ஆட்டம்-7
ஆட்டம்-7
அத்தியாயம்-7
அவரின் விரல் நடுக்கம் புரிந்த விக்ரம், அவர் கரம் மேல் கரம் வைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தார் விஜயவர்தன். அவரின் கரத்தை அழுத்திக் கொடுத்த விக்ரம், புன்னகைத்து, “அபி அவ்வளவா பேசமாட்டான்னு தெரியும். ஆனா ஐ நோ (I know). அவனோட ஆக்ஷன்ஸ் தான் பேசும்னு. என்ன நடந்துச்சுனு நீங்க தைரியமா சொல்லலாம்” என்றான் அவரின் கைகளில் கொடுத்த அழுத்தத்தை வார்த்தைகளிலும் கொடுத்து.
“உன் அண்ணனை பத்தி உன்கிட்டையே எப்படி சொல்றது விக்ரம்” அவர் கூற, வாய்விட்டுச் சிரித்தவன் நன்றாக ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து, அவனுக்கு முன்னிருந்த பெர்ரி பாங்கர் என்னும் மாக்டெயிலை அருந்திவிட்டு, தனக்கு இடப்பக்கம் பார்க்க, அவனை ஒரு அமெரிக்க அழகிய பெண் விழியால் விழுங்கிக் கொண்டிருக்க, தனது வசீகர விழியால் கண்ணடித்து அவளைப் பார்த்து தனது சினேகமான புன்னகையை அவன் உதிர்க்க, அப்பெண்ணும் அவனிடம் வந்து அவனின் தோளின் மேல் கை வைத்து, “யூ ஆர் ஹாட்” என்று சொல்லி விட்டுச் செல்ல, அப்போதும் புன்னகையே.
ஒரு நொடி எங்கோ பார்த்திருந்தவன், “நாங்க பேசறது இல்ல மாமா” என்றான் விஜயவர்தனிடம். அதுவரை மாப்பிள்ளையின் செயலை சிரிப்பும், ரசனையுமாக அவர் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில், அவருக்கு புரையே ஏறிவிட்டது.
“வாட்?” அவர் கேட்க,
“ஆமா. சின்ன வயசுல இருந்தே. கடைசியா பேசுனது அத்தை கல்யாணத்துல” என்றான் இலகுவாக. அவன் வார்த்தைகளில் வருத்தம் இருப்பது போன்றெல்லாம் அவருக்கு தெரியவில்லை.
“என்ன காரணம் விக்ரம். நாங்களா?” அவர் கேட்க,
“அப்படியெல்லாம் இல்ல மாமா. நீங்க சின்ன வயசுலையே பாத்திருக்கீங்களே. எங்களுக்குள்ள அவ்வளவு பான்ட் இல்ல” என்றான் தோள்களைக் குலுக்கிக்கொண்டு.
“பான்ட் இல்லனு சொல்ற.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் பேசமாட்டான் அவன் ஆக்ஷன்ஸ் தான் பேசும்னு சொல்ற.. அவனை ரொம்பவே நல்லா தெரிஞ்சு வச்சிருக்க?” அவர் சரியான நேரம் பார்த்துக் கேட்க பல் வரிசை மின்ன அழகாய் வாய்விட்டுச் சிரித்தான் விக்ரம் அபிநந்தன்.
அவர் புரியாது அவனைப் பார்க்க, “கண்டிப்பா மாமா. ஆனா, என்னை பத்தி அவன்கிட்ட பேசுனா என்னை விட அதிகமா என்னை பத்தி சொல்லுவான். அவன் நீங்க நினைக்கற மாதிரி இல்ல” என்றனிடம்,
“தெரியும்” என்றார் விஜயவர்தன்.
விக்ரம் அவரை கேள்வியாய் பார்க்க, “நான் உத்ரா கிட்ட வந்து அப்ஸெட்டா உக்காந்துட்டேன். அப்புறம் பாப்பா பேசறாளேன்னு நானும் பேசிட்டு இருந்தேன். எதேச்சையா பாத்தப்ப தான் தெரிஞ்சுது. அபிமன்யு உத்ராவையே பாத்துட்டு இருந்தது. அந்த பார்வை..” என்று குரல் நடுங்க கூறியவர், “தப்பான பார்வை இல்ல விக்ரம்..” அவர் அவசரமாக கூற, கைகளை கோர்த்து தாடைக்கு கொடுத்து வைத்திருந்தவன், “தெரியும்” என்றான்.
