இளைப்பாற இதயம் தா!-20அ

இளைப்பாற இதயம் தா!-20அ

இளைப்பாற இதயம் தா!-20A

ஐடா சமீப காலமாகவே ரீகனது அழைப்பை புறந்தள்ளி விட்டிருந்தமையால், அவளின் தாய் ஸ்டெல்லாவிற்கு அழைத்து இரண்டொரு வார்த்தை அவரிடம் பேசுபவன் அடுத்து ஐடாவிடம் அலைபேசியைக் கொடுக்கும்படி சொல்லுவான். 

ஸ்டெல்லாவும் ரீகன் சொன்னபடி கொடுக்கும்போது, “டவர் உனக்கு மட்டும் கிடைக்க மாட்டிங்கிதா… இல்லை சைலண்ட்ல எதுவும் போட்டு வச்சிருக்கியா? போன் சரியா இல்லைனா மாத்திரவாவது செய்யேன் ஐடா” என்றபடியே ஒவ்வொரு முறையும் மகளிடம் கொடுத்திருந்தார்.

ஆனால் கடந்துபோன தினங்களில் முதல் இரண்டு நாள்கள் ரீகன் அழைத்தபோது ஸ்டெல்லாவே அதையேற்கவில்லை.  மகள் அவளின் கணவன் பற்றிய விசயத்தை உரைத்தது முதலே அழைப்பை ஏற்க முன்வரவில்லை ஸ்டெல்லா. 

அதற்கு சில காரணங்கள் இருந்தது.  ‘நம்பினோமே… இப்டி ஏமாத்துவாங்க என்று நினைக்கல்லியே…’ எனும் குமுறல் ஒரு பக்கம். ‘இப்படிப்பட்ட பையன்னு பொண்ணு சொல்லியும் என்னால நம்ப முடியாம இல்ல அவரோட செயல்பாடுகள் இருக்கு!’ எனும் குழப்பம் மறுபக்கம்.

ஐடா ஒவ்வொன்றையும் சாட்சியங்களோடு விவரித்ததால் மகளின் பேச்சையும் அவரால் ஒதுக்க முடியவில்லை.

மகளின் வாழ்வு இடர்பாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டதை மனதிற்குள் வைத்து உளன்றவருக்கு வழமைபோல சாதாரணமாக ரீகனோடு பேச முடியும் என்று தோன்றவில்லை.

 மகளின் வாழ்வு வீணாகிப் போனதை எண்ணி தன்னை மீறி கோபமாக ரீகனைப் பேசிவிட்டால் என்று அழைப்பை ஏற்காமலேயே விட்டிருந்தார்.

எதையும் சற்று ஆறப்போட்டு நிதானமாக பேசும்போது அது யாருக்கும் பாதகமில்லாத… மனவருத்தம் தோன்றாத… சிறப்பான முடிவாக இருக்கும் என்பது ஸ்டெல்லாவின் அபிப்ராயம். 

அதனால் மகளோடு இதுபற்றி கலந்துபேசி ஆலோசித்து அதன்பின் என்ன செய்யலாம் என்கிற முடிவுக்கு வர எண்ணியிருந்தவருக்கு இப்படி ஒரு நிலை உண்டாகும் என்பதை அவர் நிச்சயம் யோசிக்கவில்லை.

மகளின் எதிர்காலம் பாழ்பட்டுவிட்டதே என்கிற கலக்கம் அவரை அனைத்திலும் நிதானத்தை கைவிடச் செய்திருந்தது.  அந்த தவறிய நிதானத்தால் மேலும் மேலும் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றங்களையும் அவர் சந்திக்க, உடல்நலனும் இல்லாமல் இருந்தவருக்கு கணவரது குற்றம்சாட்டும் பேச்சுகளையும் கேட்க நேரிட, மேலும் அழுத்தம் கூடி… முடிவு… பாரலைஸ்!

ஸ்டெல்லாவின் உடல்நலன் மோசமடைந்த காரணமாக அடுத்து வந்த நாளிலும் ரீகனது அழைப்பு ஏற்கப்படாமல் போகவே வேறு வழியின்றி, ‘ஆண்ட்டி இப்படி எடுக்காம இருக்க வாய்ப்பில்லை.  ஐடாவுக்கு எதாவது ஹெல்த் இஸ்யூவா இருக்குமோ? இல்லை ஆண்ட்டிக்கு பிரச்சனையா…’ என்று பாட்டியின் தயவை நாடியிருந்தான் ரீகன்.

