பொன்மகள் வந்தாள்.15🌹

பொன்மகள் வந்தாள்.15🌹

PMV.15.

“டேய் நாகு!! என்னடா பண்றே? உனக்கே இது ஓவரா தெரியல?” என்றான் அதிர்ச்சியாக ஒருவன்.

“எதுடா ஓவரா இருக்கு?” என்க,

“ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு, நீ பண்றது அநியாயம்டா. பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்.” என்றான் மற்றொருவன்.

“அப்படி என்னத்தடா புதுசா பண்ணிட்டே?”

“புதுசா பண்ணலடா. ஆனா இப்ப போயி தோப்புக்கு ஐட்டத்தை வரச்சொல்லிருக்க… ரொம்பதான் தைரியம்டா உனக்கு.” என்றான் மற்றொருவன்.

“டேய் மாப்ள!! இது வாலிப வயசு… இதெல்லாம் கண்டுக்கக்கூடாது.” இரண்டு நாட்களில் மணமேடை ஏறப்போகும் புதுமாப்பிள்ளை நாகராஜின் பதில் இது.

“டேய் மச்சி… சினிமா ஸ்டார் மாதிரி பொண்ணு கெடச்சுருக்கு. எவனுக்குக் கொடுத்து வச்சுருக்கோனு, அந்தப்புள்ளயப் பாக்குறப்ப எல்லாம், ஊர்ல எல்லாரும் ஏங்கிப் போயிருக்கோம்.  வலிய வந்தமாதிரி உனக்கு அந்த வாய்ப்பு கெடச்சுருக்கு. நீ என்னடான்னா இன்னும் தோப்பு வீட்டுக்கு பொண்ண வரச்சொல்லியிருக்க?” என நண்பனின் வருங்கால மனைவி என்ற நாகரீகம் கூட இல்லாமல், ஒருத்தன் கேட்க,

“அதுக்கு தான்டா இந்த டெஸ்ட்ரைவ். நாளைக்கி புதுப் பொண்டாட்டி கிட்ட மொக்க வாங்கிறக் கூடாதுல்ல.”

“அடியே மாப்ள… நீ போன டெஸ்ட் ட்ரைவ்க்கெல்லாம், முக்கியமான நேரத்துல பெட்ரோல் காலியாகி வண்டி நடுரோட்ல நிக்கப் போகுதுடி. ஏன்னா நீயும் வயசுக்கு வந்ததுல இருந்து டெஸ்ட்ரைவ் போற.”

“சிதம்பரம் மாமா இவனைப் பத்தி முழுசா விசாரிக்கல… விசாரிச்சுருந்தா இவன் வண்டவாளமெல்லாம், தண்டவாளம் ஏறியிருக்கும்.”

“அதெல்லாம் லேசுல தெரிய விட்ருவோமா? எங்க அப்பாவுக்கே இப்ப தான் லைட்டா சந்தேகம் வந்திருக்கு. உடனே பொண்ணு தேட ஆரம்பிச்சு, இந்தா… நாளான்னிக்கி கல்யாணமும் முடியப் போகுது.”

“அதெப்படி இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ற. ஆனா நேக்கா எஸ்கேப் ஆகிர்ற. நாங்க எல்லாம் ஒருநாள் தண்ணி போட்டுப் போனாலே கரெக்டா மோப்பம் புடிச்சுர்றாங்க. நீ எல்லா வேலையும்பாக்குற. ஆனா மாட்ட மாட்டேங்குற.”

இவர்கள் முன் மதுவகைகளும், அவற்றிற்கான சைடிஷ்களோடு ஒரு மினி டாஸ்மாக்கே கடைபரப்பப் பட்டிருந்தது. முருகேசனின் தோப்பு வீடு. அங்கு தான் இந்த குடிமகன்களின் கச்சேரி களைகட்டுகிறது. 

“அதுக்கெல்லாம் முகராசி வேணும்டா. நீங்க இந்த வேலையப் பாருங்க டா… நான் வந்த வேலையப் பாக்குறே.” என தோப்பு வீட்டிற்குள், வந்தவளை தோளோடு அணைத்துக் கொண்டு சென்றான் நாகராஜன். 

“இவனுக்கு மச்சம்டா. மாசத்துல ரெண்டு புதுசா தள்ளிட்டு வந்துர்றான். இப்ப பாரு… இந்த ஊர் அழகியும் அவனுக்கு தான் கெடச்சுருக்கு.” உள்ளே சென்ற மதுவோடு வயிறும் சேர்ந்து எரிந்தது போல அவனுக்கு.

