தாழையாம் பூமுடித்து🌺2
தாழையாம் பூமுடித்து🌺2
TPM.2
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ
மௌனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ ….
……………..
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா,
என்ற வரிகள் வர,
அனிச்சையாய் இருவர் கண்களும், தனை மறந்து திரும்பிப் பார்க்க, இவன் கண்கள் சுகமா எனக் குசலம் விசாரிக்க, அவளது கண்களோ கோபத்தில் சிவந்தது.
அதுவரை மௌனமாக இருந்தவள் எட்டி, பட்டென பாட்டை நிறுத்தினாள்.
“புதுப்பொண்ணு மொகம் வெக்கதுல செவக்கும்னு கேள்விப்பட்டிருக்கே. இங்க என்னடான்னா கோவத்துலல்ல செவந்து இருக்கு.” கைகள் லாவகமாக கார் ஸ்டீயரிங்கை திருப்பிக் கொண்டே, வாய் புதுப் பொண்டாட்டியை வம்பிழுத்தது.
வத்தலக்குண்டிலிருந்து பிரிந்து செல்லும் உசிலம்பட்டி ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது. உம்மென முகத்தை வைத்துக் கொண்டு வந்தவளை பேச்சுக் கொடுத்து வம்பிழுத்தான் ஈஸ்வரன்.
“ஆமாமா… இவரு பொண்ணு பாத்து, நிச்சயம் முடிச்சு, பத்திரிக்கை அடிச்சு, ஊர அழச்சு, பந்தி வச்சு… தாலி கட்டி கூட்டிப் போறாரு. அப்படியே அய்த்த மகனப் பாத்ததும் ஆசையா, வெக்கப்பட்டு கால் கட்ட விரலால கோலம் போடுவாங்க.” என அடுப்பில் சுட்ட சோளக்கதிராய் பொறிந்து தள்ளினாள் சிவசங்கரி.
“எத்தன உச்சு… பரவாயில்ல… நல்லா நொரநாட்டியமாத்தா பேசுற. ஊரவிட்டுப் போனாலும் பேச்சுல மண்வாசனை போகல. அப்ப… இந்த அய்த்த மகனப் பாத்தா ஆசையும், வெக்கமும் வரலைங்கற.” வலக்கையால் ஸ்டீரிங்கை திருப்பிக் கொண்டு, இடக்கையால் சட்டைக் காலரை பின்னால் தூக்கிவிட்டுக்கொண்டே கேட்க,
“ஆமா… வரல… இப்ப அதுக்கு என்ன பண்ணனுங்கற?”
“அதுக்கு… இப்ப ஒன்னும் பண்ண முடியாது. சிட்சுவேஷன் சரியில்ல. ஆனா மரியாதையும்ல வரல.” என்றவனை பக்கத்தில் அமர்ந்து இருந்தவள், வேகமாகத் திரும்பி பார்த்தாள். இல்லையில்லை முறைத்தாள்.
“என்ன பாக்குற? நீ சொன்னதெல்லாம் பண்ணல தான். ஆனா, ஊர அழைக்கலைனு மட்டும் சொல்லாத. நாலு ஊரு பெரிய மனுஷங்கள வச்சு தாலி கட்டியிருக்கே.”
“எப்படீ… எங்க அப்பாவ, ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி, இன்னைக்கே கல்யாணமும் முடிச்சே ஆகணும்னு, கட்டாயப்படுத்தி என்னய கல்யாணம் பண்ணி கூட்டிப் போற. இது எங்க அப்பாவுக்கு எவ்ளோ பெரிய அசிங்கம்னு தெரியுமா?” என தொண்டை அடைக்கக் கேட்டவளிடம்,
“அவரு உனக்கு அப்பா மட்டும் இல்ல. எனக்கு தாய்மாமனும் கூட. தாய்க்கு அடுத்த ஸ்தானம். சொந்தபந்தம் ஒன்னு சேரணும்னா எதுவும் பண்ணலாம். உன் சம்மதம் கேட்டுதான கல்யாணம் நடந்துச்சு.” என கறாராகக் கூறியவன், அடுத்த நொடி,
“நாலு பேரு நல்லா இருக்கணும்னா, எதுவும் தப்புல்ல.” என கமல் மாடுலேஷனில் கிண்டலாகக் கூற,
“அந்த நாலு பேரு யாரு? உங்க குடும்பதுல இருக்கறவங்களா?” என்றாள் பட்டென.
“ஒரு சின்ன திருத்தம். உங்க குடும்பம்னு சொல்லக் கூடாது. எப்பவும் நம்ம குடும்பம்னு சொல்லணும்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.” என முகம் திருப்பிக் கொண்டவளிடம்,
“எதெதுல கொறச்சல்னு அதுக்குள்ள எப்படி தெரியும். பரவாயில்ல… ஊரவிட்டுப் போனாலும் நம்ம ஊர் மானமும் ரோஷமும் அப்படியே இருக்கு.”
