மனதோடு மனதாக – 13

மனதோடு மனதாக – 13
13
மறுநாள் மதிய உணவை முடித்துக் கொண்டு, தங்களது திட்டத்தின் படி வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு ஆர்யன் ஊருக்குப் புறப்பட, அந்த ஒரு நாளிலேயே தங்கள் வீட்டை கலகலப்பாக மாற்றிய வெண்ணிலாவின் உச்சியில் இதழ் பதித்து,
“அவனை அடிக்கடி இங்க இழுத்துட்டு வாம்மா.. இல்லன்னா அது இதுன்னு சாக்கு சொல்லி ரெண்டு மாசத்துக்கு ஒரு நாள் இங்க வந்துட்டு போவான்..” பிருந்தா தனது மகனை கட்டி இழுப்பதற்காக, மருமகளின் உதவியை நாட, ஆர்யனோ இருவரையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு காலேஜ் லீவ் இருக்கும்போது எல்லாம் அவரை நான் கூட்டிக்கிட்டு வரேன் அத்தை.. நீங்களும் இப்போ எங்க கூட அங்க வந்து கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல..” அவள் கேட்கவும்,
“அப்படி கேளு வெண்ணிலா.. அங்க வந்து இருங்கன்னு சொன்னா வர மாட்டாங்க.. நீ கூப்பிட்டாவது வராங்களான்னு பார்ப்போம்..” ஆர்யன் ஒத்து ஊதவும்,
“யாரு நான் வரது இல்ல? ரெண்டு வச்சேன்னு வையேன்..” என்று அவனை மிரட்டியவர்,
“எனக்கு அங்க வந்தா ரொம்ப கட்டிப் போட்டா மாதிரி இருக்கும்மா.. இவனும் விடிய காலையில் ஆபீஸ் வேலையில உட்கார்ந்தா சுத்தமா நம்மளை கவனிக்கவே மாட்டான்.. கால் இருக்கு.. கால் இருக்குன்னு நடுராத்திரி எழுந்து உட்கார்ந்து அந்த வெள்ளக்காரங்க கூட பேசிட்டு இருப்பான்.. எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.. இங்கன்னா மில்லுக்கு போயிட்டு வந்து, ஆளுங்க கூட பேசிக்கிட்டு, கவின் கூட இருந்தா நேரம் போயிடும்..” என்றவர்,
“ஒரு வாரம் போகட்டும் ராஜாத்தி.. இந்த மாசம் சம்பளம் எல்லாம் கொடுத்துட்டு வந்து உங்க கூட வந்து எப்பவும் போல பத்து நாள் இருக்கேன்.. அவன் தான் இங்க வர மாட்டான்.. நான் வந்து அவன் கூட அப்பப்போ இருப்பேன்.. இவன் சும்மா உன்கிட்ட பொய் சொல்றான்..” பிருந்தா சொல்லவும், வெண்ணிலா ஆர்யனைப் பார்த்து சிரிக்க,
“சரி.. டைம் ஆச்சு.. நேரத்தோட கிளம்புங்க ஆரி.. திலீப் வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பான்.. நாங்க நாளனிக்கு விடிய காலையில கிளம்பி வந்து உங்களை அவங்க வீட்ல இருந்து கூப்பிட்டு வரோம்டா.. உங்களை வீட்டுல விட்டுட்டு மதியமே கிளம்பினா ராத்திரிக்குள்ள இங்க வந்திருவோம்..” சேகர் காரில் பையை கொண்டு வைத்துக் கொண்டு சொல்லவும்,
“எதுக்கு மாமா ஃபார்மாலிட்டி எல்லாம்.. நாங்களே நாளனிக்கு காலையில கிளம்பி வந்திடுவோமே. அதுவும் இங்க இருந்து அங்க வந்து எங்களை கூப்பிடணுமா?” ஆர்யன் கேட்க,
“அது தானேண்ணா.. நீங்க இங்க இருந்து அங்க வரை மறுபடியும் வரணும்.. நீங்க தங்கறதா இருந்தா கூடப் பரவால்ல.. உடனே திரும்பனும்ன்னு சொல்றீங்க?” வெண்ணிலா இடையிடவும்,
“அதெல்லாம் இல்லம்மா.. நாங்க வந்து உங்களை கூட்டிட்டு வரது தான் முறை.. உங்களுக்கும் மரியாதை அது தான்மா.. எங்க வீட்டு மஹாலக்ஷ்மியை நாங்க தானே வந்து கூட்டிக்கிட்டு வரணும்..” சேகர் சொல்லவும், வெண்ணிலாவின் கண்கள் கலங்கியது..
