MMOIP 14.2

1650508912096-a3ad0bf6

MMOIP 14.2

அத்தியாயம் – 14.2

 

இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது வெற்றிக்கு. அவள் வரவில்லை. கண்டிப்பாக ஏதோ பிரச்சனை என உணர்ந்தவன், ‘பாட்டிகிட்ட சொல்றதுக்கு முன்ன புவனாகிட்ட சொல்லுவோம்.’ என நினைத்தவனுக்குத் தெரியவில்லை அவள் அறிவாளென!

‘சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடந்து அவ என் பொண்டாட்டியா வரணும்.’ மனதார கடவுளை வேண்டினான். கோவில் வந்ததிலிருந்தே இதே வேண்டுதல்தான்.

கோவிலிற்கு அருகே இருக்கும் அரசமரத்தடியில் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருக்க, அவனிடம் ஒருவர் வந்து ஏதோ பேச, வரவழைத்த புன்னகையோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு தூரம் தள்ளி பின்னால் தான் அந்த ரஞ்சனும் மற்றவரும் இருந்தனர். பலரும் அங்கு இருந்தனர். ஆனால் சற்று தூரமாக.

போனமுறை வரும்போதே பல பெண்கள் அவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் வெற்றியை பார்த்ததையும், பலரும் அவனிடம் மரியாதையாக இனிமையாக பேசியதையும் கவனித்து ஏனென்றே தெரியாமல் உள்ளே எரிந்தான்.

அவன் ஊரில்கூட யாரும் இப்படி அவனிடம் மரியாதையாக பேச மாட்டார்கள். அப்படியிருக்க இந்த ஊரில் அவனை யாரென்றே  முதலில் தெரியவே தெரியாது.

அதிலும் அவன் பேச்சுக்கும், பார்வைக்கும் மரியாதை ஒன்றுதான் குறைச்சலாக போய்விட்டது போலும்.

தன்னுடன் இருந்தவர்களிடம் திரும்பியவன் வெற்றி, அவன் பிறப்பு பற்றியும் அவன் அன்னை பற்றியும் தவறாக பேசி அனைவரும் கூட்டாக சிரிக்க, வெற்றிக்கு அது காதில் விழவில்லை.

ஆனால் அந்த பக்கமாக எதற்கோ வந்த கதிரின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

கண்கள் சிகப்பேற, நரம்புகள் புடைக்க, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றவன் அவர்கள் எதிரே வந்து நின்றான்.

என்னதான் வீம்பாக சீன் போட்டுக் கொண்டிருந்தாலும் அவனின் அந்த ரௌத்திரமான முகம் கண்டு உண்மையில் ஆடித்தான் போயினர்.

ரஞ்சன் அருகே வந்தவன், நொடியும் தாமதிக்காது இடியென ஒரு அறையை விட்டான். அத்தோடு நிறுத்தாமல் தவறாக பேசிய வாயில் ஓங்கி ஒரு குத்து விட, பொல பொலவென ரத்தம் கொட்டியது.

கூட இருந்தவர்களும் அல்லவா அவனைப் போல சிரித்தார்கள், பேசினார்கள். அவர்களையும் அறைந்தவன், எல்லாரையும் புரட்டி எடுக்க, ‘வேண்டாம் விட்ரு.’ என வலி பொறுக்கமால் கெஞ்ச ஆரம்பித்தனர்.

அவனுக்கு அதுவெல்லாம் கேட்கவே இல்லை.

‘எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த ஊருக்கே வந்து யார தப்பா பேசுறானுங்க?’ வலி தாங்காமல் கீழே கிடந்து அலறியவர்களையும் மிதித்தான்.

சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் கதிர் காட்டுத்தனமாக அடிப்பதைத்தான் பார்த்தனர்.

பிரபா, ஏன் தர்மா, சிவா கூட இழுத்தனர். அவன்தான் அனைவரையும் உதறித்தள்ளிவிட்டு ஜல்லிக்கட்டு காளை போல சிலிர்த்து கொண்டிருந்தான்.

