இங்கே நேரங்கள் கடக்க கடக்க அவரின் நிலை மோசமாகிக்கொண்டே சென்றது.
ஒரு மகனாய் இத்தனை வருடமாய் பார்த்து பார்த்து வளர்த்த தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான்.
ஆனாலும் எப்படியாவது தந்தையை காப்பாற்றி விட வேண்டுமென முயற்சி செய்தபடியே இருந்தான்.
அந்த நேரத்தில் வேகமாக உள்ளே வந்தார் பரணிதரன். அவர் கூடவே கிருஷ்ணவேணி, சீனிவாசன் மற்றும் ராஜவேல் வந்தனர்.
வேகமாக வந்தவர் மருத்துவரை சென்று பார்த்து விட்டு, அதே வேகத்துடன் வசீகரனை அழைத்து இரத்தம் கொடுக்க சொன்னார்.
“என்னால எப்படி முடியும் சொல்லுங்க? உங்களுக்குதான் என்னோட பிறப்பை பற்றி தெரிந்து இருக்குமே… நான் அவரோட உண்மையான மகன் இல்லையே” என பின் வாங்க,
“நான் சொல்றேன்ல நீ போய் குடு. எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று உள்ளே அனுப்பி வைத்தார்.
இந்த இருபத்தி நான்கு ஆண்டுகளில் அவனை ஒருமுறை கூட இரத்தம் பரிசோதனை செய்ய விட்டதில்லை பாரிவேந்தர். தன் மகனுக்கு உண்மை தெரிந்து விடாதபடி அனைத்தையும் செய்திருந்தார். அதனாலே அவனுக்கு தன்னுடைய ப்ளெட் குருப் தெரியாமலே இருந்தது.
பரணிதரன் சொன்னது போலவே, ப்ளெட் சாம்பிள் டெஸ்ட் செய்ய, அது ஒத்துவரவும் உடனடியாக அவனிடமிருந்து உதிரத்தை எடுத்தனர்.
அடுத்த மூப்பதாவது நிமிடங்களில் பாரிக்கு ஆப்ரேஷன் தொடங்கப்பட்டது.
அவரது தொடக்கம் நங்கையின் ஆப்ரேஷன் முடிவாக இருந்தது.
அவர் வெளியே வரவும், மொத்த குடும்பமும் அவரை சூழ்ந்து கொண்டது.
ஆதினிதான், “என்னோட அத்தைக்கு ஒன்னும் இல்லைல” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.
“அவங்களுக்கு இப்போ ஒன்னுமில்லை. கால்ல கொஞ்சம் பலமான அடிப்பட்டு இருக்கு. அவரால இப்போதைக்கு நடக்க முடியாது. மத்தபடி அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று விட்டு சென்றார்.
ராஜவேல் அங்கேயே மடிந்து அழுதார். தன் மகளின் மருமகனின் நிலையை எண்ணி.
வாழ்வில் எத்தனை துன்பங்களை இருவரும் தாங்கிக் கொள்வர். இருவரது வாழ்வே கஷ்டத்தோடு கடக்கிறது. எத்தனை துன்பங்களைக் கடந்து ஒன்று சேர்ந்தனர். அதனை கூட இரசிக்க முடியாத நிலை உருவாகிற்றே.
இரத்தம் கொடுத்த வசீயால் எதையும் செய்யும் அளவிற்கு அவனின் உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எதையோ வெறித்தபடியே அமர்ந்திருந்தான். அவனுக்குள் மீண்டும் கேள்வி கணைகள் ஊற்றெடுக்க, அது யாவிற்கும் பதில் வேண்டி அமைதி காத்தான்.
சோர்ந்து இருந்தவனை தாங்கி பிடித்தனர் விபுவும் ஆதினியும்.
“அண்ணா ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வாங்க அண்ணா. இவரு ரொம்பவே டையர்டா இருக்காரு” எனறவாறே ஆதினி அவனை தன் மடி சாய்த்தாள்.
“சரி சரிமா” என்றவன் வேகமாக சென்று மாதுளை ஜூஸ் வாங்கி வந்தான்.
ஆதினியிடம் கொடுத்து கொடுக்க சொல்ல, அவளும் அதனை வாங்கி கொடுக்க, ஏதும் பேசாது தலையை மறுப்பாய் அசைத்தான்.
