இளைப்பாற இதயம் தா!-15ஆ

இளைப்பாற இதயம் தா!-15ஆ

இளைப்பாற இதயம் தா!-15B

“அப்ப எதாவது அஃபையர்?” என்றாள்.

          முறைப்பைக் கூட்டி, “ந்நோ…” என்றவன், ஐடாவிற்கு ரீகன் பற்றிய விசயம் அனைத்தும் தெரிந்து கேட்பதால் அசூயை உணர்வு உள்ளத்தில் தோன்றியதை அவள் முகம் பிரதிபலிக்க அந்த மாற்றம் எதனால் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவன், “என்ன…?” என்று கேட்டான்.

          “அஃபையர்… எதுவும் இல்லை சரி.  ஆனா…” என்று இழுத்தவள் கேட்க சங்கடம் கொண்டு சட்டென நேரடியாகக் கேள முடியாமல் சுற்றி வளைத்து, “கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் இருந்தாங்களா?”

          சற்று நேரம் மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவன் பிறகு ஒரு முடிவுடன், “இருந்தாங்க…” என்றவன், “இப்ப அதுக்கென்ன?” என்றான்.

          “அவங்களோட ரிலேசன் எப்படி?”

          “என்ன பேசுற நீ?” கடுமையைக் காட்டியவன், “கேர்ள் பிரண்ட்ஸ்னா தப்பாவே பாக்கணுமா?  பிரண்ட் அவ்ளோதான்!” அதை அவளின் முகம் பார்க்காமல் கூறியதையும் ஐடா கவனித்தாள்.

          “அவங்களோட அவுட்டோர் போன அனுபவம் இருக்கா?”

          “ஏய்…! உனக்கு இப்ப என் மேல சந்தேகம்.  அதுக்குத்தான இப்படி நிக்க வச்சிக் கேக்குற?” என்று ஐடாவின் கேள்விக்குப் பதில் பேசாமல் அவளின் மீது பாய, “எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது?” பின்னடைந்தபடியே கேட்டாள்.

          “கம்பெனியில இருந்து போற ட்ரிப்ல எல்லாரும் சேந்து போனதுண்டு.  அவ்ளோதான்!” என்று முடித்துக்கொண்டவனையே இமைக்காமல் பார்த்தவள்,

“வேற எப்போவும் நீங்க அவங்கூட வெளிய போனதில்லையா? என்று கேட்டதும், சட்டென அங்கிருந்த டீபாயின் மீதிறிருந்தவற்றை எடுத்து வீசியவன், “உன்னோட சந்தேகப் பேய எம்மேல ஏவிப் பாக்க நினைச்சா அதுக்கு நான் ஆளில்லை!” என்றவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் வெளியேறிவிட்டான்.

இந்த மாதிரியான கேள்விகளை மனைவியிடம் ரீகன் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை.  அப்படிக் கேட்டாலும், ஆமா நான் அவளோட போயி அங்க ரெண்டு நாளு தங்குனேன்.  அவகூட உல்லாசமா நேரத்தைக் கழிச்சேன்னு சொல்ல எல்லாத்துக்கும் தைரியம் வராதில்லையா…  தைரியம் என்பதைவிட சொல்லிவிட்டு காலம் முழுமைக்குக்கும் அவளோடு வாழ்வைக் கடத்துவது அத்தனை லேசில்லை என்பது புரிந்தவன் எவனும் கூறமாட்டான்.  அதையேதான் ரீகனும் செய்தான்.

ஆனால் இது அனைத்தும் ஐடாவின் ரீகனுக்கான கணவன் எனும் பதவிக்கான மதிப்பெண் அட்டையில் ரீகனது சரிவைக் காட்டி, அவனிடமிருந்து விலகிச் சென்றுவிடு என்று வழிநடத்தியதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ரீகன் அவளின் கேள்விக் கணைகளை எதிர்நோக்கி சமாளிக்க முடியாமல் சென்றதோடு, அதன்பின் ஐடாவிற்கு அழைத்துவிட்டு அறைக்கு வர முயன்றாலும் அவனது எண்ணை பிளாக் செய்து வைத்திருந்தால் மனைவியைத் தொடர்பு கொள்ளவே அவனால் முடியவில்லை.

அறைக்குள் வரலாம் என்று அவ்வப்போது வந்தாலும் உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தவளை தட்டித் திறக்கச் சொல்ல ஏதோ தடுத்தது.

இதுவரை எத்தனையோ பெண்களை அனாயசமாகக் கடந்து வந்திருந்தவனை, அல்லோகலப்படுத்தினாள் அவளின் நினைவுகளால்.  அவளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.  ஆனால் அவனை இத்தனை விசயங்களையும் அறிந்துகொண்டபின் ஏற்றுக்கொள்ள மனம் சம்மதிக்கவில்லை.

