பூவுக்குள் பூகம்பம் 4
பூவுக்குள் பூகம்பம் 4
பூவுக்குள் பூகம்பம் – 4
சிறுவனை வீட்டிற்கு அழைத்து வந்ததோடு அவனையும் அவ்வீட்டில் ஒருத்தனாக மாற்றியிருந்தார்கள்.
அருகே வாடகைக்கு இருந்தவர்கள் திடீரென்று வந்திருந்த சிறுவனை முதலில் விருந்தாடியாக வந்தவன் என்றெண்ணி விசாரிக்க, சிபியின் தாய் விசயத்தை முழுவதுமாகக் கூறாமல் சிலதை மற்றும் கூறிட, “உங்க சிபி கூட்டிட்டு வந்ததும் அப்படியே உங்ககூட வச்சிக்கிட்டீங்களா?” என்று ஆச்சர்யமாக வினவியர்கள்,
“இதேபோல அது கட்டிக்கப் போற பொண்ணையும் கூட்டிட்டு வந்திரப் போவுது” என்று விழிப்பை தருவதுபோல நக்கலும் செய்து கடந்திருந்தனர்.
அவர்களின் பேச்சையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத இருவரும் மகன்களை அறநெறியோடு வளர்த்திருந்தமையால் ஐயம் கொள்ளவில்லை.
அன்று… சிறுவனோடு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது குழந்தைக்கு சரியான ஆகாரம் எதுவுமின்றி உடல்நலனில் உண்டான பின்னடைவும் சேர்ந்து இறந்தது தெரிய வந்தது சிபிக்கு.
அந்த விசயத்தைக் கேட்டதும் மிகுந்த மன அதிருப்திக்கு உள்ளான சிபி, “நான் அன்னைக்கு கூப்பிட்டதும் எங்கூட நீ வந்திருக்கலாம்ல. ஏன் வரலை” என்று கேட்டதும்,
“ரோட்டாண்டை இப்டி ஒரு ஆயா கூப்பிடுக்குனே இருக்குனு போனோம். அது என்னை வேலை வாங்கினு எனக்கும் பாப்பாவுக்கும் மீந்துபோனதை போடும். கொஞ்ச நாள் அங்கதான் இருந்தோம்.
நான் வேல பாக்கும்போது எல்லாம் உடம்பு சரியில்லாததால பாப்பா கத்திகினே கிடக்கும். அது அழுவுதுன்னு கிட்டக்க போனா பாட்டி அடிக்கும். அதான் பயந்துட்டு வரலை” என்றழுதவனை சமாதானம் செய்த சிபி,
“இப்ப எங்கூட வரியா?” என்று கேட்டதும் அழுகையோடு தலையை ஆட்டி சம்மதத்தைத் தெரிவித்திருந்தான் சிறுவன்.
வீட்டிற்கு அழைத்து வந்த சிறுவனை தாயின் பொறுப்பில்விட, பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதோடு சரி.
அன்று இரவில் சிபியாக சிறுவனைப் பற்றிய சில விசயங்களைக் கூறிவிட்டு, “இனி அவனை நாமளே பாத்துக்கலாம்பா” என்று தந்தையிடம் உரைத்தவன்,
“என் ஃபிரண்டுகிட்ட அவனை ஸ்கூல்ல சேக்கறதுக்கு கேட்டிருக்கேன்” என்றதோடு பள்ளித்தோழன் கிருபாவிடம் கேட்டு பள்ளியில் சேர்க்கும் முடிவுக்கு வந்ததோடு அதனை செயல்படுத்தியும்விட்டான்.
அதன்பின்புதான் பெற்றோர் இருவருமே சிறுவனிடம் அனைத்தையும் கேட்டறிந்து கொண்டார்கள்.
மகனது ஈகை குணத்தை வேறு யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாதே என்றெண்ணிய ஞானம் போலீஸில் முறையாக தெரிவித்து, அவனை தத்தெடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் செய்தவர்கள் சிபியின் ஆசைக்காக வீட்டிலேயே சிறுவனை வைத்துக்கொண்டார்கள்.
சிபியிடம் மனது திறந்து பேசும் சிறுவன் மற்றவர்களிடம் ஆரம்பத்தில் ஒட்டவே இல்லை. சிபி எத்தனை முறை கூறினாலும் அப்படியே ஒதுங்கி இருந்தான். சிறுவனுக்கு இவர்களாகவே பெயர் சூட்டி பள்ளியிலும் சேர்த்து விட்டிருந்தனர்.
சிபியின் தம்பி மகேந்திரனுடன்கூட ஒட்டாமல் இருந்தவன் சிபியின் தந்தையோடு மட்டும் சில மாதங்களுக்குப்பின் நெருக்கம் கூட்டியிருந்தான்.