பிறந்ததில் இருந்தே கேட்டு வந்த அவச்சொற்கள் போக, இப்பொழுது சேகர் மஹாலக்ஷ்மி என்று சொல்லவும், அவளுக்கு தொண்டை அடைத்தது.. அவள் சேகரையே பார்த்துக் கொண்டு நிற்கவும், ஆர்யன் அவளது கையைப் பிடித்து அழுத்தினான்..
“வா வெண்ணி.. டைம் ஆச்சு.. இன்னும் கொஞ்சம் லேட் ஆச்சுன்னா ஆபிஸ் எல்லாம் விட்டுடுவாங்க. ட்ராபிக் அதிகமாகிடும்.” என்றவன், அவளை காரில் அமர வைத்துவிட்டு, அனைவரிடம் இருந்தும் விடைப்பெற்று காரை எடுக்க, வெண்ணிலா அமைதியாக பச்சை பசேல் வயல்களை வெறித்துக் கொண்டு வந்தாள்..
அவளது அமைதியை சிறிது நேரம் பொறுத்துக் கொண்டு வந்தவன், “வெண்ணி பேபி.. ஏன் இவ்வளவு அமைதியா வரீங்க? என்ன விஷயம்? நிலாக்குட்டிக்கு தூக்கம் வருதா?” என்று வம்பு வளர்க்க, வெண்ணிலா மறுப்பாக தலையசைத்தாள்..
“அப்பறம் ஏன் பேசாம அமைதியா வரீங்க? அம்மாகிட்ட கிளம்பிட்டோம்ன்னு போன் செய்யலாம்ல?” அவன் கேட்கவும்,
“கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என்றவளின் குரலில், வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அவளது முகத்தைத் திருப்ப, அவளது கண்கள் கலங்கி இருந்தது..
“வெண்ணிலா.. என்ன ஆச்சு? எதுக்கு இப்போ கண்ணு கலங்கிட்டு இருக்க?” ஆர்யன் கேட்கவும்,
“ஒண்ணும் இல்ல.. நான் பிறந்த கொஞ்ச நாள்ல எங்க அப்பா இறந்துட்டாங்க.. அதனால என்னை அவங்க வீட்ல எல்லாம் அதிர்ஷ்டம் இல்லாதவன்னு சொல்லி சேர்த்துக்கவே இல்ல.. அப்பாவோட கடைசி காரியத்துக்கு கூட என்னை கூட்டிட்டு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அப்பாவைப் பார்க்க என்னை பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டு அதோட அம்மா இங்கயே வந்துட்டாங்க..” என்றவள், ஆர்யன் அவளது கையை இறுக பிடித்துக் கொள்ளவும்,
“அப்பறம் அவங்க யாருமே என்னையும் அம்மாவையும் கண்டுக்கவே இல்ல.. எனக்கு அப்பாவோட உறவுகள் யாரையுமே தெரியாது.. பிறந்ததுல இருந்து நான் பார்க்கறது எல்லாமே என் அம்மா தான்.. இப்போ அண்ணா என்னை மகாலட்சுமின்னு சொல்லவும் ஒருமாதிரி ஆச்சு.. அது தான்..” அவள் சொல்லவும், அவளது கன்னத்தில் கை வைத்து அவளது கண்களைப் பார்த்தவன்,
“மாமா உன்னைச் சும்மா சொல்லல தெரியுமா? எங்க வீட்டு மகாலட்சுமி நீ தான்.. என்னோட மகாராணியும் நீ தான் புரியுதா? யாரு வேணா என்ன வேணா சொல்லிட்டு போகட்டும்.. தங்கத்தோட அருமை புரியாம பேசுவாங்க. அதை எல்லாம் கண்டுக்காதே என்ன?” எனவும், வெண்ணிலா சரி என்று தலையசைக்க, அவளது கன்னத்தைத் தட்டியவன்,
“இப்படி உட்காராதே.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அப்பறம் நான் கார் ஓட்டிக்கிட்டே தூங்கி போயிடுவேன்.. அப்பறம் நீ தான் கார் ஓட்டணும்?” எனவும், அவள் புன்னகைத்து,
“ஓட்டறேன் மாமா.. ஆனா.. எனக்கு இப்படி ஹைவேல எல்லாம் ஓட்டி பழக்கம் இல்ல.. ஏதோ அண்ணா கூட பக்கத்துல கடைக்கு எல்லாம் போயிட்டு வருவேன்… ஒருநாள் காலையில ஹைவேல என்னைக் கூட்டிக்கிட்டு வாங்க..” அவள் சொல்லவும்,
“போகலாமே. நாம சாடர்டேட் சண்டேல எங்கயாவது போகும்போது ஓட்டு.. நான் ஜாலியா உட்கார்ந்து வரேன்.. பொண்டாட்டி வண்டியை ஓட்டி உட்கார்ந்து போறதும் சுகம் தானே..” அவன் சொன்ன திணுசில் வெண்ணிலா சிரிக்க, மன நிறைவுடன் காரை எடுத்து, தங்கள் வீட்டில் சென்று நிறுத்தினான்..
