இரவு முழுவதும் நன்கு யோசித்து பார்த்தவளுக்கு பாண்டியனின் வருகை தனக்கும் மகளுக்கும் நல்லதில்லை என புரிய, அவனிடமிருந்து தங்களை காக்க என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்.
பாண்டியன் தங்களை கண்டு பிடித்து விட்டதை நினைத்து பயந்து அப்படியே இருந்தால், அவனின் வருகை வராதது போல் ஆகிட போகிறதா என்ன இல்லையே.
தான் தேங்கி நின்றால், அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகளை தடுக்க இயலாது போயிவிடும் என்றே தன்னை கடினப் பட்டு மீட்டெடுத்து கொண்டாள்.
எப்படி… எப்படி என மண்டையில் இருந்த ஆயிரத்து இருநூற்று கிராம் மூளையை போட்டு குடைந்தாள்.
பதில் கிடைக்கும் வரை சும்மா இல்லை பெண்.
அவ்வப்போது கௌதமின் நினைவு வந்தாலும் அதனை ஒதுக்கி வைத்தாள்.
இப்போது பாண்டியனை தான் முதலில் நம் வாழ்விலிருந்து அகற்ற வேண்டும். அதன் பின்னர் அந்த கௌதமை பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டாள்.
யோசனையின்யூடே மகளுக்கு தேவையானதையும் செய்து கொடுத்தாள்.
பாண்டியனை பார்த்ததில் குழந்தை வேறு சிறிது பயந்திருக்க, மகளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
பின், கடையில் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்தவளுக்கு, இனியாவிடமிருந்து அழைப்பு வந்தது.
அதனை பார்த்தவள், அமைதியாய் விட்டுவிட்டாள்.
அழைப்பை எடுத்தால், எங்கே பாண்டியனின் வருகையை பற்றி கூறிவிடுவேனோ என பயந்து அவளிடம் பேசுவதை தவிர்த்தாள்.
அவளிடம் சொல்லிவிட்டால், கண்டிப்பாக அந்த விடயம் கௌதம் செவிக்குள் சென்றடையும்.
அப்போது கௌதம் சும்மா இருக்க மாட்டான். தன்னை காக்கிறேன் என்ற பேர்வழி ஏதும் கிறுக்கு தனம் செய்ய வாய்ப்பிருக்கு.
பாண்டியனை பற்றி அறிந்த வகையில் கௌதமை அவனின் முன் நிறுத்த பெண்ணிற்கு விருப்பமில்லை.
கௌதமிற்கோவெற்றிக்கோ இவ்விடயம் தெரிந்தால், அதனை அடுத்த நிமிடமே இல்லாது செய்து விடுவர் தான். இருப்பினும் தனது பிரச்சனைகளை மற்றவரிடத்து எடுத்து செல்ல விருப்பம் இல்லை.
இதில் என்ன வந்தாலும் தானே பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்தவளுக்கு, அப்போது தான் அந்த யோசனையே மூளைக்குள் உதித்தது.
அவளுடன் வேலை பார்க்கும் ஒருவரின் அத்தை பக்கத்தில் ***** இன்ஸ்பெக்டராக இருக்க, அவரிடம் உதவி கேட்கலாம் என நினைத்தாள்.
அதற்கு ஏற்பவே தொடர்ந்து பாண்டியன் தொல்லைகள் கொடுத்த படி இருக்க, அவரிடம் கம்ப்ளையிண்ட் கொடுத்து விட்டாள்.
அவருமே தெரிந்த பெண் என்பதால் உடனே அவனை அதட்டி வைக்கிறேன் பேர்வழி கிளம்பி விட, அமைதியாய் இருந்த சிங்கத்தை அவர் உசுபேற்றியிருந்தது.
தான் ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க, இங்கே தன்னையே வெளியே நிறுத்தி கேள்வியாய் கேட்டு கொடைந்து, பின் ஒரு எச்சரிக்கையோடு தன்னை விட்டிருக்க, அந்த சினமெல்லாம் ரோஷினியின் மீது திரும்பியது.
மாலை அவள் வீடு வந்ததுமே, அதிரடியாய் அவள் வீட்டிற்குள் அவன் ஆட்களோடு நுழைந்திருந்தான்.