சேரியிலும், பிறகு பிளாட்பாரத்திலும் வாழ்ந்த சிறுவனால் ஆரம்பத்தில் பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திணறி இருந்ததை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
முதல் ஆண்டு சோர்வோடு சென்று வந்தவன் அதன்பின் அந்த தயக்கமின்றி செல்லத் துவங்கியிருந்தான்.
சிபிக்கு மூன்று ஆண்டுகால பொதுமருத்துவ படிப்பின் இரண்டு ஆண்டுகாலத்தை நிறைவு செய்து இறுதி ஆண்டில் இருந்தான். அதனைப் படித்துக்கொண்டு பகுதிநேர பணிக்கும் சென்றான்.
***
விசயம் புரியாமல் மறுப்பவளிடம், பல்லைக் கடித்துக்கொண்டு விசயத்தைப் புரிய வைப்பதற்குள் ப்ருத்விக்கு போதும் போது என்றாகியிருந்தது.
ஓரமாக அழைத்துச் சென்ற ப்ருத்வி, “வேணா ரெஸ்ட் ரூம் போயி அங்க இருக்கற மிரர்ல் செக் பண்ணிட்டு வா!”
நம்பாமல் சென்றவள், திரும்பி வந்தபோது தனது உடை எப்படி உடலோடு ஒட்டிக் கிடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதால் பிறரை நிமிர்ந்து பார்க்கவே மிகவும் கூச்சமாக உணர்ந்தாள் சௌமி.
ப்ருத்வியின் முடிவிற்கு ஒப்புக்கொண்டு அவன் எடுத்த ரிசார்ட்டிற்கு… தனது உடலோடு ஒட்டி தனது வடிவங்களை எடுத்துக்காட்டிய ஆடையை கைகளால் பிடித்து இழுத்து சரிசெய்தபடியே மிகுந்த தலையிறக்கமாக எண்ணி அவனோடு ஒண்டியவாறு பிறர் கண்ணிற்கு விருந்தாகாமல் விரைந்து வந்து சேர்ந்தாள்.
இருவருக்கும் எதிர்பாராமல் கிட்டிய தனிமை வெவ்வெறான சிந்தனைக்குக் கொண்டு சென்றது.
ப்ருத்விக்கு உணர்வுகளின் கொந்தளிப்பில் தவறு ஏதேனும் நடந்திரா வண்ணம் இங்கிருந்து விரைந்து கிளம்ப வேண்டும் என்கிற எண்ணம்.
சௌமிக்கு தனக்கானவள் என்கிற உறுதியோடு இருந்தமையால், இதுபோன்ற சந்தர்ப்பங்களை தவறாகக் பயன்படுத்திக்கொள்ள எண்ணவில்லை ப்ருத்வி.
சௌமிக்கு, உடலோடு உடலாக ஒட்டியிருந்த ஆடையை உலர்த்தி, சரியான நேரத்திற்குள் வீட்டிற்குச் சென்றாக வேண்டுமே எனும் கவலை.
“இங்க ஏற்கனவே வந்திருக்கீங்கதான?” முதுகை அவனுக்குக் காட்டி நின்றபடி கேட்டாள் சௌமி.
திரும்பி நின்றவளின் பின்னழகைப் பார்க்கக்கூடாது என்று அவன் நினைத்ததையும் மீறி கண்கள் செல்ல, அதனைக் கட்டுப்படுத்தும் வழிதெரியாமல் அலைப்புறுதலோடு அவளின் புற அழகைப் பருகியபடி, “ம். ஏன் கேக்குற?” என்றான்.
இடைவெளி விட்டு தள்ளியே நின்று பதில் கூறியதோடு எதற்காக கேட்கிறாள் எனும் கேள்வியை அவளிடம் முன்வைத்தவன், “பால்கனி பக்கம் வெயில் வரும். அங்க நிக்கிறது யாருக்கும் தெரியாது. அங்க போயி நின்னு ட்ரெஸ்ஸைக் காய வைய்யி” என்றான்.
அப்படி அவள் சென்றால் அவனது பார்வைக்குப் படமாட்டாள். அதனால் அனைத்தும் சுகமாகும் என்பதுதான் அவனது அப்போதைய எண்ணமாக இருந்தது.
ரூமிற்குள் வந்தது முதலே குளிரில் பற்கள் தந்தியடிக்க நின்றிருந்தவள், “எல்லாம் தெரிஞ்சும் அப்புறம் எதுக்கு எம்மேல தண்ணிய வாரி அடிச்சி விளையாண்டீங்க” அவன்மீது குற்றம் சுமத்தும் தொனியில் கேட்டாள் சௌமி.
“உங்கூட இருந்த ஜோருல அதையெல்லாம் யோசிக்கவே அப்பத் தோணலை! வேற என்னன்னவோ யோசனை!” அனுபவித்துக் கூறியவனது வார்த்தையில் இருந்த மயக்கம் அவனை மேலும் சீண்டிப் பார்க்கச் சொன்னது சௌமியை.
