பூவுக்குள் பூகம்பம் 2
பூவுக்குள் பூகம்பம் 2
பூவுக்குள் பூகம்பம் – 2
சிபி சிறு வயது முதலே மிகுந்த நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பவன். அவனது நியாயமான எந்த ஆசைகளையும் பெற்றோர் நிராகரித்ததில்லை என்பதால் துணிந்து எந்த முடிவையும் தனித்து எடுக்கப் பழகியிருந்தான்.
அப்படித்தான் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்திருந்தான். சில விசயங்களில் பிடிவாதமும் உண்டு. அந்த பிடிவாதம் இதுவரை அவனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியே சென்றிருக்க… சிபியின் விசயத்தில் எதிர்பாரா சறுக்கல் வந்திருந்தாலும் அதனை பெற்றோர் பெரிதுபடுத்தாமல் காரணத்தை எடுத்துக்கூறி மகனைப் புரிய வைப்பதும் நடந்ததுண்டு.
பள்ளி, கல்லூரி என உடன் பயின்ற மாணவிகள் சிபியின் குணத்தைக்கண்டு அவனிடம் சாதாரணமாக நெருங்கி பேச வந்தாலும் ஒன்றிரண்டு வார்த்தையோடு அவர்கள் அறியாமலேயே விலகிச்செல்வதை வாடிக்கையாக்கியிருந்தான்.
அப்படிப்பட்டவனிடமே விளையாட்டுக் காட்டினான் அந்தச் சிறுவன்.
சில நாள்களாக சிபியும் அந்த சிறுவனும் கள்ளன் போலீஸ் விளையாட்டை மிகத் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
சிபிக்கு அந்த சிறுவன் தன்னிடம் பிடிகொடுக்காமல் நழுவுவது புரிந்தது.
அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் சிறுவனை சிபி தேடுவதும், சிபியின் கண்களில் அவன் தென்பட்டதை சிறுவன் உணர்ந்த கணமே அங்கிருந்து மறைவதுமாக இருந்தான்.
எப்பொழுதும் அந்த குழந்தையை சிறுவனது கைவளைவில் வைத்திருப்பதைப் பார்க்கும்போது ஏனோ சிபிக்கு பூவாய் முதன்முதலாக பார்த்தவளையே மனம் தேடும்.
‘என்ன செய்திட்டு இருப்பா… நான் அவளை இப்டி நினைக்கறதே தெரியாம… ஒருத்தி ஏதோ மூலையில வாழ்ந்திட்டு இருக்கா’ மனதிற்குள் பெருமூச்சரிவான்.
அச்சிறுவனோடு தூக்க முடியாமல் குழந்தையைத் தூக்கியபடி செல்பவனைப் பார்த்ததுமே அவளின் நினைப்பு சிபிக்கு வந்து செல்லும்.
‘எப்டி இருப்பா… குழந்தையா இருக்கும்போது அழகா இருந்தா… இப்ப இன்னும் பேரழகியா இருப்பாளா? என்னைப் பாத்தா எப்டி ரியாக்ட் பண்ணுவா? பாத்துட்டு பாக்காமப் போயிருவாளா? பாத்ததும் நான் ஃபர்ஸ்ட் டைம் பாத்த மாதிரி… எதாவது ரியாக்ட் பண்ணுவாளா?’ இப்படியான அவனது திடீர் சிந்தனைகள் அவனுக்கே வியப்பைத் தந்தது.
இரண்டு நாள்களாக சிறுவனைக் காண முடியாமல் சிபிக்கு மனதிற்குள், ‘வேற எங்கயும் போயிட்டானோ… ஆளையே காணோமே’ தேடியபடியே அந்த வாரம் கடந்திருந்தது.
***
பெரும்பாலும் பேருந்து… சில நாள்களில் புகைவண்டிப் பயணம் என பெற்றோரின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி தோழமைகளோடு மனம்போல சென்று வந்ததை வெகுவாக ரசித்தாள் சௌமி.
கல்வியில் எப்போதும் ஆஹா என்று இல்லாதபோதும், படு மோசம் என்று அவளைத் தள்ளி நிறுத்தவும் இயலாது.
இடையில் தந்தையிடம், “ப்பா… காலேஜ் போயிட்டு வர ஈவினிங் சில நேரம் ரொம்ப லேட்டாயிருது. எமெர்ஜென்சிக்கு காண்டாக்ட் பண்ண எனக்கு ஒரு போன் வாங்கித் தாங்கப்பா…” என்றதுதான் தாமதம், மதி வழமைபோல அதற்கு குறுக்கே நிற்க,
செழியன், “வெளியூருக்கு புள்ளை போயிட்டு வரதுக்கு எடையில(இடையில்) எதாவது அவசரம்னா… என்ன செய்யும்?
உங்க அம்மா வீட்டுக்கு கூப்டறதா இருந்தாலும்,, நம்மைக் கூப்பிடறதா இருந்தாலும் கையில போனிருந்தா ஈஸியா இருக்குமுல்ல!” காரணத்தைக் கனகச்சிதமாகக் கூறி மனைவியின் தடுப்பை கன்னிவெடி இல்லாமலேயே உடைத்தெறிந்திருந்தார்.
முதல் வாரம் கல்லூரி வாழ்க்கை மிகவும் சிலாகிப்போடும், சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் போயிருந்தது.
அதேபோலவே அடுத்து வரும் நாள்களும் இருக்கும் என்று எண்ணியவளுக்கு, அடுத்த வாரத்திலேயே அப்படி இல்லை என்று விளங்கியிருக்க, வீட்டிற்கு வந்து புலம்பித் தள்ளியிருந்தாள் சௌமி.
“டென்த்தில நல்ல்…லா… படி! அதுதான் உனக்கு எல்லாமேன்னு சொன்னதை நம்ப்பி… சரி இந்த ஒரு வருசந்தான… படிப்போம்னு…
கரெண்டு போனாலும்… கையில விளக்கைப் புடிச்சுக்கிட்டு படிச்சு… ஒரு வழியா நல்ல மார்க் வாங்கி லெவன்த்துப் போனா…” சற்று நிறுத்தியவள், “ப்போனா…” என மீண்டும் துவங்கினாள்.