“அது என்ன… சும்மா ஊரவிட்டுப் போனோம், ஊரவிட்டுப் போனோம்னு திரும்பத்திரும்ப அதையே சொல்ற. நாங்க என்ன கடனவாங்கிட்டு, கட்டமுடியாம ராவோடராவா ஊரவிட்டுப் போனோமா? இல்ல பஞ்சம் பொழைக்க ஊரவிட்டுப் போனோமா? அந்தக் காலத்துலயே தாத்தா கவர்மென்ட் வேலைக்காகப் போயி சென்னைல செட்டில் ஆனவங்க. தெரியும்ல?” என கோபமாக எகிறிக் கொண்டு வந்தாள்.
“ஷ்ஷ்ஷப்பா… காதே அடச்சுப்போச்சு. சில்வண்டாட்டம் என்னா சத்தம்.” என ஆட்காட்டி விரல் கொண்டு காதை குடைந்தவன்,
“அதுவும் தெரியும். யாரோட கட்டாயத்துல போனாருன்னும் தெரியும்.” எனப் பேசிக்கொண்டே வர, ஈஸ்வரனின் கைபேசி அழைத்தது.
“சொல்லுங்கம்மா.” என்றான் அழைப்பை ஏற்றவன்.
“……..”
“கல்லுப்பட்டி தான்டி வந்திட்டு இருக்கோம் மா.”
“………”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல. பயப்படாதீங்க. நீங்க ஆசப்பட்ட மாதிரி உங்க அண்ணே மகள, மருமகளா கூட்டி வர்றே. ஆலாத்தி கலக்கி வைங்க. இனி நீங்களாச்சு. உங்க அண்ணே மகளாச்சு. நம்மல ஆளவிடுங்க.” என அன்னையை வம்பிழுத்து சிரிக்க, சிவசங்கரி கோபமாக முறைத்துக்கொண்டே வந்தாள். முறைப்பெண்ணாயிற்றே…
“………”
“அதெல்லாம் சின்ன மாமா பாத்துக்கிட்டாரும்மா. முன்னாடியே உள்ளூர் பெரிய மனுஷங்கள எல்லாம் சரிக்கட்டித்தானே வச்சிருந்தோம். அதனால, ஒன்னும் பெருசா பிரச்சினை வரல. மாப்பிள்ள வீட்டு ஆளுகதான் கொஞ்சம் துள்ளுனாங்க. அதெல்லாம் பாத்துக்கலாம் மா.”
“………”
“சரிம்மா… வந்து பேசிக்கலாம்.” என அழைப்பை துண்டித்தவன்.
“உங்க அய்த்த தான். அண்ணே மகளப் பாக்க அவ்ளோ அவசரம்.” என கூறிக் கொண்டே ஃபோனை வைத்தான்.
நிச்சயதார்த்த வீட்டில்…
அனைவரும் சிவசங்கரியின் முகம் பார்த்து நிற்க, அவளோ சித்தப்பாவைத் தான் பார்த்து நின்றாள்.
முன்தினம் தான் சக்திவேலின் குடும்பம் மொத்தமும் பூசாரிபட்டிக்கு வந்து இறங்கியது. இங்கு மொத்தக் குடும்பம் என்பது, சக்திவேல் பெண்ணெடுத்த குடும்பத்தையும் சேர்த்து.
அதற்கு முன்பே நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என சித்தப்பா முத்துவேல் கிளம்பி வந்துவிட்டார். ஊராரை அழைப்பது, சமையல், பந்தல் என மூன்று நாட்களாக மிகவும் பிஸியாக இருந்தார்.
அண்ணன் சக்திவேலிற்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று வாரிசுகள். மூத்தவள் தான் சிவசங்கரி. ஒன்டிக்கட்டையான சித்தப்பாவிற்கு செல்லப் பெண்.
முதல் நாள் இரவு… சங்கரியின் அறைக்கதவு தட்டப்பட்டது.
கோபமாக வந்து கதவைத் திறந்தவள், சித்தாப்பாவைப் பார்த்ததும் சற்று ஆசுவாசம் ஆனாள். அவளது முகத்தைப் பார்த்தவர்,
“என்னம்மா இவ்ளோ கோபம்?” என்க,
“ம்ம்ம்… இப்ப தான் அந்த அஸ்வின் வந்து ரம்பம் போட்டு போனான். மறுபடியும் அவன் தானோன்னு நெனச்சே சித்தப்பா.” என்றாள் சலிப்பாக.
நாளை காலை நிச்சயம் முடிக்கப் போகும் மாப்பிள்ளை. அவனைப் பற்றி பேசும்பொழுது ஒரு பூரிப்பு இல்லை. குதூகலம் இல்லை. சிறு சந்தோஷம் கூட முகம் காட்டவில்லை.
இவர்கள் காலையிலேயே வந்துவிட, மாப்பிள்ளை வீட்டார் சற்று முன் தான் வந்து சேர்ந்தனர். வந்தவர்களை வரவேற்று அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் சக்திவேல்.