“ஆண்ட்டி எப்போவும் கால் அட்டெண்ட் பண்ணுவாங்க பாட்டீ.  ஏன்னு தெரியலை! லாஸ்ட் ஃபோர் டேஸ்ஸா அவங்களும் அட்டெண்ட் பண்ண மாட்றாங்க!” கலக்கத்தோடும் பேசிய பேரனது பேச்சைக் கேட்டு தாமதிக்காது உடனே அழைத்திருந்தார் ரூபி.

கணவனது லீலை தெரிய வந்தது முதலே மனதை விட்டிருந்த ஐடாவிற்கு எதிர்பாரா விபத்தில் சிக்கி, வெறுத்ததால் அவனைக் காண விரும்பாமல் ஓடியவளின் முன்வந்து அவனே நின்று தனக்கு உதவும்படி நேர்ந்த நிலையைப் பார்த்ததும் உள்ளுக்குள் நொறுங்கிப் போயிருந்தாள். 

‘என்னால சகிச்சிக்கிட்டு இவங்களோட இருக்க முடியாதுன்னுதானே ஆண்டவரே கிளம்பினேன்.  அங்கயும் ரீகனையே கொண்டு வந்து நிறுத்தினா… நான் என்ன செய்யட்டும் ஆண்டவரே!’ எனும் குமுறலை அடக்கியபடி வேறு வழியின்றி ரீகனது பணிவிடைகளை பொறுத்துக்கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்து தனது நிலையை சீரமைத்துக்கொள்ளலாம் என்று தேவகோட்டை வந்தவளுக்கு தாயின் உடல்நிலை தெரியவர, அதனை எண்ணி மனதோடு வைத்து மறுகிக் கொண்டிருந்தவள், தனது நிலையை தாயிடம் பகிர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நினைத்திருக்க… எதிர்பாரா விதமாக பேரலைஸ் காரணமாக தாயின் உடல்நிலை மோசமானதைக் கண்டு முற்றிலும் உடைந்து போயிருந்தாள்.

விரக்தியோடு விதியின் விளையாட்டை எதிர்கொண்டிருந்தவளுக்கு இளைப்பாற எந்த ஆதரவும் இன்றி தனிமரமாக இருந்த நேரம் பாட்டி அழைத்ததும் வேறு எந்த பற்றுகோலும் இன்றி தனிமையில் பித்துப் பிடித்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தவளுக்கு நிதானம் போயிருந்த காரணத்தால் எதையும் உள்ளுக்குள் அடக்கி வைக்க முடியாமல் பீறிட்டு வந்த அனைத்து உள்ளக் குமுறலையும் அவரிடம் கொட்டித் தீர்த்து அழுதிருந்தாள் ஐடா.

அனைத்தையும் அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தவன் அதற்குமேல் தாமதிக்கவில்லை. உடனே கோவைக்கு பயணத்தை துவங்கியவனின் மனதெல்லாம் பாரம்!

அதேநேரம் முன்பிருந்த பாரம் ஓரளவிற்கு இறங்கி ஐடா சற்று தேறியிருந்தாள்.

மனைவி ஓவென்றி கதறி அழுதபடி பேசியது செவியில் ஒலித்து ரீகனை இம்சித்திட, ‘இவளை யாரு ஆண்ட்டிகிட்ட இதையெல்லாம் இப்ப சொல்லச் சொன்னது.  சொல்லிட்டு… யாரு இப்ப கஷ்டப்படறது!  தேவையில்லாம எதையாவது இழுத்து வச்சிட்டு இவளும் கஷ்டப்பட்டு நம்மளையும் கஷ்டப்படுத்தறா!’ என்று நினைத்தவாறு, அங்கு ஸ்டெல்லாவை ஐடா மட்டும் தனியொருத்தியாக இருந்து பார்த்துக்கொள்வது தெரியாமலேயே கிளம்பி அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்தான் ரீகன்.

மனைவியையும், வருங்காலப் பிள்ளையையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தவனுக்கு, தற்போது கூடுதல் சுமை!

அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது!

வாலிபத்து உணர்வுக் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாலியல் தாகத்தைத் தணிக்க மனைவியோ, அல்லது துணைவியோ அப்போது இல்லாததால், இதர பெண்களின் துணை அப்போது மிகவும் அவசியமாகப்பட்டது. 