“டேய் ஊர் அழகி மட்டுமில்ல… இந்த ஜில்லாவுக்கே அழகி. எப்படியாவது கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா, அந்த வயசான பாடிகார்டு கூடவே வந்து எதுக்கும் வாய்ப்பு தரல. இனம் இனத்தோட சேரும்கற மாதிரி பணம் பணத்தோட இப்ப சேந்துருச்சு.” 

உன் நண்பனைக்காட்டு. உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்வதுண்டு. முருகேசனின் மூத்த மகன் நாகராஜனின் நண்பர்கள் இவர்கள். இவர்களின் பேச்சைக் கொண்டே அவன் எப்படிப்பட்டவன் எனத் தெரிந்து கொள்ளலாம்.

அத்தையின் வட்டிப்பண பட்டுவாடாவிற்கு கையாள் இவன் தான். இதனால் சிறுவயதிலேயே அத்தையின் மூலம், இவனது  கையில் பணம் புலங்கத் துவங்கியது. பிறகு என்ன… அவனைச் சுற்றி எப்பொழுதும் நாலுபேர்… அவன் வாங்கிக் கொடுக்கும் மதுவிற்கும், சிகரெட்டிற்காகவும், அவனுக்கு ஜால்ரா போடுவதற்கென்றே. 

முருகேசனும் வயசுப்பையன் என்று கண்டும் காணாமல் இருந்து கொள்ள, மெதுவாக தோப்பு வீட்டிற்கு பெண்கள் வந்து செல்வது தெரிய… இனி சரிப்படாது… இவனுக்கு கால்கட்டுப் போட வேண்டுமென முடிவெடுத்தார்.

முடிவை அவர் எடுக்க, பெண்ணை காளியம்மா தேர்ந்தெடுத்தார். மூத்தவனைவிட, இளையவன் படித்தவன். பட்டணத்தில் இருக்கிறான். தன் மகளுக்கும் சின்னவன் மீதுதான் ஒரு ஈடுபாடு இருப்பதாகத் தெரிய, நாகராஜிற்கு பொம்மியைப் பெண்கேட்க அண்ணனுக்கு யோசனை கூறினார். 

நாகராஜனை தனது பணப்பரிமாற்றத்திற்கு ஒரு அடியாள் போலத்தான் பயன்படுத்திக் கொண்டார் காளியம்மா. முரட்டுத்தனமான முகபாவனையோடு இவன் போய் நின்றாலே நிலுவையில் உள்ள பணம் எல்லாம் வரவுக்கு வந்துவிடும். சகுனியின் கையில் கிடைத்த துரியோதனன் அவன். 

முருகேசன் நேரடியாக சாதகம் கேட்டு வந்ததை சிதம்பரம் மனைவியிடம் கூறினார். அதோடு சிதம்பரமும் கௌரியிடம் தம்மகளின் திருமணம் பற்றி தன் மனதில் தோன்றியதைக் கூற, அவருக்கு கணவர் கூறிய அத்தனை காரணங்களிலும்,‌ மகள் பிரிந்து செல்லாமல் தன் கண்முன்னே இருப்பாள் என்பது மட்டுமே பெரிதாகப்பட அவரும் சாதகம் கொடுக்க சம்மதித்தார். பிறகு என்ன… பத்துப் பொருத்தமும் பக்காவாக இருப்பதாக சொல்லப்பட்டதா, அல்லது தன் அண்ணனின் குணம் அறிந்து சொல்லவைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. பொம்மிக்கும் பரீட்சை முடிய, இருகுடும்ப சம்மதத்தோடு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம். அத்திருமணத்திற்கு தான் நாகராஜ் தன் நண்பர்களோடு தோப்புவீட்டில் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறான்… குட்டியும், புட்டியுமாய். அவனிடம் ஒரு பழக்கம்… புட்டியைப் பகிர்ந்து கொள்பவன், வரும் பெண்களை பகிர்ந்து கொள்ள மாட்டான். அவனுக்கு மட்டுமே. 

எப்பவும் போல பெற்றோர் எது சொன்னாலும் சரி எனத் தலையாட்டி வைத்தாள் பொம்மி. 

