இளைப்பாற இதயம் தா!-17
இளைப்பாற இதயம் தா!-17
இளைப்பாற இதயம் தா!-17
ஐடா தேவகோட்டைக்குச் சென்று ஒரு வாரம் முடிந்திருந்தது. ரூபி பாட்டியின் அழைப்பை ஏற்று ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வைப்பதோடு சரி.
ரீகன் நிலைகுலைந்து போயிருந்தான். எதிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. ஐடாவின் பிரிவை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளில்லாத வீட்டிற்கு வருவதையே குறைத்திருந்தான்.
ரூபிக்கு ஐடாவின் பெற்றோரிடம் பேச தயக்கமாக இருந்தது. ‘இத ஸ்டெல்லா எப்டி எடுத்துப்பான்னு தெரியலையே’ என்று யோசித்தவர், ‘ஐடா என்ன சொல்லியிருக்காளோ தெரியலை. இதுவரை கால் பண்ணி ஒன்னுமே கேக்கலை’ என்று யோசித்தபடி இருந்தவருக்கு அன்றைய நிகழ்வு நினைவில் வந்து வருத்தியது.
அறையில் இருவருக்கிடையேயான விவாதம் வெளிவரை கேட்டதை இருவருமே உணரவில்லை. அவரவர் நிலையில் சுற்றத்தை யோசியாது பேசிக்கொண்டிருந்ததை ரூபி பாட்டியோடு வேலைக்கு இருந்தவர்களும் கேட்டபடியே அவரவர் பணியில் கவனமாக இருப்பதுபோல காதை வீட்டுச் சச்சரவில் கழட்டி வைத்திருந்தனர்.
ரூபிக்கு தர்மசங்கடமான நிலை. இருவருக்கிடையே சென்றால் அது தவறாகிப்போகுமே என்று நினைத்து இதுவரை அங்கு வரத் தயங்க, ஆனால் ஒருவரேனும் இதை அமைதியாக எதிர்கொள்வார்களா என்கிற எதிர்பார்ப்பு இனியும் நடக்க வாய்ப்பில்லை என்பது அவர்களின் நீளும் விவாதத்தில் புரிந்ததும் அறையை நோக்கி மெதுவாக எழுந்து வந்தார்.
அறையை நெருங்கியபோது நடந்த சம்பாசனைகளைக் கொண்டு பதறிப்போனவர் வெளியில் நின்றபடியே, “ரீகன்…” என்று குரல் கொடுத்தார்.
“அது புடிக்கும் முன்ன… தப்பிக்கற வழியத்தான் இப்ப சொன்னேன்!” என்ற ஐடாவின் வார்த்தை காதில் விழுந்ததைக் கேட்டவருக்கு பேச்சு செல்லும் திசை கவலையைத் தந்திட அதைத் தடுக்கும் பொருட்டு பேரனை அழைத்திருந்தார்.
பாட்டி அழைத்தது கேட்டதும் இருவரும் சற்று அமைதி காத்திட அந்த நேரத்தில் ரீகன், “என்ன நடந்திருந்தாலும் சரி. நான் தப்பு பண்ணதா நீ ப்ரூவ் பண்ணாலும் சரி. உன்னை எங்கிட்ட இருந்து பிரிஞ்சி போறதுக்கு நான் ஒருக்காலும் அனுமதிக்க முடியாது” என்று அவசரமாகச் சொன்னவன், “தோ… வரேன் பாட்டீ” என்று வாயிலை நோக்கி நகர்ந்தான்.
ரீகனது பேச்சில் ஐடாவுக்கு கோபம் மிகுந்திட, “நான் கேட்டதுக்கு நீங்கதான சொன்னீங்க. இப்ப மறுத்துப் பேசினா என்ன அர்த்தம்?” என்றபடியே ரீகனது பின்னே வந்தாள்.
