பொன்மகள் வந்தாள்.25🌹

பொன்மகள் வந்தாள்.25🌹

PMV.25

அங்கிங்கெனாதபடி என கூறும் வகையில், அடிப்படை வசதிகள் கூட வந்துசேராத, மூலைமுடுக்குக் கிராமங்களில் கூட, இன்டர்நெட் வசதி, இண்டு இடுக்கெல்லாம் வியாபித்து இருக்கிறது. பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்று சொன்னது ஒரு காலம். இன்று எல்லாம் கூகுள் வளர்ப்பு பாதி, யூடியுப் வளர்ப்பு மீதி என்று ஆகிவிட்டது. 

எல்லா விஷயத்திலும் நல்லதும் இருக்கும்…கெட்டதும் இருக்கும்… நாம தான் பாத்து பயன்படுத்தணும்னு சொல்றது, கேக்க நல்லாதாங்க இருக்கு. ஆனா… ஊருக்கு பத்து கோயில் இருந்தாலும், கூட்டம் என்னமோ ஒத்த டாஸ்மாக்ல தானங்க குவியுது. நாங்க தான் குடி குடியைக் கெடுக்கும்னு‌ போட்டுருக்கோம்ல. நீங்க ஏன் வாங்கி குடிக்கறீங்கனு, கடையத் திறந்து வச்சுக்கிட்டு கேக்குற மாதிரி தாங்க இதுவும். எல்லாமே கன்டிஷன்ஸ் அப்ளைடு தான். அப்ளைடு எதுவரைக்கும் என்பதுதான் கேள்வி.

ஆன்லைன் ஷாப்பிங். ரொம்பவும் நல்ல விஷயம்தான். உலகத்தின் எந்த மூலையில் இருந்து கொண்டும், எந்த மூலையில் இருக்கும் பொருளையும் வாங்கலாம். உலகப் பொருளாதாரமே இதைக் கொண்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் தவிர எதை வாங்குகிறோம் என, கொண்டு வந்து கொடுப்பவனுக்குக் கூட தெரியப்போவதில்லை. இது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் வசதியான ஒன்றாகிவிட்டது. சென்ற தலைமுறை ஆட்களுக்கு சிகரெட் கூட வெளிப்படையாக கடையில போய் வாங்க முடியாது. யாராவது பாத்துட்டுப்போயி வீட்ல சொல்லிருவாங்க.

கற்றது கையளவு எனப் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப்போனவன் நாகராஜ். போதாக்குறைக்கு அத்தை காளியம்மாவின் பணப் பட்டுவாடாவும் இவனது கைகளில் எனும்பொழுது பணப்புழக்கமும் தாராளம். புட்டி முதல் குட்டி வரை இல்லாத பழக்கமே இல்லை. சிறுவயதிலேயே தொடக்கூடாததை எல்லாம் தொட்டவனுக்கு, வரும் பெண்களிடம் சல்லாபிக்க எக்ஸ்ட்ரா ஸ்டாமினா தேவைப்பட, கையிலிருக்கும் ஆன்ட்ராய்டு வழியாக, ஆன்லைன் வர்த்தகம் உதவியது. 

விடலைப் பையனாக, ஆரம்பகட்ட நடுக்கத்தில் தோல்வியைத் தழுவியவனை, தழுவலுக்கு வந்த பெண்களின் கேலிச் சிரிப்பு, வீருகொண்டு எழ வைத்தது.

விளைவு… தெருவில் விற்கும் சிட்டுக்குருவி லேகியம் முதற்கொண்டு, பத்துமணி டாக்டர் கூறும் மருந்துகள்,  ஃபோனில் வரும் போலி விளம்பரங்கள் கூறும்… நின்று பேசும் எனும் மருந்துகள் வரை அத்தனையும் அத்துப்படி. 

பயன்… மனதளவில் தன்னால் ஊக்கமருந்துகள் இல்லாமல் இயங்க முடியாது என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டவன். அதுதான் உண்மையும் கூட. ஆன்லைனில் இந்த மாதிரி சமாச்சாரங்களைத் தேடிப்பிடித்து ஆர்டர் செய்து வாங்கிவிடுவான், மருத்துவர் ஆலோசனையின்றி உபயோகிக்கத் தொடங்கிவிட்டவன், அதற்கே அடிமையாகிவிட்டான். இவை அனைத்தும் தோப்பு வீட்டைத்தாண்டி வெளியே வராது. தஞ்சை டவுனில் இருக்கும் நண்பனின் கடைவிலாசத்திற்கு ஆர்டர் செய்து வாங்கி வைத்துக் கொள்வான். 

திருமணத்தன்றே இரவு தோப்பு வீட்டிற்கு சென்றுவர இருந்தவனைத்தான் முருகேசன் தடுத்து விட்டார். 

முருகேசனைப் பொருத்தவரை, நாகராஜன் அங்கு சென்று திரும்பினால், போதையோடு வருவான் என்பது மட்டுமே, அவர் மகனைப் பற்றி அறிந்தது. 

இரண்டு நாட்களாக செல்லமுடியாதவன், பொங்கல் வைக்க சென்ற அன்றுதான் தோப்பிற்கு சென்று வந்தான். வாங்கி வைத்திருந்த ஊக்கமருந்துகள்  காலியாகி இருந்தன. கல்யாண ஜோரில் கவனிக்க மறந்து விட்டான். ஆர்டர்கள் ஆன் தி வே காட்டியது. வந்து சேர டைம் எடுக்கும்.