ஏற்கனவே தெரிந்த பெண்தானே என்று நேரடியாகவே வெற்றிலைபாக்கு மாற்றிக் கொண்டு நிச்சயம் முடித்தனர். 

“நாகராஜ் அண்ணன் தான் மாப்பிள்ளையா?” நிச்சயத்தன்று அவள் கேட்டது இது மட்டும் தான். கல்யாணத்தைப் பற்றிய கனவுகள் இருந்திருந்தால் தானே, தனக்கு வரப்போகின்றவனைப் பற்றிய கற்பனை இருந்திருக்கும்.

“அடியேய்… கட்டிக்கப்போறவன அண்ணங்கிற?” அத்தை கடிய,

“பள்ளிக்கூடம் போகவரப் பாத்திருக்கே த்தே. எல்லா அண்ணங்களும் பாலத்துல உக்காந்திருப்பாங்க.”

“அவன் உனக்கு மாமன் முறைடி. கல்யாணம் கட்டுற முறை. மாமான்னு கூப்பிடு. அண்ணேனு கூப்பிடாத.” அத்தையின் வார்த்தைகள் காதில் ஒலிக்க,

‘என்னைய அண்ணேனு கூப்பிடாத.’ மந்தகாசமாய் சிரித்தான் சக்திமாறன் முதன்முறையாக அவளது மூளைக்குள். நேரங்காலம் தெரியாமல் ‘அப்படினா அவங்க சொன்னதோடு அர்த்தம் என்னவென்று’ யோசித்தது. அவனது பளீரிட்ட சிரித்தமுகம் மனக்கண்ணில் விரிய, முதன்முறையாக கன்னத்துள் அதக்கிய ஆரஞ்சு மிட்டாயாய் சுருசுருவென ஏதோ ஒன்று கன்னக்கதுப்புகளில் பரவ, அகமும் முகமும் நகைந்தது பெண்ணவளுக்கு. எங்கோ விரியாத அவளது சிறகுகளில் மெலிதாக வண்ணத்தீற்றல். இனம்புரியாத உணர்வை, இனமறியும் பக்குவத்தில் இல்லை பேதை.

அவளை அத்தையும் மற்ற பெண்களும் சுற்றி நின்று அலங்கறித்துக் கொண்டிருந்தனர் நிச்சயத்திற்காக. 

ஊர்ப் பெரியவர்கள் முன் தாய்மாமன்கள் அமர்ந்து நிச்சயத்தட்டை மாற்றிக் கொண்டு சம்பந்தம் கலக்க… அலங்காரத் தேராக வந்து சபை வணங்கிச் சென்றவளை, பார்த்தவனது கண்களில் தெரிந்தது என்ன காதலா? காமமா? இல்லை அதையும் மீறிய ஒன்றா? தாபத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று நாகராஜின் கண்களில்… ஓநாயின் குரூரம்.

“நல்ல குடும்பம் உனக்கு வாச்சிருக்குடா. தங்கமான புள்ள. இதுவரைக்கும் இருந்த மாதிரி இல்லாம கொஞ்சம் பாத்து நடந்துக்க நாகு.” நிச்சயம் முடிந்த நாளில் தாய் பதவிசாகவே மகனிடம் எடுத்துரைக்க,

“பாத்துனா எப்படி அண்ணி… இப்ப என்ன கண்ணமூடிட்டா திரியறானுக… அது நல்ல குடும்பம்னா… இது என்ன குடும்பம்? அவன் ஆம்பளப்பய… இன்னும் உங்க இடுப்புல இருக்கறவனாட்டம் பேசாதீங்க. எங்க அண்ணே மகனுக்கு நாலும் தெரியும். உங்கள மாதிரி இல்ல.” வழக்கம்போல் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையில் வந்தார் காளியம்மா. மறுத்துப் பேச சுப்புலட்சுமி வாய் திறந்தால், ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளி ஆக்கிவிடுவார். இத்தனை வருடங்களில் சுப்புலட்சுமி கண்டு கொண்டது இதுதான். நல்ல காரியம் நடக்கும் வீட்டில் வம்பு எதற்கு என்று அமைதியாகப் போய்விட்டார். 

