பூவுக்குள் பூகம்பம் 3

பூவுக்குள் பூகம்பம் 3

பூவுக்குள் பூகம்பம் – 3

தேர்வு நெருங்கவே அதிகம் அங்குமிங்கும் அலையாமல் பிளாட்டிலேயே இருந்து தேர்விற்கு தயார் செய்திருந்தான் சிபி.

தேர்வை நல்ல முறையில் எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அவனது பள்ளித்தோழனை எதிர்பாரா விதமாக சந்திக்க நேர்ந்தது.

“ஹாய் சிபி…” என்று தன்னை நோக்கி வந்தவனை அடையாளம் கண்டுகொண்ட சிபி, “ஹாய் கிருபா… என்ன பண்ணிட்டு இருக்க?”

பள்ளிக்கல்வி முடிந்து சிபி மருத்துவம் படிக்க வந்துவிட, அவனது தோழன் அறிவியல் கல்லூரியில் முதுஅறிவியல் முடித்து பிஎட் நிறைவு செய்து பள்ளியில் பணிபுரிவதாகக் கூறினான்.

“அப்படியே இருக்கியே சிபி.  இன்னும் மாறவே இல்லைபோல” என்று கூறிய நண்பனின் பேச்சில் இருந்த மறைமுகமான விசாரிப்பு சிபிக்கு மட்டுமே புரியும்.

சிபி… படிப்பு, அதனைத் தவிர வேறு எந்த சிந்தனைக்கும் இடங்கொடாது இருப்பதைப் போல எண்ணக்கொண்டே அப்படி விசாரித்தான் கிருபா.

“படிச்சி முடிச்சி வேலைக்கு போறதுக்குள்ள, எத்தனை பிரேக்கப்பு, பெஸ்டி, கிரஷ்ஷூனு… நம்ம பேட்ஜ்ல ஒவ்வொருத்தவனுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.

ஆனா நீ… அப்படியே இருக்க போலயே…” என்று சிரித்தவன், “கடைசியில ஒன்னையும் தேத்த முடியாம… வீட்ல பாருங்கடானு விட்டுட்டு இருக்கேன்.  நீயும் வீட்ல பாப்பாங்கனு இருக்கியா… இல்லை…” என்று சிரித்தான்.

அதற்கும் சிபி சிரித்து மழுப்ப, “அப்ப இன்னும் பால் மனம் மாறாத சின்னப் பையனாவே திரியறனு சொல்லு” விளையாட்டாக வயிற்றில் குத்திக் கேட்டான் கிருபா.

“இதுவரை அதைப் பத்தி யோசிக்கலை… இனிதான் யோசிக்கணும்” சிபி சொல்லிவிட்டு சிரிக்க,

“ஏய்… நிஜமாத்தான் சொல்றியா?” ஆச்சர்யமாக கேட்டவன், “எங்க நீ சாமியாரா போயிருவியோனு சின்ன டவுட்ல இருந்தேன்பா” என்றவன், “பொண்ணும் டாக்டரா?” என்று கேட்டதற்கும் சிரித்த சிபியின் மனதிற்குள் முகம் காணாத ஜாஸ் மட்டுமே மணம் பரப்பியிருந்தாள்.

என்னன்னவோ பேசிப் பார்த்தும் வாயைத் திறவாத நண்பனிடம் நேரங்கருதி, “இன்னொரு நாள் சாவகாசமா இதைப்பத்தி பேசலாம்” என்று விடைபெற்றிருந்தான் கிருபா.

***

சிபிக்கு பொது மருத்துவம் கிடைத்திருந்தது.  பகுதி நேர மருத்துவப் பணியோடு பொது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்திருந்தான்.

     நீண்ட நாள்களுக்குப் பிறகு அன்று அச்சிறுவனை எதேச்சையாக காண நேர்ந்தது.

சிபியின் வரவை உணராத சிறுவன் சாலையோரத்தில் தனியாக அமர்ந்திருந்தான்.  நீண்ட நாள்களாக கண்ணில் படாதவனின் உடலைப் பார்த்தாலே நன்கு வித்தியாசம் தெரிய… மனம் கேட்காத சிபி வண்டியை ஓரங்கட்டிவிட்டு அருகே சென்றான்.

தனதருகே வந்து தன்னைத் தொட்டு உலுக்கும் சிபியை சுரத்தின்றி நிமிர்ந்து பார்த்தான்.

“ஏன் இப்டி உக்காந்திருக்க.  உன் குட்டி பாப்பா எங்க?”

பதிலேதும் சொல்லாமல் வெறித்தபடியே அமர்ந்திருந்தான் சிறுவன்.

மீண்டும் சிபி அவனை வலுக்கட்டாயமாக விசாரிக்க இரு கரங்களையும் மேலெழுப்பி காட்டினான்.

புரிந்தும் புரியாமலும் மீண்டும் சிபி அவனிடம் விசாரிக்க, “சொகமில்லைனு ஆஸ்பத்திரிக்கு இட்டுனு போனேன்.  அங்கேயே எல்லாம் முஞ்சு போச்சு” ஈனஸ்வரத்தில் பேசுவதுபோல பேசினான்.

