⛪️லேவியின் நவி அவள்🛕
⛪️லேவியின் நவி அவள்🛕
லேவியின் நவி 5
உனக்கும் எனக்கும் இடையில் பலர் இருக்கிறார்கள்…
நீயும் நானும் சேர வேண்டும் என்றால், அவர்கள் அனைவரும் சம்மதித்து வழி விட வேண்டும்…
வழியை அடைத்திருக்கும் அவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?
நம் இருவரையும் ஒரே வழியில் செல்ல அனுமதிப்பார்களா?
கண்ட கனவின் தாக்கம் இன்னுமும் அவளுள் இருந்தது.
நா உலர்ந்திருக்க அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்தினாள்.
அந்த குளுமையான நீர் அவளுள் சென்று அவளை சற்று சாந்தப்படுத்தியது.
தன் மனதை உணர்ந்தே இருந்தாள் அவள். ஜானை முதன் முதலில் பார்க்கும் பொழுது அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் அவனுடன் பழகப் பழக அது ஏதோ சில நாள் பழக்கமாய் அவளுக்கு படவில்லை.
காலம் காலமாய் அவனுடன் பழகிக் கொண்டிருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் அவளுக்குள்.
அவன் தன் காதலை சொன்னபோது வெறும் வாய் வார்த்தையில் மட்டும் அவன் அதை வெளிப்படுத்தவில்லை. அவன் கண்களில் பொங்கி வழிந்த அந்த காதல் சொல்லியது, அவன் அவளை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்று.
ஆனால் நிதர்சனம்? அவளுக்கு தன் அம்மாவைப் பற்றி தெரியும். அவர் இதற்கு சம்மதிப்பாரா? நிச்சயம் மாட்டார்.
ஏற்கனவே ஒரு நாள் இதைப்பற்றி அவர் பேசியதுண்டு. எதில் கவனமாய் இருக்கிறாளோ இல்லையோ, இந்த காதல் அது இது என்று மட்டும் அவள் போகக்கூடாது என்று சொல்லி இருந்தார்.
அவரின் கஷ்டம் அவருக்கு, கணவன் இல்லாமல் தனியே வளர்த்த பெண். ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் வளர்ப்பு சரியில்லை என்று, இவரை தானே குறை சொல்வார்கள் சுற்றி இருப்பவர்கள்.
இது ஒரு புறம் இருக்க, ஜானின் வீட்டை பற்றி அவன் ஏற்கனவே கூறி இருக்கிறான். அவர்கள் எந்த அளவு பக்தியோடு இருப்பார்கள் எந்த அளவுக்கு அவர்கள் வீட்டில் ஸ்ட்ரீட் என அனைத்தும் அவன் கூறி இருக்கிறான்.
அப்படி இருக்க ஒரு இந்துவான இவளை அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?
இவ்வளவும் அவள் யோசித்துக் கொண்டிருக்க, வேலைக்கு செல்லவென அந்த ரூமில் இருப்பவர்கள் எழுந்து கிளம்பும் சத்தம் வந்தது.
வெளியே எழுந்து சென்றாள். நான்கரை மணி வரையிலும் வழி தெரியாமல் சுற்றி கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு தான் வந்து சேர்ந்திருந்தாள்.
ஒரு மூன்று மணி நேரம் தூக்கம் தான், அதற்குள் கனவு கண்டு விழித்து விட்டாள்.
பாதியில் எழுந்தது தலை பாரமாக இருந்தது. சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று வெளியில் சென்று பார்க்க, எட்டு மணி அடித்திருந்ததால் டீ தீர்ந்து விட்டிருந்தது.
சரி வெளியில் சென்று குடிக்கலாம் என்று உடைமாற்றி, தன் பரிசை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினாள்.
தன் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து சிறுது தூரம் நடத்து சென்றால், அங்கு ஒரு சிறு மெஸ் இருக்கும். அது ஜான் அவளுக்கு அறிமுகப்படுத்தியது. விடுமுறை நேரத்தில் மதிய உணவை இங்கேதான் அவன் உட்கொள்வான்.
