தாழையாம் பூமுடித்து🌺8

தாழையாம் பூமுடித்து🌺8

                            8

ஊரின் நாடகமேடையில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி, பெயருக்கு சில கட்டுப்பாடுகளோடு  நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவு பத்துமணி வரைக்கும் தான் நடைபெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தாலும், நேரம் கடந்தும் நிகழ்ச்சி நிறைவு பெறவில்லை. இளவட்டங்கள் விருப்ப பாடல்கள் கேட்டு கத்திக் கொண்டிருந்தனர். திருவிழா நேரம். கேட்கவா வேண்டும். பெரும்பாலான இளவட்டங்கள் மிதப்பாகத் தான் திரிந்தார்கள். எல்லா வகையான மிதப்பும் தான்.

நிகழ்ச்சியைப் பார்த்தே ஆகவேண்டுமென அடம்பிடித்து உடன்பிறப்பை அழைத்துக் கொண்டு வந்தாள் பிரியா. 

அலைச்சலில் திலகவதி சற்று உடல் களைத்துவிட, தனியே விட்டு வர மனமில்லாமல் சங்கரி அப்பத்தாவோடு இருந்து கொண்டாள். 

கூச்சலும் கும்மாளமுமாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்க்க வந்தவள், திடீரென முளைத்த திருவிழாக் கடைகளில் பொருட்களை விலை கேட்க ஆரம்பிக்க, 

“இங்க என்னத்தடி புதுசா வாங்கப்போற.” என ஸ்ரீ அலுத்துக் கொண்டான்.

“எனக்கு நேத்து நைட்டே பலூன், குச்சி ஐஸ்ஸெல்லாம் வாங்கித்தர்றேனு தூக்கத்துல இருந்தவள எழுப்பி கூட்டி வந்துட்டு ஒன்னுமே வாங்கித் தரல. ஒழுங்கு மரியாதையா இப்ப எல்லாத்தையும் வாங்கிக் கொடு.” என்க,

“நீ என்ன சின்னப்பிள்ளையா. ஏன்டி இப்படி இம்ச பண்றே.” என சலித்துக் கொண்டவன், 

“நீ வேணுங்கறத எடுத்துட்டு கூப்புடு.” என அவன் ஆட்டத்தில் கவனம் வைத்தான். 

வளையல், பாசி என ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, விலை கேட்க ஆரம்பித்தாள். மால்களில் ஷாப்பிங் செய்து பழகியவளுக்கு இது எல்லாம் புதிதாக இருக்க, ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

திடீரென ஏதோ வித்யாசமாகத் தோன்ற, திரும்பி பார்க்க, அவளருகில் இரண்டு மூன்று இளவட்டங்களும், பொருட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர். தாராளமாக இடமிருந்தும் இவளை ஒட்டி நிற்பது போல் இருக்க, எதற்கு வம்பு என நகர்ந்தவள் அடுத்த கடைக்கு சென்றாள். சில நிமிடங்களில் அங்கும் வந்தனர். பின்புறம் ஏதோ நெருட, திரும்பிப் பார்த்தவள்,

“தள்ளி நிக்கறது தான. அங்க தான் இடமிருக்கே.” என்றாள் துடுக்காக.

“என்ன இருந்தாலும் இந்த எடம் மாதிரி வருமா?” என கேட்டவன் மீது குப்பென சாராய நாற்றம். நிலமை சரியில்லை என புரிந்தவள், ஸ்ரீ யைத் தேடிக்கொண்டு நகர்ந்தாள்.

“என்னம்மா… ஒன்னும் வாங்கலியா?” என கடைக்காரர் கேட்க,

“வேண்டாம் ண்ணா.” என்று இவள் நடையைக் கட்ட,

“ஏம்ப்பா… பொம்பளப்பிள்ளைக ஏவாரம் பண்ற கடையில வந்து ஏம்பொழப்ப கெடுக்கறீங்க?” என வந்த வியாபாரம் விட்டுப் போனதில் கடைக்காரர் அலுத்துக் கொண்டார். இந்த மாதிரி நேரங்களில் கல்லா கட்டினால் தானே உண்டு. 

“காசு இல்லாம போகுது போலண்ணே. பாப்பா… எது வேணும்னாலும் எடுத்துக்கோ. மச்சானுக நாங்க காசு தர்றோம்.” என அழைக்க, 

“யாரு யாருக்குடா மச்சான். யார்ரா இங்க பாப்பா?” என சென்றவள், திரும்பி எகிறிக் கொண்டு வந்தாள்.

இவர்களைப் பார்த்த ஸ்ரீ வேகமாக வந்தான். 

“என்னடி… கலாட்டா பண்ற?” என தங்கையைக் கேட்க,

“இவனுக தான் கலாட்டா பண்றானுக.” என்க,

“நீ மொதல்ல எடத்த காலி பண்ணு. இதுக்கு தான் வரவேண்டாம்னு சொன்னே. கேட்டியா? எங்க போனாலும் வம்ப வெலைக்கு வாங்குவ!” என இவன் குரல் உயர்த்த,

“நான் ஒன்னும் பண்ணல. இவனுக தான்…” என உடனே முகம் சுண்டியது அவளுக்கு.

“பேசாம வாடி!!” என்று அதட்டினான்.

“இது அவனோட ஆளு போலடா. அதான் டென்ஷன் ஆகுறாப்ல பாருங்க டா.” என சிரிக்க,

“டேய்ய்… யார்றா ஆளு. அவன் என்னோட அண்ணன் டா.” என கோபத்தில் எகிறிக் கொண்டு நின்றாள்.

