மனதோடு மனதாக – 14

மனதோடு மனதாக – 14

14          

பூரணி எடுத்து வைத்திருந்த தனது பொருட்களைப் பார்வையிட்டு, விட்டுப் போன பொருட்களை எடுத்து வைத்தவள், “சரிம்மா நீயும் போய் தூங்கு.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..” என்றவள், அவரது கன்னத்தில் முத்தமிட்டு,

“மை செல்ல அம்மா..” என்று கொஞ்சிவிட்டு அறைக்குச் செல்ல, ஆர்யனோ அப்பொழுதும் உறங்காமல் படம் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் விழித்திருப்பதைப் பார்த்தவள், “என்ன மாமா இன்னும் தூங்கலையா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே, தனது உடையை மாற்றிக் கொண்டு வந்தவள், அவனது அருகில் இருந்த இடத்தில் இயல்பாக படுத்துக் கொள்ள, அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். 

“என்ன? வண்டி ஓட்டினது உங்களுக்கு டயர்ட்டா இல்லையா?” அவளது கேள்வியில்,

“எனக்கு இடம் மாறினா தூக்கம் வராது வெண்ணி.. சுத்தமா தூக்கம் வரல.. நானும் ரூமை நிறைய தடவ சுத்தி வந்து உன் பொம்மையை எல்லாம் பார்த்துட்டேன்.. பத்து டெட்டி வச்சிருக்கன்னு எண்ணக் கூட செஞ்சிட்டேன்.. அப்படியும் தூக்கம் வரல.. போர் அடிச்சது.. அது தான் படம் பார்த்துட்டு இருக்கேன்.. அப்படியே எப்போவாவது கண்ணு சொக்கிச்சின்னா அதை பிடிச்சுக்கிட்டு தூங்கலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்கேன்.. எப்படி என் ப்ளான்?” என்றவன், படத்தில் கவனத்தைப் பதிக்க, அவனது அருகில் நெருங்கி, அவனது ஒரு காதில் இருந்த ஹெட்போன்சை எடுத்து தனது காதில் மாட்டிக் கொண்டு,

“என்ன படம்? நல்லா இருக்கா? இப்போ தான் ஆரம்பிச்சதா? இல்ல முடியப் போகுதா?” வரிசையாக கேள்விகளை அடுக்க,  

“இல்ல.. இப்போ தான் கொஞ்ச நேரம் ஆகுது.. நல்லா இருக்கு.. பார்க்கறியா?” என்றவன், அவ்வளவு அருகில் இருந்த அவளது முகத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் மொபைலில் பார்வையை பதிக்க, அவளோ படத்தைப் பார்க்கும் ஆவலில் அவனது தோளின் அருகில் தலையை நகர்த்தி வைத்துக் கொண்டாள்.

அதுவும் மொபைலைப் பார்ப்பதற்கு வசதியாக இல்லாமல் இடிக்கவும், “கைய அந்தப் பக்கம் வைங்க மாமா.. எனக்கு இடிக்குது..” என்று சொல்ல, அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“எங்க கையைக் கழட்டி அந்த சைட் வைக்கவா?” கேலியாகக் கேட்டவன், அவளே எதிர்ப்பார்க்காத நேரம் அவளது தலையின் அடியில் கையைக் கொடுத்து, தனது தோளில் போட்டுக் கொண்டு,

“இப்போ பாரு.. கை இடிக்காது..” என்றவன், அவளது முகத்தைப் பார்த்து,

“இப்போ தெரியுதா?” என்று கேட்க, அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட, வெண்ணிலா மண்டையை உருட்டினாள்..

படத்தின் முன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிட்டு, “இப்போ பாரு” என்றபடி மீதியைத் தொடர, அவனை அவ்வளவு அருகில் பார்த்தவளுக்கு இதயம் படபடக்கத் துவங்கியது. அவனிடம் இருந்து நகரவும் முடியாமல், அவனது கை அவளை அணைத்தது போல சுற்றி வந்து மொபைலைப் பிடித்திருக்க, பெண்ணவளோ ஆணவனின் அருகாமையில் நாணத்தில் சிவந்தாள்..    

