தொலைந்தேன் 05💜

தொலைந்தேன் 05💜
ரிஷி அமரவும், மூச்சு வாங்கியவாறு அவனருகே அமர்ந்த சனா களைப்பில் அவன் தோளில் சாய்ந்துக்கொள்ள, அவனோ திகைத்துப்போய் அவளைப் பார்த்தான்.
ஏதோ பல நாட்கள் பழகியது போன்று அவள் நடந்துக்கொள்ளும் விதத்தில் ரிஷிக்குதான் மனம் தள்ளாடியது. இதுவரை அவன் துறையிலும் சரி அவன் கடந்து வந்த பாதையிலும் சரி பல பெண்களை சந்தித்திருக்கிறான். யாரும் அவனை நெருங்கியதும் இல்லை, அவன் நெருங்க விட்டதுமில்லை. ஆனால் இவள்??
தன் தோளில் சாய்ந்திருந்தவளையே விழி அகலாமல் ரிஷி பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அவனின் குழப்பங்களை அறியாது நிம்மதியாக விழிகளை மூடியிருந்தாள். அவளை விலக்கிவிடவும் தோன்றவில்லை அவனுக்கு. கூடவே, அவன் மனம் மட்டுமே அறிந்த அந்த ஒரு பயமும்.
எத்தனை நிமிடங்கள் அவளையே பார்த்திருந்தானோ, மெல்ல விழிகளைத் திறந்த சனா அவன் தோளிலிருந்தவாறே தலையை நிமிர்த்தி அவனை நோக்க, அவனோ இன்னும் விரிந்த விழிகளோடு எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
அவளுடைய இதழுக்கும் அவனிதழுக்கும் நூலிடைவெளியே.
“இன்னும் தூங்கல்லையா நீ?” அவள் ஹஸ்கி குரலில் கேட்க, எங்கு தலையசைத்தால் அவளிதழோடு ஒட்டிவிட்டுமோ என்று பயந்து மெல்ல, “இல்லை.” என்றான் அவளிதழை பார்த்துக்கொண்டே. இத்தனை மன தடுமாற்றத்தை அவன் உணர்ந்ததே இல்லை.
அதுவும் அவளை பார்த்து ஒரு நாள் கூட முழுதாக முடியாத நிலையில் ஏன் இத்தனை மனத் தடுமாற்றம், அவ்வளவு பலவீனமானவா நான்? அதுவும், வாழ்க்கையில் பல அடிகளை பட்டும் ஏன் மீண்டும் இந்த உணர்வு? என்ற பல கேள்விகள் அவனுக்குள். ஆனாலும், ரிஷியின் விழிகளோ அவள் விழிகளையும் அவளிதழையும் மாறி மாறிப் பார்த்திருந்தன.
அவளும் அவன் விழிகளைதான் பார்த்திருந்தாள். ஆனாலும், அவள் மனதில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை போலும்.
ஆனால், உள்ளுக்குள் போராட்டம் செய்துக்கொண்டிருந்தவனோ அவள் மீண்டும் விழிகளை மூடிய கணத்தில் தன்னை மீறி அவளிதழை நெருங்க, சட்டென்று அவனிடமிருந்து விலகியமர்ந்துக்கொண்டாள் சனா. அவனின் முகத்தை அவள் கவனிக்கவேயில்லை.
அவள் பாட்டிற்கு எழுந்து டென்ட்டுக்குள் சென்று படுத்துக்கொள்ள, நெஞ்சை நீவிவிட்டுக்கொண்ட ரிஷிக்கு இப்போதுதான் போன மூச்சு திரும்பி வந்த உணர்வு!
‘என்ன காரியம் பண்ண போன ரிஷி? ச்சே!’ தன்னைத்தானே கடிந்துக்கொண்டவாறு அப்படியே அசையாது தரையை வெறித்து அமர்ந்திருந்தான் அவன்.
அன்றே சூரியன் மறையும் முன்னே தத்தமது பொருட்களை எடுத்துக்கொண்டு மலையிலிருந்து இருவருமே இறங்கி மலையடிவாரத்துக்கு வந்திருக்க, தன் முகத்தை மறைக்குமளவிற்கான கண்ணாடியையும் தொப்பியையும் அணிந்தவாறு வெறுங்கையை வீசிக்கொண்டு இறங்கி வந்தவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சனா.
அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் தோளிலும் கையிலுமிருந்த பெரிய பைகளைப் பார்த்தவள், “இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கியே, கொஞ்சமாச்சும் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? அங்கயிருந்து அத்தனையையும் ஒத்த ஆளா தூக்கிட்டு வராளே, ஹெல்ப் பண்ணுவோன்னு எல்லாம் தோனாது. நீயெல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா?” என்று படபடவென பொரிய ஆரம்பிக்க, “அது உன்னோட திங்க்ஸ், நான் எதுக்கு அதை தூக்கி சுமக்கணும்?” என்றான் அவனோ அவளை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்தவாறு.
“இப்படி நான் யோசிச்சிருந்தேனா, நீ இப்போ என் முன்னாடி பேசிக்கிட்டிருந்திருக்க மாட்ட.” அவளும் பதிலுக்குச் சொல்ல, அதில் அவளை உக்கிரமாகப் பார்த்து, “ஒருதடவை காப்பாத்திட்டு எத்தனை முறைதான் சொல்லிக்காட்டுவ! இதுக்கு நான் விழுந்தே இருக்கலாம்.” என்றான் கோபமாக.
“அய்யடா! இப்போவும் ஒன்னும் குறைஞ்சு போகல. போ, போய் விழுந்துரு.” என்ற சனாவின் கேலியான பதிலில், வேகமாக அவளை நெருங்கி, “ரொம்ப ஓவராதான் பேசுற, பொண்ணுன்னா அடக்கம் ஒடுக்கம்னு ஒன்னு இருக்கணும். கொஞ்சமாச்சும் அது இருக்கா உனக்கு? எப்போ பாரு என்கிட்ட முட்டிட்டுடே நிக்குற?” என்று ரிஷி மூச்சுகாற்று படும் தூரத்தில் நின்றுக்கொண்டு கடுப்பாகச் சொல்ல, “நான் எல்லாம் பொண்ணே இல்லைடா, போதுமா?” என்றாள் அவளும் அலட்சியமாக.
“டாவா?” என்று பற்களைக் கடித்தவன், “ஆமாடீ நீயெல்லாம் பொண்ணே இல்லை. சரியான அரக்கி!” என்று அவன் கடுகடுக்க, “அரக்கியா?” என்று பொங்கியேவிட்டாள் சனா.
சரியாக, அவள் பின்னே எதேர்ச்சையாகப் பார்த்தவனின் விழிகளும் இதழ்களும் விரிய, “மை கார்.” என்றான் சிரிப்போடு.
சனாவும் திரும்பிப் பார்க்க, ரிஷியொ வேகமாக தன் வாகனத்தை நோக்கி ஓடி, “அப்பாடா! அப்படியே இருக்கு.” என்று பெருமூச்சுவிட்டபடிச் சொல்ல, அவனையே பார்த்திருந்தவளுக்கு காதில் விழுந்தது இரண்டு வாகனங்களின் சத்தம்.
வேகமாக ரிஷியை பிடித்திழுத்தவள், “அவனுங்க வந்துட்டானுங்க.” என்றபடி அங்கிருந்த மரத்திற்குப் பின்னால் ஒளிந்துக்கொள்ள, அவள் சொன்னபடி வந்த இரண்டு லோரிகள் சரியாக ரிஷியின் காரருகே நின்றுக்கொண்டன.
அதிலிருந்து இறங்கிக்கொண்ட சில பேர், காரைப் பார்த்துவிட்டு சுற்றிமுற்றி விழிகளைச் சுழலவிட்டுத் தேட, அதில் ஒருவனோ காரை தட்டுவதும், கண்ணாடி வழியாக உள்ளே யார் இருக்கிறார்களென பார்ப்பதுமாக இருக்க, “உன்னைதான் தேடுறாங்க போல!” என்றாள் சனா அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே.
“என் கார்ல சின்ன ஸ்க்ரேட்ச் விழுந்தாலும் அவனுங்க செத்தானுங்க.” என்று ரிஷி பற்களைக் கடிக்க, வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டு, “சின்ன ஸ்க்ரேட்ச்சா? சின்னபுள்ளதனமா பேசிக்கிட்டு இருக்க, அவனுங்க கையில கிடைச்சிருச்சுல்ல, கார் முழுசா உனக்கு கிடைச்சாலே பெரிய விஷயம்.” என்றாள் அவள்.
அவனோ அவளை முறைக்க, “டப்பா காருக்கு இம்புட்டு சீனா?” வேண்டுமென்றே சனா அவனை தீண்ட, “அடிங்க! என் காரோட வெல்யூ தெரியுமா உனக்கு? உன் கோளாறுபுடிச்ச கேமரான்னு நினைச்சியா?” என்று பொங்கி தன்னை மீறி கத்த ஆரம்பித்துவிட்டான் ரிஷி.