இப்படி நடக்கும் என்பதை முன்பே கணித்திருந்தால், அன்று எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அறையை விட்டு கத்தி வெளியே வராமல் அப்போதே சமாளித்திருந்திருப்பான் ரீகன்.

ஒரு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக எண்ணி அடுத்தடுத்து எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றவனுக்கு அலுவலகப் பணிகளில் கவனம் செல்லவில்லை.

அனைத்தையும் மீறி ஐடாவின் நடவடிக்கைகளும், அவளின் பேச்சும் நடவடிக்கை நினைவில் வந்து அவளிடம் விலகி நிற்கத் தூண்டியது ரீகனை. 

ஆனால் அவள் மீது நேசம் கொண்டிருந்த மனம் அவளின் அருகாமையை வேண்டித் தவித்தது.  இரண்டு மனமும் மாறான திசைகளில் பயணிக்க போராட்டங்களுக்கு இடையில் சிந்தித்தவனுக்குள் அவளை யாசிக்கும் எண்ணமே முடிவாகத் தோன்றிட தன்மானத்தை தூக்கியெறிந்துவிட்டு அவனாகவே பேச முன்வந்தான். ஆனால் ஐடாவைச் சந்திக்க முடியவில்லை.

          அடுத்து வந்த நாள்களில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவே இல்லை.  ஐடா அன்று கிட்டிய பேருந்து பயண பெயர் அட்டவணைக்குப்பின், ஆராதனா, நான்சி, ஜான்சி மற்றும் மதுவைப் பற்றி அறிய மேலும் ஒன்றரை வார காலம் தேவைப்பட்டது.

          ரூபி பாட்டி தம்பதியர் ஒதுக்கத்தோடு நடந்துகொண்டதை முதலில் கண்டபோது காணததுபோல நடந்துகொண்டார்.  இரண்டு நாள்களுக்கு மேலும் தொடர்வதைக் கண்டதும் ஐடாவை அணுகி, “என்னம்மா?  என்ன உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைனாலும் அதை வளர விடாம, உக்காந்து பேசித் தீத்துக்கங்க…  மத்தவங்க உங்க ரெண்ட பேருக்குமிடையே வந்து உங்க பிரச்சனைய எடுத்துப் பேச… இன்னும் நீங்க சின்ன பிள்ளைங்க இல்லை.” என்றவர்,

“அவனோட முகமே ஒரு வாரமா சரியில்லை.  ஒழுங்கா ரெண்டு பேருமே சாப்பிடற மாதிரித் தெரியலை.” கூறியவர், “வயித்துல குழந்தையோட இருக்கும்போது சந்தோசமா இருக்கணும்.  உன்னோட பட்டிணி, கவலை, பதட்டம் எல்லாம் பாப்பாவை அஃபெக்ட் பண்ணும்ல…” என்று கேட்டார்.

          “அப்டியெல்லாம் எதுவும் இல்லை பாட்டீ” என்று சமாளித்தவளிடம், “புருசன் பொண்டாட்டி சண்டை ஒரு நாளுக்கு மேல நீடிக்க விடக்கூடாது ஐடா” என்றதோடு, “சண்டை வராம எல்லாம்… குடும்பம் நடத்த முடியாது.  அதையே பெருசாக்கிறாம சமாதானம் ஆகற வேலையப் பாருடா” என்றதோடு அகன்றுவிட்டார்.

          ஐடாவின் தோற்றத்தில் இருந்த பொலிவு மங்கியிருக்க, அது அஸ்வினின் கண்களுக்குத் தப்பவில்லை.  அவனுக்கு தோன்றியதெல்லாம், ‘மேரேஜ்கு வந்துட்டுப் போனதில பயலைப் பத்தி ஐடாவுக்கு எதுவும் தெரிஞ்சிருச்சோ’ என்பதுதான்.  உள்ளுக்குள் அவன் அறியாமலேயே ஒரு குதூகலம்.

          அனைத்தையும் அறிய நேர்ந்தவளுக்குள், ரீகனோடு இனி வாழ்வதென்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஆனால் வேண்டாமென்று ஒதுங்கிச் செல்லவும் சட்டென இயலாத நிலை.

          அவள் கொண்டிருந்த நேசம் அவனது அருகாமைத் தேடியது.  இந்த விசயங்கள் அனைத்தும் தனக்குத் தெரியாமலேயே இருந்திருந்தால் தான் முன்புபோல மகிழ்ச்சியாகத்தானே இருந்திருப்போம் என்று எண்ணியதும், ‘தோண்டித் துருவிப் பாக்காதவரை நல்லாத்தான் லைஃப் போகும்போல’ எனத் தோன்றியது.