அதில் ஒரு நிறைவென்பதே கிட்டாமல் அடுத்து… அடுத்து என்று நாள்கள் போனதே அன்றி அவனது நிலையை தெரிந்து… அதைத் தடுக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ யாரும் முன்வரவில்லை.  அதனால் அவனுக்கும் அது தப்பாகவே தோன்றவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இன்னும் அதில் தப்பென்பது பிடிபடாமல்தான் வந்துகொண்டிருந்தான்.

‘கல்யாணத்துக்கு முன்ன அப்டித் தோணினா… வேற என்ன செய்ய முடியும்? ஆப்ஃடர் மேரேஜ் சரியாதான எல்லாம் போகுது.  இப்ப எதுக்கு பழையதையெல்லாம் இழுத்துட்டு…’ எனும் அவனுக்குள் எழுந்த கேள்விக்கு யாரிடம் சென்று பதிலறிவது என்று புரியாமல்தான் ரீகனும் இருக்கிறான்.

எரிச்சலும் தோன்றியது.  ஆனால் அதனைக் காட்ட இது சரியான நேரமல்ல என்றுதான் அமைதி காக்கிறான்.

திருமணத்திற்கு முன்பு அவன் அப்படி இருந்த காலகாட்டங்களில் முதுகிற்குப் பின்னால் விமர்சனங்கள் பல இருந்திருக்கலாம்.  ஆனால் அதைப்பற்றிய விசயம் எதுவும் அவன் காதை அடைந்திருக்காததால், அதன் தாக்கம் பின்னாளில் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை அவனறிந்திருக்கவே இல்லை. 

மிகவும் நெருங்கிய நண்பர்கள், “ம்ஹ்ம்… கலக்குற மச்சி” தனக்கு அதுபோல ஒரு வாய்ப்பு அமையவில்லையே எனும் குமைச்சலோடும்,

“பாக்கற எல்லாம் உனக்குப் படியுதே… என்ன மச்சான் பண்ற?” ஆதங்கத்தோடும்,

“எங்களுக்கும் அந்த சீக்ரெட் சொன்னா என்ன மாப்ள?” என்று நமுப்போடும்,

“பாத்துடா மாப்ள!  ஏழரைய கண்டு இழுத்துட்டு வந்துராத!” முன்னெச்சரிக்கை செய்யும் விதமாகவும்,

“லைட்டா எங்களையும் கொஞ்சம் கவனிக்க சொல்றது!” எச்சில் புத்தியோடும் பலவாறாக ஒவ்வொருவரும் பேசும்போது கெத்தாக உணர்ந்தானே அன்றி அப்போது வேறு எந்த நினைப்பும் வந்ததில்லை.

மறைந்து சென்று யாருக்கும் தெரியாமல் தனது லீலைகளைத் தொடர எண்ணியதுமில்லை ரீகன். வீட்டினருக்குத் தெரிய வேண்டாம் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான்.  மற்றபடி பகீரங்கமாகவே அப்படி பணிபுரியும் இடங்களில் இருந்தான் என்பதற்காக இருபாலரில் யாரும்… எங்கும்… அவனைத் தள்ளி நிறுத்தியதுமில்லை.

அதனால் அதனை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பாவிக்கத் துவங்கி வாழ்ந்துவிட்டான்.  தற்போது அவன் மாறி வாழத் துவங்கியிருந்தாலும், முடிந்த கதையே பெரும் பிரச்சனையாகி நிற்பதை எப்படி மாற்ற முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

பசியைப்போல அந்த உணர்வு தோன்றும்போது அவனை நாடிய பெண்களிடம்… அவனது தேவையை உணர்த்த… அவர்களும் அதனை தடுக்கவோ, ஒத்துழைக்காமல் வேறு எதையும் அவனிடம் வேண்டவோ செய்யாமல் போக, ரீகன் வாழ்வில் உல்லாசத்திற்கு குறைவென்பதே இல்லாமல் சென்றது.

கன்னி ராசியோ வேறு என்ன காரணமோ அவன் தேவைக்காக நாடிய பெண்கள் அனைவருமே அவனுக்கு ஒத்துழைத்தார்கள். அவனுக்கான தேவையில்லாதபோதும் சிலரால் அவர்களின் தேவைக்காகவும் தேடப்பட்டான்.  அவனது தந்தையின் மரணம்வரை அப்படிச் சென்ற இன்பப் பொழுதுகள் அதன்பின் குடும்பம், பொறுப்பு, உழைப்பு, தொழில் என்று வந்தபின் பாதை சற்று மாறியது.