“இவன் தான் வில்லன்.. ஆனா.. இன்னும் கண்டுப்பிடிக்கல..” அவனது குரலில், மெல்ல அவளது பார்வை மொபைலில் பதிய, படம் பார்ப்பதுவே புது அனுபவமாய்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது தோளிலேயே உறங்கியும் இருந்தாள்.. வெகுநேரமாக எந்த அசைவுமின்றி அமைதியாக இருக்கவும், அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தவனுக்கு மனம் இனிமையைத் தத்தெடுப்பதாய்..

அவளது கை அவனது மார்பின் மீது இருக்க, மெல்ல அந்தக் கையின் மேல தனது கையை வைத்து பிடித்துக் கொண்டு, தனது தோளிலேயே உறங்கி இருந்தவளின் நெற்றியில் மிக மிக மென்மையாக தனது முதல் முத்தத்தைப் பதித்தவன், படத்தைப் பார்க்கத் துவங்க, சில நொடிகளிலேயே அவனது கண்களும் உறக்கத்தைத் தழுவியது..  

காலையில் கண் விழித்தவளின் அருகே ஆர்யனின் முகம்.. அவனது முகத்தை அவ்வளவு அருகில் பார்த்தவளுக்கு, இதழில் புன்னகை தானாக ஒட்டிக் கொண்டது.. காற்றில் முடி அசைய, சாந்தமே வடிவாக உறங்கிக் கொண்டிருந்தவனை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அப்பொழுது தான் அவனை அணைத்தது போல தனது கை அவன் மார்பின் மீது இருப்பதை உணர்ந்தவள், ‘அச்சோ. லூசு வெண்ணிலா.. மாமா உன்னை என்ன நினைச்சிருப்பார்?’ என்று நினைத்து, முகம் சிவக்க, நாணத்துடன் எழுந்துக் கொள்ள முயல, தனது இடையின் மேல் பாரத்தை உணர்ந்து, குனிந்துப் பார்த்தாள்.

அவளை அணைத்தது போல இடையின் மேல் அவனது கரம் இருப்பதும், இருவரும் ஒரே போர்வையில் உறங்கி இருப்பதையும் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் ஒருவித உணர்வு.. நெஞ்சிற்குள் பட்டாம்பூச்சி பறக்க, அவனது கன்னத்தில் விரலால் வருடச் சென்றவள், மென்மையாக அவனது தலை முடியை வருடி விட்டு எழ முயன்றாள்.   

அவனது கையை விலக்கி எழுந்து அமர்ந்தவள், இருவருக்கும் இடையில் கிடந்த ஹெட்போன்சையும், மொபைல் போனையும், எடுத்து எம்பி பக்கக் டேபிளில் வைத்துவிட்டு, அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு, அவனது கன்னத்தைக் கிள்ளும் ஆவல் எழ, அதனை அடக்கி தனது தலையில் தட்டிக் கொண்டவள், ‘ஹையோ..’ என்றபடி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்..   

குளித்துவிட்டு, ஓசை எழுப்பாமல் கதவை மெல்ல சாத்திவிட்டு வந்தவளைப் பார்த்த பூரணிக்கு சிரிப்பு வந்தது.. அவளைப் பார்த்ததும், அவளது கையில் காபியைக் கொடுக்க, “ஹப்பா ரொம்ப பசிக்குதும்மா.. காலையில என்ன டிபன்?” என்று கேட்டுக் கொண்டே காபியை மூக்கின் அருகில் எடுத்துச் சென்று வாசம் பிடித்தவள்,

“சூப்பர்.” என்று ரசித்துக் குடிக்க, அவளது தலையை வருடியவர்,

“நான் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்கு பெரியம்மா வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க இல்ல.. காலையில டிபன் அங்க தான்.. நான் போய் பெரியம்மாவுக்கு ஹெல்ப் செய்யறேன்.. நீ மாப்பிள்ளை எழுந்தா காபி கலந்து கொடுத்துட்டு, அவர் ரெடி ஆனதும் திலீப்க்கு கால் பண்ணு.. உங்களை வந்து கூட்டிட்டு வருவாங்க என்ன?” எனவும்,