திலீபன் அவர்களுக்காக காத்திருக்க, “டேய் அண்ணா.. என்ன இது நீ இப்படி ஊருக்கு முன்னால வந்து நின்னுட்டு இருக்க? உலக அதிசயமா இல்ல இருக்கு?” கேட்டுக் கொண்டே கீழே இறங்கியவளைப் பார்த்த திலீபன் அவளிடம் ஓடி வந்தான்..
“நிலாக்குட்டி.. எப்படி இருக்க?” என்றபடி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், பின்பு தள்ளி நிறுத்தி, அவளைத் தலைமுதல் கால்வரை பார்க்க, ஆர்யன் அவனைப் பார்த்து என்னவென்று கேட்டான்..
“ஒண்ணும் இல்ல மாமா..” என்றபடி அவன் தலையை அசைக்க,
“மாமா.. சீக்கிரம் சாவியைத் தாங்க.. எனக்கு ரெஸ்ட்ரூம் போகணும்..” அவள் குதிக்க, சிரித்துக் கொண்டே அவளது கையில் சாவியை எடுத்துக் கொடுக்கவும்,
“அண்ணா.. மேல வாண்ணா.. நான் ரெடி ஆகறேன்..” என்றவள், லிப்டை நோக்கி ஓடிச் செல்ல, தனது தங்கையை நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், காரில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த ஆர்யனைப் பார்த்தான்..
“திலீப் ஒரு அஞ்சு நிமிஷம்டா.. அவ கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரட்டும்..” என்றவனின் கையில் இருந்து சில பொருட்களை வாங்கிக் கொண்ட திலீபன்,
“நான் எங்க நிலாக்குட்டியான்னு பார்க்கறேன் மாமா நீங்க வேற.. புடவை எல்லாம் கட்டிக்கிட்டு அவளைப் பார்க்க பெரிய மனுஷியா இருக்கா..” என்றவன், ஆர்யனுடன் வீட்டிற்குள் சென்றான்..
“வெண்ணி.. ப்ரீயா டிரஸ் வேற ட்ரெஸ் ஏதாவது போட்டுக்கோ.. சாரீ எல்லாம் வேண்டாம்.. ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பலாம்..” ஆர்யன் சொல்லிக் கொண்டே,
“ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்..” என்று சொல்லிக் கொண்டே மற்றொரு அறைக்குள் நுழைந்தவன், தனக்கு இரண்டு நாட்களுக்கான உடையுடன் வந்து சேர்ந்தான்..
அப்பொழுது வெளியில் வந்த வெண்ணிலா, “எந்த பாக்ல டிரஸ்சை வைக்கப் போறீங்க மாமா? நாம ஊருக்கு எடுத்துட்டு போனதை வாஷிங் மெஷின்ல போடவா?” என்று கேட்கவும், திலீபன் அவளை ‘ஹான்’ என்று பார்த்துக் கொண்டிருந்தான்..
“ஒரு நாள் டிரஸ் தானே.. நான் ஷோல்டர் பேகை எடுத்துக்கறேன்..” என்றவன், தனது பேகை எடுத்து வைத்து விட்டு, அறைக்குள் செல்ல, வெண்ணிலா, தயாராகி திலீபனைப் பார்த்தாள்..
அவனது பார்வை இன்னமும் அவளிடமே இருந்தது.. நெற்றி வகிட்டில் குங்குமமிட்டுக் கொண்டு, பிருந்தா கொடுத்து அனுப்பி இருந்த மல்லிகைச் சரத்தை சூடிக் கொண்டு, விளகேற்றிவிட்டு வந்தவள்,
“ஜூஸ் ஏதாவது குடிக்கறியா அண்ணா? மாமா வாங்கின கேக் கொஞ்சம், பாக்ஸ்ல போட்டு வச்சிருக்கு.. சாப்பிடறியா?” என்று உபசரித்தவளைப் பார்த்துவனுக்கு, வெண்ணிலா சிறுமி போல சுற்றித் திரிந்தது முன்னொரு காலம் என்பது போல இருந்தது..
அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, மூவருக்குமாக கிளாசில் ஜூசுடன், கேக்கை எடுத்துக் கொண்டு வந்தவள், திலீபனுக்கும், தயாராகி வந்த ஆர்யனிடமும் ஒன்றை கொடுத்து விட்டு, அவனது அருகில் அமர்ந்துக் கொள்ள, அவளைப் பார்த்த திலீபனுக்கு மயக்கம் வரும் போல இருந்தது..