“வேற என்னவெல்லாம் யோசிச்சீங்க…” சௌமி அவன் கூறியதுபோல பால்கனி இருந்த இடத்திற்குச் சென்றபடியே கேட்டாள்.
“ம்ஹ்ம்…” பெருமூச்சை இழுத்து விட்டவன், “அது சென்சார்” என்றபடி கதவை நோக்கித் திரும்பினான்.
அவனை நோக்கித் திரும்பி வந்தவள், “அப்ப சொல்ல மாட்டீங்க?”
அருகே கேட்ட அவளின் குரலில் பதறித் திரும்பியவன், “அப்டியில்லை…” என்றான்.
“பிரிச்சுப் பேசாதன்னு சொல்றதோட சரி. ஆனா…” திரும்பி கடைக் கண்ணால் அவனை நோக்கிவிட்டுத் திரும்பி சௌமி நடக்க, அவளின் நடையில் அவனுக்கான அழைப்பு மறைந்திருந்ததோ!
அவளின் நடையில் ப்ருத்வியின் பித்தம் தலைகேறியது. சௌமிக்கு நிச்சயமாக அவனது நிலை புரியாமல் பேச்சுக் கொடுத்தாள்.
“வேணா…ம்” பேச்சு… பேச்சோடு நிற்காது என்று அவனுக்குப் புரிந்தது. அதனால் அத்தோடு நிறுத்த எண்ணினான். ஆனால், அவளோ அதை விடாமல் கேட்டறியும் முஸ்தீபில் பேசினாள்.
“ஏன் வேணாம். எனக்கு வேணும்” பிடிவாதமாக அவள் கூறியதும், வெளியே செல்லக் கிளம்பியவனை நோக்கி,
“எங்க போறீங்க? பதில் சொல்ல முடியாம இப்டி ஓடி ஒளியறீங்க?” அவனது மோக தாகத்திற்கு மேலும் இவள் நீர் வார்க்க,
“சீண்டி விடாத… சிக்குனா உனக்குத்தான் கஷ்டம்!” கதவை ஒருக்களித்து திறந்த நிலையில் பாதி அறைக்குள்ளும், மீதி வெளியேயுமாக நின்றவாறு உரைத்தான்.
“பயமுறுத்திப் பாக்கறதே வேலையா வச்சிருக்கீங்க?” சௌமி.
“ஏய்…! பயமா! யாருக்கு?” அறைக்கதவை அடைத்துவிட்டு உள்ளே அவளிருக்கும் இடம் நோக்கி நடக்கத் துவங்கியவன்,
“எனக்கு… உங்கிட்ட என்னடீ பயம்?”
“அதான் எனக்கும் தெரியலை!” உதட்டைச் சுழித்தவாறு ஆடைகளை கைகளால் தளர்த்தியபடி உரைத்தாள்.
சௌமியின் செயலில் பித்தானவன் நாலே எட்டில் அவளை அடைந்திருந்தான். அவளின் அருகே அவன் வந்ததையறியாமல் திரும்பி நின்றபடி வேடிக்கை பார்த்தவாறு ஆடைகளை உணர்த்தும் நோக்கில் இருந்தவளை தன் மார்போடு சட்டென இழுத்து அணைத்துக்கொண்டான் ப்ருத்வி.
திடீரென நடந்திருந்த நிகழ்வில் பெண்ணது ஐம்புலனும் அதனதன் இயக்கத்தை மைக்ரோ நொடி நிறுத்தியதோ!
பெண்ணிடம் பேச்சில்லை.
மூச்சு!
சீரற்ற மூச்சுகள்!
சித்தம் கலங்கி இருவரும் நின்ற நொடிகள்! நிமிடங்களாக மாறிக் கொண்டிருந்தது. அவனது கைப்பாவையாக அவள் மாறிக்கொண்டிருந்த தருணமது!
“க…வி…” என்றழைத்தபடியே அவளின் காது மடல்களை அவன் ஈர உதடுகளால் உரசினான். நனைந்திருக்க அவளின் ஈர ஆடைக்குள் ஒளிந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த உடலின் அணுக்கள் அனைத்தும் அவனது அணைப்பில் கிட்டிய வெம்மையில் இதம் உணர்ந்தது. மோட்சம் பெற்றது.
இடம் பொருள் இருவருக்கும் மறந்தது!
காதோரம் இதழால் பல இனிய கதைகளைச் சொல்லி அவளை சிலிர்க்கச் செய்தவன், கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
புத்தி கடனுக்குப் போயிருந்தது. அவள் அவனது மார்பிற்குள் புதைய, அவன் தொலைந்து போனான். சுற்றம் மறந்து போனான். இருவரின் நிலை தொலையக் கந்தர்வ காலம் கைகோர்த்துக் காத்திருந்தது.