“சரிம்மா.. நான் மாமாவ பார்த்துக்கறேன்.. நீங்க கவலைப்படாம போய் வாங்க.. ஆனா.. இடம் மாறினதுனால தூக்கம் வரலைன்னு சொன்னாரு. அவரு எப்போ தூங்கினாருன்னே தெரியல.. கொஞ்சம் லேட்டா தான் எழுந்துப்பார்ன்னு நினைக்கிறேன்.” என்றவளைப் பார்த்தவர்,

“சரி.. அவர் எழுந்ததும் கூட்டிட்டு வா..” என்று அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுச் செல்ல, ஆர்யனின் செல்போன் இசைக்கத் துவங்கியது..

அவனது உறக்கம் கெடும் என்று அஞ்சியவள், வேகமாக சென்று அவனது செல்லை எடுத்து, “ஹலோ எனவும்..”

“ஹலோ.. ஆர்யா.. ஆர்யா இல்லையா?” ஒரு பெண்ணின் குரல் கேட்க,

“நான் அவரோட வைஃப் தான் பேசறேன்.. மிஸ்ஸஸ் வெண்ணிலா ஆர்யன்.. நீங்க யாரு பேசறது?” அவள் பதில் சொல்லவும்,

“ஹாய்.. வெண்ணிலா.. நான் ஸ்ருதி பேசறேன்.. எப்படி இருக்கீங்க? சாரிம்மா இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்றதுக்கு.. ஆரி இல்லையா? க்ளையன்ட் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்திருக்கு.. சின்ன ப்ராப்ளம்.. நாங்க ரிப்ளை செய்யறதுக்குள்ள அவன் பார்த்துட்டா நல்லா இருக்கும்.. அது தான்..” ஸ்ருதி சொல்லிக் கொண்டிருக்க, போன் சத்தத்தில் ஏற்கனவே கண் விழித்திருந்தவன், அவள் தனது பெயரை அவளது பெயருடன் இணைத்து சொல்வதைக் கேட்டு, அதை ரசித்துக் கொண்டு, கண் மூடிக் கிடந்தான்..

“ஓ.. இருங்க.. நான் அவரை எழுப்பறேன்..” ஸ்ருதியிடம் சொன்னவள்,   அவனது தோளில் மெல்ல கை வைத்து எழுப்ப, கண் திறந்துப் பார்த்தவன், புன்னகையுடன்

“குட் மார்னிங் வெண்ணி..” எனவும், பதிலுக்கு ‘குட் மார்னிங்..” என்றவள்,  

“மாமா.. போன்ல ஸ்ருதி இருக்காங்க.. ஏதோ முக்கியமான வேலையாம்..” எனவும்,

“அவ எதுக்கு இப்போ ஆபீஸ்ல இல்லாம போன்ல இருக்கா? அவளுக்கு அந்த இடம் பத்தாதே..” என்று கேட்டுக் கொண்டே எழுந்து அமர, ‘ஆர்யா’ ஸ்ருதி பல்லைக் கடிக்க, வெண்ணிலா கலுக்கென்று சிரித்தாள்..

“என்ன கடுப்பாகிட்டாளா? நல்லா ஆகட்டும்.. என் தூக்கத்தை கெடுக்கறா இல்ல.” என்று கேட்டுக் கொண்டே அவளது கையில் இருந்து போனை வாங்கிக் கொண்டு, அவனது கேள்விக்கு பதிலாக தலையசைத்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில் இதழ் ஒற்ற, வெண்ணிலா விழிகள் விரியப் பார்த்தாள்.