சிறுவனின் மெலிவோடு அவனது ஈனஸ்வரக் குரலில் கூறிய செய்தி கேட்டு சிபிக்கு மேலும் வருத்தம் உண்டாகியிருந்தது.

“எந்த ஹாஸ்பிட்டல்” சிபி வினவ மருத்துவமனையின் பெயர் தெரியாததால் அது இருக்கும் இடத்தைச் சொன்னவனிடம், “எப்போ போயி அட்மிட் பண்ண?”

அனைத்தையும் கேட்டறிந்தவன் அவனையும் அழைக்க, “அங்க போனா… போன உசிர திரும்பி இட்டுக்குனா வருவ” என்று கேட்டவனைக் கண்டு சிபிக்கு மிகவும் வேதனையாகிப் போனது.

***

ப்ருத்வியின் தயக்கம் சௌமியால் எளிதாகக் கண்டு கொள்ளப்பட்டிருந்தது. காதலை வாய்ஸ் மெசேஜ் வழியாக பரிமாற எண்ணி செய்தவனின் மனநிலையை அவனது தடுமாற்ற பேச்சு இலகுவாகக் காட்டிக் கொடுத்துவிட சௌமி அவனைத் தெரிந்துகொண்டாள்.

அவனது தயக்கம் எதனால் என்பதையும் சௌமி யூகித்திருந்தாள்.

தான் அவனது காதலை ஏற்காமல், தோழமை எனும் உறவையும் சேர்த்து முறித்துக்கொண்டால் என்ன செய்வது என்பதுதான் அது.

தனது பிடித்தம் என்பதை இதுவரை அவள் அவனிடம் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதே இல்லை.

பேசுகிறாயா பேசு.  கேட்டதற்கு பதில். அப்படித்தான் இதுவரை போனது.  பதின்ம வயது ஹார்மோன் கொண்டாட்டத்திற்கு தீனியாக அவனது நட்பு அதுவரை அவளால் அக்சப்ட் செய்யப்பட்டிருந்தது அவ்வளவே. 

அதற்குமேல் அவளாக எதையும் இழுத்து வைக்க முடிந்தாலும், அவள் அதை விரும்பவில்லை.  அதனால் அவனுக்கு சௌமியைப் பற்றி ஒரு முடிவுக்கு வர தாமதமாகியிருந்தது. அதனால் எழுந்த தயக்கமே அவ்வாறு அவனைப் பேசச் செய்திருந்தது.

அவளுக்கும் அவனறியா காரணங்கள் ஏராளம் இருந்தனவே.

தான் பிறந்தது முதலே தன்னையே மணவாட்டி ஆக்கிக்கொள்ளும் சபதத்தோடு சுற்றும் தீர்த்தபதியைப் பற்றிய யோசனை அவளுக்குள் இருந்தது.

அதனால் ப்ருத்வி தன்னிடம் மறைமுகமாகப் பேசிய தருணங்களில்கூட அவனது அவாவை, எதிர்பார்ப்பை தான் தெரிந்து கொண்டதாகவே அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை சௌமி.

நேரடியாக கேட்கும்போது அதை சமாளிக்கலாம் என இலகுவாக எடுத்துக்கொண்டிருந்தாள் சௌமி.

தீர்த்தபதியை ஏனோ சௌமியால் தன் மணவாளனாக கற்பனை செய்துகூட பார்க்க முடியவிலை.

தீர்த்தபதியின் கணக்கைத் தீர்ப்பதற்கு ப்ருத்வியின் எதிர்பார்ப்பை ஆமோதிப்பது சிறந்த வழியாகவே தற்போது சௌமிக்குத் தெரிந்தது.

ஆனாலும் தயக்கம் அவளை ஆட்கொண்டது.

தந்தை செழியனை எண்ணித்தான் அந்தத் தயக்கம். செழியனின் சிறிய தமக்கைதான் தீர்த்தபதியின் தாய். தேன்மொழியை அவளுக்குப் பிடித்தம்தான்.

அதற்காக அவரின் மகனைப் பிடிக்காமல் எப்படி அவனோடு திருமணம் செய்துகொண்டு வாழ முடியும்?

அத்தை தேன்மொழியை அவள் நன்கறிவாள். நியாயமாக பல விசயங்களில் அவர் பேசுவதைக் கண்டிருக்கிறாள்தான்.  ஆனால் தனது விசயத்தை அவர் எப்படி எதிர்கொள்வார் என்கிற பயம் சௌமிக்கு இருந்தது.

அவரின் கணவரைக் கொண்டு பிறந்திருந்த தீர்த்தபதியின் புறத்தோற்றத்தில்தான் அவளுக்கு அலர்ஜி.

‘அத்தையும் மாமாவும் ஒன்னாச் சேந்து போகும்போது… வரும்போது… பொருத்தமே இருக்காது.  அத்தை எவ்வளவு அழகா இருக்காங்க!  இந்த மாமா… அத்தைக்குத் திருஷ்டி மாதிரி…! அதே மாதிரித்தான் எனக்கும் அதுக்கும்(தீர்த்தபதி) இருக்கும்.’

