தாரகை – 9

தாரகை – 9

மேகா ஶ்ரீ

இவள் குழப்பங்களின் மேக மூட்டமா!

ஏன் இவள் புரியாத புதிராகவே இருக்கிறாள்…

முகில் நந்தனால் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவளை நோக்கி முகில் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இவனது நிலம் தான் பின்னோக்கி நகர்கின்றது.

எத்தனை முயற்சித்தாலும் முடிவு என்னவோ பூஜ்ஜியம் தான். எத்தனையோ ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்று இருக்கின்றான் ஆனால் மனைவியிடம் மட்டும் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் நிற்கின்றான்.

பெருமூச்சோடு அவளை நோக்கி நடந்தவன் நிமிர்ந்து மேலே பார்த்தான்.  மின்விசிறி சுழலாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

தலையை குனிந்து மனைவியைப் பார்த்தான். காலையில் உடுத்திய அந்த உடையை அவள் அவிழ்க்கவே இல்லை.

கண்டிப்பாக இலைகள் உடம்பில் உறுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.  எரிச்சல் மூண்டு வேறொரு உடையை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் தன் வார்த்தைக்காகவா அங்கும் இங்கும் அசையாமல் நின்றாள்?

“எதுக்கு மேகா டிரெஸ்ஸை கழட்டாமா அப்படியே நிற்கிற?” மின்விசிறி ஸ்விட்சை தட்டியவாறே கோபமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“நீங்க தானே என்னை எங்கேயும் போகாம நிற்க சொன்னீங்க?” என்றவளை வெட்டவா குத்தவா ரீதியில் பார்த்து வைத்தான்.

“போதும் மேகா… உன் கூட மல்லு கட்ட சுத்தமா என்னாலே முடியலை. ரோபோ மாதிரி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிறதை அப்படியே பண்ற. பயந்து பயந்து உன் கூட பேச வேண்டியதா இருக்கு. ஒழுங்கா டிரெஸ்ஸை மாத்து” என அவன் சொல்லவும் அதுவரை அட்டென்ஷனில் நின்றிருந்தவள் சட்டென தளர்ந்தாள்.

மெல்ல நகர்ந்து செல்ல முயன்றவளின் முகத்தில் வலியின் ரேகைகள் வெற்றிலை கொடியாய் படரவும் சட்டென முகில் குனிந்து அவள் காலைப் பார்த்தான்.

நீர் கோர்த்து வீங்கிப் போய் இருந்த காலோடு நடக்க முயன்று  தடுமாறியவளை வருத்தத்தோடு தாங்கிப் பிடித்தவன் பூங்குவியலை கையாளும் லாகுவத்தோடு கட்டிலின் மீது அவளை கிடத்திவிட்டு பாதத்தை நோக்கி சென்றான்.

நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததன் விளைவால் அவள் பிஞ்சு பாதங்களில் சிகப்பு கோடுகள்.

வருத்தமாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இந்த வலிக்காகவாது அவள் பின்வாங்கியிருக்கலாம் அல்லவா.

முதலில் விளையாட்டாக அவள் செய்வதை எடுத்து கொண்டவனுக்கு நாளாக நாளாக அவளின் இந்த நிலை கலக்கத்தைக் கொடுத்தது.

“ஏன்டி இப்படி பண்ற. வர வர உன்னை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு” என சொல்லியபடி அவள் பாதங்களை மிருதுவாய் வருடிவிட்டான்.

வலிக்கு அந்த ஸ்பரிசம் ஆதூரமாய் இருந்திருக்க வேண்டும். அதன் பொருட்டு சின்ன ஒளியாவது அவள் கண்களில் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆனால் எதையும் ஊடுருவி பிரிதிபலிக்காத ரசம் பூசப்படாத கண்ணாடியாய்  அவள் கிடந்தாள்.

“மேகாமா ஏன்டா இப்படி இருக்க? உனக்கு வலியும் தெரியாதா? சந்தோஷமும் புரியாதா” எனக் கேட்டபடி அவள் கன்னத்தைப் பிடித்தான்.