“இப்ப எல்லாம் ப்ரோ னு சொல்லிட்டு சுத்தறத தான் ட்ரென்ட் ஆக்கிட்டீங்களே?” என கேட்க,

“வாடின்னா கேக்க மாட்டியா?” என இவளை மீண்டும் அதட்டி அழைத்து சென்றான்.

“அவன் கரெக்டா தான் மாப்ள இருக்கான். உரிமையா டி போடுறான் பாரு. பாப்பா தான் ப்ரதர் ஃபீலிங்லயே இருக்கு போல.” என கேலி பேசிவிட்டு நகர,

“ஏன்டா, அவனுக அப்படிப் பேசிட்டு போறானுக. என்னைய அதட்டுற.” என, அவர்களை எதுவும் பேசாமல் வந்தவனிடம், இவளும் கோபத்தை காமிக்க,

“உனக்கு அறிவிருக்கா? அவனுக தான் குடிச்சிருக்கானுகன்னு தெரியுதுல்ல. அவிங்க கிட்ட எகிறிட்டு போற?” என ஸ்ரீ யும் இவளைத் தான் கண்டித்தான். 

“அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவானுகளா? நீயும் பேசாம வர்றே. கராத்தே க்ளாஸ்னு போனதெல்லாம் சும்மாவா? பொண்ணுகள இம்ப்ரஸ் பண்ண மட்டும் தான் உடம்ப ஏத்தி வச்சுருக்கியா?” 

“இவனுகளப் போயி அடிக்க சொல்றியா? ரொம்ப வருஷம் கழிச்சு ஊருக்கு வந்துருக்கோம். வம்பு வேண்டாம்னு பாக்குறே. பிரச்சினை பெருசாகி அப்பா காதுக்கு போச்சுனு‌ வையி, இதையே சாக்கா வச்சு, அடுத்து அப்பா நம்மல ஊருக்கே விடமாட்டாரு. நம்மல கூட்டிவந்த சித்தப்பாவுக்கும் சேத்து பேச்சு விழும். தேவையா இதெல்லாம். வா வீட்டுக்கு போகலாம்.” என அழைத்தான். அவன் பேச்சிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தவள் சற்று கோபம் தணிந்தாள். நிதானம் தப்பியவர்களிடம் வம்பு வைத்துக் கொண்டு இந்த சந்தோஷத்தை ஏன்‌ கெடுத்துக் கொள்ள வேண்டும் என யோசித்தவள்,

“அதெல்லாம் முடியாது. என்னோட மூடயே ஸ்பாயில் பண்ணிட்டானுக. இப்ப சாப்புட்டே ஆகணும். ஏதாவது வாங்கித்தா.” என்றவளை,

“உன்னைய எல்லாம் திருத்தவே முடியாது! வா!” என அழைத்துச் சென்றான்.

சாவடியில் தனது சேக்காளிகளோடு அமர்ந்து, நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரன், பிரியா அவர்களிடம் எகிறிக் கொண்டு போவதைப் பார்த்து, வேகமாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்து வந்தான். 

“டேய்… யார்ரா இவிங்க எல்லாம். பாத்தா நம்ம ஊர் மாதிரியே தெரியலியே?” என அவனோடு எழுந்து வந்த நண்பர்களிடம் கேட்டுக்கொண்டே வந்தான். அதற்குள் ஸ்ரீ அவ்விடம் வர, ஈஸ்வரன் தள்ளி நின்று கொண்டான். 

இவன் போக, இவன் பின்னால் நாலு பேர் போக, திருவிழா நேரத்தில் சின்ன பிரச்சினை கூட பெரிதாகிவிட வாய்ப்புள்ளது. இதுவே சாதாரண நேரமாக இருந்திருந்தால் கேலி பேசியவர்கள் வாய் இந்நேரம் கிழிந்திருக்கும். 

சட்டென்று வேட்டியை மடித்துக் கட்டி, மீசையை முறுக்கி, மல்லுக்குப் போவது மட்டும் ஆண்பிள்ளைத்தனம் இல்லை. இடம், பொருள், ஏவல் பார்த்து நிதானமாக சூழ்நிலை அறிந்தும் நடக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

“யார‌ மாப்ள கேக்குற?” என நண்பர்கள் கேட்க,

“அதோ… அங்க  வளையல் கடைக்கிட்ட சலம்பிட்டு இருக்குறானுகளே. அவனுக தான்டா.”  என்க,

அவனுகளை சற்று கவனித்த நண்பர்கள், “இவிங்களா? பக்கத்து ஊர்க்காரனுகடா. நீ… ரெண்டு மூனு வருஷமா வரலைல. போன மூனா  வருஷம் கபடி போட்டில தோத்துட்டு பிரச்சினை பண்ணுனானுக. ஜாதிக் கலவரமாயிருக்கும். ரெண்டு ஊரு பெருசுகளும் சேந்து சமரசம் பேசி முடிச்சு விட்டாங்க. டம்மி பீசுகடா. ஏதொன்னுக்கும் இவிங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கணும்.” என நண்பர்கள் கூற, 

“பாத்துக்கலாம் வாங்கடா.” என அவ்விடத்தை விட்டு அகன்றனர். 

