பொன்மகள் வந்தாள்.22🌹

பொன்மகள் வந்தாள்.22🌹

PMV.22.

“பொம்மி, கெளம்பலியா?” குளித்து கீழே வந்தவன், சாப்பிட அமர்ந்தவாறே, இன்னும் நைட்டியிலேயே இருப்பவளைப் பார்த்து கேட்டான். 

இரவே கூறியிருந்தான்… காலையில்  சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று.

”எங்க?” என்றாள் தெரியாதவள் போல்.

“நேத்தே சொன்னேன்ல. இன்னைக்கி கார் டெலிவரி எடுக்கணும்னு. நேத்தே எடுக்க வேண்டியது. நான்தான் இன்னைக்கி எடுத்துக்கறோம்னு சொல்லியிருக்க. இன்னைக்கி ரொம்ப ஸ்பெஷல் டே. எடுத்துட்டு நல்ல நேரத்துல கோயிலுக்கும் போகணும்” என்றான் அவளை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டே.

“இன்னைக்கி என்ன அவ்ளோ ஸ்பெஷலான நாளா? பஞ்சாங்கம் ஏதும் பாத்தீங்களோ?” சற்று ஏளனம்தொக்கி நின்றதோ பேச்சில்!!

“ஆமா… எனக்கு இன்னைக்கி ரொம்ப ரொம்ப லக்கி டே.” என சந்தோஷமாக அவள் கன்னத்தில் செல்லமாக தட்டி கூற.

“அப்ப… நீங்களே போய்ட்டு வாங்க.” என்றாள் கடனே என‌. 

“உன் ராசியான கையால தான்டி, கார் கீ வாங்கணும்.” அப்பொழுதும் சிரித்துக் கொண்டே தான் கூறினான்.

“அத்தைய கூட்டிப்போயி அவங்க கையால வாங்குங்க. அவங்க தான பெரியவங்க.”

“அது எங்களுக்கு தெரியாதா? ஆனா இன்னைக்கி நீதான் வரணும்.” என்றவன், அவளது கைபிடித்து அருகே அமரவைத்தான். அவளையே ஆழ்ந்து பார்த்தான். 

“லட்டூ…” என மென்மையாக அழைக்க, அவள் நிமிரக்கூட இல்லை.

“ரெண்டு நாளா கவனிச்சுட்டு தான் இருக்கே. அன்னைக்கி கடைக்கு வந்ததுல இருந்து நீ சரியில்ல. ஏதோ ஒன்ன, மனசுல போட்டு உலட்டிக்கிட்டு இருக்க. என்னானு சொன்னா தானே தெரியும்?” என சிறுபிள்ளையிடம் கேட்பது போல் கேட்டான்.

“பொண்டாட்டினா ஒன்னு ஆஸ்தியோட வரணும். இல்லைனா அதிர்ஷ்டத்தோட வரணுமா மாறன்?” என்றாள் மெதுவாக, இத்தனை நாள் குழப்பத்தின் வெளிப்பாடாக.

“என்னடி, சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுற?” என சற்று எரிச்சலானான். இன்று என்ன நாள் என்று கூட நினைவில்லாமல் எதையோ போட்டு குழப்பிக் கொண்டு,‌ தன்னையும் சேர்த்து எரிச்சல் ஏற்றிக் கொண்டிருப்பவளை என்னவென்று சொல்வது.  

“ஆம்பளைங்கள்லாம் அப்படி தானே நினைக்கிறீங்க. பொண்டாட்டி வர்ற நேரம் அதிர்ஷ்டமா இருக்கணும். இல்லைனா, எல்லாம் அவ வந்த நேரம்னு தானே சொல்லுவீங்க.” என ஏற்கனவே பட்ட காயம் இன்னும் மனதில் வடுவாய் இருக்க, அந்த அனுபவம் கொடுத்த நம்பிக்கையின்மை வார்த்தையாய் வந்து கொண்டிருந்தது.

“ஆமா, நானும் அதைத்தானே சொல்ற… நீ, என் வாழ்க்கையில வர்றதுக்கு முன்னயே அதிர்ஷ்டத்த கொடுத்தவளாச்சே? நீ தொட்டு கொடுத்த நேரம், எனக்கு எல்லாமே வொர்க் அவுட் ஆச்சே.” என அவளை இன்று சந்தோஷப்படுத்த வேண்டுமென அவன் கூறியதும் அவனுக்கு எதிராகவே திரும்பியது.

