எங்கே எனது கவிதை – 26

எங்கே எனது கவிதை – 26
26
ஆதிராவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை மாறி, அவளது முகத்தை ஆசையுடன் வருடத் துவங்க, அவனது பார்வையில், முகத்தில் செம்மை படற “என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டு, அவனது கையைப் பிடித்து அருகில் இழுக்க, அவன் மெல்ல நகர்ந்து அமரவும், அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அனைவரும் வெளியே சென்றனர்.
அவளது பாதத்தை மெல்ல வருடியவன், எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும், “என்ன பேச மாட்டேங்கறீங்க?” மெல்லிய குரலில் ஆதிரா கேட்க,
“ஒண்ணும் இல்ல.. ரெண்டு நாளா பார்க்காதது எல்லாம் பார்த்துட்டு இருக்கேன்.. உன்னைப் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருந்தது..” கார்த்திக் சொல்வதற்குள் அவனது கண்கள் கலங்க, மெல்ல அவனது கன்னத்தை வருடியவள், அவனது தோளில் சாய்ந்துக் கொண்டு,
“என்னை உங்க கிட்ட இருந்து யாருமே பிரிக்க முடியாது.. அதனால தான் நீங்க எப்படியோ நான் இருக்கற இடத்துக்கு வந்திருக்கீங்க. அந்த விசித்திரா பெரிய இவளாட்டாம் என்கிட்டே வந்து போன் இருக்கான்னு என்னை செக் பண்றா.. எப்படி நீங்க கரக்ட்டா நான் இருக்கற இடத்துக்கே வரீங்கன்னு கேள்வி கேட்கறா.. ‘நான் என் மனசுல சொல்றேன்.. அவர் வரார்’ன்னு சொன்னதுக்கு அவ தான் என் வாயில அடிச்சா..” சிறுபிள்ளை போல கதை சொல்ல, அவளது இதழ்களை மெல்ல வருடியவன்,
“பின்ன என்னோட உயிர் இருக்கற இடம் எனக்குத் தெரியாதா?” அவளது நெற்றியில் இதழ் ஒற்றியபடி அவன் கேட்க, அவனது முகத்தை காதலுடன் பார்த்தாள்..
“நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா? சரியா தூங்கினீங்களா? முகம் எல்லாம் ரொம்ப வாடிக் கிடக்கு..” அவனது கன்னத்தில் விளையாட்டாக தனது விரல் கொண்டு குத்தி, அவனது கையை எடுத்து தனது கைக்குள் புதைத்துக் கொண்டு அவள் கேட்கவும்,
“ஓ.. பிட்சா சாப்பிட்டேன்.. பானிபூரி சாப்பிட்டேன்.. அப்பறம் ஒரு படம் போயிட்டு பிரெஞ்சு பிரைஸ் சாப்பிட்டேன்.. அப்பறம் நேரா பார்க்கு போய் அங்க விழுந்து கிடந்தேன்.. அப்பறம்..” என்று அவன் அடுக்கிக் கொண்டே போக, அவனது கையில் அடித்தவள்,
“சும்மா என்னை வெறுப்பேத்தாதீங்க.. முகத்தைப் பார்த்தாலே தெரியுது என்னை விட மோசமா காஞ்சி போயிருக்கீங்கன்னு.. நானே ரெண்டு நாளா ஒரு பாட்டில் தண்ணியும், ஒரே ஒரு சின்ன பாட்டில் க்ளுகோஸ் போல இருந்த ஒரு ஜூஸ் தான் குடிச்சேன்.. எனக்கு பானி பூரி வேணும்.. பிட்சா வேணும்.. அதை விட எனக்கு காரமா பிரியாணி வேணும்..” என்றவள், அவனது கையை எடுத்து தனது இதழ்களில் பதித்து,
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இந்த சூப்ல உப்பு கூட இல்ல..” என்று சிணுங்க, அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“வீட்டுக்கு போயிட்டு ராத்திரி உனக்கு எல்லாம் ஆர்டர் பண்ணிடறேன்.. ஓகே வா..” என்று கேட்கவும், அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள்,
“அன்னிக்கு நீங்க போனை எடுக்காததுக்கு நீங்க எவ்வளவு ஃபீல் பண்ணி நொந்து போயிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.. சும்மா கெத்து போல அடிச்சு விட வேண்டியது.. அதை விட இப்போ யாரோ என்னோட இடுப்பைக் கட்டிக் கொண்டு அழுதாங்க.. நானும் தான் பார்த்தேனே.. சரி.. ஏதோ நைட் வாங்கித் தரதா சொன்னதுனால, நீங்க பொய் சொன்னதுக்கு சும்மா விடறேன்..” அவனது சட்டை பட்டனை திருகிக் கொண்டே சொன்னவளின் நெற்றியில் சிரித்துக் கொண்டே இதழ் பதித்தவன்,
அவளது முகத்தை நிமிர்த்தி, “நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாமா? நாள் நல்லா இருந்தா நாளைக்கே..” என்று கேட்க, இதழ்களில் நாணப் புன்னகை தோன்ற, புருவத்தை உயர்த்தி, கண்களால் ஏன் என்று கேட்க,
