சக்கரவியூகம் 2

சக்கரவியூகம் 2

2

வாசுதேவர் கூறுகிறார்:

தர்மம் என்பது ஒரு விருட்சமாகும். சபதமும் பிரதிக்ஞையும் அதன் கிளைகள் என்றால் அந்த விருட்சத்தின் ஆணி வேராவது கருணையாகும் கிளைகள் மகத்துவம் வாய்ந்தவை எனினும் வேரின் மகத்துவமே வேறு. எவரேனும் ஒருவருடைய வேதனையை போக்குவதற்காக பிரதிக்ஞை உடைக்கப்பட்டாலும் அது உசிதமான செயலே, ஆனால் தற்சமயம் அரச குலத்தில் அகண்ட இந்த அகிலத்தில் கருணை எனும் ஆணி வேரானது சிதைக்கப்பட்டுள்ளது. பொதுநலம் என்ற எண்ணம் மறந்து சுயநலம் என்ற எண்ணம் மேலோங்கியது. விருட்சம் நீர் ஆதாரமற்று போனால் அதனுடைய கிளைகள் விறகாகிப் போகும். அதுபோலவே இன்று அகிலத்தில் தர்மமும் நியாயமும் நிற்கதியில் நிற்கின்றது.

“பேஏஏஏ…” தமிழ்நதியின் பின்னால் இருந்து அந்த உருவம் கத்த… அரண்டு விழித்தவள் எதிரில் நின்ற வாஸந்தியை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“அறிவு கெட்ட எருமை மாடே… கொஞ்சமாவது அறிவிருக்காடி உனக்கு… இப்படியா கத்தி தொலைவ?”

பயந்து போன தமிழ் வாஸந்தியை வசைமாரி பொழிய… சற்றும் அசைந்து கொடுக்காத அவளோ.

“எருமையோட தங்கச்சி என்ன பசுவாவா இருக்கும்? அதும் எருமைதாக்கா…” அலட்டாமல் கண்ணடித்து கூற, இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்த உடலைத் தடவி விட்டுக் கொண்டாள் தமிழ்.

இது எப்போதுமே நடப்பதுதான் என்றாலும் தமிழ் எப்படியாவது இவளது கிறுக்குத்தனங்களிலிருந்து தப்பி விடுவாள்… ஆனால் இன்று திருமணம் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்தவளுக்குச் சுற்றுப்புறம் மறந்து இருந்தது.

“இந்த வாய்க்கொன்னும் குறைச்சல் இல்லடி பக்கி…”

“வேற எதற்குக்கா குறைச்சல்? உன்னைப் பார்க்க வந்த மாப்பு நம்ம கிட்ட விழுந்துட கூடாதேன்னு ஊர்ல கருப்பனுக்கெல்லாம் நேர்ந்துகிட்டேன். உனக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட பர்சனாலிட்டிய பார்த்து நீ என்ன வார்த்தை சொல்லிப்புட்ட?”

சிரிக்காமல் காலரை ஏற்றி விட்டுக் கொண்டு கூறியவளை அடக்க முடியாத சிரிப்போடு பார்த்தாள் தமிழ்… வாய் தான் மதுரை பாஷையை வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்ததே தவிர வாஸந்தி என்னவோ ஜீன்ஸ் டியுனிக் டாப்பில் அமர்க்களமாகத்தான் இருந்தாள்.

குட்டை முடியைச் சுருட்டி கேட்ச் கிளிப்பில் அடக்கியிருந்தாள். சுருட்டை முடி… அடங்குவேனா என்று அழுச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தது. தமிழை விடச் சற்று லேசாக நிறம் குறைவு… ஆனாலும் அந்தப் பேசுகின்ற கண்களும் கூர்மையான நாசியும் குவிந்த உதடுகளும் என்னைப் பார் என்று தான் கூறிக்கொண்டு இருந்தன.

தங்கையை இரண்டு வினாடிகள் ரசித்துப் பார்த்த தமிழ்நதியின் மனதில் பெருமிதம்!