சக்திவேலிற்கு பூர்வீகம் மதுரை வட்டம் பூசாரிபட்டி தான் என்றாலும், அவரது அப்பா தலைமுறையிலேயே சென்னையில் செட்டில் ஆனவர்கள். மாப்பிள்ளை வீட்டாரும் சென்னை தான்.
தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, மற்ற வேலைகளைப் பார்க்க சக்திவேல் சென்றுவிட, அஸ்வின் சற்றுமுன் இவளது அறையைத் தேடி வந்தான். மறுநாள் காலை பந்திக்கு சமையல் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களிடம், விசாரித்துக் கொண்டு வந்தான்.
அப்பொழுதுதான் நைட்டிக்கு மாறிவிட்டு படுக்கைக்குத் தயாரானாள். தம்பியும், தங்கையும் கல்லூரி தேர்வு காரணமாக, காலையில் தான் வருவதாக இருந்தது.
கதவைத் திறந்தவள், அஸ்வின் நிற்பதைப் பார்த்து, உள்ளே அழைப்பதா, வேண்டாமா என ஒருகணம் தயங்கி நிற்க,
“ஹாய் டார்லிங்! என்ன… உள்ள வான்னு கூட கூப்பிடாம அப்படியே நிக்கிற.” எனக் கேட்டுக் கொண்டே, பார்வையை மேலிருந்து கீழாக ஓட்டியவனை, உள்ளே அழைக்கலாமா, வேண்டாமா எனத்துளிர் விட்ட கொஞ்சநஞ்ச எண்ணத்தையும் வேரோடு, வெடுக்கெனப் பிடிங்கிப் போட்டாள்.
“அப்படி இல்ல அஸ்வின்… இது சென்னை மாதிரி இல்ல. ஊர்ல எல்லார் பார்வையும் விசேஷ வீட்ல தான் இருக்கும். நாளைக்கு விசேஷத்த வச்சுக்கிட்டு, நம்ம ரெண்டு பேரும் தனியா ரூம்ல உக்காந்து பேசறத, இங்க வேல பாத்திட்டு இருக்குறவங்க பாத்தா நல்லா இருக்காது.” என்று பளிச்செனக் கூறினாள்.
“இந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததால தான், நீயும் இப்படி இருக்க. சென்னையில இருந்தப்பவும், எங்கேஜ்மென்ட் தான் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களே… வெளியே எங்கேயாவது அவுட்டிங் போலாம்னாலும் வரமாட்டேன்ன. நல்ல வேள, என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் இன்வைட் பண்ணல. அவங்களுக்கெல்லாம் அங்கேயே பார்ட்டி கொடுத்துட்டே.” என்றான், கதவு நிலையை இருபுறமும் பிடித்துக் கொண்டு.
அவனது பேச்சு எரிச்சல் ஏற்படுத்த, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள். அவனும் எத்தனையோ முறை அவுட்டிங், டேட்டிங் என அழைத்துப் பார்த்தான். ஏதாவதொரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து விடுவாள்.
இந்த மாதிரி ஊர் என்றதும் கோபம் வந்தது.
அவள் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தாத்தா காலத்திலேயே சென்னைக்கு சென்று குடியேறியவர்கள்.
இவனுக்கு தான் இது பட்டிக்காடு. ஆனால் இவளுக்கு, சிறுவயதில் வருடாவருடம் ஆசையாக திருவிழா என்றாலும், விடுமுறை என்றாலும் அடுத்த நிமிடம் வந்து இறங்கும் ஊராயிற்றே. அத்தைகள் பிள்ளைகளோடும், அக்கம்பக்கத்துப் பிள்ளைகளோடும் எவ்வளவு சந்தோஷமாக கழிந்த நாட்கள் அவை. குடும்பம் பிரிந்த பிறகு தான் பள்ளி, கல்லூரி என காரணம் கூறி, எதற்குமே அழைத்து வரவில்லை. அப்படியொன்றும் எந்த வசதியும் இல்லாத வரப்பட்டிக்காடு கிடையாது. வளர்ந்த கிராமம் தான். ஆமாங்க… செல்ஃபோன் டவர்லாம் வந்திருச்சே. அப்படினா வளர்ந்த கிராமம் தானே. அவர்களது தாத்தா காலத்தில் வேண்டுமானால் இது அடிப்படை வசதிகூட இல்லாத கிராமமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத வளர்ச்சியடைந்த ஊர்.
இவனது மூன்று தலைமுறைகளுக்கு முன் தோண்டிப் பார்த்தாலும், இவனது பூர்வீகமும்… ஏதாவதொரு, ஆண்டிபட்டியோ, அரசபட்டியாகவோ தான் இருக்கும்.
