தாரகை – 4
தாரகை – 4
இரண்டு வாரம் ஆகியிருந்தது, நந்தன் பிரதர்ஸின் வாழ்வில் புயல் வீசி முடிந்து…
ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை அந்த ரைட் சகோதரர்கள்.
தான் தாலி கட்டி கூட்டி வந்த ராட்சஷியை கண்டால் பொறுமை எருமை தூரத்திற்கு சென்றுவிடுமென்று காவ்ய நந்தன் வீட்டிலேயே தலையை காட்டவில்லை.
மொத்த பெட்டி படுக்கையையும் சுருட்டி கொண்டு தன் எஸ்டேட்டில் அந்நியாத வாசம் மேற் கொள்ள சென்றுவிட்டான்.
முகில் நந்தனின் நிலை தான் படு பாவம்… எல்.கே.ஜி குழந்தையை அவன் தலையில் ஏமாற்றி கட்டி வைத்திருந்தனர்.
பதிலுக்கு பதில் பேசி அரட்டை அடிப்பவனின் தலையில் பதிலே பேச தெரியாத மேகாவை கோர்த்துவிட்டனர்.
அவன் கனவுகள் வேறு. விருப்பங்கள் வேறு. அது போல காதலியும் வேறு.
அவன் என்ன கனவா கண்டான்… தன் காதலின் ஆயுட் காலம் வெறும் ஒரு நாள் என்று.
சிங்கிள் ஆக பல காலம் சுற்றி கொண்டிருந்தவன் மிங்கிள் ஆகலாமென அவன் எடுத்து வைத்த முதல் அடியிலேயே ஆண்டவன் பெரிய கட்டையாக போட்டுவிட்டு கல்யாணம் செய்து அவன் காலையே அசைக்க முடியாதபடி ஜோலியை முடித்துவிட்டார்.
தூரத்தில் சிறுபிள்ளை போல ‘தான் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுவதற்காக’ காத்திருந்த மனைவியை நினைத்து ஆயாசமாக இருந்தது அவனுக்கு.
அவன் மனதின் நினைவுகள், கடந்த கால பஸ்ஸில் ஏறி வாழ்க்கை யூ டர்ன் போட்ட இடத்தை பார்க்க புறப்பட்டுவிட்டது.
முகில் நந்தன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய ஐடி கம்பெனியில் பணி புரிகின்றான்.
ஊட்டியில் என்ன தான் அவர்களுக்கு பெரிய தேயிலை தோட்டம், செல்வ செழிப்பு என்று வளம் குறையாமல், எல்லாம் சிறப்பாக இருந்தாலும் அவன் மனமோ முழுக்க முழுக்க கணிப்பொறியிலேயே ஊறியிருந்தது.
கணனியில் ஜாம்பவான் அவன்.
எட்டாவதிலேயே அத்தனை நிரல் மொழிகளையும் படித்து கைதேர்ந்தவன்.
அவனுக்கு புதியதாக ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும். அவனுடைய தேடல்கள் ஒவ்வொரு நாளும் மாறி கொண்டே இருக்கும். தன்னைத் தானே புதுப்பித்து கொள்வான்.
உலகம், இப்படி தான் இருக்கும் என்று ஒன்றை சொன்னால் அது எப்படி அப்படி இருக்கும் என்று ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து முடித்து விட்டு இறுதியாக ஏற்றுக் கொள்பவன் அவன்.
அவனுக்கோ எதையும் ஆராயாமல் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டும் மணவாட்டியை கடவுள் ஃபிக்ஸ் செய்தததை அறியாமல், இரண்டு வருடங்களாக தன்னையே சுற்றி வந்த அனாமிகா என்னும் பெண் பறவையை இதற்கு மேலும் மறுப்பது பாவமாக பட சரியென்று அவள் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தான்.
இயந்திர பறவை தன் இறக்கையை விரித்து பறக்க தயாராகிய நொடி திரும்பி ஒரு முறை அந்த இடத்தைப் பார்த்தான்.
ஏனோ தெரியவில்லை இங்கு வருவது இது தான் கடைசி முறையாக இருக்கும் என அவனுக்கு தோன்ற இரண்டு வருடங்களாக தான் வசித்த ஆஸ்திரேலியா மண்ணை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்தான்.