இரண்டு நாட்களாக அவளை அருகில் வைத்துக் கொண்டு கன்னியம் காத்ததே அவனுக்கு கழுத்தை நெரிப்பதைப் போன்று இருந்தது. 

முதலிரவு அன்றே அலங்காரப்‌ பொம்மையாக அவளைப்‌ பார்த்தவனுக்கு, அவளை கையில் வைத்து விளையாட முடியாத ஆத்திரம் தலைக்கேறியது. 

எத்தனை நாட்களின் ஏக்கம் என்பதைவிட வெறி என்றே சொல்லலாம். பள்ளிக்கு செல்லும் பொம்மியைப் பார்க்கும் பொழுதே கண்கள் சிவந்துவிடும் அவனுக்கு. உடன் இருக்கும் நண்பர்களின் ஏக்கம் வேறு… “ஒருநாள் வாழ்ந்தாலும் இப்படி ஒருத்தியோட வாழணும்டா… எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியல.” என்ற காழ்ப்புணர்ச்சி… ‘ஏன் எனக்குக் கொடுத்து வைத்ததாக இருக்கக் கூடாது.’ என்று எண்ண வைத்தது. 

அத்தை காளியம்மாவிற்கு ஜாடை காட்டியதும் இவன் தான். 

“அத்தை, நம்மலவிட பெரிய குடும்பம். ஒத்த வாரிசு. சொத்து சுகமெல்லாம் நமக்கே வரும். உங்க அண்ணங்கிட்ட சொல்லு.” என தூபம் போட, காளியம்மாவும் மூத்தவன் இல்லைனா என்ன, இளையவன் இருக்கிறானே… பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டு தான், கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தது.

ஊக்கிகள் தீர்ந்து போன ஆத்திரத்தில் முழு போதையோடு தான் அன்றிரவு வீடு வந்தான். அதனாலேயே சுப்புலஷ்மியும் அவனை மாடியறைக்கு செல்லுமாறு கூறியதும்… அம்மாவிடம் மறுத்துவிட்டுதான் அறைக்குள் சென்றான். 

காளியம்மா வந்தபிறகு சுப்புலஷ்மிக்கு தூக்கம் தொலைந்துவிட்டிருக்க, அவரும் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்துவிட்டார்.

அறைக்குள் வந்தவன்… விடிவிளக்கின் வெளிச்சத்தில், கைகால் குறுக்கி, கோவிலுக்கு சென்றுவந்த அலுப்பில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளையே கண்கள் சிவக்க, எச்சில் ஒழுகும்  ஓநாயாய்ப் பார்த்திருந்தான். மெல்லிய வெளிச்சத்தில் தங்கப்பதுமையாக மின்னினாள் பாவை. போதையோடு சேர்த்து பேதையும் அவனை கிறுக்குப் பிடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்… வரப்போகும் ஆபத்தை அறியாமல்.

கைகள் நடுங்க ஆரம்பித்தன அவனுக்கு. அவளைக் கண்டதால் பித்தம் தலைக்கேற, கண்கள் ரத்தமெனச் சிவந்து விட்டது. நகம் கடிக்க ஆரம்பித்தவன், சதை வரை பிய்த்து எரிந்தான் நகத்தை. அவன் பார்த்த வீடியோக்கள் அத்தனையும் கண்முன் காட்சியாக விரிந்தது. பார்வையாலேயே அக்காட்சிகள் கொண்டு அவளைத் துகிலுரித்தவனுக்கு, அதற்குமேல் கட்டுப்படுத்த முடியவில்லை. 

உறங்குபவள் என்கிற நினைப்பு கூட இல்லாமல் அவள் மேலே படர்ந்திருந்தான். 

ஏதோ பாரமாகத் தன் மேல் அழுத்த… மூச்சுமுட்டியவளாக, கண்களைத் திறந்தவளுக்கு, கனவுபோலத்தான் இருந்தது. ஒன்றும் புலப்படவில்லை. இதோ கனவு கலைந்துவிடும் என எண்ணிக்கொண்டு தலையை உலுக்க, அவனோ அவசரகதியில் ஆடைமீது அத்தமீற ஆரம்பித்திருந்தான். 

பொதுவாகவே பெரியவர்கள் பார்த்து முடிக்கும் திருமணம் எனில், ஆண்-பெண் இருவருக்கும் இடையில் அறிமுகப்படலம், பெரும்பாலும் காமம் தான்.

ஆரம்பகட்ட ஈர்ப்பிற்குப்பிறகே… ஒருத்தருக்கொருத்தர் முட்டிமோதி, பூவா?தலையா? என ஒரு கை பார்த்து, ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு, அல்லது புரிந்து கொண்டதுபோல் நடித்து, இதற்குமேல் ஒன்றும் இல்லை… நாணயத்திற்கு இருபக்கமும் தலை இருந்தால் செல்லாது… குடும்பம்னா இது எல்லாமும் தான் இருக்கும் எனும் முக்திபெற்று, குடும்பம் நடத்த துவங்குவதற்குள் குறைந்தது பத்து பதினைந்து ஆண்டுகள் கடந்திருக்கும்.