பாண்டியனின் இந்த திடீர் வருகையில், பெண் விக்கித்து நிற்க, அவனின் அடியாட்களோடு உள்ளே வந்தவன் சாவகாசமாய் அமர்ந்தான்.
அந்த இன்ஸ்பெக்டர் வேறு இனி அவன் உன்னை தொந்தரவு செய்ய மாட்டான் என்று அவர் சொல்லியிருந்த போது சற்று நிம்மதியுற்றவளை கலைக்கவெனவே வந்து விட்டான் பாண்டியன்.
“உன்னை யாரு உள்ள விட்டது. வெளிய போ முதல…” பயத்தில் எச்சில் கூட்டியவாறே சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு சொல்ல,
“என் பொஞ்சாதி ஆகாத வேலையெல்லாம் பார்க்குறாங்க. நான் அவளையும் மத்தவங்களை நடத்துற மாதிரி நடத்தி இருக்கனுமோ? நம்ம பொஞ்சாதி தானேன்னுவுட்டது தப்போ போச்சி” ஆக்ரோஷத்தை அடக்கி வைத்த குரலில் நக்கலாய் பேச,
“முதல்ல இப்படி பொஞ்சாதி சொல்லுறதை நிறுத்து. நான் யாருக்கும் பொண்டாட்டி கிடையாது”
“வாய மூடு டி ஓடுகாலி. அப்பவே வீட்டை விட்டு ஒடியாரும்போதே உன் ரெண்டு காலையும் ஒடச்சி போட்டிருந்தா, இப்போ இந்த மாதிரி பேசிருப்பியா…” என்றவன் கோபத்தில் பக்கத்திலிருந்த பொருட்களை எல்லாம் சேதம் செய்ய தொடங்கினான்.
காட்டுமிராண்டித்தனமான கோபம் அவனுள் கனன்றது. அதை மேலும் மேலும் நெய் ஊற்றி அவனின் கோபத்தை குபுகுபுவென எரிய வைத்தாள்.
“யாரை பார்த்து ஓடுகாலின்னு சொல்ற? யாரை ஏமாத்திட்டு ஓடிவந்தேன். அப்படியே வந்தாலும் அதை நீ யாரு?” ஏதோ ஒரு தைரியத்தில் அவனை எதிர்த்து நிற்க ஆரம்பித்தாள்.
எத்தனை ஆண்டுகளுக்கு தான் இவனுக்கு பயந்தே ஓடிக்கொண்டிருக்க,ஏதோ ஒரு நாள் நின்று தானே ஆக வேண்டும். அதை இன்றே செய்திட்டு போகிறேன் என்று தான் அவள் அவனை எதிர்க்க ஆரம்பித்தது.
“இனி ஒரு வார்த்தை பேசின, உன்ன என்ன செய்வேனே தெரியாது அம்மணி. என் கோபத்தை சீண்டி பார்க்காத தாங்கமாட்டியாக்கும்…”
அவனை பார்த்து ஏளனத்துடன் சிரிக்க, இதே இதே சிரிப்பு தான் இவளின் அக்காவும் இறப்பதற்கு சிறிது நாழிகைக்கு முன் தன்னை பார்த்து சிரித்தது.
அதே சிரிப்பை மூன்று வருடங்கள் கடந்து காண்கையில், பித்துபிடிதாற்போல் ஆனான்.
கண்மண் தெரியாத கோபம், அவளின் கழுத்தை பற்ற வைத்தது.
“சிரிக்காத… இப்படி சிரிக்காத…”அவன் சொல்ல சொல்ல அந்த வலியிலும் புன்னகைத்தாள் பெண்.
“அப்படி சிரிக்காதன்னுசொல்றேன்ல டி…”வெறி கொண்ட மிருகமாய் அவளின் குரல்வளையை பிடித்து அழுத்தினான்.
“அண்ணே…” அவனின் விசுவாசிகள் ஓடிவர, அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை.
“என்ன கொன்னு கூட போடு. ஆனா உனக்கு எந்த காலத்துலையும் நான் பொண்டாட்டி ஆக மாட்டேன்”இருமிய நிலையிலே கஷ்டப்பட்டு சொன்னாள்.
“ஏய்….” என அவளை தள்ளிவிட, பிடிநிலையில்லாது கீழே விழுந்தாள்.
அப்போது திடீரென தூங்கி கொண்டிருந்த குழந்தை சத்தம் தாங்காது முழிப்பு தட்டி விட, வீரிட்டு அழ ஆரம்பித்தாள் சஷ்வித்தா.
