இளைப்பாற இதயம் தா!-20ஆ
இளைப்பாற இதயம் தா!-20ஆ
இளைப்பாற இதயம் தா!-20B
ரீகனது திக்கு தெரியாத வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டியாக ஐடா மாறியது யார் தவறு?
கடலில் விடப்பட்ட கப்பலைப்போல இருந்தவனுக்கு நங்கூரமாக ஐடா மாறியதும் ரீகனது வாழ்வில் அனைத்தும் மாறிப் போனது. பார்வைகள், எண்ணங்கள் மட்டுமல்லாது செயல்பாடுகள்கூட மாறிப்போகும் என்று யாரேனும் திருமணத்திற்கு முன்பு வந்து சொல்லியிருந்தால் ரீகனே நம்பியிருக்க மாட்டான்.
அப்படி இருந்தவனிடம் எதையும் திணிக்காமலேயே உண்டான மாற்றங்கள் உலக அதிசயமே!
ஐடாவோடுடனான வாழ்வை வரமாக ஏற்று வாழத் துவங்கியவனுக்கு, சட்டென அவள் அவனது வாழ்வில் இனி இல்லை என்று சொன்ன சொல்லை இன்றுவரை ஜீரணிக்கவே முடியவில்லை.
அவளில்லாத வாழ்வு இனி தனக்கில்லை எனும் வார்த்தையே வலியைக் கொடுக்க, அவளின் பிரிவு மேலும் கண்ணைக் கட்டியது.
அவனது செயலை அவன் நியாயப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் அதை தைரியமாகச் சொல்லி வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளும் சூழலை அவன் அதற்குமுன் விரும்பவில்லை. அதனால் மறைக்கும்படி நேர்ந்தது. ஆனால் அதுவே பெருஞ்சுழலில் அவனைச் சிக்க வைக்கும் என்று கனவில்கூட அவன் நினைக்கவில்லை.
எல்லாம் ஒரு நாள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தபோது, “ஆமா நான் அப்படித்தான் இருந்தேன்.” என்பதை வருத்தத்தோடு ஒத்துக்கொண்டவன், கீழிறக்கமாக தன்னையே வருத்திக்கொண்டு சற்று நேரம் நின்றாலும், உடனே துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “ஆனா… அதுக்காக உன்னை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று தனது முடிவில் திடமாக நின்றானே அன்றி ஐடாவின் முடிவிற்கு செவிசாய்க்க உடன்படவில்லை.
நடந்ததை இனி மாற்ற முடியாது என்பது திண்ணம். அப்படியிருக்க அதை நினைத்து வருங்காலத்தை வீணாக்க வேண்டுமா என்பதே ரீகனது கேள்வியாக இருந்தது. அவன் பக்கம் தவறிருந்தமையால் இதுவரை பொறுமை காத்தான். அதனால் ஐடாவின் முடிவுகளை எதிர்க்காமல் தளைந்து செல்லும் நிலையிலிருந்தான்.
ஆனால் எந்தக் காலத்திலும் ஐடாவை விட்டு முற்றிலுமாக விலகும் உத்தேசத்தில் இல்லாதவன் அவளின் அத்தனை நிராகரிப்பையும் வெறுப்பான பேச்சுக்களையும், உதாசீனத்தையும் மலையெனப் பொறுத்தான்.
அவளின் வெறுப்பை வேரோடு அறுக்கும் முயற்சியில் அவளைத் துன்புறுத்திடாமல் தொய்வில்லாமல் முன்னேறினான்.
சல்லாபத்திற்கு ஆளில்லாமல் அவன் ஐடாவை தொடர்ந்து வரவில்லை. வாழ்க்கையைப் பற்றிய புரிதலோடு நிதானமும் வந்திருக்க இனி தனது பயணம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிட்டவன் அது கைகூட பொறுமை காத்தான்.
வந்தவனை வரவேற்க விரும்பாத ஐடா அவனை கண்டுக்கொள்ளவே இல்லை. அப்படித்தான் நடக்கும் என்பதை அறியாதவனல்லவே!
அவளின் தாயிக்குத் தெரியுமுன்பே அவனை வேண்டா விருப்பாக தள்ளி நிறுத்திய ஐடா, ஸ்டெல்லா அனைத்தையும் அறிந்துகொண்டு விட்டார் என்றதும், மேலும் வார்த்தைகளில் தயக்கமின்றி அது பொது இடம் என்பதையும் பாராமல் வெறுப்பைக் கக்கினாள்.
“இருக்கமா… இல்லை செத்துப் போயிட்டமான்னு பாக்க வந்திங்களா?” எனும் ஐடாவின் வரவேற்பே ரீகனைத் தாக்கியது. அது அவனது முகத்தில் சற்று வெளிப்பட்டதை ஐடா கண்டு ரசிக்க முனையயில், உடனே புன்முறுவலை மனையாட்டிக்கு பரிசாக்கி ஏமாற்றத்தைத் தந்திருந்தான் ரீகன்.