“அப்படினா… அதிர்ஷ்டத்தையும், ஆஸ்தியையும் கணக்கு போட்டுதான் எச்ச இலைனாலும் பரவாயில்லைனு…” என முடிக்கவில்லை, கைவிரல் ஐந்தும் கன்னத்தில் பதிந்திருந்தது. 

ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள். அதனால்தான் தன் பேச்சில் கவனமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருக்க, அவளது வார்த்தைகள் அவனையும் நிதானமிழக்கச் செய்தது. உள்ளம் கசந்து போயிற்று சக்திக்கு. 

கன்னம் தீயாய் எரிந்தது அவளுக்கு. சத்தம் கேட்டு வேகமாக அடுக்களையில் இருந்து காவேரி வெளியே வர,‌ அப்பொழுது தான் உள்ளே வந்த பவானியின் காதிலும் அவளது வார்த்தைகள் அட்சர சுத்தமாய் விழுந்தது. 

இன்னும் இங்கு நின்றால் கோபத்தில் தானும் வார்த்தைகளை விடவேண்டியிருக்கும் என வேகமாக வெளியேறிவிட்டான் சக்தி.

ஐந்தே நிமிடம் எனினும் புயல் அடித்து ஓய்ந்தாற்போல் இருந்தது அங்கு. 

சக்தியின் இந்த அவதாரம் புதிது தாய்க்கும், தமக்கைக்கும். எவ்வளவு கோபம் என்றாலும் நிதானம் இழக்க மாட்டான். அப்படிப்பட்டவனையே நிதானம் இழக்கச் செய்திருந்தது அவளது வார்த்தை.

“மூட்ட தூக்குற கை இல்ல. அதான் அஞ்சுவிரலும் அச்சா பதிஞ்சிருக்கு.” என்றாள் பவானி தம்பி பொண்டாட்டியின் கன்னத்தை திருப்பிபார்த்து.

“பவானி நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?” என கடிந்த காவேரி ஐஸ் கட்டிகளோடு வந்தார். மருமகளின் சிவந்த கன்னத்தில் கருஞ்சிவப்பாய் மகனின் ஐவிரலும்.

“உங்க மருமகள, அடிச்சு வளக்கல போல ம்மா. அதுதான் வாய் அதிகமா நீளுது. யார்கிட்ட பேசுறோம்னு தெரியாம பேசுறா.” என்றாள், பவானியும் நிதானமாக வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு.

“உனக்கு தெரியும்ல பவானி. அப்ப பேசாம இரு.” என மேலும் மகள் பேச்சை வளர்க்காமல் கடிந்தார்.

“என் வாய அடைக்காதீங்க ம்மா. உங்க மருமக என்ன வார்த்தை கேட்டா? இதைக்கேக்கதான், இவள… நம்ம பேச்ச கேக்காம, அத்தனை திட்டம் போட்டு கல்யாணம் பண்ணினானா?” 

“அவ புருஷனத்தானே கேட்டா. அதுக்கு அவன் பதில் சொல்லிக்குவான். நீ பேசாம இரு.”

“அதான் சொல்லிட்டுப் போயிட்டானே… நல்லா அஞ்சு விரலும் பதியிற மாதிரி. எவ்ளோ பெரிய வார்த்தை. என் தம்பியப் பாத்து அதிர்ஷ்டத்தை நம்பி பொழைக்கிறவன்னு கேட்டா. அவன் பட்ட கஷ்டம் என்னானு இவளுக்கு எங்க தெரியும்?” என்றாள் அடக்க முடியாத ஆத்திரத்தோடு. அவளுக்கும் தம்பியைப் பற்றிய அவளது வார்த்தைகள் சுள்ளென்றது. 

சக்தி பிறந்தது என்னவோ ராஜாவீட்டு கன்றுக்குட்டியாகத்தானே! ஆனால், அவனது அப்பாவின் யோசனையற்ற முடிவோ அல்லது நேரங்காலமோ, அவர்களது வாழ்வாதாரம் நிலைகுலைந்தது. ஒரு குடும்பத் தலைவன் செய்யும் முன்யோசனையற்ற சிறு தவறுகூட,‌ குடும்ப ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

திருச்சியிலேயே பெஸ்ட் ஸ்கூலில் படித்தவனுக்கு, சாதாரண காலேஜில் கூட சேரமுடியாத நிலையில் அல்லவா அவன் குடும்பம் கீழிறங்கியது.