இப்போது ரோஷினியை கண்டு ஏளனமாய் சிரிப்பது அவனின் முறையானது.
“டேய்… போய் அந்த கொழந்தைய தூக்கிட்டு வாங்கலே” உத்தர விட, அவனின் விசுவாசி ஒருவன் குழந்தையை தூக்கி கொண்டு வந்தான்.
“குழந்தையை கொடுங்க டா…” எழுந்து குழந்தையை வாங்க பார்க்க, அவர்களை மறைத்தார்போல் நின்றவன், ” எங்க இப்போ அந்த சிரிப்பை சிரி பார்ப்போம்” என்றான் தெனாவெட்டாக.
“குழந்தைய கொடுங்க…” குழந்தையை வாங்க முயற்சித்தாள்.
“உன்னை சிரின்னுசொன்னோன். சிரி டி” என்றவன் கோபத்தில் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
அந்த அடியை வாங்கியவளுக்கு வலி எடுத்தாலும், குழந்தை அவன் பிடியில் இருப்பதில் பயந்தாள்.
“ப்ளிஸ் குழந்தையை கொடுத்திடு பாண்டி…”இருந்த தைரியம் எல்லாம் வடிந்து போய் மகளுக்காய் மன்றாடினாள்.
“அப்போ சிரி…” சொல்லுகையிலே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தான் பாண்டி.
“எங்களை விட்டுடு பாண்டி. நாங்க எங்கேயாவது போய் பொழச்சிக்கிறோம். அவளை ஒன்னும் செய்யாதீங்க” அவன் காலிலே விழுந்து விட்டாள்.
பெண்ணாய் இருந்த போது இருந்த தைரியம். தாயாய் அது முடியவில்லை.
“அது எப்படி முடியும் அம்மணி. உங்கப்பன் தான் பணத்துக்காக உன்னை எனக்கு தார வார்த்து கொடுத்திருக்கிறானே. அது இன்னும் அப்படியே தான் இருக்கு அம்மணி. ச்சு…ச்சு…மறந்து போய் பேசுறது எல்லாம் ரொம்பவே தப்பாக்கும். அதிலும் படிச்சவ நீ உனக்கு தெரியாததா” அவன் பேச பேச, மூன்று வருடத்திற்கு முன்பு நடந்ததை நினைக்கையிலே நெஞ்சமெல்லாம் ஒரு வித வலி ஊடுருவல் செய்ய, அப்படியே சமனமிட்டு அமர்ந்து விட்டாள்.
வாழ்வே பூதாகரமாக தெரிந்தது. அன்று தந்தை செய்த ஒரு காரியம் இன்று அவள் வாழ்வையே அழிக்க துடிக்கிறது.
“உனக்கு ஒருவாரம் டைம் தாரேன். அதுக்குள்ள நல்லா முடிவா எடுத்து ஊருக்கு வர. அதுவரைக்கும் என் குடும்ப இரத்தம் எங்கிட்டயே இருக்கட்டும்.
இப்போ பண்ண மாதிரி கிறுக்குத்தனமா ஏதும் செய்ய நினைச்ச, உன் பின்னாடியே ஒருத்தன் சுத்திக்கிட்டு திரியுறானே அவனை இல்லாமலே பண்ணிடுவேன்” என அவளை கை நீட்டி எச்சரிக்கை விடுக்க, ரோஷினிக்கு அவன் கௌதமை பற்றி பேசவும் பயத்தில் உடல் நடுங்கியது.
“கௌதமை ஒன்னும் பண்ணாத பாண்டி. அவருக்கு எதுவும் தெரியாது. ப்ளிஸ் அவரை விட்டுவிடு” என பெண் கௌதமிற்காய் கெஞ்சினாள்.
“என்னா காதலு… இங்கன ஒருத்தன் உனக்காக காத்திட்டு இருக்கிறதை மறந்துட்டு அவனோட சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சியோ… நான் என்ன சொம்பையா, மொத்தப்பேரையும்செஞ்சிப்புடுவேன் பார்த்துக்கோ. நீ எடுத்து வைக்ப்போற அடில இருக்கு அவன் உசுரோட இருக்கணுமா இல்லையான்னு. என் ஆட்கள் அவனை கவனிச்சிட்டே தான் இருப்பாங்க. ஏதும் செய்ய நினைச்ச போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்” அவளின் தாடையை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து ஒரு கோடு போல் செய்து காட்டியவன், அவளை அச்சுறுத்தினான்.