ரூபி வாயிலருகே நின்றபடி ரீகனைப் பார்த்து, “அமைதியாப் பேசி ஒரு முடிவுக்கு வரக் கூடாதா?” வருத்தம் தோய்ந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவர் வீட்டிற்கு பணிக்கு வந்திருக்கும் அனைவரது காதுகளிலும் எல்லா விசயங்களும் சென்று சேர்வதை செய்கையில் காட்டியவர், ஏனிப்படி என்பதையும் அதேதொனியில் கேட்டு தலையை இரண்டு கைகளைக்கொண்டு தாங்கியபடி குனிந்து நின்றார்.
அதைக் கவனித்துவிட்ட ஐடா, “ஊருக்கே தெரியற விசயம் அவங்களுக்கும் தெரியட்டுமே பாட்டீ. அப்போதான யாரு எப்படினு தெரிய வரும்” என்றாள்.
அதுவரை செய்கையில் பேசிய ரூபி இருவரையும் பொருட்படுத்தாது ஐடாவின் அறைக்குள் வந்து அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தவர், தன்னையே பார்த்துக்கொண்டு ஆளுக்கொரு புறமாக நிற்கும் பேரனையும் பேரன் மனைவியையும் பார்த்து, “இரண்டு பேரும் உள்ள வாங்க” என்று அழைத்தார்.
இருவரும் உள்ளே வந்து ஆளுக்கொரு திசையில் நிற்க, “இரண்டு பேருமாப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வர மாதிரித் தெரியலை. இப்ப பேசி ஒரு முடிவுக்கு வந்திரலாம்” என்றவர்
ஐடாவின் புறமாகத் திரும்பி, “ரீகன் எனக்கு எப்படியோ அப்படித்தான் நீயும்னு என்னை முதல்ல நம்பணும். ரெண்டு பேரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இதை இன்னும் பெரிசுபடுத்தாம, இனி இப்படி நடக்காம இருக்க என்ன செய்யணும்னு பேசி முடிவுக்கு வரணும். அதைவிட்டுட்டு ரெண்டு பேரும் உங்க நிலையிலேயே நின்னு ஒரு விசயத்தை விவாதம் பண்றது மேற்கொண்டு சிரமத்துக்கு வழி வகுக்கற மாதிரித் தெரியுது” என்றவர்,
“ஐடா… உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டதும், ஐடா ரீகனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை முறை என்று கூறாமல் ரீகனது பெண்களோடுடனான சகவாசத்தைப் பற்றிக் கூறிவிட்டு, “இப்படிப்பட்ட ஒருத்தரோட இனியும் என்னால வாழ முடியாது பாட்டீ. அதனால எனக்கு மியூச்சுவல்ல டிவோர்ஸ் தரச் சொல்லுங்க” என்றாள்.
பாட்டிக்கு பேரன் திருமணத்திற்கு முன்பு அப்படி இருந்தான் தற்போது திருந்திவிட்டான் என்றே நினைத்திருந்ததால் ஐடா கூறியதும் விசயம் தெளிவாகாததால், ‘மேரேஜ்கு முன்னதான் அப்டி இருந்தான். இன்னும் அப்டித்தான் இருக்கானா?’ என மனதிற்குள் தோன்ற பேரன் மாறி விட்டதாக எண்ணியது தவறோ என்று எண்ணியவர் கவலையான முகத்தோடு பேரனை ஏறிட்டார். அதில் குற்றம்சாட்டும் பாவனையோடு அருவெறுப்பும் சேர்ந்திருந்ததைக் கவனித்த ரீகன், “அது ரூமர். இவ சும்மா சொல்றா” என்று மனைவியைக் காட்டிக் குற்றம் கூறியவன், “ரூமரை நம்பரவ… என்னோட பேச்சை நம்ப மாட்டீங்கறா” என்று மீண்டும் தன்னை நல்லவன் என்று பேச, அதற்குமேல் பொறுக்காத ஐடா, “எது ரூமர்? நான் அப்பவே சொன்னேன். இதை ப்ரூஃப் பண்ண முடியும்னு” என்றவள்,
பாட்டியை நோக்கி, “இது… இந்த ஆட்டிட்டியூட்தான் பாட்டி எனக்குப் பிடிக்கலை. இவரு பண்ணதை இல்லவே இல்லைனு சாதிக்க நினைக்கறாரு பாருங்க. அந்த ஒரு விசயத்தை என்னால ஏத்துக்கவே முடியலை” என்றவள்,
“எங்கிட்ட ப்ரூஃப் இருக்குன்னு சொல்லியும் எப்படி இவரால மனசாட்சிய தொலைச்சிட்டுப் பொய் பேச முடியுது?” என்றபடியே வேகமான நடையோடு உள்ளே செல்ல,
அதைப் பார்த்துப் பதறிய ரூபி பாட்டி, “உங்க ரெண்டு பேரோட சண்டையில வயித்தில இருக்கற குழந்தைய சங்கடப்படுத்துறீங்களேம்மா” அங்கலாய்ப்போடு கூறியவர், “மெதுவா போ ஐடா” என்றார்.