விமானம் மேல் எழும்ப எழும்ப அவன் இதுவரை உணராத ஒரு உணர்வுகள் உள்ளுக்குள் எழும்பியது. எல்லாம் இனி மாறப் போகிறது என அவன் உள் மன செல்கள் திரும்ப திரும்ப அவனுக்கு தலைப்பு செய்தி வாசித்து காட்டியது.
ஒரு வேளை முதல் முறையாய் காதல் சொன்ன பெண்ணை விட்டுவிட்டு வருவதால் உள்ளுக்குள் ஏதோ பிசைகிறதோ என நினைத்தவன், தொலை தூரத்தில் புள்ளியாக தெரிந்த அனாமிகாவை மீண்டும் ஒரு முறைப் பார்த்துவிட்டு தன் அலைப்பேசியை திறந்தான்.
அதில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணன் அனுப்பிய ஒரு பெண்ணின் புகைப்படம் கண்ணில் விழுந்தது.
“டேய் முகிலு இந்த பெண்ணு எப்படி இருக்கா?” என காவ்ய நந்தன் அலைப்பேசியில் அன்று கேட்ட கேள்வியும் கூடவே நினைவிற்கு வந்தது.
இவளுக்கு என்ன குறை!
அழகு தாதுக்களால் நிரப்பப்பட்ட பிரம்மிப்பு குவியல்.
சித்திர வடிவ முகம்.
கூர் வாளின் கூர்மையோடு நாசி.
குளிர் பிரதேசத்தை வாடகை எடுத்ததைப் போல குளுகுளுவென்று கண்கள்.
குழந்ததைத்தனம் ததும்பி விளையாடிய கன்ன குழிகள். மொத்தத்தில் பேரழகி.
கண்களால் ரசித்தவன் “எட்டர்னல் பியூட்டி” என தன்னை மறந்து அந்த பெண்ணுக்கு சர்டிஃபிகேட் கொடுக்க மறுமுனையிலிருந்த காவ்யன், “அப்போ இந்த பொண்ணையே நம்ம வீட்டு மருமகளா செலக்ட் பண்ணிடலாம்டா…” என்றான் தகவலாக.
“அப்பாடா என் அண்ணன் சாமியாரா போவானு நினைச்சேன். நல்ல வேளை மனசு மாறி கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டியே… பொண்ணு கிட்ட பேசுனியா? பிடிச்சு இருந்துதா?” இவன் அடுக்கு அடுக்காய் கேள்வி கேட்க காவ்ய நந்தனிடமிருந்து ஒற்றை வரியில் பதில்.
“பேசுனா தானே பிடிச்சு இருக்கானு தெரியும்” என்றான் அசட்டையாக.
“அடேய் என்னடா கட்டிக்க போறவன் நீ… இப்படி பதில் சொல்லலாமா… வாழ்க்கை பிரச்சனை இது. கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு ஒத்து வருமானு பேசிடு” என்றான் தன் அண்ணன் மீதுள்ள அக்கறையில்.
“கல்யாணம் பண்ணுனு வீட்டுலே நச்சு பண்றாங்கடா. அதுலே இருந்து தப்பிக்க தான் இந்த கல்யாணம்… அடக்க ஒடுக்கமா வாயைவே திறக்காத பொண்ணு தான் வேணும்னு சொன்னேன்… உனக்கே தெரியும்லே எனக்கு அதிகமா பேசுற பொண்ணுங்களை பார்த்தாலே மைண்ட்குள்ளே க்ரைண்டர் ஓடும்” என இவன் கேட்க முகில் நந்தன் தலை தன்னால் ஆடியது.
காவ்ய நந்தன் பெண்களிடம் அதிகமாக பேச மாட்டான். முகிலோ அதற்கு நேர் எதிர். தினமும் ஒரு பெண் சிநேகிதியை அவன் வீட்டுக்கு நட்பாக அழைத்து வர அந்த பெண்கள் பேசும் தொண தொண பேச்சை கேட்டு காவ்ய நந்தன் காத தூரம் ஓடுவான். ஒரு முறை தொல்லை தாங்காமல் ஒரு பெண்ணின் கபாளத்தை இரண்டாக பிளந்துவிட அப்போதே முகில் வீட்டிற்கு தன் சிநேகிதர்கள் கூட்டிக் கொண்டு வருவதை நிறுத்திவிட்டான்.