ஆனால் இங்கோ அரிச்சுவடி கூட அறியாதவளுக்கு எடுத்தவுடனே, வினாத்தாளே கொடுக்காமல் தேர்வு வைத்தால் என்ன செய்வாள். ஒன்றும் புரியாமல் அவள் எதிர்ப்பைக் காட்ட முனைய அது அவனது ஆத்திரத்தை மேலும் தூண்டிவிட்டது. அவளது கழுத்தை ஒருகையால் இறுக்கிப் பிடித்தவன் வாயிலிருந்து,

“என்னடி… ரொம்பத் துள்ளுற. நானே மாத்திரை தீந்துபோன ஆத்திரத்துல, ஒன்னும் பண்ணமுடியலையேனு வெறில இருக்கே. கம்முனு இருந்தா தடவிட்டு மட்டும் போயிறுவே. துள்ளுன சூரையாடிருவே.” என எச்சில் தெரிக்க கர்ணகொடூரமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“…….” இப்பவும் என்ன சொல்கிறான் எனப் புரியாமல்தான், அவனது செய்கை பிடிக்காமல் அவனை முடிந்த அளவு தள்ளிக்கொண்டிருந்தாள், மூச்சுகாற்றுக்கு தடுமாறியவளாக. அவளுக்கு அது என்னவோ மலையைப் புரட்டுவது போல் ஆகாத காரியமாகப்பட்டது. தளிராக இருந்தவளுக்கு  இந்த எதிர்பாரா தாக்குதலை எதிர்க்க முடியவில்லை. அவனோ போதையோடு காமமும் தலைக்கேற அரக்கனாய் மாறியிருந்தான். பொம்மிக்கு மூச்சடைத்து குமட்டியது, அவன் மீதிருந்து வந்த மதுவாடையில். இவளது எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவனது மூர்க்கத்தனமும் அதிகரித்தது.

“அதெப்படிடி உன்னையப் பாத்தா மட்டும் எவனாயிருந்தாலும் அப்படியே ஜொள்ளு ஊத்துறானுக. அப்படி யாருகிட்டயும் இல்லாததா உங்கிட்ட இருக்கு. எத்தனையோ தொட்டுப்பாத்த எனக்கே உன்னைய ரோட்டுல பாத்தா கன்ட்ரோல் பண்ண முடியாதுடி.” என கண்களில் காமம் பற்றி எறிய, மேலும் அவன் கூறிய வார்ணனைகள் எல்லாம் கேட்டவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. 

இத்தகைய வார்த்தைகள் தான், பின்னாளில் ஆண்கள் என்றாலே, தன்னை வேறு விதமாகப் பார்ப்பார்களோ என்ற அச்சத்திலேயே யாரிடமும் அவளை நெருங்கவிடாமல் குறுகச்செய்தது.

அவனது முகம் கருத்து, கண்கள் சிவந்து, பார்க்கவே கொடூரமாகக் காட்சியளித்தான் கண்முன். 

காதல் வயப்பட்டவன் முகம் எப்பொழுதும் மென்மைதாங்கி மலர்ச்சியுடன் இருக்கும். காமவயப்பட்டவன் முகம் எப்பொழுதும் இருளடைந்து கருத்துக் காணப்படும். 

ஏற்கனவே அவனது அதிரடியான, அறுவறுக்கத்தக்க செயல்களால், அதிர்ச்சியடைந்தவளின் மூளை ஸ்தம்பிக்க ஆரம்பிக்க, அவனோடு போராட முடியாமல் அரைமயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். 

அவனது கையாலாகாத்தனத்தை, அவனது கைங்கர்யங்களில் காண்பிக்க ஆரம்பித்திருந்தான். 

தன் உடம்பை தானே கண்ணாடியில் பார்க்க கூசுபவளுக்கு, அவனது கைகள் தொட்ட இடமெல்லாம் தீயாய்க் கொதிக்க, அய்யோ…வென அலற மனம் துடிக்க, அதற்கு மூளை இணங்க மறுத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. 

இந்த வெளியேற்றப்படாத மனஅழுத்தமே பின்னாளில் அவளது தாயின் இறப்பிற்குக்கூட அழமுடியாமல், அத்தனை உணர்ச்சிகளையும் காவு வாங்கியது. 

அத்துமீறல்களை எதிர்க்கும் திராணியற்றவளாக… கண்களில் இருந்து கண்ணீர்மட்டுமே வடிய, செய்வதறியாது செயலற்று போனாள் பேதை. 

நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும். உருட்டி பார்த்து, உடைக்க முடியாத பட்சத்தில் வெறிகொண்டு கீறும். அவனோ வெறிபிடித்த நாயாக இருக்க, இவளோ குரங்கு கை பூமாலையாகிப்போனாள். 

கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் அருகதையற்று பிய்த்து எரிந்து விட்டது. 

விடியலில் போதை தெளிந்து எழுந்தவனுக்கு, அவளது நிலைமை பார்த்து பயம் கொண்டது.

வெயிலில் பிடிங்கிப் போட்ட கொடியாக, படுக்கையில் சுயநினைவின்றி துவண்டுகிடந்தாள். அவள் ஒன்றும் இத்தனை நாட்களாக அவன் கையால் ஆண்ட பெண்கள் போல் வறுமைக்காகவும், காசுக்காகவும் வந்தவர்கள் அல்லவே. அவளுக்கென்று குடும்பம் உண்டு. நாளைக்கு கேள்வி வருமே. அதனாலேயே பயத்தில் ஒரு‌ நைட்டியை எடுத்து அவள் மீது போட்டுவிட்டு அதிகாலையிலேயே வெளியே சென்று விட்டான். 