பேரனைத் திரும்பி முறைப்பை பரிசாக்கியவர், “பொண்ணுங்களை எப்போவும் மட்டமாவே எடை போடற ரீகன். எனக்கு எதுவுமே தெரியாதுன்னுதான் இத்தனை நாள் எல்லாம் பண்ண? நான் உன்னோட பாட்டீ. கண்டும் காணாம இருந்தேன். வயசுல அப்படி இருக்க. கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிரும்னு நினைச்சேன். ஆனா… அதேபோல வந்தவளும் இருப்பான்னு திரும்ப ஆரம்பிச்சா… எப்படிப்பா சும்மா இருப்பா?” என்று முதன் முதலில் பேரனை நோக்கிக் கேட்டதும் பாட்டியின் வார்த்தையில் அதிர்ந்தவன்,
“பாட்டீ நீங்களுமா?” என்று கேட்டான்.
“ச்சேய். உங்கிட்ட எவ்ளோ விசயம் மறைமுகமாச் சொல்லியும் இப்படிப் போயி மீண்டும் தப்பு பண்ணுவேன்னு நான் நினைக்கல ரீகன்” என்றிட,
“அய்யோ பாட்டீ. நான் எதுவும் பண்ணலை” என்றான். ரீகன் தற்போது அப்படி எதுவும் செய்யவில்லை எனும் நோக்கில் பாட்டியிடம் பேச, பாட்டிக்கு தற்போதுதான் பேரன் எதையோ செய்து மாட்டிக்கொண்டான் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த ஐடா பாட்டியின் கையில் பேருந்தில் பயணம் செய்தவர்களின் பட்டியலைக் காட்டி விசயத்தைக் கூறினாள்.
முதலில் பாட்டிக்கும் பேரனுக்கும் புரியவே இல்லை. அதைப் புரிய வைக்க ஐடா மிகவும் பாடுபட்டாள்.
பேருந்தில் தான் அன்று பயணித்ததையும், கண்ணாரக் கண்ட விசயங்களுக்கு வேறு யாருடைய சாட்சியும் தனக்குத் தேவையில்லை என்பதையும் கூறிவிட்டு, “மார்னிங் என்னோட ட்ராலி பேகை ரீகன் தூக்கிக் குடுக்கும்போது நான் இந்த டாட்டூவைப் பார்த்தேன் பாட்டி. எனக்கு இவங்க ஃபேஸ் அப்போ இருந்ததுக்கும் மேரேஜ்கு முன்ன நாம மீட் பண்ணும்போது பாக்கும்போதும் ஒரே நபர்தான்னு தெரியலை.” என்றவள் அப்போதைக்கு அவன் இருந்த முக அமைப்பையும் தற்போதிருப்பதையும் கூறினாள்.