எப்பொழுதாவது அவளுக்கு தேவைப்பட்டால் இங்கே வாங்கிக் கொள்ளலாம் என்று காட்டி இருந்தான்.
முதலில் டீ மட்டும் தான் குடிக்கலாம் என்று நினைத்தாள் ஆனால் சிறிதாய் வயிறு பசிக்கவே இட்லியும் சேர்த்து சொன்னாள். இன்று ஹாஸ்டலில் போடும் கல் இட்லி சாப்பிட அவளுக்கு மனமில்லை.
டீயை சீக்கிரமாகவே அவர் எடுத்து வந்து தர, அதை மிடறு மிடறாய் குடித்துக் கொண்டே, தன் கனவை பற்றிய சிந்தனையில் இருந்தாள்.
கனவில் இவளும் ஜானும் மாலையும் கழுத்துமாய் நிற்கின்றார்கள். இவள் பட்டு புடவை சரசரக்க பூரண மணப்பெண் அலங்காரத்தில் இருந்தாள். ஜானோ கோட் சூட் அணிந்து இவள் அருகில் முகம் கொல்லா புன்னகையுடன் நின்றிருந்தான்.
இருவரும் மகிழ்ச்சியாய் பேசி, சிரித்து கொண்டிருந்த நேரத்தில். யாரோ ஒருவர் வந்து இவர்கள் இருவருக்கிடையில் நிற்கிறார்கள். இருவரையும் வெவ்வேறு புறத்தில் தள்ளிவிட்டு சிரிக்கிறார்கள்.
இருவரும் எழுந்து நின்று ஒருவர் கையை மற்றவர் பிடிக்க போராடுகிறார்கள். ஆனால் அந்த நடுவில் நிற்பவரோ அதற்கு விடவில்லை.
இந்த நிலையில் தான் அவள் கண்கள் திறந்தது. அந்த நடுவில் நின்றது யார் என்று அவளுக்கு தெரியவில்லை.
இப்படி அவள் சிந்தனையில் முழ்கிய நேரம் அவள் எதிரே வந்தமர்ந்தான் ஜான்.
இன்று ஏனோ அவனுக்கு செய்து சாப்பிட மனம் வரவில்லை. அவளின் கண்களைப் பார்த்தால் இவனுக்கான காதல் இருப்பது போல் தான் தோன்றியது இவனுக்கு.
ஆனால் அவளாக எதுவும் சொல்லும் வழியை காணும். அவளுக்கு என்ன தான் பிரச்சனை என்ற நினைப்பே அவனை எதுவும் செய்யவிடாமல் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
அவனை காணவும் ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் கனவின் பயம் என இரு வேறு உணர்விலிருந்தாள் பாவை.
“என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்க இன்னும் நைட்டு அலைஞ்ச பயத்திலிருந்து வெளியே வரவில்லையா?” என்றான் கனிவாய்.
அவனிடம் எப்படி சொல்வது. கனவில் உன் கரம் பிடிக்க முடியாததால் தான் இப்படி இருக்கிறேன் என்று.
அதற்குள் அவளின் உணவு வந்து விடவே அதில் கவனமானாள். இவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு சென்றார் அந்த மெஸ்ஸில் இருந்த அக்கா.
அவனையும் சாப்பிட சொன்னாள் இவள். “இல்ல நீ சாப்பிடு”, என அவன் மறுக்க, இவளும் சாப்பிடாமல் அமைதியாய் இருந்தாள்.
“பாக்க தான் பாவமா இருக்க, ஆனா சரியான பிடிவாதம் உனக்கு”, என்றான் அவள் அமைதியாய் இருப்பதற்கும் இப்பொழுது செய்த செயலுக்கும் சேர்த்து,
அவள் தட்டிலிருந்து ஒரு விள்ளை இட்லியை சாம்பாரில் தோய்து இவள் நீட்டவும், அதை மறுக்காமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டவன்,
அவனுக்கென வைக்கப்பட்டிருந்த பிளேட்டில் ஒரு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டு, அருகே இருந்த சாம்பாரை ஊற்றி அவனும் மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஆமா மொபைல்ல சார்ஜ் போற அளவுக்கு என்ன பண்ண” சற்று கோபமாய் கேட்டான்.