இதில் அவனது அப்பாவின் மரணம்… அதனால் அவர்கள் பட்ட அவமானம் என அந்த வயதில் எத்தனை கடந்து வந்தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் அவனது அயராத உழைப்பு. ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்க்கும் நிலைமை. 

ஒவ்வொன்றையும் நிதானமாக யோசித்து, அமாவாசை இருட்டில், கயிற்றின்‌மீது நடப்பவனது ஜாக்கிரதையோடு தான் அடியெடுத்து வைப்பான். ஓரளவிற்கு எல்லாம் கைகூடி வந்ததால் தான் இன்று இந்த அளவிற்கு வசதியும், பேரும்புகழும்.

அப்படிப்பட்டவனைப் பார்த்து அதிர்ஷ்டமும், ஆஸ்தியும் பார்த்து தான் என்னைத் திருமணம் செய்தாயா எனக் கேட்டால், எந்த உடன் பிறந்தவளுக்கு தான் கோபம் வராது? 

தான் பேசிய வார்த்தையின் வீரியம் அவளையும் தாக்கியது. வார்த்தைகள் சிலநேரங்களில் இருமுனைக்கத்தி… இருபக்கமும் தாக்கும். கண்கள் மட்டும் கண்ணீர் உகுத்தவாறு, மாலைநேரத்து சூரியகாந்தியாய் தலைகுனிந்து நாத்தனாரின் பேச்சுகளை கேட்டுக் கொண்டிருந்தாள். 

“நான் ஒன்னும் மறுமணத்துக்கு எதிரி இல்லம்மா. அன்னைக்கி நான் மறுப்பு சொன்னதுக்கு இதுதான் காரணம்…” என்றாள் தம்பி மனைவியைக் கைகாட்டி. 

“இப்ப அதெல்லாம் தேவையா பவானி?” என்றார் காவேரி. விருப்பு வெறுப்பு என்பது திருமணத்திற்கு முன் சகஜம். இப்பொழுது அவளும் வாழ வந்தாயிற்று. இனி நாத்திகள் இருவருக்குள்ளும் சுமூகமான உறவு தேவை. அப்படியிருக்க இப்பொழுது இது தேவையில்லாத பேச்சு. பிறந்த வீட்டிற்கு வரபோக இருக்கும் மகளுக்கு நாளை இது எந்தளவிற்கு சாதகமாக இருக்கும் என்ற யோசனை தாயின் மனதில்.

“ஆமாம்மா. இவங்ககிட்ட எப்பவும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கும். எதச் சொன்னாலும் தன்னைய கொறச்சு சொல்றமாதிரியே நினைச்சுகிட்டு பேசவேண்டியது. தானும் சந்தோஷப்பட மாட்டாங்க. தன்னச் சேந்தவங்ளையும் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்க. தானும் படுக்காம தள்ளியும் படுக்காமங்க மாதிரி. இந்த கஷ்டம் என் தம்பிக்கு வேண்டாம்னு தான் அன்னைக்கே தலைப்பாடா அடிச்சுக்கிட்டே.” என்றாள் அவளது மனநிலையை படம்பிடித்தவள் போல்.

பவானி சொல்வது போல் தானே அவளும் உழன்று கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகவே முகம் சுரத்தையின்றி தான் இருந்தது. அப்பாவும், அத்தையும் ஊருக்கு கிளம்பிவிட்ட நினைப்பாக இருக்கும் என்று தான் காவேரி நினைத்துக் கொண்டார். ஆனால் இன்று அவள் பேசிய வார்த்தை எதையோ மனதில் போட்டு உழன்று கொண்டிருக்கிறாள் என இப்பொழுது உணர்த்தியது. நான்கு நாட்களுக்கு முன் ஆசையாக கணவனுக்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மதியம் கடைக்கு கிளம்பினாள். 

“வாங்க முதலாளியம்மா.” என கடை ஊழியர்கள் வரவேற்க,

“நான் முதலாளியம்மா தான். ஆனா உங்களுக்கு இல்ல. உங்க ஓனருக்கு மட்டும். நான் எப்பவும்‌ உங்க சூப்பர்வைஸர் பொம்மி தான்.” என சிரித்துக் கொண்டே கூற,

“போ பொம்மி. உனக்கு கெத்து காட்டவே தெரியல. இப்ப சுப்பர்வைஸர் ஆன நம்ம கருப்பட்டியப் பாரு. என்னம்மா அதிகாரம் பண்றாப்லனு.” என்றனர்.

“இல்லைனா தலைல மொளகா அரைச்சிருவீங்களே.” என கேட்டுக்கொண்டே அங்கே வந்த கருப்பட்டி,

“வாங்க அண்ணி.” என வரவேற்றான்.