          ஒரே வீட்டிற்குள் ஐடா தனது அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்ள, அவள் வெளிவரும் சமயம் எதேச்சையாக வருவதுபோல ஓரக்கண்ணால் பார்த்து தன்னை சமன்படுத்தினான் ரீகன்.  அவளிடம் பேச முயன்று ஆரம்பித்தால், “ம்” “ம்ஹும்” “ம்ஹ்கும்” இப்படி சத்தத்தோடும், தலையை அசைத்தும் பதில் சொல்லிவிட்டு சட்டென தனது அறைக்குள் புகுந்துகொண்டவளை தன்னோட பழையபடி பேச வைக்கும் வழி தெரியாமல் திணறினான் ரீகன்.

          ரீகன் பற்றி ஓரளவிற்கு விசயங்களை தேடிப் பிடித்து அறிந்த கொண்டவளுக்கு புரிய வந்தது பல விசயங்கள்.  அதில் ஒன்று அவனைத் தான் பேருந்தில் காண நேர்ந்த நாளில் ஜான்வி, மது இருவரும் வேறு அலுவலகத்திலும், ரீகன் வேறு அலுவலகத்திலும் பணி புரிந்தது.

          மூவரும் இதற்குமுன் ஒன்றாக பணி புரிந்தார்களா என்று பார்த்தால் ஜான்வி மட்டுமே அவனோடு ஆறு மாதம் பணி புரிந்திருக்கிறாள்.  ஒரே காலகட்டத்தில் ஒரே அலுவலகத்தில் நான்சியோடு மட்டும் பணி புரிந்ததும் அதன் வாயிலாகத் தெரிய வந்திருந்தது.

          நான்சியின் பிதற்றல்களை கேட்டதையெல்லாம் அசைபோட்டவளுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும் பறிபோனது.

          தனக்குத் தெரிந்து இத்தனை பெண்கள். தெரியாமல் இன்னும் எத்தனை பெண்களோடு எப்படியெல்லாம் இருந்தானோ என்று நினைத்தாலே ரீகன் மீது அருவெறுப்பு மிகுந்தது.

          அப்படிப்பட்டவனோடு ஊனாகி உயிராகி தன் நிலை மறந்திருந்த நாள்களும் நேரங்களும் நிமிடங்களும் நொடிகளும் ஐடாவிற்கு நினைவில் வந்து நையாண்டி செய்தது.

          குழந்தை ஒன்று தற்போது வயிற்றில் இல்லாவிட்டால் கண்டிப்பாக வீட்டை விட்டு இந்நேரம் வெளியில் சென்றிருப்பாள்.  குழந்தையை யோசித்தாள்.  சற்று நாள்களாகவே மிக அரிதாக அபூர்வமான ஒரு உணர்வை அடிவயிற்றில் உணர முடிந்தது ஐடாவால்.  குழந்தையை வெறுக்க அவளால் முடியவில்லை.  ஆனால் அதற்கு மாறாக ரீகனை வெறுத்தாள்.

          பங்களூரில் தான் ஆராதனா பற்றிக் கேட்டபோது ரீகன் கூறியது பொய் என்பதும் சில ஃப்ரொபைலைக் காணும்போது ஐடாவிற்கு தெரிய வந்திருந்தது.

          உண்மைத்தன்மையே இல்லாத ஒருவனுடன் எப்படி தன் இல்லற வாழ்வைத் தொடருவது என்று பொதுவாக நினைப்பவளுக்கு, அவனது களங்கமான பழைய வாழ்க்கையும் தெரிய வந்ததில் முற்றிலும் மனம் விட்டுப்போயிருந்தது.

          வயிற்றில் இருக்கும் சிசுவை உத்தேசித்து மட்டும் இங்கே தன்னால் தொடர்ந்து தங்குவது என்பது ஐடாவிற்கு முடியும் என்றும் தோன்றவில்லை.  இதற்கிடையே இருவருக்கிடையே இருந்த இடைவெளி அப்படியே இருப்பதைப் பார்த்த ரூபி பாட்டி, “இப்படியே அவனை விட்டா… பழைய குருடி கதவைத் திறடின்னு போயிறப் போறான் ஐடா!” என்று தன்னை மீறி வாயை விட்டிருந்தார்.

          அதனைக் கேட்டவளுக்கு பாட்டியின்மீது கோபம் உண்டாக, “அப்ப உங்களுக்கு ரீகன் பாஸ்ட் பத்தித் தெரிஞ்சிருக்கு?” என்று கிடுக்குப்பிடிக் கேள்வியில் பாட்டியைத் திணறச் செய்ததோடு, “அடுத்த வீட்டுப் பொண்ணுன்னுதான உங்க பேரனைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் என் வாழ்க்கையக் காவு கொடுத்திருக்கீங்க?” என்று கேட்டுவிட்டாள்.