அவனின் செயலில் வெடவெடத்து போனாள் பெண்.
“டேய் குழந்தையை தூக்கிட்டு வாங்கலே போகலாம்…” அவன் கட்டளையிட்டு முன்னே செல்ல, அவனின் அடியாட்கள் அதனை அப்படியே பின்பற்ற, குழந்தையோ அம்மாவிடமிருந்து தன்னை பிரித்து செல்வதில் மகள் ஓலமிட்டாள்.
“ம்மா…ம்மா…ம்மா…ப்பா…” என குழந்தை கத்தி கதறி அழுக, செல்லும் மகளை தடுக்க முடியாது வேதனையுடன் பார்த்திருந்தாள்.
இங்கே இத்தனை கலவரம் நடக்க, அந்த தெரு மக்களோ வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவரும் அவளுக்கு உதவி செய்ய முன் வரவில்லை.
அவளை தான் தப்பாக பேசினர். கௌதமும் பங்கஜமும் இல்லாது போக சிறுசுகள் கூட அவளின் மீதிருந்த வயிற்றெரிச்சலில் பேசியே நோகடித்தனர்.
அப்படியே அந்த அறையில் அமர்ந்தவள் தான், அடுத்து வந்த இரண்டு நாளும் அப்படியே தான் பித்துபிடித்தாற் போல் இருந்தாள்.
*******
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை
“டாக்டர் ரெண்டு நாளாகியும் கௌதம் இன்னும் கண்ணு முழிக்கவே இல்லையே?” வெற்றி அப்போது ரௌண்ஸ் வந்து மருத்துவரிடம் விசாரிக்க,
“கீழ விழுந்ததுல தலையில அடிப்பட்டிருக்கு. அதுல அவர் மூளை அதிர்ச்சியிலசெயல்ப்பாட்டை இழந்திருக்கும் மிஸ்டர். வெற்றி. வெயிட் பண்ணுங்க அவர் கண்டிப்பா கண்ணு முழிச்சிடுவார்” மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல, வெற்றியும் இனியாவும் அவன் முழிக்கும் நேரத்திற்காக காத்திருந்தார்கள்.
இன்றோடு அவன் மருத்துவமனை வந்து இரண்டு நாட்களாகி விட்டது.
லாரி மோதி கீழே விழுந்ததில் அங்கிருந்த சறுக்கில் உருண்டு தலையில் அடிப்பட, அங்கேயே மயங்கி சரிந்திருந்தான்.
ஓட்டுனர் நல்லவராக இருந்திட போய், உடனே ஆம்புலன்ஸிற்கு அழைத்து சொல்லியவன் அங்கிருந்து ஓடிவிட்டான்.
விவரம் அறிந்து போலிசாரும் வருகை தர, கௌதமை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
மருத்துவமனை செல்லும் வரையிலும் கூட அவன் அந்த பரிசினை நெஞ்சோடு அழுத்திய நிலையிலே இருந்தான்.
தலையில் பலத்த அடி என்பதால் அவனுக்கு சிகிச்சை அளித்திருந்தனர். தலையில் மட்டுமள்ளாது கை கால்களிலும் அடிப்பட்டிருக்க, அதற்கும் சேர்த்தே சிகிச்சை தந்திருந்தனர்.
போலிசார்கள் அங்கிருந்த இடத்தில் ஏதும் துருப்பு கிடைக்கிறதா என பார்க்க, பாதி உடைந்து போன நிலையில் அவனின் மொபைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்த மொபைலை சார்ஜ் போட்டவர்கள், மற்ற வேலையில் கவனம் செலுத்தியதில் இதனை மறந்திருந்தனர்.
பின்னர், ஞாபகம் வந்தது போல் அதனை எடுத்து ஆன் செய்ய அடுக்கடுக்காய் அழைப்புகள் வந்திருந்ததற்கானஅறிவுப்புகள் குவிந்தன.
அதில் கடைசியாக அழைப்பு வந்த நம்பருக்கு காவலதிகாரி அழைப்பு விடுக்க, முதல் ரிங்கிலே எடுக்கப்பட்டது.