“ஏடே இருக்கியா?” அந்த புறம் வீசிய அமைதியில் காவ்யநந்தன் அழைக்க வேகமாய் முகில் சிந்தை கலைந்து “இருக்கேன்” என்றான் அவசரமாக.
“இந்த பொண்ணு அமைதியாம்… வாயைத் திறந்து பேசாதாம்… சூரியனை காட்டி நிலானு சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்பிடுமாம். இந்த பொண்ணு தான் உனக்கு ஏத்த ஜோடினு அம்மா அப்பா கையை காட்டவும் சரினு தலையை ஆட்டிட்டேன். கல்யாணம் ஒரு மாசம் கழிச்சாம். ஒழுங்கா ஒரு வாரம் முன்னாடி வந்து ஊரு சேரு” என
அன்று பேசி முடித்த தன் அண்ணனை நினைத்து இன்றும் அவனுக்கு சிரிப்பு வந்தது.
‘பதிலுக்கு பதில் சண்டை போடாம எல்லாத்துக்கு பூம்பூம் மாடு போல தலையாட்டிட்டு இருந்தா வாழ்க்கையிலே என்ன த்ரில் இருக்கு. ஐடியா இல்லாத பையன்’ என தன் அண்ணனுக்காக பாவம் பார்த்தவனின் நிலையோ இப்போது அதள பாலத்தில்.
என்ன தான் தன் அண்ணன் ஒரு வாரத்திற்கு முன்பு வர சொன்னதால் அவன் முன்னரே விடுமுறைக்காக விண்ணப்பித்திருந்தாலும் அவனுக்கு விடுமுறை கிடைத்தது என்னவோ திருமணத்திற்கு ஒரு நாள் முன்னால் தான்.
அடித்துப் பிடித்துக் கொண்டு ஊட்டி வந்து சேர்ந்தவனின் நாசியில் இறங்கியது சொந்த ஊரின் மண் வாசம். அதை ஆழ உள் இழுத்து சுவாசித்தவனுக்கு என்னவோ இம்முறை தன் சொந்த ஊரிலிருந்தே புதியதாய் தேட தோன்றியது.
அவன் ஒரு இடத்தில் ஒரு சூழலில் சிக்கி கிடக்கும் கூண்டு கிளி அல்ல. உயர பறக்கும் கழுகு.
அந்த கழுகுக்கு ஏனோ இப்போது சொந்த ஊரில் தன் சொந்த கூட்டில் சுகமாக சுவாசித்து வாழ வேண்டும் என தோன்ற வெளிநாட்டு வேலையை விட்டுவிடலமா என யோசித்தபடி பட்டு வேஷ்டி சட்டையை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தான்.
திருவிழா போல காட்சியளித்தது அந்த திருமண மண்டபம். சுற்றி எங்கும் ஆரவாரமும் சந்தோஷ குதூகலமும்…
பின்னே அந்த ஊரின் பெரிய தலையின் திருமணம் தடபுடலாக இருக்காதா!
பெரிய புன்னகையோடே உள்ளே நுழைந்தவன் அங்கே மாப்பிள்ளை கோலத்தில் அமர்த்தலாக அலட்டலின்றி ஐயர் சொல்வதை விதியென செய்து கொண்டிருந்த காவ்ய நந்தனை கண்டு புன்முறுவல் பூத்தான்.
கெட்டி மேள சப்தத்தில் கொஞ்சம் சுருதி ஏற அங்கே மணவறை அறையிலிருந்து பேரழகியாய் ஜொலித்தபடி காவ்ய நந்தனை நோக்கி மணமேடைக்கு வந்து கொண்டிருந்தாள் மேகா ஶ்ரீ.
அந்த பெண்ணையும் அண்ணனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவனிற்கு எல்லாம் சரியாக சிறப்பாக நடந்து கொண்டிருப்பது போல தான் தோன்றியது.
ஆனால் அவள் ஒருத்தி வரும் வரை.
எழில்மதி!
இவர்கள் வாழ்க்கையை சுழட்டி அடிக்கப் போகும் புயல்.
இனி காட்சிகள் மாறும். ஜோடிகள் மாறும்.