இதழ் துடிக்க அவனது அணைப்பிற்குள் உறைந்தவளை, இதழ் கொண்டு அவளது நாளங்களில் இதம் மீட்டினான். ரிதம் கூட்டினான்.
அவனது வாசிப்பில் மெய்மறந்து போனவள், இதழ் யுத்தத்தை அவன் மீது தொடர்ந்தாள்.
இதழால் இனிய யுத்தம் மாறி மாறி அரங்கேறியது. வென்றார், தோற்றார் என பிரித்தறிய இயலாத நிலையில் யுத்தம் தொடர்ந்தது.
அவனது கைகள் அவளது புற மேனியில் ஊர்வலம் செல்லத் துவங்க, புதிய இன்பங்கள் அவளுக்கு அறிமுகமாயின.
மோக யுத்த களத்தில் முன்னேறிச் சென்றவன், அந்தரங்கங்கங்களை தனது ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்க, கைகளாலேயே அவனது கரத்தைக் கைது செய்து தனது கஷ்டடியில் கொண்டு வந்தவள்… தனது நிலையை உணர முயன்றாள்.
கனவிலிருந்த அவளின் உணர்வுகளை கஷ்டத்தோடு மீட்டெடுத்தாள்.
முயற்சி வெல்ல, முன்னேற முயன்றவனது கரங்கள் அவளால் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, “க…வி…” தாபத்தோடு அவளிடமிருந்து கரங்களை விடுவிக்கப் போராடினான்.
பெண்ணது கைகளுக்குள் பொதிந்திருந்த வலிமை கண்டு ஆச்சர்யப்பட்டான். அவனும் அவளுக்காக விட்டுக்கொடுத்தான்.
போராட்டத்தின் முடிவை யோசித்தவள், சட்டென விழிப்புற்றாள்.
“ப்ப்ர்உத்வ்இ…” அழுத்தமாய் அவனது பெயரை அழைத்து, அவனை விட்டு விலக எண்ணி முயன்றாள்.
அவனது சிந்தை முழுவதிலும் காமனின் ஆளுகை!
“வேணாம். எனக்குப் பயமா இருக்கு” என்றவாறு அவனது கரங்களை விடுவித்தவளின் வார்த்தைகளில் நடப்பிற்கு வந்தவன், அவளது முகத்தைப் பார்த்தான். அதில் பயமிருந்தது.
ஆனால் அதைக் கண்டவனுக்குள் மோக வேட்கை மிகுந்து கிடந்தது குறையத் துவங்கியது. அதை விரும்பாதவன் மீண்டும் அவளை தனது கரங்களுக்குள் கொண்டு வந்தான்.
“வேணாம் ப்ருத்வி” என்றவள் இன்னும் அவனது கைவளைவில்தான் இருந்தாள்.
கைகளிலிருந்து அவளை விடவேண்டாம் என அவனது உணர்வுகள் போராட்டம் செய்ய, மோகத்தில் முத்துக் குளிக்க அவை அவனை உந்த,
“ப்ளீஸ்… இப்டியே கொஞ்ச நேரம் எங்கூட இரு. அதுபோதும்!” மயக்கும் கந்தர்வக் குரலில் இயம்பினான்.
மறுத்திருந்தால் அவனை தன்னிடமிருந்து முற்றிலுமாக சட்டென விலக்கி, தானும் அவனிடமிருந்து விலகியிருப்பாள்.
அவன் கெஞ்சலோடு கேட்டதும், அவளின் பேதை மனம் இரங்கி அதற்கு இடம் கொடுக்கத் துணிந்தது.
ப்ருத்வி முன்னைக் காட்டிலும் அவனது மார்போடு அவளை இறுக அணைத்துக் கொண்டு சகட்டுமேனிக்கு முத்தம் பதித்தான்.
அவளின் உடலெங்கும் ஓடிய பரவச உணர்வு நாடி, நரம்புகளின் வழியே ஓடி உள்ளும் புறமுமாக ஊடுருவிப் பாய்ந்தது. அவளுக்கு மயக்கம் வரும்போல இருந்தது.
அது சக்தியோட்டக் குறைவினால் தோன்றும் மயக்கமல்ல. காமனின் ஆளுமையால் உண்டான மீள விரும்பாத மோக மயக்கம்! சிற்றின்ப மயக்கம்!
இருவரின் இதயத் துடிப்பு மற்றவர்களுக்கு கேட்க அணைத்திருந்தவன், அவளை அப்படியே தனதணைப்பிலிருந்து விலக்கி கைகளில் ஏந்திக்கொண்டான்.
