வெண்பனி 25

வெண்பனி 25
பனி 25
கொஞ்சம் இளகி இருந்த மனம், அவன் கேட்ட,”ஏன் பனி, இப்ப எல்லாம் என்னை மாமானு கூப்பிட மாட்டேங்குற?” என்ற கேள்வியில் இறுகியது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.
“நான் எதுக்கு அப்படி கூப்பிடனும்? அதுக்குதான் உன்னோட அத்தை பொண்ணு இருக்காளே?” என்றாள் இகழ்ச்சியாக.
‘என்னது மறுபடியும் முதல்ல இருந்தா?” என நொந்துவிட்டான்.
“கண்ணம்மா புரிஞ்சுக்கோ டி. அவளை ஒரு ஆளா மதிச்சு, நான் பேசினது கூட இல்லை. உன்னை சீண்டுறதுக்கு மட்டும் அவ பெயரை யூஸ் பண்ணுவேன்.”
“எதுக்கு என்னை சீண்டனும்?” என சீறினாள்.
“நீ அன்பு கூடவே எப்பவும் பேசிட்டு, விளையாடிட்டு இருப்பியா, என்னை கண்டுக்கவே மாட்ட. உன் கவனத்தை என் பக்கம் திருப்பனும். என்ன பண்றது? அதுக்கு தான் தீப்தி பெயரை யூஸ் பண்ணுவேன். நான் எதிர்பார்த்த மாதிரி, நீயும், என்னை வெறுப்பு ஏத்த கதிர் மாமானு கூப்பிடுவ. அதை நான் ரசிப்பேன். இப்பல்லாம் நீ அப்படி கூப்பிடுறதே இல்லை. ஏன்?”
“நீதான் உன் அத்தை பொண்ணுக்கு மட்டும் சடங்கு செய்வேன் சொன்ன. அதுவரை நீ சொன்னதை நான் விளையாட்டா எடுத்துட்டு இருந்தேன். ஆனா அன்னைக்கு? நான் உனக்கு யாரோ தான? அப்ப எதுக்கு நான் உன்ன மாமான்னு கூப்பிடனும்? அதனால கூப்பிடுறது இல்ல.” குரல் பிசுறு தட்டியது.
அவளது கலங்கிய குரலில் வருந்தியவன், அவளை தன் மார்போடு அனைத்து,”அப்ப நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். பசங்க எல்லாம் ஏதேதோ பேசுவாங்க. வயசு கோளாறு. மனசு குறுகுறுக்கும். அப்ப உன்னை புடவையில் பார்த்து, மயங்கி காதலில் விழுந்துட்டேன். அதுவரை தோணாத எண்ணங்கள், தோண ஆரம்பிச்சது. அந்த சில நிமிஷத்தில் என்னை முழுசா உன்கிட்ட இழந்துட்டேன். படிக்கிற பொண்ணு. உன் படிப்பு என்னோட சலனத்தால் பாதிக்க கூடாது. அதுல லூசு மாதிரி ஏதோ உளறிட்டேன்.” என்றான் மன்றாடும் குரலில்.
பெண்ணிற்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனாலும் அவனிடம் முழுதாக சரணடைய மனம் முரண்டியது.
“போனா போ ரொம்ப கெஞ்சுற, அதனால உன்னை மன்னிச்சிட்டேன். ஆனா எப்ப எனக்கு உன்ன மாமான்னு கூப்பிடனும் தோணுதோ அப்போதான் கூப்பிடுவேன்.” என்றால் காராராக. அதில் கதிரின் முகம் சுருங்கியது.
தான் செய்த தவறை பெரிது படுத்தாமல், அவள் இந்த அளவு இறங்கி, தன்னுடன் இயல்பாக இருப்பதே பெரிது, என்பதை உணர்த்தவன் அவள் மனம் மாறும்வரை காத்திருக்க முடிவெடுத்தான்.
ஏதாவது அதிசயம் நடந்து, அவள் மனம் மாறி கதிரை, மாமா என்று உரிமையோடு அழைப்பாளா?
ஆம்! அழைத்தாள். ஆனால்???
