ஆட்டம்-5
ஆட்டம்-5
ஆட்டம்-5
ஸ்தம்பித்து போய் நின்றிருந்தவளின் இதயக் துடிப்பு அச்சத்திலும், உதறலிலும் அவளிற்கே பெருங்குரலெடுத்து கேட்டது.
பதின் வயது பாவையவள் அவள். இருபது வயது காளையவன் அவன்.
விக்ரம் அபிநந்தன். FINA நடத்திடய இன்டர்நேஷனல் ஸ்விம்மிங் லீகில் தன் பதினேழு வயதில் கலந்து, அனைவரையும் கலங்கடித்து பதக்கம் வென்று வந்தவன் அவன். சரியான உணவு முறையும், நீச்சல் பயிற்சியும், பதினெட்டு வயதுக்கு பின் ஜிம் சென்று உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்து, ஆறடி உயரத்தில், சிவந்த திண்ணிய மேனியோடு, எப்போதும் தன் வசீகர விழியாலும், ஸ்டைலாலும் தன்னைக் கடந்து செல்லும் மங்கையர்களை மற்றொரு முறை திரும்பிப் பார்க்க வைத்து,
தன் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு என்பதை முதல் படியிலேயே இல்லாமல் செய்து தனது சாணக்கிய புத்தியை காட்டும் அந்த அரண்மனையின் இளைய இளவரசனை, இரண்டரை வருடத்திற்கு பிறகு கண்ட நறுமுகையின் பாதங்களும், கை விரல்களும் சில்லிட்டுப் போக, அவளை எதிரில் காணும் வரை கம்பீரமும், புத்தியில் இருக்கும் அதே அளவிலான சுறுசுறுப்பு உடலிலும் இருக்க, சிகையாட, தனது அன்பு அத்தை அளித்த ஜாக்குவார் விலங்கு பாய்வது போன்று, டயமன்ட் ப்ளாட்டினம் எல்லாம் தள்ளி நிற்க கூடிய, மிக விலை உயர்ந்த பல்லாடியமும் (palladium), ரோடியமுமான (rhodium) ப்ரேஸ்லெட்டை அணிந்து கொண்டே இறங்கிக் கொண்டிருந்தவன் பெண்ணவளை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.
அவளோடு அவ்வளவாக அவன் பேசியதில்லை. எப்போதும் அவள் அபிமன்யுவிடம் இருந்ததே அதற்கு ஒரு காரணம். சமயம் கிடைத்த போதெல்லாம் அவளை வேண்டுமென்றே ஏதாவது சொல்லி சீண்டிவிடுவான். அதனாலேயே நறுமுகைக்கு அவனை பிடிக்காது. முகத்தை திருப்பிக் கொண்டு சிறிய வயதில் செல்பவளை அவன் அப்போதும் விட்டது இல்லை.
“ஏன் அத்தை உங்க பொண்ணு இப்படி இருக்கா?” நீரஜாவிடம் பேசும்போது அவள் இருந்தால் கூட, இப்படி ஏதாவது பேசி வம்பிழுப்பவன் விக்ரம். அதனாலேயே அவனைத் தவிர்ப்பவள் அவன் படிப்பதற்கு யூ.எஸ் கிளம்பும்போது கூட வாழ்த்து கூறவோ, செல்லும் அன்று சென்று பார்த்து வரவோ இல்லை.
அன்று அழைத்த அன்னையை முறைத்தவள், “நீ வேணா போம்மா” என்று தனது அறைக்குள் சென்று கதவை படீரென்று சாத்திக் கொள்ள, அன்று விக்ரமை சந்திக்கச் சென்ற நீரஜா விளையாட்டுத் தனமாக அவனிடம் சொல்ல, மனதில் அதை முக்கிமான இடத்தில் குறித்துக் கொண்டான் ஆணவன்.
அதன்பிறகு அங்கு சென்றவனுக்கு அவள் ஞாபகம் இல்லையென்றாலும், ஒருநாள் அவனிடம் அலைபேசியில் பேசும்போது கோதை, “நம்ம நறுமுகை பெரிய பொண்ணு ஆகிட்டா விக்ரம்” அன்னை சொல்ல, “ம்ம்” என்று மட்டும் உரைத்தவன், சில நிமிடங்கள் பேசிவிட்டு வைக்க, அவன் உதடுகளில் குறும்புப் புன்னகை.
எதற்கு என்றே அவனுக்குத் தெரியவில்லை. அந்த புன்னகையில் சிறிது விஷமம் கூட வழிந்தது.