“என்னால உன்னை விட்டுட்டு எல்லாம் இனிமே இருக்க முடியாது.. இனிமே நீ ஒண்ணும் அந்த ஃப்ளாட்ல இருக்க வேண்டாம்.. என் கூட நம்ம வீட்டுக்கே வந்திரு.. அத்தை மாமா எல்லாம் அங்க தான் இருக்காங்க..” என்று அவன் சொல்லவும்,
“அத்தை.. அத்தை ஒண்ணும் சொல்லலையா? மாமா தான் வந்திருக்காங்க.. அத்தை என்னைப் பார்க்க வரலையே..” தயக்கமாக அவள் கேட்க,
“அவங்க வந்து இங்க ஆகப் போறது ஒண்ணும் இல்ல.. கல்யாண டேட் பிக்ஸ் பண்ணிட்டு அவங்களுக்கு சொல்லிக்கலாம்.. வந்தா வரட்டும்.. இல்லையா.. போகட்டும்.. சொல்லு.. நாம கல்யாணம் செய்துக்கலாமா?” கார்த்திக் மீண்டும் கேட்க,
“பண்ணிக்கலாமே.. அப்பா அம்மாக்கிட்ட பேசுங்க.. என்னாலையும் இனிமே எல்லாம் உங்களை விட்டு இருக்க முடியாது..” என்று சொன்னபடி அவனை நெருங்கி அமர, மீண்டும் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
“சரி.. கொஞ்ச நேரம் தூங்கு.. நான் அப்படியே தட்டிக் கொடுக்கறேன்.. அப்பறம் டாக்டர்கிட்ட கேட்டு நாம வீட்டுக்கு போகலாம்.. இன்னும் போலீஸ் பார்மாலிட்டி வேற இருக்கு.. உன்னை நிறைய கேள்வி கேட்பாங்க.. நீ அதுக்கு பதில் சொல்ல தெம்பா இருக்கணும்.. எப்படியும் சித்தார்த்தும் மதியும் தான் கேட்பாங்க.. அவங்க உனக்கு ஸ்ட்ரெஸ் தெரியாத அளவுக்கு பார்த்துப்பாங்க..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஹே.. நான் வந்துட்டேன்.. ஆதிரா கண்ணு முழுச்சிட்டாளா? கார்த்திக் அடி வாங்கிட்டானா?” என்ற மதியின் குரல் கேட்க,
“வந்துட்டான்டா என்னை வம்பு பண்ணவே.. இவனுக்கு இதே வேலையா போச்சு..” கார்த்திக் புன்னகையுடன் முணுமுணுக்க, ஆதிரா அவனை அதிசயமாக பார்த்துவிட்டு, பின்னால் திரும்பி அங்கு நின்றிருந்த மதியைப் பார்த்துவிட்டு, கேள்வியாக கார்த்திக்கைப் பார்க்க,
“மதி.. அதியமான் சாரோட தம்பி..” என்று கார்த்திக் சொல்லவும், ஆதிரா அவசரமாக கார்த்திக்கை விட்டு நகர்ந்து அமர்ந்துக்கொள்ள, பின்னால் திரும்பிப் பார்த்த கார்த்திக், தலையில் அடித்துக் கொண்டான்..
“அதெல்லாம் வாங்கிட்டான் மச்சான்.. செம அடின்னு சொல்ல முடியாது.. ஆனாலும் ஒரு மாதிரி அடி வாங்கினான்.. இன்னும் கூட ஆதிரா ரெண்டு கொடுத்திருக்கலாம்.. தங்கச்சிக்கு ட்ரைனிங் போதல.. நாம எதுக்கு இருக்கோம்.. போகப் போக கொடுத்திடலாம்..” சித்தார்த்தின் குரலும் கேட்க, திரும்பிப் பார்த்த கார்த்திக், அங்கு இருவரும் கதவிற்கு பின்னால் ஒளிந்து நிற்கவும்,
“அங்க தானே கதவுக்கு பக்கத்துல நின்னுட்டு இருக்கீங்க.. ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என்ற கார்த்திக், உள்ளே வந்த இருவரையும் அறிமுகப்படுத்தினான்..
“ஆதிரா.. இவரு சித்தார்த்.. நான் தான் உன்னை கடத்தி ஏதோ பண்ணிட்டேன்னு ஸ்ட்ராங்கா நம்பினவரு.. ஜஸ்ட் மிஸ்ல ஜெயில் உள்ள நான் போகல.. தப்பிச்சிட்டேன்.. சாட்சிக்கு உன் டீம் லீடர் வேற..” என்று சொல்லவும், ஆதிரா சித்தார்த்தை அதிர்ச்சியுடன் பார்க்க,
“இவரு மதிநிலவன்.. அப்போ அப்போ கொஞ்சம் டவுட்டோட என்னை கேள்வி கேட்டவரு.. இப்போ என்னோட…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“என்னது? என்ன? நீங்க என்னை ஏதாவது செய்துடுவீங்களா? அப்படிச் சொல்ல இவங்க என்ன லூசா?” கார்த்திக் ஜெயிலுக்கு செல்ல இருந்ததை நினைத்துப் பார்த்தவள், அவசரமாக கேட்டுவிட்டு, நாக்கை கடித்துக் கொண்டு,
“சாரி..” என்றபடி இருவரையும் அப்பாவியாக பார்க்க, சத்தமாக சிரித்துக் கொண்டே அதியமான் உள்ளே நுழைந்தான்..
“ஒரே இன்ட்ரோல டோட்டல் டேமேஜ் பண்ணிட்டியே மச்சான்.. சிஸ்டர் எங்களை எல்லாம் சுத்தமா சாச்சிப்புட்டா..” சித்தார்த் கார்த்திக்கின் தோளைத் தட்ட, ஆதிரா கார்த்திக்கை நிமிர்ந்துப் பார்த்தாள்..