“அதெல்லாம் இல்லைங்க… உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரட்டுமா” என அதே காலோடு எழுந்து கொள்ள முயற்சித்தவளைத் தூக்கி மீண்டும் கட்டிலில் போட்டவன்,

“நீ எனக்கு எந்த சேவகமும் பண்ண வேண்டாம். ஒழுங்கா படு” என அவளை படுக்க வைக்க எவ்வித எதிர்வினையுமின்றி படுத்தாள்.

“ஏன் மேகா இப்படி இருக்க?” திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான். பதில் கிடைத்துவிடாத என்னும் ஆர்வம் அவன் கண்களில் தெறித்தது.

ஆனால் அவள் உதடுகளோ மௌனத்தைத் தின்று கொண்டிருந்தது.

“இப்போ கூட இந்த டிரெஸ் கழட்டாம அதே உறுத்தலோட ஏன் படுத்துட்டு இருக்க? எது உன்னை தன்னிச்சையா முடிவு எடுக்க விடாம தடுக்குது?” எனக் கேட்டபடி அவளது உடையை அவனே அவிழ்த்து விடுவித்தான்.

வியர்வையில் குளித்த அவள் உடலை இப்போது தென்றல் காற்று ஆதூரமாய் வருடி விட்டு கொண்டிருந்தது.

நிர்வாணம் பூண்ட அரை வெண்ணிலவாய் கட்டிலில் கிடந்தாள். வெட்கப்பட்டு சிணுங்கி தன் உடலை மறைக்கவும் இல்லை. சங்கடப்பட்டு தன்னை குறுக்கி கொள்ளவும் இல்லை.

உள்ளங்கையை மூடிக் கொண்டு சீலிங் ஃபேனை வெறித்தபடியே கிடந்தாள்.

ஆனால் அதே போல் முகில் நந்தனால் இருக்க முடியவில்லை. அவனுக்குள் உணர்ச்சிகள் கொந்தளித்தது.

முதல் ஸ்பரிசம் அவள். அவன் கண்களை நிறைத்த முதல் பெண் அவள். பல கோடி இளமைப் பூக்கள் ஒரே நேரத்தில் உள்ளுக்குள் மலர்ந்தது.

இவள் தன் மனைவி என்ற ஒரு உணர்வே போதுமானாய் இருந்தது அவனை கிளர்ந்தெழ வைக்க. ஆனால் அவளுக்கும் அதே உணர்வு இருக்க வேண்டும் அல்லவா! ஒரு சிணுங்கலாவது செய்ய மாட்டாளா? செய்ய கூடாதா!

பொறுத்து இருந்தது போதும் அவள் முகத்தில் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்தவன் அவள் முகத்தை கைகளில் தாங்கினான்.

ஒருவேளை கூடல் அவள் உணர்வுகளை தட்டி எழுப்புமோ!

எல்லா வழிகளையும் சோதித்து முடிந்தவன் இறுதியாக இருந்த அந்த ஒரு வழியையும் முயற்சி பார்த்துவிடலாமா என்ற முடிவோடு அவளருகில் இன்னும் நெருங்கினான்.

“மேகா நாம நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாமா… உனக்கு ஓகேவா? மே ஐ!”  என்றான் அவள் சம்மதம் அறிந்து கொள்ளும் ஆவலில்.

அவள் என்று புருஷன் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றாள்… அவன் என்ன கேட்கிறான் என்று தெரியாமலேயே தலையாட்டி வைத்தாள்.

அவள் ஒப்புதல் கிடைத்த அடுத்த நொடி அவன் இதழ்களின் தளிர் புன்னகை. மென்மையாய் அவள் பாதத்தை தாங்கி தன் முதல் முத்தத்தை அங்கு பதித்தான்.

உள்ளங்காலில்  தொடங்கிய அவன் உதடுகளின் ஊர்வலம் உள்ளங்கையில் வந்து முடிவடைந்தது.