அதன்பிறகு ஒருநாள் வீட்டிலுள்ள அலுவலக அறையில் அமர்ந்நு நீரஜா, அவனுடன் வீடியோ காலில் உரையாடிக் கொண்டிருக்க, கதவைத் திறந்து உள்ளே நுழைந்த நறுமுகைக்கு அன்னையின் முன்புறமும், லேப்டாப்பின் பின்புறமும் மட்டும்தான் தெரிந்தது.
உடனே அன்னையிடம், “அபிமன்யு மாமாவா ம்மா” என்று குதித்துக் கொண்டு ஓடியவள், அன்னையின் பின் நின்று பார்க்க, வலது கன்னத்தில் கை வைத்து விழிகளில் குறும்பும், விஷமமும், கேலியுமாக அமர்ந்திருந்த விக்ரம் தான் தெரிந்தான்.
உடனே புருவங்கள் நெறிய அவனைப் பார்த்தவள் அங்கிருந்து நகர, “பேசலையா நறுமுகை?” நீரஜா கேட்க, “முடியாது” என்றுவிட்டு போனாள் அவள்.
அவனைப் பார்த்தவுடன் அவள் காட்டிய முக பாவனையும், விழிகள் அவனை விலக்கியதையும், அவனிடம் பேச ஈடுபாடின்றி சென்றதையும் கண்டவனுக்கு, மனதில், அதுவும் முக்கிய பகுதியில் பதிந்து போக, அவன் வசீகரத்தை கக்கும் விழிகள் மாற, மகளை கண்ணாலேயே அதட்டிவிட்டு நீரஜா மீண்டும் தன் விழிகளை கணினியில் பதிக்க, அவன் விழி வெளிப்படுத்திய உணர்வு மீண்டும் மாறிக் கொண்டது.
மனதில் அவள் மேலான கோபம் அவனுக்கு ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்ததை அவனவள் அறியவில்லை.
அவளுக்கோ அபிமன்யு தான் மிகவும் பிடிக்கும். அதனாலேயே அவனுக்கு பிடிக்காததை அவளும் விரும்பமாட்டாள். சாதரணமாக முதலில் விக்ரம் பேசியிருந்தால் கூட பேசியிருப்பாளோ என்னமோ. அவன் அவளை சீண்டியே சில சமயங்களில் அழும் நிலை வரை கொண்டு சென்றதோடு சேர்த்து, அவளுக்கு அபிமன்யுவுக்கு விக்ரமை பிடிக்காது என்பதும் சேர்ந்துகொள்ள, அவளுக்கு அவனிடம் அவ்வளவு ஆவல் எதுவும் இல்லை.
ஏனோ சிறு பெண் தன்னை நிகாரிப்பது ஆணவனுக்கு கோபமாக இருந்தது.
அன்று இரவு அதே யூஎஸ்ஸில் வேறு புகழ்மிக்க யூனிவர்ஸிட்டியில் படித்துக் கொண்டிருந்த அபிமன்யுவிடம் பேசிய நறுமுகை, நடந்ததை கூற அவள் சொல்வது முழுவதுமாக கூர்ந்து கவனித்துக் கேட்டவன், எப்போதும் போல தனது இடது கை பெரு விரலால் வலது புருவத்தை வருடினான்.
“லிஸன் நறு.. நீ அவனை சாதரணமா நினைக்கிற.. டோன்ட் டேக் ஹிஸ் சைலன்ஸ் ஃபார் க்ராண்டட்.. ஹீ ரிமெம்பர்ஸ் யோர் எவ்ரி ஆக்ஷன்ஸ். (Don’t take his silence for granted. He remembers your every actions)” அபிமன்யு அத்தை மகளின் செவியில் அது விழும் அளவிற்கு அழுத்தமாய் கூற, அவளுக்கு அது புரிந்தும் புரியாமலும் இருந்தது. அவள் வயது கூட அதற்குக் காரணம்.
அவளின் குழப்பமான முகத்தைப் பார்த்தவன், “அவன் வீட்டுல எல்லாருக்கும் வேற விக்ரம்.. ஆனா, வீட்டுக்கு வெளிய வேற விக்ரம்” என்றவன், “லெட் மீ ஷோ யூ ஏன் எக்ஸாம்பிள் (Let me show you an example)” என்றவன், “உனக்கு ஒரு லிங்க் வரும்பாரு.. அவனோட முகமே அதுதான்” என்று கூறியவன் வேறு சிலதை பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, முதல் வேலையாக அவள் சென்று பார்த்தது அந்த வீடியோவை தான்.