நினைப்பே கசந்தது சௌமிக்கு. 

‘இதுக்கு எதுக்கு இவ்ளோ மெனக்கெடணும். கல்யாணம் அப்டிங்கறது வாழ்க்கையில ஒரே தடவைதான்!’ 

‘அது அவங்கவங்களுக்குப் பிடிச்ச மாதிரிப் பண்ணிக்கறதுதான சரி.  எனக்கு விருப்பமில்லைன்னு அப்பாகிட்ட ஸ்டபனா சொல்லிறணும்.  அதுக்குமேல அப்பா வற்புறுத்த மாட்டாங்க’ இப்படி மனதிற்குள் கருத்து கேட்பு, பரிமாற்றம், முடிவு என அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் சௌமி.

தந்தை அவளது அவாவிற்கு எல்லாம் தலையாட்டி வைத்ததுதான் அவளின் இந்த முடிவிற்கு முழுமுதற் காரணமாக அமைந்து போனது.

தேன்மொழி அத்தையைச் சமாளிப்பதுதான் கஷ்டம்.  அவளுக்கு மட்டுமல்ல அவளின் தந்தைக்குமே.  பாசமலர்கள் இருவரும்.

ஒருவருக்கொருவர் விட்டுத்தராமல் இருவர் நலனிலும் அக்கறையோடு இருந்து கொள்வார்கள். அத்தையை எப்டிச் சமாளிப்பது?  அத்தை அழுதா அப்பா நம்மைச் சமாதானம் பண்ணுவாரே!

அதிலேயே அரை நாளை விரயம் செய்தவள், ஒரு வழியும் அகப்படாமல், ‘அது நடக்கும்போது பாத்துக்கலாம்.  இப்பவே எதுக்கு மண்டையக் குழப்பிக்கிட்டு… மொதல்ல ப்ருத்விய கவனிப்போம்’ எனும் முடிவிற்கு வந்திருந்தாள் சௌமி.

இது பதின்ம வயது ஹார்மோனின் கலாட்டா.  ஏதோ சுகம் அதில். ப்ருத்வியோடு நட்பாக இருக்கும்போதே இழையோடிய சுகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அவளுக்குள் ஏதோ உந்தியது.

‘காதல்… அது என்னானுதான் பாப்போமே! எதுனாலும் சமாளிக்கலாம்’ இளரத்தத்தின் தெனாவட்டு அவளுக்குள் அப்படித்தான் தோன்றச் செய்திருந்தது.

இதற்கிடையே ப்ருத்வியிடமிருந்து தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள்.

‘உனக்குப் பிடிக்கலைன்னா இப்டியே ஃப்ரண்ட்ஸாவே இருக்கலாம்.  அதுக்காக இப்டி எங்கூட பேசாம இருக்காத’ எனும் ரீதியில் வெவ்வேறு விதமான செய்தி அனுப்பிய வண்ணமிருந்தான்.

‘என்னால தூங்க முடியாது!’

‘எனக்கு பைத்தியமே புடிக்கற மாதிரி இருக்கு!’

‘என்னால இதைத் தாங்கிக்கவே முடியலை!’

‘அடப்பாவி’ என்றிருந்தது ப்ருத்வியின் குறுஞ்செய்திகளைப் பார்த்து சௌமிக்கு.

அனைத்தையும் கண்டும் காணாததுபோலவே, உள்ளுக்குள் தன்னையும் ஒருவன் இத்தனை தாங்கு தாங்குகிறான்.  நேசிக்கிறான். தன்னைத் தேடிக் களைக்கிறான் எனும் குதூகலத்தோடு வலம் வந்தவளுக்கு இறுமாப்பு மனம் முழுக்க வியாபிக்கத் துவங்கியிருந்தது.

மறுநாள் கல்லூரிக்கு செல்லும்போதே அவனது டூவிலரில் தன்னை இடைவெளி விட்டுப் பின்தொடர்வதை அறிந்தாள் சௌமி.

தோழிகள், “ஏய்… அந்த பேங்க் வாலாடீ!” என்று முணுமுணுப்பாக கூறியபோது, அவர்களை நோக்கி ஒரு முறைப்புதான். 

அத்தோடு வேறு பொது விசயங்கள்கூட பேசாமல் அமைதியாக வேக நடையில் கல்லூரி வந்து சேர்ந்தனர்.

கல்லூரியில் வேறு எதையும் சிந்திக்க விடமாட்டார்கள். அதனால் அன்றைய பொழுது வழமைபோல சென்றிருக்க, மாலை பேருந்து நிறுத்துமிடத்தின் அருகே உள்ள கடையில் நின்றபடியே சௌமியைப் பார்த்திருந்தான் ப்ருத்வி.

சௌமிக்கு அவன் அங்கு நின்றிருந்தது சற்று நேரத்திலேயே தெரிய வந்திருந்தது.  ஆனால் தெரிந்ததாகவே கண்டுகொள்ளவில்லை.

பேருந்து பத்து நிமிடங்கள் நின்றிருக்க தோழிகளின் கண்களிலும் ப்ருத்வி விழுந்திருந்தான்.  உடனே தோழிகளுக்குள்ளும் சலசலப்பு.