எடுத்தது வெற்றியாக இருக்க, பொறிந்து தள்ளினான்.
எதிர்புறத்தில் இருந்த காவலதிகாரி,” மிஸ்டர் முதல்ல யார் பேசுறாங்கன்னுதெரிஞ்சிக்கிட்டு பேசுங்க…” என்றான் கராரான குரலில்…
“யார் பேசுறது…?”
“நான் ***** ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன். இந்த மொபைலோடஓனர்க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அதை இன்ஃபாரம் பண்ண தான் கூப்பிட்டேன்” என அவன் சொல்லவும் பதறிபோனான் வெற்றி.
“அவனுக்கு என்னாச்சு சார்..?”பதட்டமான குரலில் அவன் கேட்க,
அப்போது கௌதமை பற்றி கேட்கலாம் என ரோஷினிக்கு அழைத்து பார்த்து அவள் எடுக்காத கடுப்பில் வர, வெளியே கணவன் யாரிடமோ பதற்றமாக பேசுவதை கண்டவள் அவனை நெருங்கினாள்.
அதற்குள் பேசி முடித்தவன்,” இதோ உடனே வரேன் சார்…” என்று வைத்தான்.
“என்னாச்சி தரு? யார் கிட்ட டென்ஷனா பேசுனீங்க? கௌதம் அண்ணா ஏதும் உங்களை கான்டேக்பண்ணாறா, இந்த ரோ கால் எடுக்கவே மாட்டேங்கிறா” அவள் பாட்டிற்கு அடுக்கிய படியே போக,
“இனியா…”என அழைக்க,
கணவனின் குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்தவள், துணுக்குற்றாள்.
“யாருக்கும் எதுவும் பிரச்சனை இல்லையே தரு…” நெஞ்சம் படபடக்க பயத்திலே கேட்டாள்.
“கௌதம்க்கு…” அடுத்து பேசக்கூட அவள் விடவில்லை.
“அண்ணாக்கு என்ன தரு? அண்ணாக்குஒன்னுமில்லல. அவங்க கிட்ட தான் பேசுனீங்களா?” பயத்தில் கண்கள் நீர் கோர்த்த நிலையில் பற்கள் தந்தியடிக்கவே இதனை கேட்டாள்.
மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்தவன்,” கௌதம்க்குஆக்சிடென்ட்னு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஃபோன் போட்டு பேசினார்” சொல்லவுமே மனைவி அப்படியொரு அழுகை.
அவளை எப்படியோ சமாதானம் செய்து குழந்தை அர்ஜூனனை பக்கத்து வீட்டில் ஒப்படைத்து விட்டு, மனைவியோடு காஞ்சிபுரம் வரை வந்துவிட்டான்.
கௌதமை கண்ட பின்பு கேவலாகமாறியிருந்த அழுகை மீண்டும் ஆரம்பித்தது.
“தரு அண்ணா…” அவனின் நிலையை பார்த்து கதறிட, மனைவியை சமாதானம் செய்து அமர்த்தியவன், டாக்டரை காண சென்று திரும்பி வந்தவன் தான், இதோ இரண்டு நாட்களாய் அவனின் கண் விழிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
வீட்டில் வேறு இரண்டு நாட்களாய் கௌதம் அழைத்து பேசாதது ஏன் என கேட்டு இருவரையும் கொடைந்தனர்.
பெரியவர்களிடம் சொல்லி பயம் காட்ட விருப்பமில்லை அவர்களுக்கு.
கௌதமிற்கு இப்படி என ரோஷினிக்கு சொல்லலாம் என பார்த்தால், முதலில் முழு ரிங் சென்று கட்டானாது. இப்போதோ அதுவும் சுயநினைவில் இல்லை என்றே வந்தது.
இனியாவிற்கு ரோஷினியை நினைத்தும் பயம். அவளை சென்று பார்க்க தான் நேரம் வாய்க்கவில்லை.
வெற்றியையும் இனியாவையும் படுத்திய பிறகே அந்தி மாலை வேளையில் மெதுவாய் கண் விழித்தான் கௌதம்..
கண்கள் திறக்கையிலே தலையில் பலமான வலி எடுக்க, முகம் சுருக்கினான்.
“ஹான்…”வலியில் முணங்கினான்.
அவனின் சத்தத்தில் உடனே மருத்துவரை அழைத்து விட்டான் வெற்றி.