“ஏம்மா… அந்தப் பொம்மி என்னையவிட சின்னவ. அவ மூத்த மருமகளா வந்து அதிகாரம் பண்ணுவா. நான் இளைய மருமகளா இருக்கணுமா. கொஞ்சம் நாகு மாமாக்கு என்னையவிட பெரிய பொண்ணா பாக்கக்கூடாதா?” என காளியம்மா மகள் அன்னையிடம் பொறும,

“ஏன்டி கூழுக்கும் ஆச… மீசைக்கும் ஆசைனா எப்படி? உனக்கு சின்னவன் வேணும். ஆனா மூத்த மருமகளாவும் இருக்கணும்னா எப்படி.”

“அதுக்காக எது ஒன்னுனாலும் பெரியவளத்தானே முன்னுக்குக் கூப்பிடுவாங்க?”

“இப்ப இங்க மட்டும் என்ன வாழுதாம். வீட்டுக்கு உரிமைக்காரி உங்க அத்தை தான். ஆனா அதிகாரம் யார் பண்றது. அதுமாதிரி வர்றவள பொம்மையா உக்கார வச்சுட்டு நீ எப்படி அதிகாரம் பண்றதுன்னு யோசிப்பியா? அதவிட்டுட்டு தேவையில்லாம அவளப் பாத்து பம்முற. என்னையப் பாத்து ஒனக்கு பொழைக்கத் தெரியலியே?” காளியம்மா தன் மகள் கவிதாவிற்கு கொடுத்த பொன்னான அறிவுரை இது. விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும். தாய்க்குத் தப்பாத மகள் தான் கவிதா.

அதோ இதோ என திருமண நாளும் வந்தது. நிச்சயத்தை ஊர்முன் எளிதாக முடித்தவர்கள், திருமணத்தை இருகுடும்பங்களும் நீயா நானா என்று தான் ஏற்பாடு செய்தனர். சிதம்பரத்தைப் பொருத்தவரை அவரது இளவரசியின் திருமணம். முருகேசனுக்கு, சிதம்பரத்தைவிட அவரது சொந்தங்கள் முன் தன்னுடைய தகுதியை உயர்த்திக் காட்ட வேண்டும். 

அலங்காரப் பெண்ணின் கையில்  பொம்மையாக அமர்ந்திருந்தவள் அத்தையை வழக்கம்போல் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள். அத்தையின் முகத்திலும் அன்னையின் முகத்திலும் சுரத்தையின்றி இருந்தது. சொர்ணம் பதில் பேசவில்லை. 

”என்ன த்தே… பேச்சே காணோம். நான் இல்லைனு அம்மாகிட்ட வம்பு பண்ணாத. அப்புறம் தாய்க்கெழவிகிட்ட இருந்து உன்னையக் காப்பாத்த நான் இங்க இருக்க மாட்டே!”

“ஆமா… இவ என்னமோ ஏழுகடல் தான்டி, ஏழுமலை தாண்டி போற மாதிரி தான். எங்க அப்பா என்னையப் பிரியமுடியாம அடுத்த ஊர்ல கட்டிக் கொடுத்தாரு. உங்க அப்பா உன்னையப் பிரியமுடியாம அடுத்த தெருவுல கட்டிக் கொடுக்கறாரு. அம்புட்டு தான் வித்தியாசம். நானும் இதே வீட்ல பொறந்து வளந்து வம்பு பேசுனவ தான்டி. இப்ப விருந்தாளியா வந்திட்டு போயிட்டு இருக்கே. இது பொம்பளைங்க வாங்கி வந்த வரம்.” சொர்ணம் பெண்களின் ஆதங்கத்தை தொண்டையடைக்க வார்த்தையாக வடிக்க, கண்களும் கசிந்து ஆமோதித்தன. அது என்னவோ பிடிங்கி நட்ட இடத்தில் வேரூன்றி கிளைபரப்பினாலும், நாற்றாங்கால் வாசம் மட்டும் விட்டுப் போவதில்லை இந்தப் பெண்களுக்கு.

பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருக்கும் வரை அவர்களுக்கென்று ஒரு பிடித்த இடம் அந்த வீட்டில் இருக்கும். தனிமையில் அமர்ந்து கனவில் மிதக்க… படிக்க… பாட்டுகேட்க என்று எதற்கும் அந்த இடம் தான் அவர்களுக்கு கன்னிமாடம் போன்று. அதுவே திருமணம் முடிந்து சில நாட்களில் அங்கு அண்ணன் பிள்ளையோ தம்பி பிள்ளையோ அமர்ந்திருக்கும். வீட்டிற்கு வருபவரை ‘வாங்க அத்தை.’ என விருந்தாளியாக வரவேற்கும். 