“இத்தனை நாளா காணாமப் போன ஆளு இன்னைக்கு என்னடீ திடீர்னு?  காலையில வந்து ரிசீவ் பண்றான்.  

போகும்போது வந்து பஸ் ஸ்டாண்டுலயே சென்ட் ஆஃப் பண்றான்.  என்னடீ நடக்குது?  உங்களுக்கு யாருக்காவது புரியுது?” ஒருத்தி மெல்லிய குரலில் சௌமிக்கு தெரியாமல் கேட்டு அமைதி காக்க,

இன்னொருத்தி, “என்னவோ இருக்குடீ!  ஆனா அமுக்குனியாட்டம் சௌமி இருக்கறதைப் பாத்தா, விசயம் சிறுசு மாதிரித் தெரியலை!”

“எதுவா இருந்தாலும் ஒரு நாளு வெளிய தெரியாமையா போகும்!” மற்றொருத்தி.

“எதுக்கு நம்ம மண்டைய உடைச்சிக்கிட்டு.  பொறுத்திருந்து பாப்போம்!” மூன்றாமவள்.

‘வேலையே இல்லாதமாதிரி இதை ஒரு வேலையா வந்து பாக்குதே இந்தப் பேங்க் வாலா… இதுக்குலாம் பர்மிஷன் உண்டு போலடீ!  கண்டிப்பா பேங்க்ல வேல வாங்குறோம்.  பர்மிஷன் போடறோம்.  என்ஜாய் பண்றோம்!’ சிரிப்பு.

“எனக்குல்லாம் பொறுமைக்கு மீனிங்கே தெரியாதுடீ!” இப்படி அவர்களுக்குள் கிசுகிசுப்பு நீண்டிருந்தது.

     பேருந்து கிளம்பும்வரை சௌமியை மட்டுமே வைத்தகண் வாங்காமல், தேநீர் அருந்தும் பாவனையோடு அவளையே பார்த்தவாறு ப்ருத்வி நின்றிருந்தான்.

     இருவரையும் மற்றவர்கள் மாறி மாறி கவனித்து தங்களுக்குள் பேசி கலாய்த்து மகிழ்ந்திருந்தனர்.  அவனது செயலில் மூட்அவுட்டாக இருந்த சௌமி அதுசார்ந்த சிந்தனையில் மற்றவர்களை கவனிக்காமல் விட்டிருந்தாள்.

சௌமிக்கு இப்போது தான் நடப்பதைக் கொண்டே, இந்த விசயத்தை தனக்குள்ளாகவே கொண்டு செல்வதோ அல்லது மற்றவர்களுக்குத் தெரியும்படிச் செய்வதோ தனக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், அமைதி காத்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் குறுஞ்செய்தியில் ப்ருத்வியிடமிருந்து வந்திருந்த செய்தியைப் பார்த்தாள்.

‘நான் இப்டி உன்னை வந்து பாக்கறது உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்.  ஆனா என்னால நீ பேசாம இருக்கறதை நினைச்சுப் பாக்கவே முடியலை கவி.  ப்ளீஸ்…’

‘நீ பேசற வரை உன்னை டிஸ்ட்ரப் பண்ணாம ஒரு ஓரமா நின்னு இன்னைக்குபோல பாத்திட்டுப் போயிருவேன்.  ப்ளீஸ்’

இதைப் பார்த்ததும் மண்டை சூடாகிப்போனது சௌமிக்கு.  ‘ஒரு நாளைக்கே… கூட வர மங்கிகளை(தோழிகளை) என்னால சமாளிக்க முடியலை.  இதுல நான் பேசுற வரை என்னைப் பாக்க இப்டி வந்தா… அம்பேல்!’ எனத் தோன்றியதும் உடனே பதிலனுப்பிவிட்டாள்.

தாமதித்தால், தனக்கு நிச்சயம் ப்ருத்வியின் செயலால் பிரச்சனையாகிவிடும் என்பதாலேயே உடனே பதில் கூறும் முடிவிற்கு வந்திருந்தாள் சௌமி.

“எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க.  நானே ஒரு முடிவுக்கு வந்துட்டு மெசேஜ் போடறேன்.  இனி இப்டி நடந்துகிட்டா நம்ம ஃப்ரண்ஷிப்பையே கட் பண்ணிக்க வேண்டிவரும் பாத்துக்கங்க.  அத்தோட உங்க நம்பரையும் பிளாக் பண்ணிருவேன்” என்று பிளாக்மெயில் மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டாள் சௌமி.

பிளாக் பண்ணிருவேன் என்ற சௌமியின் மெசேஜ் ப்ருத்வியை கர்ம சிரத்தையோடு அமைதி காக்கக் செய்தது.

ப்ருத்வியைப் பொருத்தவரையில் சௌமியை வங்கியில் பார்த்தது முதலே ஈர்ப்பு.  எடுத்தவுடன் தனது காதலைச் சொல்லி பல்பு வாங்கப் பிரியப்படாமல் அவளின் போட்டோவை வைத்துக் கொண்டே இல்லையென்று பிற வங்கி ஊழியர் மூலம் கூற வைத்தான்.