“லெவன்த்தில இருந்தே… வேற லெவல்ல படிச்சாத்தான் ட்வெல்த்ல நல்ல மார்க் வாங்கி… காலேஜ்ல சீட்டுக் கிடைக்கும்னு பிஞ்சு மனசுல பாறையத் தூக்கி ரெண்டாவது தடவையா வச்சாங்க…
பாறை இடுக்குல மாட்டி நஞ்சு… நொந்து போயிருந்த மனசைத் தேத்தி… ஆத்தி… ரெண்டு வருசம் ஒழுங்காகூட தூங்காம… சாப்பிடாம… நல்லா குளிக்காம…
நாம படிக்கலாம்னு நமக்கு நாமே திட்டத்துல… உத்வேகத்தை உடம்பு மனசு ரெண்டுலயும் வெறியக் கொண்டு வந்தா…
ஸ்பெஷல் கிளாஸ்னு… எக்ஸ்ட்ரா டைம் வச்சி ரொம்ப ஸ்பெஷலா… ஸ்டடீ… ஈவினிங் ஸ்டடீ… நைட் ஸ்டடீ… மிட் நைட் ஸ்டடீ… மார்னிங் ஸ்டடீ… மூன் நைட் ஸ்டடீன்னு… வகைதொகையா வச்சு செஞ்சானுங்க…
சரினு… எல்லாத்தையும் படிச்சு… கரைச்சு… அதுலயே கரைஞ்சு… ஒருவழியா எக்சாம் எழுதி… ரிசல்ட் வர்ற வரை ஊருல யாரு கண்ணுலயும் படாம…
எடுத்த மார்க்குக்கு ஒரு நல்ல காலேஜ்ல… ஆளு வச்சி சீட்டு வாங்கி… மிஞ்சுன உசிரக் கையில புடிச்சிக்கிட்டு அக்கடான்னு வந்து சேந்து… காலேஜ் லைஃபை ஹாயா… என்ஜாய் பண்ணலாம்னா…
அங்கயும் வந்து ஒழுங்கா ஆரம்பத்துல இருந்தே படின்னு சொல்றாங்க…” என்ன மாதிரியான உலக மகா உருட்டுடா இது என்பதாக இருந்தது சௌமியின் புலம்பல்.
அடுத்தடுத்த நாள்கள் வெவ்வேறு விதமான புலம்பல்கள்.
‘கேண்டீன்னு சொன்னதும்… அங்க இல்லாத ஐடெம்னு ஒன்னு இருக்கவே இருக்காதுன்னு நினைச்சுப் போனா… சுத்த வேஸ்ட்டும்மா…
எதைக் கேட்டாலும்… இப்ப இல்லை. நாளைக்கு வாங்கி வைக்கிறேங்கறாங்க. என்ன கேண்டீனோ!’ இது கேண்டீன் பற்றிய புலம்பல்.
‘ப்பீட்டிக்குன்னு வாரத்துல ஒரே ஒரு அவர். சரி அப்ப ஜாலியா ஃப்ரண்ட்கூட பேசி கலாய்ச்சி அந்த அவரை என்ஜாய் பண்ணலாம்னா… ஒரு அம்மா வந்து வச்சுஉஉ செய்யுது.
பிரேசியர் போட்டீயா… ஸ்ட்ரிப் வெளிய தெரியாம பின்னு குத்திட்டு வர மாட்டீயா. பெட்டிகோட் ஏன் இந்தக் கலர்ல போட்ட…
ஏண்டி டங்கு டங்குனு… முன்னாடி ஆடற மாதிரி நடக்கற… அதைப் பாத்துட்டு பயலுக எல்லாம் பைத்தியம் புடிச்சித் திரிய பிளான் பண்ணிட்டு இருக்கியா… பயலுகளை கிறுக்காட்டறதுக்குன்னே கிளம்பி வருவீங்களாடீ… நீயெல்லாம் ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கிப் போடாம நாளைக்கு காலேஜ்குள்ள வந்த… தொலைச்சிருவேன்… தொலைச்சு…
லைட்டா இருக்கற மெட்டீரியல் காலேஸ் வரும்போது யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா… இப்டி ஏன் ஷால் போட்ருக்க… ஒழுங்கா பின்னு குத்திப் போடுன்னு… உசிரஅஅ வாங்குதும்மா…
ஃபிஸிக்கல் டைரக்டரா அது… சரியான நொச்சும்மா அந்த மேடம்.
ஃபிஸிக்கலா எதுவும் சொல்லிக் குடுக்குதோ இல்லையோ, மெண்டலா எங்களை ஸ்ரெஸ்குள்ள கொண்டுபோயி நிறுத்திருதும்மா…’ வாரத்தில் ஒரு நாள் வந்த கேம்ஸ் ப்பீரீயட் பற்றிய சௌமியின் புலம்பல்.
ஒவ்வொன்றையும் பற்றி அத்தனை விலாவாரியான அவளின் புழுக்கம் அவளின் தாய்வரை வந்திருந்தது.
ஆனாலும் தினசரி விதவிதமான ஹேர்டூவில், விதவிதமான அணிமணிகள், விதவிதமான ஆடைகள், விதவிதமான காலணிகள் என அலங்காரத்தில் சல்லிக் குறையும் வைக்கவில்லை சௌமி.
அதற்கென அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கியிருந்தாள் சௌமி. அதில் தந்தை செழியனுக்குப் பெருமை. ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் விசயத்தை வாகாக மறந்துபோனது தந்தையின் உள்ளம்.
மறந்து போனது என்பதைக் காட்டிலும், அதன் உள்குத்தைச் சரியாக புரிந்து கொள்ளும் திராணியில்லை என்பதே சரி.