சென்னை என்பதும் மிகமிகப்பெரிய கிராமம் தான். தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களின் கூட்டு கலவை அது. என்ன தான் பல தலைமுறைகள் கடந்து கோலோச்சுபவர்களாக இருந்தாலும், அவர்களிடமும் சொந்த ஊர் எது என்ற கேள்விக்கு, அடுத்த நொடி சென்னை என பதில் வராது. தயங்காமல் தமிழ்நாட்டின், ஒரு மூலைமுடுக்கு கிராமம் தான் பதிலாக வரும்.
“கார் ட்ரைவ் பண்ணிட்டு வந்ததுல டயர்டா தெரியறீங்க அஸ்வின். போய் தூங்குங்க. அப்ப தான் காலையில ஃபங்ஷன்ல ஃப்ரெஷ்ஷா இருப்பீங்க.” எனக் கூறி, அவனை கிளப்புவதில் கவனமானாள்.
“தெட்ஸ் ரைட் பேபி. என்னைய கெளம்புடான்னு சொல்ற… இதுதான் உங்கிட்ட எனக்குப் புடிச்சதே. நாளைக்கு எங்கேஜ்மென்ட், ஆனா என்னைய, உன்னோட ரூமுக்கு முன்னாடி கூட நிக்க விடமாட்டேங்கிற பாத்தியா. ஐ லைக் இட். தென் குட்நைட் அன்ட் ஸ்வீஈஈஈஈட் ட்ரீம்ஸ் பேபி.” என ஒரு மார்க்கமாகக் கூறிச் சென்றவனை, கொலைக்காண்டாக பார்த்து வைத்தாள்.
‘சங்கரி!!! என்னதிது?? ஒரு ஃபீலிங்ஸும் வரமாட்டேங்கிது. எப்படி காலம் தள்றது. அப்பாவுக்கு பயந்துகிட்டு கேட்டதுக்கெல்லாம் தலைய ஆட்டியாச்சு. விடிஞ்சா எங்கேஜ்மென்ட். இப்ப யோசிச்சு என்ன பண்றது.’ என ஆயாசமாக உணர்ந்தவளுக்கு, உரலுக்குள்ள தலையக் கொடுத்துட்டு உலக்கை வருதேன்னு பயந்த கதையாக இருந்தது.
அடுத்த கணம் மீண்டும் கதவு தட்டப்பட,
”மறுபடியுமா…” என அலுத்துக் கொண்டுதான் கதவைத் திறந்தாள்.
சித்தப்பாவைப் பார்த்தவள், ஆசுவாசமாக அவரை உள்ளே அழைக்க,
“என்னம்மா… வருங்கால மாப்பிள்ளைய மரியாதை இல்லாம பேசுற.” எனக் கேட்டுக் கொண்டே, உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தார். கால் சிறிது தள்ளாடியது.
“என்ன சித்தப்பா, பேச்சு கொழறுது. மாப்பிள்ளை தான் கல்யாணம்னா பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவாங்க. நீங்க என்னடான்னா அண்ணே பொண்ணு நிச்சயத்துக்கே கொண்டாடி இருக்கீங்க போலயே?” என, சித்தப்பன் கேட்டதற்கு பதில் கூறாமல், வேறு கேள்வி கேட்க,
“அத விடும்மா… சித்தப்பாவப் பத்திதான் தெரியும்ல? நாங்கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லு. மாப்புள்ளய புடிச்சுருக்கா? உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமா?” என மகளிடம் விருப்பம் கேட்க,
“ஏஞ்சித்தப்பா… இத்தன நாளா… வனவாசம் ஏதும் போயிருந்தீங்களா? ஒரே வீட்ல தான இருந்தோம். நாளைக்கி நிச்சயம். இப்ப வந்து கேக்குறீங்க? அப்பா பாத்து முடிச்ச சம்பந்தம் சித்தப்பா. யோசிக்காமலயா முடிவு பண்ணி இருப்பாரு?” -பதில் பட்டும் படாமல், சுற்றி வளைத்து வந்தாலும்… பிடிச்சிருக்கு என, பட்டென பதில் வரவில்லை.
“ஆமா… நல்லா பண்ணுவானே உங்க அப்பன். உங்க அப்பனுக்கும், எங்க அப்பனுக்கும் பெத்தபிள்ளைக மனசு எங்க தெரியும். காசு பணம், கௌரவம், சாதி இது மட்டும் தான் இவனுகளுக்குத் தெரியும்.” என்று அலுத்துக் கொண்டார்.
முத்துவேல் குடிமகனாகிவிட்டால், பேச்சில் மரியாதை தூள்பறக்கும்.
“உங்க அப்பன் எதப் பாத்துருப்பான். அவங்க காலேஜுக்கும், நம்ம ஸ்கூலுக்கும் பொருத்தம் பாத்துருப்பான். அவனுக காசுபணத்தையும், நம்ம காசு பணத்தையும் எடை போட்டு பார்த்திருப்பான்.”
“என்ன சித்தப்பா பண்ணமுடியும். வீட்ல அவர் வச்சது தான சட்டம். மறுத்துப் பேச முடியுமா?”