†††††
காலம் யாருக்கும் காத்திருக்காமல் கடந்தது. அன்பரசனுக்கும் தனலட்சுமிக்கும், இன்னும் அதே பனிப்போர் தொடர்ந்தது. அவளுடன் பேசாமல் அவனுக்கும், அவனுடன் பேசாமல் அவளுக்கும் நரகமாகவே நாட்கள் நகர்ந்தது.
அவர்களின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என பனிமலர் ஒரு பக்கம் வருந்தினாள். ஆனால் எதுவும் தன் கைகளில் இல்லை என ஒதுங்கி நின்றாள்.
இப்படியே அவர்களின் இளங்கலை படிப்பு முடிந்து நல்ல மதிப்பெண்களுடன் வெளியேறினர். அடுத்து? என கேள்வி எழுந்தது.
அன்புவிற்காக படித்த பனிமலருக்கு படிப்பை தொடர்வதில் விருப்பமில்லை. மலர், கதிருடன் ரிசார்ட்டை பார்த்து கொள்வதாக கூறிவிட்டாள்.
அன்பு விரும்பி படித்த கணினி துறை. அதில் மேற்படிப்பு படிக்க அவனுக்கு ஆசை. தன் மொட்டு இல்லாமல் படிப்பை தொடர்வதற்கு யோசித்தான்.
தனலட்சுமி, தன் பெற்றோர்களுக்கு அதிக சிரமம் தராமல், மாலை நேர கல்லூரியில் தன் படிப்பை தொடர முடிவெடுத்தாள். பனிமலருடன் அவர்களது ரிசார்ட்டிலேயே வேலைக்கு சேர்ந்தாள். அவள் தங்கள் கண்பார்வையிலேயே இருப்பாள் என்பதில் அன்பரசனின் மனம் நிம்மதியடைந்தது.
குடும்பத்தார்கள் அன்பரசனை வெளிநாடு சென்று படிக்கும்படி வலியுறுத்தினர். “என்னது என் மொட்டுவை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கா? முடியவே முடியாது.” என மறுத்தான். அவனை விடாமல் வற்புறுத்தினர். அவனால் அவளை பிரிந்து செல்லும் முடிவை எடுக்க முடியாமல் திண்டாடினான்.
பனிமலர் அவனிடம் பேசி சரி கட்டி அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாள். அவனும் அரை மனதாக,”டெய்லி என் கூட போன்ல பேசணும். ஏதாவது பிரச்சனை என்றால் உடனே தெரிவிக்கணும். ஒழுங்கா சாப்பிடனும்.” என ஆயிரம் கட்டளைகளை பனிமலருக்கு இட்டவன் வெளிநாட்டிற்கு பறந்தான்.
பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பனிமலரை பிரியாமல் இருந்த அன்பு, அவளை பிரிய வேண்டும் என்ற காரணத்திற்காகவே தன் கல்லூரி படிப்பை உள்ளூரில் படித்தவன், இப்போது அவளை விட்டு வெகு தூரம் பறக்கிறான்.
ஏன்?
‘ஒருவேளை அவன் இங்கிருந்தால், விதியாடும் சதிராட்டத்தை முறியடித்து விடுவான்’ என, அவனை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதோ?
†††††
கதிர், பனியின் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களை தொட்டிருந்தது.
அவர்களது வாழ்வு, ஊடல் கூடலென அழகாகவே நகர்ந்தது. வீட்டில் உள்ளவர்கள் அவளை நெருங்க முயன்றாலும், அவளால் அவர்களிடம் இணக்கமாக இருக்க முடியவில்லை. தனக்கு தேவைப்படும் போது கிடைக்காத அன்பு, இப்போதும் தேவையில்லை என்றே அவளது மனம் கூறியது.
கார்த்திகேயன், சுகந்தியை அறவே தவிர்த்தால். இப்போதெல்லாம் கார்த்திகேயனின் பார்வை மகளை ஏக்கத்துடன் தொடர்ந்தது. அதை பெண் உணர்ந்தாலும் கண்டு கொள்வதில்லை.
காலம் அனைத்தையும் மாற்றும் என காத்திருந்தனர். ஆனால் எந்த மாற்றமுமின்றி காலம் முடியும், என்று யார் இவர்களுக்கு சொல்வது?
திருமணம் முடிந்து இரு வருடங்கள் ஆகியும் பனிமலர் இன்னும் தாய்மை அடையவில்லை. அதில் அவளுக்கு பெரும் மனசுணுக்கம்.