அவளது கன்னத்தில் தட்டியவன், அவளைப் பார்த்து கண் சிமிட்டி, “ஹலோ.. சொல்லு ஸ்ருதி.. என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே போர்வையை மடித்து வைத்து, தனது லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து,

“சரி.. ஒரு அஞ்சு நிமிஷம் பிரெஷ் ஆகிட்டு வரேன்..” என்றவன், அவசரமாக பல் துலக்கிவிட்டு வந்து லேப்டாப்புடன் சோபாவில் அமர, வெண்ணிலா அவனுக்கு காபியைக் கலந்துக் கொண்டு வந்தாள்.

“தேங்க்ஸ் பட்டு.. திஸ் இஸ் ஸ்பெஷல் மை டார்லிங்.. நீ எனக்கு போட்டுத் தர ஃபர்ஸ்ட் காபி..” என்றவன், காபியை உறிஞ்சி,

“வாவ்.. சூப்பர்டா பட்டு.. செமையா இருக்கு.. தினமும் எனக்கு இப்படி காபி கிடைக்குமா? அதுவும் நாம சேர்ந்து குடிக்கலாம். அப்போ தான் அந்த மொமென்ட் இன்னும் சிறப்பா இருக்கும்..” எனவும்,

“நிஜமாவா மாமா.. உங்களுக்கு பிடிச்சிருக்கா?” அவள் மகிழ்ச்சியுடன் கேட்க,

“நிஜமா தான் சொல்றேன்.. செமையா இருக்கு..” என்றவன், அவளை இழுத்து தனது அருகில் அமர்த்தி, மீண்டும் அவளது நெற்றியில் இதழ் பதித்து,

“கொஞ்சம் என் பக்கத்துலையே உட்காரு..” எனவும், அவனது அருகில் அமர்ந்தவளின் கையை எடுத்துத் தனது தோளின் மீது வைத்துக் கொண்டவன், தனது செல்லை உயர்த்தி, கப்பை உயர்த்திப் பிடித்து, சூப்பர் என்பது போல சைகை செய்து படம் பிடித்து,

‘மை மார்னிங் மேட்..’ என்று தனது ஸ்டேட்டசை வைக்க, அதைப் பார்த்தவளுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி..  

“மாமா.. எனக்கு அதை அனுப்புங்க..” எனவும், தனது செல்லை அவளிடம் கொடுத்தவன்,

“நான் சீக்கிரம் வேலையை முடிக்கறேன்.. மாமா வேற கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னாரு..” என்றபடி வேலையில் மூழ்க, அந்த படத்தை தனது செல்லில் மாற்றிக் கொண்டு, அதை பதிவிட்டவள், தங்களது திருமணப் புகைப்படத்தை முதல்முறையாக தனது செல்லின் வால் பேப்பராக, ப்ரோபைல் படமாக வைத்துவிட்டு, தனது நட்புகளுக்கு ‘காட் மேரீட்..’ என்று பகிர்ந்து, ஒரு இதயத்தையும் அனுப்பிவிட்டு, அவன் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்..

“டன் மை வெண்ணி..” என்று சோம்பல் முறித்து எழுந்துக் கொண்டவன், லேப்டாப்பை எடுத்து பையில் வைக்க, வெண்ணிலாவின் செல்போன் அலறத் துவங்கியது..

“ஹையோ இவளுங்க வேற கூப்பிடறாங்களே.. இவங்க பண்ற கேலி வேற போனைத் தாண்டி கேட்குமே..” என்று நாக்கைக் கடித்தவளைப் பார்த்தவன்,

“என்ன ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டயா?” என்று கேட்க, அவனது முகத்தைப் பார்க்காமல், ‘ஹ்ம்ம்..’ என்று புன்னகையுடன் தலையசைத்தாள்.         