“ஏதோ கோபமா பாத்தான் விக்ரம். எனக்கு என்னன்னு சொல்ல தெரியல. வன்மமா. அப்படி ஒரு பார்வை உத்ரா மேல. வன்மத்துக்கும் மேலன்னு சொல்லலாம். ஆனா, சத்தியமா அது நல்லதுக்கு இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது” என்றவர் தன் கரத்தின் மேலிருந்த விக்ரமின் கரத்தை பிடித்து,
“அவங்க அடுத்த மாசம் வந்தா.. உத்ராவை கொஞ்சம் பாத்துக்க விக்ரம்” என்றார் அவர்.
“உத்ரா என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டி மாமா. நீங்க வொர்ரி பண்ண வேணாம்” அவன் கூறினாலும், அவன் ஆழ் மனதில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அதிவிபரீதத்திற்கான எச்சரிக்கை உணர்வும், மன அதிர்வும் பெருஞ்சீற்றமாய் எழத் துவங்கியது.
அதை மனதில் நிறுத்தியிருந்த விக்ரமிற்கு, உத்ராவை பார்த்து வைத்த அபிமன்யுவின் பார்வையில் தெறித்த அதீத வெறுப்பும், கண்ணாடியாய் பிரதிபலித்த வன்மம் கூடிய பளபளப்பும், அவன் சிறியவள் கூறியபோது கூட உத்ராவை பார்க்கத் தவிர்த்ததும் அவனின் விழிகளுக்கு தவறாமல் சிக்கியது.
விக்ரமின் இகழ்ச்சிப் புன்னகைக்கு பதிலாக இளக்காரமான பார்வையைக் கொடுத்தவனுக்கு ஏதோ அழைப்பு வர, தனது ஃபோனை எடுத்துக் கொண்டு அரண்மனையில் இருந்த லைப்ரரிக்குள் நுழைந்தான்.
“ஹலோ” அபிமன்யு.
“அபி!! நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம்” என்றாள் மேக்னா.
“ம்ம். ஐ வில் சென்ட் தி கார் ( I will send the car)” லைப்ரரியில் இருந்த புத்தகங்களில் பார்வையை செலுத்தியவாறே கூறியவனிடம்,
“அபி, லவ் யூ” என்று கிறங்கினாள் பெண்ணவள்.
சென்னையை சேர்ந்தவள், யூ.எஸ் படிக்கச் சென்றபோது, ஒரே வகுப்பைச் சேர்ந்தவளுக்கு ஆணவனின் மேல் மலர்ந்த காதல் அது. அபிமன்யுவின் ஆண்மை மிகுந்த அழகிலும், பிறர் மிதமிஞ்சா முடியா அறிவிலும், அவனின் கர்வத்திலும், தோரணையிலும், நடையிலும், பணக்காரத் தோற்றத்திலும் வீழ்ந்தவள், அவளே தான் முதலில் காதலைக் கூறினாள்.
மெழுகு சிலை போல், பளபளவென்று, நிலவாய் ஜொலிப்பவளை தவிர்க்கத் தோன்றவில்லை அவனுக்கும். கல்லூரியில் அனைவரும் அவள் பின் சுற்ற, அவள் சுற்றியது என்னமோ அபிமன்யுவின் பின்பு தான்.
ஆனால், “முதல்ல நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம். தென் ஐ வில் டிசைட் ( Then I will decide )” என்று அபிமன்யு கூற, அப்போதே அவளுக்கு வானில் பறக்கும் உணர்வு.
பல அமெரிக்க அழகிகள் சுற்றியும், வட்டமிட்டும், தலைகீழாக நின்று பார்த்தும் கூட, திரும்பி யாரையும் காணாத திமிருக்கு ஏற்ற அரசனாகி இருந்தவன் தன்னிடம் இப்படி சொல்வதே அவளுக்கு வென்றுவிட்டதை போல ஆக, தலையை ஆட்டிவிட்டாள்.
அவளின் கிறக்கத்துக்கு, “ம்ம்.. வீட்டுக்கு வந்துட்டு ப்ரெஷ் ஆகிட்டு கோயிலுக்கு வந்திடுங்க” என்றவன் ஃபோனை வைத்துவிட்டு, அவன் கண்ணைக் கவர்ந்த ஒரு புத்தகத்தை எடுக்கவும், இமையரசி உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது.
புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவன், இமையரசி வருவதைக் கண்டு புத்தகத்தை மூடி கரத்திலேயே வைத்தவன், “சொல்லுங்க பாட்டி” என்றான் வேறு புத்தங்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியபடியே.