தென்றலைப் போல அவளை மிருதுவாக கையாண்டான். மெல்ல அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துவிட்டு அவள் முகத்தை ஏக்கமாய்  பார்த்தான்.

ஆனால் அவள் முகம் உணர்ச்சிகள் சங்கமிக்காத கடலாய்.

எதையும் பிரதிபலிக்காத கண்ணாடியாய் அவள் முகம் இருக்க அவன் உணர்வுகள் இடி விழுந்த மலராய் கருகிப் போனது.

கூடல் என்பது ஒரே ஒரு உயிரின்  சங்கமம் அல்லவே!

இரண்டு உயிர்களின் சங்கமம் அல்லவா அது. இரண்டு உணர்வு நதிகள் ஒன்றாய் கலக்கும் கடல் அல்லவா. ஆனால் ஒரு நதி உணர்வு வெள்ளத்திற்கு அணைப் போட்டு  நிற்க எப்படி அங்கு கூடல் நிகழும்.

“ஏன்டி என் தொடுகை உன்னை பாதிக்கவே இல்லையா?” என்று கோபமாய் கேட்டவனின் குரல் சட்டென்று தேய்ந்து ஒலித்தது.

கேள்வியை கேட்டவனுக்கே அதற்கான பதில் தெரியும் என்பதால் கண்களில் லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது.

அமைதியாய் நின்றிருந்த மனைவியை நோக்கி, “ஏன்டி என்னை சாகடிக்கிற… உன் மேலே கோபமும் பட முடியலை. படாம இருக்கவும் முடியலை” என்றான் ஆற்றாமை மின்ன.

அவன் கேள்வியில் அந்த அரண்ட கோழி மிரண்டு முழித்தது.

“நான் என்னங்க பண்ணேன்? எதுக்கு கோவப்படுறீங்க?” என்றாள் ஏதும் புரியாமல்.

“நீ எதுவும் பண்ணலை அதான் கோவம். ஒரு புருஷன் உன்னை தொடுறான்… பதிலுக்கு நீ என்ன பண்ணி இருக்கணும்?” என்றான் அவள் கண்களை ஊடுருவி.

“என்ன பண்ணி இருக்கணும்?” அவள் புரியாமல் மீண்டும் கேட்க தலையில் அடித்துக் கொண்டவன்,

“சிணுங்கி இருக்கணும்டி… என் தொடுதலுக்கு நீ சிவந்து இருக்கணும். முணகி இருக்கணும்…அப்புறம்” என மேலும் சொல்ல வந்தவன் அவளின் புரியாத முகம் கண்டு தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

அவனுக்கு அவனை நினைத்தே பயம். குழந்தை போல் இருப்பவளிடம் வரம்பு மீறி நடந்தது மட்டுமன்றி நீ ஏன் என் தொடுதலுக்கு சிணுங்கவில்லை என்று கோபப்படுவது அனர்த்தம் என்பது அவனுக்கே புரிந்தது.

‘தன் தொடுகை அவளை பாதிக்கவில்லை’ என்ற ஒரே ஒரு வார்த்தை அவன் உயிரை கொன்று போடுவதாய்.

மிரண்டு முழித்த மனைவியை காண சங்கடம் ஒரு புறம், எதுவும் தெரியாத சிறுகுழந்தையை கட்டி வைத்துவிட்டார்களே என்ற கோபம் ஒரு புறம்.

இதற்கு மேலும் அங்கிருந்தால் காயப்படுத்திவிடுவோம் என்று பயந்து வெளியே வந்தவனின் கால்கள் வீட்டிற்குள் அமர்ந்திருந்த காவ்ய நந்தனை கண்டு விரிந்தது.

காவ்ய நந்தன் எப்படி வீட்டிற்குள் வந்தான். அவன் அறிந்த அண்ணன் ஒரு முடிவெடுத்தால் எமனே வந்தாலும் மாற்றாதவன் ஆயிற்றே.