மயக்கம் தெளிந்து வெகுநேரம் கழித்து கண்விழித்த பொம்மிக்கு, நடந்தவை எல்லாம் அவளது மூளையை செயலிழக்க வைத்திருந்தது. அவற்றை மீண்டும் நினைத்துப்பர்க்க விரும்பாமல் ஸ்தம்பிக்க ஆரம்பித்தவளை, வெளியே கேட்ட காளியம்மாவின குரல் கலைத்தது. 

“இன்னும் மகாராணி எந்திரிக்கலியா? வீட்ல வயசுப்பொண்ணு இருக்குங்கற நெனப்பு கூட இல்லாம ஒரே சத்தம்… நல்லாவா இருக்கு?” என அங்கலாய்த்து கொண்டிருந்தார். மாடியில் படுத்திருந்தவருக்கு, தெளிவில்லாமல் கேட்ட இவர்கள் சத்தம் வேறுமாதிரியாக எண்ண வைத்தது. 

தன்மீது கிடந்த நைட்டியை எடுத்து அணிந்துகொண்டு வெளியே வர, குளித்துவிட்டு வருமாறு மீண்டும் காளியம்மா கடிய, சிந்திக்கும் செயலற்று, சாவிகொடுத்த பொம்மையாக செயல்பட்டாள். 

நிலமை என்னவென்று நோட்டமிட மீண்டும் வீட்டிற்கு வந்தான் நாகராஜ். அவனைக் கண்டவுடன் பொம்மியின் முகம்… அரண்டு வெளிற ஆரம்பிக்க, வீட்டின் நிலை… எதையும் அவள் யாரிடமும் கூறவில்லை என்பதைக் கூறியது. பயத்தாலும், அயற்சியாலும் அதற்குள் அவளுக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. அதனாலேயே சுப்புலட்சுமி அன்றிரவு பொம்மியைத் தன்னோடு தங்கவைத்துக் கொண்டார். 

அதன்பிறகு அவளுக்கும் பேய்பிடித்ததாகக் கூறப்பட, அவனுக்கு அது சாதகமாகப் போயிற்று. 

       *****************

மழைபெய்து ஓய்ந்த அமைதி சற்று நேரம் நிச்சலனமாய்.

இன்றைக்கும், நினைவின் தாக்கத்தில் அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பிக்க, சக்தியை…  குழந்தையாய் கழுத்தோடு இறுகக் கட்டிக்கொண்டாள். உடல் இறுக தன்னவளை அணைத்துப் பிடித்திருந்தவனது கண்களும் கலங்கி சிவந்திருந்தது. மூக்கு விடைத்து, தாடை இறுகியது அவனுக்கு. சற்று நேரம் இருவரும் எதுவும் பேசாமல் நிசப்தமாகக்கழிய, அவளை நிமிர்த்தியவன், கைகளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தான்.

“ஏன் பொம்மி… பஞ்சாயத்துல அவனப் பத்தி சொல்லியிருக்கலாமே?” என மென்மையாக கேட்க,

“அது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல மாறன். மானம் மரியாதைக்கு அசிங்கப்பட்டு, எல்லாத்தையும் மூடி மறைக்கிற மூனாம் தலைமுறை. குடிக்கிறான், அடிச்சு கொடுமைப்படுத்தறான்னு வெளிப்படையா சொல்லி நியாயம் கேக்கமுடியும். ஆனா இத எப்படி வெளிப்படையா பேசுவாங்க. என்னய அனுபவிக்க முடியலையேங்கற ஆத்திரத்தை தான், எம்மேல காமிச்சிருக்கான்னு, டாக்டர் சொன்னதே, பாதி எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் புரியல. இதுல எங்க போய் அவனக் கேள்வி கேக்கறது. ஏற்கனவே என்னைய அவங்க குடும்பத்துல இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு வர்ற முடிவுலதான் அப்பா இருந்தாரு. அதுக்குள்ள அவனுக்கு ஆக்சிடன்ட், செங்கசூளை மூடினதுன்னு நான் ராசியில்லாதவன்னு அவங்களே காரணம் சொல்ல அப்பாவும் அப்படியே இருந்துட்டுப் போகட்டும்னு பேசி முடிச்சுக்கிட்டாங்க.”

“……….”

“நாங்கதான் அவனப்பத்தி வாயத்தொறக்கல. ஆனா… கவிதாக்கா அப்படியில்ல. அவனப் பத்தி ஊருக்கே சொல்லியிருக்காங்க. அதுலயும் அந்தர்பல்டி அடிச்சுட்டானாம்.” என்றவளிடம்,

“கவிதான்னா யாரு… காளியம்மா மகதானே.” என யோசனையாக விளக்கம் கேட்டான் மாறன்.

“ம்ம்ம்… ஊரவிட்டு வந்தபின்னாடி நான் அவங்களப் பாக்கல. சமீபத்துல, இங்க திருச்சியில தான் அவங்களப் பாத்தே.” என்றாள்.

“யாரு… கடையில இருந்து கெளம்புன அன்னைக்கி, வண்டியில ஏத்திக்கிட்டு, உங்க அப்பா வீட்டுக்கு கூட்டிட்டுப் போனீயே, அந்தப் பொண்ணா?” என்றான்.