தாயோ, ‘இது எங்க போயி முடியுமோ… இராமநாதா… நீதான்பா எப்பவும் எம்புள்ளைகூட இருந்து காப்பாத்தி கரை சேக்கணும்’ கவலையிலும் இறைவனிடம் வேண்டுதலோடு இருந்தார்.
காலையில் எடுத்துச் செல்லும் காலேஜ் பேக்(Bag) மாலையில் கொண்டு வந்து வைப்பதோடு சரி. அதன்பின் அடுத்த நாள் காலையில்தான் அதற்கு வேலை.
பத்து நாள் தொடர்ந்து மகளை கண்காணித்த மதி ஒரு நாள் அழைத்து, “படிக்கச் சொன்னாங்க காலேஜ்லனு… அன்னைக்கு புலம்பினியே சௌமி! ஆனா ஒரு நா… ஒரு பொழுதுகூட புக்கை வீட்டுக்கு வந்து எடுக்கவே மாட்டீங்கற?” தாயின் கேள்விக்கு,
“அது… பஸ்ல வரும்போதே படிச்சிட்டேன்” சீலிங்கை உற்றுப் பார்த்தபடியே ஒற்றை வார்த்தையில் முடித்திருந்தாள்.
உண்மையல்ல என்பது அவளின் உடல்மொழியில் தெளிவாகியிருக்க, கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு மகளை பிரத்தியேகமாக கவனிக்கத் துவங்கினார் மதி.
கல்லூரி நாள்களை திரைப்படங்களில் காட்டுவதுபோல எதிர்பார்த்து வந்தவளுக்கு நிறைய ஏமாற்றமே.
நோட்டு, சிலபஸ், புக் என்று பேசியது வேறு எரிச்சலை உண்டு செய்தாலும், சக மாணாக்கர்களோடு பயணிப்பதே சந்தோசத்தைத் தந்தது சௌமிக்கு.
எந்த ஸ்டாப்பில் எந்தப் பெண் ஏறுகிறாள் என்று கேட்டால் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஆண்களைப் பற்றிய அனைத்தும் தெளிவாக மனதிற்குள் குறிப்பெடுக்கப்பட்டிருந்தது.
அவளின் ஹார்மோன் அனைத்தும் சரியாக வேலை செய்வதை அவளின் செயல்கள் அவளுக்கு உறுதி செய்துகொண்டே இருந்தது.
அதுவும் அவளது வயதொத்தவர்கள் என்றாலும், பார்க்க சுமாராக இருப்பவர்கள் அண்ணனாகவோ தம்பியாகவோ உறவுமுறை சொல்லி அழைக்கப்பட்டனர்.
நல்ல முகவெட்டோடு நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் மாமன் மகன்கள், அத்தை மகன்கள் எனும் உறவின் கீழ் வைத்து அழைக்கப்பட்டனர்.
நேரில் சம்பந்தப்பட்டவர்களோடு அவ்வாறு சொல்லி உறவாடுவது அல்ல. தன் தோழமைகளோடு பேசும்போது, அப்படி உறவு சொல்லிப் பேசிக் கொள்வதுதான்.
இப்படி இவர்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்வது அவர்களைத் தவிர சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாது. அதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
தினசரி பிக்னிக் செல்வதுபோல ஒவ்வொரு நாளும் ரசனையோடு அவளின் பயண நேரங்கள் சென்றது. மற்றபடி கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் வெளியில் வரமுடியாது என்பதை அறிந்ததுமே வெகுவாக மனம் சுணங்கிப் போனாள் சௌமி.
‘இது எல்லாம் இந்தக் காலேஜ்ல சேருமுன்ன விசாரிச்சிருந்துருக்கணும். இனி என்ன பண்ண முடியும்?’ சோகங்களாக மனதில்.
வகுப்புகளில் பாட வேளைகளில் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது போன்ற விசயங்கள் எல்லாம் கண்டவளுக்கு, “படத்துல மட்டும் கிளாஸ் அவர்ஸ்ல ஸ்டாஃப்போட கலாய். கிளாஸ் கட்டடிச்சிட்டு வெளிய போறது இப்டியெல்லாம் காட்டி நம்மை ஏமாத்தியிருக்காணுங்க.
நிஜத்துல வந்து பாத்தாதான் இங்க என்ன நடக்குதுன்னே தெரியுது!” தோழிகளிடம் தனது மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.
ஒவ்வொரு துறைக்கென தனித்தனியே பிளாக்குகள். வகுப்புகளுக்கு சரியான நேரத்தில் ஆசிரியர்கள் வந்து சென்றனர்.
ஒரு பாடத்திற்கான ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தால், அந்த பாடவேளையில் மாற்று ஆசிரியர் ஏற்பாடு என அனைத்தும் அங்கு படு கச்சிதம்.
அனைத்திலும் நேர்த்தி அங்கு கடைபிடிக்கப்பட்டது. பள்ளியில்கூட இத்தனை கண்டிப்பான அணுகுமுறை அவளுக்கு இருந்தது இல்லை.
அதனையும் வீட்டில், “காலேஜ்ல கொண்டு போயி சேக்கச் சொன்னா… பால்வாடியில சேத்து விட்ருக்காரு! எதுக்கு இப்ப எந்திரிச்ச! எங்க போகணும்? என்ன… ஏதுன்னு… முடியலைடா சாமி. எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பாதான்!” என்று தாயிடம் குறை கூறினாள்.
அதையும் கணவனிடம், “அவ சொன்னான்னுதான அந்த காலேஜ்ல கொண்டு போயி சேத்து விட்டீங்க. பாருங்க உங்க புள்ளையோட லட்சணத்தை…” மகள் பேசியதை அப்படியே கூறியிருந்தார் மதி.
செழியனுக்கு மகளின் செயலில் பேச்சில் சிரிப்புதான்.