தான் கூப்பிட்டு தன் தாய் தந்தை கூப்பிட்டு ஏன் பாட்டி தாத்தா கூட ஆள் விட்டு கூப்பிட்டும் அசையாமல் எஸ்டேட்டில் இருந்தவன் எப்படி இன்று அசைந்தான்? என்ற கேள்வியோடே திரும்ப, அங்கே எழில்மதி உணவோடு டைனிங் டேபிளை நோக்கி வந்தாள்.

அவன் அருகே பரிமாற செல்லப் போக ஒரு பருக்கை கூட விழுங்காமல் அவளை கூர்மையாய் பார்த்த, காவ்ய நந்தன் சட்டென்று எழுந்து தன்னறைக்குள் போய்விட்டான்.

செல்லும் அவனையே மொத்த குடும்பமும் கலக்கமாய் பார்த்துக் கொண்டிருக்க எழில்மதி வருத்தமாய் பாட்டியிடம் திரும்பினாள்.

“நான் தான் சொன்னேன்லே பாட்டி ,அவர் என் கையிலே சாப்பிட மாட்டாருணு… இப்போ பாருங்க சாப்பிடாம எழுந்து போறாரு” என்றவளின் தோளை பாட்டி மெல்ல தட்டிக் கொடுத்தார்.

“என் பேரனை பத்தி உனக்கு தெரியாது. ஒரு விஷயத்தை வெறுத்தான், அதுக்கு அப்புறம் திரும்பியே பார்க்க மாட்டான். நாம தான் இப்படி ஏதாவது பண்ணி அவனை வலுக்கட்டாயமா திரும்ப வைக்கணும்… முதல் முறை சாப்பிடாம எழுந்து போறவன்  நம்ம பண்ற அலும்பலிலே சலிச்சு போய் சரி சோத்தை போடுனு சொல்ற அளவுக்கு மாத்தணும்” என்றவரின் வார்த்தைகளுக்கு வருத்தமாய் தலையாட்டி வைத்தாள்.

“இப்போ எதுக்கு முசரையே இப்படி வைக்கிற. நான் கொடுத்த அந்த  ஐடியாவாலே தானே பையன்  வெளியவே போகாம வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடக்கான். இந்த கேப்புலே அவன் மனசை சரி பண்ண பாரு” என்று பாட்டி சொல்லவும் பேத்திக்கு எதை செய்து அவன் மனதை சரி செய்வது என்று புரியாமல் தலையாட்டி வைத்தாள்.

ஆனால் உள்ளுக்குள் நெருடல் முள் குத்திக் கொண்டே இருந்தது. அவனை நெருங்க தான் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவன் இரண்டடி பின்னங்கால் வைக்கிறானே.

இது சரி வருமா! என யோசிக்க அவள் உள்ளத்து யோசனையை படித்தவர் போல, “இது தான் சரி வரும். நான் வளர்த்த என் பேரன், என்ன செய்வானு எனக்கு தெரியாதா… கவலைப்படாதே ராசாத்தி எல்லா சரியாகிடும்” என்று நெட்டி முறிக்கவும் முகில் நந்தன் அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலே கேட்டபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

“ஆக பாட்டி எல்லாம் உன் பிளானா? அண்ணனை எஸ்டேட்டுலே இருந்து அசைச்சு இங்கே கூட்டிட்டுட்டு வந்துட்டியே… பலே பாட்டி நீ” எனக் சொன்னபடி தட்டை எடுக்க எழில் அவன் தட்டில் உணவைப் பரிமாறிவிட்டு கலக்கத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இத்தனை நாட்களாக தன்னைப் பார்த்தாலே முறுக்கிக் கொண்டு போகும் முகில் இன்றாவது பதிலுக்கு பேசுவானா என ஏக்கத்தோடு பார்த்து வைத்தாள்.

சின்ன கோபத்தோடு திரும்பியவன் எழிலின் கவலை மின்னிய முகத்தை கண்டதும் இதழ்களில் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்து  கொண்டான்.