“ஏய்… வாயைக் கழுவு… இப்பத்தான் செகன்ட் இயர் படிக்கற… அதை ஒழுங்கா படிச்சு முடிடி…” சிரித்து கொண்டே கூறினாலும் தங்கையின் இந்தக் குறும்புத்தனங்கள் அவளுக்கும் மிகவும் பிரியமானவை.

“நான் படிச்சு முடிக்கறது இருக்கட்டும். என்ன பெரியக் கிழவி ஒரு பெரிய போடாப் போட்டுருச்சு போல இருக்கே…” என்று மேஜை மேல் குதித்து ஏறி அமர்ந்தவள் சிரிக்க, தமிழ்நதி மீண்டும் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

சுற்றிலும் பார்த்தவளுக்கு அப்போதுதான் இருட்ட துவங்கிவிட்டதும் புரிந்தது.

“ஏய்… எப்படி அந்த வாட்ச்மேன் உன்னை இங்க வரைக்கும் உள்ள விட்டான்? டிசைன் ஏரியால யாருமே அலவுட் இல்லையே…”

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தவர்களை பார்த்தாள். வேலை முடிந்து கிளம்ப துவங்கி பாதி அலுவலகம் காலியாகி இருந்தது. தன்னுடைய பொருட்களை எல்லாம் அவசரம் அவசரமாக எடுத்து வைக்கத் துவங்கினாள்.

“அவனெல்லாம் என்னதான் வாட்ச்மேனோ? ஒரு தடவை சிரிச்சதுக்கே கதவைத் திறந்து விட்டுட்டான். இன்னொரு தடவை கன்னத்தைத் தடவினா லாக்கர் கதவையே திறந்து விட்டுருப்பான் அக்ஸ்… யுஸ்லெஸ் பெல்லோ…”

அதையும் சிரிக்காமல் சொன்ன வாஸந்தியை பார்த்து வயிறு வலிக்கச் சிரித்தாள்.

“அடிப்பாவி… பண்றதையும் பண்ணிட்டு இப்படி வேற ஒரு டைலாக் விடறியா?”

“ஓ மை கடவுளே… மீ அப்பாவி…” அப்பாவித்தனமாகக் கூறினாலும் அவளது தொனியில் அப்பாவித்தனத்துக்கான தடயம் சற்றுமில்லாமலிருக்க,

“யாரு… நீயா? கிழிஞ்சுது போ…” சிரித்து கொண்டே கொண்டையிட்டு இருந்த முடியை விரித்து விட்டுச் சிக்கெடுக்க துவங்கினாள். பளபளவெனப் பட்டாகச் சரிந்த கூந்தல் முதுகில் பரவிப் படர்ந்து இடையைத் தாண்டி வழிந்தது.

தமிழுக்கு நீளமாகக் கூந்தலை வளர்ப்பது பிடிக்காது. தனக்கு சரிப்படாது என்று பிடிவாதம் பிடித்து வெட்டி விடுவாள்… வெட்டிய இரண்டு நாட்களுக்கு லோகாவிடம் திட்டுக்களும் தலையில் கொட்டுக்களும் வாங்கி வீங்கி அழுது சுந்தரம் சமாதானம் செய்வது எப்போதுமே நடக்கும் ஒன்றாயிற்றே!

இப்போதெல்லாம் லோகா அவளை இந்த விஷயத்தில் கண்டிப்பதில்லை. அதாவது கண்டித்து ஒன்றுமாகபோவதில்லை என்று விட்டு விட்டார் என்பதே உண்மை… இது ஒரு தேறாத கேஸ் என்று முடிவு செய்து கைக்கழுவி இருந்தார்.

அவர் கண்டிப்பதில்லை என்பதாலோ என்னவோ நமது தமிழ்நதியும் அவளது கூந்தலில் கை வைக்காமல் இருந்தாள். எப்போதுமே நடுமுதுகு அளவு மட்டுமே விட்டு வைத்த கூந்தல் இப்போது இடை தாண்டி கணுக்காலைத் தொட முயற்சி செய்துகொண்டிருந்தது. அதை நீட்டாக அயர்ன் செய்து விடுவது அவளுக்கு மிகவுமே பிடித்த ஒன்று.