அவன் இன்டர்நேஷனல் நீச்சல் போட்டியின் காணொளி அது.
இந்தியாவில் இருந்து விக்ரம் பங்கேற்று இருக்க, அவனுடைய இடத்திற்கு வந்து நின்றவன் மேலே இருந்த ஜாக்கெட்டை கழற்றிவிட்டு தலைக்கு ஸ்விம்மிங் கேப்பையும், கண்களிற்கு காக்கில்ஸையும் அணிந்து கொண்டு நிற்க, மொத்தமாக வேறாய் தெரிந்தான் அந்த சாணக்கியன் பெண்ணவளின் விழிகளுக்கு.
ஸ்விம்மிங் பயிற்சி சென்றிருந்த காரணத்தால் தசைகள் ஆங்காங்கே முறுக்கி, நரம்புகள் புடைத்து காணப்பட்டவன், கைகளை மேலே தூக்கி வார்ம் அப் செய்ய, நறுமுகையின் மூச்சே நின்றது. அவனின் முகம் அத்தனை கடுமையும், ஆளுமையுமாய் மாறியிருந்தது. இன்னும் இரு நொடிகளில் போட்டி துவங்க தனக்கு அருகே இருந்த மற்ற நாட்டவரை அவன் ஏறெடுத்தும் நோக்கவில்லை.
தான் என்ற கர்வம்!!!
போசிஷனில் அனைவரும் நிற்க, தண்ணீருக்குள் அனைவரும் ஒரே சமயம் பாய, வில்லாய் உடலை வளைத்து பாய்ந்த விக்ரம், டால்பின் கிக்கில் சென்றான். அவன் சென்ற போட்டியே அதுதான். அதுவும் தண்ணீருக்குள், அடியில், பொறுத்தப்பட்ட கேமிராவினாள் அது பதிவு செய்யப்பட்டு இருக்க, அவனின் அதிஅசூர வேகத்தைப் பார்த்த நறுமுகை எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
டால்பின் கிக் என்பது கால்கள் நேராக பின்னோக்கி நீட்டப்பட்டு வலைந்து வலைந்து தண்ணீருக்குள் டால்பின் மீனைப் போலவே செல்லப்படும் முறையாகும். அதைப் பார்த்தே எச்சிலை விழுங்கியபடி அமர்ந்திருந்தவள், அடுத்து அவன் ப்ரெஸ்ட் ஸ்டோர்க்கிற்கு (Breast stroke) மாற்ற அரண்டு போய்விட்டாள் பெண்ணவள்.
ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் என்பது நெஞ்சுப் பகுதியை வைத்து நீந்தும் முறையாகும். இம்முறை தண்ணீரின் மேலே மார்பு வரை ஆக்ரோஷத்துடன் வந்த விக்ரம், தன் வலிய கரங்களை அரைவட்ட இயக்கத்தைச் செய்ய, கால்கள் ப்ராக்(Frog) உதையை செய்ய, அவன் அணிந்திருந்த அந்த காக்கில்ஸையும் தாண்டி அவன் விழிகளில் தெரிந்த வெறி பெண்ணவளுக்கு வெளிப்பட, அவளின் மேல் உதடுகளுக்கு மேல் வியர்வை பூத்தது.
‘இத்தனை ஆக்ரோஷமும், அழுத்தமும், வெற்றி எனக்கே என்ற வெறியுமா ஒருவனிடம்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் மீண்டும் அதைப் பார்க்க, அந்தப் பக்கம் நீந்திக் கொண்டே சென்றவன் மீண்டும் மின்னலாய் திரும்பி மறுபக்கம் வர, இந்தியா தான் வென்றது.
வெல்ல வைத்திருந்தான் விக்ரம் அபிநந்தன்!!!
வெற்றி பெற்ற பின்னே மேலே வந்தவன், வாய் வழியாக மூச்சையும் ஆதீத சந்தோஷத்தையும் ஒரே கணத்தில் சீற்றமாய் வெளியிட, அவன் மேலிருந்த தண்ணீர் எல்லாம் அவன் சூடு தாங்காமல் சிதறித் தெறிக்க, அவனுடைய கோச்சே அவன் அருகில் செல்லவில்லை.
வெற்றியின் உக்கிரம் அவனது அந்தச் செயலில்!
சட்டென்று மடிக்கணினியை மூடியவளுக்கு, தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அன்று அப்போது, இவள் இதை அவன் மேலிருந்த கோபத்தில் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறாள். என்னவோ இப்படி ஒரு முகத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை.