“உனக்கு உத்ராவை புடிக்கலையா கண்ணா? ரஞ்சனிகிட்டையும் நீ பேசவே இல்லியே?” அவர் ஆதங்கமாக கேட்க, அவனுடைய அமைதியே பதிலாக அவருக்கு கிடைத்தது.
“உள்ளுக்குள்ள ரொம்ப கோபத்தை வச்சிட்டு இருக்காத அபி” அவர் கூற, ஒரு பெருமூச்சை விட்டவன் கையிலிருந்த புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, “என்னோட கோபத்தை காட்டுனா யாரும் இருக்க முடியாது” என்றான் அழுத்தமாக.
அந்த அழுத்தமான குரல் அந்த இடம் முழுதும் பட்டுத் தெறிக்க, இமையரசிக்கு இதயம் அதிர்ந்து துடித்தது.
அந்த அழுத்தத்தில் அவன் மனதில் இருந்த சூடான அனல் சுற்றத்தில் பரவுவதை உணர்ந்த இமையரசி, அவனின் கரத்தைப் பிடித்து திருப்பியவர், “இங்க பாரு அபி.. யாருகிட்டையும் வெறுப்பை காமிக்காத” தன்மையாக கூற, அவனின் கரத்தை பிடித்திருந்த இமையரசிக்கு அவனின் கரம் கோபத்தில் இறுகி நரம்பின் வரிகள் பரவுவது புரிந்தது.
சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தான். அவனின் கரத்தை அவர் பார்க்க, அதில் நரம்புகள் புடைத்துத் தெறித்துக் கொண்டிருந்தது.
“எதுக்கு அபி இப்படி கோபம்?” அவர் ஆற்றாமையுடன் கேட்க, உள்ளே இருக்கும் அவன் ஆத்திரம் என்னும் நிலநடுக்கம், அந்த மலையை வெடித்துப் பிளக்கச் செய்ய காத்திருக்க, அனைத்தையும் ஒரே நொடியில் கட்டுப்படுத்தியவன், நேராக இமையரசியின் விழிகளை பார்த்தான்.
அப்படி கட்டுப்படுத்த முடிந்ததால் தானே அவனின் கோபம் இன்னும் யாரும் அறியவில்லை.
“உங்களுக்கு ஏன் என்னோட கோபம் இல்லைன்னு கேக்கறேன். எனக்கு வளர வளர இன்னமும் அதிகம் தான் ஆகியிருக்கு. அத்தையை தனிமரமா பாக்கும் போது..” கழுத்து நரம்புகள் புடைக்க பல்லைக் கடித்தவன்,
“இத்தனை வருசமா சொல்லாத ஒண்ணை சொல்றேன்.. உங்களுக்கு தெரியுமா.. அத்தையும் உங்க தம்பியும் நிறைய தடவை தனியா வெளிய போறதை நானே பாத்திருக்கேன்..” பூடகமாகக் கூறியவன், “அத்தை விஜய் விஜய்னு சுத்துனதையும் பாத்திருக்கேன்.. அப்படி இன்னொருத்தியை கூட்டிட்டு ஓட நினைச்சவங்க எதுக்கு கல்யாணம் வரைக்கும் வர வச்சு எல்லாரையும் அசிங்க படுத்தனும்” என்று ஒவ்வொரு கேள்வியையும் அவன் கேட்க, இமையரசிக்கு இமைகள் கலங்கியது.
“நீங்க அழணும்னு சொல்லல. என்ன இந்த விஷயத்துல இழுக்காதீங்க. நான் எங்க அப்பா மாதிரி, தாத்தா சொன்னா கூட கேக்க மாட்டேன்” என்றவன் அங்கிருந்து நடந்து செல்ல, இமையரசிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நடந்து செல்லும் பேரனின் அகன்ற முதுகையே பார்த்துக் கொண்டிருந்தார்.
யார் மீது கோபப்படுவது, யார் மீது குறை கூறுவது என்று அவருக்கு புரியவில்லை. ஒரு பெருமூச்சுடன் இப்போது கோயிலுக்குக் கிளம்பத் தயாரானார்.