பிறந்து, வளர்ந்து, உடன் பிறந்தவர்களோடு சண்டை போட்டு, உரிமையாக வலம் வந்த இடம் அந்நியமாகிப் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்று பிறந்த வீடாகவே இருந்தாலும் கிளம்பச் சொல்லும். 

இனிமேல் தங்கள் பெண் மீது முன்பு போல் உரிமை கொண்டாட முடியாது என நினைத்தோ என்னவோ பெற்றவரும், வளர்த்தவரும் கண்கலங்க, பொம்மிக்கும் அப்பொழுதுதான் ஏதோ ஒன்று உரைத்தது. இனிமேல் இன்னொரு வீட்டில் தான் இருக்க வேண்டுமா? இந்த வீடு உரிமையில்லையா? என யோசித்தவள் முகமும் சுணங்க,

“ஏய் பொம்மு… உனக்கு ரெண்டு வீடும் உரிமை தான். இங்கயும் நீதான் ராணி. அங்கேயும் நீ தான் ராணி. எதுக்குடி சுணங்குற? இதெல்லாம் யோசிச்சுதா எங்க அண்ணே இந்த சம்பந்தமே முடிவு பண்ணியிருக்கு.” என மருமகளின் முகவாட்டம் கண்டு, அவளைத் தேற்றினார்.

ஏனோ அதன் பிறகு அவளிடம் பழைய கலகலப்பு இல்லை. சின்ன சின்ன உணர்வுகளை அப்பொழுதுதான் உள்வாங்க ஆரம்பித்திருக்கிறாள். தாய்தந்தையை இதுவரை பிரியாதவள் இப்பொழுது தான் பிரிவைப்பற்றி யோசிக்கிறாள். 

“பெரியவங்க கால்ல விழுந்து திருநீரு வாங்கிக்க பொம்மி. மாப்பிள்ளை வீட்ல இருந்து பொண்ணழைக்க வந்துருவாங்க.” மூதாட்டி ஒருவர் நினைவூட்ட,

அதுவரை தான் சிதம்பரத்தால் கட்டுப்படுத்த முடிந்தது. மகளுக்கு திருநீறு பூசியவர் கதறி அழுக, அவரைப் பார்த்து மற்றவர்களும் அழுதது தான் மிச்சம். 

“கெளம்புற‌ நேரத்துல என்ன இது, எல்லாரும் கண்ண கசக்கிக்கிட்டு?” என வழக்கம்போல ஒரு மூதாட்டி அதட்ட, சிதம்பரமும், கௌரியும் சற்றே தங்களைக் கட்டுபடுத்த, இதுதான் ஆரம்பம் என விதி இவர்களைப் பார்த்து சிரித்ததுவோ.

ஊர்மெச்ச திருமணம் முடிந்தது. மண்டபத்தில் இருந்து பெண்வீடு வந்தவர்கள் பால் பழம் சாப்பிட்டு மாப்பிள்ளை வீடு கிளம்பினர். 

முருகேசனின் மகன் இளையவன் ஜெயக்குமார் முதல் நாள் தான் அண்ணன் திருமணத்திற்கென்று வந்திருந்தான். மணப்பெண்ணாக பொம்மியப் பார்த்தவன் அசந்து போனான். இவனுக்கு இப்படி ஒரு பொண்ணா என்று தான் நினைத்தான். படிப்பு, வேலை என வெளியேறிவிட்டதால் பொம்மியை அதிகம் பார்த்தது இல்லை. ‘உள்ளூர்ல விவசாயம் பாத்துக்கிட்டு குப்ப கொட்டுறவனுக்கே இப்படி ஒரு பொண்ணா… அப்ப இதைவிட அழகான பொண்ணுல நாம தேடணும்…’ என யோசித்த மனம் பொம்மியோடு, கவிதாவை இணைசேர்த்துப் பார்த்தது. 

பெண் வீட்டிலிருந்து மணமக்கள் கிளம்ப ஆயத்தமாக, “அண்ணி நீங்க கூட போங்க.” என்றார் கௌரி நாத்தனாரிடம்.

“அங்க… உங்க அண்ணனுக்கு முடியலியே அண்ணி.” என பதில் கூறினார். ஏற்கனவே சொர்ணத்தின் கணவர் ஜீவனம் கட்டிலோடு என்றாகி பலமாதங்கள் ஆயிற்று.