“அபி மாமா சொன்னது கரெக்ட் தான்” நினைத்துக் கொண்டவள், அன்று இரவு அன்னையை கட்டிக்கொண்டு தூங்கினாள்.
அந்த தாக்கம் இன்னுமே நீங்காததால் தான் என்னவோ, அவனை படிக்கட்டுகளில் இரண்டரை வருடங்களுக்கு பிறகு பார்த்தபின்பு கூட சில்லிட்டுப் போய், உடல் குளிர்ந்து போய் நின்றுவிட்டாள் நறுமுகை.
அவள் அசையாது தன்னைப் பார்த்தபடியே நிற்பதைக் கண்டவன், தன் அத்தை பரிசளித்த ப்ரேஸ்லெட்டை அணிந்துவிட்டு அவளுக்கு மிக அருகே சென்று அவளை ஓர விழியால் பார்த்துவிட்டு கடந்து செல்ல, அவளோ தலையை குனிந்து கொண்டாள்.
அவளைத் தாண்டி வந்தவன் மெல்லிய கேலியான முறுவலை உதிர்த்துக் கொண்டு வர, அவளுக்கோ அது தெரியவில்லை. அவன் தன்னைக் கடந்தபின் நீண்டதொரு பெருமூச்சு வெளியிட்டவள், மேலே அன்னையிடம் ஓடிவிட்டாள்.
வந்தவன் தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க, அரிமாவும், அதியரனும் வந்து கூட எதிரெதிர் ஷோபாவில் அமர்ந்த கொண்டனர். சகோதரர்கள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், தாத்தனும் பேரனும் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிம்மவர்ம பூபதி காலை கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அனுப்பியிருந்த அவர்களின் பென்ஸ் அரண்மனைக்கு வர, “அரசி வந்துட்டாங்க” என்று பரபரப்புடன் எழுந்தார் அவர்.
காரிலிருந்து முதலில் ரஞ்சனி இறங்க, அவருடன் அந்த மண்ணில் முதன் முதலாக காலை வைத்து இறங்கினாள், அழகே பொறாமைகொள்ளும் அளவுக்கு அழகைப் பெற்றிருந்த அந்த அரண்மனையின் அடுத்த அரசி.
ஒட்டு மொத்த பிரபஞ்சமே மெய் மறந்து வியக்கும் அழகின் சுயரூபமாய், எதர்க்கும் அஞ்சாத படையே வந்தாலும் எதிரக்க தயாராக விளங்கும், இந்த அரண்மனையின் மூத்த இளவரசனின் ஆன்மாவையே எதிர்காலத்தில் ஆட்டிபடைக்க, பேரழகு வெண் தந்த நிற பளிக்குச் சிலையாக, முத்துப் பற்கள் தெரிய சிரிப்புடனும், அதே சமயம் வெளிநாட்டு வாசத்திலேயே இருந்தவளுக்கு, தன் சொந்தத்தை காணும் அளப்பறிய ஆவலுடனும் இறங்கிவளைப் பார்த்த அனைவரும் பனியில் விழுந்த நீராய் உறைந்துவிட்டனர்.
எதுவும் ஓடவில்லை ஒருவருக்கும்.
இருவரும் வர, ஆரத்தி எடுக்க நின்ற இமையரசியை கண்ட ரஞ்சனி, “இவளுக்கு எடுங்க ம்மா.. போதும்” என்க, “நீயும் நில்லுமா” என்றார் சிம்மவர்ம பூபதி.
அனைவரின் முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது ரஞ்சனிக்கு .
“இல்லப்பா இவளுக்கு மட்டும் எடுங்க. இவ தானே முதல் தடவை வர்றா” என்க, உத்ராவை பூரிப்புடன் பார்த்த இமையரசி ஆரத்தி சுற்ற அவர் கரங்களுடன் அழகி, கோதையின் கரங்களும் இணைந்து கொண்டன.
முட்டி கீழா வரை இருந்த சிவப்பு நிற ஸ்கர்ட்டும், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப்பும் அணிந்து, ஹை போனி டெயில் இட்டு, விழியில் துறுதுறுத்தனம் மின்ன, சிவந்த அதரங்கள் நிறைய சிரிப்புடன் பேரழகியாய் நின்றிருந்தவளை வைத்த கண் வாங்காது பார்த்த இமையரசி,
“ரொம்ப அழகா இலட்சணமா இருக்கடா கண்ணு.. ராணி மாதிரி” என்று அவளின் நெற்றியில் பொட்டு வைக்க, பின்னால் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினர்.