“வாங்க, சூப்பர்வைசர்!” என இவளும் கேலியாய் அழைக்க,

“போங்க அண்ணி. நீங்களும் இவங்களோட சேந்துகிட்டு. அண்ணே மில்லுக்குல்ல போயிருக்காரு?” என்றான் தகவலாக.

“தெரியும் கருப்பட்டி. ஃபோன் பண்ணிட்டு தான வந்தே. உங்க அண்ணா, ஆன் தி வே.” மத்தாப்பாய் சிரித்துக் கொண்டே கூறினாள்.

“அதானே… அவரோட அதிர்ஷ்ட தேவதைய காக்க வைப்பாரா என்ன? பறந்துட்டுல்ல வருவாரு.” என உதிரித்தகவலும் உதிர்க்க,

“என்ன கருப்பட்டி… தேவதை அதுஇதுன்னு கிண்டல் பண்ற?” என சிரிப்போடு கேட்டவளிடம்,

“ஆமா அண்ணி. அண்ணே அடிக்கடி இதத்தான் சொல்லுவாரு. உங்கள பாத்த நாள்ல இருந்து அவருக்கு அதிர்ஷ்டம் தான்னு. இப்ப கூடவே‌ வேற‌ இருக்கீங்க… சொல்லவா வேணும்?” 

இவளை சந்தோஷப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு… சக்தி அவளை மனதில் எந்த அளவிற்கு வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறான் என சொல்ல விழைந்தான். அது என்னவொ அவளிடம் எதிராக வேலை செய்தது. மஞ்சள்முகம் சற்றே இருள் பூசியது.  

முன்பு கூட கவனித்திருக்கிறாள். எப்பொழுதும் வெள்ளை சட்டையில் வருபவன் சிலசமயங்களில் குறிப்பிட்ட கலர் சட்டையில் வருவான். ஊழியர்கள் கேட்கும் பொழுது இது என்னோட ராசியான சட்டை எனக் கூறுவான். அன்று ஏதாவது முக்கியமான நிகழ்விற்காக தயாராகி வந்திருப்பான்.

பெரும்பாலும் அரசியல், சினிமா, பிஸினஸ் வட்டாரங்களில் இயல்பாகவே சென்டிமென்ட் என்பது நகமும் சதையும் போலத்தான் தவிர்க்கமுடியாதது. கையெழுத்து போடும் பேனா முதற்கொண்டு பார்ப்பதும் உண்டு. 

மாதச்சம்பளம் வாங்கும், அதுவும் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் எனில், நரி வலம்போனா என்ன… இடம்போனால் என்ன… என்ற கதைதான். ஏதாவது விசேஷம் என்றால் நேரங்காலம் பார்ப்பதோடு சரி. ஆனால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு, நேரமும் காலமும் முக்கியமாகப் படுகிறது.

இன்னும் தன்னைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையில்…குழப்ப அலை முழுதும் அடங்காத மனநிலையில் ‌இருப்பவளுக்கு. மேலும் சஞ்சலக்குளத்தில் சிறுஇலை தான் விழுந்தது.‌ அதுவே குழப்ப அலைகளை அதிகப்படுத்த, நம்பிக்கை ஆட்டம் கண்டது. 

பெண்களுக்கு சந்தோஷம் வந்தால் அதை முழுதாக அனுபவிக்க எண்ணம்‌வராது. இது நிலைக்க வேண்டுமே என்கிற அச்சம்தான் அனிச்சையாய் தலைதூக்கும். அதிகமா சிரிச்சா அடுத்து அழ வேண்டியது வரும்… என்ற வழமை போல்.

சக்தியுடனான வாழ்க்கையும் இப்படியே நிலைக்க வேண்டுமே எனும்‌ ஊசலாட்டம் தான்‌ இன்னும் அவளுக்குள். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கிறாள். புதுப்பொருள் கண்ட சிறுபிள்ளை, அதே நினைப்பில் தூங்காமல் இருப்பது போல் உறங்க மறுக்கிறது உள்ளம். எப்பொழுதும் சந்தோஷ அடைமழையில் சொட்டச்சொட்ட நனைகிறது. 