அதைக் கேட்ட ரீகனுக்குக்கூட அந்த நிகழ்வு மனதில் வந்து போனது. ‘அன்னைக்கு பஸ்ஸுல நீதான் வந்தியா?’ என்று சட்டென்று அதிரவில்லை ரீகன்.
அவளைச் சந்தித்த கனத்தை நினைவுகூர்ந்து, ‘இவ இந்த பஸ்ஸுலதான் இவ்ளோ நேரம் வந்தாளா’ என்று தான் அன்று நினைத்ததை எண்ணிப் பார்த்தான்.
அந்த நினைப்பு அவனுக்குள் ஒருவிதமான சந்தோசத்தைத் தந்தது. அவனது தவறுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவளின் அறிமுக தினத்தை மனம் கொண்டாடியது. ‘அவளை ஏற்கனவே பழக்கம்போல அதுனாலதான் தோணியிருக்குமோ’ என்று நினைத்தான்.
ரீகனது முகத்தை அவ்வப்போது பார்த்தபடியே பேசியவளுக்கு அவனது மாறிய முகம் எதனால் என்று புரியவராமல் தனது பேச்சைத் தொடர்ந்திருந்தாள்.
“பட் மேரேஜ் முடிஞ்ச மறுநாள் காலையில காஃபி குடுக்கும்போது இந்த டாட்டூவைப் பார்த்துட்டு… எனக்கு டவுட் வந்தது” என்று பாட்டியிடம் கூறியவள்,
“டாட்டூல ஆர்னு இருந்தது நினைவிருந்தது. பட் இந்த க்ரௌன் இதேபோலத்தான் இருந்ததானு கன்ஃபார்மாத் தெரியலை. இதேபோல எத்தனையோ பேர் போட்டிருக்காங்கங்கறதுக்காக அவங்க எல்லாரும் நான் பார்த்த அந்த நபராத்தான் இருக்கணும்னு சந்தேகப்படறது தப்புன்னு… அப்போ அதை பெருசு பண்ணாம விட்டுட்டேன்” என்றவள், தன்னை சமாதானம் செய்து கொண்டு வாழத் துவங்கியது, இந்த விசயம் தற்போது தனது கவனத்திற்கு வந்ததையும் அதன்பின் ரீகனிடம் கேட்டு சற்று முன்வரை தான் செய்த அனைத்தையும் அவன் மறுத்ததையும் அந்த மறுப்பு என்பதைவிட தவறை மறைக்கும் அவனது முயற்சியினை தான் அறவே வெறுப்பதையும் பாட்டியிடம் கூறி முடித்திருந்தாள் ஐடா.
பாட்டி ரீகனது கையில் இருந்த டாட்டூவையும் அவனையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தார். ரீகனுக்கு அவரின் பார்வையின் காரணம் புரிய பாட்டியைக் காண்பதைத் தவிர்த்திருந்தான்.
எத்தனை முறை இந்த டாட்டூவைப் பார்த்து தன்னைத் திட்டியிருக்கிறார். அப்போதெல்லாம் பாட்டியின் திட்டை கண்டுகொள்ளாமல் கடந்தவனுக்கு, ‘இந்த டாட்டூவை வச்சி டவுட் பண்ணாளா?’ என்று தோன்றத்தான் செய்தது. ஆனாலும் அவள் கூறுவதை சட்டென எப்படி நம்புவது?
அதனால் பாட்டியின் கையில் இருந்த பேருந்தில் பயணித்தவர்களின் அட்டவணையை ரீகனும் வாங்கிப் பார்த்தான். இதற்கு மேல் தான் பேசிப் பயனில்லை என்பதைவிட, இதுவரை இத்தனை பெரிய விசயத்தைத் தெரிந்துகொண்டு ஐடா தன்னிடம் பேசியது தெரியாமல் தான் மறுத்ததை நினைத்து மனதிற்குள் நொந்தவனாக அடுத்து ஐடாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தான்.