          “அய்யோ… அப்டியெல்லாம் சொல்லாதம்மா… அவன் எப்படி மாறினான்னு தெரியாமத்தான் நானும் தவிச்சுப் போனேன்.  ஆனா சும்மா சொல்லக்கூடாதும்மா.  நீ வந்ததும் அப்படியே மாறிப் போயிட்டான் புள்ள…”

          “அப்டி ரீகன் மாறாம இருந்திருந்தா… என்னோட நிலமை என்னவாகியிருக்கும்னு யோசிக்கலைல்ல நீங்க?”  பாட்டியிடம் தனது வருத்தத்தைக் கேட்டுவிட்டாள்.

          “உன்னோட குணம், பண்பு எல்லாம் நிச்சயம் அவனை மாத்திரும்னு எனக்குத் தெரியும்மா?” ரூபி.

          “உங்க பேத்திங்களுக்கு இப்படி ஒரு பையனைப் பாத்து முடிச்சி வச்சிருப்பீங்களா?” ஐடா.

          அமைதியாக குற்றவாளியைப்போல அமர்திருந்தவரிடம், “நாயை குளிப்பாட்டி நடு மனையில வச்சாலும், அது புத்தி மாறாதுன்னு சொல்லுவாங்களே பாட்டீ.  இனி எப்படி அவரை நம்பி நான் இங்க வாழ முடியும்?” என்று கேட்டாள்.

          “அப்டியெல்லாம் அவனைச் சொல்லாதம்மா” பேரனை நாயோடு ஒப்பிட்டு ஐடா பேசியதைக் கேட்டதும் தாங்க இயலாத அந்த முதியவரின் கண்களில் கண்ணீர்.

“அவன் உன்னைத் தவிர இப்ப வேற எந்த சிந்தனையும் இல்லாம இருக்கான் ஐடா.  நீ பழையபடி அவனை அணுசரிச்சுப் போனா  எல்லாம் சரியாகும்மா!” தனது கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு பேசியவர்,

“இதைப் பெரிசு படுத்திறாதம்மா!” என்றவர், “ரெண்டு பேருக்கும் இனிதான் வாழ்க்கை இருக்கு” அதற்குமேல் அந்த துன்பநிலை தாளமுடியாமல் அறைக்குச் செல்ல அங்கிருந்து அகன்றார்.

          அதேநேரம் வீட்டிற்குள் நுழைந்த ரீகன் பாட்டியின் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி செல்வதைப் பார்த்துவிட்டு விரைந்து வந்தவன், அவரது கரங்களைப் பற்றி, “என்னாச்சு பாட்டீ!” என்று கேட்டதோடு அங்கு இருந்த ஐடாவையும் திரும்பிப் பார்த்தான்.

          “ஒன்னுமில்லைப்பா!” என்று பேரனிடம் உரைத்தவர், “நீ போயி சாப்பிடு” என்று பேரனைத் தன்னிடமிருந்து அகற்ற முனைந்தார்.  ஐடா பேரனையும் பாட்டியையும் பொருட்படுத்தாது, “நான் என்னமோ… இவங்களை கொடுமை படுத்தற மாதிரி சீனைக் கிரியேட் பண்ணிட்டுப் போறாங்க!” வாயிக்குள் முணுமுணுத்தபடியே தனது அறையை நோக்கி நகர, ரீகனது காதுகளில் அது விழுந்திட, “ஐடா…” என்று மனைவியை அழைத்து அவளை நிறுத்தினான்.

          என்னவென்றால்லாம் கேளாமல் திரும்பி நோக்கியவளிடம், “பெரியவங்க மனசு கஷ்டப்படற மாதிரி என்ன பேசுன?” கத்தினான்.  இதுவரை ஐடா தன்னைத் தவிர்ப்பதைத் தாளாமல் திரிந்தவன், பாட்டியின் கண்ணீரைக் கண்டு கொதித்துவிட்டான்.

          “அவங்கட்டயே கேளுங்க!” அலட்சியமாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர எத்தனிக்க,

          “ஏன்… நீ சொல்ல மாட்டியா?” ரீகன்.

          “சொல்றதுக்கு… இது என்ன வர்ல்ட் ரெக்கார்டா?” என்று அதே தொனியில் கேட்டபடி தலையிலடித்துக் கொண்டவள், அவன் பார்ப்பதை உதாசீனப்படுத்திவிட்டு அறைக்குள் சென்றிருந்தாள்.

          ரீகனுக்கு சுள்ளென்று கோபம் உச்சி மண்டையில் ஏறியிருக்க, அதற்குமேல் என்ன செய்தான் என்பதை அடுத்த அத்தியாயத்தில் வாசிக்கலாம்.

***

Leave a Reply

error: Content is protected !!