நடப்பிற்கு வந்தவள், “எங்க தூக்கிட்டுப் போறீங்க?” சுதாரித்து வினவ,
கண்களாலேயே படுக்கையை மந்தகாசப் புன்னகையோடு காட்டினான். சௌமி அதற்குமேல் தயங்காமல் தன்னை அவனது கரங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இறங்கி, “வேணாம். வாங்க கிளம்புவோம். நாம போகும் போதே ட்ரெஸ் காத்துல காஞ்சிரும்” அவனது முகத்தைப் பாராமலேயே கூறினாள் சௌமி.
தந்தை செழியன் தாயிடம் அவ்வப்போது கூறும் நம்பிக்கை வார்த்தைகளை அந்நேரத்தில் நினைவு கூர்ந்தாள் சௌமி.
“கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம் கவி.” ப்ருத்வி கெஞ்சினான்.
“இல்லை வேணாம்.” திடமாக மறுத்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தனது உடைகளைச் சரி செய்துகொள்ள முனைந்தாள்.
பின்னோடு மீண்டும் அவளை வந்து அணைத்தவனது கையை சட்டென எடுத்துவிட்டவள், “கிளம்புங்க” கனலோடு கூறினாள்.
“மூடைக் கிளப்பி விட்டுட்டு, மூட்டையக் கட்டுனு அடம் பண்ணாத கவி” எரிச்சலாக மொழிந்தான் ப்ருத்வி.
“இதுக்குமேல இங்க இருந்தா தப்பாப் போயிரும். உங்க பேச்சு, பார்வை எதுவுமே சரியில்லை. வாங்க கிளம்புங்க” என்றாள் சௌமி.
“ரொம்பப் பண்ணாத கவி. ப்ளீஸ். ஒரே ஒரு தடவை” என்றான்.
அவன் கேட்பது புரிந்தாலும், புரியாததுபோலவே, “ஒரு தடவைன்னு எத்தனை முறைதான் எங்கிட்ட கிஸ் கேப்பீங்க. இன்னொரு நாள் சாவகாசமாத் தரேன்.” என்றபடியே அவளின் பேகை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி விரைந்தாள்.
அவளின் கையோடு கதவின் தாழ்ப்பளை திறக்க முடியாமல் பிடித்துக் கொண்டவன், “கவி… உனக்கு உண்மையிலேயே நான் என்ன கேக்க வரேன்னு புரியுதா! இல்லை… புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியா?”
“உங்களுக்கு ரொம்ப முத்திருச்சு. கிளம்புங்க” அவனை விலக்கிக் கொண்டு கதவைத் திறக்க முனைய,
“நீதான் என்னை உசுப்பேத்தி விட்ட…”
“அதுக்கு…!” சௌமி.
“நீதான் அதைச் சரி பண்ணணும்!”
“ரொம்ப அவசரப்படாதீங்க. இன்னும் ஆறு மாசத்துல கோர்ஸ் முடிஞ்சிரும். அப்புறம் நம்ம கல்யாணந்தான!”
“அதுவரை தாங்கற மாதிரி இப்ப ஒரு தடவை! ப்ளீஸ்!” மிட்டாயிக்கு நிற்கும் சிறுவனைப்போல கெஞ்சினான்.
சௌமி இரங்கவில்லை. இந்த இரக்கம் அவளை எங்கு கொண்டு வந்து நிறுத்தும் என்பதை உணர்ந்திருந்தமையால் வலுக்கட்டாயமாக மறுத்து, அவனையும் மீறி கதவுத் தாழ்ப்பாளைத் திறந்துகொண்டு வெளியே சென்றவள்,
“நான் வெளிய வயிட் பண்றேன். சீக்கிரமா வாங்க” அங்கிருந்து விறுவிறுவென என்ட்ரென்ஸ் பகுதிக்கு நடந்தாள்.
படபடப்பாக இருந்தது. தான் இங்கு வந்ததே தவறோ என மனம் அடித்துக்கொள்ள, எப்படா வீட்டிற்குச் செல்வோம் எனும் மனநிலையோடு வாயிலை நெருங்கியிருந்தாள்.
நீண்ட நேரம் காத்திருந்தாள் சௌமி. ப்ருத்வி என்ன செய்தான்?
***
மாலையில் கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார் மதி. உடன் அக்கம் பக்கத்து வீட்டினரும் வர பேசிக்கொண்டே வந்தனர்.
நிறைய பேசினர். அதில் தங்களைவிட பிறரைப் பற்றிய பேச்சுக்களும், தொலைக்காட்சி சீரியல் பற்றிய விவாதங்களும், அடுத்து என்று எந்தக் கோவிலுக்கும் செல்லலாம் என்பது பற்றிய கருத்துகளும் அதிகமிருந்தது.
ஒவ்வொருவரின் வீடு வர, மற்றவர்களுக்கு விடைகொடுத்தபடியே வீட்டிற்குள் தஞ்சமடைந்தனர்.