பிறகு நல்லவன் போல அவளின் போட்டோவைத் தர வந்து அவளிடம் பேச முயன்றான். கர்மசிரத்தையோடு முயன்று ஃப்ரண்ட் என்று அவளிடம் நெருங்கினான்.

அவளைப் பற்றி ஓரளவு அவளின் வாய்மொழியாக தெரிந்துகொண்டபின், அழகிற்கு அழகு.  அத்தோடு அந்தஸ்திலும் நல்ல வசதியாக இருக்கும் குடும்பம்.

தூரத்து உறவு எனும்படியாக இருப்பது வேறு தைரியத்தைத் தந்திருந்தது. தனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக இருப்பாள் என்பது அவனுக்கு நிச்சயம்.

இத்தனை தூரம் மெனக்கெட்டது வீணாகிவிடுமோ என்று பயந்தவன் அவளின் மிரட்டலில் சற்று அமைதியானான்.  அடுத்தடுத்த நாள்களில் அவனை எங்கும் காண முடியவில்லை.

காலை, மாலை, இரவு வணக்கங்களோடு இணக்கமற்ற உறவு இருவருக்கிடையே ஊடாடிக் கொண்டிருந்தது. ஊசாலாடிக் கொண்டிருந்தாலும் உறவு முறியவில்லை. முடியவில்லை.

நான்கு தினங்களுக்குப்பின், “எங்க வீட்டுல ஓகே சொல்லுவாங்களானு தெரியலை.  அதுதான் யோசிக்கறேன்” சௌமி அவனது இரவுச் செய்திக்குப்பின் தனது எண்ணத்தை அனுப்பி வைக்க, நீண்ட நேரம் ஆன்லைனில் இருந்தும் பதில் பேசாமலேயே இருந்தான்.

சௌமிக்கு பயமாகிவிட்டது.

‘அலையான் இப்ப என்னை அலையறேன்னு சொல்லிருமோ’ என்று.

அவளின் பயம் தீர்க்கும் விதமாக, “இப்பவேகூட எங்கப்பாவை வந்து உங்க வீட்ல பேசச் சொல்லவா?” ப்ருத்வி அவசரப்பட்டான்.

இரண்டாமாண்டு துவக்கத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள் சௌமி.  டிகிரி முடிக்க இன்னும் ஏறத்தாழ ஒன்றே முக்கால் வருடங்கள் உள்ளது.

“அய்யய்யோ… முதல்ல நான் டிகிரி முடிச்சிக்கறேன்.  அப்புறம் வந்து பேசலாம்.  அதுவரை யாருக்கும் தெரிய வேணாம்” சௌமியால் முடிவு எடுக்கப்பட்டது.

ப்ருத்வி தனியார் வங்கி ஒன்றில் தற்காலிக பணியில் இருப்பவன்.  நல்ல வருமானம்.  குடும்பப் பின்புலம் நன்றாக இருந்தது. இங்கு நன்றாக என்பது வசதி வாய்ப்போடு என்பதாக அர்த்தம்.

குறிப்பாக பார்ப்பதற்கு அஜித்தின் சாயலில் மாநிறத்திற்கும் கூடுதலான நிறத்தில் இருந்தான். வீட்டிற்கு ஒரே பிள்ளை.  ஒரு தமக்கை.  அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது.

தாய் இல்லை.  தந்தை மட்டுமே.

இரண்டு மாதங்களுக்கு முன்பே சௌமியின் தாய் வழிப் பாட்டியான பிரபாவதியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, ப்ருத்வியின் வீடு மற்றும் இதர விசயங்களை நேரில் பார்த்து அறிந்து கொண்டிருந்தாள் சௌமி.

இதை முழுநோக்கமாகக் கொண்டு அவள் செயல்படவில்லை.  எதேச்சையாக நடந்த ஒன்று அது.

சௌமிக்கு தீர்த்தபதியைவிட எல்லா விசயத்திலும் ப்ருத்வி ஆயிரம் மடங்குமேல் என்று தோன்றியிருந்தது.

அவளின் தராசில் ப்ருத்விக்கே முன்னுரிமை. ப்ருத்வியே தனது எதிர்காலம் என தீர்க்கமான முடிவெடுத்துவிட்டாள் கவி சௌமியா.

கணக்குப் போட்டு ப்ருத்வியின் காதலை ஏற்றிருந்தாள் கவி சௌமியா. ப்ருத்வியும் தன் எண்ணம் ஈடேறியதால் அவளை தன் உயிராக ஏற்றிருந்தான்.

***

காதல் இருவருக்குள்ளும் பல மாயங்களை விதைத்தது.  ஆரம்பத்தில் மிகவும் தயங்கியவள் அவனது கெஞ்சலுக்கு செவிசாய்த்து ப்ருத்வியோடு வெளியில் அவ்வப்போது சென்று வரத் துவங்கியிருந்தாள் சௌமி.

இராமநாதபுரத்திற்குள் தோழிகளை ஏமாற்றிவிட்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், யாரின் கண்ணிலாவதுபட்டால் அது பிரச்சனையாகும் என மறுத்துவிட்டாள்.