திருவிழாவின் மூன்றாம் நாள். உண்மையான கொண்டாட்டமே இன்று தான். இதுவரை விரதம் காத்த ஊர்மக்கள் விரதம் முடிக்கும் நாள். இரண்டு நாட்கள் சாமிக்கு, மூன்றாம் நாள் ஆசாமிகளுக்கு என, அனைவர் வீட்டிலும்… ஆடு, கோழி என அசைவம் தான். வந்த சொந்த பந்தங்களோடு ஆண்கள் எல்லாம் குடியும் கும்மாளமும் தான். ஒன்றும் சொல்ல முடியாது. 

இன்று தான் சாமி ஊர் விளையாடி வரும். அதாவது புதன்கிழமை முழுவதும் கோவிலில் கொலுவிருக்கும் அம்மன், வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் ஊர் சுற்றிவர ஆரம்பித்து அப்படியே பூஞ்சோலை செல்லும்.‌ அப்பொழுதுதான் மஞ்சத்தண்ணீர் விளையாட்டும். முறைப்பையன், முறைப்பெண்கள் எல்லாம் மஞ்சத்தண்ணீர் ஊற்றி விளையாடுவதும். 

காளி அம்மன் ஆங்காரி. அதனால் ஊர்சுற்றி வராது. பகவதி அம்மன் விளையாட்டுக்காரி. ஊர்விளையாண்டு வரும். 

காளியம்மனுக்கு கோவிலில் அர்ச்சனை. பகவதி அம்மனுக்கு வீட்டுவீட்டிற்கு வாசலில் அர்ச்சனை நடக்கும். இது ஊருக்கு ஊர் மாறுபடலாம்.

காளியம்மனுக்கு அர்ச்சனை செய்ய முத்துவேல்… அம்மாவோடும், அண்ணன் பிள்ளைகளோடும் கோவிலுக்கு கிளம்பினார். 

வீதி முழுக்க சங்கரியின் கண்கள் ஈஸ்வரனைத் தான் தேடியது. கோவில் முன்பும் அவனைப் பார்க்க முடியவில்லை.

கோவிலுக்குள் செல்ல, ஈஸ்வரனும் அர்ச்சனை செய்ய அத்தையோடும், அத்தை மகளோடும் அங்கு வந்திருந்தான். 

பார்த்தவள் கண்கள் சட்டென பட்டாம்பூச்சியாய் விரிய, அடுத்த நொடி தொட்டாச்சிணுங்கியாய் சுருங்கியது, அவனோடு ஒட்டி உரசி நின்ற மலர்க்கொடியைப் பார்த்து. 

அத்தை ஜெயந்தியோடும், மலர்க்கொடியோடும் ஈஸ்வரன் நின்றிருக்க.

அவர்கள், இவர்களை எதிர்பார்க்கவில்லை போலும். ஜெயந்தி சங்கடமாகப் பார்த்தார். 

திலகவதி, ஜெயந்திக்கும் பெரிய மாமன் மனைவியாயிற்றே. இவர்களோடு நேரடி பிரச்சினை இல்லை எனினும் அண்ணன் குடும்பத்தை பகைத்துக் கொண்டவர்களோடு, தாய்மாமன் குடும்பமாகவே இருந்தாலும், ஜெயந்தியும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. 

அண்ணன் தவசிக்கு ஆகாத குடும்பம் நமக்கு மட்டும் என்ன வேண்டிக் கிடக்கு என்ற வீராப்பு தான். 

உறவுகள் வீட்டு விசேஷங்களில் சந்தித்துக் கொண்டாலும், பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவர். பேச்சு வார்த்தை இல்லை. 

‘நீ பேசுனா நானும் பேசுறே. இல்லைனா நானும் பேசல.’ என வறட்டுக் கௌரவம் பார்த்தனர். 

இப்படி நேருக்கு நேராகப் பார்த்து நிற்கவும், பேசாமலும் இருக்க முடியவில்லை. ஏனோ பிள்ளைகள் மூவரையும் பார்க்கவும், ஜெயந்திக்கு பேசாமல் போகவும் மனம் வரவில்லை. சிறுபிள்ளைகளாகப் பார்த்தது. வளர்ந்து வாலிப்பாக நின்றனர்.

“நல்லா இருக்கீங்களா அத்தே!” என நலம் விசாரிக்க, திலகவதியாலும் பதில் கூறாமல் இருக்க முடியவில்லை. 

“நல்லா இருக்கோம் ஜெயந்தி. நீ எப்படி இருக்க. இது உம்மகளா?” எனக் கேட்க, அதற்குள் கற்பூர ஆர்த்தி வர, கண்களில் ஒற்றிக் கொண்டு, அரச்சனையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். 

“உம் மகன் என்ன பண்றான்?” என திலகவதி விசாரிக்க,

“போலீஸா இருக்கான் அத்தே. தவசி அண்ணே மகளத்தானே பொண்ணெடுத்திருக்கு.” என்க,

“அது தெரியும் ஜெயந்தி. எப்படி இருக்குதுக?” என நலம் விசாரித்தார்.

பேச்சு வார்த்தை இல்லை எனினும், விசேஷங்களுக்கு வரும்பொழுது பேச்சுவாக்கில், இரு குடும்ப விஷயங்களும் மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தனர். 

“நல்லா இருக்காங்க. இப்ப தீபிகாவுக்கு ஏழாம் மாசம். நல்லபடியா பேருகாலம் ஆகணும்னு அம்மா தான் நம்ம ஊர் கோயில்ல போய் அர்ச்சனை பண்ணிட்டு வரச்சொல்லுச்சு.” என்க,

“அம்மா எப்படி இருக்கு?” என நாத்தனாரைப் பற்றி விசாரித்தார்.