மதியின் வீடு இருப்பது ஒதுக்கத்தில்தான். இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்தது. அப்போது எதிர்பட்ட கல்லூரி சென்று திரும்பிக் கொண்டிருந்த மாணவியர்களுக்கிடையே சௌமியாவைத் தேட, அதில் அவளைக் காணவில்லை.
எதிரெதிராக வந்தவர்களில் சௌமியின் தோழமை வட்டாரத்திலிருந்த ஒருத்தி, “சௌமி அம்மா பாக்கறதைப் பாத்தா வித்தியாசமா இருக்குடீ. எதாவது பிரச்சனைய இழுத்து விட்டுட்டாளா? என்ன சொல்லி வச்சான்னு தெரியலையே”
“கட்டடிச்சிட்டு தூங்கிருப்பா. நம்மைப் பாத்தவொடனே அவங்கம்மாவுக்கு விசயம் தெரிய வந்திருக்கும்”
“அப்ப இன்னைக்கு சௌமிக்கு வீட்டுல கொண்டாட்டந்தான்னு சொல்லு” அதிலொருத்தி குதூகலமாகப் பேச,
“பொறுடீ!”
அதற்குள் அவர்களின் அருகே வந்துவிட்ட மதி, “சௌமி வரலையா?” என்று கேட்டதுதான் தாமதம்.
புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மதியை நோக்கி, “அவ இன்னைக்கு காலேஜூக்கு வரலைன்னு சொன்னாளேம்மா…” கோரஸாகக் கூறிவிட்டு,
“அப்ப அவ வீட்லயும் இல்லையா?” என்று கேட்டாள் ஒருத்தி.
அவர்களின் பேச்சில் குழம்பிய மதி மகளை விட்டுக் கொடுக்காமல், “எங்கையோ புராஜெக்ட் விசயமா போகணும்னு சொல்லிட்டு லேட்டாத்தான் கிளம்பினா? அதான் வரும்போது உங்ககூட வரலையான்னு கேட்டேன்” சமாளித்தார்.
மற்றவர்கள் எல்லாம் வெவ்வேறு துறை. ஆகையினால் தனித்து மகள் சென்றிருக்கலாமோ என எண்ணி, அவராகவே பேசி விடைபெற்றிருந்தார் மதி.
காமாலை கண்டவரைப் போலத்தான் சௌமி விசயத்தில் மதி இதுவரை. காமாலைதான் என்று கன்ஃபார்ம் ஆனபின்…
***
சௌமி கீழிறங்கி வந்து ஒரு பதினைந்து நிமிடம் வரை வராதவனை அலைபேசியில் அழைக்க, சற்று நேரம் கழித்து எடுத்துப் பேசிவிட்டு வைத்திருந்தான். அவள் மீண்டும் அறைக்குள் செல்லாமல் அதே இடத்திலேயே நின்றபடி ப்ருத்விக்காகக் காத்திருந்தாள்.
வருவோர், போவோர் எல்லாம் அவளைக் கண்காணிக்க அவளுக்கு அது கஷ்டத்தைத் தந்தாலும், மீண்டும் அறைக்குச் செல்லும் மடத்தனத்தைச் செய்ய மனமின்றிக் காத்திருந்தாள் சௌமி.
இடையில் நான்கு முறை அவனுக்கு அழைத்து, “வரப் போறீங்களா இல்லை… இங்கேயே வேற எதாவது வெகிகிள் ஏற்பாடு பண்ணித்தரச் சொல்லி கிளம்பட்டா” பட்டெனக் கேட்டாள்.
“வரேன்” என்றவன் பத்து நிமிடங்கள் ஆகியும் வரவில்லை. மீண்டும் அழைத்து, “என்னதான் நினைச்சிட்டு அங்கயே உக்காந்துருக்கீங்க?” என்று வினவ,
“இதோ வந்திட்டேன்” அடுத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தபின் வந்தவனின் முகம் அத்தனை இறுகிக் கிடந்தது.
ஏறத்தாழ சௌமி கீழிறங்கி வந்து ஒரு மணித் தியாலம் கடந்திருந்தது.
தனது தவறை உணர்ந்தவனுக்கு அவளின் முகம் பார்க்க இயலா வேதனை. அவள் சுதாரிக்காமல் இருந்திருந்தால்… இன்று வேறு மாதிரியாக கண்டிப்பாக நடந்திருக்கும்.
தர்மசங்கடத்தை அவளுக்கு கொடுத்து, காலம் முழுமைக்கும் கறையை உண்டாக்க முனைந்திட்ட தனது செயலை எண்ணி தயக்கமாக உணர்ந்தான்.
இலகுவாக அவளிடம் அவனால் மன்னிப்புக் கேட்க முடியவில்லை. இதைக் காரணம் காட்டி தன்னை ஒதுக்கி விடுவாளோ என்கிற பரிதவிப்பு அவனுக்குள்.