“நீ டாக்சில தானே வந்திருக்க திலீப்?” அந்த மௌனத்தை ஆர்யன் கலைக்க,
“ஆமா மாமா.. நீங்க சொன்னது போல கால் டாக்சில தான் வந்தேன்.” அவனது பதிலில் புன்னகைத்தவன், அவர்களது கையில் இருந்து கப்புகளை வாங்கிக் கொண்டு கழுவி வைத்துவிட்டு வரவும்,
“போகலாமா மாமா?” சிறுகுழந்தையென அவள் குதூகலத்துடன் கேட்கவும்,
“போகலாமே..” என்ற ஆர்யன் இருவருடனும் மறுவீட்டு விருந்திற்குச் சென்றான்..
இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாக பூரணிக்கு கழிந்திருக்க, சமையல் செய்துக் கொண்டிருந்தாலும், அவரது பார்வை நொடிக்கு ஒருமுறை வாயிலில் சென்று மீண்டது.. அவர்கள் இருந்த தெருவில் நுழைந்ததுமே வெண்ணிலா காரில் இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.. அந்தத் தெருவில் இடையில் ஒரு லாரி நின்றுக் கொண்டிருக்க, அது நகர்வதற்காக திலீபன் காரை நிறுத்த,
“இப்போ எதுக்கு இந்த லாரியை நடுவுல நிறுத்தி வச்சு இருக்கான்? இது என்ன எப்போப் பாரு இப்படி நடுரோட்டுல நிறுத்திக்கிட்டு? பெரியப்பாகிட்ட சொல்லி அவங்க வீட்ல சொல்லி வைக்கணும்..” திலீபனிடம் அவள் பொரிந்துக் கொட்டிக் கொண்டிருக்க, ஆர்யனுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக இருந்தது..
‘விட்டா குதிச்சு இறங்கிப் போயிடுவா போல இருக்கே..’ மனதினில் நினைத்துக் கொண்டவனுக்கு சுபத்ரா-பார்த்திபனின் நினைவு வந்தது.. அவர்களைப் பார்க்க பாவமாகவும், தயக்கமாகவும் இருக்க, அந்த நிலையில் தன்னால் ஆனது எதுவுமில்லை என்று தன்னைத் தேற்றிக் கொண்டவன், ஒரு பெருமூச்சுடன் அந்தத் தெருவைப் பார்த்தான்.. அவனது மனதினில் அந்த இடத்தை எங்கேயோ பார்த்த நினைவு.. திலீபன் காரை கொண்டு வந்து வீட்டின் போர்ட்டிகோவில் நிறுத்த, வெண்ணிலா துள்ளிக் கொண்டு இறங்கினாள்.
விதம்விதமான உணவு வகையறாக்கள் தயாராகி இருக்க, காரில் இருந்து இறங்கியவுடன், மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடிக்கத் துவங்கியவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது..
“டேய் அண்ணா.. அம்மா கேசரி பண்ணி இருக்காங்களா? சிக்கன் வாசனை கூட வருது?” வெண்ணிலாவின் குரலில், பூரணி வேகமாக வெளியில் ஓடிவந்தார்..
அவரைப் பார்த்தவள், “அம்மா..” என்று அவரிடம் ஓட,
“நிலாக்குட்டி.. வாடா கண்ணா.. வாடா..” தன்னிடம் ஓடி வந்தவளை அணைத்துக் கொண்டு, அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க, வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது..
இருவரையும் பார்த்துக்கொண்டு ஆர்யன் நிற்கவும், காரில் இருந்து பொருட்களை உள்ளே எடுத்துச் சென்ற திலீபன், “ஹையோ அப்படியே என்னவோ ரெண்டு வருஷமா பார்க்காதது போல ரொம்ப அம்மாவும் பொண்ணும் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நகர்ந்து வழியை விட்டு கொஞ்சிக்கோங்க..” என்று கேலி செய்ய, வேகமாக பின் பக்க கேட்டில் இருந்து அவர்களை நோக்கி வந்த பார்த்திபன்,
“வாங்க மாப்பிள்ளை.. வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா? ஊருல இருந்து எப்போ கிளம்பினீங்க? வர வழியில ட்ராபிக்கா இருந்ததா?” ஆர்யனை வரவேற்க,
பூரணி, “வாங்க தம்பி..” என்று வரவேற்க, அவரைப் பார்த்து தலையசைத்தவன்,
“நாங்க நல்லா இருக்கோம் மாமா.. ரொம்ப ட்ராபிக் ஆகறதுக்குள்ள ஊருக்குள்ள வந்தாச்சு.. வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்தோம்.. அது தான் லேட் ஆகிடுச்சு..” ஆர்யன் பதில் சொல்லவும், சுபத்ரா ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வந்தார்..