விபரீதம் புரிந்து விரைந்து வந்த வெற்றி அவர்களே அவனை அமைதியாக்கி விடுவார்களென ஓரம் நிற்க, கதிர்தான் அமைதியான பாடில்லை.

அப்போது பார்த்து அந்த இரு போலீஸ்காரர்கள் வர, அவர்கள்தான் அந்த வீணாப் போனவர்களுக்கு உதவ வந்திருந்தினரே. இதில் ஒருவர் வேறு அந்த ரஞ்சனின் மாமன் முறை.

அவன் செய்தது தவறுதான் ஆனாலும் என்ன என சரியாக விசாரிக்க கூட இல்லாமல்,

“என்ன இப்படி அடிச்சிருக்க அவங்கள?” என அவன் சட்டையை பிடிக்க, அவனுக்கு பதில் சொல்ல கூடத் தோன்றவில்லை.

எல்லாரும் பிடித்து நிறுத்தியதில் அப்போதுதான் அப்படியே நின்றான். ஆனாலும் கோபம் குறையவில்லை.

“வா… ஸ்டேஷன்க்கு. நீ பாட்டுக்கு இவனுங்கள போட்டு இந்த அடி அடிக்குற? அந்தளவுக்கு போச்சா?உன்னலாம் உள்ள வச்சு ரெண்டு தட்டு தட்னாதான் சரி வரும்.” என சொல்ல,

“என்ன பிரச்சனைனு கேக்கவே மாட்றீங்களே சார்?”

“தம்பி கோபப்படும்தான். இவனுங்க எதும் பேசிருப்பானுங்க.”

“இவனுங்க போனமுறையும் பிரச்சனை பண்ணினவனுங்க தான.”

“என்னாச்சுனு கேக்காம எங்க ஊர்க்கார பையன கூட்டிட்டு போயிடுவீங்களா?” என பலரும் பலவாறு கேள்வி எழுப்ப…

அவன் சட்டையை விட்டவர், “என்ன பிரச்சனை எதுக்கு அவங்கள அடிச்ச?” கடமைக்கு கேட்டார்.

எப்படியாவது இவனை அழைத்து சென்று மொத்த வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.

கதிர் எதும் சொல்லவில்லை. அதை இத்தனை பேர் முன்னால் சொல்ல முடியுமா என்ன? பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தான்.

மற்றவரும் கேட்க, அப்போதும் அவன் எதுவும் கூறவில்லை.

அதில் கடுப்பானவர்கள், “பாத்திங்களா எவ்ளோ திமிரா நிக்குறான்னு? அவனுக்கு வேற சப்போர்ட்டுக்கு வரீங்க…”

“நீ கிளம்பு ஸ்டேஷன்க்கு.” எனவும், அடிவாங்கியவர்கள் அவரை பார்த்து வலி மறந்து சிரித்தனர்.

வெற்றிக்கு என்னவோ புரிவது போல இருந்தது.

எதும் கேஸ், எப்.ஐ.ஆர் என வந்தால் அவன் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணியவன், கதிரின் முன் வந்து நின்றான்.

கீழே விழுந்து உதை வாங்கிய ஒருவன் ஒரு கல்லை தூக்கி கதிர் மேல் இட்டிருக்க, அது பட்டு அவனது நெற்றியிலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. அதுவெல்லாம் உணரும் நிலையில் அவனில்லை.

அவனை பார்த்த வெற்றி… பின் காவலரிடம் திரும்பி, “சார் பிரச்சனை வேணாம். அவன மன்னிப்பு கேக்க சொல்றேன். முடிச்சிக்கலாம். ஸ்டேஷன்லாம் கூட்டிட்டு போக வேண்டாம்.” என வேண்டுதலாக கேட்டாலும் அதில் ஒரு கட்டளையும் இருந்ததோ!

அதைக் கேட்டு ரஞ்சன் முகம் கொஞ்சம் மலர்ந்துதான் போனது.