திட்டமிட்டு அவன் எதுவும் செய்ய நினைத்திருக்கவில்லை. ஆனால் அவ்வாறு சௌமி நினைத்து தன்னை வெறுத்தால் என்ன செய்வது என்கிற மிதமிஞ்சிய குழப்பம் ப்ருத்விக்கு.
அதற்காக அப்படி ஒன்று நடந்திருந்தாலும் அவளை விட்டுச் செல்லும் எண்ணம் எதுவும் அவனுக்கில்லை என்பதுவும் தோன்ற, அதன் பின்னேதான் வெளியே வந்து சௌமியை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
சௌமியின் அமைதி அவனைக் கொன்று தின்றது.
ஏற்கனவே நேரத்தை விரயம் செய்திருக்க, இன்னும் நேரத்தை வீணாக்கினால் மேலும் பிரச்சனைகள் எழலாம் என எண்ணியவன் விரைவாகவே அவளை அழைத்துக்கொண்டு வந்தான்.
ஆனாலும், அவளது இறுகிய பாராமுகத்தை காணச் சகிக்காமல் பேருந்து நிறுத்தத்திற்கு நூறு மீட்டர் இடைவெளியில் வண்டியை நிறுத்தியவன், “கவி கொஞ்சம் பேசணும்” என்றான்.
இறங்கி மூன்றாவது நபரைப்போல தள்ளி கைகட்டியவாறு நின்றிருந்தவளை நேருக்கு நேர் காண முடியாமல் அங்கிருந்த பனை மரங்களைப் பார்த்தபடியே, “வேணுனே பிளான் பண்ணியெல்லாம் நான் எதுவும் பண்ணலை கவி”
சௌமி மௌனமாக நின்றாள்.
“சாரி கவி. என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை. அதான் லேட். இனி இப்டி நடக்காமப் பாத்துக்கறேன்!”
அப்போதும் பேசா மடந்தையாக நின்றாள்.
“எதாவது பேசுடீ! திட்டு! இல்லை… அடி! இப்டி பேசாம இருக்காத…!” கெஞ்சினான்.
எந்த மாற்றமும் இன்றி அப்படியே இறுகிப்போய் நின்றிருந்தாள்.
அவளின் அருகே சென்று அவளது கரங்களை கைகளால் தூக்கி அவனது கன்னங்களில் அடித்தான்.
சௌமியோ கரங்களை அவனிடமிருந்து உருவிக்கொள்ள முயற்சித்தாள்.
“ப்ளீஸ் கவி. இப்டியே போனா… என்னால தாங்க முடியாதுடீ. எதாவது பேசேன்!”
“நேரமாகுது! இப்பவே ரொம்ப லேட்…!” கறாராக வந்தது சௌமியிடமிருந்து.
“இதோ… பக்கத்துலதான் இருக்கு!” திரும்பிப் பார்த்து கைகாட்டி கூறியவன், மீண்டும் அவள் புறமாகத் திரும்பி, “எங்கூட ஒரு வார்த்தையாவது சிரிச்சுப் பேசு கவி” மீண்டும் கெஞ்சினான்.
“நீங்க லேட் பண்ணதுல டென்சனா இருக்கேன். நிச்சயமா இப்போ என்னால சிரிக்க முடியாது. வாங்க… போகலாம்” என்றாள்.
அதற்குமேல் அவளைத் தொந்திரவு செய்தால், என்ன செய்வாளோ என்றெண்ணியவன், பேருந்தில் ஏற்றிவிட்டான்.
அப்போதும், “இனி அப்படி நடக்காமப் பாத்துக்கறேன் கவி. போயிட்டு மறக்காம மெசேஜ் பண்ணு” என்றான்.
‘இனி உங்ககூட எங்கையாவது நான் வந்தா அப்போப் பாத்துக்கலாம்’ நினைத்தபடியே, தன் நினைப்பே உண்மையாகப் போவது தெரியாமல் அங்கிருந்து கிளம்பியிருந்தாள் சௌமி.
“சரி” என ஆமோதிப்பாய் தலையாட்டி விடைபெற்றவளுக்கு மனம் திக் திக்கென்றிருந்தது. நேரமானது ஒரு புறம். யாரேனும் தோழிகள் வரும்வழியில் தன்னை ப்ருத்வியோடு பார்த்துவிட்டால்…
எல்லாம் முடிவுக்கு வந்துவிடுமே என்ற பயத்தோடு வீடு வந்து சேர்ந்தவளுக்கு வீட்டின் சாதாரண நிலை மீட்சியைக் குடுத்திருந்தது.