“அப்ப… உங்க அப்பனுக்கு பயந்துகிட்டு தான் சம்மதிச்சியா?” எனக் கேட்க, பதில் கூறாமல் அமைதியாக தரையை வெறித்து நின்றாள் சிவசங்கரி.
திறக்க முடியாத மனக்கதவிற்கு, சில நேரங்களில் மௌனத்தையே காவலாக வைக்க வேண்டியிருக்கிறது.
சிறுவயதில் இருந்தே, தம்பி, தங்கையைப் போல, மற்றவர்களிடம் துடுக்காகப் பேசி பழக்கமில்லாதவள் சங்கரி. அவள் வாய்த்துடுக்காகப் பேசி பலவருடங்கள் ஆகிவிட்டது.
கண்டிப்பு காட்டும் தந்தையிடம் மரியாதை தாண்டி பயம். அம்மாவிடமும் மனம் விட்டுப் பேசியதில்லை. தந்தை எது சொன்னாலும் மறுத்துப் பேசி பழக்கமில்லை.
அண்ணன் மகள் முகத்தையே அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்த முத்துவேல்,
“குட்டிம்மா இங்க வா!” என அழைத்து, அருகில் அமர வைத்தார்.
“சித்தப்பாவ புடிக்குமா?” என்றார் வாஞ்சையாக.
“எனக்கு உங்கள மட்டும் தான் பிடிக்கும் சித்தப்பு. ஆனா நீங்க பண்ற இந்த ஒரு காரியம் மட்டும் தான் பிடிக்க மாட்டேங்குது. உங்க ஹெல்த்தையும் பாக்கணும்ல. டாக்டர் எத்தனதடவ கொறச்சுக்க சொல்லிட்டாரு.” என முகம் சுழித்தவளிடம்,
“அதவிடும்மா… எனக்கு என்ன… குடும்பமா, குட்டியா?” எனக் கேட்க,
“என்ன சித்தப்பு? அப்ப நாங்க எல்லாம் யாரு? இப்ப என்ன வேணும் உங்களுக்கு. ரொம்ப எமோஷனா இருக்க மாதிரி இருக்கு. ஊருக்கு வரவும் பழைய ஞாபகம் எல்லாம் வருதா?” என கரிசனமாகக் கேட்க,
“ஏன்… உனக்கு வரலியா… இல்ல சின்னபுள்ளயா இருந்ததால எல்லாம் மறந்துருச்சா?” எனக் கேட்க,
‘எப்படி மறக்கும்? நித்தமும் நினைவுச் சின்னம் தான் கண்ணில் படுகிறதே. மறக்க நினைத்தாலும், மனம் மருகி நிற்கிறதே. தார்க்குச்சியாய் சுருக்கென தைக்கிறதே.
கோடை விடுமுறையில், சித்திரை மாத கத்திரி வெயிலிலும், வெயில், புழுதி எனப்பாராமல், ஓடியாடி விளையாண்ட நினைவுகளெல்லாம் சில்லென குளிர்ச்சியூட்டும் பசுமை நினைவுகளாயிற்றே.’ என உள்ளுக்குள் குமைந்தவள்,
“வேணும்னா ஆளுக்கொரு சைக்கிள எடுத்துக்கிட்டு, ஞாபகம் வருதே… ஞாபகம் வருதேன்னு… காடு கரையெல்லாம் சுத்திட்டு வருவோமா?” என சித்தப்பனைக் கேலி பேசி, தன் மனதை மாற்றினாள்.
“நான் ஒன்னு சொல்லுவே. சித்தப்பா மேல நம்பிக்கை வச்சு, நான் சொல்றத கேப்பியா?”
“பீடிகை எல்லாம் பெருசா இருக்கே. நம்பி வாக்கு கொடுக்கலாமா?”
“முத்துவேலை நம்பினோர் கைவிடப்படார். எல்லாம் உன் நல்லதுக்கு தான். உன் நல்லது மட்டும் இல்ல. நம்ம பழைய மாதிரி சொந்த பந்தங்களோட, கலகலன்னு இருக்கலாம். இந்த மூட்டப்பூச்சி குடும்பத்தோட இல்ல. புளியங்கொட்டைக்கி சனிமூல(ஈசான்ய மூலை) தெரியாத பயலுக எல்லாம் எங்க வீட்ல உக்காந்து திங்கிறானுக. பொறந்த புள்ளைக உரிமையா வரமுடியல.” எனக் கூற, யாரைக் கூறுகிறார் எனப் புரிந்தது சிவசங்கரிக்கும்.
அவளது தாய்வழி சொந்தங்களைத்தான் கூறுகிறார் எனத் தெரியும். எனினும் அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாதே. சித்தப்பனுக்கு, போதை ஏறிவிட்டால் சகட்டுமேனிக்கு அனைவரையும் போட்டுத் தாக்குவார் எனத் தெரியும்.
சித்தப்பன் கூறியதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் சிவசங்கரி.
“ஏம்மா, இப்படி சிரிக்கிற?”