பலரும் அங்கு நின்றிருந்தனர். எனவே அவர் கண்களாலே என்ன செய்யலாம் என கேட்க, அவன் கதிருக்கு இதுவும் அவமானம்தானே என நினைத்து சரி என்றான்.

அனைவர் பார்வையும் கதிர் புறம் திரும்ப, சிலர் மன்னிப்பு கேட்கும்படி சொல்ல முடியவே முடியாது என மறுத்தான்.

மீண்டும் அந்த அதிகாரி வேறு காவல்நிலையம் என சொல்ல, வெற்றிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை குறைந்து கொண்டே சென்றது.

இந்த முறை வெற்றியே கதிரிடம், “மன்னிப்பு கேளு.” என சொன்னான்.

வெற்றி அவனிடம் பேசியது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் ‘அந்த பரதேசிங்க என்ன பேசனானுங்கனு தெரியாம இவர் வேற.’ என சலித்துக் கொண்டு,

“மாட்டேன்.” என மறுத்தான்.

“சொன்னாக் கேளு பிரச்சனை வேணாம்…”

“மாட்டேன். என்ன பிரச்சனை வந்தாலும் பரவாலாம். அவனுங்க என்ன பேசனானு தெரியாம பேசறீங்க.” என வெற்றியிடமே மல்லுக்கு நின்றான்.

என்ன பேசினார்கள் என அறியாத வெற்றியும், அவனை ஸ்டேஷன் கூட்டி சென்று கேஸ் எதும் போட்டு விடுவார்களோ? அடித்து விடுவார்களோ? என பயந்தே அப்படி சொல்ல சொன்னான்.

அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவன் மறுத்து பேச, அந்த போலிஸ்க்காரர் அவன் சட்டையை மீண்டும் பிடிக்க வர, கோபத்தில் கதிரை ஓங்கி அறைந்துவிட்டான்.

கன்னத்தில் கை வைத்து அவனை அதிர்ந்து நோக்க, “எதுனா பிரச்சனனா… தொரைக்கு வாயால பேச வராதா? கைதான் பேசுமோ?”

“என் மேல மரியாதை இருந்தா மன்னிப்பு கேளுடா.” என அழுத்தி சொல்ல,

அந்த வார்த்தையை மீற முடியாமல், ‘தனியா மாட்டுங்கடா உங்க சங்க அறுக்கறேன்.’ என கண்டபடி அந்த ரஞ்சனையும் அவன் உடனிருந்தவர்களையும் திட்டியவன், அனல் கக்கும் விழிகளோடு வேண்ட வெறுப்பாக மன்னிப்பை பேச்சுக்கு சொல்லிவிட்டான்.

பிரச்சனை முடிந்ததென மற்றவர்கள் நகர, அதற்குமேல் எதும் பேச இயலாமல் அடிவாங்கியவர்களும் தத்தியவாறு மெதுவாக நகர்ந்தனர். ஆனாலும் அவன் மனதில் ஒரு அல்ப நிம்மதி.

அவனை ஆழ்ந்து பார்த்த வெற்றியும் சென்றுவிட, சிவா, தர்மா, பிரபா மூவரும் வாயை பிளந்த குறையாக நின்றிருந்தனர்.

வெற்றி அவனுக்காக பேசியது முதல் அதிர்ச்சி என்றால், அவனிடமே பேசியது இரண்டாவது அதிர்ச்சி. அவனை திட்டியது, அடித்தது என அதிர்ச்சியின் எண்ணிக்கைகள் கூட, அவன் ‘என் பேச்சை மதிக்கறதா இருந்தா கேளு.’ எனவும், அவ்வளவு நேரம் அத்தனை பேர் சொல்லிக் கேட்காதவன் மன்னிப்பு கேட்டது மற்றொருபுறம் பெரிய அதிர்ச்சி. எத்தனை அதிர்ச்சியைத்தான் அவர்கள் தாங்குவர்.

அதன்பின் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.

 

தொடரும்….

Leave a Reply

error: Content is protected !!