கதிர் அவளுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தாலும், மழலை செல்வம் இல்லாத ஏக்கம் அவள் மனமெங்கும் நிரம்பி இருந்தது. அழுது கரையவில்லை என்றாலும், அவள் மன வேதனை முகத்தில் பிரதிபலிக்கும்.
அவளது வேதனையை காண முடியாத கதிர்,’மீனு அத்த! உங்க பொண்ணு எவ்வளவு வருத்தப்படுறா? அவளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு.” என இறந்து போன தன் செல்ல அத்தையை மனதார வேண்டினான்.
அவர்களது ஏக்கம் தீரும் நாளும் வந்தது. ஆனால் அதற்கு முன், கொரோனா என்ற தொற்று நோய், சீன நாட்டில் தொடங்கி உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. லட்சக்கணக்கான உயிர்கள் இந்த நோய்க்கு பலியாகின.
விமான சேவைகள் முதலில் நிறுத்தப்பட்டது. ‘அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். மக்களுக்கு இடையே சோசியல் டிஸ்டன்ஸ் இருக்க வேண்டும். கைகுலுகவும், தொட்டு பேசவும் கூடாது.’ என பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது.
முதலில் நம் நாட்டில் இந்த நோய் அதிகம் பரவவில்லை. சிறிது சிறிதாக நோயின் தாக்கம் அதிகரித்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பல தொழில் ஸ்தாபனங்கள் அடிபட்டது. அதில் ஸ்னோ ரேஸ் ரிஷார்டும் ஒன்று.
வெளிநாட்டில் இருக்கும் அன்புவை நினைத்து அனைவரும் கவலை கொண்டனர். தினமும் அவனுடன் வீடியோ காலில் பேசியதால் மனம் சமன்பட்டது.
உலகே அஞ்சி இருக்கும் இந்த நேரத்தில் கதிர் அரசன், பனிமலர் சந்தோஷத்தில் மிதந்தனர்.
ஆம்! இரண்டு வருடங்கள் கடந்து பனிமலர் தாய்மை அடைந்தாள். அந்த இனிப்பான செய்தி பெண்ணை காட்டிலும், ஆணுக்கே அதிக மகிழ்ச்சியளித்தது. காரணம் இனி தன் பனியின் முகத்தில், கவலை ரேகைகள் வாராது என்று.
குடும்பத்தில் இருவரை தவிர அனைவருக்கும் மகிழ்ச்சி. அன்பு தான் சித்தப்பா ஆகிவிட்டேன் என துள்ளி குதித்தான்.
தனா செய்தியை கேட்டு வாழ்த்தியவள்,”ஊரடங்கு உத்தரவுல உங்களுக்கு தினமும் ரொமான்ஸ் தானா?” என கிண்டலில் இறங்கினாள்.
மலர் வெட்கத்தோடு,”போ தனா எப்ப பாரு கிண்டல் பண்ணிக்கிட்டு.”
“பின்ன ஒரு சின்ன பொண்ணு இருக்கான்னு கூட பாக்காம, ரிஷார்டில் அவ்வளவு ரொமான்ஸ் பண்ணுவீங்க. இப்ப வீட்ல இருக்கீங்க. கேட்கவும் வேண்டுமா?” என மீண்டும் வாரினாள்.
“உன் கல்யாணத்துக்கு அப்புறம், நீ என்ன பண்ணுறனு, நானும் பார்க்க தான போறேன்.” பதிலுக்கு மலரும் வாரினாள்.
கல்யாணம் என்ற ஒற்றை வார்த்தை, தனலட்சுமியை அன்புடன் டூயட் பாட, சிம்லாவிற்கு இழுத்துச் சென்றது. அந்த மௌனத்தில் அவளது நிலையை உணர்ந்த மலர், சிரிப்புடன் இணைப்பை துண்டித்தாள்.
பனிமலர், அவளது மகிழ்ச்சியை கௌதம் கிருஷ்ணாவுடன் பகிர்ந்து கொண்டாள். அவளது மகிழ்ச்சி அவனுக்கும் மகிழ்ச்சியளித்தாலும், அவளை மனதார நேசித்த மனம் சுருக்கென்று வலித்தது.