“எல்லாத்தையும் எம்புள்ளை உங்கிட்ட மறைக்காம வந்து சொல்லுதே. அப்புறம் என்னாங்குறேன்!” என மதியின் வாயை அடைத்தார் வழமைபோல.
மதி அப்போதும், “அதுலாம் ரொம்ப விவரம். எதை யாருகிட்டச் சொன்னா காரியம் ஆகும்னு ரொம்பத் தெளிவா இருக்கும் அந்த குட்டிப்பிசாசு” என்றுரைத்ததைக்கூட தாங்கமுடியாமல் மனைவியைக் கண்டித்துவிட்டு அகன்றிருந்தார் செழியன்.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் வகுப்பறைக்கு சுற்றறிக்கை வந்தது. அதில் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனும் செய்தியைத் தாங்கி வந்தது.
பலர் அதற்கான பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, வகுப்புகளை புறக்கணித்து சிரத்தையோடு வெளியில் சென்று வந்ததைக் கண்டவள் அவர்களிடம் என்ன விசயம் எனக் கேட்டறிந்தாள் சௌமி.
கல்லூரிக்குள்ளேயே அடைந்து கிடப்பது அவளுக்குள் மூச்சை அடைக்கும் உணர்வு. அதிலிருந்து தன்னை சற்று இலகுவாக்க எண்ணி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் சௌமி.
இதுவரை உதவித்தொகையைப் பற்றிய சிந்தனையின்றி இருந்தவள், வீட்டிலிருந்து ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இன்னும் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல முனைந்தாள்.
அதைக்கண்ட செழியன் மகளிடம் காரணத்தை விசாரித்து அறிந்து, “அதுலாம் உனக்கு வேண்டாம்மா. இல்லாத புள்ளைக அப்ளை பண்ணிட்டுப் போகுது. உனக்கெதுக்கு? செலவுக்கு காசு பத்தலையா? அப்பாக்கிட்ட கேளு. நாந்தறேன்” என்றதும்,
“டெய்லி பஸ்ல போயிட்டு வந்து உங்களுக்கு நிறைய செலவு இழுத்து விடறேனே அப்பா! எதாவது காசு வந்துச்சுன்னா ஒரு செலவுக்கு ஆகுமில்லை. அதான்பா…” தந்தையிடம் சமாளித்தவளுக்கு மட்டுமே தெரியும், அன்று வங்கிக்குச் சென்று அவளது பெயரில் புது கணக்கு துவங்க வெளியில் போவதற்கு முடிவு செய்துவிட்டாள் என்று.
அதற்காகத்தான் இத்தனை மெனக்கெடல்கள் என்பது பாவப்பட்ட அவளின் தந்தைக்கு தெரிய வரும்போது அனைத்துமே கைமீறியிருக்கும் என்பதை யார் வந்து தற்போது எடுத்துச் சொல்வது.
கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை சௌமிக்கு. சத்திரம் சாவடிகள் போன்று கல்லூரி இருப்பதை விரும்பியது அவளின் பதின்ம வயது.
மகளின் எண்ணம் புரியாதவர், அவளின் பதிலில் புளகாங்கிதமடைந்திருந்தார் செழியன். ‘எம்புள்ளை வரவர ரொம்பப் பொறுப்பா மாறிக்கிட்டே வருது’ என மனைவியிடம் அவர் சொன்னதே அதற்கான சாட்சி.
சௌமியைப் பொருத்தவரை கஷ்டமில்லாமல் எது கிடைத்தாலும் சரிதான். அதில் அவளுக்கு அளவுகடந்த பிடித்தமும், ஈடுபாடும் இருந்தால் எத்தனை பெரிய மலையையும் தனக்கேதுவாக வளைப்பாள். இல்லையென்றால் மேம்போக்காகவே எதையும் செய்வாள்.
தற்போது கல்லூரிக்குள்ளேயே அடைந்து கிடப்பதிலிருந்து வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை அவளுக்காகவே அவள் ஏற்படுத்திக்கொள்ள எண்ணினாள்.
அதற்கான துருப்புச் சீட்டுதான் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது. மற்றும் அது சார்ந்த பணிகள்.
தனியார் வங்கியில் கூட்டம் குறைவாக இருக்குமென எண்ணி கல்லூரி அலுவலக உதவியாளர்களின் வழிகாட்டுதலின் பேரில் அங்கு வந்தவர்களுக்கு அங்கிருந்த கூட்டத்தைக் கண்டதும் மேலும் சந்தோசம்.
‘இன்னைக்குள்ள வேலை முடியாது. அப்ப நாளைக்கும் இங்க வந்திர வேண்டியதுதான்’ என்று.
மூன்று தினங்கள் அலைய வேண்டியிருந்தது. ஆனாலும் சந்தோசமாகவே தோழிகளோடு சென்று வந்தாள் சௌமி.
மூன்றாவது தினத்தில், அவரவர் கணக்கு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள வந்திருந்தபோது அனைவருடைய புத்தகத்தையும் அவரவர் பெற்றுக்கொண்டிருந்த வேளை, தனலெஷ்மி, மரகதம், கவி சௌமியா, கீர்த்திகா, கனிமொழி எனும் பெயர் வாசிப்பைக் கேட்டு புத்தகத்தை வாங்கச் சென்றபோது, இவளின் முறை வந்திட, “உங்க புக்ல போட்டோ ஒட்டலை. சோ… போட்டோ இருந்தாத் தாங்க” என்றிட,
“நேத்து வேற ஒரு சார்கிட்ட குடுத்துட்டுப் போனேன். இப்ப எங்கிட்ட வேற போட்டோ இல்லையே” மற்றவர்கள் கணக்குப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு கிளம்பியதைக் கண்டு பதற்றம் தொற்றிக் கொண்டதை வார்த்தைகளில் காட்டினாள் சௌமி.