அவனது சிரிப்பில் வருத்தமில்லை என்பதைக் காட்டிலும் பொய்யில்லை. எந்தக் கபடும் இல்லை என்பதைக் கண்டவளுக்குத்தான் சிடுசிடுப்பு கூடியது.
“எதுக்கு இப்போ வந்தீங்க?”
“அங்கிள் இல்லையா?” சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி கேட்டான் ரீகன்.
“அதை தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறீங்க?” தந்தையைப் பற்றிக் கேட்டதும் அவரின் ஒதுக்கம் நினைவில் வந்திட, மேலும் அவளின் கோபம் கூடித்தான் போனது.
இப்படி சிடுசிடுப்பாய் வார்த்தைகள் ஐடாவிடமிருந்து வந்ததே அன்றி ஒப்புக்குக்கூட இலகுவான வார்த்தைகளை விடவில்லை. அவளின் மேடிட்ட வயிற்றையும் அவளின் வாடிய வதனத்தையும் பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் வலி.
‘எப்படி இருந்திருக்க வேண்டியவள்! இப்படி ஒரு சூழலில் தனியாக இருந்து கஷ்டப்படுகிறாளே!’ என்று வருத்தம் உள்ளுக்குள்.
தாயை தனியொருத்தியாக பார்ப்பது ஐடாவிற்கு முடியாததால், பகலுக்கு, இரவுக்கு என தனித்தனியே அட்டெண்டரை நியமித்து தாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனாலும் அதீத மன அழுத்தம். உடல் சோர்வு!
“நீ ரெஸ்ட் எடு ஹனி! நான் ஆண்ட்டியப் பாத்துக்கறேன்!” என்றதுமே அப்படியே விட்டு விட்டுப் போனால்… அவள் எப்படி ஐடாவாவாள்.
உடனே சட்டென அவன் புறம் திரும்பி, “ஹனி… முனின்னு கூப்டறதை முதல்ல நிறுத்துங்க!” என்று கோபக் குரலில் பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
அருகே இருந்த அட்டெண்டரைப் பற்றிய நினைப்பே இல்லாமல் கணவனிடம் வார்த்தையில் மல்லுக்கு நின்றாள்.
இத்தனை நாளா அப்டித்தானே கூப்பிட்டேன். இப்ப என்ன திடீர்னு வந்தது என்பதுபோல மனைவியைப் பார்த்தவனைக் கண்டு, “உங்க கொஞ்சல்ஸ் எல்லாம் இனி எங்கிட்ட வச்சிக்காதீங்க. வெறுப்பா வருது!” என்று ரீகனின் முகத்திற்கு நேரே பேசிவிட்டு, “பல்லி செவத்துல ஒட்டின மாதிரி பசக்குனு ஒருத்தியோட ஒட்டிக்கிட்டு விடியற வரை அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கறது… அப்புறம் எவளாவது ஏமாந்தவ கிடைச்சா ஹனி, பனின்னு உருகற மாதிரி நடிக்க வேண்டியது!” இகழ்ச்சியோடு பேசிவிட்டு ரீகன் பக்கமாகத் திரும்ப விளக்கெண்ணெயை குடித்தவனைப்போல முகத்தை வைத்திருந்தான்.
அவனுக்குள், ‘இத… இவ விடவே… மாட்டா போலயே!’ என்றிருந்தது.
“உங்களை யாரும் இங்க அழைக்கல. வந்து பாத்தாச்சுல்ல! இடத்தை முதல்ல காலி பண்ணுங்க!” என்று சத்தமிட்டாள் ஐடா.
ஸ்டெல்லா மருந்தின் உபயத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தார்.
ஐடா தன்னிடம்தான் இவ்வளவு நேரம் பேசுகிறாள் என்பது கேளாதது போல அந்த அறையில் ஆங்காங்கு சிதறிக்கிடந்தவைகளை பொறுப்பாக எடுத்து வைத்தான் ரீகன்.
அதுவரை ஓரிடத்தில் அமர்ந்து கையில் இருந்த அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்த அட்டெண்டர் ரீகனது செயலைக் கண்டு பதறி தனது விட்டுப்போயிருந்த வேலையைத் தொடர முனைந்தாள்.
அறைக்குள் நுழைந்ததுமே அங்கு அமர்ந்திருந்த அட்டெண்டரை ரீகனது கண்கள் அளவெடுத்திருந்தது. அவன் பார்த்ததற்கு அவன் மனதைத்தவிர வேறு எந்த சாட்சியும் அங்கில்லை. அது பழக்க தோசம். அது அவனால் மாற்றிக்கொள்ள முடியுமா என்று அவனுக்கே சந்தேகம்தான்.