“நல்லாருக்கு த்தே. அண்ணங்களப் பத்தியும், அண்ணே மகனுகளப் பத்திதான் அடிக்கடி பேசும். என பேச்சியைப்பற்றி கூற, தயக்கம் தாண்டி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. நீண்ட நாள் பகை சற்று திலகவதியிடம் நீர்த்துப் போயிற்று போலும். ஜெயந்தி வலியவந்து பேசவும் அவரும் சற்று இளகிப் பேசினார்.  

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, சங்கரியின் கண்கள் மலர்க்கொடியைத்தான் ஆராய்ந்தது. பாவாடை தாவணியில், கச்சிதமான உடல்வாகோடு, ஈஸ்வரனை உரிமையாக உரசிக்கொண்டு நின்றது, இவளது பார்வையை உறுத்தியது.

“பிள்ளைக்கு மாப்பிள்ளை ஏதும் பாக்கலியா?” என பேச்சு வளர்ந்து கல்யாணப் பேச்சில் வந்து நிற்க… 

“மாப்பிள்ளைக ஜாதகமெல்லாம் வருது அத்தே. எனக்குத்தான் வெளில கொடுக்க இஷ்டமில்ல. பெரிய அண்ணே பொண்ணு கொடுத்து, பொண்ணெடுக்க மாட்டேனு சொல்லிருச்சு.” என இருவரும் பேசிக்கொண்டிருக்க,

“அதெப்படி பொண்ணு எடுக்காம போறார்னு நானும் பாக்குறே. அவரு மக நம்ம வீட்ல வாழணும்ல. என்ன… மாமா… நாஞ்சொல்றது சரித்தான?” என அருகில் நின்ற ஈஸ்வரனிடமும் கேட்க,

“மலரு பேச்சுக்கு மறுபேச்சு ஏது?” என அவனும் கிண்டலாகக் கூறினான். 

மலர்க்கொடி பேசியது கேலிக்கு என ஜெயந்திக்கும், ஈஸ்வரனுக்கும் தெரியும். தவசி மறுப்பு சொல்ல, சின்ன அண்ணன் மகனுக்கு மலர்க்கொடியை பேசி முடித்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே குடும்பம் தானே என்ற கணக்கில் மலர்க்கொடி பேசினாள்.

இருந்தாலும், “உங்க மக எப்படி எங்க அண்ணங்கூட வாழுதுன்னு நானும் பாக்குறே. நாத்தனார் கொடுமைனா என்னானு காட்டல எம்பேரு மலர்க்கொடி இல்ல.” என பெரிய மாமன் தவசியிடம் சவால் விட்டு வம்பிழுத்துக் கொண்டிருப்பாள். 

“இப்பவும் எங்க வீட்டுக்கு தான வரப்போற. என் வீட்டுக்கு வந்தா என்ன? எந்தம்பி வீட்டுக்கு வந்தா என்ன? உன் நாத்தனாவ நீயே கவனிச்சுக்க?” என மாமன் பதில் கொடுப்பார். 

இது இவர்களுக்கு தெரியாதே.

ஜெயந்தியும் வெளியே கொடுக்க விருப்பமில்லை எனக்கூறியதோடு நிறுத்திக் கொள்ள, பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள் போல என நினைத்துக் கொண்டனர். பெரும்பாலும் சொத்துபத்து வெளியே செல்ல விரும்பமாட்டார்கள் எனத்தெரியுமே. எனவே ஈஸ்வரனுக்கே மலர்க்கொடியை மணம் முடிப்பார்கள் என நினைத்துக் கொண்டனர்.

சங்கரியும் அப்படியே விளங்கிக் கொள்ள, ஏனோ அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. இதுவரை இருந்த மனநிலையில் ஏதோ ஒரு இனம்புரியா மாற்றம். சென்னையிலிருந்து கிளம்பும் பொழுது எதையோ தேடி வந்தது போல் ஒரு உணர்வு. எதை என்று இன்னும் விளங்கவில்லை. இப்பொழுது எதையோ தொலைத்தது போல் மனம் வெறிச்சோடிப் போனது. அதுவும் புரியவில்லை. தேடியது எது எனத் தெரிந்தால் தானே தொலைத்தது எது என்று புரியும். 

“அம்மா… நீங்க பேசிக்கிட்டு இருங்க. நா… கடைக்குப் போகணும், காசு தாங்க.” என மலர்க்கொடி கேட்க, 

“நானும் வந்ததுல இருந்து ஏதாவது வாங்கித் தருவாங்களானு பாக்குறே. இங்க அந்தப் பேச்சையே காணோம்.” என பிரியாவும் சடைத்துக் கொள்ள, 

“வாங்க… நாங்கூட்டிப்போறே.” என அத்தை மகளோடு, மாமன் மகள்களை ஈஸ்வரன் அழைத்தான். சங்கரி மறுத்துவிட்டாள். ஏனோ இரண்டோடு மூன்றாக செல்ல பிடிக்கவில்லை. 

“சரி… நீங்க ரெண்டு பேரும் வாங்க.” என அழைக்க, பிரியா அப்பத்தாவின் முகம் பார்த்து நின்றாள். இவனோடு அனுப்பியது தெரிந்தால், பெரிய மகன் சாமியாடுவானோ என்கிற பயம் அவருக்கு. 

“போய்ட்டு வாம்மா. ஸ்ரீ நீயும் கூடப்போடா.” என முத்துவேல் அனுமதி அளித்தார்.

“ஏன்டி… நைட்டே பிரச்சினை ஆச்சுல்ல. மறுபடியும் போணுமா?” என்றான்.