“அது நார்மல் ப்ரோசீஜர் தானேடா ஆதிரா.. அதுக்கு எல்லாம் இப்படி சொல்லக் கூடாது..” கார்த்திக் அவளை சமாதானப்படுத்த,
“ஆனாலும் தங்கச்சி.. நான் வரதுக்குள்ள அவனை அடிச்சு இருக்க வேண்டாம்.. நான் வந்த உடனே அடிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும்..” மதி சொல்லவும்,
“ஏன்?” ஆதிரா கேள்வியாகப் பார்க்க,
“ரெண்டு நாளா உன்னை எதுக்காக தேடி அலைஞ்சோம்ன்னு நீ நினைக்கிற?” மதி சிரிக்காமல் கேட்கவும், ஆதிரா ‘ஏன்?’ என்பது போல மீண்டும் பார்க்க,
“நான் மிஸ் பண்ணின அந்தக் காட்சியைப் பார்க்க தான்.. எனக்கு காட்டாம இவன் மட்டும் எப்படி அந்தக் காட்சியைப் பார்க்கலாம்? டூ பேட்.. மறுபடியும் ஒன்ஸ் மோர் போகலாம்.. கெட் ரெடி ஆதிரா.. டேய் ஒழுங்கா கன்னத்தைக் காட்டு.. வைக்கிற அடில உன் விரல் அவன் கன்னத்துல பதியணும்..” மதி ஆதிராவை வம்பு வளர்க்க, கார்த்திக்கை நிமிர்ந்துப் பார்த்தவள், முகத்தைச் சுருக்கி நாணத்துடன் தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
“ஆதிரா.. எப்படி இருக்க? இவங்க சும்மா வம்பு வளர்க்கறாங்க.. மூணு பேரும் ஒன்னாவே சுத்தி நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க..” அதியமான் சொல்லவும், மதியையும் சித்தார்த்தையும் நிமிர்ந்துப் பார்த்தவள்,
“நான் நல்லா இருக்கேன் அண்ணா..” என்று அதியமானுக்கு பதில் சொல்லிவிட்டு,
“என்னை காப்பாத்தினத்துக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அதும் என்னை எங்கயோ மூவ் பண்ணச் சொல்லி அந்த ஆதவனுக்கு போன் வந்துக்கிட்டே இருந்தது.. அது மாதிரி எதுவும் ஆகறதுக்கு முன்னால என்னை வந்து காப்பாத்திட்டீங்க.” அவர்களைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்து கும்பிட, மதி அவளது கையை இறக்கிவிட்டு,
“அதெல்லாம் இல்ல சிஸ்டர்.. அது எங்க கடமை.. அதோட கார்த்திக் தான் எதோ மனசுல தோணவும் அந்த ஏரியாவையே குறிப்பிட்டு சொன்னான்.. அதனால தான் அவ்வளவு சீக்கிரம் கண்டுப்பிடிக்க முடிஞ்சது.. அதுவும் அவன் திரும்பத் திரும்ப, அந்த குழந்தையையும் விசித்திராவையும் அடையாளம் சொல்லி வச்சிருந்தான்..” மதி சொல்லவும்,
“நானும் அந்த குட்டி வெளிய வந்தா இவரு எப்படியாவது அவனைப் பார்த்து என்னை காப்பாத்த வருவாருன்னு தான் நான் அவனை நைசா பேசி வெளிய போகச் சொன்னேன்..” ஆதிரா நடந்ததைச் சொல்லவும், மதி புன்னகையுடன் கார்த்திக்கின் தோளைத் தட்டிக் கொடுத்தான்..
“பார்த்தியாடா.. நீ சொன்னது போலவே அவ உனக்கு இடத்தைக் காட்டி இருக்கா..” என்ற மதி,
“கார்த்திக்.. கொஞ்சம் என் கூட வா..” என்று அழைக்க, கார்த்திக் ஆதிராவைப் பார்க்கவும்,
“நீ கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடும்மா.. நல்லா தூங்கி எழுந்திரு.. அப்பறம் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு..” சித்தார்த் சொல்லவும்,
“ஹான்.. கார்த்திக் இப்போ தான் சொல்லிட்டு இருந்தாங்க..” என்றவள், மீண்டும் ஏக்கமாக கார்த்திக்கைப் பார்க்க, அவளது பார்வையைப் புரிந்துக் கொண்டவர்கள்,
“சரிடா.. கொஞ்சம் நேரம் அப்பறம் பேசலாம்..” என்று மதியைப் பார்த்து சொல்லிவிட்டு,
“அவளை தூங்க வச்சிட்டு நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு.. ரெண்டு நாளா ரொம்ப சுத்தி இருக்க.. அவனையும் பார்த்துக்கோம்மா.. ராவா பகலா வெறி பிடிச்சவன் போல சுத்தி இருக்கான்..” என்று அதியமான் சொல்லவும்,
“சரிங்கண்ணா..” என்று தலையசைக்க, அவளது தலையை மெல்ல வருடியவன்,