அவனது கண்களைப் பார்க்காமல் அவள் சொல்ல, அவளது முகத்தை நிமிர்த்தி, “எங்க மாமாவை திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு மட்டும் சொல்லு போதும்.. வேற எந்த இதுவும் வேண்டாம்.. நான் சொன்னது புரியுதுல்ல?” என்று கேட்க, அவள் தலையசைக்கவும், மீண்டும் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றி,   

“நேத்து நைட்டே நீ தூங்கின அப்போ ஒண்ணு கொடுத்தேன்.. அப்போ நீ தூங்கிட்டதுனால நான் கொடுத்தது உனக்கு தெரியாது இல்ல.. உனக்குத் தெரியாம இனிமே எதுவுமே செய்யக் கூடாதுன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன் என் தேவியாரே.. காலையில முழிச்சதும் என்னடா நீ எடுத்த சபதுத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லன்னு என் மனசு சொல்லிச்சு.. அதனால தான் உனக்கு தெரியற மாதிரி இப்போ கொடுக்கறேன் மிஸ்ஸஸ் வெண்ணிலா ஆர்யன்..” என்றவன், அவள் திகைப்பாகப் பார்க்கும் பொழுதே, ஒரு நமட்டுச் சிரிப்புடன் குளிக்கச் சென்றான்..  

அவன் தயாராகி வந்ததும் முகம் சிவக்க அமர்ந்திருந்த வெண்ணிலாவைப் பார்த்தவன், விசில் அடித்து, “போகலாமா?” என்று கேட்க, அவள் தலையசைக்கவும்,

“ரொம்ப ஓட்டிட்டாங்களோ?” சிரித்துக் கொண்டிய கேட்க, அவள் ஆம் என்று தலையசைக்கவும்,

“செய்யட்டும் செய்யட்டும்.. நல்லா செய்யட்டும்.. ஹயகோ அந்தக் காட்சியைக் காண நான் இல்லையே.. சரி.. நாளைக்கு காலேஜ்க்கு விட்டுட்டு ஓரமா நின்னு ரசிச்சிட்டு வரேன்.” அவனும் தனது கேலியை தொடர,

“மாமா.. உங்களை..” என்று பல்லைக்கடிக்க, அவளது முகத்தைப் பார்த்தவன் சிரிக்கத் துவங்கினான்.. அதில் அவளும் இணைந்து,

“ஓவரா ஓட்டறாங்க மாமா.. அதுவும் அவங்களும் உங்களை மாம்ஸ்ன்னு தான் கூப்பிடுவாங்களாம்.. உங்களை அண்ணான்னு எல்லாம் கூப்பிட முடியாதுன்னு சொல்றாளுங்க.. நீங்க பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்களாம்.. உங்களை சைட் அடிக்கிராளுங்க..” வெண்ணிலா முகத்தைச் சுருக்கிக் கொண்டு சொல்லவும்,

“அவங்க சொல்லலைன்னா என்ன நான் வழக்கம் போல சிஸ்டர்ன்னு சொல்லிடறேன்..” ஆர்யனின் பதிலில்,

“அவ்வளவு தான் அவளுங்க.. ஹார்ட் வெடிச்சிடும்..” என்ற வெண்ணிலாவும் சிரிக்க, இருவரின் சிரிப்புச் சத்தமும் அங்கு அவர்களை அழைக்க வந்த பார்த்திபனின் காதில் விழ, அவர்களது திருமணத்தில் இருந்த சிறு உறுத்தலும் பறந்து போனது..

 

அந்த இரண்டு நாட்களும் விருந்து அமர்க்களப்பட, மறுநாள் சேகரும், ப்ரியாவும் அவர்களை அழைக்க வந்திருந்தனர்.. வெண்ணிலாவின் பெட்டிகளை ஆர்யன் வண்டியில் ஏற்றிவிட்டு, “வெண்ணி.. முக்கியமா ஐடி கார்ட்.. புக்ஸ் நோட்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டயா? மத்தது எல்லாம் கூட நாம அட்ஜஸ்ட் செய்துக்கலாம்..” என்று உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“ஆல் டன் மாமா.. எப்போ வந்து காலையில என்னை பிக் பண்ணிக்கணும்ன்னு மட்டும் அண்ணாக்கு சொல்லிடுங்க..” அவள் நினைவுப்படுத்தவும், திலீபனின் பக்கம் திரும்பியவன்,

“நான் உனக்கு முந்தின நாள் நைட்டே சொல்லிடறேன் திலீப்.. அன்னிக்கு மட்டும் அவளைக் கூட்டிட்டு போகணும்.. எனக்கு காலையில தான் ஷிஃப்ட்.. ஈவெனிங் ஃப்ரீ ஆகிடுவேன்… சாயந்திரம் நான் வந்திருவேன்..” எனவும்,

“கண்டிப்பா மாமா..” திலீபன் சொல்ல, வெண்ணிலாவின் வாழ்க்கை சிறப்பாக அமைந்ததில் அனைவருமே மனம் நிறைந்தனர்.