நடந்தது இவர்களுக்கு தெரியாததால், என்னவென்று முத்துவேலும் விசாரிக்க, நடந்ததை சித்தப்பனிடம் ஸ்ரீ கூறினான். 

“அதெல்லாம் நைட்டே அவிங்கள பேக் அப் பண்ணியாச்சு மாமா.” என்றான் ஈஸ்வரன்.

பிரியாவிடம் வம்பிழுத்தவர்கள், ஆங்காங்கே சலம்பல் பண்ணிக்கொண்டு, அடுத்து ஆடல் பாடல் நடக்கும் இடத்திற்கு வந்தனர். மேடையில் ஏறி ஆடுபவர்களுக்கு காசு குத்துகிறேன் என கண்ட இடத்தில் கை வைக்க, ஆடும் பெண்கள் என்ன செய்வது என தெரியாமல் சங்கடப்பட, ஈஸ்வரன் கும்பல் மேடை ஏறியது. அவர்கள் மூவரையும் நகர்த்தி கீழே இறக்கியவர்கள்,‌ மேடையின் பின்புறம் இருண்ட பகுதிக்கு தள்ளிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது கைவரிசையை காட்டியவர்கள், 

“எதுக்குடா தேவையில்லாம பிரச்சினை பண்றீங்க?” என விசாரிக்க,

“உங்க ஊருப்பயலுக மட்டும், எங்க ஊரு பொண்ணுகள பஸ்ல வம்பு இழுக்கலாமா?” என்றனர். ஏதோ பஸ்ஸில் வைத்து இரண்டு ஊர் இளவட்டங்களுக்கும் வந்த பிரச்சினை போலும். அதை மனதில் வைத்துகொண்டு வம்பு பண்ண வந்துள்ளனர். 

“யார்ரா அது? அப்படியே வம்பு பண்ணினா, அங்கேயே வச்சு அவிங்க எலும்ப உடைக்கறத விட்டுட்டு திருவிழால வந்து கலாட்டா பண்றீங்களே? இது ஊர்ப்பிரச்சினை ஆச்சுனா, என்னடா பண்ணுவீங்க?” என அவர்களை சத்தம் போட்டனர்.  

“டேய்… எங்க மேலயா கை வக்கிறீங்க. இப்பவே எங்க பயலுக வந்தா என்ன நடக்கும் தெரியுமா?” என போதையில் திமிர, திருவிழா பந்தோபஸ்த்துக்கென்று வந்திருந்த பி.சி.யிடம் அழைத்துச் சென்றனர்.

“சார்… இவனுக அடங்குற மாதிரி தெரியல. நாலு கஞ்சா பொட்டலத்த ட்ரவுசர் பாக்கெட்ல போட்டு, திருவிழாவுல கஞ்சா வித்தானுகன்னு கேஸ் போடுங்க. யாரு வந்தாலும் நாம்பாத்துக்கறே.” என ஈஸ்வரன் கூற, அவர்களுக்கு போதை சட்டென்று வடிந்தது. 

“டேய்… நீ ஹைஸ்கூல் வாத்தியார் பையன் தான. உங்க அப்பாவுக்கு நீ இங்க வந்தது தெரியுமா? ஃபோன் பண்ணவா?” என ஈஸ்வரன் மிரட்ட,

“ஐயோ!!! அண்ணே வேண்டா. தெரிஞ்சா தோல உறுச்சுறுவாரு. இவனுக தான் என்னைய கூட்டி வந்தானுக.” என அவனுக்கு பயத்தில் சகலமும் நடுங்கியது. 

இந்தப்பக்கமே உங்கள பாக்கக் கூடாது என மிரட்டி அனுப்பி வைத்தனர்.‌ இரவு நடந்தவற்றை அவர்களிடம் கூறிவிட்டு அழைத்து சென்றான்.

அவர்களோடு செல்லவில்லையே தவிர, சங்கரியின் பார்வை அவர்களிடம் தான் இருந்தது. மலர்க்கொடி உரிமையாக ஒவ்வொரு கடையாக அழைத்து சென்றாள். சிறுவயதில் இருந்து பழகியவர்கள் என்பதால் சங்கோஜமின்றி அவள் நடந்து கொள்ள, அது சங்கரிக்குப் பிடிக்கவில்லை. 

‘கட்டிக்கப்போறவ. ஒட்டிட்டு திரியறா. உனக்கேன் காண்டா இருக்கு. அவளோட அத்தை மகன். அக்கறையா கூட்டிட்டு சுத்துறான். நமக்கு தான் இப்ப சொந்தபந்தமும் அத்துப் போச்சு. தங்கையை கொடுத்திருக்கும் வீடு. உறவுக்காக பார்ப்பானா. உனக்காக பார்ப்பானா?’ என மனதிற்குள் பல யோசனைகள் ஓட, எனக்காக ஏன் பார்க்க வேண்டும் என தனக்குத்தானே எதிர்க்கேள்வி கேட்டுக் கொண்டாள். 

சிறுவயதில் இருந்தே இது வேண்டும் என எதன் மீதும் ஆசை வைக்காத அளவிற்கு எல்லாமே கிடைத்தது. அப்படியிருக்க ஆசை என்று எதன்மீதும் பெரிதாகத் தோன்றவில்லை. அதனாலோ என்னவோ ஒருத்தன் பால் தன் மனம் ஈர்க்கப்பட்டிருப்பது கூட அறியாமல் போனாள். 