“ஆமா!! உங்களுக்கு எப்படி தெரியும்?” என கண்களில் ஆச்சர்யம் காட்டியவள்,

“அப்படினா… அன்னைக்கி என்னைய ஃபாலோ பண்ணியிருக்கீங்க. அப்படித்தானே மாறன்.” எனக் கண்களை உருட்டி மிரட்ட,

“அய்யோ, பயந்துட்டே!!” என பாவனை காட்டியவன்,

“ஆமா!! அன்னைக்கி உன் முகமே சரியில்ல. நீ வண்டி ஓட்டுற லட்சணம் தான் தெரியுமே? அதான் பத்திரமா வீடு போய் சேர்றியான்னு பாக்கலாம்னு பின்னாடியே வந்தே. நான் நெனச்சமாதிரியே, யார்மேலயோ இடிக்கப் போயிட்டு, வண்டிய ப்ரேக் போட்ட. வேகமா வர்றதுக்குள்ள அந்தப் பொண்ணும் நீயும் பழக்கமானவங்க மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க.” என்றான்.

“அவங்க தான் கவிதாக்கா. அதான் அன்னைக்கி அடிக்கடி ஃபோன் பண்ணீங்களா?” என கேட்டவளிடம், 

”எனக்கு அது யாருன்னே தெரியல. நீ பாட்டுக்கு ஒருபொண்ணக் கூட்டிட்டுப் போனா பயமா இருக்காதா? ஆனா, அந்தப் பொண்ணு கைல குழந்தை இருந்ததப் பாத்து கொஞ்சம் தைரியமா இருந்தே. அதான் அடிக்கடி ஃபோன் பண்ணே.” என விளக்கமளித்தவனை மெச்சுதலாகப் பார்த்தாள்.

“ஆமா!! அது அவங்க குழந்தைதான்.  ரொம்ப அழகா இருந்தான். நீங்க சும்மா ஃபோன் பண்ணவும் கவிதாக்கா கூட கிண்டல் பண்ணுச்சு.” என்று கூறி சிரித்தாள்.

அன்று கருப்பட்டியின் பேச்சில் சற்று குழம்பி இருந்தாள் தான். ஆனால் அதன் பிறகு சக்தி ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவளுக்கு சற்று தெளிவு வந்திருந்தது. 

வீட்டிற்குப் போகும் வழியில்… வண்டி தடுமாறி யார்மீதோ இடிக்கப்போக, திரும்பிப் பார்த்தவளோ, 

“ஏய்ய்… பொம்மீ!!” என ஆச்சர்யமாக அழைத்தாள்.

“நீங்களா க்கா?” என கவிதாவை பார்த்தவள், இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“ஏம்பொம்மி, என்னைய எல்லாம் உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?” எனக் கேட்க, ஏற்கனவே அத்தையின் மூலம் கவிதாவைப் பற்றி அறிந்திருந்தவள் மறுக்க முடியாமல் அழைத்து சென்றாள். 

“வாங்க க்கா.” என வண்டியை நிறுத்தியவள், வீட்டைத்திறந்து உள்ளே அழைத்தாள். சற்று நேரம் கவிதாவின் குழந்தையோடு விளையாட, அமைதியாகவே சென்றது, இருவருக்குமே. என்ன பேசுவது என்று தெரியவில்லை. பொம்மியே பேச்சை ஆரம்பித்தாள்.

“நானாவது அவனப்பத்தின உண்மைய எல்லார்க்கும் சொல்லி இருக்கணும் க்கா. அப்படி சொல்லியிருந்தாலாவது உங்க வாழ்க்கையும் வீணாகி இருக்காது.” என்றாள் சிறு குற்ற உணர்ச்சியோடு.

“அப்படி எல்லாம் இல்ல பொம்மி. நானும் தான் அவனப்பத்தி வீட்ல எல்லார் கிட்டயும் சொன்னே. ஆனா அதுக்கு அவன் சொன்ன காரணம் இருக்கே… அதுதான் உலகமகா உருட்டு தெரியுமா?” என்றாள் சிரித்துக் கொண்டே விரக்தியாக.

ஆமாங்க… கவிதாவைத்தான் நாகராஜனுக்கு மறுமணம் செய்து வைத்திருந்தனர். முருகேசன் மகன் இளையவன் கவிதாவை மணக்க மறுத்துவிட, காளியம்மா நாகராஜனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் ஒரு மாதத்திற்குள் அவனைப் பற்றி தெரிந்து கொண்டாள் கவிதா. தோப்புவீட்டில் கண்டகண்ட மருந்து மாத்திரை களைப் பார்த்தவள் அவற்றைப் பற்றி கூகுளில் அலச, அது… அதன் விபரங்களை ஆராய்ந்து கொடுத்தது. 

கவிதா, ஏதோ தன்மீது இருக்கும் ஆசையில் தான் மூர்க்கமாக நடந்து கொள்வதாக பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தவளுக்கு, அது அப்படி இல்லை, மருந்தின் வீரியம் என முகத்தில் அறைந்து கூறியது. அதன் பிறகு சண்டையும் சச்சரவுமாகவே செல்ல, இவனோடு வாழ முடியாது எனக்கூற, ஏனென்று காரணம் கேட்கப்பட்டது. 

சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டே அவனைப்பற்றி தயங்கித் தயங்கி, இவனால் மருந்து மாத்திரை இன்றி இயங்க முடியாது எனக் கூற,

“சின்ன வயசுல இருந்து ஒன்னாவே வளந்துட்டோம். தங்கச்சி மாதிரியே பாத்துப் பழகிருச்சு. அதனால தான் இவள வேறமாதிரி பாக்க மனசுவரல. அந்த ஆக்சிடன்டாலதான் எனக்கு  பிரச்சினை. அதுக்கு தான் அந்த மருந்து மாத்திரை எல்லாம். ஒருமாசம்‌ கூட ஆகல. அதுக்குள்ள ஆம்பளையப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு?” என்று நாகராஜன் திருப்பிக் கேட்க, கவிதாவால் பதில் கூற முடியவில்லை. அனைவருக்கும் அவன் சொல்வதே நியாயமாகப் பட்டது. 

“அவன் சொல்றதும் சரிதான. இல்லைனா வயசுப்புள்ள இருக்குற வீட்ல எவ்ளோ கன்னியமா, இத்தன நாளா இருந்துருக்கானே?” என அவனைத்தான் பெருமை பேசியது ஊர். 

அதற்காக கவிதா பொறுமை காட்டவில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி அவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுவிட்டாள். அதற்காக அவளுக்கு ஒத்தாசை புரிந்தது சுப்புலட்சுமி தான். பொம்மி விவகாரத்தில் இருந்தே மகன் மீது சந்தேகம் தான். இப்பொழுது கவிதா சொல்ல மேலும் ஊர்ஜிதமாக, அவரே பேசி தீர்த்துவிட்டார். 

இங்கே காளியம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ன தான் அராஜகப் பேர்வழியாக இருந்தாலும், இதை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டே, அவரும் மூடிமறைத்தார். 

இளம்வயதில் கணவனை இழந்து, பெண்குழந்தையோடு தனித்து நிற்கும் பெண், அராஜகப் பேர்வழியாக மாறி, பிறந்தவீட்டில் தன் நிலையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது, தனக்கும் தன் பெண்ணிற்கும் பாதுகாப்பு கருதிகூட இருக்கலாம். சூழ்நிலைகள் கூட சிலரை மாற்றிவிடலாம்.

இப்பொழுது கவிதாவின் அப்பா வழி சொந்தத்திலேயே வேறொருவருக்கு கவிதாவை மணமுடித்துக் கொடுத்து விட்டார் காளியம்மா.

“இப்ப எப்படி க்கா இருக்கீங்க.” அவளது வாழ்க்கையைப் பற்றி அறிந்தவளாக, தற்போதைய நிலமையை பற்றி விசாரிக்க,

“பெருசா பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்ல பொம்மி. இதோ… இவன் தான் என்னோட சந்தோஷமே. எங்க அம்மாகிட்ட இருக்குற காசுக்கு ஆசப்பட்டு கட்டிக்கிட்டவங்க… எங்க அம்மா வாய்க்குப் பயந்தே எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆனா… சில சமயங்கள்ல நம்ம சுணங்குனா, ஆம்பள வேணும்னு தான கட்டிக்கிட்டேனு கேக்கும் போது சுருக்குனு குத்தும் பொம்மி.” என சிரித்துக் கொண்டுதான் கூறினாள். ஆனால் ஏனோ பொம்மிக்கும் வலித்தது.

“அதுக்காக, நான் சும்மா விடமாட்டேன் பொம்மி. காளியம்மா மகளா கொக்கானு அவங்களுக்கு காட்டிருவே. ரெண்டாந்தாரம்கறதுக்காக அவங்ககிட்ட பணிஞ்சு போகணுமா என்ன?” எனக் கேட்க, இவள் சமாளித்துக் கொள்வாள் என ஆறுதலாக மனதைக் தேற்றிக்கொண்டாள். 

“நீங்க… சின்னவனக் கட்டணும்னு தான க்கா இருந்தீங்க?” தயங்கித் தான் கேட்டாள்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பொம்மி. எனக்கு அந்த வீட்டுல மருமகளா இருக்கணும். அவ்ளோ தான்.” என்றாள்.

“ஏங் க்கா?” என்க,

“எங்க மாமா என்னைய எப்ப பாத்தாலும் துக்கிரி புடிச்ச கழுதைனு திட்டுவாரு பொம்மி. நான் பொறந்த நேரம் சரியில்லாம தான் எங்க அப்பா செத்தாராம். என்னோட ராசிதான் எங்க அம்மா வாழ்க்கைய கெடுத்துருச்சாம். அப்ப… இவரு சாதகப்பொருத்தம் பாத்து கட்டிவச்ச எங்க அம்மா வாழ்க்கை ஏன் இப்படி ஆச்சாம். அதனாலேயே அந்த வீட்டுக்கே மருமகளா வந்து, அந்த ஆளு முன்னாடியே சுத்தி வரணும்னு ஒரு வெறில இருந்தே பொம்மி. அதனால தான், உன்னைய அத்துவிட்ட மருவருஷமே என்னைய கட்டிவைக்கவும், நானும் மறுபேச்சு பேசாம கட்டிக்கிட்டே.” என்றவளைப் பார்த்த பொம்மிக்கு பரிதாபம் தான் மேலோங்கியது. யானை தன் தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுக் கொண்டது போல் ஆயிற்று இவள் வாழ்க்கையும் என நினைத்துக் கொண்டாள். அவரவர்க்கென்று ஒரு நியாயம்.