“என் டோராவ பத்தி ஏதாச்சும் பேசின அம்புட்டுதான், வெளுத்துடுவேன் உன்னை!” அவளும் பதிலுக்கு எகிற, “அப்படிதான்டீ பேசுவேன், என்ன பண்ணுவ நீ?” என்று ரிஷியும் எகிற என அங்கு இருவருக்குமிடையே ஒரு போரே மூண்டுவிட்டது.
இருவரும் மாறி மாறி கத்திக்கொண்டிருக்க, சரியாக “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செருமல் சத்தம். அதிர்ந்தவர்கள் தம் சண்டையை நிறுத்தி, அதே அதிர்ந்த முகத்தொடு எச்சிலை விழுங்கிக்கொண்டு மெல்ல திரும்பிப் பார்க்க, அங்கோ மண்ணை திருடும் அந்தக் கும்பல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்றிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் அந்த நபர்களின் பார்வையில் இருவருக்குமே தூக்கி வாரிப்போட்டது.
“ஹிஹிஹி… நைஸ் டூ மீட் யூ.” சனா அசடுவழிந்தவாறுச் சொல்ல, “டேய் என்னடா பார்த்துக்கிட்டு இருக்க, போலிஸ்ல நம்மள போட்டுக் கொடுக்குறதுக்கு முன்னாடி அதுங்க இரண்டையும் பிடிச்சு கட்டி வைங்கடா!” என்று ஒருவன் ஹிந்தியில் சொல்லிக் கத்த, சனாவோ மொழிப் புரியாது பெக்கபெக்கவென முழித்தாள் என்றால், சொன்னதைப் புரிந்துக்கொண்ட ரிஷி அதிர்ந்து விழித்தான்.
இருவர் சனாவை நோக்கி வேகமாக நகர, அதில் பயந்தவள், “என்னடா பார்த்துக்கிட்டு இருக்க, ஓடு வேது!” என்றவாறு அங்கிருந்து ஓடப் போக, ஆனால் அவளுக்கு பயிற்சி பத்தவில்லை போலும்!
அவளின் இரு முழங்கைகளையும் அந்த இருவர் பிடித்துக்கொள்ள, ரிஷியோ அசையாது அப்படியே நின்றிருந்தான். “டேய் என்னை விடுங்கடா, அவன பத்தி உங்களுக்கு தெரியாது. அவனுக்கு ஒன்னுன்னா தழிழ்நாடே கொதிக்கும். அவனை காப்பாத்தின எனக்கு ஒன்னுன்னா இந்தியாவே பொங்கும். விடுங்கடா என்னை!” கைக்கால்களை உதறிக்கொண்டு கத்திக்கொண்டிருந்தவள் அப்போதுதான் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றிருந்த ரிஷியைப் பார்த்து, “அடப்பாவி! உன்னை காப்பாதினதுக்கு இதுதான் நீ பண்ற கைமாறா?” என்று பாவமாகக் கேட்டாள்.
அவனும் அந்த நபர்களையும் சனாவையும் மாறி மாறிப் பார்த்தவன், தான் அணிந்திருந்த கண்ணாடியையும் தொப்பியையும் கழற்றி, “அது… அது வந்து… நாங்க உங்கள பத்தி எங்கேயும் சொல்ல மாட்டோம். எங்க இடத்துல கொண்டு போய் எங்கள சேர்த்துடுங்க, அது போதும்.” என்று ஹிந்தியில் தயக்கமாகச் சொல்லி முடிக்க, அங்கிருந்தவர்களோ அவனை திகைத்து நோக்கினர்.
“அரே இது.. இது அந்த சாருதானே! பாட்டு பாடுவாரே…” என்று கேட்டு அவர்களில் ஒருவன் அதிர்ந்துப் பார்க்க, மற்றவர்களும் அதே ஆச்சரியத்தோடு தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு, “நீங்…நீங்க ரிஷி சாருதானே?” என்று அதிர்ந்தவாறுக் கேட்க, அவர்களின் பாவனையில் புரியாது விழித்தவன், மெல்ல தலையை அசைத்தான்.
அவ்வளவுதான். அவனை சுற்றி ஆரவாரமே செய்துவிட்டனர் அவர்கள். தமிழ் பாடல்களில் மட்டுமன்றி ஹிந்தி திரைப்பாடல்கள், ஆல்பம் பாடல்களில் தற்போது முண்ணனியில் இருப்பவனை அவர்களுக்கு தெரியாமல் போகுமா என்ன?