“பெரியம்மா..” வெண்ணிலா அவரை அணைத்துக் கொள்ள,
“நிலாக்குட்டி.. என் தங்கமே. எப்படிடா ராஜாத்தி இருக்க?” அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தவர்,
“வாங்க மாப்பிளை..” என்று ஆர்யனை அழைத்து,
“நிலாக்குட்டி.. அங்க மாப்பிள்ளை பக்கத்துல நில்லு..” என்று சொல்லவும், ஆர்யனின் அருகில் நின்றுக் கொள்ள, சுபத்ரா ஆரத்தி எடுத்து அவர்களது நெற்றியில் பொட்டிட்டு,
“வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க..” என்று அழைக்கவும், இருவரும் உள்ளே நுழைந்தனர்..
“உட்காருங்க மாப்பிள்ளை..” என்ற பார்த்திபன் அங்கிருந்த சோபாவைக் காட்ட, ஆர்யன் அமர்ந்துக் கொண்டான்.. அவனுக்கு தண்ணீரை கொண்டு வந்த பூரணியிடம்,
“அம்மா கேசரி செஞ்சிருக்கியா? வாசனை மூக்கைத் துளைக்குது..” கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த சமைத்த உணவுகளை எல்லாம் சுவைப் பார்த்துவிட்டு,
“அம்மா எல்லாமே சூப்பரா இருக்கு.. இன்னும் சிக்கன் மட்டும் முடியலையா?” சப்புக் கொட்டிக் கொண்டு வந்தவள்,
“மாமா.. அம்மாவோட சமையல வீட்டை சுத்திப் பார்த்துட்டு நாம ஒரு பிடி பிடிக்கலாம்..” என்றபடி, அவனது கையைப் பிடித்து எழுப்பியவள், அவனை அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டிக் கொண்டே,
“நான் இல்லன்ன உடனே இந்த பூரணிக்கு ரொம்ப தைரியம் வந்திருச்சு.. வீட்டை எல்லாம் கிளீன் பண்ணி வச்சிருக்காங்க.. அது எப்படி இப்படி இருக்கலாம்? எனக்கே வீடு யாரோ வீடு போல இருக்கு..” என்று புலம்பியப்படி அவனைப் பார்க்க, அவனோ மிகவும் முக்கியமாக,
“மே ஐ நோ ஹவ் டு கோ டு மொட்டை மாடி? மொட்டை மாடியின் வழி எங்கே இருக்கிறது மச்சான்?” என்று கேட்கவும், அவர்களுடன் வந்திருந்த திலீபன்,
“வாங்க மாமா.. நான் மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போறேன்..” என்று முன்வரவும், வெண்ணிலா ஆர்யனைப் பதட்டத்துடன் பார்த்தாள்.
“இப்போ எதுக்கு நீங்க மொட்டை மாடிக்கு போற வழியைக் கேட்கறீங்க?” என்று படபடத்தவள், அவன் நக்கலாக சிரிக்கும் பொழுதே,
“டேய் அண்ணா. வேண்டாம்.. மொட்டை மாடிய காட்டாதே.. அப்பறம் அவர் அங்கேயே குடி இருப்பார்..” திலீபனை அவள் தடுக்க, அதற்குள் இருவருமே மாடிப் படிகளின் அருகே சென்றிருந்தனர்..
“ஏன் நிலாக் குட்டி என்ன ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டே அவன் படிகளில் ஏறிக் கொண்டிருக்க, அவனைப் பின்தொடர்ந்து ஏறிய ஆர்யனோ, அவளைப் பார்த்து பழிப்பு காட்டினான்..
மொட்டை மாடியில் காற்று நன்றாக வீச, “வாவ் காத்து சூப்பரா வருது.. நாம கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம் திலீப்..” என்றபடி கைப்பிடிச் சுவரில் அவன் ஏறி அமர, திலீபன் அவனது அருகில் அமர்ந்துக் கொள்ள, கீழே எட்டிப் பார்த்த வெண்ணிலாவிற்கு இதயம் தொண்டைக் குழியில் துடித்தது..