உல்லாசம் அது வாழ்வின் ஒரு பகுதிதானே அன்றி, அதுவே வாழ்க்கையல்ல என்பது ரீகனுக்குப் புரிய வந்திட்ட காலமது. அதனால் சற்று நிதானித்தான். மேலோட்டமாக அலசி ஆராய்ந்தான். 

ஆனால் அந்த உணர்வை கட்டுப்படுத்தி வைராக்கியத்தோடு கட்டுக்கோப்பாக இனி இருக்கவேண்டும் என்று அப்போதும் தோன்றவில்லை. 

முதலில் பெண் போகமே இல்லாமல் இருக்க முடியாது என்பது மாறி, தற்போது தேவைக்கு என்று சல்லாபத்தை குறைத்துக்கொண்டான்.

திருமணத்திற்கு பார்க்கும்வரை, குறிப்பாக ஐடாவைப் பார்க்கும்வரை அந்த மனநிலையில் இருந்தவன் அவன் எதிர்பாராமலேயே சற்று மாறித்தான் போயிருந்தான்.  அதற்கான காரணம் இதுவரை அவனுக்கே தெரியாது.

திருமணத்திற்குப்பின் வெளியே செல்லத் தோன்றாமல் போனதற்கு நிச்சயமாக அவனது வைராக்கியமோ, கட்டுப்பாடோ காரணமில்லை என்பதும் அவனுக்குத் தெளிவே!

அவனது பழைய வாழ்க்கை முறை விசயம் தனது வருங்கால வாழ்வில் பெரும் புயலை உண்டாக்கும் என்பதற்காக நிச்சயமாக அவன் மாறவில்லை.  ஐடாவின் அணுகுமுறை மட்டுமே இந்தளவிற்கு அவனை மாற்றியது. 

பழைய விசயங்கள் ஐடாவிற்கு தெரிந்து அவள் கேட்கும்வரை அவன் இதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி துளியும் யோசித்துப் பாத்திருக்கவில்லை. பயப்பட்டதும் இல்லை.

ஆனால் நடந்து முடிந்திட்ட விசயங்களை பறைசாற்றிடவும் அதுவரை அவன் முன்வந்திருக்கவில்லை.  அதிலேயே அவனது தயக்கம் எதனால் என்பதை அவன் ஆராய்ந்திருந்தால் நடப்பை சற்று மாற்றி அமைத்திருக்க முடிந்திருக்கலோமோ என்னவோ!

இனி பிற பெண்களை நாடிச் செல்லாமல் இருக்க முயலலாம்.  ஆனால் நடந்து முடிந்ததற்கு தற்போது அவனால் ஆகப்போவது என்ன?

வந்தவள் ஏனோ தானோ என்று அவனோடு வாழ்ந்து, அவனிடம் ஒவ்வொன்றிற்கும் தர்க்கம் செய்து பிடிப்பில்லாமல் வாழ்ந்திருந்தாள் ஐடாவின் முடிவு நிச்சயம் அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால்… ஐடா!

ஊனாகி, உயிராகி என்று துவங்கி வந்த பதினோரு மாதங்களில் ரீகனுக்கு அனைத்துமாகிப் போயிருந்தாள்.  தொழிலில் சிறு தொய்வு என்றால் அவளோடு கலந்தாலோசித்து செயல்படுவான்.  குடும்பத்தில் யாருக்கேனும் சின்ன இடர் என்றால் இருவரும் பேசி தக்க முடிவெடுப்பர்.   

ஒரு பெண் ஒரு ஆணுக்கு எத்தனை வெவ்வேறு உறவுகள் மூலம் பக்கபலமாக இருக்க முடியுமோ அத்தனை உறவாகவும் தான் ஒருத்தியே அந்தந்த நேரங்களில் தன்னை உருமாற்றி, ரீகனை மீட்டெடுக்கும் கருணை மிகுந்தவளாக அல்லவா அவனோடு இதுநாள்வரை வாழ்ந்திருந்தாள்!

சிறு பிள்ளையில் கிட்டாத தாயின் பாசம் முதல் மனைவியாக வந்தது வரை அவன் எதிர்பார்த்த விசயங்களைக் காட்டிலும்… எதிர்பாராத பலவற்றையும் வள்ளல்போல வாரி வழங்கி ஒரு சிறந்த காரியதரிசி போலல்லவா இத்தனை நாள் அவனோடு வாழ்ந்திருந்தாள்.

ஆனால்… அதுவே மாறிப்போகும் நிலைவரும்போது அதனை யாரால் போனால் போகட்டும் என்று ஒதுக்கி விடமுடியும்?

***

Leave a Reply

error: Content is protected !!