சந்தோஷ அலை மனதில் அடிக்கும் பொழுதெல்லாம் சிறு சஞ்சலமும் எழுகிறது. ஊராரின் பேச்சால் தான் ஒரு ராசிகெட்டவள் என்ற எண்ணம் ஆழ வேரூன்றி உள்ளதே அவளுக்குள். இந்த நிம்மதியும், நிறைவும் நிலைக்க வேண்டுமே என்கிற வேண்டுதல் தான் நித்தமும் மனதில். 

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை தன் தாயைக்கண்டதும் விடாமல், பயத்தோடு தூக்கத்திலும் அன்னையைக் கட்டிக் கொண்டு படுப்பது போல், மாறனை இறுகப் பற்றிக் கொள்ள நினைக்கிறாள், மீண்டும் தொலைந்துவிடுவோமோ என்கிற பயத்தில்.

சிலருக்கு அனுபவங்கள் அவர்களை உரமேற்றும்… சக்திமாறனைப்போல. அவன் அடைந்த தோல்விகளெல்லாம் அவனுக்கு அனுபவப் படிக்கற்கள். 

இவளது அனுபவங்கள், சிறு சலனம் எனினும் குழப்பச்சேற்றில் நம்பிக்கையின்மையை நடவு செய்கிறது.

“என்னங்கண்ணி! அண்ணே, கார் புக் பண்ணியிருக்கார் போல? எல்லாம் நீங்க வந்த நேரம்தான்.” என கருப்பட்டி பேசிக்கொண்டே, ரூம் சாவியை எடுத்துக் கொடுத்தான். சாப்பாட்டு பையை தூக்கிக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு முன் தான் கார்ஷோரூம் அழைத்து சென்றான் சக்தி. மகேந்திரா xuv புக் செய்திருந்தான். அன்று குடும்பத்தோடு வெளியே சென்ற பொழுதுதான் கார் முக்கியம் எனத் தோன்றியது அவனுக்கு. அதற்கு முன் அம்மாவும், மாமாவும் கூறிய பொழுது கேட்கவில்லை. 

“ஆமா கருப்பட்டி. புக் பண்ணி ரெண்டு நாளாச்சு.” என்றாள் சுரம் குறைந்த குரலில்.

“உங்க கல்யாணத்துக்கு முன்னயே, கார் ஒன்னு வந்துச்சு அண்ணி. வாங்குனவருக்கு ஃபாரின் போற வாய்ப்பு வந்திருச்சுனு, வாங்கி ரெண்டே மாசத்துல சேல் பண்ணினாரு. ராசியான காரு ண்ணே. வாங்குங்கனு சொன்னதுக்கு, செகன்ட் ஹேன்ட் கார் வேணாம்னுட்டாரு.” என்று அவன் கூறிக்கொண்டே செல்ல,

இப்பொழுது நம்பிக்கையின் அடித்தளமே சிறு ஆட்டம் கண்டது. சீட்டுக்கட்டுக் கோபுரமாய் உள்மனதில் ஏதோ ஒன்று சரிந்தது. 

‘ஒருவேளை தன்னோடு ராசிக்காக தான் தன்னை திருமணம் செய்தாரா? செகன்ட் ஹேன்ட் காரே புடிக்காதவருக்கு என்னைய எப்படி புடிக்கும்? ஒருநாள் நானும் ராசியில்லாதவளாக ஆக வாய்ப்பிருக்கு தானே?’

குழம்பிய மனம் சாத்தானின் கூடாரமாம். அந்த சாத்தான் இவள் மனதில் கால்மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்தது.

ஏனோ, வீட்டைவிட்டு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது புதுத்துணியாய் பலவர்ணம் காட்டிய முகம், இப்பொழுது பல சலவை கண்ட பழைய துணியாய் வெளுத்து பொலிவிழந்தது. 

சற்று நேரத்தில் சக்தியும் வந்துவிட்டான். மனையாளைத்தேடிக் கொண்டு அறைக்கு வந்தான். அவனை பார்த்தவுடன் கடமையே கண்ணாக, அவளும் கேரியரை எடுத்து மேஜை மீது வைத்தாள். முகம் கழுவிக்கொண்டே… மனையாளின் முகம் பார்த்தான். 

“பொம்மி நாளைக்கி கார் டெலிவரி எடுத்துக்க சொல்லி ஃபோன் வந்துச்சு.” என அவன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள.

“ஓ…” என முடித்தாள்.

“என்ன, அவ்ளோ தானா?

“வேற என்ன பண்ணனும்?”

“ஒன்னும் பண்ண வேண்டாம். சோத்த போடு.” என்றவன் முன் ஒரு தட்டை மட்டும் வைக்க,

“நீ சாப்பிடல?” என்றான்.