ஸ்டெல்லாவின் கேஸ் ஹிஸ்டரியை எடுத்து நோட்டமிட்டான். எடுத்த டெஸ்ட்கள் மற்றும் கொடுக்கப்பட்ட மருந்துகள் இப்படி இத்தியாதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவன், இதுவரை ஐடா பேசிய எதையுமே பொருட்படுத்தாமல், “டாக்டர் என்ன சொல்றாங்க?”
‘பைத்தியமா நீ’ என்பதுபோல கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இருவரின் உரையாடலைக் கேட்டாலும் கேட்காதபடி ஸ்டெல்லாவிற்கு வேண்டிய விசயங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அட்டெண்டர் பெண், ‘இவந்தான் இந்தம்மாவோட புருசனா? இல்லை…’ என்று யோசித்தவள், ‘ஓட ஓட அவனை விட்டு விரட்டறதைப் பாத்தா புருசன் மாதிரித்தான் தெரியுது’ என்று முடிவுக்கு வந்தபடியே இருவரையும் பார்க்காமல் அவளின் பணிகளில் கவனமாக இருந்தாள்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஸ்டெல்லாவிற்கான காலைக்கடன்களை முடிக்க உதவி செய்துவிட்டு, காலை ஆகாரத்தை தந்து மருந்தைக் கொடுத்து ஒன்பது மணிக்கெல்லாம் பயிற்சி அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து வரை ஒரு அட்டெண்டர். அடுத்து வரக்கூடிய நேரத்தில் வேறு அட்டெண்டர் என்று மாறி மாறி வந்து பார்த்துக்கொண்டனர்.
பன்னிரெண்டு வரை பயிற்சி முடித்துவிட்டு அதன்பின் மதிய ஆகாரம் மற்றும் மருந்தைக் கொடுத்தால் மாலை ஐந்தரை வரை நல்ல உறக்கத்திற்கு சென்றுவிடுவார் ஸ்டெல்லா.
அப்படிப்பட்ட நேரத்தில்தான் ரீகன் வந்திருந்தான். ஐடா விரட்டினாலும் எங்கும் அகலவில்லை ரீகன். ‘பையன் அப்புராணியா இருக்கான்னு இந்தப் பொண்ணு ரொம்பத்தான் விரட்டுது’ என்று எண்ணிக்கொண்டு இருந்த அட்டெண்டரிடம், “இந்தாங்க இன்னைக்கு பேமெண்ட்!” என்று நீட்டிய ஐடா அதனை அவள் பெற்றுக்கொண்டதும்,
“நான் கேண்டீன்வரை போயிட்டு வரேன். அடுத்த அட்டெண்டர் வந்தா நீங்க அவங்கட்ட சொல்லிட்டுக் கிளம்பிருங்க!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, ஐடாவோடு செல்லாமல் அங்கேயே இருந்தான் ரீகன்.
கணவனைப் பார்த்தவள், “அவங்க பாத்துக்குவாங்க… நீங்க வாங்க எங்கூட” என்று அழைக்க,
மனைவி சொல்லே மந்திரம் என்பதுபோல அவளின் பேச்சை மறுக்காமல் அவள் பின்னே ரீகனும் கிளம்பினான்.
சோர்ந்து போய் கேண்டினில் அமர்ந்தவள் ஆர்டர் செய்து அவளுக்கும் கையில் ஒரு கோப்பையோடு வந்து தந்துவிட்டு அருகே அமர்ந்தவனைப் பார்த்தபடியே, “நடந்த விசயத்தைச் சொன்னதுக்கே அம்மா இந்த நிலைமைக்கு வந்துட்டாங்க…” என்று நிறுத்திவிட்டு காஃபி கோப்பையில் கவனத்தைச் செலுத்தியபடி, “உங்களைப் பாத்தா இன்னும் டென்சன்தான் ஆவாங்க. அதனால இப்பவே நீங்க கிளம்புங்க!” என்றபடியே கோப்பையில் வைத்திருந்த ஸ்டிக்கைக்கொண்டு சர்க்கரையை கலக்கிவிட்டபடி கூறினாள்.
அவள் கூறியது எதையும் கவனத்தில்கொள்ளாமல் வாங்கி வந்ததை உறிஞ்சிக்கொண்டிருந்தான். அவனது கவனமற்ற தன்மையைக் கண்டு கோபம் கொண்டள், “உங்ககிட்டத்தான சொல்லிட்டு இருக்கேன்”
ரீகனது கவனம் தற்போது மனைவியின் பேச்சில் இல்லை!
“என்ன நினைப்பில இருக்கீங்க…” என்றபோதும் அவனிடம் எந்த ரியாக்சனும் இல்லாது போக, “ரீகன்…!” என்று அழுத்திக் கூப்பிட்டாள்.