இவன் தான் ஈஸ்வரன் எனத் தெரிந்ததும் ஆர்வமாகப் பார்த்தோம். அவ்வளவு தான் என மனதை சமாதானப்படுத்தினாள். எனினும் தொண்டையில் ஒரு அழுத்தம். ரேடியோ சத்தமும், மேளச்சத்தமும் தலைவலிப்பது போல் இருக்க, அப்பத்தாவிடம் வீட்டிற்கு போகலாம் என்றாள். அதற்குள் அவர்களும் வந்துவிட, 

“அக்கா… மாம்ஸ் நெறைய வாங்கித் தந்தாங்க. இவனோட ரெண்டு நாளா வந்து ஒன்னு கூட வாங்கித்தரல.” என பிரியா கைநிறைய பொருட்களோடு வந்து நின்றாள். 

“நானுங்கூட எங்கேயாவது போகணும்னா மாமாவத்தான் கூட்டிப் போவேன் பிரியா. எங்க அண்ணே இருக்கானே, அவனும் கஞ்சப்பிசினாரி. செலவு பண்ண மனசே வராது.” என மலர்க்கொடி கூறினாள். அதற்குள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது.

“அக்கா… ஓசில கெடைக்குதேனு ஒன்னு கூட விடலக்கா இவ. மாமா தெரியாத்தனமா இவள கூட்டிட்டு போயிட்டாங்க.” என ஸ்ரீ கூற, 

“நான் வாங்கிக் கொடுக்கறது எப்படி ஓசியாகும் ஸ்ரீ?” என்றான் உரிமையாக ஈஸ்வரன்.

“என்ன த்தே! கூடப் பொறந்த புள்ளைய அவ இவன்னு பேசுறான். இது தான் பட்டணத்துப் பழக்கமா?” என ஜெயந்தி கேட்க, 

“நானும் சொல்லிப் பாத்துட்டே ஜெயந்தி. அக்கா தங்கச்சிய போடிவாடின்னு பேசக்கூடாதுன்னு. ஸ்கூல்ல இருந்து அப்படியே பேசிப்பழகிருச்சுக.”

“இதென்ன புதுசா இருக்கு? நீங்க எல்லாம் எப்படி ஆன்ட்டி கூப்புடுவீங்க?” என்று ஸ்ரீ, ஜெயந்தியை கேட்க,

“என்னது ஆன்ட்டியா? சரியாப் போச்சு போ. உனக்கு நான் சித்தி முறைப்பா. நம்ம ஊர்கள்ல அக்கா தங்கச்சிகள வாம்மா போம்மானு மரியாதையா கூப்புடணும். மொறப் பொண்ணுகளத்தான் வாடிபோடின்னு கூப்புடணும்.” என ஜெயந்தி பதில் கூற,

“நேத்து நைட்டு நீ பிரியாவ டி போட்டு பேசுனதைப் பாத்து தான் அவனுக, உன்னோட ஆளான்னு கேட்டானுக.” என்ற ஈஸ்வரன்,

“இதையே நீ, நம்ம சின்ன தாத்தா முன்னாடி கூப்புட்டு இருக்கணும். என்னடா… தங்கச்சிய அவ இவன்னு பேசுறேன்னு செவுளு பேந்துருக்கும். என்ன ஏதுன்னே கேக்காம அடிச்சுட்டு தான் கேப்பாரு. அவருக்கு பொம்பள பிள்ளைகள மரியாதை இல்லாம பேசுனா புடிக்காது.” என்றான். 

“மாம்ஸ் நெறைய வாங்கி இருப்பீங்க போலியே?” என பிரியா கேலியாக கேட்க,

அதைக் கேட்டு… பெரியவர்களோடு சேர்ந்து சங்கரியின் முகமும் சற்று சங்கடத்தை தாங்கியது. 

என்ன விவரம் என்று முழுதாக விசாரிக்காமல், ஒன்றுமில்லாத விஷயத்திற்காக, அடுத்தவர்கள் பேச்சை நம்பி பேரனை அவசரப்பட்டு அடித்து விட்டோமே என பலநாட்கள் சின்னவர் தூங்காமல் புலம்பியிருக்கிறார். அவருக்கு கோபம் சட்டென்று வந்து விடும். கைநீட்டி விடுவார். அதனால் தானோ என்னவோ ஈஸ்வரன் எதற்கும் அவசரப்படாமல் நிதானத்தை கையில் எடுத்தான். அதற்காக எப்பவுமே நிதானத்தை கடைபிடிப்பான் எனவும் கூறமுடியாது.

அனைவரும் அமைதியாகிவிட, 

“வாடிபோடின்னு கூப்புடுறது என்ன… அவ்வளவு பெரிய விஷயமா?” என்றான் ஸ்ரீ யும். 

கிரீடத்தின் மீது ஆசை கொண்டு, அரச பதவிக்காக… அண்டைய கண்டங்களில்(எகிப்து) உடன்பிறந்த சகோதரன், சகோதரிகளையே திருமணம் செய்து கொண்ட, நாகரீகம் கொண்ட காலத்திலேயே,

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்… என உறவுமுறை வைத்து காதல் செய்த நாகரீகம் நமது நாகரீகம். கிளியோபாட்ரா வகையறாக்களும், அரசபதவிக்காக சகோதர, சகோதரிகளையே திருமணம் செய்து கொண்டவர்கள்.

மனுஷப்பைய உருவானது கம்ப்யூட்டர் கண்டுபுடுச்சு, சாஃப்ட் வேர் உருவாக்கவோ, பணத்தை ஷேர்மார்க்கெட்ல போட்டு பெருக்கவோ இல்லீங்க. 