“பசிக்கல.” என்றாள்.

“ஃபோன்ல ரெண்டு பேரும் கடையிலவச்சு சாப்பிடலாம்னுதான சொன்ன? வந்து உக்காரு.” என்க, மறுத்துப் பேச மனமில்லாமல் அவளும் சேர்ந்து உட்கார, ஒரே தட்டில் உணவை பரிமாறினான். குழம்பை ஊற்றிப் பிசைந்தவன், முதலில் அவளுக்கு ஒரு வாய் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். 

காரை செலக்ட் பண்ண ஷோரூம் அழைத்து சென்ற போது பொம்மை கடைக்கு செல்லும் சிறுபிள்ளையாய் துள்ளிக் கொண்டு கிளம்பினாள். இன்று அந்த சந்தோஷத்தில் கால்வாசிகூட முகம் காட்டவில்லை. அவனைக் கண்டவுடன் கண்களில் வெட்டும் மின்னல் ஒளியில் பிரகாசம் சற்று குறைவுதான். இதழ் பூக்கும் புன்னகைப் பூவில் வாசம் இல்லை. சகுணம் சரியில்லை என்றது மனம்.

ஃபோனில் கடைக்கு வரும் தகவலை சொன்னவள் குரலில் இருந்த குதூகலம், இப்பொழுது எங்கே போயிற்று என யோசித்தான்.

“வந்து எவ்வளவு நேரமாச்சு.” என்றான் தானும் சாப்பிட்டுக்கொண்டு, அவளுக்கும் ஊட்டியவாறே.

“இப்ப தான் வந்தேன்.” என்றாள் கையை தாவாய் அடியில் வைத்து சாப்பாட்டை சிந்தாமல் வாயில் வாங்கிக் கொண்டு.

சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்துக் கொண்டே கிளம்புவதாகக் கூறினாள். 

“ஏன்… வரும்போதே ரெண்டு பேரும் சேந்து வீட்டுக்கு போலாம்னு தான சொன்ன? இப்பவே கிளம்புறேங்குற?” என்றான் சந்தேகத்தோடு.

“இல்ல… அப்பா ஊருக்குப்போயி  ரெண்டுமூனு நாளாச்சு. வீட்டுக்குப் போனா சுத்தம் பண்ணி வைக்கலாம்னு தான் சீக்கிரமா கெளம்புறே.” என்றாள்.‌

“சரி… முடிச்சுட்டு அங்கேயே இரு. நான் வந்தபின்னாடி ரெண்டு பேரும் சேர்ந்தே நம்ம வீட்டுக்கு போலாம்.” எனக் கூறியவனிடம் சரியென்று கிளம்பினாள். சென்றவளையே யோசனையாகப் பார்த்தான். கடையில் யாராவது, எதையாவது பேசியிருப்பார்களோ என யோசனை ஓடிற்று.

அதன்படியே இரவுவந்து அழைத்தும் சென்றான். ஆனால் சுத்தம் செய்வதாகச் சொல்லி வந்தவள் எதுவும் செய்யவில்லை எனத் தெரிந்தது. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அழைத்து வந்தான். ஆனால், இன்று அவள்‌பேசிய பேச்சில் அவன் நிதானமிழக்க வேண்டி வந்தது.

காவேரி மருமகள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். கைகளை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டார்.

“மனசுல இருக்கறது என்னான்னு வெளிப்படையா பேசு பொம்மி. எங்க கிட்ட பேசவேண்டாம். ஆனா… கட்டுனவன்கிட்ட கூட மனசுல இருக்கறத சொல்லலைனா எப்படி?” என பொறுமையாகவே கேட்டார். ஏனெனில் அவளைப் பற்றி சொர்ணம், “சட்டுனு மனசுல இருக்கறத சொல்ல மாட்டாம்மா.” என்று கூறியிருக்கிறாரே.     ஏதோ ஒரு அழுத்தப்பட்ட கனத்தை தாங்க முடியாமல் தான் வார்த்தைகளாக வெளியேற்றி இருக்கிறாள் என ஊகித்தார்.

“ஆமா, அப்படியே மடியில போட்டு கொஞ்சுங்க. என்னமோ இவ மட்டும் தான் வாழ்க்கைல கஷ்ட்டப்பட்ட மாதிரி பேசுறா. நாம பாக்காத கஷ்ட்டமா ம்மா. சிலருக்கு மனக்கஷ்டம்… சிலருக்கு பணக்கஷ்டம்.” என்றாள் பவானியும்.