அவளின் தாத்தா குடும்பம் அங்குதானிருந்தது.  மேலும் அவளின் தந்தை செழியன் இதற்கு முன்பு இங்கு சில ஆண்டுகள் தனது பணியை செய்து வந்திருந்தமையால் நிறைய நபர்களுக்கு தந்தையைக் கொண்டு சௌமியையும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது.

அதனால் முன்னெச்சரிக்கை உணர்வோடு சௌமி செயல்பட முனைந்தாள்.  அதனை ப்ருத்வியும் ஆமோதிக்க தலைப்பட்டான்.

காதல் மனம் தனக்கேதுவாக நேரம் ஒதுக்க எண்ணி பல மடங்கு யோசித்தது. பிறரறியாமல் ப்ருத்வியோடு நேரம் செலவிடத் தூண்டியது. அவன் தூண்டினான் என்பதே சரி.

தோழிகளிடம் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறிவிட்டு தாமதமாகக் கிளம்பி வருவது, பிறகு இடையில் ப்ருத்வி காத்திருக்கும் இடத்தில் இறங்கி அவனோடு அன்றைய தினத்தை வெளியில் செலவளிப்பது, பிறகு மாலையில் அவர்களுக்கு முன்பே வீட்டிற்குத் திரும்பிவிடுவது என்று திட்டங்கள் வேறு அளவில் அரங்கேறத் துவங்கியிருந்தது.

மற்ற தோழிகள், ‘அடிக்கடி லீவு போடுற இப்பல்லாம்’ என்றதும், ஏதாவது நம்பும்படியான சாக்கு சொல்லி சமாளித்தாள் சௌமி.

செழியன், கவி சௌமியா பிறக்கும் வரை தினசரி இராமநாதபுரத்திற்கு வந்து செல்லும்படியான பணிநிலையில் இருந்தார்.

மகள் பிறந்த சில மாதங்களில் சொந்தமாக பெயிண்ட் கடை ஒன்றை இராமேஸ்வரத்திலேயே துவங்கி தொழிலை விஸ்தீகரித்திருந்தார்.

அவரது வாடிக்கையாளர், தொழில்முறை தொடர்பாளர்கள் அனேகம் நபர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் மற்றும் அப்துல்கலாம் நினைவிடம் ஆகிய இடங்களைச் சுற்றி இருந்தமையால் அந்த இடங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களுக்கு சென்று வருவது மட்டுமே தனக்கு பிரச்சனையின்றி இருக்கும் என தீர்மானமாக ப்ருத்வியிடம் ஆரம்பத்திலேயே உரைத்திருந்தாள் சௌமி.

மாதத்தில் ஒரு நாள் இருவருமாக வெளியே சென்றுவர இடங்களைத் தெரிவு செய்தனர். 

அதன்படி, குந்துக்கால், அரியமான் பீச், குஷி பீச், பாலை பூங்கா, சீனியப்பா தர்கா, தேவிபட்டிணம், ஏர்வாடி தர்கா, திருஉத்திரகோசமங்கை இப்படி ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று வர பட்டியல் தயாரித்து, நேரம், காலநிலை கருதி எதாவது ஒரு இடத்திற்குச் சென்று வருவதை வாடிக்கையாக்கியிருந்தனர்.

 அதன்படி ஒரு முறை சீனியப்பா தர்காவிற்கு சென்றிருந்தனர்.

படகு சவாரி மற்றும் தர்காவைச் சுற்றியுள்ள இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு உடனே அங்கிருந்து திரும்பியிருந்தனர்.

நான்கு நாள்கள் அதிக வேலைப் பளுவின் காரணமாக அவளை மெசேஜில்கூட தொடர்பு கொள்ளாமல் இருந்தவன் வெளியே செல்ல அழைத்ததும் மறுக்காமல் உடன் கிளம்பி வந்திருந்தாள் சௌமி.

“ரொம்ப வேலையா?”

“ஆமா… அதான் மண்டைலாம் ரொம்ப காஞ்சு போனதைச் சரி பண்ண இங்க கூட்டிட்டு வந்தேன்” ப்ருத்வி.

“உங்களுக்குத்தான பிரச்சனை!  அப்போ என்னைய எதுக்கு கூட கூட்டிக்கிட்டு வந்தீங்க?” என்றபடி சிரித்தவளை முறைத்தவன்,

“நீதான் என்னோட எனெர்ஜி பூஸ்டர்.  அது தெரியாம தத்துபித்துன்னு பேசாத! போடீ” என்று தனதருகே அமர்ந்திருந்தவளை கோபமாகத் தள்ளியபடி பேசினான்.

“அச்சோ… ப்ருத்வி பையனுக்கு கோபம் வந்திருச்சா…” கொஞ்சிப் பேசி சமாதானம் செய்தவளை விட்டு எழுந்து சென்றான்.

சற்று அதிக வயது இடைவெளி என்பதால் ப்ருத்வியை மரியாதைக் குறைவாக எல்லாம் அதிகம் பேசமாட்டாள் சௌமி.  இதுபோன்ற அரிதான தருணங்களில் ப்ருத்வியை முழுப் பெயர் சொல்லி அழைப்பதோ அல்லது ப்ரூ என்று சுருக்கமாக அழைத்துப் பேசுவதோடு சரி.