இதுதான் அவளது குணம்!

அவளை யாராலும் கட்டாயப்படுத்தி ஒரு வேலையைச் செய்யவைக்க முடியாது. அது எந்த நிலையாக இருந்தாலும், எந்த எல்லையாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளவே மாட்டாள்.

ஆனால் பாசமாகக் கூறினாலோ அவளுடைய மனதிற்கு சரியென்று பட்டாலோ ஒரு காரியத்தைச் செய்வதை யாராலும் தடுக்கவே முடியாது.

அவளது இந்தக் குணத்தாலேயே லோகா உள்ளுக்குள் பதறுவார்… அவரைப் பொறுத்தவரை பெண்ணை அடக்கி வளர்க்க தெரியாத தாய் என்று கூறி விடுவார்களோ என்ற பயம். அந்தப் பயம் எப்போதுமே அவருக்கு உண்டு.

அது தேவையில்லாத பயம் என்று அவ்வப்போது தமிழ் கவுண்ட்டர் கொடுத்தாலும் அவரது மனம் சமாதானமடையாது. மனதை போட்டுக் குழப்பி கொண்டு, சுந்தரத்தையும் ஒரு வழியாக்கி விட்டே ஒய்வார்.

அது போன்ற ஒன்றுதான் தமிழுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணமும்… அவளது இந்தக் குணத்தை கொண்டு தான் திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டாள் என்று லோகா பயந்ததும்.

இப்போது வாஸந்தியை அவர் ஏவி விட்டிருப்பதும் அவளை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கிளப்புவதற்காகத்தான். சுந்தரத்துக்கு அடுத்து வாஸந்தியிடம் தான் சற்று ஒத்து போவாள் என்பதை உணர்ந்து கொண்டவர் கல்லூரியில் போரடித்து கொண்டிருந்தவளை ஓட்டி விட்டிருந்தார்.

வாஸந்தி சிரித்து கொண்டே தமக்கையுடைய லேப்டாப் பேகை எடுத்து வைத்தாள். தமிழ்நதி இயல்பாக இருப்பது போலக் காட்டி கொண்டாலும் அவளது முகத்தில் இருந்த பதட்டம் துல்லியமாகத் தெரிந்தது.

“அக்ஸ்… ஐ திங்க் யூ ஆர் டென்ஸ்ட்… ரைட்?” குறும்பாகக் கேட்ட வாஸந்தியை கண்களில் சிரிப்போடு திரும்பிப் பார்த்தாள். கண்டுபிடித்து விட்டாயா என்ற கேள்வி தொக்கி நின்றது அவளது பார்வையில்!

“தங்ஸ்… உனக்கும் இப்படியொரு கல்யாணம் நிச்சயமாகட்டும். பத்து நாள் முன்னாடி எப்படி இருக்க போறன்னு நானும் பார்க்கத் தானே போறேன்.” அவளது பாணியிலேயே கூறிவிட்டு அவளது பொருட்களை லாக்கரில் வைத்துப் பூட்டினாள்.

அவளது தாய் பேசியபிறகு அவளது டீம் மேனேஜரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக மூன்று நாட்கள் முன்னதாகவே கிளம்ப அனுமதி பெற்றிருந்தாள்.

“நானெல்லாம் பெரிய கிழவி கிட்டயும் சின்னக் கிழவி கிட்டயுமா என்னோட லைப்பை ஒப்படைப்பேன்…? சான்ஸே இல்ல… பத்து பிகரை பார்க்கணும்… அதுல எட்டை வடிகட்டனும்… அதுக்கப்புறம் அஞ்சு கூடக் கடலைப் போடணும்… அப்புறம் ரெண்டை தேத்தனும்… அப்புறம் பைனலா ஒன்னை டிக் பண்ணனும் அக்ஸ்… அதை விட்டுட்டு உப்பு சப்பே இல்லாம நீ பண்றதுக்கு பேர் கல்யாணமா?”