மாணவிகளின் புறம் திரும்பி, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கடீ” என்றுவிட்டு,
“சார்… நாளைக்கு எங்களுக்கு பர்மிசன் தரமாட்டாங்க. இப்போ என் கைல போட்டோவும் இல்லை…” கையைப் பிசைய…
“பக்கத்துல இருக்கற ஸ்டூடியோல போயி போட்டோ எடுத்து வாங்கிக் குடுத்துட்டா… இப்பவே ஃபிக்ஸ் பண்ணித் தந்திருவேன்மா” என்றதும், ‘நானே போட்டோ எடுத்ததுக்கு அப்புறம் ஃபிக்ஸ் பண்ணா தப்பா…” என்றாள்.
அவர் வேறு மாணவியின் கையிலிருந்த பாஸ்புக்கை வாங்கி, “இப்டி போட்டோ மேல சீல் வச்சி ட்ரான்பரண்ட் டேபை ஃபிக்ஸ் பண்ணித் தருவோம்” என்றதும் கையில் இருந்த வாலட்டைத் திறந்து பார்த்தாள் சௌமி.
தந்தை குடுத்து விட்டிருந்த பணம் தாராளமாகவே இருந்தது.
தோழிகளிடம் விசயத்தைக் கூற, “ஏய் தனியாப் போயெல்லாம் போட்டோ எடுக்காத. உங்க ஊருல இன்னைக்குச் சாயந்திரம் போயி எடுத்து, நாளைக்குக் கொண்டு வந்து குடுத்து பாஸ்புக்கை வாங்கிக்கோ” அறிவுரை கூற,
“இல்லைடீ. எங்கப்பா ஏற்கனவே வேணானுதான் சொன்னாங்க. நான்தான் இப்ப வம்படியா வந்து எல்லாஞ் செஞ்சி இடையில இப்டி சொதப்பிருச்சு” முக வாட்டத்தோடு பேசியவளைக் கண்ட தோழி,
“சரி வா. இங்க போயி கேட்டுப் பாப்போம்” என்று அருகே இருந்த கலர்லேப்பிற்கு சௌமியை அழைத்துச் சென்றாள்.
மற்றவர்கள் அவரவர் பணி முடிய கல்லூரியை நோக்கிக் கிளம்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.
இருவரும் சென்ற நேரம் கடைப் பையனைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. விசாரித்ததில் அன்று அனேகமான முகூர்த்தங்கள் இருந்தமையால் கடையில் தன்னை வைத்துவிட்டு எல்லாரும் சென்றுவிட்டதாக உரைத்தான்.
“இங்க பக்கத்துல வேற எதாவது கலர்லேப் இருக்கா?” அவனிடமே கேட்க, அவன் அனுப்பிய இடத்திற்குச் சென்று வேலை முடித்துத் திரும்ப நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தது.
பெரும்பான்மையான மாணவிகள் கல்லூரிக்குத் திரும்பியிருந்தனர்.
சௌமியும் அவள் தோழி கீர்த்திகா மட்டுமே வங்கியில் கணக்குப் புத்தகத்தை பெற்றுக்கொண்டு கல்லூரிக்கு விரைந்தனர்.
அடுத்து வந்த நான்கு நாட்களும் சென்ற மூன்று நாள்களின் வெளி அனுபவத்தை பேசி, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலடித்து, கேலி செய்து என்று நேரத்திற்கு ஒரு வகையாகச் சென்றிருந்தது.
நான்காவது நாள் கல்லூரி நுழைவு வாயிலிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்தவனை கவனிக்கும் நிலையில் இல்லாமல் பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேக எட்டுக்களாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள் சௌமி.
கடந்து சென்றவள் கவனிப்பாள் எனும் தப்புக் கணக்கில் நின்றிருந்தவன் அவள் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைத் தாமதமாகத் தெரிந்துகொண்டு, “கவி சௌமியா!” என்றழைக்க,
தன்னை யாரோ அழைக்கிறார்கள் என்பதைவிட முழு பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இங்கு யாராக இருக்கும் என எண்ணியபடியே அவசர எட்டோடு போனவள் சட்டென சென்ற இடத்திலேயே நின்றவாறு கேள்வியோடு திரும்பிப் பார்த்தாள் சௌமி.
திரும்பியவளிடம் கையில் சிறு கவரை நீட்ட, புரியாமல் நின்றதோடு திருதிருவென விழித்தாள்.
“இது உங்க போட்டோ! அன்னைக்கு மிஸ்ஸானது.
பேங்க்ல க்ளீன் பண்ணும்போது கிடைச்சது. அத… குடுத்துட்டுப்போக வந்தேன்!” என்றவனை அப்போதுதான் கவனித்தாள்.
‘எங்கயோ பாத்த மாதிரி இருக்கே! யாரது?’ என நினைத்துக்கொண்டிருந்தவள் அவனது பேச்சில், ‘ஆஹா அந்த பேங்க் பார்ட்டில… இது!’ என்பது சட்டென நினைவில் வர, திரும்பி அவனை நோக்கி வந்தவள் நீட்டியதை கையில் வாங்கி கவரைத் திறந்து பார்த்தாள் சௌமி.
அவளுடையதுதான்!
அவளின் பழைய போட்டோ ஒன்று அப்படியே இருந்தது.
“தாங்க்ஸ்” என்றபடியே அவளுக்காக நடக்காமல் காத்து நின்றிருந்த தோழிகளை கருத்தில் கொண்டு கிளம்பிவிட்டாள்.
“அவ்ளோ…தானா?” எனும் அவனது குரலில் தயங்கி நின்றவள் அவனை நோக்கித் திரும்பி, “காசு வேணுமா?” சட்டெனக் கேட்டாள்.
சௌமிக்கு உண்மையிலேயே அவளது அசட்டுக் கேள்வி புரிந்தாலும், அவ்ளோதானா என்று கேட்பவனிடம் என்ன பேச என்று புரியாமல்தான் அப்படி சட்டெனக் கேட்டிருந்தாள்.
அவ்வாறு கேட்டதும் அவனது முகம் மாறியிருந்தது.