“அம்மா ஏன் அவங்க என்கிட்ட பேசவே இல்லை” குளித்து முடித்து சூரியப் பந்து தகதகக்கும் நிறத்தில், இலை பச்சை கரையிட்ட பட்டுப் பாவாடையை உடுத்திக் கொண்டு பேரெழியாய் வந்த உத்ரா, அன்னையிடம் கேட்க, ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ரஞ்சனிக்கு அது எரிச்சலாக,
“கேள்வி கேக்காம சீக்கிரம் கிளம்பு” என்று அதட்டியவர், சின்னவளுக்கு தலையை சீவிவிட, சின்னவளோ, “ஆமா, அக்கா சொல்றது ரைட்” என்று சொல்ல சின்ன மகளின் தோளில் அடித்தவர், “நீ வாயை வச்சுட்டு கம்முனு இருக்க மாட்டியா மித்து” என்றிட, சிவப்பு நிறத்தில் தங்க கரையிட்ட பட்டு பாவடையில் இருந்த சின்னவளோ, கீழே குதித்து அன்னையை முறைத்துவிட்டு சென்றாள்.
“என்னடி முறைக்கிற?” என்று சின்ன மகளை திட்டியவர், உத்ராவின் தலையையும் சீவிவிட்டு, ஒரு மணி நேரத்தில் தயாராகி கீழே மகள்களுடன் வந்தார்.
அனைவரும் கோவிலுக்கு கிளம்ப, “ரஞ்சனி, நீ எங்ககூட வந்திடறியா?” அவர் ஒரு காரில் வர கேட்க, அப்போதுதான் உத்ரா, “அம்மா பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று சொல்ல ரஞ்சனி மகளை முறைத்தார்.
“அக்காவை ஏன் முறைக்கறீங்க?” சின்னமகள் கீச் குரலில் கேட்க, அவளின் வாயில் ஒன்று போட்ட ரஞ்சனி, “ஷ்ஷ் வாய் மேல் கை வை” என்று அதட்ட, அன்னையை இறுக கட்டி அணைத்து, வாய் மேல் விரல் வைத்தவள், வாய் மேல் கை வைத்தபடியே அன்னையிடம் கத்த, அதைப் பார்த்து சிரித்த கோதை,
“நாங்க எங்க கார்ல கூட்டிட்டு வர்றோம் ரஞ்சனி.. நீ குட்டியோட கிளம்பு” என்று கூற மகளை அவருடன் ஒப்படைத்த ரஞ்சனி உத்ராவிடம், “பத்திரமா வா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு, இமையரசியுடன் நகர்ந்தார்.
உள்ளே சென்ற உத்ரா அவசரமாக அறைக்குள் செல்ல, அவளுக்கோ நீண்ட நேர பயணத்தின் காரணமாக வயிற்றைக் கலக்கிவிட்டது.
அப்போதென்று விக்ரமும் அபிமன்யுவும் ஒரே நேரத்தில் வெளியே வர, “ம்மா கிளம்பலாம்” என்றான் விக்ரம்.
உத்ரா மேலே சென்றதை கூறிய கோதை, மணியை வேறு பார்க்க அப்போது பார்த்து நறுமுகையுடன் வந்த நீரஜா, “அண்ணி நீங்க சீக்கிரம் கோயிலுக்கு போகணும்ல” தனது சிம்மக் குரலில் நினைவுபடுத்த, “ஆமா” என்றவர் மேலேயே பார்த்துவிட்டு விஷயத்தைச் சொல்ல,
“ஓஹ்” என்று யோசித்தவர், “வேணும்னா நான் உங்க கூட வர்றேன். அந்த பொண்ணை அபியை கூட்டிட்டு வர்ற சொல்லலாம்” என்று நீரஜா கூற, “அத்தை!!!” என்று பல்லைக் கடித்தான் அபிமன்யு.
“அபி நாங்க அங்க போனாதான் பாட்டிக்கு ஹெல்ப் பண்ண முடியும்” என்றார் நீரஜா. அழகியும் அரிமாவும் முன்னேயே சென்றுவிட்டதால் மீதம் இருந்தது இரண்டு கார்களே.
அவன் அப்போதும் இறுக்கமாக இருக்கவே, “அபி” என்று நீரஜா அழைக்க, வெடித்துவிட்டான் அவன்.
“வாட் இஸ் திஸ் அத்தை. உங்களுக்கு தெரியும் எனக்கு அந்த பொண்ணை சுத்தமா பிடிக்காதுனு. என்னையே கூட்டிட்டு வர்ற சொன்னா என்ன அர்த்தம்” அவன் கர்ஜிக்க, அங்கிருந்த அனைவருக்கும் அது திக்கென்று இருந்தது. விக்ரமைத் தவிர.
அவன் இதைச் சொல்லும் போதே அங்கு உத்ரா வந்துவிட, அவளுக்கு அந்த வயதில் அந்த வார்த்தைகள் மிகவும் காயப்படுத்தவதாக இருந்தது. ‘அப்படி என் மேல என்ன கோபம்’ என்று தனக்குள் கேட்டவளுக்கு அவனிடம் அதைக் கேட்க முடியவில்லை. அவனை பார்த்தாலே அவளுக்கு பயமாக இருந்தது. அவனின் உயரமும், அவனின் ஆட்டிட்யூடும் அவளை அவனிடம் பேசக்கூட அனுமதிக்கவில்லை.