சற்று  நேரம் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் தற்போது அவனாகவே சமாதானமாக தாமதமாகும் என்பதால் எழுந்து அவன் புறமாக நடந்தாள்.

அவனது பின்னே சென்று, “இனி அப்படி பேசலை.  விளையாட்டுக்குத்தான சொன்னேன்.  அதுக்கு எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது” சௌமி கேட்டதும்,

“விளையாட்டுக்குக்கூட அப்டிப் பேசாத” என்றவனை மலையிறக்கி ஓரிடத்தில் அமர வைத்து தானும் அருகே அமர்ந்து கொண்டாள் சௌமி.

அவளது கைகளை ப்ருத்திவியின் கைக்குள் வைத்தபடி அருகருகே தோளோடு தோள் உரச இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஸ்டேட்டஸ் கூட வைக்கல?” சௌமி அவனை அடுத்துச் சீண்டிவிட,

 “எல்லா நாளும் ஒன்னு போல இருக்காதுல்ல… பேங்க்ல் டைட் வர்க்” தலையை கோதிக் கொண்டபடி உரைத்தான் ப்ருத்வி.

“வைக்க நேரமில்லை… சரி! அதுக்காக ஸ்டேட்டஸ்கூட பாக்க மாட்டீங்களா?” சௌமி.

“பாக்கறதா?  அதுக்குலாம் மேல… சாப்பிட… தூங்கக்கூட நேரமில்லாமயும் சில நாளு போகும்மா…!” என்றவன்,

“சந்தோசமா இருந்தா… நாலு ஸ்டேட்டஸ் நச்சுனு வப்பேன்.  அதுவே ரொம்ப வேலைன்னா ரெண்டு நாளைக்கு ஒரு ஸ்டேட்டஸ்னு வப்பேன். 

நான் ஆன்லைனே வரலைன்னா… ஆபீஸ்ல என்னை வச்சு செஞ்சு… டவுசரை கிழிச்சி தோரணமாத் தொங்க விட்டுட்டாங்கனு இனி தெரிஞ்சுக்கோ…!” என்றவனது பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் சௌமி.

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு!” ப்ருத்வி அவளின் தோளில் தனது தோளால் இடித்து வினவ,

“அப்டி இல்லை ப்ரூ.  உங்க வேலைய நினைச்சு கிண்டல் பண்ணிச் சிரிக்கலை.  நீங்க சொன்ன தொனியில அதை நினைச்சுப் பார்த்ததும் சிரிப்பு வந்திருச்சு” சௌமி விளக்க… சட்டென சமாதானமாகாமல் ஊடல்… தொடர்ந்தது.

சௌமி சட்டென கீழிறங்கிச் செல்லும் ரகமில்லை. மேம்போக்காக பேச்சு வந்தாலும், அவளது உடல்மொழியில் இருக்கும் நிமிர்வு உண்மையை பறைசாற்றிவிடும்.

அதனைக் கண்டுகொண்டு ப்ருத்வி ஊடலைத் தொடர்ந்திருந்தான். ஊடல் நீடிக்கவே, “சரி.  நேரமாகுது.  கிளம்பலாமா?” சௌமி கேட்டபின்புதான் ப்ருத்விக்கு அவனது நிலை புரிய வந்தது.

அதன்பின் அவனாகவே சமாதானமாகி கூடல்.  கூடல் என்பது தொட்டுப் பார்த்து, கட்டிப் பிடித்து விளையாடவும், இதழ்வரை உறவை உறுதி செய்து உறவாடவும் எனும் நிலையில் இருந்தது.  இறுதியில் சமத்துவமாக அன்றைய பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பியிருந்தனர் இருவரும்.

அவளின் ப்ரூ எனும் அழைப்பைக் கண்டு ஒருமுறை, “நீ ப்ரூன்னு கூப்பிடறது எனக்கு ப்ரோன்னே கேக்குது கவி.  அதனால வேற எதாவது சொல்லிக் கூப்பிடேன்” என்றான் ப்ருத்வி.

“எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு. உங்க காதுல ஒழுங்கா விழலைங்கறதுக்காக நான் வேற பேருலாம் மாத்த முடியாது” திட்டவட்டமாகக் கூறியிருந்தாள் சௌமி.

மேலும், “ப்ருத்விங்கற பேரை நீங்க மாத்திட்டா, நானும் இதை மாத்திக்கறேன்” என்று கூறியதும் அதற்குமேல் ப்ருத்வியும் விட்டிருந்தான்.

சந்திப்புகள் ஒவ்வொன்றும் இருவருக்கிடையே இருந்த புரிதலைக் கூட்டியதோ இல்லையோ, நெருக்கமாக்கியது. 

நெருக்கமானது போன்ற உணர்வை இருவருக்கும் தந்திருந்தது.

கல்வியில் வழமைபோல மதிப்பெண்களை எடுத்தமையால் வீட்டில் எந்தப் பிரச்சனையும் வரவில்லை.