உலகில் ஓர் உயிரி முதல் அனைத்து உயிரினங்களின் ஒரே நோக்கம் தன்னைக் காத்தல், தன் சந்ததியை உருவாக்கல். தன்னைக் காக்க தேவை உணவு. தன்சந்தியை உருவாக்க தேவை ஒரு எதிர்பாலின உயிரி.

இந்த இரண்டு மட்டுமே உயிரினங்களின் அடிப்படை. அதற்கு எல்லா உயிரினங்களும் தேடுவது அதற்கென ஒரு பெண். அந்த உயிரினத்திற்கு அது அக்காவா, தங்கையா, தாயா, தாரமா என்ற வேறுபாடு கிடையாது. 

ஆதிவாசியாக இருந்த மனித விலங்கிற்கும் அப்படித்தான். எப்பொழுது விலங்கு, மனிதன் எனும் உடை அணிந்து, நாகரீகம் வளர்ந்ததோ அப்பொழுது தான் உறவு முறைகள் உருவானது. அப்பொழுதும் அவன் உருவாக்கியது மனைவி என்ற உறவுமுறை மட்டுமே. மனிதன் எனும் விலங்கு அணிந்த சட்டைக்கு நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்ற பல வண்ணங்கள் உண்டு. இந்த சட்டையை அவன் கலைந்துவிட்டால் அவன் ஆதிவாசியே. அவனுக்கு உறவுமுறை கிடையாது. அவனை ஒரு எல்லைக்குள் வரைமுறைப் படுத்தி, கோட்டிற்குள் நிற்க வைப்பது நம்நாட்டில் புழங்கும் உறவு முறைகளே. 

இவள் உன் சகோதரி. இவளிடம் உன் எல்லை இதுவரை தான். இவள் உனக்கு முறைப்பெண். நீ கல்யாணம் கட்டும் தகுதி இவளுக்கு உண்டு என பாகுபடுத்தி பழக்கப்படுத்துவதும் உறவுமுறைகளே. 

அம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை, அக்கா, தங்கை, அண்ணி, கொழுந்தியா, மச்சினிச்சி, மகள் என இத்தனை உறவு முறைகளை வகைப்படுத்துவது எதற்காக? பெண்களைப் பார்க்கும் பார்வையில் வித்யாசம் தெரியவேண்டும் என்பதற்காகத்தான்.

இன்று பொத்தாம் பொதுவாக ஆன்ட்டி, அங்கிள் என பிள்ளைகள் அழைக்கும் பொழுது, இதில் யார் அத்தை, யார் சித்தி என்ற வேறுபாடு எப்படி புரியும்? இதுவே புரியாத பொழுது அத்தை பெண்ணிற்கும், சித்தி பெண்ணிற்கும் வேறுபாடு எப்படி விளங்கும். 

சித்தி பெண் மீது காதல், பெரியப்பா பையன் மீது காதல் என செய்திகளைக் கேட்கும் பொழுது, மனிதன் என்ற சட்டை கிழிய ஆரம்பித்து மீண்டும் ஆதிவிலங்காக மாறிக்கொண்டு இருக்கிறோமோ என சந்தேகம் எழுகிறது. 

பண்பட்ட, நாகரீகம் அடைந்த, முன்னேற்றம் பெற்ற மனிதர்களாக நம்மை வெறுமனே உருவகப்படுத்திக் கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

பெரும்பாலும் இன்று ஒற்றைப் பிள்ளைகளாகப் போய்விட்டனர். அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு… சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்ற உறவுமுறைகள் இருக்கப் போவதில்லை. எல்லோருமே பொத்தாம் பொதுவாக ஆன்ட்டி அங்கிளே. 

சகோதரியாகவே இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் தொட்டுப் பேசும் பழக்கம் நம்நாட்டில் இல்லை. ஏனென்றால் நாம் எல்லோரும், எப்பொழுதும் மனிதம் எனும் சட்டை அணிந்த மிருகம் தான்.

எப்பொழுது வேண்டுமானாலும் சட்டை கிழியலாம். இன்று போதை வஸ்த்துக்களும், அவரவர் கைகளில் இருக்கும் ஆன்டராய்டும் அந்த வேலையை செவ்வனே செய்யும். இன்று தொலைக்காட்சி முதல் கையிலிருக்கும் கைபேசி வரை வரும் பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளே அதற்கு உதாரணம்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தபிறகு சங்கரி வெளியே வரவில்லை. 

சரியாக தூக்கமின்மையால் தலைவலிப்பதாகக் கூறிவிட்டு படுத்துக் கொண்டாள். தூக்கம் தான் வந்தபாட்டைக் காணோம்.

சாமி ஊர்வலத்தின் போதும், திலகவதிதான், எழுப்பி வாசலுக்கு அழைத்தார். வெளியே வர, அனைவரும் மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். 

பக்கத்து வீட்டு வாசலிலும் அண்டாவில் மஞ்சள் நீர் கலக்கி வைக்கப்பட்டிருந்தது. 

மலர்க்கொடி தான் செம்பும் கையுமாக எதிர்பார்த்து நின்றிருந்தாள். 

ஊர்வலத்தின் முன் ஆண்களோடு சேர்ந்து வந்த ஈஸ்வரனைப் பார்க்க, ஏற்கனவே பலபேர் ஊற்றி இருப்பார்கள் போலும். இவனுக்கென்ன ஊரெல்லாம் முறைப்பொண்ணுக தானா என மனம் நொடித்துக் கொண்டது சங்கரிக்கு. 