“நீ தூங்குடா.. நான் அவங்க கிட்ட பேசிட்டு கொஞ்ச நேரத்துல வரேன்..” கார்த்திக் சொல்லவும், ஆதிராவின் முகம் வாட, அதனைக் கண்ட மதி,
“எனக்கு பசிக்குது.. நான் போய் ஏதாவது வயித்துக்கு போட்டுட்டு வரேன்.. அதுக்குள்ள நீ அவளை தூங்க வைக்கிற.. இல்ல உன்னைப் பிடிச்சு உள்ள போட்டுடுவேன்.. ஜாக்கிரதை..” சிரிப்பு போலீஸ் போல மிரட்டிய மதியைப் பார்த்து, ஆதிரா களுக்கென்று சிரிக்க,
“ஹ்ம்ம்.. நானும் போய் சாப்பிட்டு வரேன்.. இங்க இருந்தா சின்னப் பசங்க மனசு எல்லாம் கெட்டுப் போயிடும்.. ஒரே லவ்சா இருக்கு மதி.. என்னால பார்க்க முடியல..” சித்தார்த் வம்பு வளர்த்துக் கொண்டே வெளியே செல்ல,
“அதை ஏன் பார்க்கணும்ன்னு கேட்கறேன்..” கார்த்திக் கேலி செய்ய,
“எல்லாம் என் நேரம்.. நாங்களும் ஒரு காலத்துல இப்படித் தான் சுத்திட்டு இருந்தோம்.. இப்போ நீ நடத்து.. எல்லாம் கொஞ்ச காலம் தான்.. அப்பறம் எங்க கூட சேர்ந்து நீயும் வெளிய சுத்துவ..” என்றபடி இருவரும் வெளியில் செல்லவும்,
“மதி சிஸ்டர் கிட்ட அடி வாங்கியாச்சு.. நீங்க இன்னும் வாங்கலியோ?” கார்த்திக்கின் கேலியைத் தொடர்ந்து, சித்தார்த் அவனுக்கு பத்திரம் காட்டிவிட்டு மறைய,
“அவனுங்க கூட சேர்ந்து உனக்கும் வாய் அதிகமா ஆகி இருக்கு.. அவனுங்க கூட சேர்ந்தா இப்படித் தான்..” என்ற அதியமான், ஆதிராவைப் பார்த்து தலையசைத்துவிட்டு வெளியில் செல்ல, ஆதிரா கார்த்திக்கின் கையைப் பிடித்து இழுத்து, தனதருகே அமர்த்திக் கொண்டாள்.
“என்ன அப்பு.. இப்படி வாயடிக்கறீங்க? அதுவும் ரெண்டே நாளுல.. என்ன நடக்குது?” ஆதிரா அதிசமாயக் கேட்க,
“ஹஹஹா.. சும்மாடா செல்லம்.. அவங்க கூட பேசிப் பேசி இப்படி ஆகிட்டேன் போல..” சிரித்துக் கொண்டே பதில் சொல்லவும்,
“எனக்கு இந்த அப்பு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவளைக் கொஞ்சியபடி, தனது தோளில் சாய்த்துக் கொண்டவன், மெல்ல அவளது தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே,
“கொஞ்சம் தூங்கி எழுந்திரு.. மதி உன்கிட்ட பேசத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. அவங்களும் ரெண்டு நாளா சரியா தூங்கல.. அவங்ககிட்ட சொல்லிட்டா நாம வீட்டுக்கு போயிறலாம். அடுத்து அவங்களுக்கு நிறைய வேலை இருக்கு..” எனவும், ஆதிரா அவனைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடி உறக்கத்திற்குச் சென்றாள்.. அவளது முகத்தைப் பார்த்தவன், உறக்கம் கலையாதவாறு அவளைத் தலையணையில் கிடத்திவிட்டு வெளியில் வர, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு மனம் நிறைந்து போனது..
சதாசிவம் அனைவரையும் அழைத்துக் கொண்டு உண்டு விட்டு வந்து கார்த்திக்கிற்காக காத்திருக்க, கார்த்திக் வெளியில் வந்ததும், “இந்தா கார்த்தி.. கையைக் கழுவிட்டு இதை சாப்பிடு. நீயும் ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடல..” என்றபடி உணவுப் பொட்டலத்தைத் தர,
“இருக்கட்டும்ப்பா.. அவ எழுந்ததும் அவ கூட சேர்ந்து சாப்பிடறேன்..” என்றவன், அங்கு வந்த மதியிடம் பேசச் சென்றான்..
“கார்த்திக்.. ஆதிரா முழிச்ச உடனே அவக்கிட்ட விட்னஸ் ஸ்டேட்மெண்ட் வாங்கணும். அவ என்ன மனநிலையில இருக்கா? அவளால பேச முடியுமா?” மதி கேட்க,
“அவ தூங்கி எழுந்ததும் சரி ஆகிடுவா மதி.. சாப்பிடாம கொஞ்சம் டயர்ட்டா இருக்கா. அவ்வளவு தான்.. அவ பேசும்போது ஒண்ணு சொன்னா மதி.. அந்த ஆதவனுக்கு அடிக்கடி அவளை மூவ் பண்ணச் சொல்லி யாரோ கால் பண்ணினாங்கன்னு.. அப்போ இதுக்குப் பின்னால யாரோ இருக்காங்க..” என்று சொல்லவும், மதி யோசனையுடன் தலையசைத்தான்..