அதுவும், இவற்றையெல்லாம் விட ரிஷி கொடுத்திருக்கும் நன்கொடைகள் அப்படி! மாதம் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை பாடசாலைகளுக்கு, வருமானத்தில் அடி மட்டத்திலிருப்பவர்களுக்கு அவன் வழங்கியிருக்க, யாராலும் அவனை மறக்கவே முடியாது.
அதுவும், இரண்டு நாட்கள் ரிஷியை தொடர்புக்கொள்ள முடியாததால் ராகவன் கொடுத்த புகாரில் தெரியாதவர்கள் கூட எல்லா வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கிலிருந்த ரிஷியை அறிந்திருப்பர்.
“சார், என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு உங்க பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். நேர்ல மட்டும் உங்கள பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”
“என் தங்கச்சி படிக்குற ஸ்கூலுக்கு நீங்க ஃபன்ட் கொடுத்திருக்கீங்கன்னு சொன்னா. எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. உங்கள நேர்ல பார்ப்போம்னு நினைச்சும் பார்க்கல.”
ஒவ்வொருவரும் உணர்ச்சி வசப்பட்டுப் பேச, “தேங்க்ஸ்.” தயக்கத்துடன் கூடிய புன்னகையோடுச் சொன்னவன், ஓரக்கண்ணால் சனாவை பார்த்து கெத்தாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அவளோ நடப்பது புரிந்து ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டாள்.
“சார், நீங்க எப்படி இங்க? டீவி நியூஸ்ல உங்கள பத்திதான் பேசிக்கிட்டு இருக்காங்க. உங்கள கடத்திட்டாங்கன்னு ரொம்ப பரபரப்பா இருக்கு.” என்று அதிலொருவன் சொல்ல, ரிஷிக்கோ தன் குருவின் வேலைதான் என்று நன்றாகவே புரிந்துப் போனது.
“நான் சீக்கிரம் போயாகணும்.” அவன் சொல்ல, “உங்க இடத்தை மட்டும் சொல்லுங்க, நாங்க போய் விடுறோம். ஆனா, ஒரு கோரிக்கை சார், ஒரு ஃபோட்டோ…” என்றொருவன் தலையை சொரிந்தவாறு இழுக்க, “யாஹ் ஷூவர்.” என்ற ரிஷி, அவர்களின் அலைப்பேசியை வாங்கி செஃல்பி வைத்து, “உனக்கு வேணாமா என் கூட ஃபோட்டோ?” என்று சனாவிடம் கேலியாகக் கேட்டான்.
அவளோ, “தேவையில்லை.”என வெடக்கென்று சொல்லிவிட்டு நாக்கை துருத்தி பழிப்புக் காட்ட, “தட்ஸ் ஓகே.” என்ற ரிஷி, “சீஸ்…” என்று சொல்லி சிரித்துக்கொண்டு எல்லாருடனும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுக்க, அந்த புகைப்படத்தில் சற்று மங்கலாக சனாவின் முகமும் பதிந்துக்கொண்டது.
அடுத்த சில நொடிகளில் அவர்கள் வந்த ஒரு லோரிக்கு பின்னால் ரிஷியும் சனாவும் ஏறிக்கொள்ள, “டேய், நான் வர்ற வரைக்கும் வேலைய கவனிங்க!” என்றுவிட்டு வண்டியை செலுத்தினான் ஒருவன்.
“பேசாம நாமளும் செலப்ரிட்டி ஆகிடலாமா? ரொம்பதான் பண்றானுங்க.” அவள் சலித்துக்கொள்ள, “நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!” அவளைப்போலவே சொல்லிச் சிரித்தான் ரிஷி.
இதில் சனாவுக்குதான் கோபம் உச்சத்திற்கு எகிறியது. அவனுடைய ஹோட்டலுக்கு போய் சேரும் வரை தூங்குவது போல் பாவனை செய்தவள், அவனிடத்தில் வாயே திறக்கவில்லை.
அடுத்த சில மணித்தியாலங்களில் அந்த பெரிய ஹோட்டலின் முன் லோரியை அந்த ஓட்டுனர் நிறுத்த, “ரொம்ப தேங்க்ஸ் பையா.” என்றவாறு லோரியை விட்டு இறங்கிய ரிஷி, அவருக்கு கைக்கொடுக்க, “ஹிஹிஹி… பரவாயில்லை சாரு.” என்று அசடுவழிந்துக்கொண்டே ரிஷியுடன் கைக்குலுக்கினான் அவன்.