“ஆமா, பொம்மி. கஷ்டம் இல்லாதவங்க யாரு. மனக்கஷ்டம்னு சொல்லிப்பாரு… ஆயிரம்பேரு ஆறுதல் சொல்றேனு வருவாங்க. அதுவே பணக்கஷ்டம்னு சொல்லிப்பாரு ஒரு ஈ, காக்கா கூட எட்டிப் பாக்காது.”

“……….”

“சக்தியோட அப்பா சாவக்கூட அசிங்கப்படுத்தினாங்க பொம்மி. அவர் மாரடைப்புல தான் செத்தாரு. ஆனா கடனால பூச்சி மருந்து குடிச்சுட்டாருன்னு தான் கதை காட்டினாங்க. இல்லைனு எத்தன பேர் கிட்ட சொல்லமுடியும்? ரெண்டு புள்ளைகள வச்சுக்கிட்டு அத்தனையும் பாத்தாச்சு. அப்ப எனக்கு பக்கபலமா இருந்தது என் புள்ளைக தான்.” என பெருமூச்சு விட்டார். 

இவர்கள் பேச்சு அவளிடம் சற்று வேலை செய்தது. எதிரிலிருப்பவர்கள் தன் துக்கத்தைக் கூற ஆரம்பித்தால் போதும், பெண்கள் உடனே தங்கள் மனதை திறப்பார்கள். இவளும் சற்று மனப்பூட்டை திறந்தாள்.

“என்னைய அதிர்ஷ்டமில்லாதவன்னு தான் அத்துவிட்டாங்க அத்தை. ஒருவாரத்துல தீத்துவிட்டவன்னு தான் ஊர்ல பேசுனாங்க. ஊருக்கு அதுதான் பெருசா பட்டுச்சே ஒழிய, அவனப்பத்தி தெரியல?” என்றாள் குரல் அடைக்க.

“சரி… அப்படி பாத்தா என் தம்பி உன்ன அதிர்ஷ்டமானவன்னு தான சொன்னான். அதுக்கு நீ சந்தோஷம் தான படணும்.” என பவானி கேட்க,

“ஊர்ல விதைநெல்லு முதற்கொண்டு நான் தொட்டு கொடுத்துதான் வாங்கிட்டு போவாங்க அண்ணி. ஆனா, அதே ஆளுக தான், வாழாவெட்டியா ஆனபின்னால, சின்னபுள்ளகிட்ட வாங்க வேண்டாம்… நீயே கொடு கௌரின்னு எங்க அம்மா கிட்ட கேக்க ஆரம்பிச்சாங்க. ராசியானவன்னு எதுனாலும் என்கைல கொடுத்து வாங்கினவங்க தான், நான் வீதியில போனாலே சகுணம் பார்த்தாங்க. அதே மாதிரி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இவருக்கும் நான் அதிர்ஷ்டமில்லாதவளா போயிருவேனோன்னு பயம் வந்திருச்சு அண்ணி.” என்றவள் முகதத்தை மூடிக் கொண்டு அழுதாள். மகனுடனான வாழ்க்கை நிலைபெற வேண்டுமென,‌ நிலைகொள்ளாமல் மருமகள் தவிப்பது புரிந்தது மாமியாருக்கு.

“பொம்மி… அதிர்ஷ்டம் கெட்டவன்னு பாத்தா சீதாதேவியப்போல அதிர்ஷ்டம் கெட்ட‌பொண்ணு உலகத்துலேயே இல்ல. இத்தனைக்கும் மகாலக்ஷ்மி அவதாரம். பொறந்த வீட்ல இருந்த வரைக்கும் தான் அவ சந்தோஷமெல்லாம். ராமனைக் கட்டி என்ன சுகத்தைக் கண்டா. இத்தனைக்கும் அவபுருஷன் கடவுள் அவதாரம். அவளைக் கட்டிக்கிட்டு ராமன்தான் என்ன சுகத்தைக் கண்டான்… சொல்லு பாக்கலாம். கல்யாணத்துக்குப் பின்னாடி வனவாசம். அங்கேயும் போயி சந்தோஷமா இருந்துருவாங்களோனு கைகேயி துறவுக்கோலத்துலதான் அனுப்பி வச்சா. காட்டுக்குப் போயும் அவள, ராவணன் தூக்கிட்டுப் போயிட்டான். பொண்டாட்டியக் காப்பாத்தணும்கற அக்கறையைவிட, ராவணனை அழிக்கறதுதான் ராமனுக்கு கௌரவமா இருந்துச்சு. அங்கே காப்பாத்தப்பட்டது சீதை இல்ல. ராமனோட கௌரவம். அதுக்குப் பின்னாடியாவது சந்தோஷமா இருந்தாளா? தீக்குளிக்க வச்சும் சந்தேகம் தீராம, தெருவுல போறவன் பேச்சக் கேட்டுட்டு, மறுபடியும் வயித்துப் புள்ளையோட வனவாசம். புள்ளயப் பெத்துக் கொடுத்துட்டு, போங்கடா… உங்க சங்காத்தமே வேண்டாம்னு பூமியோட புதைஞ்சு போயிட்டா.