சிரிக்காமல் இப்படி பிட்டு பிட்டாகப் போடுவதுதான் வாஸந்தியின் ஸ்பெஷாலிட்டி என்று அறிந்த தமிழ் அவளது தலையைத் தட்டி சிரித்தாள்.

“அடிப்பாவி… நீயெல்லாம் உருப்புடுவியா?”

“என் எக்ஸ் பேசற மாதிரியே பேசறியே அக்ஸ்… அவன் ஏதாவது லஞ்சம் கொடுத்தானா உனக்கு?” கண்ணடித்து கேட்டாள்.

“பாவி… எக்ஸ்ஸா?” என்று திறந்த வாய்மேல் கையை வைக்க,

“பின்ன… அவன் கிட்ட மட்டும் தான் பேசனும்ன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணினான்… அவனை எக்ஸ் ஆக்கிட்டேன்.” அலட்டிக் கொள்ளாமல் கூறியவளை புருவத்தை உயர்த்தி பார்த்தாள். முகம் முழுக்க சிரிப்பு!

முன்னமே தமிழிடம் பகிர்ந்து இருந்தாள். தன்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் தன்னிடம் ஈர்ப்பு காட்டுவதை பற்றி… ஆனால் அவளுக்கு அந்த மாதிரியானவற்றில் ஈடுபாடு கிடையாது. பேச்சுத்தான் பேசுவாளே தவிர ஆர்வம் என்று இருந்ததில்லை. அதிலும் வாஸந்திக்கு தமிழிடம் பகிர்ந்து கொள்ளாமல் எதையும் மனதில் வைத்துக் கொள்ள தெரியாது.

எப்போதுமே தமிழ் வேண்டும் அவளுக்கு!

“அநியாயம் பண்ணாதேடி… அப்புறம் அவன் உன்னைப் போட்டுத் தள்ளிற போறான். இப்ப அதான் பேஷனா இருக்கு…” சிரித்து கொண்டே கூறினாலும் நிகழ்வுகளின் வலி தெரிந்தது தமிழின் குரலில்!

“நான் அவனைப் போட்டுத் தள்ளாம இருக்கணும் அக்ஸ்…” மிகவும் சாதாரணம் போல வாஸந்தி கூறிவிட்டு,

“சரி… என்ன பெரியம்மா உன்னை இப்பவே புறப்படச் சொல்றாங்க… நீ என்னடான்னா ரொம்ப நிதானமா கிளம்பிட்டு இருக்க?”

“ரயில்வே என்ன நம்ம தாத்தாவோடதா? நினைச்சவுடனே இந்தாம்மா டிக்கட்ன்னு கொடுப்பாங்களா? லாங் வீக் என்ட்… பஸ் எல்லாம் ரிசர்வேஷன் கூட இல்ல… புல் ஆகிடுச்சு… எல்லாத்தையும் பார்த்துட்டு தான் என்ன பண்றதுன்னு தெரியாம உட்கார்ந்துட்டு இருக்கேன்மா தாயே…”

தன்னுடைய கேபினை மூடியபடியே தமிழ்நதி அலுப்பாகக் கூற, அங்கிருந்த அவளுடைய நண்பர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

“ஹாய் கல்யாணப்பொண்ணு… ஊருக்குக் கிளம்பிட்ட போல…” உடன் வேலை செய்யும் சார்லி கிண்டலாகக் கேட்டார்.

“பார்த்தாலே தெரியல… எப்படா ஊருக்குப் போவோம்ன்னு அவ தவிக்கறது உன் கண்ணுக்குத் தெரியலையா?” உடன் நின்று கொண்டிருந்த வாசவி எடுத்துக் கொடுக்க, தமிழ் நெளிந்தாள். வாஸந்தியின் முகத்தில் கேலிப்புன்னகை!

திருமணம் நிச்சயமானது முதலே இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறாள் தான்.