சனாவோ இதையெல்லாம் கண்டுக்கொள்ளாதது போல் எங்கேயோ பாவனை செய்துக்கொண்டிந்தாள். அவளெதிரே வந்தவன், “நெக்ஸ்ட் டைம் மீட் பண்ண முடிஞ்சா உன்னோட தொப்பியையும் கண்ணாடியையும் கொடுத்துடுறேன்.” என்றுவிட்டு “அப்போ நான் கிளம்புறேன்.” என்க, தோளைக் குலுக்கிக்கொண்டவள், அவனை கடந்து தன் பொருட்களை தூக்கிக்கொண்டு நடக்கப் போனாள்.
ஆனால், அந்த ஆடவனுக்குள்தான் ஏதோ ஒரு வலி. ‘மீண்டும் அவளை சந்திப்போமா, மாட்டோமா? ஒருவேள சந்திக்கவே முடியாமல் போனால்?’ என்றெல்லாம் அவனுக்குள் தோன்ற, தான் என்ன உணர்கிறோமென்றே அவனுக்குத் தெரியவில்லை.
“ஏய்…” என்றழைத்தவாறு அவளை மறித்தவாறு நின்றுக்கொண்டவன், “நீ என்னை காப்பாத்தின. ஆனா, நான் இப்போ வரைக்கும் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல்ல.” பேசிக்கொண்டேப் போக, அவளோ எதுவும் சொல்லாது அமைதியாக அவன் பேசுவதை புருவத்தை நெறித்து கேட்டிருந்தாள்.
அவனோ அவள் அமைதியை சரியான நேரமாகப் பயன்படுத்தி, “தேங்க் யூ சோ மச்.” என்றுக்கொண்டே அவளை இறுக அணைத்துக்கொள்ள, ஆவென வாயைப் பிளந்து நின்றிருந்தவளுக்கு என்ன எதிர்வினை காட்டுவதென்று கூட தெரியவில்லை.
முதல்தடவை தனக்குள் ஒருவித சங்கடமாக உணர்ந்தாள் அவள். ஆனால், அவளை அணைத்திருந்தவனின் இதழிலோ அத்தனை புன்னகை. தான் செய்யும் காரியத்தை கூட உணராது அவன் மனமோ அப்போது அவளிடத்தில் எதிர்ப்பார்க்கும் அருகாமையை விரும்பி அனுபவித்துக்கொண்டிருந்தது.
அவன் விலகியபாடே தெரியவில்லை. அதை உணர்ந்தவளோ தானே “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறுமியவாறு விலகிக்கொள்ள, “ஹிஹிஹி…” என்று பின்னந்தலையை சொரிந்து அசடுவழிந்துக்கொண்ட ரிஷி, “அப்போ நான் வர்றேன்.” என்றுவிட்டு ஹோட்டலின் வாசற்கதவைத் தாண்டிச் செல்லப் போக, அப்போதுதான் அந்த ஒரு விடயம் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
“ஷீட்!” தலையில் வெளிப்படையாக அடித்துக்கொண்டு, வேகமாக திரும்பியவன், “ஏய் அரக்கி!” என்று கத்தியழைக்க, முன்னே இந்தருக்கு அழைத்தவாறு நடந்துக்கொண்டிருந்தவள், அவனின் அழைப்பில் கையிலிருந்த பொருட்களை சட்டென்று கீழே போட்டு கோபமாக திரும்பிப் பார்த்தாள்.
“அரக்கியா…” சனா பற்களைக் கடிக்க, தூரத்திலிருந்தே அவளின் சிவந்த கோப முகத்தை இனங்கண்டுக்கொண்ட ரிஷி, காதுமடல்களைப் பிடித்து, “சோரி…” என்று தயக்கமாகக் கேட்டு, “உன் பேர் என்ன?” என்றான் விழிகளில் ஆர்வத்தோடு.
அப்போதுதான் சனாவுக்கும் இதுவரை தன் பெயரை அவனிடத்தில் சொல்லவேயில்லை என்பது புரிந்தது. ‘அடப்பாவி ஒரு தடவையாச்சும் என் பேர கேக்கணும்னு உனக்கு தோனவேயில்லையா?’ உள்ளுக்குள் அதிர்ந்துக்கொண்டவளுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது.