“மாமா.. கீழ இறங்குங்க.. எனக்கு கீழ பார்த்தாலே பயமா இருக்கு..” வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்தவன்,
“சரிடா..” என்றபடி கீழே இறங்கி நடைப் பயின்றுக் கொண்டே, அங்கிருந்த ஸ்டம்பைப் பார்த்து,
“ஹே திலீப்.. ஸ்டம்ப் எல்லாம் இருக்கு? யாரு விளையாடுவா?” என்று கேட்க,
“நான் தான் விளையாடுவேன் மாமா.. எனக்கு போர் அடிச்சா நிலாக்குட்டிய பால் போடச் சொல்லி விளையாடுவேன்.. இல்ல சில சமயம் என் ஃப்ரெண்ட் வருவான்.. நீங்க விளையாடுவீங்களா மாமா?” அவன் பதில் கேள்வி கேட்க,
“ஓ.. ப்ளாட்ஸ்ல நாங்க கொஞ்சம் பேர் லீவ் நாள்ல அங்க இருக்கற க்ரவுண்ட்ல விளையாடுவோம்..” என்றவன், வெண்ணிலாவைப் பார்த்து,
“வாவ் எனக்கு போர் அடிச்சா வீட்ல ஒரு நெட் கட்டி விளையாடிட வேண்டியது தான்.. என்ன வெண்ணி.. விளையாடுவியா?” அவனது கேள்வியில் அவனை முறைத்தவள், அதற்கு பதிலைச் சொல்லாமல்,
“ரொம்ப சீனப் போடாதீங்க மாமா.. ஒழுங்கா கொஞ்ச நேரத்துல கீழ வரீங்க.. இல்ல.. இன்னைக்கு மொட்டை மாடியில வச்சு பூட்டிருவேன்.. அப்பறம் ராத்திரி பூரா இங்கயே இருக்க வேண்டியது தான்..” என்று பல்லைக் கடித்தவள், கீழே இறங்கிச் செல்ல, திலீபன் வெண்ணிலாவை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்..
அதே திகைப்புடன் ஆர்யன் கோவித்துக் கொண்டுவிடுவானோ என்று திலீபன் பார்க்க, அவனோ புன்னகையுடன் நிற்க, “அது உங்க வீடு தானே திலீப்?” என்று கேட்டுக் கொண்டே திலீப்பைத் திரும்பிப் பார்த்த ஆர்யன், அவனது திகைப்பான பார்வையில்,
“என்ன அப்படி பார்க்கற?” புரியாமல் கேட்க,
“இல்ல மாமா.. அவ என்னவோ என்னை மிரட்டற மாதிரி உங்களை மிரட்டிட்டு போறா? நீங்க என்னடான்னா அவளைப் பார்த்து சிரிச்சிட்டு இருக்கீங்க? இல்ல.. எனக்குப் புரியல.. வெண்ணிலா இப்படி என் ப்ரெண்ட்ஸ் கிட்டக் கூட பேச மாட்டா.. உங்ககிட்ட பேசறா?” என்று வாய்பிளக்க,
“அண்ணனும் தங்கையும் ‘இல்ல.. எனக்குப் புரியலை’ன்னு நல்லா டைலாக் பேசறீங்க.. சரி.. அது உங்க வீடு தானே..” என்று அருகில் இருந்த வீட்டை காட்ட,
“இப்போ பேச்சை மாத்தாதீங்க மாமா.. அது எங்க வீடு தான்.. நீங்க தான் ஏற்கனவே வந்து இருக்கீங்களே.. இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” திலீபன் விடாமல் கேட்க,
“டேய்.. எங்க வீட்டம்மா என்னை மிரட்டாம யாரை மிரட்டுவாங்க? அதோட நாங்க வேற ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே.” என்ற ஆர்யன், திலீபனைப் பார்த்து கண் சிமிட்ட, திலீபனுக்கு அவனது முயற்சி புரிந்தது..
அவனது கையைப் பிடித்துக் கொண்டவன், “மாமா.. ரொம்ப தேங்க்ஸ் மாமா.. ரியல்லி யூ ஆர் கிரேட். அவளை செமையா ஹாண்டில் பண்றீங்க. நான் கூட அவ மிரட்டவும் நீங்க கோவிச்சுப்பீங்கன்னு நினைச்சேன். சீக்கிரம் ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும்..” என்றவனைப் பார்த்து சிரித்த ஆர்யன்,
“சீக்கிரம் செஞ்சிடலாம்.. சரி சொல்லு பேட் எங்க இருக்கு? கொஞ்ச நேரம் விளையாடலாமா?” என்று கேட்க, அங்கிருந்த ஒரு அறையில் இருந்து பந்தையும், பேட்டையும் எடுத்துக் கொண்டு வந்தவன்,
“மாமா.. பேட் பண்றீங்களா?” என்று கேட்டு அவன் பந்தைப் போடத் தயாராக, இருவரும் விளையாடத் துவங்கினர்.
விளையாட்டோடு விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பேச்சில், பூரணியைப் பற்றிய பேச்சு வர, “எங்க சித்தி ரொம்ப பாவம் மாமா. சித்தப்பா இறந்தப்போ, அவருக்கு வந்த எந்த பணத்தையும் இவங்களுக்கு கொடுக்காம வீட்டை விட்டு துரத்திட்டாங்க.