“கரண் சொல்றதை கேளு… உன்ன இப்படி அத்தையும் மாமாவும் பார்த்தா ஃபீல் பண்ண மாட்டாங்களா சொல்லு. அவங்களுக்காகவாவது நீ இதை குடிக்கணும் குடி” என்று அவனை குடிக்க வைக்க முயற்சித்தாள்.
ஆனால் அவனோ குடிக்க மறுத்து அவள் மடியிலே தலை சாய்த்து படுத்து கொண்டான்.
நேரங்கள் கடக்க கடக்க அனைவருக்கும் திகில் போலே சென்றது.
சதாசிவம், சீதாலட்சுமி, சௌந்தர்யா, கிருஷ்ணவேணி, சீனிவாசன், ராஜவேல் என அனைவரும் கடவுளை வேண்டியபடியே அமர்ந்திருந்தனர்.
மிளனியும் விபுனனும்தான் அனைத்தையும் பார்த்து கொண்டனர். பரணியும் மருத்துவர்களுடன் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்தார்.
ஆதினி காதலியாய் இருந்து அன்னையாய் மாறி வசீயின் வலியையும் அவனையும் தாங்கி அமர்ந்திருந்தாள்.
கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் நடந்த ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது.
முதலில் கண்விழித்த நங்கையை பார்க்க அனைவரும் ஒவ்வொருவராக சென்றனர்.
வசீகரன், தந்தையையும் தாயையும் ஒன்றாகதான் பார்ப்பேன் என சிறுப்பிள்ளை போல் அடம்பிடித்தான்.
அந்த நாள் முழுவதும் அவரை ஐசியூவில் வைத்து அவர் கண் முழித்ததும் நார்மல் வார்டிற்கு மாற்றினர்.
அடுத்த சில மணிநேரத்தில் வசியின் தொல்லை தாங்க முடியாமல் இருவரையும் ஒரே அறையில் வைத்தனர்.
அதன் பின்பே வசீகரன் இருவரையும் சந்திக்கச் சென்றான்.
அந்த நிமிடம் வரை ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதவன் இருவரையும் கண்டவுடன் கண்ணீர் அருவியாய் வழிந்தது.
இருவருக்குமே அவனின் அழுகையைக் கண்டு நெஞ்சம் வலித்தது. அவனின் கண்ணீரை துடைக்க வேண்டி, அவர்களின் நிலையிலிருந்து ஆதினி கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
ஒரு மாதம் கழித்து இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
நங்கையால் நடக்க முடியாது என்பதால் அவரை வீல் சாரில் கூட்டி வந்தனர்.
இருவரும் வந்ததை அறிந்த நாச்சியார் தன் அத்தனை வெறுப்புகளையும் விடுத்து இருவரையும் காண வந்தார். மொத்த குடும்பமும் அவரை ஆச்சரியமாக பார்த்தது. பின்பு இருவரிடமும் மன்னிப்பு வேண்டிட, நங்கையும் பாரியும் பெரிய மனதாக அவரை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இரண்டு மாதங்கள் அமைதியாய் கடந்தது. யாரும் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
பரணிதரன் குடும்பம் இந்தியா வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில் அதனை மேலும் ஒரு மாதத்திற்கு எக்ஸ்டென்ட் செய்ய அதற்கான வேலையில் இறங்கினார்கள் அபியும் பரணிதரனும்.
வசீகரனுக்கு உள்ளுக்குள் எத்தனையோ கேள்விகள் குடைந்து கொண்டே இருந்தது. அதனை கேட்கும் நாளும் பிறந்தது.
அந்த காலை நேரத்தில் பரணிதரன் பேப்பர் படித்து கொண்டிருக்க, அப்போது எழுந்து வந்த வசீகரன் இதுதான் சரியான நேரம் என்று எண்ணி தன் பெரியப்பாவை நோக்கி நடையிட்டான்.
“பெரியப்பா” என அழைக்க,
“வாப்பா வசி” என அவனை பக்கத்தில் அமர வைத்தார்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா பெரியப்பா” எனத் தயங்கி நிற்க, அதற்குள் ஒருவர் பின் ஒருவராய் ஹாலுக்கு வந்தனர்.
“கேளு ப்பா… இதுல எதுக்கு உனக்கு தயக்கம் வேண்டி இருக்கு சொல்லு” என அவனை ஊக்கப்படுத்த,
“உங்களுக்கே தெரியும் நான் அப்பாவுக்கு பிறந்த பையன் இல்லைன்னு, அப்புறம் எப்படி என்னோட இரத்தம் அவருக்கு பொருந்தும்னு உங்களுக்கு தெரிஞ்சது?