“இல்ல… உங்களுக்கு மட்டும் புளியங்கொட்டைக்கி ஈசான்ய மூலை எதுன்னு தெரியுமா சித்தப்பு. ஊருக்கு வந்துட்டாலே ஊர்ப்பேச்சும் கூடவே வந்துருது.” எனக்கேட்டவளோடு சேர்ந்து சித்தப்பனும் வாய்விட்டு சிரித்தார்.
“இவங்க மூட்டப்பூச்சி குடும்பம்னா, உங்க உடன்பிறப்புகள் மட்டும் நல்ல குடும்பமோ? அவங்கள யாரு ஒதுங்கி நிக்கச் சொன்னது. உரிமையா பொறந்தவீடுன்னு வரவேண்டியது தான?” என சீண்டிவிட,
“அவங்க எல்லாம் ரோஷக்காரங்க. ச்ச்சீ…ன்னு சொன்ன வீட்ல பச்சத்தண்ணிகூட குடிக்கு மாட்டாங்க. இவிங்கள மாதிரி… சோறு கண்ட எடமே சொர்க்கம்னு பாயப்போடுறவங்க இல்ல.” எனக் கோபமாக கூறியவர்,
“அப்படி உரிமையாக் கேட்டு வந்தா… என்னடா பண்ணுவ சிவா.” என சித்தப்பன் நயந்து வாஞ்சையாக கேட்டார்.
அந்த அழைப்பு அவளை என்னவோ செய்தது. சுறுசுறுவென மனதிற்குள் மத்தாப்பாய் ஒரு பரபரப்பு. சித்தப்பன் கேட்டது போல ஊருக்கு வந்ததில் இருந்து அவளுக்கும் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறதே. சில விஷயங்கள் பசுமரத்தாணி போல நச்சென பதிந்துள்ளதே.
”டேய் சிவா!!!’ குரல் உள்ளிருந்து அழைத்தது.
‘என்னைய அப்டி கூப்டாதே. எனக்குப் பிடிக்காது.’
‘நா… அப்படித்தான் கூப்புடுவே… என்னடி பண்ணுவ?’
“எனக்கு டி போட்டுப் பேசுனா பிடிக்காது. அப்ப நானும் உன்னைய நித்தியானு தான் கூப்டுவே.”
“ஏய்… அப்படி கூப்பிடாத! உனக்கு தான் டி சொன்னா கோவம் வருதுல்ல. அதனாலதான்… டா சொன்னே.”
“அப்ப நானும் உன்னய இனிமேட்டுக்கு நித்தியானு தான் கூப்டுவே…” எனக் கூறிவிட்டு,
“நித்யா… நித்யா… நித்யா…” என கத்திக் கொண்டே ஓட, மற்ற பிள்ளைகளும் அதேபோல் கத்திக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்து ஓட, இவனோ அவர்களை துரத்திக் கொண்டு ஓடினான். தேன்மிட்டாயின் சக்கரைப்பாகாய் மனம் இளகி நிற்க… தித்திப்பாய் சிறு புன்னகை இதழில்.
கவனத்தை கடந்த காலத்தில் வைத்திருந்தவளை, சித்தப்பனின் குரல் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
“என்னடாம்மா அமைதி ஆயிட்ட?”
“நான் என்ன சித்தப்பு பண்ணமுடியும்? நாளையில இருந்து நானும் இன்னொரு குடும்பத்துக்கு பாத்தியம் ஆகப்போற பொண்ணு. உங்க அக்கா தங்கச்சிக நிலை தான எனக்கும். புருஷவீட்டு சாமிக்கும் ஆடணும். பொறந்த வீட்டு சாமிக்கும் ஆடணும். கல்யாணம் ஆகிட்டா நானும் இந்த வீட்டுக்கு விருந்தாளி தான சித்தப்பா. என்ன… ரத்த சொந்தங்கற லிஸ்ட்டுல வருவே. எம்பிள்ளைக… நெருங்கின சொந்தம் லிஸ்ட்டுல வருவாங்க. அடுத்த தலைமுறை… ஒன்னுவிட்ட சொந்தம் லிஸ்ட்டுல வந்துரும். அடுத்து… தூரத்து சொந்தம் லிஸ்ட்டுக்குப் போயிரும்.” எனக் கூறியவள் பெருமூச்சு விட்டாள்.
தவளைக்கு மட்டுமல்ல, பொம்பளைக்கும் இரண்டு வாழ்க்கை தானே. இரண்டு வீடு. இரண்டு சாமி என இரட்டை வாழ்க்கை. எதையும் விட்டுக் கொடுக்க முடியாமல், சில சமயங்களில் ஒன்று தண்ணிக்கு இழுக்கும். ஒன்று தரைக்கு இழுக்கும். பெண்களுக்கு புகுந்த வீடா, பிறந்தவீடா என அல்லல் படும் திரிசங்கு சொர்க்கம் தான் எப்பொழுதும்.