அங்கு வந்து நின்ற உத்ராவைப் பார்த்த நீரஜா, “அபி நான் அண்ணியோட போறேன்” என்றுவிட்டுச் சென்று காரில் ஏறி அமர, ‘இவங்க ஏன் இப்ப இப்படி போறாங்க’ என்று உத்ரா மீண்டும் குழம்பினாள்.
அவளிடம் புன்னகையை கூட வீசவில்லை அவர். அவளைப் பார்த்தவுடன் அந்த காரில் சென்று அமர்ந்துகொண்டார். ஆசையாக தாய் நாட்டிற்கு வந்தவளுக்கு அனைத்தும் வித்தியாசமாய் பட்டது.
“விக்ரம் வந்து காரை எடு” அதியரன் கூற, கையில் இருந்த சாவியை தந்தையிடம் கொடுத்தவன், “நான் உத்ரா கூட வர்றேன். நீங்க கிளம்புங்க” என்று கூற, உலகின் அதிசயங்களே நிகழும் நிலை அங்கு நிலவியது.
அனைவரும் நறுமுகை உட்பட அவனை வாய்பிளந்து பார்க்க, “ஏன் அந்த போர்ஸி டர்போ (Porsche Turbo) தாத்தா புதுசா எல்லாருக்காகவும் வாங்குனது தானே?” அவன் கேட்க, அபிமன்யு நுறுமுகையிடம், “கார்ல ஏறு நுறுமுகை” என்றுவிட்டு காரினுள் பட்டு வேஷ்டி சட்டையில் அமர, நறுமுகை பாவாடை தாவணி கலையாது இருக்க, தனக்கு வசதியாக அமர பின்னிருக்கையில் ஏறி அமர, நீரஜா சின்ன அண்ணன் வீட்டோடு கிளம்பிவிட்டார்.
நறுமுகையுடன் ஏறப்போன உத்ராவை தடுத்த விக்ரம், “நீ ப்ரன்ட்ல உட்காரு உத்ரா” என்றிட, அவளோ ஏற்கனவே அபிமன்யுவை பார்த்து பயந்து இருப்பவள், சரியென்று சொல்வாளா?
“ம்கூம்” அவள் மறுப்போடு பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்ட, விக்ரமுக்கும் பாவமாகத்தான் இருந்தது.
ஆனால், அபிமன்யுவுடம் அவன் அமர்வானா?
“உத்ரா நீ முன்னால போ” மீண்டும் விக்ரம் அழுத்தமாய்க் கூற, புதிதாக சற்று நேரத்திற்கு முன் பழகியவனிடம் அவளால் என்ன கூறிட முடியும்.
பயந்துகொண்டே அவள் முன்னே ஏற கதவைத் திறக்க, ப்ரேக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டு அபிமன்பு ஆக்ஸிலரேட்டரை எகிற வைக்க, அதுவோ மேகம் கறுக்கும் நேரத்தில் காட்டில் புல்களுக்கு பின் பாயக் காத்திருக்கும் வேங்கை போல உறும, உத்ரா பயந்துகொண்டே காரில் ஏறி கதவின் ஓரமாக அமர்ந்துகொள்ள, பின்னே ஏறியமர்ந்த விக்ரமை பார்க்க இயலாது, தனது பயத்தை முடிந்தவரை அவனிடம் மறைத்து சலாரென வெளிப்பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டாள் நறுமுகை.
முன்னே ஒரு ஜோடியில் ஒருவன் முறுக்கிக் கொண்டு இறுகி வேங்கையாய் சீறி வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க, அவனின் எதிர்காலத்தின் அவனவளோ, அவனுக்கு அஞ்சி அவனிடம் தலையை திருப்பாது, அவன் ஏதாவது பேசிவிட்டால் இறங்கிவிடுவேன் என்னும் நிலையில் நேராக பார்த்து மட்டுமே அமர்ந்திருக்க, பின்னே இருந்த ஜோடியில், அவன் தன்னவளை, தன் காதலுக்கு உரித்தானவளை, தன்னையே அறியாமல் அவள் வயப்பட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனுக்கு தன் வதனம் கூட காட்டாது, அவனிடம் தன் பலவீனத்தைக் காட்டாது தைரியமாய் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள்.