அவனது மாறுதல் இவளுக்கும் தெரிய வர, ‘தப்பாக் கேட்டுட்டேனோ’ என நினைத்தபடியே, “என்ன வேணும்னு சீக்கிரம் சொன்னா… முடியும்னா… வாங்கித் தருவேன்” இழுத்தாள் என்ன வாங்கித் தரலாம் என்று யோசித்தபடியே.
“இல்லைன்னா…” என்றான் வந்திருந்தவன்.
“இல்லைன்னு சொல்லிட்டு போயிருவேன்.” சட்டெனப் பேசுபவளையே இதழோரம் மென்னகையை இழையவிட்டபடியே கண்களில் மின்னலோடு பார்த்திருந்தான்.
“ம்ம்… இப்டியெல்லாம் கேட்டா… எனக்குப் பதில் பேசத் தெரியாது” என்றவள், அவளின் முகத்தையே விழுங்கிவிடுவதுபோல பார்த்துக் கொண்டிருந்தவனை இவளும் பார்த்தாள்.
பார்வையில் தெரிந்த பளிச்சென்ற ஒளியின் சாயலால் உண்டான மகிழ்ச்சியை அவனது முகம் பிரதிபலிக்கக் கண்டதும் சௌமி துணுக்குற்றாள்.
“எங்களுக்கு பஸ்ஸுக்கு நேரமாயிருச்சு. வரட்டா” அவனது பதிலுக்குக்கூட காத்திராமல் தனக்காக வெயிட்டிங்கில் இருந்த தோழிகளோடு ஜெட் வேகத்தில் கிளம்பிவிட்டாள்.
செல்லும் வழியெங்கும் தோழிகள் கிண்டல் கேலி செய்தாலும், சௌமிக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
இது அவர்களுக்குள் சகஜம்தான். யாராவது ஒரு நபரை சற்று கூடுதல் நேரம் பார்த்துவிட்டால், பேசிவிட்டால் அதைப் பார்த்தவர்கள் அதன்பின் அந்த நபர் அவளைக் கடக்கும்போதெல்லாம் சேர்த்து வைத்துப் பேசி கிண்டல் கேலிதான்.
வீடு வந்ததே தெரியாத அளவிற்கு அன்றைய பொழுது கிண்டலில் கடந்திருந்தது.
அவளின் காலேஜ் பேகில் இருக்கும் போனை சார்ஜ் போடுவதற்கு எடுத்தபோது புதிய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
யோசனையோடு, ‘யாரு இது புதுசா…’ எடுத்து நோக்கியவள் அதிலிருந்த, ‘என்ன வேணும்னு சொன்னா… கண்டிப்பா தருவியா?’ என்ற செய்தியில் யார் அதை அனுப்பி இருக்கக்கூடும் என்பதை நிமிட முடிவில் உணர்ந்துகொண்டாள்.
எடுத்துப் பார்த்தவளுக்கு, ‘நீ வேணும்னு என்னைத்தையாவது வந்து ஏடாகூடாமா கேட்டு வச்சா… அதையெல்லாம் குடுக்க முடியுமா? லூசு…’ எரிச்சல்தான் வந்தது சௌமிக்கு. பதில் பேசப் பிடிக்கவில்லை.
அப்படியே போனை சார்ஜில் போட்டுவிட்டு தனது மற்ற வேலைகளில் மறந்து போயிருந்தாள் சௌமி. அதுவரை எந்தக் கள்ளமும் அவளுக்குள் இல்லை.
காலையில் கல்லூரிக்குச் செல்லும்போது கவனித்தபோது, அதே எண்ணிலிருந்து, ‘ரிப்ளை ப்ளீஸ்’ என்றிருந்தது.
‘சரியான பைத்தியமா… இவன்!’ வடிவேலு மாடுலேசனில் இப்படித்தான் தோன்றியது அப்போது.
அதன்பின் அன்று காலையில் ‘குட் மார்னிங்’ என்று அனுப்பியிருந்தான்.
‘நீ சொல்லலைன்னா அது பேட் மார்னிங்கா ஆகிருமா’ இப்படித்தான் அவளின் பதின்ம வயது மனம் கிண்டலித்து தனக்குள் சிரித்துக் கொண்டது.
‘அலையான்’ என்று அவளாகவே அவனுக்குப் பெயர் சூட்டியிருந்தாள்.
இன்ரா பெர்சனல் கம்யூனிகேசனில் அவனை மனதிற்குள் வைத்து கிண்டல், கேலி, நையாண்டி செய்து மனம்போனபடி தனக்குள் சிரித்து மகிழ்ந்தாள் சௌமி.
இது ஒரு வாரம் தொடர்ந்தது.
யாரும் அறியாமல் அவள் தனக்குள் அலட்டிக் கொள்ளாமல் புதியவனைக் கடந்து வந்திருந்தாள். அவனது எந்தச் செய்தியும் அவளை அசைத்துவிடவோ, அவனோடு இசைந்து போகவோ செய்யவில்லை.
அன்று இவள் நடந்து வந்துகொண்டிருக்க வெளியில் காத்திருந்தவன், சௌமி கண்டும் காணாமல் செல்வதைப் பார்த்து, “கவி…” என்றழைக்க, திரும்பிப் பார்க்காமல் தோழிகளோடு சென்றுவிட்டாள்.
தோழிகளோடு வரும்வேளையில் அவன் இப்படி நடந்துகொண்டது அவளின் தன்மானத்தைச் சீண்டிப் பார்த்திருந்தது. அத்தோடு இதனால் உண்டாகக்கூடிய பின்விழைவுகளை எண்ணிய விழிப்பு வேறு அவளைச் சிந்திக்கத் தூண்டியது.
அவன் மேலிருந்த சிறிதான அவளறியா ஏதோ பாதிப்பு, அந்த வேளையில் அவனை எதிர்க்க விடாமல் கட்டிப் போட்டிருந்தது.