வீட்டிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு வந்த சேகரும் ப்ரியாவும், “சரி.. இனிமே உங்க ராஜ்ஜியம் தான்.. நாங்க கிளம்பறோம்டா ஆரி.. ரெண்டு பேரும் வீட்டுல திங்க்சை அடுக்கி வச்சிடுங்க.. அப்பறம் இந்த பொடி எல்லாம் அம்மா கொஞ்சம் கொடுத்து விட்டாங்க.. எதுக்கும் வச்சிக்கோங்க.. இது தோசைக்கு அரைச்ச பொடி.. உனக்குத் தெரியும்ல இதை எப்படி யூஸ் பண்ணனும்ன்னு..” என்று ப்ரியா சில பெயரிடப்பட்டிருந்த டப்பாக்களைத் தர,  

“சூப்பர் ப்ரியா.. இது தான் எங்க மம்மி..” என்று அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டவன்,

“நாளைக்கு ஒரு நாள் அப்பறம் வீக்எண்ட்ல தோசை மாவை அறைச்சுக்கலாம்..” என்று அடுத்து வரும் வேலை நாட்களுக்குத் திட்டமிட்டுக் கொண்டவனைப் பார்த்த சேகர்,

“ஆரி.. அவளைப் பார்த்துக்கோ.. அவளுக்கு சமைக்கத் தெரியாதுல.. நீ ஆபிஸ் போறன்னா ஏதாவது செய்து கொடுத்துட்டு போடா.. பாவம் அவ.. தனியா அப்பறம் எல்லாம் செஞ்சிட்டு கிளம்பறது கஷ்டம்.. அவளுக்கு என்ன என்ன செய்யணும்ன்னு செக்லிஸ்ட் போட்டு வச்சிடு.. முக்கியமா கேஸ் ஆஃப் பண்ணி இருக்கான்னு பார்க்கணும்.. அவ கொஞ்சம் பழகற வரை நீ சொல்லி செய்ய வை..” என்று சேகர் சொல்லவும்,

‘”நான் பார்த்துக்கறேன் மாமா.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றவன், அவர்களை வழியனுப்பி வைத்தான்.

அவர்கள் கிளம்பியதும், சோபாவில் அமர்ந்தவன், “வெண்ணி.. தூங்கிட்டு அடுக்கலாமா? இல்ல அடுக்கிட்டு தூங்கலாமா?” என்ற அதி முக்கியமான கேள்வியைக் கேட்க,

“மாமா செம தூக்கம் வருது மாமா.. பேசாம தூங்கிட்டு அப்பறம் அடுக்களாமா?” வெண்ணிலா கேட்கவும்,

“கண்டிப்பா.. என் மைன்ட் வாய்சை காட்ச் பண்ணிட்ட. திணறத் திணற என்னோட மாமியாருங்க என்னை கவனிச்சிட்டாங்க.. உண்ட களைப்பு.. தூங்கப் போகலாம்..” என்றவன், அறையில் திரைச் சீலைகளை இழுத்து விட்டு, ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு,

“நீ ப்ரீயா மாத்திக்கிட்டு படு..” என்றவன், தனது அலுவலக உடைகளை எடுத்து, அடுத்த அறையில் வைத்துவிட்டு வந்து, பொத்தென்று பெட்டில் விழ, ஏசி குளிரில் போர்வையில் முடங்கி இருந்தவள், அந்த இரண்டு நாட்களாக பழகி இருந்த வழமையில், மெல்ல நகர்ந்து அவனது தோளில் படுக்க, புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்ற, சிறிது நேரத்தில் கண்ணுறங்கினர்..