ராமனை கல்யாணம் பண்ணின சீதா அர்ஷ்டசாலியா? இல்ல சீதயக் கட்டின ராமன் அதிர்ஷ்டசாலியா?

அஞ்சு புருஷனைக் கட்டின பாஞ்சாலி மட்டும் என்னத்த வாழ்ந்தா. ஒருத்தனாலும் காப்பாத்த முடியல. இவளைக் கட்டியதால பாண்டவர்கள் அதிர்ஷ்டம் கெட்டவர்களா. இல்ல… அவங்களைக் கட்டிக்கிட்டதால இவ அதிர்ஷ்டம் கெட்டவளா… சொல்லு. 

சீதா அவதாரம் இராவணனுக்கு துரதிர்ஷ்டம். துர்க்கை அவதாரம் மஹிஷாசுரனுக்கு துரதிஷ்டம். அவ்வளவுதான். முதல்ல மனசப் போட்டுக் குழப்பாம வாழுற வழியைப் பாரு.” என காவேரி கூறியதை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தாள் பவானி.‌

மகளைப் பார்த்தவர், “என்னடீ… இப்படி பாக்குற?” என்றார்.

“ம்மா… நானும் ஒன்னு சொல்லட்டா ம்மா?”

“வேண்டாம்னா விடவா போற. சொல்லு.”

“நம்ம வாழ்க்கையில முன்னாடி நடந்தத, பின்னாடி திரும்பி திரும்பிப் பாத்துட்டே நடந்தா கழுத்து தான் வலிக்கும். இப்படிதான் எதுலயாவது போய் முட்டிட்டு நிக்கணும். அதனால முன்னால மட்டும் பாத்து நட பொம்மி.” என்றாள், நடந்ததை நினையாதே, இனி வாழும் வாழ்க்கையை மட்டும் பார் என்றாள் மறைமுகமாக. தன் கையில் இருந்த கவரை பொம்மியிடம் கொடுத்தாள்.

“என்ன அண்ணி இது?” என்றாள் கண்களை துடைத்துக் கொண்டு.

“ம்ம்ம்… என்னோட நாத்தனாருக்கு பெர்த்டேனு, ஒரு சேலையக் கொடுத்துட்டு, பிரியாணிய எதிர்பாத்து வந்தே. இங்க என்னடான்னா… வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு காபிக்கு கூட வழியக்காணோம்.” என அங்கலாய்ப்பாய் நீட்டி முழக்கினாள்.

குழப்ப வலை பின்னிய மனது, மாமியாரின் பேச்சால் ஒட்டடை அடிக்கப்பட, பளிச்சென சிரித்தாள் பொம்மி. இந்த நாளை ஏன் அவ்வளவு முக்கியம் எனக் கூறினான் என இப்பொழுதுதான் தெரிந்தது. கரைகானா சந்தோஷம் மனதில் பொங்கிப் பெருகியது.

         *****************

“யோஓஓவ்.”

“யோவ் வா. என்னாடீ மரியாதை எல்லாம் தூள்பறக்குது?”

“ஆமாய்யா… இப்படியே இருந்தா இன்னும் என்னென்ன பறக்கும்னு எனக்கே தெரியாது.” தலைக்கு கையை முட்டுக் கொடுத்துப் படுத்தவாறே சட்டமாக கூறினாள்.

“என்னடீ வாய் நீளுது? தேவையில்லாம வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிக்காதே.”

“உனக்கெல்லாம் முப்பது என்ன. நாப்பது வயசானாலும் நீ கன்னிப்பையன் தாய்யா. பொண்டாட்டி சாபம் சும்மா விடாது. சொல்லிட்டே.”

(விரைவில்… எப்பனு மட்டும் கேட்காதீங்க ஃப்ரன்ட்ஸ்.)

 

Leave a Reply

error: Content is protected !!