ரூபியோ, “ஐடா… ரீகன் மேரேஜ்கு முன்ன அப்டி இருந்தான். இல்லேங்கலை. இப்ப திருந்தி உங்கூட நல்லாத்தானே இருக்கான். அதை கன்சிடர் பண்ணுவேன்” எனக் கெஞ்சுதலாகக் கேட்டார்.
ஐடா ரீகனை முறைத்துப் பார்த்தபடியே, “அதுக்கு இனி வாய்ப்பில்லை பாட்டீ” என்றாள் சட்டென்று.
“உன்னோட வருத்தம், ஆதங்கம் அத்தனையும் எனக்குப் புரியுது ஐடா. அவனை நான் நியாயப்படுத்தலை. ஆனா, அவன் இப்பத் திருந்திட்டான்ல” என்றார்.
“வாயத் திறந்தா ஒரே பொய்யாப் பேசற ரீகனோட எந்த நம்பிக்கையில வாழ முடியும் பாட்டீ. சாரி” என்றுவிட்டாள் ஐடா.
“பிறக்கப் போற குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு ஐடா. பெரியவங்க பண்ற தப்புக்கு குழந்தை அனுபவிக்கணுமா?” என்று ரூபி தன் சுருங்கிய கன்னங்களில் வழியும் நீரோடு ஐடாவிடம் கேட்டார்.
“இப்டி ஒரு தகப்பனோட பிள்ளைன்னு அதுக்கு தெரியாம வளக்கணும்னு தோணுது பாட்டீ” என்றவளின் பேச்சு நெருஞ்சியாக ரீகனைப் பதம் பார்த்தது.
இதுவரை தான் செய்திட்ட செயல்களின் வீரியம் உணராதவனாக வலம் வந்தவனுக்கு இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் குற்றவாளியாக தன்னைக் கூண்டில் நிறுத்தி தன்னை அவமரியாதை செய்வதை உள்ளுக்குள் வேதனையோடு எதிரில் இருக்கும் இருவரையும் நேராக நோக்க முடியாமல் பார்வையை வேறு புறமாகத் திருப்பியபடி நின்றிருந்தான்.
குற்றவாளிக் கூண்டில் இருப்பவன் மீது யார் இரக்கம் காட்டுவார்?
ஐடாவை விட்டுவிடும் துணிவில்லாதவன் இதுவரை நடந்த விசயங்களுக்கு மன்னிப்புக் கோரும் விதமாக, “சாரி ஐடா. உண்மைய உங்கிட்டச் சொன்னா நீ மேலும் சந்தேகப்படுவன்னுதான் சொல்லக்கூடாதுன்னு மறைச்சேன்” மெல்லிய குரலில் உரைத்தவன்,
“உன்னை எப்போ பார்த்தேனோ அப்போ இருந்து நெறைய சேஞ்சஸ் எங்கிட்ட. கல்யாணம் பண்ணதுக்குப்பின்ன நான் அந்த மாதிரியான விசயங்களை விட்டு வெகுதூரம் வந்துட்டேன். அதுக்கு என்னோட கட்டுப்பாடோ, இல்லை வேற எந்த விசயமும் காரணம்னு என்னால சொல்ல முடியாது.
ஏதோ ஒரு மாற்றம். அது உன்னாலதான்னு நான் முழுமையா நம்பியிருக்கேன். அப்போ நான் நடந்த விசயங்கள்னால இப்படி என்னோட வாழ்க்கையோட திசையே மாறும்னு அப்போ யாரும் எடுத்துச் சொல்லியிருந்தாக்கூட எனக்கு அப்போ புரிஞ்சிருக்காது.
ஆனா… இப்போ நான் முன்னைப்போல இல்ல. நடந்ததையெல்லாம் மறைக்க நினைச்சது மகா பெரிய தப்புதான். அதுக்கு டிவோர்ஸ் அப்டிங்கற விசயம் அதிகம். கூடவே இருந்து எனக்கு என்ன தண்டனைனாலும் கொடு ஐடா. ஆனா என்னை விட்டுப் போகாத…
நீ என் லைஃப்குள்ள வந்தபின்ன நிறைய நல்ல மாற்றங்கள் வந்திருக்கு. அதை ரியலைஸ் பண்ணப்போ என்னோட லைஃப் முழுமைக்கும் நீ வருவேன்னு ஹோப்போட இருந்தேன். இப்பவும் நீ எங்கூட கடைசிவரை இருக்கணும்னு ஆசைப்படறேன்.