“ஓகே ஓகே… போதும் எங்க அக்ஸ்ஸ கிண்டல் பண்ணது. எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து மிச்சத்தை வெச்சுக்கங்க…” நடுவில் வந்து வாஸந்தி பஞ்சாயத்து பேச,

“ஏய் சில்லுவண்டு… எங்களுக்குக் கிடைச்ச சான்ஸை நாங்க மிஸ் பண்ணுவமா? நீ இதுல தலையிடாத…” உடன் வேலை பார்க்கும் பார்த்திபன் வீறு கொண்டு எழுந்து வாஸந்தியை வாரினான்.

“ஹலோ… நான் சில்லுவண்டா? உங்களுக்கு என்ன தைரியம்…?” எப்போதும் போலப் பார்த்திபனிடம் எகிறிய வாஸந்தியை பார்த்துச் சிரித்தாள் தமிழ்நதி.

இதுவும் எப்போதும் நடப்பதுதான். தமிழ்நதியை பார்க்க இங்கு வரும் போதெல்லாம்! தமிழின் நண்பர்கள் அனைவரும் அவளுக்கும் நண்பர்கள். அதனால் அவர்களுக்குள் இந்தக் கேலியும் கிண்டலும் எப்போதும் இருப்பதே!

“பின்ன நீ சில்லுவண்டு இல்லாம… படிக்கறது செக்கன்ட் இயர்… அதுக்குள்ளே பெரிய பொண்ணுன்னு நினைப்பா?”

“நான் இப்ப ரொம்ப பிஸியா இருக்கேன்… அதனால நீங்கத் தப்பிச்சீங்க… இல்லைன்னா…” ஒற்றை விரலைக் காட்டி மிரட்டிய வாஸந்தியை பார்த்து அனைவருமாகச் சிரிக்க,

“இல்லைன்னா மட்டும்…” பார்த்திபன் அவளை மீண்டும் வம்பிழுத்தான்.

“அதான் நான் பிஸின்னு சொல்றேன்ல…” என்று நழுவப் பார்த்தாள்.

“ஒரு சிங்கம்… அசிங்கமாகி விட்டதே… அடடா ஆச்சரியக்குறி!” சிரித்துக் கொண்டே பார்த்திபன் வார… அவனைப் பார்த்து வாஸந்தி முறைக்க, மற்றவர்கள் சிரிக்க,

பேசிக்கொண்டே அனைவருமாக வெளியே வர…” சரி… தமிழ்… வாழ்த்துக்கள். நேரமாகிடுச்சுடா… நான் கிளம்பறேன்.” வாசவி கிளம்ப,

“சரி சவி… கல்யாணத்துக்குக் கண்டிப்பா வந்துடுங்க…”

சார்லியும் வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டுப் புறப்பட… அவன் பின்னே பார்த்திபனும் மேலும் வம்பிழுத்துவிட்டு புறப்பட்டான்.

பார்க்கிங்கை நோக்கி இருவருமாக நடக்க, தமிழ் யோசனையிலேயே வந்தாள். என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை. வா என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தாயை நினைத்துப் பல்லை நறநறவெனக் கடித்துக் கொண்டாள்.

“என்னக்கா யோசனை? பேசாம டேக்சில போய்டுக்கா…”

“ஏன் இளைய கிழவிங்க மூத்த கிழவிங்க எல்லாம் சேர்ந்து என்னை மொத்தறதுக்கு ப்ளான் பண்றியா?”

இளைய கிழவிகள் என்பதற்கான அருஞ்சொற்பொருள் அன்னையும் சிற்றன்னையும்… மூத்த கிழவிகள் என்பது பாட்டிகள் என்பதாம்… இதைக் கேட்டால் மூத்த கிழவிகள் இந்தச் சிறுசுகளின் தலைமுடியைப் பிடித்தாட்டிவிடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த இரண்டுமே இது போன்ற பேச்சுக்களை ரகசியமாக மட்டுமே பேசுவார்கள்.