“மருமகளுகள ரெண்டு நாளைக்கி பாத்துக்க சொல்லுங்க. மூனா நாளு மறுவீட்டு விருந்துக்கு அழைச்சுட்டு வந்து விட்டுட்டு நீங்க கெளம்புங்க. இடையில ஒரு நாள் தான. பொம்முக்கு விவரம் புரியாது. நீங்க போனா நாங்கொஞ்சம் தைரியமா இருப்பே.” என மகளோடு உடன் அனுப்ப நாத்தானாரை தயார்செய்தார் கௌரி. 

           ****************

“என்ன சொர்ணம்… புதுசா கல்யாணம் ஆச்சே… உங்க அண்ணே மக… எப்படி இருக்கா?” காலையில எழுந்து வாசலுக்கு வந்தவரை பக்கத்து வீட்டுப் பெண் விசாரிக்க,

‘இவ ஆல்இன்டிய ரேடியாவாச்சே… எதுக்கு இப்ப இவ நம்ம வாயப் புடுங்கறாளோ தெரியலியே?’ என… விசாரிக்க வந்தவரை மனதிற்குள் தாளித்துக் கொண்டே…

“நல்லா இருக்கா சரசு. அங்க தான் கெளம்பிட்டு இருக்கே. இன்னையோட ஏழு நாள் ஆகிப்போச்சு. நாம்போயித்தான் மறுவீட்டு விருந்துக்கு அழச்சுட்டு வரணும்.” என்றார்.

மூன்றாம் நாள் மறுவீட்டு விருந்து என சிதம்பரம் முடிவு செய்ய… “அன்னைக்கி வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையும் பொழுதுமா நாங்க எப்படி அனுப்ப முடியும்? அதுக்கப்புறமும் அஷ்டமி நவமி வருது. ஒரேதா ஏழாம் நாள் கூப்புட்டுக்கோங்க.” என காளியம்மா கூற… முருகேசனும் தங்கை சொல்வது சரி என்று கூறினார். 

ஒரேயடியாக ஏழு நாட்கள் மகளைப் பிரிவதற்கு கௌரி மனம் ஒப்பவில்லை. எனினும் நாத்தனார் உடன் செல்கிறாரே… உள்ளூர் தானே என மனதைக் தேற்றிக் கொண்டார். 

மாப்பிள்ளை வீட்டிற்கு முறைப்படி அனுப்பி வைக்க, ஆர்த்தி எடுத்து மணமக்களை வரவேற்றார் சுப்புலட்சுமி. விளக்கேற்றி வந்தவர்களுக்கு அங்கும் பால் பழம் கொடுக்க, சாப்பிட்டு முடித்தவுடன் நாகராஜ் தனது அறைக்கு சென்றுவிட்டான். அவளது அருகாமையில் அவனது கண்கள் சிவந்து, கைகள் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது. பொம்மியை அருகில் இருந்த அறையில் ஓய்வெடுக்குமாறு கூறினார் சுப்புலட்சுமி. 

பொம்மி மட்டுமே அத்தையோடு அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அத்தையின் கைபேசிக்கு அழைப்பு வர,

“அத்தே… மாமாவுக்கு முடியல. ஆஸ்ப்பத்திரி கூப்புட்டுப் போறோம். நீங்க வாங்க.” என மருமகள்களிடமிருந்து அழைப்பு.

இவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அறையை விட்டு வெளிவந்தவர்,

“சுப்பு…” என அழைக்க, மண்டபத்திலிருந்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த சுப்புலட்சுமி வெளியே வந்தார்.

“எங்க வீட்டுக்காரருக்கு முடியலியாம். நான் போகணும்…” என இழுக்க,

“அதுக்கென்ன க்கா. நீங்க போய்ட்டு என்னானு பாத்துட்டு வாங்க. ஏம்மருமகள நான் பாத்துக்கறே.”

“இல்ல சுப்பு… இன்னும் சின்னப்புள்ளயா நடந்துக்குவா. விவரம் பத்தாது. உனக்கே தெரியும்… அண்ணனுக்கு வயசாகுதுன்னு தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணதே. நாகு தம்பிகிட்ட சொல்லு சுப்பு.” இலைமறை காயாக சொர்ணம் உணர்த்த, 

“அதுக்கென்ன க்கா. நான் பாத்துக்கறே.” என சொல்லும் பொழுதே,

“இப்ப எவளுக்கு ஒன்னும் தெரியாம இருக்குது. எல்லாம் விளஞ்சவளுக தான்.” என கூறிக் கொண்டே காளியம்மா வந்தார். 