ஆம்! கௌதம் கிருஷ்ணாவுடன் இன்னும் நட்பை தொடர்கிறாள் பனிமலர். அவனும் அவளுடன் நட்புடன் பழகினாலும், அவள் மீதான நேசம் இன்னும் குறையவில்லை.
மாற்றான் மனைவியை நேசிப்பது தவறு என தெரியும். ஆனாலும் அவனால் அவளிடம் இருந்து வெளிவர முடியவில்லை. தன் மனதை மறைத்து நட்பை மட்டுமே தொடர்கிறான். அவனது காதல் அவன் மனதோடு.
பனிமலர் இன்னொருவருக்கு சொந்தமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் கௌதம் கிருஷ்ணாவின் காதல் சரியா?
†††††
கதிர், பனியை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். பெண்ணின் முகத்தில் நிரந்தர மகிழ்ச்சி குடியேறியது.
அவள் சூழ் கொண்டு எட்டு மாதத்தை தொட்ட நிலையில். கதிர் அரசன் ஒரு வாரம் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டானது.
அவளை அங்கு விட்டு, தனியே செல்வது, அவனுக்கு பிடிக்கவே இல்லை. ஆனால் அவள் இருக்கும் நிலையில் அவளை உடன் அழைத்து செல்லவும் முடியாது. அதனால் அவன் மட்டும் பயணிக்கிறான்.
கதிர், குட்டி போட்ட பூனையாக, தன் பனியையே சுற்றி, சுற்றி வந்தான். பெரியவர்களின் நமட்டு சிரிப்பை, அவன் கண்டு கொள்வதாகவே இல்லை. ஒரு கட்டத்தில்,”போயா போ” என பனி அவனை விரட்ட வேண்டியிருந்தது.
கதிரின் தவிப்போ வேறு. அவனது மனம் ஒரு நிலையில் இல்லாமல் அவனை அளக்களித்தது. உடலாலும் மனதாலும் அவளை அதிகம் நாடினான். எப்போதும் இல்லாத நெருக்கத்தை காட்டினான். அவனது வேகத்தை தாங்க முடியாத பெண் தடுமாறினாள்.
அவன் கிளம்பும் நாள் சோகமாக விடிந்தது. தாய்மையின் பொலிவோடு, எட்டு மாத மேடிட்ட வயிறுடன், தங்கள் அறையில் அங்கும் இங்கும் நடை பயின்ற பனிமலரின் மேலேயே நிலைத்தது கதிர் அரசனின் பார்வை.
அவன் பார்வையின் குறுகுறுப்பு பெண்ணின் உடலை சிவக்க வைத்தது. நடை தடுமாறியது.
அவனது பார்வையை நேற்கொண்டு சந்தித்து,’என்ன?’ என புருவம் உயர்த்தினாள்.
‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தவனின் ஒற்றைக்கரம் நீண்டு அவளை அழைத்தது.
பிகு செய்யாமல் அவளது வலது கரத்தை, அவனது கரத்தின் மீது வைத்தாள். அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், பின்னிலிருந்து அவளது மேடிட்ட வயிற்றை கட்டிக் கொண்டான். அவனது சீரற்ற மூச்சின் வெப்பம், பனிமலரின் கழுத்தை தீண்டியது.
“என்ன ஆச்சு கதிர்? ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க?” என்ற பனிமலரின் கேள்விக்கு கதிர் அரசனிடம் பதில் இல்லை.
“தெரியல கண்ணம்மா, உன்னை விட்டு பிரிய வேண்டாம்னு சொல்லி மனசு தவிக்குது. போக மனசே இல்ல. சொல்லத் தெரியாத பாரம் மனச போட்டு அழுத்துது.”
அவனிடமிருந்து விலக முயன்றவளை தடுத்து,”எது பேசுறதுனாலும் இப்படியே பேசு” என அணைப்பை மேலும் இறுக்கினான்.
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், என்னை விட்டு நீ பிரிஞ்சதில்லை இல்லையா? அதனால அப்படி இருக்கும்.” அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.
“பேசாம இந்த டையப்பை வேண்டாம் சொல்லிடவா?” என்றான் தவிப்பான குரலில்.