ஆனால் வாஸந்தி மட்டும் விதிவிலக்கு!

அது போன்ற சமயங்களில் தமிழும் புகழேந்தியும் கிரேட் எஸ்கேப் என்று ஆகிவிட்டாலும் வாஸந்தி வம்படியாக அவர்களை வம்பிழுக்காமல் வருவதில்லை.

“ஏன்? நெனச்சவுடனே வரணும்ன்னு ஆர்டர் போடத் தெரியுதில்லை. அப்புறம் எப்படி வர்றதாம்? பஸ், ட்ரைன்ல புல்… டேக்சி வேண்டாம்ங்கற… சரி பிளைட் ஓகே வா?” என்று சிரித்தாள்.

தமிழ்நதி முறைத்தாள்.

அவளுடைய மிகப்பெரிய பிரச்சனையே அதுதான் என்பதால் தான் வாஸந்தி அதைச் சொல்லிச் சிரித்ததும்.

உயரத்தை பார்த்துப் பயப்படுதல்!

அவளுக்கு உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது உடல் நடுங்கி தலை சுற்றி இன்னும் என்னவெல்லாம் ஆகுமோ அத்தனையுமாகி ஓடி வந்து விடுவாள்.

இதில் ஃப்ளைட்டா? சான்சே இல்லையே!

தமிழ்நதியின் இந்தப் பயம் சிறியவர்கள் இருவருக்குமே கேலி செய்வதற்கு அல்வா துண்டுபோல!

அதைக்கொண்டே வாஸந்தி இப்போது கேலி செய்ய… தமிழ்நதி முறைத்தாள்.

பேசிக்கொண்டே டாரசின் கார் பார்க்கிங் வந்து விட்டவர்களுக்கு வாட்ச்மேன் வணக்கம் வைக்க, அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள் தமிழ்நதி… வாடை காற்று வீசியது. வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருள் கவிய ஆரம்பித்து இருந்தது.

மழை வரும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தன.

வானிலை அறிக்கையில் அவள் மிகவும் நம்பும் வெதர்மேன் கண்டிப்பாக இந்த முறை மழை சென்ற முறையைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்று கொளுத்தி போட்டிருக்க, பேஸ்புக் சமூகம் சற்று ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து இருந்தது.

நிமிர்ந்து மேகங்களைப் பார்த்தவளுக்கு அது வேறு பயமாக இருந்தது. மழைப் பிடிப்பதற்குள் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

புன்னகையோடு அருகில் வந்த வாட்ச்மேனை பார்த்து,

“அண்ணா… இன்னும் பதிமூன்று நாளில் கல்யாணம்… கண்டிப்பா வந்துடுவீங்கல்ல…” ஆதூரமாக அவரைப் பார்த்துக் கேட்டாள்.

“ம்மா… நீங்க என்னைக் கூப்பிட்டதே ரொம்ப சந்தோஷம்… கண்டிப்பா வரப் பார்க்கறேன்ம்மா… அதுவும் நம்ம ஊருக்கு வர்ற கசக்குதா?” புன்னகையோடு அவரும் கூறினார்.

அவருடைய பூர்வீகமும் சோழவந்தான் தானாம்… அதனாலேயே அவருக்குத் தமிழின் மீது பாசம் அதிகம்… அதனாலேயே அவ்வப்போது தலைக்காட்டும் வாஸந்தியை எந்த நேரமானாலும் விட்டு விடுவார்… அதைத் தான் அவள் அந்த லட்சணத்தில் கலாய்த்தது…

“சரிண்ணா… நான் கிளம்பறேன்.”

இதுதான் தமிழ்நதி… ஆட்களுக்குள் வேற்றுமை பார்க்கத் தெரியாது. பிறந்தது பெரிய விவசாய குடும்பம் என்றாலும் அதை அவள் தலையில் ஏற்றிக் கொண்டதில்லை அவள்.

காவிரி பாய்ந்து வளப்படுத்திய தஞ்சையில் மட்டும் தான் யானை கட்டி போர் அடித்தனர் என்று இல்லை. அதற்கு இணையான வளம் சோழவந்தானிலும் இருந்ததாம்.