அவனின் இந்த உரிமையான கோபம் அவள் மனதிற்கு இனிமையாய் இருந்தது.
அதற்குள் அவன் கேட்ட தோசை வரவும், அதிலிருந்து பாதியை பீய்த்து அவளுக்கு வைத்தான். மேலும் அந்த அக்காவிடம் ஒரு பிளேட் பொங்கல் எடுத்து வரச் சொன்னான்.
“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.”
“பாட்டு கேட்டேன் வேற எதுவும் பண்ணல, நேத்து போனுக்கு சார்ஜ் போட மறந்துட்டேன்.”, என்றாள் சிறிய குரலில்.
“அது கூட மறக்குற அளவுக்கு வேற என்ன தான் நினைப்பு உனக்கு.”, அப்படி அவதிப்பட்டாளே என்று கேட்க,
‘உன்ன பத்தி தான்டா நினைச்சுட்டு இருந்தேன்’ மனதில் மட்டும் நினைத்தவள் வெளியில், “எப்படியோ மறந்துட்டேன்.” என்றாள்.
“நல்ல பதில், இனி ஒரு தடவை இந்த மாதிரி பிரச்சினை வராத பாத்துக்கோ.” என்றான் அக்கறையாய்.
“ம்…சரி”
அவன் கேட்ட பொங்கல் வரவும், அவளுக்கு அதை பாதி வைக்கப் போனான்…
“இல்ல வேணாம், எனக்கு போதும்” என இவள் மறுக்க,
“அந்த ஒரு இட்லியும் அரை தோசையும் என்னத்துக்கு பத்தும். உனக்கு பொங்கல் புடிக்கும் தான் நான் இதை எடுத்துட்டு வர சொன்னேன். சரி வேணாம்னா விடு எனக்கும் வேணாம்”, என எழும்ப போனான்,
“உட்காருங்க”, எனக்கூறி அந்த பொங்கலில் பாதியை, இவளே எடுத்துக் கொண்டாள்.
அவள் யுக்தியே அவளிடம் உபயோகித்து ஜெயித்ததில் மெலிதாய் சிரித்தவன், அமர்ந்து உண்ண துவங்கினான்.
“ஒரு அஞ்சரை மணிக்கு படுத்து இருப்பியா, என்ன இவ்வளவு சீக்கிரத்தில் எழுந்துட்ட?” கரிசனமாய் கேட்டான்.
இவன் இவ்வாறு கேட்கவும் மீண்டும் கனவு நினைவில் வர, “என்னவோ தெரியல முழிப்பு வந்துருச்சு” என்றாள் உண்மையை அவனிடம் மறைத்து.
இப்படி பேசிக் கொண்டே இருவரும் உண்டு முடித்தார்கள். அவனுக்கு கேப் வர இன்னும் அரை மணி நேரம் இருந்தது.
இவளுக்கும் தூக்கம் கலைந்திருக்க ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. எனவே அவனுடன் கேப் நிற்குமிடம் நோக்கி செல்ல நினைத்தாள்.
ஆனால் அவன் என்ன நினைப்பானோ என்று தயங்கியவளை,
அவனின் “நீயும் வரியா”, என்ற கேள்வியில் குதூகலமானாள்.
ஆனால் அதை அவனிடம் காட்டாமல் ‘சரி’ என்ற சிறு தலையசைப்பில் அவனோடு சேர்ந்து நடந்தாள்.
வழக்கம்போல பிரிட்ஜில் ஏறி கிராஸ் பண்ணினார்கள். இவளுக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. எனவே எப்பொழுதுமே பிரிட்ஜில் ஏறி செல்வது தான் வழக்கம்.
வழக்கமாய் கேப் நிறுத்துமிடத்தில் டிரைவர் கேபை நிறுத்தி தான் இருந்தார். ஆனால் இவன் கேப்பில் ஏறி அமரவில்லை.
