்தியின் மனதைத் தொட்டது.
அவளது பக்குவமான பேச்சு ராம்குமாரின் மனத்தைக் கவர, “வாழ்க்கை இப்படித்தான் வாழணும் என்றவரை முறையுடன் வாழ்ந்தால் தான், அடுத்த தலைமுறைக்கு நம்ம நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க முடியும்” யாழினியின் கூற, அவளுக்கு ஹை – பைக் கொடுத்து சிரித்தாள் மிருதுளா.
“எங்க அப்பாவைப் போலவே ஒருவனைப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்குவேன். அடுத்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கைப் பாதையை அமைத்து தரணும் என்ற முடிவில் தெளிவாக இருக்கேன்” யாழினியை வியப்புடன் ஏறிட்டான் ராம்குமார்.
“இதைவிட அது பெஸ்ட், அதைவிட இது பெஸ்ட் மலர் விட்டு மலர் தாவும் மனிதர்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்குன்னு சொல்றே! எண்ணம் போல வாழ வாழ்த்துகள் யாழினி” மனம் திறந்து வாழ்த்தினான் ராம்.
இளவேனில் காலத்தின் கடும் வெயிலின் தாக்கமின்றி மிதமான குளிர்காற்று வந்து முகத்தில் மோதியது. அவன் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் கடைசி நாள். கிட்டதட்ட ராம்குமாரின் வீட்டினர் ஏர்போர்ட் வந்துவிட, அதை அறியாமல் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்தான்.
அவர்கள் முன்னதாக கிளம்பி சென்றுவிட்ட தகவல் கிடைக்க, அங்கிருந்த பூக்களின் மீது அவனின் பார்வை படிந்தது. இரவு பொழிந்த மழையில் நனைந்த மலர்கள் ரம்மியமாக காட்சியளித்தது.
அதை அவன் மனதினுள் ரசித்தபடி வேகமாக நடக்க, “கிருஷ்! வெயிட் எ மினிட்” குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தான். சற்றுத்தொலைவில், சீன்ஸ் அண்ட் டாப் அணிந்திருந்தவளின் மீது அவனின் பார்வை படிந்தது.
எங்கோ அவளைப் பார்த்த ஞாபகம் மட்டுமே இருக்க, அது எங்கே எப்போது என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது.
வீட்டின் முன்பிருந்த ரோஜா செடிகளில் பூத்திருந்த பூவைப் படும்படாமல் தொட்டு ரசித்து, “திஸ் இஸ் ஃபார் யூ” ஒற்றை ரோஜாவைப் பறித்து சிறுவனின் கையில் கொடுத்த பெண்ணின் பளிங்குமுகம் அவனின் மனதில் கல்வெட்டாகப் பதிந்து போனது.
கண்ணில் குறும்பு மின்ன காட்சியளித்தவளை இமைக்காமல் நோக்கி, ‘இந்தியா கிளம்பற கடைசி நிமிடத்தில் தான், இவளைப் பார்க்கணும்னு விதியா?’ மனதிற்குள் சலித்துக்கொண்டே காரின் கதவைத்திறந்து ஏறினான்.
அமெரிக்கா மண்ணில் இருந்து கிளம்பும் கடைசி நொடியில், அவளின் பூ முகமே நெஞ்சினில் தோன்றி மறைந்தது. சிவசந்திரன் குடும்பத்துடன் யாதவ் கிருஷ்ணாவும் இந்திய மண்ணில் கால்பதித்தான்.
இந்த நான்கு ஆண்டுகளின் அதிகப்படியான படிப்பு மற்றும் தனிமை அவன் மனதை கல்லாக மாற்றியிருந்தது. தாயின் முகம் பார்த்தும் எரிச்சல் அதிகரிக்க, ‘ரொம்ப நல்லவங்க மாதிரி வேஷம் போட வந்துட்டாங்க’ அவர்களைக் கண்டும் காணாததுபோல் கடந்து சென்றான்.
அந்த நிறுவனத்தை மீனலோட்சனி நடத்தி வருவது இன்னும் அவனை கோபபடுத்தியது. யாதவ் கார்டியாலஜி படிக்க பெங்களூர் சென்றுவிட, ராம்குமார் சைகார்ட்டிஸ்ட் படிக்க சென்னை சென்றான். இருவரும் அவரவர் விருப்பபடி படிப்பை முடித்துவிட்டு வருவதற்குள் அடுத்த மூன்றாண்டுகள் ஓடி மறைந்தது.
ஊட்டியில் பெரிய மருத்துவமனையில் யாதவ் – ராம்குமார் இருவரும் வேலையில் சேர்ந்து மருத்துவராக பணியாற்ற தொடங்கினர்.
இந்தியா வந்து இடைபட்ட வருடங்களில் அவளின் காந்தம் மின்னும் விழிகள், அவன் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது. சொந்த மண்ணில் கால்பதித்த பின்னரும் அவளின் நினைவுகள் அவனைத் துரத்தியது.
இதற்கிடையே, மதுர யாழினி – மிருதுளா இருவரும் பி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏவை முடித்தனர். மிருதுளா ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல, யாழினி தந்தையின் ஹோட்டல் தொழிலின் மீது கவனத்தை திருப்பினாள்.
கிழக்குவானில் கதிரவன் உதயமாக, தன் முகத்தில் சுள்ளென்று விழுந்த வெளிச்சத்தைக் கண்டு கண்விழித்தான். தான் அமர்ந்திருந்த இடத்தைக் கவனித்த யாதவிற்கு, நேற்றிரவு ராம்குமாரை சந்தித்துப் பேசியது ஞாபகம் வந்தது.
பனியில் கை கால்கள் விரித்திருக்க, மெல்ல கைகால்களை அசைத்து எழுந்து நின்றான். பழைய நினைவில் மூழ்கியிருந்த மனமோ நடப்பிற்கு திரும்பியது. ராம்குமார் யாழினியை சம்மதிக்க வைத்துவிடுவான் என்ற நம்பிக்கை வரவே, வீட்டினுள் நுழைந்தான்.
நேற்றிரவு யாதவ் சொன்ன விஷயத்தை மனதினுள் அசைபோட்ட ராம்குமார், யாழினியைப் பார்க்க அவளது வீட்டிற்குச் சென்றான். பூட்டிய வீடு அவனை வரவேற்கவே, ‘ஒரு வேலை டீ எஸ்டேட் சென்றிருப்பாளோ?’ என்ற எண்ணத்துடன், அவளைத் தேடி சென்றான்.
சௌந்தர்யா மூலமாக யாழினி அவசர வேலையாக அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல் கிடைக்க, ‘திடீர்ன்னு அங்கே எதுக்காகப் போனாள்?’ குழப்பத்துடன் மருத்துவமனைக்குச் சென்றான் ராம்குமார்
யாழினியின் நீண்ட பயணத்தை யாதவின் நினைவுகளே ஆக்ரமிக்க, விமானம் தரையிறங்கியது. அவளின் நினைவலைகள் நடப்பிற்குத் திரும்பியது. அங்கே செக்கிங் அனைத்தையும் முடித்துவிட்டு ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தாள்.
ஏற்கனவே கால்டாக்ஸி புக் செய்திருந்தால், அதில் ஏறி மிருதுளா தற்போது தங்கி இருக்கும் அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றாள். அவள் காலிங்பெல் அழுத்துவிட்டு காத்திருந்தாள்.