‘காட்டான் கணக்கா வழியில வந்து நின்னுக்கிட்டு… கவியாம்ல… கவி. அறிவு வேணாம். எங்க… எப்டி நடக்கணும்னு. ஆளு மட்டும் டிப்டாப்பா இருந்தாப் போதுமா… அலையானுக்கு அறிவுங்கறதே இல்லைபோல’ மனதிற்குள் திட்டித் தீர்த்திருந்தாள் செளமி.
ஆனால் தோழிகள் விடாமல் கிண்டலடிக்க, அதனால் உண்டான கோபம் அவன்மேல் திரும்பியது. வீடு செல்லும்வரை அமைதியாக இருந்தவள், வீடு சென்றதும் குறுஞ்செய்தியில், “உங்களுக்கு என்ன வேணும்னு அன்னைக்கே சொல்லியிருந்தா அப்பவே குடுக்க முடியும்னா வாங்கிக் குடுத்திருப்பேன்.
இந்த இழுபறி வேலை இனி வேணாம். என்னை இன்னொருமுறை இப்டிக் கூப்டாலோ, காலேஜ் வாசல்ல வந்து நின்னு எதாவது எங்கிட்ட பேசினாலோ, எனக்கு வாட்சப்லயோ, போன்லயோ மெசேஜ் போட்டாலோ இனி சும்மாயிருக்க மாட்டேன். எங்கப்பாகிட்ட சொல்லிருவேன்” என துணிந்து செய்தி அனுப்பியிருந்தாள் சௌமி.
‘யாருகிட்ட… இதையெல்லாம் வேற யாருகிட்ட வேணா வச்சிக்க… எங்கிட்ட வச்சிக்கிட்ட… அத்தோட அவ்ளோதான்’ இப்படித்தான் மனதிற்குள் ஓடியது சௌமிக்கு.
அவளது பதற்றம் தன்னைக் காத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இவை அனைத்தும் சௌமியை அவ்வாறு செய்யத் தூண்டியிருந்தது.
அதன்பின் அன்று இரவு அவன் எப்போதும் அனுப்பும், ‘குட் நைட்’ மிஸ்ஸாகி இருந்தது.
அதனை அன்று அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவன் மீது கட்டுக்கடங்கா வெறுப்பு அன்று அவளுக்கு.
அதன்பின் நாள்கள் வாரமாகி, வாரங்கள் கடந்து மாதமாகியும் அவளைக் காண அவன் எங்கும் நேரிலும் வரவில்லை. அலைபேசியிலும் தொந்திரவு செய்யவில்லை.
வந்தானா இல்லையா என்பதைவிட, சௌமி அவனைக் காணவே இல்லை.
ஒரு வாரத்தில் அவளின் வெறுப்புகள் வந்த வழி தெரியாமல் சிறிது சிறிதாக நீருக்கு கரையும் சோப்பைப்போல காணாமல் போயிருக்க, அதன்பின் வந்த நாள்களில் அவனிடமிருந்து குறுஞ்செய்திகளை அவள் மனம் எதிர்பார்த்தது.
‘அலையான் டக்குனு பயந்திருச்சோ’ இப்படி எண்ணினாள்.
எதுவும் வரவில்லை என்றதும் மனம் ஏங்கியது. அதை அவள் விரும்பாதபோதும் அவளது கட்டுப்பாட்டை மீறி எதிர்பார்க்கத் தூண்டியது.
சௌமி நிஜத்தில் அவனைத்தேடி கண்களால் துழாவியும், அலைபேசியில் குறுஞ்செய்தி வந்துவிடாதா என எதிர்பார்த்தும் அவளறியாமலேயே சோர்ந்தாள்.
தனது கைவசமிருந்த ஏதோ ஒன்று தன்னை விட்டு மறைந்து போனால் உண்டாகும் வெறுமை அவளைத் தாக்கியது.
அவளாகவே எத்தனையோ விசயங்களை மனதில் திணித்து வேறு சிந்தனைகளில் மனதைச் செலுத்த முனைந்தாள்.
அப்போது வராத அவனைப் பற்றிய சிந்தனைகள் அந்த வேலையை முடித்ததும் முழுமையாக வந்து ஆக்ரமிக்கத் துவங்கியது.
வீட்டில் கவனித்த மதி, செழியன் மற்ற தோழிகள் அனைவருமே அவளின் தோற்றத்தைக் கண்டு அவளிடம் விசாரிக்கவே செய்தார்கள்.
எல்லோரிடமும், “அலைச்சல்னால அப்டி இருக்கனோ” எனக் கடந்திருந்தாள்.
சரியாக ஒரு மாதம் முடிந்த அன்று இரவில் அவனிடமிருந்து புதிய குறுஞ்செய்தி. பாதி உறக்கத்தில் வந்த குறுஞ்செய்தியின் சத்தம் கேட்டு உடனே எழுந்து எடுத்துப் பார்த்தாள் சௌமி.
எதிர்பார்த்திருந்த உள்மனம் அடடா என அவசரமாகச் சென்று எடுத்துப் பார்க்கச் சொன்னது.
ஏமாற்றவில்லை!
அவன்தான் அனுப்பியிருந்தான்.
‘சாரி’ என்றிருந்தது.
அந்தக் குறுஞ்செய்தியில் இருந்த செய்தியைவிட, அவனது டெக்ஸ்ட் வகை செய்தி சௌமியின் மனதில் குளுமையை பரப்பியது. வெறுமையை அகற்றியது.
சோர்வு போன இடம் தெரியாமல் புத்துணர்வு அவளை ஆட்கொண்டது. வழமையான சிரிப்பு இதழ்களில் இதமாய் ஒட்டிக் கொண்டது.
எதாவது அவனுக்குச் செய்தி அனுப்பு என பரபரத்த உள்ளத்தின் உந்துதலில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘சாரி அனுப்ப ஒரு மாசமா?’ என்றனுப்ப,
“அப்போ நான் அனுப்புவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருக்க?” என்று அவன் கேள்வி அனுப்பினான்.