கொஞ்சம் கன்சிடர் பண்ணு. எனக்காகவும் குழந்தைக்காகவும் உன்னோட முடிவை மாத்திக்க. ப்ளீஸ்” என்றவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் பாட்டியை நிமிர்ந்து பார்த்துவிட்டு சற்று நேரம் மௌனமாக நின்றுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.
ரூபி நீண்ட நேரம் அந்த அறையில் அமர்ந்திருந்தார்.
ஐடா எதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தார். அவள் வாயைத் திறக்கவே இல்லை. அத்தனை அடமண்டாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடியே இருந்தார்.
“அத்தனை தூரம் கேக்கறானே ஐடா. ஒரு வார்த்தைகூட பதில் பேச மாட்டிங்கற” என்று கேட்ட பாட்டிக்கு பதிலே கூறாமல் “பாட்டீ… அம்மா வீட்டுக்கு இன்னைக்கு கிளம்பறேன்” என்றாள்.
பாட்டி, “ரீகனைக் கொண்டு விடச் சொல்றேன்” என்றவர் தனது அலைபேசியை எடுத்து ரீகனுக்கு அழைத்துப் பேசிவிட்டு வைக்க…
அவன் கேட்டுக்கொண்டு பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்த பாட்டி, “என்ன ரீகன்? லைன்ல இருக்கதான?” என்று கேட்டதும், “ம்” என்று கூற அதேநேரம் தனது பேச்சை மறுத்தபடி வந்த ஐடாவைப் பார்த்து அழைப்பைத் துண்டிக்க முயன்றார்.
“இல்லை வேணாம் பாட்டீ. நான் மேரேஜ்கு முன்னல்லாம் பஸ்ஸில போற மாதிரிப் புக் பண்ணிப் போயிக்கறேன்” என்று அன்றே அவளாக டிக்கெட் புக்செய்து மாலையில் தேவகோட்டைக்கு கிளம்ப வேண்டிய ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்தினாள்.
அப்போதும் ரூபி, “அவன் வர வேணாம்னா… ஸ்டெல்லாவை வரச்சொல்லி கூட்டிட்டுப் போகச் சொல்லலாம்” என்றார்.
“இல்ல பாட்டி. அம்மாவுக்கு லீவ் கிடைச்சு அவங்க வரவரை நான் வயிட் பண்ணணும். நான் என்ன சின்னப் புள்ளையா? நான் தனியா போயிருவேன் பாட்டீ” என்றாள்.
“அஞ்சு முடிஞ்சி ஆறு ஆரம்பிச்சிருச்சு ஐடா. இனி டிராவல்ல தனியா போகக்கூடாது. நான் உங்கூட வந்திட்டு வரேன்”
“உங்களுக்கு எதுக்கு சிரமம் பாட்டீ. நான் போயிட்டு உங்களுக்குக் கால் பண்றேன்” என்றுவிட்டாள் ஐடா.
பாட்டி அவளின் அறையில் அமர்ந்தபடியே, “டிவோர்ஸ்லாம் வேணாம் ஐடா. நீ கேட்டாலும் அவன் குடுக்க மாட்டான். நீ ரொம்பப் பிடிவாதமா இருந்தா… வேற வழியில்லாம இந்த விசயத்தை நம்ம திருச்சபையோட கவனத்துக்கு கொண்டு போகணும்.
அங்க உடனே சரினு ஒப்புக்க மாட்டாங்க. என்ன நடந்ததுன்னு ரெண்டு பேரையும் கூப்பிட்டு விசாரிப்பாங்க. எப்டியாவது உங்க ரெண்டு பேரையும் சேந்து வாழ வைக்க முயற்சி எடுப்பாங்க.