“சரிக்கா, நீங்க கெளம்புங்க நான் பாத்துக்கறே.” என சொர்ணத்தைக் கிளப்பிவிட்டார் சுப்பு… இருவரைப் பற்றியும் தெரியும் என்பதால். 

“கவிதாக்கா எங்க?” எனக் கேட்டுக் கொண்டே பொம்மி வர,

“என்னைய பேர் சொல்லியே கூப்புடு. அக்கா எல்லாம் வேணாம்.” என்றவாறு வந்தாள் கவிதா.

“ஏன்… ஸ்கூல்ல எல்லாம் அப்படித்தான கூப்டசொன்னீங்க.”

“அங்க ஓகே. இங்க நீதான் மூத்த மருமக. பேர் சொல்லியே கூப்பிடு பொம்மி.” என்க, ‘அங்க கவிதா அக்கா இருப்பாங்க.’ என தோழமையாக நினைத்து வந்தவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. 

“நீ போய் சேல மாத்தறதுனா மாத்திக்க பொம்மி. காலையிலிருந்து பட்டு சேலைல இருந்தது ஒரு மாதிரியா இருக்கும்.” என மருமகளை அனுப்பினார்.   

அண்ணனுக்கு ஃபோன் செய்து விவரத்தைக் கூறியவர், வீட்டிற்கு வந்து அண்ணியிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். 

கணவனை கவனித்து மருத்துவமனையிலிருந்த வீடு வர நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட, இன்று மறுவீட்டு விருந்திற்கு மணமக்களை அழைக்கப் போகவேண்டுமே என காலையிலேயே கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

கௌரி காலையிலேயே அழைப்பு விடுத்துவிட்டார். “இன்னும் என்ன அண்ணி பண்றீங்க? கெளம்பி வாங்க. விருந்துக்கு எல்லாம் ரெடி பண்ணனும்.” மகள் மறுவீடு வரும் சந்தோஷத்தில் விடியும் முன் கைபேசியில் அழைத்து விட்டார் கௌரி.

அண்ணன் வீட்டிற்குக் கிளம்பியவரிடம் தான், அண்ணன் மகளைப் பற்றி விசாரித்தார் பக்கத்து வீட்டுப் பெண். 

“அங்க தான் கெளம்பிட்டே சரசு.” எனக் கூற,

“நீ சாவகாசமா கெளம்புறதப் பாத்தா உனக்கு விஷயம் தெரியாது போலயே?” என்க, சொர்ணத்திற்கு அடிவயிறு கப்பென்று பற்றியது. ‘இவ விஷயமில்லாம இப்படி வலிய வந்து பேச மாட்டாளே.’ என பதைத்தவர்,

“என்ன சொல்ற.” என்றார்.

“அப்ப… தெரியாமத்தா கெளம்புறியா?” என இழுக்க,

“சொல்றத படக்குனு சொல்லு சரசு. எனக்கு வேல கெடக்கு.” என பதட்டத்தோடு அதட்ட,

“பெரிய வீட்டு மருமகளுக்கு பேய் பிடிச்சிருக்கு… போயோட்டணும்னு, நம்ம ஊரு கோடாங்கிய கூப்புட்டுப் போறாங்களே தெரியாதா?”

“நீ யாரச் சொல்ற. நல்லா விசாரிச்சியா?” நெஞ்சு படபடத்தது சொர்ணத்திற்கு. ‘சற்று முன் தானே அண்ணி ஃபோன் செய்தார். அப்படி எதுனாலும் உள்ளூருக்குள் தெரியாமயா போயிருக்கும்?’ என்ற சந்தேகம் வலுப்பெற, மீண்டும் தகவல் சொன்னவரிடமே தீர விசாரித்தார்.

“நான் நல்லாத்தே சாரிச்சே. புதுசா கல்யாணமான பொண்ணுக்குனு தான் சொன்னாங்க. கோடாங்கிய தோப்பு வீட்டுக்கு வரச்சொன்னாங்களாம்.” என்றாள்.

சொர்ணத்திற்கு ‘என்னாச்சுனு தெரியலியே.’ என நெஞ்சு படபடக்க, கால்கள் துவண்டன. 

 

 

error: Content is protected !!