“எனக்கும் ரொம்ப பெரிய கை அதுல இருக்குன்னு ஒரு டவுட் வருது கார்த்திக்.. பார்ப்போம்.. ஆதிராக்கிட்ட பேசிட்டு அவனை கவனிக்கிற கவனிப்புல உண்மையை வர வைக்கலாம்.. அவனோட போன் ரெகார்ட்ஸ் எடுக்கச் சொல்லியாச்சு.. அதுல அவனுக்கு ஒரு நம்பர்ல இருந்து அடிக்கடி கால் வந்திருக்கு.. அந்த நம்பர லொக்கேட் பண்ண சொல்லி இருக்கு..” யோசனையுடன் சொன்ன மதியிடம்,
“அந்த பொண்ணு.. அந்தக் குழந்தை எப்படி இருக்கு..” மனமாறாமல் கார்த்திக் கேட்க,
“அந்தப் பொண்ணுக்கு, அவங்க அப்பா ‘எல்லா பார்மாலிட்டி முடிஞ்சதும், சொல்லுங்க வந்து நேரா எடுத்துட்டு போய் தகனம் செஞ்சிடறேன்னு’ சொன்னார். என்னவோ அந்தக் குழந்தையை தவிக்க விடாம தன்னோட தூக்கிட்டு போயிட்டார்.. அவரு பாவம்.. ‘இவனைக் கல்யாணம் செய்துக்க வேண்டாம்ன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்.. இப்படி செத்துப் போகத் தான் அவனை கல்யாணம் செய்துக்கிட்டியா’ன்னு ரொம்ப அழுதுட்டார்.. போஸ்ட்மார்ட்டம் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கு.. ஆதவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயாச்சு.. போய் என் ஸ்டைல்ல கவனிக்கணும்..” மதி சொல்லவும்,
“என்னவோ அந்தக் குழந்தை மேல இவங்க நிழல் விழாம வளர்த்தா சரி..” கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் கூறிவிட்டு, தலையை கோதிக் கொண்டான்..
அப்பொழுது டாக்டரைப் பார்த்து விட்டு வந்த சித்தார்த், “கார்த்திக்.. ஆதிரா கண்ணு முழிச்ச உடனே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார்.. நீ பேசாம அவ முழிச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திரு.. நாங்க வீட்ல வந்து அவக்கிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கறோம்.. அவளுக்கும் ஒரு மைன்ட் ரிலாக்ஸ்சா இருக்கும்.. ஆனா.. ஒரு ரிஸ்க் இருக்கு.. ஒருவேளை ஆதவனுக்கு மேல வேற யாரவது இருந்து.. அவங்க இவன் அர்ரஸ்ட் ஆனது தெரிஞ்சு தப்பிச்சா கஷ்டம்..” சித்தார்த் மதியை யோசனையுடன் பார்த்தான்..
“அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் குளிச்சி ஃப்ரெஷ் ஆகட்டுமேன்னும் யோசிச்சேன்.. ஆனா.. நீங்க சொல்றதும் சரி தான்.. இவங்க அர்ரஸ்ட் பண்றது தெரிஞ்சு யாரும் தப்பிச்சிடக் கூடாது.. அதோட உங்களுக்கும் ரெண்டு நாளா செம அலைச்சல்.. அது தான் இந்த வேலை முடியட்டுமேன்னு பார்த்தேன்..” கார்த்திக் யோசனையுடன் இழுக்க, அவனது தோளைத் தட்டியவன்,
“அவ சாட்சி சொல்ற மனநிலையில இருந்தா.. முடிச்சிடலாம்.. அவ தூங்கி எழட்டும்.. அதுக்குள்ள நாங்க ஸ்டேஷன் போயிட்டு அவனை கவனிச்சுட்டு வந்திடறோம்..” என்ற மதி, அங்கிருந்து விடைப்பெற்றுக் கிளம்ப, சித்தார்த்தும் அவனுடன் கிளம்பிச் சென்றான்..
அங்கு கார்த்திக்கை பரிதாபமாக பார்த்துக் கொண்டு வித்யா நிற்க, “ஆச்சு வித்யா இன்னும் ரெண்டு நாள்.. அப்பறம் நீங்க உங்க ஹஸ்பண்ட் கிட்ட போயிடலாம்.. அப்பறம் அந்த ப்ளாட்டை காலி பண்ணி நான் ஆதிராவை எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போறேன்.. நீங்க என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க.. உங்களுக்கு வேணா இங்க பக்கத்துலையே வீடு பார்க்கவா?” என்று கார்த்திக் ஆறுதல் சொல்லிவிட்டு கேட்கவும், வித்யா அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.
“தேங்க்ஸ் கார்த்திக்.. நாங்க ரொம்ப சமான் சேர்க்கவே இல்ல கார்த்திக்.. என்னோட ட்ரெஸ் எல்லாம் நான் பெட்டியில தான் வச்சிருக்கேன்.. மீதி எல்லாம் தூக்கி போடறது தான்.. அந்தப் பெட்டியை நான் எடுத்துக்கறேன்.. அவரு என்னை இங்க இருக்கவே வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. நீங்க காலி பண்ணும்போது சொல்லுங்க.. நான் திங்க்ஸ் எடுத்துக்கறேன்..” என்று அவனுக்கு நன்றி தெரிவித்து சொன்னவள்,
“நான் ஹாஸ்பிடல் போயிட்டு ரெசிக்னேஷன் தந்துட்டு வரேன்.. அவளைப் பார்த்துக்கோங்க..” என்று அவள் கிளம்பவும்,
“நீங்களும் எல்லாரும் வீட்டுக்கு போங்க.. நான் அவளைப் பார்த்து கூட்டிட்டு வரேன்.. அத்தை.. ஆதிராவுக்கு நல்ல சமையலா சமைச்சு வைங்க.. வந்து ஒரு வெட்டு வெட்டுவா? ரெண்டு நாளா அவளுக்கு நாக்கு செத்து இருக்கு..” என்று அவன் சொல்லவும்,
“சரிங்க தம்பி..” என்று சுதா பாலகிருஷ்ணனைப் பார்க்க,
“அப்பா.. நீங்க அவங்களை கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க.. நான் அவ கூட இருக்கேன்..” கார்த்திக் சொல்லவும், அவனது தலையைக் கோதியவர், புன்னகையுடன் தலையசைத்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்..