அவங்க படிச்ச படிப்புக்கு ஒரு ஆபிஸ்ல அக்கவுண்டன்ட்டா சேர்ந்து, குழந்தையையும் வச்சிக்கிட்டு, வேலைக்குப் போயும் விடாம படிச்சு, பாஸ் பண்ணி வேற நல்ல வேலைக்கு போனாங்க. நிலா அப்போ கைக் குழந்தை.. சித்தி வீட்டுக்கு வர வரை நிலா தனியா இருப்பான்னு அப்பா இங்க குடி வச்சிட்டார்.. சேர்ந்தே இருக்கலாம்ன்னு அம்மாவும் எவ்வளவோ சொன்னாங்க.
ஆனா சித்தி கேட்கவே இல்ல.. இந்த வீட்டுக்கு வாடகை கொடுத்து தான் இருப்பேன்னு வேற அடம் பண்ணி தந்துட்டு இருக்காங்க.. வெண்ணிலாவுக்கு சித்தின்னா உயிரு.. நேத்து எல்லாம் வெண்ணிலா டிரஸ் எடுத்து வைக்கும் போது ரொம்ப அழுதுட்டாங்க..” என்ற திலீபன், பந்தைப் போடத் துவங்க, தலையசைத்த ஆர்யன், தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டு விளையாட, அவர்களது ஆட்டம் சுவாரஸ்யம் பிடித்தது..
“என்னடா கண்ணா? உனக்கு அங்க பிடிச்சிருக்கா? உன்னை இப்படி திடுதிப்புன்னு கல்யாணம் செய்துட்டேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?” அவளது தலையை வருடியபடி பார்த்திபன் கேட்க,
“இல்ல பெரியப்பா.. அப்படி எல்லாம் இல்ல.. அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க பெரியப்பா.. மாமா என்னை நல்லா பார்த்துக்கறார். அண்ணா சொன்னான்னு முந்தா நேத்து என் பர்த்டேக்கு கேக் எல்லாம் வாங்கி சப்ரைஸ் பண்ணினார் பெரியப்பா.. மாமா ரொம்ப கேரிங். நீங்க கவலைப்படாதீங்க.” அவருக்கு ஆறுதலாக சொல்ல, சுபத்ரா அவளைத் தன்னுடன் வருமாறு சைகைக் காட்டினார்.
“இதோ வரேன் பெரியம்மா..” என்று எழுந்துக் கொண்டவள், சுபத்ராவின் அருகில் சென்றாள்.
“நீ படிக்கிறதுக்கு மாப்பிள்ளை சரின்னு சொல்லிட்டாருன்னு அம்மா சொன்னா.. காலேஜ்க்கு எப்படி போகப் போற? நான் நம்ம டிரைவரை வரச் சொல்லவா?” சுபத்ரா கேட்க,
“இல்ல பெரியம்மா அதெல்லாம் வேண்டாம்.. மாமா ஆபீஸ் போகாத அப்போ என்னைக் கொண்டு விடறேன்னு சொன்னார்.. ஆபிஸ் போற அப்போ மட்டும் எப்பவும் போல அண்ணா போகும்போது என்னைக் கூட்டிட்டு போகட்டும்.. சாயந்திரம் அவரே வந்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்..” என்று அவரிடம் பதில் சொல்லிக் கொண்டே,
“அம்மா மாமாவுக்கு இன்னும் கொஞ்சம் காரம் வேணும். அவருக்கு காரம்ன்னா ரொம்ப பிடிக்கும். சிக்கன்ல மட்டும் காரம் கம்மியா இருக்கு.. இன்னும் கொஞ்சமா போடேன்..” என்றவள், சுபத்ராவிடம் தனது புகுந்த ஊர்ப் பெருமையைப் பேச, பூரணி, சுபத்ரா இருவருமே மனநிறைவுடன் அவளைப் பார்த்தனர்.
“சரி மணி ஆகுது.. மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிடு..” பூரணி சொல்லவும்,
“இதோம்மா..” என்றவள், சிட்டாக பறந்து அவனை அழைப்பதற்காகச் செல்ல,
“நம்ம நிலா குட்டிக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்..” என்ற சுபத்ரா, அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.. ஒரு அன்னையாக வெண்ணிலா அவனிடம் ஒட்டிக் கொண்டதில் இருவருமே மகிழ்ந்து போயினர்..