வைகை சுழிந்து சோழவந்தானை வளப்படுத்த போரிட வந்த சோழன் அந்த வளத்தைப் பார்த்து வியந்து உவந்ததனால் சோழவந்தான் என்று பெயர் வந்ததாம்.

சோழவந்தான் இன்று பல்வேறு முன்னேற்றம் பெற்று விட்டது என்றாலும் ஆட்கள் மிகவும் எளிமையானவர்கள்.

தமிழ்நதிக்கு எப்போதுமே சோழவந்தான் குறித்த பெருமை அவளுக்கு உண்டு… யாருக்குத் தான் சொந்த ஊர்குறித்த பெருமை இருக்காது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

மூவருமாகப் பார்க்கிங்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் அருகில் வந்தான் பார்த்திபன்.

“என்ன ஆச்சு தமிழ்? எனி ப்ராப்ளம்?” என்று கேட்டான். அவனைக் கிண்டலடிக்க வாய் திறந்த வாஸந்தியை கையமர்த்தி விட்டுத் தமிழ்நதி,

“ஊருக்கு வரச் சொல்றாங்க பார்த்தி… ஆனா டிக்கட் இல்லை. அதான் என்ன செய்யறதுன்னு யோசனை… டிக்கட் எதுவும் அரேஞ் பண்ண முடியுமா?”

பார்த்திபனிடம் கேட்டு விட்டாலும் அவளுக்குச் சற்றும் நம்பிக்கையில்லை.

“இந்த அம்மா ட்ரைன் இல்லைன்னா பஸ்ன்னா மட்டும் தான் போவாங்களாம்… டாக்ஸில போகச் சொன்னா முடியாதுங்கறா…” வாஸந்தி கூறுவதை கேட்டவன்.

“ஏன்… சில்லுவண்டு… நீ போகலையா? கூட நீ இருந்தா எவனா இருந்தாலும் தெரிச்சு ஓடிருவானுங்க இல்லையா…” சிரிக்காமல் கலாய்த்த பார்த்திபனை முறைத்தாள் வாஸந்தி.

“ஒரு நல்ல பொண்ண நல்ல பொண்ணாவே இருக்க விடறது இல்ல இந்தச் சமூகம்…”

சுற்றும் முற்றும் பார்த்தவாறே, “யார் அந்த நல்ல பொண்ணு?” தேடுவதை போலப் பாவனை செய்த பார்த்திபனை பார்த்து முறைத்தவள்.

“ம்ம்ம்ம்… நான்தான். வேற யாரு?”

“கொடுமை… சரி அந்த நல்ல பொண்ணு ஏன் கூடப் போகல?”

“அந்த நல்ல பொண்ணுக்கு நாளைக்கு ப்ராக்டிகல் எக்ஸாம் இருக்கு…” முறைத்தவாறே கூறியவளை பார்த்து மேலும் சிரித்தவன். தமிழின் புறம் திரும்பி.

“தமிழ்… இந்தச் சில்லுவண்டு சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு… உனக்குத் தெரியாத டேக்சி தானே பயம்? என் ஃப்ரென்ட் கிட்ட பேசறேன். ரொம்ப நல்லா தெரிஞ்சவன். அவைலபிள் இருக்கான்னு பார்க்கறேன். ஓகே வா?”

அவளது ஒப்புதலுக்காக முகத்தைப் பார்க்க, அவள் வாஸந்தியை பார்த்துவிட்டு.

“ஓகே பார்த்தி… உங்களுக்கு நல்லா தெரிஞ்ச டேக்ஸின்னா ஓகே…” என்று தலையாட்ட,

பார்த்திபன் அவனது கைப்பேசியை எடுத்து எண்களை ஒற்றினான்.

“எடா பார்த்திபா… அத்புதம் தன்னே. எந்தா கார்யம்? எந்தாடா…?” ஆர்ப்பாட்டமாக மலையாளத்தில் அழைத்தது மறுபுறம்!