நன்றாக உறங்கி எழுந்த ஆதிரா, தனது அருகில் சேரில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்தவள், தனது கையை நீட்டி, அவனது உச்சியில் விழுந்த முடியை மெல்ல உறக்கம் கலையாதவாறு விலக்கி விட்டாள்.. இதழில் புன்னகையுடன் அவள் அவனையேப் பார்த்து, அவனது முன்னுச்சி முடியை இப்படியும் அப்படியும் ஒதுக்கி விளையாடிக் கொண்டிருக்க, அப்பொழுது சித்தார்த் அங்கு வந்தான்..
அவன் உள்ளே எட்டிப் பார்த்த பொழுது ஆதிரா இருந்த நிலையைப் பார்த்தவனுக்கு, முகத்தில் புன்னகை அரும்பியது..
‘இவ என்ன அவனை சைட் அடிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கா? இந்த வக்கீல் அது தெரியாம தூங்கிட்டு இருக்கு.. ஹையோ ஹையோ.. இவன் எல்லாம் என்னத்த லவ் பண்ணி.. என்னத்தை செய்யப் போறான்..’ தனக்குள் கேலி செய்துக் கொண்டவன்,
“ஹல்லோ..” என்று ஓசை இல்லாமல், கிசுகிசுப்பாக அழைக்க, சத்தம் வந்த திசையைத் திடுக்கிட்டுத் பார்த்த ஆதிரா, அங்கு நின்றுக் கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்து, ஆஸ்வாசமான மூச்சை வெளியிட்டு, மெல்ல எழ முற்பட, உட்காரு என்று சைகை செய்தபடி, வேகமாக அவள் அருகே வந்தவன், கார்த்திக்கைப் பார்த்தான்..
“என்ன.. சார் நல்லா தூங்கிட்டு இருக்காரா?” என்று கேலியாகக் கேட்க, அந்த மெல்லிய குரலிலும், கார்த்திக் கண்களைத் திறந்துப் பார்த்தான்..
அதைப் பார்த்த சித்தார்த், “பரவால்லடா.. நல்ல அலர்ட்டாவே இருக்க..” என்று கேலி செய்ய, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன்,
“எனக்கே எப்படித் தூங்கினேன்னு தெரியல.. கொஞ்சம் அசந்துட்டேன் போல சித்தார்த்.. ஒரு ரெண்டு நிமிஷம்..” என்று கூறியவன், அவசரமாக அங்கிருந்த பாத்ரூமிற்கு சென்று, தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு குவளையில் தண்ணீரைக் கொண்டு வந்து,
“நீ எப்போ பேபிடால் எழுந்த? என்னை எழுப்பி இருக்கலாம்ல..” என்றபடி அவளது முகத்தைத் துடைத்து விட்டவன்,
“ரெஸ்ட்ரூம் போகனுமா?” என்று கேட்க, சித்தார்த்தைப் பார்த்துவிட்டு, அவள் மெல்ல தலையசைக்கவும், சித்தார்த் வெளியில் சென்று நர்சை அனுப்பி வைத்தான்.. அவர்கள் கையில் மாட்டி இருந்த ட்ரிப்சை அகற்றவும், ஆதிராவிற்கு மெல்ல நடக்க உதவியவன், அவள் சற்று நிதானிக்கவும்,
“நான் இங்க வெளிய இருக்கேன்.. நீ கூப்பிடு..” என்று சித்தார்த்துடன் அந்த அறையின் வெளியே சென்று நிற்க, சித்தார்த், மதிக்கு அழைத்து ஆதிரா விழித்துக் கொண்ட விஷயத்தைக் கூறினான்..
“சரி.. நான் இங்க அவனை விசாரிக்கறேன்.. நீ அங்க ஆதிரா கிட்ட கேட்டுட்டு அவளை வீட்டுக்கு அனுப்பிடு..” என்று பதில் சொன்னவன், ஆதவனை விசாரிக்கத் துவங்கினான்..
அந்த நேரம், “கார்த்திக்..” ஆதிராவின் குரல் கேட்க, சித்தார்த்தும், கார்த்திக்கும் உள்ளே நுழைந்தனர்..
“நீ இப்போ ஓகே வா? உனக்கு பசிக்குதா? ஏதாவது சாப்பிடறியா?” சித்தார்த் கேட்க,
“அப்பா வாங்கிட்டு வந்திருக்கார்..” என்ற கார்த்திக், ஆதிராவைப் பார்க்க,
“நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம் கார்த்திக்.. எனக்கு இங்க எல்லாம் வேண்டாம்.. எனக்கு அம்மா சமைச்சதை சாப்பிடணும்..” ஆதிரா கெஞ்சலாகக் கேட்கவும், அவளைப் பார்த்துச் சிரித்தவன்,
“எனக்கு நீ இதைச் தான் சொல்லப் போறேன்னு தெரியும்.. அது தான் அவங்களை முன்னாலயே அனுப்பி விட்டேன்.. சரி இப்போ நீ சித்தார்த்துக்கு பதில் சொல்லு.. நான் டாக்டர பார்த்துட்டு உன்னோட டிச்சார்ஜ்க்கு சொல்லிட்டு வரேன்..” என்று கார்த்திக் நகரப் போக, அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டவள், அவனை கெஞ்சலாகப் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் கார்த்திக் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான்..