அதற்குள் அடிக்கடி சக்தி ஃபோன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தான். பொம்மியும் சாதாரணமாகப்பேச… தெரிந்த பொண்ணுதான் போல என்று அமைதியாகி விட்டான். 

“ரொம்ப பாசம் போல…” என கேலி செய்து கவிதா சிரிக்க, 

“ஆமா க்கா.” என்றாள் சிறு நாணத்தோடு.

“கவனமா இருந்துக்கோ பொம்மி. என்னைக்கி இருந்தாலும் ஆம்பளைங்க அவங்க புத்தியக் காமிச்சுருவாங்க…” என்று கூறியதுதான் அவளுக்கு மேலும் குழப்பத்தை உண்டு பண்ணியது அன்று.

பொம்மி கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், 

“அதனால தான்… மேடம், அப்படிக் கேட்டீங்களாக்கும்.” என சக்தி கேட்க,

“அது… அன்னைக்கி இருந்த குழப்பத்துல… அப்படிக் கேட்டுட்டே.” என மூக்கை சுருக்கியவள்,

“அவங்களப்பத்தி ஏன் நீங்க, எங்கிட்ட கேக்கவே இல்ல.” என்றாள்.

“சொல்றதுன்னா நீயே சொல்லியிருப்பியேன்னு தான் நானும் கேக்கல.” என்றவனைப் பார்த்தவள் கண்களில் காதல் தளும்பியது… இவன் என்னவன் என்ற கர்வத்தோடு. 

கவிதாவை சந்தித்த பிறகுதான் இவள் மேலும் குழம்ப ஆரம்பித்து விட்டாளே. அதுவுமில்லாமல் நாங்க இருவரும் ஒருத்தனுக்கே வாக்கப்பட்டு வீணாப்போனோம் என்றா சொல்ல முடியும்.

“ஏன்டி!!! ஒன்னுக்கு ரெண்டு பொண்ணுக வாழ்க்கைய கெடுத்துருக்கான். அவன ஒன்னுஞ் செய்யாமலா விட்டுருக்கீங்க.” என்றான் கண்கள் சிவக்க.

“ஹலோ… இது ஒன்னும் பொம்பள மலடின்னுட்டு ஆம்பளைங்க ரெண்டாவது கல்யாணம் பண்ற மாதிரி இல்ல. கோர்ட்டு கேஸுன்னு போனா பொம்பள தான் அசிங்கப்பட்டு நிக்கணும். டிவோர்ஸ் வாங்குறதுக்கு  வேணா இது கோர்ட்டுக்கு, ஸ்ட்ராங்கான காரணமா இருக்கும் மாறன். ஆனா அதுக்கு அப்புறமா, அவ தெருவுல போகையில இவளுக்கு ஆம்பள வேணுமாம்னு முதுக்குக்குப் பின்னாடி கேக்கும்.” என்றாள் நிதர்சனமாக. 

இங்கே ஒரு ஆண், ஒரு பெண்ணை தனக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க இயலாது என எளிதாகக் குற்றம் சாட்டி விலக்கி வைக்க முடியும். அவனுக்கு வாரிசு வேண்டும் எனக்காரணமும் கூற முடியும். அதுவே ஒரு பெண் தன் தாய்மைக்கு அடையாளம் வேண்டும் என, இயலாத கணவனைத் தள்ளி வைக்க முடியாது. ஆண் கூறும் குற்றச்சாட்டில் அவனுக்கு குழந்தை வேண்டும் எனும் அர்த்தமும், பெண் எனும்போது அவளுக்கு ஆம்பளை வேணும் எனும் அர்த்தமும் தொக்கி நிற்கிறது. இருபாலாருக்கும் தேவை ஒன்றுதான். ஆனால் அர்த்தங்கள் வேறு. 

இந்த உண்மையை சக்தியிடம் கூறுவதாக அத்தை சொன்னதற்கு தான் மறுத்துவிட்டாள். 

“அவங்களுக்கு உண்மைய சொல்லணும்னு அவசியமே இல்ல த்தே. நான் சம்மதிச்சாலே போதும். ஆனா ஊர்உலகம் என்ன சொல்லும். அதனாலதான் அவங்களுக்கு ஏத்தவ நான் இல்ல.” என தடுத்து விட்டாள்.

சக்தியிடம் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், பழைய நினைவுகளில் முகம் கருத்துச் சிவந்திருந்தவளைப் பார்த்தவனுக்கும் மனம் கனத்தது. உள்ளுக்குள் குமைகிறாள் எனப்புரிந்தது. எத்தனை வருடங்களின் அழுத்தம் இது.

மணாட்டியை மடைதிருப்ப எண்ணிய மணாளன் தன் வேலையைக் காட்ட தொடங்கினான். 

தன் மடிமீது சலனமின்றி அமர்ந்திருந்தவள் கைமீது மெதுவாக… சுட்டுவிரல்கொண்டு, சுரண்டினான். என்னவென்று அவளும் தன்னவன் முகம் பார்க்க, “அரிசிமூட்டைய கொஞ்சம் நகத்துறியா. கால் மரத்துப் போச்சு.” என சிரிக்காமல் அவளை வம்பிழுக்க,

“அடப்பாவி!!! ஏதோ நைட்டு சும்மா விளையாட்டுக்கு சொல்றதா நெனச்சா, நெஜமாவே உங்களுக்கு நான் அரிசி மூட்டையா ?” என கண்களை உருட்டி, அவனது லட்டு ஃபார்ம்க்கு வர,

“அம்பது கிலோ மூட்டடி. இப்ப பாரு என்னால அசையக்கூட முடியல.” என்றான் இடுப்பை நெளித்துக்கொண்டே.