அது குடுத்த தைரியத்தில் சாதாரணமாக வலம் வந்தாள். இயந்திர கதியில் ப்ருத்விக்கு தான் வீட்டிற்கு வந்து சேர்ந்ததை டெக்ஸ்ட் செய்துவிட்டு மற்ற வேலைகளில் கவனமானாள் சௌமி.
வேலையில் கவனம் செலுத்த இயலாத வகையில் அன்றைய நிகழ்வுகளின் தாக்கம் அவளைத் திசை திருப்பியது.
உடலும் மனமும் ப்ருத்வியின் அண்மைக்கு ஏங்கியது. துய்த்த இன்பத்தின் சுவையை மனம் நாடி ஏங்கியது. உடல் தேடியது.
மதி அவ்வப்போது வந்து அறைக்குள்ளிருந்த மகளை எட்டிப் பார்ப்பதும் பிறகு புழக்கடையில் நின்றபடி கணவனிடம் பேசுவதும், வீட்டிற்குள் வருவதுமாக இருந்தார்.
சௌமிக்கு ப்ருத்வியின் செயலை எண்ணி வருத்தமிருந்தாலும், நடந்த தவறில் அவளின் பங்களிப்பும் இருந்ததை எண்ணி அவனை மட்டுமே குறை கூறுவதை விடுத்து, அன்றைய நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள்.
அதனால் தாயின் நடவடிக்கைகள் சௌமிக்கு தெரியாமல் போயிருந்தது.
தந்தை வீடு திரும்பும்வரை அமைதியாக இருந்த வீட்டில் செழியன் வந்ததும் வழக்கத்திற்கு மாறாக கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் அனைத்தும் சௌமிக்குள் குழப்பத்தையும், கலக்கத்தையும் விதைத்தது.
“சௌமி…” தந்தையின் அழைப்பில் அறையிலிருந்து வெளிவந்தவளிடம்,
“உன்னோட மொபைல் கொஞ்சம் தாடாம்மா…” என்றார் செழியன்.
அவ்வப்போது செழியன் இதுபோல சௌமியின் மொபைலை வாங்கி பேசிவிட்டுக் கொடுத்து விடுவது வழக்கம்தான். ஆனால், அதிலிருக்கும் தேவையற்ற குறுஞ்செய்திகளை குறிப்பாக ப்ருத்வியிடமிருந்து வந்திருப்பதை மட்டுமாவாவது அழித்துவிட்டே அந்நேரங்களில் தந்தையிடம் கொடுப்பாள் சௌமி.
அதேபோல அவசரமாக அலைபேசியை எடுத்து, அதிலிருந்த செய்திகளை அழித்துவிட்டுத் தர முயற்சித்த வேளை, அறைக்குள் நுழைந்த செழியனை சௌமி அங்கு முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மனம் திக்கென்றிருக்க மருண்டுபோய் விழித்தவளின் கரங்களில் இருந்த அவளின் அலைபேசியை சட்டென கைப்பற்றியிருந்தார் செழியன்.
செழியனுக்கு மகளின் முகம் ஏதோ அபஸ்வர உணர்வைத் தந்திருந்தது. அதனால்தான் மகளின் கையிலிருந்ததை சட்டென பிடுங்கியிருந்தார்.
“ப்பா…” சௌமி. கைகள் சில்லிட்டிருந்தது. உதடு, நாக்கு, தொண்டை வறண்டு போன உணர்வு சௌமிக்கு. உடலெங்கும் பயத்தில் ஒரு புது வித அதிர்வைத் தாங்கியிருந்தது.
மழைக்கு நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கினாள் சௌமி.
“இன்னைக்கு எங்க போன?” குரலில் அத்தனை கடினம்.
“…க்…கா…லேஜ்தான்பா” அவளின் திணறலே, அவளின் தவறை எதிரில் நின்ற தகப்பனுக்கு படம் பிடித்துக் காட்ட,
செழியன் சௌமியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த அறையில் “ம்ம்மாஆஅஅஅ…” எனும் கத்தலோடு கன்னத்தைப் பிடித்தபடியே தூரத்தில் சுருண்டு விழுந்திருந்தாள் சௌமி.
முதன் முறையாக தந்தையிடமிருந்து இத்தனை பெரிய அடியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“பொய்யா… பேசுற… கழுதை! தொலைச்சுப்புருவேன்… தொலைச்சு! பாத்துக்க…!” முனீஸ்வரனை மிஞ்சும் தோற்றத்தில் ஆட்காட்டி விரலால் மகளுக்குப் பத்திரம் காட்டி கண்களிரண்டும் கோவைப் பழமாக சிவந்துபோய் நின்று தன்னை மிரட்டும் தந்தையை வெலவெலத்துப் போய் பார்த்தாள் சௌமி.
செழியனின் இந்த அவதாரம் சௌமிக்குப் புதிது.
விசயம் எந்தளவிற்கு சௌமியின் வீட்டினருக்கு தெரிய வந்தது?
***