“சொல்லு ஆதிரா.. என்ன நடந்துச்சு..” சித்தார்த் கேட்கவும், கார்த்திக்கின் கையைப் பிடித்துக் கொண்டவள், சொல்லத் துவங்கினாள்..
“நான் அன்னைக்கு லேட் ஆகவும் ஆபிஸ் பஸ் மிஸ் பண்ணிட்டேன்.. அதனால கேப் புக் பண்ணினேன்.. ஆனா.. மழை வரது போல இருக்கவும், எனக்கு எல்லா கேப்பும் கேன்சல் ஆகிட்டே இருந்துச்சு.. அப்போ தான் விசித்திரா கார்ல வந்தாங்க.” என்றவள், கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்து விட்டு,
“எப்பவுமே விசித்திரா என்கிட்டே சண்டேல வீட்ல இருக்கும் போது பேசுவாங்க.. அந்தக் குட்டிப் பையன் கொழு கொழுன்னு அழகா இருக்கும்.. அது அடிக்கடி எங்க ஃப்ளாட் வாசல் பக்கம் ஓடி வரும்.. அதோட நானும் வித்யாவும் விளையாடுவோம்.. அப்படி பழக்கம்.. சரி.. நம்ம ஃப்ளாட்டுக்கு போறவங்க தானே.. அவங்க கூட போகலாம்ன்னு நம்பி கார்ல ஏறினேன்.. எனக்கு அப்போ அந்த இதுல வேற எதுவுமே தோணவே இல்ல..” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது..
“அப்பு.. அப்போ போனை எடுத்து இருக்கலாம் இல்ல..” மனத்தாங்கலாக கேட்க, கார்த்திக் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான்..
“தலையை நிமிருடா தடியா..” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பல்லைக் கடித்தவள், கார்த்திக்கை முறைக்க, சித்தார்த் சிரித்து,
“மதி அப்பறம் ஒன்ஸ் மோர்ன்னு கேட்பான்.. அதனால இவனைத் திட்டறது எல்லாம் அப்பறம் திட்டு..” என்று கேலி செய்யவும், கார்த்திக் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஆதிராவைப் பார்த்தான்..
“கார்ல ஏறினதும் நம்ம வீட்டுக்குத் தானே போகப் போறாங்கன்னு நம்பிக்கையில இவருக்கு வாய்ஸ் மெஸ்செஜ் செய்ய தொடங்கிட்டு நிமிர்ந்த பொழுது தான், அவங்க வேற வழியில போயிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சு, நான் சத்தம் போட்டேன்.. அப்போ அந்த ஆளு என் முகத்துல ஒரு கர்சீப்பை வச்சு அழுத்தினான். அந்த கார்ல எனக்கு இன்னொரு லேடி இருந்தாங்க.. அவங்க யாருக்கோ கால் செஞ்சு ‘அவளை தூக்கியாச்சு’ன்னு சொல்லிட்டு.. ஆதவன் கிட்ட ‘இவளை கொண்டுப் போய் அந்த ஃப்ளாட்லையே வைங்கன்னு சொன்னார்.. அப்போ தான் என்னை யாரும் கண்டுப்பிடிக்க மாட்டாங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கு அப்பறம் நான் மயங்கிட்டேன்..” என்ற ஆதிரா,
கார்த்திக்கைப் பார்த்துக்கொண்டே, “இவரோட குரல் கேட்ட பொழுது நான் கண்ணு முழிச்சேன்.. அப்போ எனக்கு கண்ணைத் திறக்க கூட முடியல.. ஆனா.. இவரோட குரல் மட்டும் கேட்டுக்கிட்டே இருந்தது.. நான் கார்த்திக் கார்த்திக்ன்னு கூப்பிட்டது இவரோட காதுலையே விழலபோல.. ஆனா.. அப்போ ஆதவனோட குரல் கேட்டுச்சு.. யாருகிட்ட சொன்னான்னு தெரியல.. அந்த இடத்துக்கு கார்த்திக் வந்துட்டான்னு சொல்லிட்டு இருந்தான்.. உடனே கொஞ்ச நேரத்துல என்னை எங்கயோ தூக்கிட்டு போற மாதிரி இருந்தது..
அதோட நான் மயங்கிட்டேன்.. அப்பறம் அந்த ஃப்ளாட்ல கண்ணு முழிச்ச பொழுது ஆதவனும் விசித்திராவும் தான் அங்க இருந்தாங்க.. அந்த ஆதவன் அடிக்கடி என்கிட்டே வந்து நின்னுட்டு போவான்.. அப்படி தான் என் கொலுசை எடுத்துட்டு போயிட்டு வந்து, நீங்க எல்லாம் அந்த பாடிகிட்ட கஷ்டப்படறதை எல்லாம் வீடியோ எடுத்துட்டு வந்து காட்டினான்.. அப்போவே இவரு காலைத் தொடவுமே.. கண்டிப்பா அதை நம்ப மாட்டாருன்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு.. அதே போல விசித்திரா நீங்க எல்லாம் அந்த ஏரியால சுத்திட்டு இருக்கறதாவும், கார்த்திக் அங்க தான் ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்காருன்னும் சொன்னா..