அங்கே இருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்தான். இவளும் சற்று தள்ளி அமர்ந்தாள்.
இவ்ளோ அவனின் புறம் இருக்கும் ரோட்டில் வரும் பஸ்ஸை பார்ப்பது போல் அடிக்கடி திரும்பி இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓர கண்ணால் இவன் அதை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.
‘என்னவோ யோசிக்கிறா என்னதான் இவளுக்கு பிரச்சனை? சொல்லணும்னா இவ்வளவு நேரம் அவளே சொல்லி இருப்பா. இப்ப நம்ம கேட்டாலும் சொல்ல மாட்டா. இவள வச்சுட்டு ரொம்ப கஷ்டம்.’ என அவளின் பார்வையை வைத்து மனதோடு அவளை திட்டிக் கொண்டிருந்தான்.
நேரம் சென்று கொண்டே இருந்தது, அவளாக எதுவும் சொல்லும் வழியை காணும்…
சரி நாமாவது கேட்டுப் பார்ப்போம் என்று கேட்டான், “ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?”
அவன் இவ்வாறு கேட்கவும், எப்பொழுதும் தான் எதுவும் சொல்லாமலேயே தன்னை புரிந்து கொள்கிறானே என ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும். இன்னொரு புறம் தன் மனதில் இருப்பதை இதே போல் புரிந்து கொண்டானோ என்ற பயமும் வந்தது.
தான் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் தன்னையும் பார்த்துக் கொண்டிருப்பவளை என்ன சொல்வது என்று இவனுக்கு புரியவில்லை.
“சரியான அழுத்தக்காரி நீ”, என்றான் அவளை அழுத்தமாக பார்த்து.
“நீ எதுவும் சொல்ல போறதில்ல எனக்கு தெரிஞ்சிடுச்சு. சரி கேப்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நீ பத்திரமா போ” என அவன் கிளம்ப எத்தனிக்கையில்,
“ஆமா உங்களுக்கு எப்ப நைட் ஷிப் ஸ்டார்ட் ஆகுது”, அவளின் கேள்வி அவள் அவனை எவ்வளவு மிஸ் செய்கிறாள் என்பதை அவனுக்கு புரிய வைத்தது.
‘இதெல்லாம் நல்லா கேளு ஆனா வாய தொறந்து எதுவும் பேசாத’, அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது. வெளியில் “மண்டேல இருந்து நைட் ஷிப்ட்”.
நாளையும் நாளை மறுநாளும் சனி, ஞாயிறு எனவே விடுமுறை.
திங்களன்று அவனும் வந்து விடுவான் என்று நினைப்பே அவளுக்கு குதூகலத்தை தந்தது. அந்த மகிழ்ச்சி அவளின் முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.
அதே மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ள, சிரிப்புடனே அவளிடம் விடை பெற்று சென்றான்.
இவள் அம்மா சொன்னது போல். நைட் ஷிப்ட் என்பதால் இந்த வார இறுதியில் ஊருக்கு செல்லவில்லை.
என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை படித்து ஆட்டிக் கொண்டிருந்தது. சனிக்கிழமை மதியம் போல் எழுந்தவள் அங்கிருந்த சாப்பாட்டை ஏதோ கொரித்தாள்.
இப்பொழுதெல்லாம் ஜானின் நினைவு அதிகமாக வந்து இவளை பாடாய்படுத்தியது. இவளுக்கு அவனை பிடித்திருந்தது.
ஆனால் அவனுடன் ஒரு வாழ்க்கை என யோசித்துப் பார்க்கும்போது, தங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்குள் இதனால் பிரச்சனை வராமல் இருக்குமா? முதலில் தங்கள் இருவருக்கு இதில் பிரச்சனை வராமல் இருக்குமா? என்பன போன்ற பல கேள்விகள் பூதாகரமாய் அவள் முன் நின்று இதைப்பற்றி யோசிக்கவே பயப்பட வைத்தது.
இப்படியே இரு தினங்கள் கழிந்த நிலையில், திங்கட்கிழமையும் வந்தது.
அன்று தான் அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…
லேவியின் நவி தொடரும்….