“என்னமோ உங்க அப்பன் எம்மகளுக்கு வாயே பேசத் தெரியாதுன்னு சொல்றான். நீ பெரிய பேச்செல்லாம் பேசுற.”
“என்னமோ சொல்ல வந்தீங்களே… அத மொதல்ல சொல்லுங்க சித்தப்பு. யாருக்கு நல்லதுன்னு பாப்போம்.” எனப் பேச்சை மாற்றிவிட,
“நாளைக்கி விசேஷத்துல எது நடந்தாலும் தைரியமா முடிவு பண்ணனும். அப்பா, ஆட்டுக்குட்டினு பயந்துட்டு நிக்கக் கூடாது. புரியுதா?”
“விடுகதையே போடாம விடைய சொல்லுங்கற மாதிரி இருக்கு நீங்க சொல்றது. தலையும் புரியல, வாலும் புரியல.”
“அதெல்லாம் நாளைக்கி உனக்கே தெரியும். நீ எடுக்குற முடிவுலதான், நம்ம சொந்த பந்தம் ஒன்னு சேர்றதே இருக்கு.” என அண்ணன் மகளிடம் பேசிக்கொண்டிருக்க,
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை – நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை…
என பாடல் வரிகள் ரிங்டோனாக ஒலித்தது.
எடுத்துப் பார்த்த முத்துவேல், “குட்டிம்மா… நீ தூங்குடா ம்மா. எனக்கு முக்கியமான ஃபோன் வருது. இன்னும் கொஞ்சம் வேல வேற கெடக்கு.” என மகளிடம் கூறிக் கொண்டு எழுந்தவர்,
ஃபோனில் அழைப்பை ஏற்று,
“சொல்லுடா மாப்ள!!” என்றவாறே வெளியேறினார்.
இரவு நடந்ததை யோசித்துக் கொண்டே சித்தப்பாவைப் பார்க்க, அவரோ கண்களை மூடி தைரியம் காட்டினார்.
இவளது அமைதியைப் பார்த்து, சக்திவேலின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.
திருமணம் என்பது இரு மணங்களின் விழா. குடும்பங்களின் விழா மட்டுமல்ல, உறவுகள் இணையும் விழா. புது உறவுகள் உருவாகும் விழா.
இங்கு இவளோ, ‘எப்படியும் தனக்கு இதில் விருப்பமில்லை. கல்யாணம் பண்ணி கடனே என வாழ்வதற்கு, வாழ்க்கையில் துணிந்து ஒரு முடிவை எடுத்தால் தான் என்ன? எல்லாவற்றிலும் அப்பா முடிவிற்கே தலையாட்டி விட்டோம். ஆரம்பத்தில் பிரச்சினை வெடிக்கத்தான் செய்யும். இப்படியாவது சொந்தங்கள் ஒன்று கூடட்டுமே.’ என இவள் யோசித்துக் கொண்டிருக்க,
‘சொந்தத்திற்காக மட்டுமா? இல்ல… சொந்த விருப்பத்திற்காகவுமா?’ என மனசாட்சி கேள்வி கேட்க, அதைத் தலையில் தட்டி உள்ளே அனுப்பினாள்.
“அதுவே சின்னப்புள்ள. அது கிட்ட கேட்டா என்ன பதில் சொல்லும். இவன் என்ன படிச்சுருக்கான், என்ன வேல பாக்குறான்னு எதுவும் தெரியாம எப்படி பொண்ணு கொடுக்க முடியும்? நான் பாத்த மாப்பிள்ள, எம்பிள்ளைக்கி எல்லா விதத்திலும் பொருத்தமா இருப்பாரு.” என சக்திவேல் சபையோரைப் பார்த்து கேட்க,
“ஏம்ப்பா சக்திவேலு… என்னமோ வெளி ஆளக் கேட்டமாதிரி கேக்குற. ஒன்னுக்கு ரெண்டு சம்பந்தம் அவங்க வீட்ல தான் பண்ணி இருக்கீங்க. உங்க அத்தையையும் அங்கதான் கொடுத்திருக்கு. உங்க தங்கச்சியையும் அங்கதானே கொடுத்திருக்கு. ஒரு கெட்ட நேரம் வந்து குடும்பம் பிரிஞ்சதுன்னா, ஒரு நல்ல நேரத்துல ஒன்னு சேரணும் சக்திவேலு.” என்றனர்.
“அதெல்லாம் சரித்தாங்க. எங்க அம்மாவே இந்த ஊர்ல இருக்க முடியாதுன்னு தான், அந்தக்காலத்துலயே சிட்டிக்கு போயிட்டாங்க. எம்புள்ள வந்து எப்படி இந்தமாதிரி ஒரு ஊர்ல போயி இருக்கும்?” என கேட்டார்.