பன்னிரெண்டு வயதை இப்போது தான் அடைந்திருக்கும் மொட்டு அவள். இருபதின் முடிவில் இருக்கும் முழு ஆண்மகன் அவன்.
முழு கம்பீரத்துடனும், இராஜ வம்சத்துக்கே உரிய லட்சணத்துடனும், ஆறடி உயரத்தில், தனது ஊசி முனை கூர் பார்வையாலேயே எதிரில் இருப்போரின் இதயங்களை நொடி வேகத்தில் துடிக்க வைத்து, தன் எண்ணங்களையும், உணர்வுகளையும் யாருமறியாது தன் செயலை தடாலடியாக செய்து முடித்து, எப்போதும் திடகாத்திரமான மனதை வைத்திருப்பவன் குணமும், தன் மேல் அவன் வைத்திருக்கும் வஞ்சகமும் வந்திருப்பவள் அறிவாளா?
படிகளில் இறங்கும் போதே திமிரும், தோரணையுமாய் இறங்கியவனின் விழிகள், ரஞ்சனியை கண்டவுடன், கூர்மையானது. அவனின் விழியை சந்தித்த ரஞ்சனியால் அவன் என்ன நினைக்கிறான் என்று கணிக்க முடியவில்லை.
அடுத்து அவனின் விழிகள் அப்படியே அருகில் நின்ற உத்ராவிடம் செல்ல, உத்ராவை கண்ட அவனின் விழிகள்பிரதிபலித்த உணர்வை உணர்ந்த ரஞ்சனியின் உள்ளங்கால்கள் வியர்த்துப் போனது.
‘என்ன பார்வை இது?’ அவன் பார்வையில் சப்த நாடியும் ரஞ்சனிக்கு ஒடுங்கி, முகம் வெளிறிப் போய், நா வறண்டு போனது.
பேரச்சம் கொண்டது தாய் மனம். மனம் படபடக்க குஞ்சைக் காக்கும் கோழியாய் மகளின் கரத்தை தன்னுடன் அவர் இறுக்கி பிடித்துக்கொள்ள, அது அவனின் விழிகளில் தப்பாமல் சிக்கியது.
இதழில் ஒரு இளக்கார மென் நகை!!!
அத்தனை தூரத்திலும் அவன் கழுத்தில் பளபளப்புடன் மினுமினுத்த, அவன் அத்தை அவனுக்கு பரிசளித்த பல்லாடியமும் (palladium) ரோடியமும் (rhodium) கலந்த புலி பாயத் தயாராய் இருப்பது போன்ற சங்கிலி, அவன் எண்ணத்தை எடுத்துரைக்க, தனது பெண் மான் குட்டியின் கரத்தை தனக்குள் இன்னும் கொண்டது தாய் மான்.
இது எதுவும் அறியாது, தன்னை வெறுக்கும் ஒருவன் இங்கு இருக்கிறான், எதிர்காலத்தில் தன்னை அவன் எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்ல காத்திருக்கிறான் என்ற உணர்வு என எதுவும் சிறிதும் இல்லாது புன்னகையுடன் தன்னை விட சிறியவளான திலோத்தமையை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஆனால், ரஞ்சனியை ஏதோ ஒன்று பாதிக்கத் துவங்கியது. அது எச்சரிக்கை உணர்வா அல்லது உள் உணர்வா என்று தெரியவில்லை. உள் மனம் எதையோ ரஞ்சனிக்கு உணர்த்தி, அதிர வைத்து, உடலெங்கும் பரவ, எதிர் வந்தவனின் எண்ணம் வலுவாய் இருந்தது.
எண்ண அலைகள் எங்கும் சிதறாது, ஒரே கோட்டில் எப்போதும் உறுதியாக இருக்கும் மனிதனால் மட்டுமே இப்படி ஒரு உணர்வால் அடுத்தவரை நடுநடுங்கி போகச் செய்ய முடியும். மனஉறுதியும், அழுத்தமும் கொண்ட எண்ணங்களை கொண்ட ஒருவனுக்கு, கடவுளே எதிர் வந்தாலும், தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளும் மகத்தான ஆற்றல் உண்டு.
ஒருவன் எண்ணங்களே உலகை ஆளக்கூடியவை! அதிசயங்களை நிகழ்த்தக் கூடியவை! சாதனைகளை புரியக் கூடியவை! முன்னேற்றத்தை நிகழ்த்தக்கூடியவை!
மொத்தத்தில் ஒருவனின் எண்ணமே அவனின் ஆணிவேர்!
அவன் சித்தார்த் அபிமன்யு.