“மாமா.. அம்மா சாப்பிட கூப்பிடறாங்க.. முகம் கைகால் எல்லாம் கழுவிட்டு வாங்க.. மணியாகுது.. சாப்பிட்டு நேரத்தோட தூங்க போகலாம்.. உங்க முகம் எல்லாம் வாட்டாமா இருக்கு..” என்று அழைக்கவும், வியர்வைச் சொட்ட அவளது அருகில் வந்தவன், தனது நெற்றியில் இருந்த வியர்வையை எடுத்து துடைத்துக் கொண்டு, அவனது தலையை சிலுப்ப, அவனது வியர்வைத் துளிகள் அவளது முகத்தினில் பட, வெண்ணிலா கண்களை மூடிக் கொண்டாள்..
“மாமா..” அவள் பல்லைக் கடிக்க, மீண்டும் தலையை சிலுப்பிவிட்டு, ஓடியவனை அவள் பிடிக்க வர,
“நான் உன் கைக்கு சிக்க மாட்டேனே..” என்றபடி, படிகளில் இறங்கி ஓட, அவளும் துரத்திக் கொண்டு ஓட, இருவரையும் பார்த்த திலீபன் சிரித்துக் கொண்டான்..
ஆர்யன் ஓடி வரவும், பார்த்திபன் அவனைப் புரியாமல் பார்க்க, “மாமா.. நில்லுங்க..” பின்னால் இருந்து வெண்ணிலாவின் குரல் கேட்கவும், பார்த்திபனின் முகத்தில் புன்னகை விரிந்தது..
அவளது கையில் மாட்டிக் கொண்டவனின் சட்டையில் அவளது முகத்தைத் துடைத்தவள், டவலை எடுத்துக் கொடுத்து, “இப்போ போய் அந்த ரூம்ல முகத்தை கழுவிக்கிட்டு வாங்க.. யாருகிட்ட?” என்று கெத்தாகக் கேட்டவள், பூரணியின் அருகில் செல்ல, அங்கிருந்த அனைவருமே இருவரையும் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்..
பூரணியும் சுபத்ராவும் பரிமாற, “பர்த்டே போட்டோ எல்லாம் பார்த்தேன் தம்பி.. ரொம்ப நல்லா இருந்தது. நான் அன்னைக்கு இவ பர்த்டேன்னு சுத்தமா மறந்தே போயிட்டேன்.” பூரணி சொல்லவும்,
“திலீப் தான் மெசேஜ் பண்ணி எனக்கு சொன்னான்..” என்றவன்,
“அத்தை எல்லாமே செமையா இருக்கு.. சிக்கன் கார சாரமா செமையா இருக்கு..” எனவும், வெண்ணிலாவைப் பார்த்தவர்,
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க..” என்று பரிமாறவும்,
“நீங்களும் சாப்பிடுங்க அத்தை.. மணியாகுது..” இயல்பாக அவன் இருவரையும் பார்த்துச் சொல்லவும், பார்த்திபன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்து,
“நிலாக் குட்டி.. சீக்கிரம் சாப்பிட்டு மாப்பிள்ளையை தூங்க ரூமுக்கு கூட்டிட்டு போ.. ரெண்டு நாளா அலைச்சல். நாளைக்கு மெல்ல எழுந்திருங்க.. நாம இங்க பக்கத்துல கோவிலுக்கு போயிட்டு வரலாம்..” என்ற பார்த்திபன்,
“மாப்பிள்ளை.. நாளைக்கு அங்க நம்ம வீட்டுக்கு நிலாவைக் கூட்டிக்கிட்டு சாப்பிட வாங்க..” என்று அழைக்க, ஆர்யன் வெண்ணிலாவைப் பார்த்தான்.. அவளும் அவனை பார்த்துக் கொண்டிருக்க,
“சரிங்க மாமா.. நாங்க வரோம்..” எனவும், வெண்ணிலா மகிழ்ச்சியுடன் அவனை பார்க்க, உண்டு முடித்து கையைக் கழுவிக் கொண்டு வந்தவனை அறைக்கு அழைத்துச் சென்றவள்,
“நீங்க தூங்குங்க மாமா.. நான் என்னோட திங்க்சை எல்லாம் அம்மா எடுத்து வச்சிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்.. முக்கியமா புக்ஸ் நோட்ஸ் ஐடி கார்ட் எல்லாம் பார்க்கறேன் மாமா..” என்றவள், நகர்ந்துச் செல்ல, அங்கங்கு இருந்த டெட்டி பொம்மைகளையும், பார்பி பொம்மைகளையும் உறக்கம் வராமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,
‘என்னோட குழந்தை பொண்டாட்டி..’ என்று மனதினில் கொஞ்சிக் கொண்டு, அங்கு சிறுவயதில் திலீபனுடன் அவள் நின்றுக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தவன், அதை வருடி, அந்தப் புகைப்படத்தைத் தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன், மொபைலில் படம் பார்க்கத் துவங்கினான்..