“ஹான்!” என்றவனின் மீது ஐடாவிற்கு அத்தனை கோபம். ‘என்ன நினைச்சிட்டு இருக்கான்’ என்று.
அவளின் நினைப்பைப் பொய்யாக்குவதுபோல… அவளை ஊன்றி ஒரு கணம் பார்த்துவிட்டு பார்வையை அவளிடமிருந்து அகற்றி சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடியே கையில் இருந்த கோப்பையிலிருந்ததை கடகடவென குடித்து முடித்தவன், “உன்னை இந்த நிலைமையில தனியா விட்டுட்டுப் போக முடியாது!” அழுத்தமாக உரைத்தவன் டேபிளுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த டஸ்ட் பின்னில் அந்த கோப்பையை போட்டவன், சட்டென எழுந்து நின்று… அவனது அலைபேசியை பார்த்தவன், “நீ வா! ஒரு அர்ஜெண்ட் கால். பேசிட்டு வரேன்” என்று அங்கிருந்து வெளியேறினான்.
எதையும் கண்டுகொள்ளாமல் சென்றவனைப் பார்த்து, “எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரிப் போனா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடியே செல்பவனை உற்றுக் கவனித்தாள்.
எத்தனை விதமாக இந்த ரீகனை ரசித்திருக்கிறோம் என்று அவளின் மனம் கேட்டது.
அவனது நடையை, உடையை, அழைப்பை, செல்லச் சீண்டலை, அன்பை, நேசத்தை, ஆக்ரோசமான அரவணைப்பை, ஆளுமையை, ஆகர்ஷிக்கும் செயல்களை இப்படி நீண்டு கொண்டிருந்த பட்டியலை நினைவுபடுத்தி பெருமூச்செறிந்தாள்.
எது ஒன்றும் தெரிய வராதவரை பிரமிப்புதான்போலும். தெரிய வந்தபின் காலுக்கு கீழ் கொணர்ந்திட்ட நிலையை எண்ணி ஐடாவிற்கே வலித்தது.
எல்லாம் மாயை!
ரீகன் செல்வதையே பார்த்தபடி காஃபியை உறிஞ்சியவளுக்கு அவனது தோற்றத்தில் இருந்த வித்தியாசம் அப்பட்டமாகத் தெரிந்தது. மூன்று சுற்றிற்று மேல் மெலிந்திருந்தது தெரிந்தது.
எதிலும் ஒரு நேர்த்தியோடு எப்போதும் திமிலோடு கூடிய இளங்காளையைப்போல சுறுசுறுப்பாக பார்த்துப் பழக்கப்பட்டிருந்தவனின் ஏனோ தானோ எனும் உடை, மழிக்கப்படாத தாடி, புதராக மண்டிக் கிடந்த வாராத தலை முடி என்று பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல இருந்தவனைக் கண்டு அவளறியாமலேயே ரீகன் மீது அனுதாபம் தோன்றியது.
ஐடா விபத்தின்போது சில நாள்களும், அதன்பின் தேவகோட்டை சென்றபோது சில நாள்களும் ஐடாவோடு செலவளித்த நாள்களின் வேலையை எல்லாம் ராப்பகலாக செய்து முடித்துவிட்டுத்தான் இன்று கோவைக்கு வந்திருந்தான். அதனால் இத்தனை வித்தியாசங்கள் ரீகனிடம்.
அவளிருக்கும் நிலை புரியாமல், ரீகனை எண்ணி கவலை கொண்டாள் ஐடா!
அவனது நிலையைக் கண்டதும் வலித்தது ஐடாவிற்கு!
சிறு குழந்தைக்குப் பார்ப்பதுபோல தான் பார்த்துப் பார்த்துச் செய்தது எல்லாம் மனக்கண்ணில் வந்து, ‘இப்டி விட்டுட்டுப் போறதுக்குத்தான் விழுந்து விழுந்து பாத்தியா!’ என்று கேலி செய்தது அவளை.
அவளால் ரீகனை யாரோடும் பங்கிட்டுக்கொள்ள முடியாது… ஆனால் பங்கிட்டதை அறிந்ததையே அவளால் ஜீரணிக்க முடியவில்லையே!
காலத்தால் அதனை ஜீரணிக்க முடியுமென்பது அவளுக்குப் புரியவில்லை! அதனால் இந்தக் கலக்கம்! குழப்பம்!
ரீகன்மீது அளவற்ற நேசமும் அன்பும் கொண்ட மனம் அவன் தனக்கே தனக்கென வேண்டுமென்றது!
அதேமனம் அவன் பலராலும் போற்றப்பட்டவன் என்பதை நினைவில் கொணரும் தருணம்… ச்சீய்… அவன் வேணவே வேண்டாமென்றது!
என்ன செய்வாள்?
***