அதே சிரிப்போடு “சாணக்கியா, சனான்னு கூப்பிடுவாங்க” என்று அவள் கத்திச் சொல்ல, ‘சாணக்கியா’ புன்னகையோடு அவள் பெயரைச் சொல்லிப் பார்த்தவன், திரும்பி திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டு வாசற்கதவைத் தாண்டி உள்ளே நுழைய, சனாவும் போகும் அவனை சிரிப்போடு பார்த்திருந்தவள், விழிகளிலிருந்து அவன் மறைந்ததும் பின்னந்தலையில் அடித்துக்கொண்டு கால் போன போக்கிற்கு நடக்க ஆரம்பித்தாள்.
அதேநேரம் மேக்னாவின் பங்களாவில்,
“இதை கொஞ்சம் கூட என்னால ஏத்துக்க முடியல. என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ?அன்னைக்கு ஃபங்ஷன்ல அத்தனை மீடியா முன்னாடி அவன்கிட்ட அவமானப்பட்டு நிக்குற. உனக்கும் அவனுக்கும் ஏதேதோ சம்மந்தப்படுத்தி சோஷியல் மீடியாவுல கிழிச்சு வச்சிருக்கானுங்க. ஆனா, அதை எதை பத்தியும் யோசிக்காம அவன் காணாம போயிட்டான்னு ஈஷ்வர்கிட்ட சொல்லி ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்க. திஸ் இஸ் டூ மச் மேகா.” என்று காட்டுக்கத்து கத்திக்கொண்டிருந்தார் அமுதா.
ஆனால், ஈஷ்வரும் மனோகரும் அமைதியாக மேக்னாவையே பார்த்திருந்தனர். அவளோ அவளிள் அம்மாவின் கத்தல்களை எதையும் கண்டுக்கொள்ளாது தன் கையிலிருந்த பத்திரிகையில் வந்த வைவா நிறுவனத்தின் மீது ராகவன் புகார் கொடுத்திருப்பதாக போட்டிருந்த செய்திக்கு பெரிய புகைப்படமாகக் கொடுத்திருந்த ரிஷியின் படத்தையே விழி அகலாதுப் பார்த்திருந்தாள்.
அதை கவனித்த அமுதாவுக்கு கோபம் தாறுமாறாக எகிறியது. வேகமாக அவள் கையிலிருந்த பத்திரிகையை வாங்கி தூக்கியெறிந்தவர், “நான் சொல்றது உனக்கு புரியுதா, இல்லையா இடியட்!” என்று கத்திவிட, அவர் பறித்ததில் கோபத்தின் உச்சத்திற்கே போனவள், “வில் யூ ஷட்அப்!” என்று கத்திக்கொண்டே மேசையிலிருந்த மொத்தப் பொருட்களையும் விசிறியடித்துக்கொண்டு எழுந்தாள்.
ஒருநிமிடம் அவள் கத்தலில் அமுதாவுக்கே தூக்கி வாரிப்போட்டது.
“மேகா…” அதிர்ந்துப்போய் அவர் அவளை அழைக்க, “இதுக்குமேல ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா அம்மான்னு கூட பார்க்க மாட்டேன், இதுவரைக்கும் நீ பண்ணதெல்லாம் போதும். இதுக்குமேல என் வாழ்க்கையிலயோ என் ரிஷி வாழ்க்கையிலயோ நீ தலையிட்ட…” ஒற்றை வீரலை நீட்டி அவள் மிரட்ட, எச்சிலை விழுங்கிக்கொண்டார் அமுதா.
“லுக், ஐ லவ் ரிஷி. அவன் என் ரிஷி. இதை உன் மண்டையில ஏத்திக்க. உன்னால ரிஷிக்கு ஏதாச்சும் பிரச்சினை வந்திச்சு… உடனே உன்னை கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேர்த்துடுவேன். சொல்லிட்டேன்.” அழுத்தமான குரலில் மிரட்டலை விட்டு மேக்னா தனதறைக்குச் சென்றுவிட, அமுதாவோ அதே அதிர்ச்சியோடு தன் கணவரைதான் பார்த்தார். அவரிதழிலோ ஏளனப் புன்னகை.
ஒருத்தி ரிஷியை அளவுக்கு மீறி காதலிக்க, இன்னொருத்தி மீது தனக்கிருக்கும் உணர்வின் பெயர் தெரியாது ரிஷி குழம்பிப் போயிருக்க, தன் வாழ்வில் விதி விளையாடப்போகும் விளையாட்டை அறியாது அந்த ரயில்நிலையத்தில் தன் ரயிலுக்காக காத்திருந்தாள் சனா.