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம, பதிலுக்கு கேள்வி அனுப்புவீங்களா?” சௌமியின் கேள்விக்கு சற்று நேரம் அமைதி.
ஆஃப்லைன் சென்றிருந்தான். அய்யோ என்றானது சௌமிக்கு.
‘லூசு… அவனா வந்து பேசுனான். குண்டக்க மண்டக்க மெசேஜ் போட்டு ஓட வச்சிட்ட’ தனக்குத்தானே திட்டிக்கொண்டிருந்தபோது, மீண்டும் ஆன்லைன் வந்தான்.
‘ஃப்ரண்ட்ஸ்’ என டைப்பி அதனருகே சில ஃபிரண்ட்ஸ் ஸ்டிக்கர் அனுப்பினான்.
உடனே அவளும் அதை ஆமோதித்து ஸ்டிக்கர் அனுப்பினாள். நீண்ட நாளுக்குப்பின் நிம்மதியான உறக்கம் சௌமிக்கு.
இதேநிலை அடுத்து வந்த சில நாள்கள் தொடர்ந்தது. நேரில் சந்திக்காமல் விர்சுவல் சந்திப்பாக அலைபேசியில் குறுஞ்செய்திகள் முன்னைக் காட்டிலும் அதிகம் பகிரப்பட்டது.
இருவரைப் பற்றியும், இருவரின் குடும்பத்தைப் பற்றியும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டதில், அம்மாவின் பிறந்த வீட்டு வழியில் தூரத்து உறவு அவன் என்பது சௌமிக்குத் தெரிய வந்தது.
முன்பைக் காட்டிலும் நட்பு எனும் பெயரின் கீழ் இருவரது பேச்சுகளும் மேலும் தொடர்ந்தது. நெருக்கம் கூடியது.
வசுமதி அறியாமல்தான். முன்புபோல அல்லாமல் அதிக நேரம் தாயோடு நேரம் செலவிட்டாள் சௌமி. சிறு சிறு உதவிகள்கூட செய்தாள்.
தனது செயல் நிச்சயமாக அவளுக்கு நியாயமாகப்படவில்லை. குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பில் அவளாகவே தாயிக்கு சேவகம் செய்யும்படி மாறியிருந்தாள்.
சௌமி இதுவரை இந்தளவு பொறுப்போடு இருந்து அவளின் தாய் மதி பார்த்திருக்கவில்லை. அதுவரை மகளின் மேல் இருந்த சொற்ப சந்தேகமும் சௌமியின் இந்த செயலால் மதிக்கு மறைந்து போயிருந்தது.
மூத்தவளான கனி சௌமியாவிற்கு வளைகாப்பு போட்டு இராமேஸ்வரம் அழைத்து வந்தார்கள். அத்தோடு அவளின் அம்மாச்சி பிரபாவதியும் அவ்வப்போது அங்கு வந்து தங்கியிருக்கத் துவங்கினார்.
மதிக்கும், பிரபாவதிக்கும் கனியைக் கவனிப்பதிலும், அவளுக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செய்வதிலும் சௌமியாவை கவனிக்க முடியாமல் போயிருந்தது.
கனி எப்போதேனும், “சௌமி எப்பப் பாத்தாலும் போனை நோண்டிக்கிட்டே இருக்க” என்றாலும்,
“அது… எனக்கு என் ஃப்ரண்ட்கிட்ட இருந்து நோட்ஸ் அனுப்பச் சொல்லியிருந்தது வந்துச்சானு பாத்தேன்கா” என சமாளித்தாள்.
இடையே செமஸ்டர் தேர்வுகள். அதன்பின் விடுமுறை என வீட்டில் இருந்தாள். விடுமுறையில் குறுஞ்செய்திகள் வழியே அவனோடு இன்னும் அதிக நேரம் செலவளித்தாள்.
வசுமதி எப்போதேனும் காண நேரிட்டால், ‘எப்பப் பாத்தாலும் அந்த போனையே பாத்து சிரிச்சிட்டே இரு. வேற யாராவது பாத்தா பைத்தியம்னு சொல்லப் போறாங்க’ என்று மிரட்டுவதோடு சரி.
செழியனிடம் மட்டும், “என்ன பண்ணுறான்னு பாருங்க. எனக்குப் பயமா இருக்கு. எப்பப் பாத்தாலும் போனும் கையுமாவே இருக்கா” என்றால்,
“நம்ம புள்ளைமேல நமக்கே நம்பிக்கை வரலைன்னா, ஊருப்பய எப்டிடீ நம்புவான்” ஒரே அதட்டாக அதட்டி மதியின் வாயை திறக்கமுடியாமல் செய்தார்.
இடையில் கனி சௌமியாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஒரு மாதம் போனதே தெரியாத அளவிற்கு வீட்டில் விருந்தினர்கள் குழந்தையைப் பார்க்க வரப்போக இருந்தனர்.
சௌமியாவிற்கு அது இன்னும் வசதியாகப் போயிருந்தது.
குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் கனியை அழைத்துச் செல்ல அவளின் மூத்த அத்தை குடும்பத்தோடு வந்திருந்து அழைத்துச் சென்றிருந்தார்.
வீடு வெறுச்சோடியது. அதன்பின் முன்புபோல சௌமியால் ப்ருத்வியோடு பேச முடியவில்லை.
ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் ப்ருத்வி அவனது அவாவை தயக்கத்தோடு முதன் முறையாக வாய்ஸ் மெசேஜில் சௌமியிடம் பகிர்ந்தான்.
யோசிப்பதாகக் கூறி பேச்சை முடித்துக் கொண்டவள், அடுத்து வந்த நாள்களில் அவனோடு தொடர்புகொள்ளாமல் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
அவளின் மனநிலை புரியாத ப்ருத்வியோ தனது அவசர முடிவை எண்ணி குழப்பத்தில் குமைந்து கிடந்தான்.
***