அனைவராலும் பெரியவர் என அழைக்கப்படும், சக்திவேலின் தந்தை… அத்தை மகளை இதே மாதிரி திருமணத்தன்று மரித்துப் பெண் கேட்க… அவரது அத்தை மகளான திலகவதியோ பட்டணத்தில் வளர்ந்தவர். அந்தக் காலத்திலேயே கல்லூரி சென்று பியூசி முடித்தவர். (இப்ப இந்த டிகிரியே இல்ல. மூன்றாம் தலைமுறை ஆட்களெல்லாம் பியூசி படித்திருப்பர்).
தன்னால் கிராமத்தில் வந்து குப்பை கொட்ட முடியாது எனக் கூறிவிட, அரசாங்க உத்யோகம் வாங்கிக்கொண்டு பட்டணத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்ற உத்திரவாதத்தோடு தான் திருமணம் முடித்தார். அதன் பிரகாரமே, தந்தையை சரிக்கட்டி, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து சார்பதிவாளர் (சப்ரெஜிஸ்தரர்) பணியோடு சென்னையில் செட்டில் ஆனவர்… அனைவராலும் பெரியவர் என அழைக்கப்படும் சக்திவேல் மற்றும் முத்துவேலின் தந்தை சுப்பையா.
அந்த சமயத்தில் நிலங்களின் விலை, தரைமட்டத்தில் இருந்த காலம். மண்ணுல போட்டதும், பொன்னுல போட்டதும் என்னைக்கும் வீணாப்போகாது என்பதை நன்கு அறிந்த சுப்பையா, வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ வழிபாட்டிற்கு என வரும் கிராமத்தில் நிலபுலன்கள் எதற்கு, யாரு வந்து விவசாயம் பாக்குறது, என எண்ணியவர், கிராமத்து சொத்தை தம்பி சின்னவருக்கே விற்றுவிட்டு, சென்னையில் நிலங்களை வாங்கிப் போட்டார்.
ரியல் எஸ்டேட் பிஸினஸ் உச்சிதொட்ட நேரம்… நிலங்களை ப்ளாட் போட, அத்தனையும் ஒன்றுக்கு பலமடங்காக லாபம் கொழித்தது. அவரின் மறைவிற்கு பிறகு, சக்திவேலும், முத்துவேலும் தலையெடுக்க, ரியல் எஸ்டேட்டும், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷனும் இவர்களுக்கு நன்றாகவே கல்லா கட்டியது.
இருக்கும் பணத்தை என்ன செய்வதென்று, தொடங்கப்பட்டது தான் பள்ளி நிர்வாகம். தற்பொழுது ஒன்றுக்கு இரண்டு பள்ளிகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
“மாமா… ஏதோ நானும் கொஞ்சம் படிச்சுருக்கே மாமா.” என ஈஸ்வரன் கூற,
“என்னத்த பெருசா படுச்சிருக்க போற?” என மாமன் நக்கலாகக் கேட்க,
“ஏதோ… உங்க சொத்தெல்லாம் கணக்கு வழக்கு பாக்குற, கணக்குப் பிள்ளை வேலை பாக்குற அளவுக்கு படிச்சிருக்கே மாமா.” என்றான் சிரித்துக் கொண்டே.
“இவன் உங்க சொத்தெல்லாம் கணக்குப் போட்டுதான், வந்திருப்பான் போல சக்திவேல்.” என்றார் ராஜசேகர். அத்தனையையும் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு, சம்பந்தி என்ற அழைப்பு மருவி சக்திவேல் ஆகிவிட்டது.
“மாமா சொத்து மட்டும் இல்ல சார், உங்க சொத்து கணக்கு வழக்கும் எல்லாம் தெரியும். கருப்புல எவ்வளவு, வெள்ளைல எவ்வளவுனு கலர்கலரா கணிச்சு வச்சுருக்கே.” என்றான் அவரிடமும் சிரித்துக் கொண்டே.
பேச்சு வளர்ந்து கொண்டு இருக்க… “கொஞ்சம் பேசாம இருங்கப்பா. புள்ளைக்கி கல்யாணம் கட்டிக்கொடுக்குற வயசு வந்துருச்சுல்ல. அப்ப… அந்தப்புள்ளயே முடிவு சொல்லட்டும்.” என ஊரார் அமைதிப்படுத்த,
அதுவரை அமைதியாக நின்ற சிவசங்கரி,
“சம்மதம்.” என ஒற்றைச் சொல்லில் தனது சம்மதத்தை அறிவித்தவள், சபையோரை நிமிர்ந்து பார்த்தாள்… தந்தை முகம் பார்க்கும் தைரியம் இன்றி.
“இதுக்கு நான் ஒத்துக்க முடியாது.” என மாப்பிள்ளை துள்ளிக்கொண்டு வந்தான்.
(அடுத்த பதிவு வரும் வரைக்கும் புளியங்கொட்டைக்கி எது ஈசான்ய மூலையா இருக்கும்னு யோசிச்சிட்டிருங்க மக்களே. ஏன்னா எனக்கும் தெரியாது. சொலவம் கேள்விப்பட்டதோட சரி. தெரிஞ்சவங்க சொல்லுங்க.🙈)