“நம்ம ரிசார்ட் வேலையா போற. இப்ப இருக்க நிலையில் இந்த டீலிங் ரொம்ப அவசியமானது. அதுல எந்த தடங்கலும் வரக்கூடாது. முக்கியமா என்னால்.” குரல் கடினமுற்றது.
“என்னால முடியல கண்ணம்மா.” இயலாமையுடன் வார்த்தைகள் வந்தது.
அவனிடமிருந்து விலகாமல், சற்று திரும்பி அவனது காதை பிடித்து திருகி,”நான் சொல்றது உன் மண்டையில் ஏறலையா? ஊர் உலகம் சொன்ன மாதிரி, நான் உனக்கு அதிர்ஷ்டம் இல்லாதவளா இருக்க விரும்பல. உன்னோட தோல்விக்கு எந்த இடத்திலையும் நான் காரணமா இருக்கக் கூடாது. இப்ப நீ போகலைனா, அதுவே என் மனச கொன்னுடும். நீ போயி இந்த டீலை நல்லபடியா முடிச்சுட்டு வா. உன் வெற்றி செய்தியை கேட்க, நானும் நம்ம குழந்தையும் காத்திருப்போம். ஆல் தி பெஸ்ட்.” என தன் எண்ணத்தை அவனிடம் பகிர்ந்து, தன் காத்திருப்பை உணர்த்தி, வாழ்த்தினாள்.
ஒரு பெருமூச்சுடன்,”நீ எப்பவும் என்னோட அதிர்ஷ்ட தேவதை பனி. உன்னோட ஆசைக்காகவே நான் தோல்வியை சந்திக்க மாட்டேன். நான் போயிட்டு வரேன். நீ என்னோட வாரிசை பத்திரமா பார்த்துக்கோ.” என அவளிடமிருந்து விடை பெற்றான்.
தன்னோட வாரிசை பார்த்துக்க சொன்னவன், அவளது உடலையும் பார்த்துக்க சொல்லி இருக்க வேண்டுமோ?
இந்த தற்காலிக பிரிவு, நிரந்தர பிரிவாகும் என தெரிந்திருந்தால், அவன் கிளம்பியே இருக்க மாட்டான். விதியின் ஆட்டத்தை யார் அறிவார்?
†††††
பாரியூரில் பனிமலரை விட்டு, கதிர் சென்று ஒரு வாரத்திற்கு பின், அவனுடன் கைப்பேசியில் பேசியபோது, பனிமலர் அவனது பிரிவின் தவிப்பை சொல்ல, எதை பற்றியும் சிந்திக்காமல், அந்த மாலை நேரத்தில் தன் காரை கிளப்பி இருந்தான் பாரியூரை நோக்கி. அந்த வருடத்தின் கடைசி நாள்.
இரவில் பயணம் செய்த கதிரின் வாகனம், சரியான இலக்கை அடையுமா?
ஒருவேளை அடைந்தாலும் அங்கு மகிழ்ச்சி இருக்குமா?
புது வருடத்தின் தொடக்கம், அவர்களுக்கு வைத்திருப்பது என்ன?
†††††
புது வருடம் தொடங்கி, மூன்று மாதத்திற்கு பின் வெளிநாட்டில் இருந்த அன்புவிற்கு, விமான சேவைகள் தொடங்கியது.
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விமான சேவை தொடங்கியதால் டிக்கெட்டின் விலை பல மடங்காக ஏறி இருந்தது. அதைப்பற்றி கவலை கொள்ளாத அன்பு, தன் மொட்டுவும், கதிரும் கடந்த மூன்று மாதங்களாக பேசாத கோபத்தோடு, அவர்களை உண்டு இல்லை என ஆக்கும் முடிவோடு, விமானம் ஏறினான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தன் மலர்ந்த மொட்டுவையும், அவளது மொட்டுவையும், காணும் ஆவலோடு வந்த அன்புவுக்கோ பேரிடியாக இருந்தது, அங்கு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே இருந்த முகமும், அதன் அருகே தன் உயிரை தொலைத்து, ஜீவனே இல்லாமல் நின்ற அந்த ஜீவனின் உருவமும், அதன் கரத்தில் இருந்த இதழினி என்ற மலர் செண்டும்.
காணக்கூடாத காட்சியில் தன் மொட்டுவை கண்ட அன்பரசன் உயிரோடு மரித்து நின்றான்.