வாசலில் நின்ற மலர்க்கொடியைப் பார்த்துவிட்டு, பிரியாவும் அவளோடு சேர்ந்து கொண்டாள். 

“இந்தா… நீயும் மாமா மேல ஊத்து.” என அவளிடமும் ஒரு செம்பைக் கொடுக்க, இருவரும் ஈஸ்வரனை தான் குறிவைத்து ஊற்றினர். 

“மாம்ஸ் வாழ்றாரு க்கா.” என்றான் ஸ்ரீ யும் பார்த்துவிட்டு‌.

“வேணும்னா நீயும் வீதிக்கு போயேன்டா. உம்மேலயும் யாராவது ஊத்துவாங்க‌.” என எரிச்சலாகக் கூறினாள். 

“இப்ப என்ன சொல்லிட்டேனு இப்படி எரிச்சலாகுற.” என அக்காவிடம் கேட்க, 

ரூம் போட்டுக்கூட யோசித்திருக்க வேண்டாம். பெண்கள் அவன்மீது தண்ணீர் ஊற்றினால் தனக்கு ஏன் கோபம் வருகிறது என நின்ற இடத்தில் இருந்து சற்று யோசித்து இருந்தாலே, தலைவலி எப்பொழுதோ போயிருக்குமே.

ஊர்வலம் முடிந்து, ஊரின் மந்தைக் கல்லில் சக்திகெடா வெட்டி பலிகொடுத்து, காளியம்மனும், பகவதி அம்மனும் முளைப்பாரிகளோடு பூஞ்சோலை கிளம்பியது. 

தன்னனநாதினம் தன்னானே

தன தன்னனனாதினம் தன்னானே

செந்தில் வடிவேலவரே சிந்துகவி பா

பலசங்கதிகள் கூட

நம்ம சங்கடங்கள் தீர

ரெங்கமேனி தங்க முகம் குஞ்சரங்க பாட

ஒன்னாம் படியவிட்டு

ஒர ஒரமா காளியாத்தாளாம் கருப்பசாமியாம் பேச்சியம்மாளாம் மந்தை தாயாம் மாரியம்மாளாம் வல்லவர் சாமியாம் முன்னோர்களாம் 

வரும் சித்திரை வருஷம் செழிக்கவே

வரும் சித்திரை வருஷம் செழிக்கவே

ஆலாம்பண்ணைக்கு அழகு 

பூ பூத்து

ஆத்தா போறாளாம் பூஞ்சோலைக்கு….

என, கும்மிப்பாட்டு பாடி, அம்மனை பூஞ்சோலை சேர்க்கும் கிணற்றடியில் வைத்து, நகை முதலியவற்றை கலைந்து,‌ கணக்கு சரிபார்த்துவிட்டு, கிணற்றில் இறக்கும் பணி தொடங்கியது. 

இந்த வருடம் நல்ல மழை என்பதால் கிணற்றில் நீர் நிறம்பி தளும்பியது. சாமி சிலைகளை, மேலிருந்து தொப்பென போடமாட்டார்கள். தலையில் வைத்துக்கொண்டு, மேலிருந்து குதித்து, கிணற்றின் அடிஆழம் வரை சென்று, தரையில் அப்படியே இறக்கி வைத்துவிட்டு வரவேண்டும். நன்றாக மூச்சடக்கி தம் பிடிப்பவர்கள் தான் உள்ளே இறங்குவர். 

ஒரு அம்மனை ஈஸ்வரனும், மறு அம்மனை அவனது கூட்டாளிகளில் ஒருவனும் தலையில் தாங்கிக் கொள்ள, மேளம் முழங்க, உள்ளே குதித்தனர். சாமி உள்ளிறங்க இளைஞர் அணியினர் பெண்களிடம் முளைப்பாரிகளையும் வாங்கி கிணற்றில் போட்டனர். 

உள்ளே குதித்தது ஈஸ்வரன் என அறிந்து சங்கரியின் இதயம் படபடத்தது. அவளுக்கு கிணறு என்றாலே பயம். எட்டிக்கூட பார்க்க மாட்டாள். அந்தக்கிணறும் மிகவும் ஆழம் எனத் தெரியும். இதே கிணற்றில் தான் சிறுவயதில் அவளை நீச்சல் பழக்க என சுரைக்குடுக்கையைக் கட்டி உள்ளே தூக்கிப் போட்டனர். இன்று வரை அந்த பயமும் போகவில்லை, நீச்சலும் பழகவில்லை. 

கூட்டத்தை விலக்கிக் கொண்டு மேலிருந்து, படபடத்த நெஞ்சோடு எட்டிப் பார்க்க, உள்ளே சென்றவர்கள், சிறிது நிமிடங்கள் கழித்து மேலே வந்தனர். சிலையோடு உள்ளே மூழ்கியவன் எப்பொழுது மேலே வருவான் என்ற படபடப்பு அவளது பயத்தை மறக்கடித்தது.   

சாமியின் சிலைகளில் இருந்த மல்லிச்சரம் தண்ணீரில் மிதக்க, அதில் ஒன்று ஈஸ்வரனின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு அவனோடு மேலெழும்பியது. முகத்தில் வழிந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டு பார்க்க, சங்கரியின் பயந்த முகம் தான் தெரிந்தது ஈஸ்வரனுக்கு. 

“மாப்ளே!!! ஆத்தா மாலை கொடுத்துருச்சுடோய்!!! சீக்கிரமே கல்யாணம் தான்டி!” என்றான் உடன் இருந்தவன். 

 

 

Leave a Reply

error: Content is protected !!