“முடிஞ்சா நகத்திக்கோய்யா.” என நன்கு அசைந்து, கழுத்தைக் கட்டிக்கொண்டு சட்டமாக அமர்ந்தாள்.

“அப்படீங்கற…” என யோசனையாக தாடையை தடவியவன்,

“இதை எல்லாம் நகத்த முடியாதுடி… அப்படியே தூக்கிற வேண்டியது தான்.” என அவளது காலுக்கடியில் கைகொடுத்து தூக்கிக்கொண்டு எழுந்தவன், கைகளில் ஏந்திக் கொண்டு, மாடிப்படி நோக்கி செல்ல,

“யோவ்வ்… எங்க போற. எனக்குப் பசிக்குது. இன்னும் சமைக்கல.” எனப்பதற,

“வள்ளுவர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? என்றான் வியாக்யானமாக.

“எங்கிட்ட எதுவும் சொல்லல.” என்று முகம் வெட்டினாள்.

“ஜோக்கு… அப்புறமா சிரிக்கிறே.” என்றவன்,

“வயித்துப் பசிய ரெண்டாவதாத்தான் பாக்க சொல்லி இருக்காருடி.” என்றான்.

“யோவ்வ்… ஃப்ராடு!!! இதுக்குப் போயி ஏய்யா வள்ளுவர எல்லாம் இழுக்குற. அவரு ஃபர்ஸ்ட்டு பாக்க சொன்னது அறிவுப் பசிய மாறன். நீங்க சொல்ற அந்ந்ந்…..தப் பசியயில்ல.” என்று கண்களை சுழட்டி காமிக்க, 

“பரவாயில்லையே… சொல்லாமலே புரிஞ்சுறுச்சே… நமக்கு எதுல அறிவு கொறச்சலா இருக்கோ… முதல்ல அதுல அறிவ வளத்துக்குவோம் வாடீ.” என்று கைகளில் ஏந்திக்கொண்டே படியேறினான்.

“மா…ம்மா.” என, ஒருகையால் அவனது கழுத்தை வளைத்துப் பிடித்திருந்தவள், மறுகையால் அவனது மார்மீது விரல்கொண்டு கோலமிட்டுக்கொண்டே குறும்பாக அழைக்க, 

“என்னடி.” என்றான் குறுஞ்சிறிப்போடு.

“இப்ப… கண்ணில் மிதக்கும் கனவா நீ… கையில் மிதக்கும் காற்றா நீயின்னு…  மண்டைக்குள்ள பாட்டு ஓடணுமே.” என கேட்டவளிடம்,

“இல்லடி.” என்றான் அலுப்பாய்.

“அப்புறம்.” என்றாள் அடிக்குரலில்.

“கீழயே, எக்ஸ்ட்ரா ஒரு பெட்ரூம்  இருக்கறது, உன் மரமண்டைக்கி நெனப்பு வரலையாடா சக்தினு மண்டைகுள்ள ஓடுதுடி. இப்படி அரிசிமூட்டய தூக்கிட்டு மூச்சு வாங்க படியேறணுமானு வேற அசிங்கமா கேக்குதுடி.” என்றவனிடம்,

“யோஓஓஓவ்… இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டே.” என்றாள் டீசர்ட்டின் காலரை இழுத்துப் பிடித்து.

“எதெது சரியில்லைனு உள்ள வந்து சொல்லுவியாம். மாமா புதுசு புதுசா சொல்லித்தருவேனாம்.” என்று கேட்டு கண்சிமிட்ட,

“ச்ச்சீ… போய்யா.” என கன்னம் சூடேற முகம் திருப்பிக் கொண்டாள்.

மேகப் பொதியென அவன் கைகளில் தவழ்ந்தவளை ஏந்திக்கொண்டு,  கதவைத் திறந்து உள்ளே சென்றவன் கால்களாலே தள்ளி கதவைச்சாற்றினான்.

பழைய நினைவலைகளில் சிக்கி தத்தளித்தவளை, மோகக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்க வைக்க, ஆயத்தமானான் பொம்மியின் மாறன்.

மனசு மயங்கும்

மனசு மயங்கும்

மெளன கீதம்

மெளன கீதம்

மனசு மயங்கும்

மெளன கீதம் பாடு

மன்மத கடலில்

மன்மத கடலில்

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

மன்மத கடலில்

சிப்பிக்குள் முத்து

தேடு

இதழில் தொடங்கு

எனக்குள் அடங்கு

இதழில் தொடங்கு

எனக்குள் அடங்கு

சுகங்கள் இருமடங்கு

அன்பான… அழகான… ஆரோக்கியமான…(AAA😂) தாம்பத்யம் மன அழுத்தத்திற்கான ஆகச்சிறந்த மருந்து. தாம்பத்யம் எனும்போதே இங்கு கணவன் மனைவிக்கிடையில் நடப்பது என பொருள் வந்துவிட்டது மக்களே.  

error: Content is protected !!