இது ஏதோ தோனுச்சினோ செவன்த் சென்ஸ்னோ சொல்லாதீங்க. எனக்கு உண்மைய சொல்லுங்க உங்களுக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு. நீங்க அதை மறைக்கிறீங்க. அது என்னென்னு இப்பவே சொல்லுங்க” என்று மனதில் நினைத்தை கேள்வியாய் கேட்க,
அவன் சொல்வதை கேட்டு நால்வரை தவிர்த்து மற்ற யாவரும் அதிர்ச்சியில் நின்றனர்.
பாரியும் நங்கையும் சங்கடத்தில் இருந்தனர்.
“சொல்றேன் வசி…” என எழுந்தவர் பாரி மற்றும் நங்கை இருந்த புறம் நடந்தவர் அவர்களின் முன் மண்டியிட்டு, ”என்னைய நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. நான் அதை வேணும்னே பண்ணலை. அப்போ இருந்த என்னோட கோபம் அதை செய்ய வச்சிடுச்சி” என்று புதிர் போட, அனைவருக்கும் திக் திக் என அடித்துக் கொண்டது.
“பெரியப்பா என்னென்னு சொல்லுங்க?” என வசி அவரின் பின் நின்று கேட்டான்.
“ஏன்னா நங்கையோட வயித்துல விந்தணுவை வைக்க சொன்னதே நான்தான்…” என்று அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
“அப்போ அப்போ உங்களுக்கு…?” என பாரி திக்கி திணறி கேட்க முடியாமல் கேள்வி பாதியில் தொங்க,
“எனக்கு தெரியும்” என்பது போல் பதிலளித்தார்.
“நான் சௌந்தர்யாவோடு வீட்ட விட்டு வந்த சமயம் அது. எனக்கு அவ்வளவு கோபம் வந்தது நங்கை மேல. ஏதாவது செய்து நான் அவமானப்பட்டது போல அவளும் படணும்னு நினைச்சேன். அதுக்கான நேரத்தையும் பார்த்தபடி இருந்தேன். எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் என்னோட கல்யாணத்தப்ப அவரோட ஆராய்ச்சிக்கு விந்தணு வேணும்னு கேட்டிருந்தார். அப்போ இருந்த நிலையில என்னால அரேஞ்சு பண்ண முடியல. சோ அவரும் அப்புறம் என்னைய டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுடாரு. திரும்பவும் அவரு வந்து கேக்கும் போதுதான் அவரை பார்க்க ஹாஸ்பிடல் போனேன்” என நடந்தவற்றை கூற தொடங்கினார்.
மருத்துவமனைக்கு வந்து அந்த மருத்துவரை பார்த்த பரணிக்கு, யார் உதவி செய்ய முன் வருவார் என்றே தெரியவில்லை.
அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த போதுதான் எதார்த்தமாக பாரியை சந்திக்க நேரிட, பரணியோ அவனை கடந்துதான் சென்றான்.
ஆனால் விசுவாசமான பாரிவேந்தரோ, பரணியையே சுற்றி வந்து, ‘அண்ணா… அண்ணா’ என்று பேச முற்பட்டபோதுதான் ஏன் இவனை வைத்து அவருக்கு உதவி செய்ய கூடாது என்று தோன்றியது.
அதனாலே அவனை திரும்பி பார்த்த பரணி, “இப்போ உனக்கு என்னதான் வேணும்? உன்னதான் என் கண்ணு முன்னாடி வரகூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல” எனக் கோபமாக கூறி நகர பார்க்க, அவன் காலிலே விழுந்து விட்டான் பாரிவேந்தர். அவனின் மேல் இவன் வைத்திருந்த அன்பே இத்தகைய காரியத்தை செய்ய தூண்டியது.
“அண்ணா என்னைய மன்னிச்சிடு ண்ணா. எனக்கு என்ன தண்டனை வேணா கொடு நான் ஏத்துக்கிறேன். ஆனா பேசாம மட்டும் இருக்காத ண்ணா. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு” என அவன் காலை பிடித்த பாரி கதறினான்.
“நான் என்ன சொன்னாலும் செய்யணும். செய்வியா?” எனக் கேள்வியாய் அவனை நோக்க,
“கண்டிப்பா செய்வேன் ண்ணா” என்று எழுந்து நின்று சட்டை காலரை கொண்டு கண்ணீர் துடைத்தான்.