தோழிகள் மட்டும், “அடிக்கடி லீவுன்னு வீட்டுல இருக்கற… உங்கம்மா ஒன்னும் சொல்லலையா? முன்னல்லாம் இப்டி இருக்க மாட்டியே!” யோசித்தபடியே கேட்டால், எதையாவது வாயிக்கு வந்ததைக் கூறி சமாளித்தாள் சௌமி.

சௌமிக்கு இரண்டரை ஆண்டு கல்லூரிப் படிப்பு நிறைவு பெற்றிருந்தது.

     கம்ப்யூட்டர் ஐட்டி துறை எடுத்து படிப்பவளாதலால் அடுத்துவரும் ஆறு மாதங்கள் அவளின் புராஜெக்ட் காலம். அப்போது அவளைத் தொந்திரவு செய்ய முடியாது என்று ஒரு ட்ரிப்பை முடிவு செய்திருந்தனர் சௌமியாவும் ப்ருத்வியும்.

குஷி பீச்சை இந்த முறை தேர்ந்தெடுத்திருந்தனர்.

இன்னும் ஆறு மாதங்களில் அவளின் படிப்பு முடிந்துவிடும்.  அதன்பின் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளலாம் என்பதால் இருவரும் சற்று அதிகமாகவே இழைந்து ஒருவருக்கொருவர் குழைந்து பிணைந்து போயிருந்தனர்.

“ஆறு மாசத்துக்கும் சேத்து அச்சாரத்தை இந்த ட்ரிப்ல ஸ்ட்ராங்கா குடுத்துட்டுப் போ கவி” ப்ருத்வி.

“ஹான்… அவ்ளோதானா?” முறைத்தபடி வினவியவளை,

“சும்மா பேச்சுக்கூட சரினு சொல்ல மாட்டீங்கற கவி.  எம்மேல உனக்கு இன்னும் நம்பிக்கை வரலையா?” என்று கேட்டவனிடம்,

“நம்பிக்கை வராமத்தான் ஒன்றரை வருசமா உங்ககூட இப்டித் தனியா வரேனா?” கோபமாகவே கேட்டாள் சௌமி.

“சரி சரி.  ஆரம்பத்துலயே சண்டை போட்டா வந்ததே வேஸ்ட்டாயிரும்.  வா… சாயந்திரம்போல நம்ம சண்டைய நிதானமா வந்து போட்டுக்கலாம்” சௌமியை அரவணைத்து அழைத்துச் சென்றான் ப்ருத்வி.

தோழிகளிடம் வழமைபோல காரணம் கூறி அனுப்பிவிட்டு, அடுத்த பேருந்தில் கிளம்பி வந்தவள் உச்சிபுளியில் தனக்காக காத்திருந்த ப்ருத்வியோடு அன்றைய திட்டத்தினைச் செயலாக்க ஒன்று கூடியிருந்தனர்.  குஷி பீச்சில் தன்னவனோடு குஷியாக இருந்தாள் சௌமி.

பணமிருந்தால் போதும்.  அன்றையே பொழுது போவது தெரியாமல் மனமகிழ்ச்சியோடும், ஆர்ப்பாட்டத்தோடும் வேண்டியபடி தங்களின் நேரத்தை அங்கு செலவிடலாம்.

பணத்தைச் செலவளிக்க ப்ருத்வி கணக்குப் பார்க்கவில்லை.

உடன் வந்திருப்பது தனது வருங்காலத் துணைவியாயிற்றே.  ஆகையினால் அவளைத் தன் பாதுகாப்பில் வேறு இடையூறுகள் எதுவும் வந்துவிடாமல் பவுன்சர்போல அவளுக்குப் பக்கபலத் துணையாக இருந்தான்.

பீச்சிலிருந்த நீரில் இருவரும் ஓடிப் பிடித்தும், ஒருவரின் மீது மற்றொருவர் நீரை வாரியிறைத்தும் சிறுபிள்ளைபோல விளையாண்டதில் இருவரும் தொப்பலாக நனைந்திருந்தனர்.

மாற்று உடைகள் எதுவும் இன்றி இருவரும் வந்திருக்க, சௌமியின் நனைந்துபோன ஆடை, அவளின் மேனி அழகை மேலும் தூக்கலாக எடுத்துக் காட்டி ப்ருத்வியின் உணர்வுகளைத் தூண்டிவிட்டிருந்தது.

அங்கு வந்திருந்தவர்களின் கண்ணிற்கும் அது இலவச விருந்தாக, அதனை விரும்பாதவன் அங்கிருந்த ரிசார்ட்டில் அறை எடுக்கலாம் என தீர்மானித்து அவளை அழைக்க முதலில் தீர்க்கமாக மறுத்துவிட்டாள் சௌமி.

மறுத்தவளின் புறத்தோற்றத்தினை மொய்த்திட்ட கழுகுக் கண்களிடமிருந்து எவ்வாறு அவளைக் காத்தான்?

தன்னைக் காக்க அழைக்கிறானா, காமத்திற்காக அழைக்கிறானா எனும் குழப்பத்திலிருந்தவள் என்ன செய்தாள்?

***

error: Content is protected !!