“ஸ்ரீதரா… எப்படி இருக்கே?” முகம் கொள்ளா புன்னகையோடு தமிழில் பார்த்திபன் கேட்டான்.

“ம்ம்ம்… வளர சுகம்! எந்தா… ஸ்ரீதரனை குறிச்சு ஒருக்கிலுமில்லாதே என்னென்னே சிந்திச்சு? எந்தா மோனே?” மலையாளமும் தமிழும் பாதியாகக் கலந்து கட்டியடித்தான் அந்த ஸ்ரீதரன்.

“நத்திங்… உன்கிட்ட பேச நான் என்ன நாள் பார்த்து நட்சத்திரமா பார்க்கப் போறேன்? அதெல்லாம் ஒன்னுமில்லடா… என் ஃப்ரென்ட்டுக்கு அவசரமா அவுட் ஸ்டேஷன் டேக்ஸி வேணும்… அதான் டக்குன்னு உன் நினைப்பு வந்துச்சு…”

“அதானே… பக்ஷே இன்ன அவுட் ஸ்டேஷன் டேக்ஸி எந்தாகிலும் ஃப்ரீயாயிட்டு இல்லடா… ம்ம்ம்… பந்த்ரெண்டு அவுட்ஸ்டேஷன் டேக்சியுமே என்கேஜ்ட்…”என்று கை விரிக்க.

“ஏன் ஸ்ரீ? அட்லீஸ்ட் நீயாவது வரலாமே?” தயங்கியவாறே கேட்டான் பார்த்திபன்… அவன் என்ன எண்ணிக் கொள்வானோ என்ற தயக்கம் வேறு…

“எனிக்கும் அர்ஜன்ட் வொர்க்டா…” என்று அவன் தயங்கினான்.

“ஸ்ரீ… லேடீசை தனியா இந்த நேரத்துல டேக்சில அனுப்பச் சங்கடமா இருக்கு… நீயான்னா பத்திரமா கொண்டு போய் விட்டுடுவ…”

“ம்ம்ம்… மதுரை வரைக்கும் ஞான் போறேன். எனிக்கு அவிடே அர்ஜன்ட் ஜோலியுண்டு… இப்போள் எந்தாணு செய்து?”

ஸ்ரீதரன் சென்னை வந்து மூன்று வருடங்களாகி விட்டாலும் அவனுக்குத் தமிழ் அவ்வளவாக வருவதில்லை. அவன் அதைப் பற்றிக் கவலையும் படுவதில்லை. அவனுக்கு அவனது மலையாளம் மிகவும் பிடித்தமானது. எப்போதுமே அதை அவன் விட்டுக் கொடுப்பதில்லை. நண்பர்களிடையே உரையாடும்போது மட்டும் தமிழ் பாதி மலையாளம் பாதி என்று கலந்து கட்டியடிப்பான்… அவன் தமிழென்று பேசுவதும் சத்தியமாகத் தமிழென்று நம்ப முடியாத அளவு தான் இருக்கும்!

“டேய்… அவங்களும் மதுரை தான் போகணும்… மதுரைக்கு முன்னாடியே சோழவந்தான் தான். அப்படியே டிராப் பண்ணிடலாமே…” ஆர்வமாகப் பார்த்திபன் கூற, சற்று யோசித்த ஸ்ரீதரன் ஒப்புதலாகத் தலையாட்டினான்.

“ஓகே பார்த்தி…” என்று கூறியவன், எப்போது எங்கே வருவதென்று கேட்டு விட்டு வைத்தான்.

இந்தப் பயணம் ஸ்ரீதரனின் வாழ்க்கையை புரட்டிப் போடுமென்றோ, தமிழ்நதியின் வாழ்க்கையைத் திசை மாற்றுமென்றோ இப்போது கணிக்க முடியுமா? அப்படி வருவதையெல்லாம் கணக்கிட்டு விட்டால் மனிதன் தெய்வமாகி விடுவானே!

 

error: Content is protected !!