அந்த நேரம் பார்த்துதான் தேவநங்கையும் ராஜவேலும் மருத்துவமனைக்கு வந்தனர்.
அவனின் மனதில் இத்தனை நேரம் ஓடிய கணக்குகள் யாவும் மாறுபட்டு அவளை பழி தீர்க்க எண்ணி திட்டமிட்டான்.
இந்த திட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக்கொண்டது என்னவோ பாரிவேந்தர்தான்.
“நாளைக்கு நீ இங்கேயே வா. உன்னால எனக்கொரு காரியம் ஆகவேண்டி இருக்கு. அதுக்கு நீ எதுவும் சொல்லாம சம்மதிக்கணும்” எனக் கூறி மீண்டும் மருத்துவமனைக்குள் புகுந்தான்.
அவர்களின் கெட்ட நேரமோ இவனின் நல்ல நேரமோ தெரியவில்லை. இவனுக்கு அதுவும் நல்ல பழக்கப்பட்ட மருத்துவரைதான் பார்க்க சென்றிருந்தனர்.
அவர்கள் வெளியே வந்ததும் உள்ளே சென்று மருத்துவரை பார்த்தான் பரணி.
“இப்போ போனவங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்க,
“அதுவா ஏதோ வயிற்று வலி. நான்தான் ஸ்கேன் எடுத்து பார்த்திடலாம்னு சொல்லி அனுப்பிருக்கேன்” என்றார் அந்த மருத்துவர்.
“அப்போ சரி நான் சொல்ற மாதிரி பண்ணு” என தனது யோசனை முழுவதையும் சொல்ல, அந்த பெண் மருத்துவர் அதிர்ச்சியில் எழுந்தே விட்டார்.
“என்ன பேசுறீங்க பரணி நீங்க? இதெல்லாம் இம்பாசிபிள். நான் செய்யவே மாட்டேன்” என மறுத்து பேசினார்.
“ப்ளிஸ். இதை மட்டும் எனக்காக பண்ணு. என்னோட வாழ்க்கை திசை திரும்பியதுக்கு காரணமே அவள்தான்” என பேசி பேசி அவரின் மனதை கரைத்து அவனுக்காக செய்ய சம்மதம் வாங்கினான்.
மகிழ்ச்சி தாளவில்லை அவனுக்கு. எதையோ சாதிக்க போவதற்கான முயற்சியை எடுத்த நிம்மதி அவனுக்குள்.
சிறிது நேரத்திலே நங்கை அவள் தந்தையோடு வருகை தந்தாள்.
பரணி சொல்லியது போல அந்த பெண் மருத்துவரும் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
தந்தையும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அந்த பெண் மருத்துவர்தான், “பயப்படாதீங்க இது ஒரு சாதாரண ஆப்ரேஷன்தான். சோ டோண்ட் பேனிக் ஓகே” என்று அவர்களை தேற்றி அனுப்பி வைத்தார்.
அதேபோல் பாரியும் அடுத்தநாள் வந்து விட, அவனிடம் புரியாதது போலவே கூறிய பரணி அவனின் விந்தணுவை எடுத்தான்.
மாலைப்போல் மருத்துவமனைக்கு வந்த நங்கையை ஆப்ரேஷன் தியேட்டர் அழைத்து சென்று விந்தணுவை உள்ளே செலுத்தினர்.
ஆப்ரேஷன் முடித்து வந்த அந்த மருத்துவர் பரணியை கண்டு, “நீ சொன்னது போல முடிச்சிட்டேன். எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராம பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு” என்று சொல்லி சென்றார்.
பரணிக்கு ஏதோ அப்படி ஒரு நிம்மதி. அவளை அசிங்கப்படுத்த போகிறோம் என்ற சந்தோஷம். மருத்துவம் என்பது சேவையே என்பதனை மறந்து சுயநலமாக நடந்து கொண்டான் பரணி.
அவள் தனக்கு செய்ததற்கு தான் ஒன்று அவளுக்கு செய்து விட்டேன் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறைதான். மனம் முழுதும் இறக்கை கட்டி பறந்தது.
அவன் செய்த செயல் அவள் வாழ்வையே மாற்றிவிடும் என யோசிக்க மறந்து போனான்.
இந்நிகழ்வை தொடர்ந்து அவனுக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு வந்து விட மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டான்.