என்ன தான் எழில், காவ்யனின் வாழ்க்கைக்குள் வந்த முறை பிடிக்கவில்லை என்றாலும் ஏனோ அவளை  வெறுக்கவும் முடியவில்லை.

அன்னை, பாட்டி எல்லோரும் எழில் புறம் இருக்க அவளை தப்பான கண்ணோட்டத்திலும் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.

இந்த மூன்று முடிச்சு போட்ட விஷயத்திற்குள் ஏதோ ஒரு முடிச்சு இருக்கிறது என்பதை உணர்ந்தவன், மெல்ல நிமிர்ந்து, “போதும் அண்ணி, நாலு இட்லிக்கு மேலே சாப்பிட மாட்டேன்…” என்றவன் தடுக்கவும் கொழுந்தனார் முதல் முறை பேசியதில் எழில் முகத்தில் சந்தோஷம் ததும்பியது.

இதுவரை அந்த வீட்டில் தன்னிடம் பேசாமல் இருந்தது, காவ்ய நந்தனும் முகில் நந்தனும் மட்டும் தான்.

தன் கணவனும் கோபத்தை விடுத்து தன்னிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்தோடு,  தட்டில் இட்லியை வைத்துக் கொண்டு காவ்யன் அறைக்கு மீண்டும் திட்டு வாங்குவதற்காக சென்றுக் கொண்டிருந்தாள்.

மஞ்சள் தண்ணீர் ஊற்றிய ஆட்டைப் போல அரண்டு செல்பவளைக் கண்டு  பாட்டியால் வருத்தப்பட தான் முடிந்தது.

இங்கோ சாப்பிட அமர்ந்த முகிலுக்கு ஒரு விள்ளல் கூட உள்ளே உணவு இறங்கவில்லை. எட்டி எட்டி தன்னறையைப் பார்த்தான்.

மேகாவின் முகம் வெளியே தெரியாமல் இருக்கவும் சோகமாய் குனிந்து உணவை அளந்து கொண்டிருந்தான்.

‘அவள் குழந்தை…  மடத்தனமாக நடந்து கொண்டுவிட்டோமே… அவளைப் போய் திட்டிவிட்டோமே… ‘ என பல மண்டகப்படிகளை தனக்கு தானே கொடுத்துக் கொண்டு நிமிர்ந்தவனின் கண்கள் சீரியல் பல்ப் போல பட்டென்று  பிரகாசமானது.

அறை நிலை கதவில் சாய்ந்தபடி,  பூச்சரத்தை தலையில் சூடிக் கொண்டு மயக்கும் புன்னகை இதழில் பூசிக் கொண்டு உதட்டை கடித்து கிறக்கமாய் பார்த்தாள் மேகா ஶ்ரீ.

சற்று முன்பு வரை என் பார்வைக்கு மிரண்டவளா இப்போது என்னை பார்வையால் மிரட்டுகிறாள்?

இல்லை இல்லை இது கனவு! என  கண்களை மூடித் திறக்க அவளது அழகு பிம்பம் கண்ணை விட்டு மறையவே இல்லை. ஆக இது நிஜம்…

அவள் நின்றிருந்த தோரணையில் முகில் சட்டென தன்னை மறந்து எழும்பிவிட மேகா ஒற்றை  விரலை கொக்கியாய் மாட்டி அவனை அழைத்தாள்.

இந்த அழைப்பும்… சங்கேத பாஷையும் புரியாதவனா அவன்!

பட்டென கைகளை தட்டில் கழுவிக் கொண்டு தன் மனைவியை விழுங்கும் பார்வை பார்த்தவனோ,
தான் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு புரிந்து விட்டது போல… அதனால் தான் மனைவியின் முகத்தில் இத்தனை வெளிச்சம் என தப்பு கணக்கு போட்டுவிட்டான்.

திடீர் மாற்றம் எப்போதும் ஏமாற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போன முகிலுக்கோ, அவள் துணைவியாள் பெரிய ஆப்பை கையில் ரெடிமேடாக வைத்திருந்தாள்.

 

Leave a Reply

error: Content is protected !!