எனக்கு எப்படியோ இவர் இந்த ஏரியால டவுட் வந்து தான் இருக்கார்.. கண்டிப்பா சாதாரணமா விட மாட்டாருன்னு தான் பிளான் பண்ணி அந்த குழந்தையை வச்சு விளையாட முடிவெடுத்தேன்.. அந்த ஆளுக்கும் விசித்திராவும் ஏதோ முதல்ல வாக்குவாதம் நடந்தது.. அதோட அப்படியே ரெண்டு பெரும் வெளிய போயும் ரொம்ப சண்டைப் போட்டது என் காதுல விழுந்தது.. அந்த வாக்குவாதத்துல அவங்க கவனம் குறைவா நான் இருந்த ரூம் கதவை திறந்து போட்டுட்டு போயிட்டாங்க.. அப்படித் தான் அந்த குழந்தை நான் இருந்த ரூமுக்கு வந்தது.. நான் அதுகிட்ட பேசி, அதை வெளிய போய் விளையாட சொல்லி நைசா அனுப்பி விட்டேன்.. கண்டிப்பா அவரு அந்தக் குழந்தையை அடையாளம் கண்டு என்னைக் காப்பாத்துவாருன்னு தெரிஞ்சு தான் செஞ்சேன்.. நீங்களும் வந்து என்னைக் காப்பாத்திட்டீங்க..” என்று அனைத்தையும் சொல்லி முடித்தவள், கண்ணீருடன் கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக், அவளது தலையை வருடிக் கொடுத்தான்..
“வேற ஏதாவது அவங்க பேசறது உனக்கு கேட்டுச்சா ஆதிரா? வேற ஏதாவது பேர் உன் காதுல விழுந்துச்சா? இல்ல கார்த்திக் பேரைச் சொல்லி, கார்த்திக்கைப் பழி வாங்கறதா ஏதாவது சொன்னாங்களா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லும்மா.. அவங்க பக்கத்து ரூம்ல பேசினது கூட உனக்கு கேட்டு இருக்கலாம் இல்லையா? ப்ளீஸ்.. கொஞ்சம் யோசி..” சித்தார்த் கேள்வி கேட்க, ஆதிரா கண்களை மூடி யோசிக்கத் துவங்கினாள்..
கார்த்திக் அவளது முகத்தை யோசனையுடன் பார்க்க, “இவரு அந்த மொட்டை மாடியில அவனை முறைச்சாராம்.. அடிக்கிற மாதிரி போனார் போல.. அது தான் அடிக்கடி சொல்லி என்னை திட்டினான்.. அதுக்கும் மேல வேற..” என்று இழுத்தவள்,
“ஆனா.. அடிக்கடி ஏதோ போன் வந்துச்சு.. அதுல அய்யான்னு சொல்லி தான் பேசினான்.. அதைத் தவிர எனக்கு வேற பேர் தெரியல சார்.. என்னையும் பாதி மயக்கத்துல தான் வச்சிருந்தாங்க.. எனக்கு அதைத் தவிர வேற எந்த பேரும் கேட்கல..” ஆதிரா சொல்லவும், கார்த்திக்கைப் பார்த்து தலையசைத்த சித்தார்த்,
“சரி கார்த்திக்.. நீ டாக்டர்கிட்ட கேட்டு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ.. ஆதிரா கொஞ்ச நாளைக்கு வெளிய எங்கயுமே போக வேண்டாம்.. அவங்களை பிடிக்கிற வரை கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கட்டும்.. வேற ஏதாவதுன்னா நான் கால் பண்றேன் கார்த்திக்..” என்று சொன்ன சித்தார்த் எழுந்துக் கொள்ள, கார்த்திக் அவனுடன் எழுந்து நின்றான்..
“சரி.. சீக்கிரம் கல்யாண டேட் சொல்லுங்க.. நாங்க எல்லாம் லீவ் போட்டு எங்க மச்சான் கல்யாணத்துக்கு வர வேண்டாமா?” என்று கேலி செய்தவன்,
“நான் வீட்டுக்கு போயிட்டு அப்பறம் தெய்வாவ கூட்டிட்டு வரேன்மா.. அவளும் ரெண்டு நாளா நீ காணும்ன்ன உடனே ரொம்ப பயந்து அப்செட்டா இருக்கா.. நீ கிடைச்சன்னு சொன்ன உடனே அவ ரொம்ப சந்தோசமாகிட்டா.. அதுனால உன்னைப் பார்க்கணும்ன்னு ரொம்ப அட்டகாசம் பண்றா. சரி.. இப்போ நான் கிளம்பறேன். இல்ல இங்க ஒருத்தன் என்னை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிருவான்..” என்று சித்தார்த் அவர்களிடம் இருந்து விடைப்பெற, கார்த்திக் ஆதிராவின் கன்னத்தை வருடி, நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
“நான் போய்.. டாக்டர பார்த்து டிஸ்சார்ஜ்க்கு கேட்டுட்டு வரேன்..” என்று சொல்லவும்,
“நான் போய் சொல்லிட்டு போறேன்.. நீ அவளோடவே இரு..” திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டுச் சென்ற சித்தார்த்தைப் பார்த்து, கார்த்திக் தலையில் அடித்துக் கொள்ள, ஆதிரா நாணத்துடன் தலைக் கவிழ்ந்தாள்..