அவங்களால முடியலைன்னா அடுத்து பிஷப்போட பார்வைக்குப் போகும். அப்போவும் அவங்க சொல்ற முடிவுக்கு நீங்க ஒத்து வரலைன்னாதான் கோர்ட்ல கேஸ் வரும்.
கேஸ் கோர்ட்டுக்கு வந்ததும் உடனே டிவோர்ஸ் குடுக்க மாட்டாங்க. கவுன்சிலிங் அனுப்புவாங்க. டைம் தந்து அதிலயும் சரியாக வாய்ப்பில்லைன்னாதான் நீ கேக்கறது கிடைக்கும்.
நடந்தது எதையும் நான் சரினு சொல்லலை. ஆனா இனி அப்படி நடக்கமாட்டான்னு அவன் உறுதி கொடுத்தா நீ அவங்கூட இருக்கலாமில்லையா?” என்று பாட்டி கேட்டதற்கும் வாய் திறக்கவே இல்லை ஐடா.
பொது விசயங்களுக்குப் பதில் கூறியவள் ரீகனோடுடனான எதிர்காலத்தைப் பற்றி எண்ணவோ, பேசவோ ஆர்வம் காட்டவில்லை. இதை உணர்ந்துகொண்ட பாட்டி தனது அறையை நோக்கிக் கிளம்பிவிட்டார்.
மாலையில் வீட்டில் உள்ள காரில் செல்லாமல் ஆட்டோவை வரச்சொல்லி கிளம்புவதாகக் கூறிவிட்டு பாட்டியிடம் விடைபெற்றிருந்தாள் ஐடா.
ஐடாவின் அறையை விட்டு கிளம்பியவன் வெளியே சென்றுவிட்டு அன்று வீடு திரும்பவே இல்லை. பாட்டி பலமுறை அழைத்து பிறகு மறுநாள் அழைப்பை ஏற்றவன், “என்ன விசயம்?”
“ஐடா ஊருக்குப் போயிட்டா? நீயும் வெளியே கிளம்பிப் போயிட்ட… நான் ஒருத்தி வீட்டுக்குள்ள இருந்துட்டு அத்தனையையும் நினைச்சுட்டு வாழற கொடுமையக் குடுத்திட்டியே” என்று கூற,
அமைதியாக மனதிற்குள் ரணத்தோடு சற்று நேரம் மௌனியாக இருந்தவன், “வரேன்” என்று வைத்துவிட்டான்.
அன்றும் வராமல் மறுநாள் வீட்டிற்கு வந்தான். சற்று நேரம் வீட்டில் இருந்துவிட்டுக் கிளம்பியவன் வீட்டுப்பக்கமே வரவில்லை. அலுவலகத்திற்குச் செல்கிறானா என்றும் ரூபிக்குத் தெரியவில்லை.
ஐடா ஊருக்குச் சென்ற மறுநாள் காலையில் ஐடா அழைப்பாள் என்று ரூபி பாட்டி எதிர்பார்க்க அவள் அழைக்கவே இல்லை. பிறகு தானே ஐடாவிற்கு அழைத்துப் பேசினார்.
அதுமுதல் இருவரும் பேசிக்கொண்டாலும், ஐடாவின் தாயிடம் பேச ரூபிக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் அப்படியே இருப்பது தவறல்லவா. அதனால் ஸ்டெல்லாவிடம் பேச எண்ணி அழைக்க, அழைப்பை ஏற்ற ஸ்டெல்லா, “சொல்லுங்கம்மா. நல்லா இருக்கீங்களா” என்று கேட்டதோடு, “ஐடா மாப்பிள்ளை எல்லாம் நல்ல இருக்காங்களா?” என்று கேட்டதும் ரூபிக்கு அதிர்ச்சியாகிப்போனது.
***