“அண்ணா…” கண்ணில் நீர் படலம் கோர்க்க, அவனை நெருங்கினாள் இனியா.
முதலில் சுற்றிலும் முற்றிலும் பார்வையை சுழல விட்டவன், அவனுக்கு லாரி அடித்து தான் தூக்கி வீசப்பட்டது நினைவில் வந்து போக, தானாக அந்த பரிசினை மனது தேட முயன்றது.
“அண்ணா என்ன பண்ணுது? இருங்க வெற்றி டாக்டரை தான் கூப்பிட போயிருக்காரு. இதோ வந்திடு வாங்க” சொல்கையில் மருத்துவருடன் உள்ளே நுழைந்தான் வெற்றி.
மருத்துவர் அவனை செக் செய்து பார்த்தவர், “அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நல்லா தான் இருக்காரு. ஒரு ரெண்டு நாள் இங்க இருக்கட்டும் அப்புறம் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். கால்ல கொஞ்சம் அடி பலமா இருக்கிறதாலநடக்கிறப்ப மட்டும் ஸ்டிக் வச்சி நடக்க சொல்லுங்க” என்றிருந்தார்.
அதற்குள் இனியா அவனின் நலன் விசாரித்திருக்க, வெற்றி உள்ளே நுழைந்தவன் நண்பனை காச்மூச்சென கத்த தொடங்கிவிட்டான்.
இனியா தான் கணவனை அடக்க வேண்டியதாயிற்று.
அதன் பின்னர் வலியின் மிகுதியிலும் மாத்திரையின் வீரியத்தாலும் மீண்டும் உறங்கி போனான்.
இரவு உணவிற்காக அவனை எழுப்ப, சோர்ந்து போன முகத்துடன் கண் விழித்தவனின் பார்வை யாரையோ தேட செய்தது.
புரிந்த போதும் அவளை பற்றின விவரம் தெரியாத வகையில் என்ன சொல்ல.
“அவளுக்கு விஷயம் தெரியாது அண்ணா. நாங்க யார் கிட்டயும் இதை பத்தி சொல்லல” அவன் தேடலின் அர்த்தம் புரிந்து இனியா பேச, அமைதியாய் கேட்டுக்கொண்டான்.
பின், வெற்றி ஊட்ட கொஞ்சமாய் உண்டவன் விழி முடிய நிலையில் அந்த பரிசினை கையில் வைத்தவாறு அமர்ந்தான்.
கண் விழித்ததுமேவெற்றியிடம் கேட்டு இதனை வாங்கி கொண்டான்.
அப்போது கௌதமின் உடைந்த மொபைல் சிணுங்கி தன் இருப்பிடத்தை உணர்த்தியது.
அதை இனியா எடுத்து அவன் கையில் கொடுக்க, பங்கஜம் தான் அழைத்திருந்தார்.
“ஆண்டி…”
“கௌதம் ரெண்டு நாளா நீ வீட்டுக்கு வரலையாமே பக்கத்து வீட்டு பொண்ணு சொல்லுச்சி. ஆமா ஏன்டா வரல?” அக்கறையுடன் வினவ, அதில் மனமுருகியவன் பேச வாயெடுக்கும் முன்பே மீண்டும் அவரே பேசத் துவங்கினார்.
“நீயும் நானும் இங்க இல்லாதப்ப, யாரோ ரோஷினி வீடு பூந்துமிரட்டிட்டு போயிருக்காங்க டா. ரெண்டு நாளா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கிறதா பக்கத்துல உள்ளவங்க சொல்லி அவளை கண்ட மேனிக்கு பேசுறாங்க”
“நானும் கதவை தட்டி தட்டி பாக்குறேன் திறக்கவே மாட்டேங்கிறா. ஒரு சத்தமும் இல்லை… எனக்கு பயமா இருக்கு டா. நீ சீக்கிரமா வரியா” பதற்றத்துடன் அவர் பேசி அவனை அழைக்க,
“இதோ வரேன் ஆண்டி” என்றவனின் குரலில் மாற்றம் தென்பட்டது.
தன்னவளுக்குஎன்னானது? யார் வந்திருப்பார்கள்? அங்கு என்ன நடந்திருக்கும்? என பல கேள்விகள் அவனுள் உதிக்க தலை கிண்ணென்று வலித்தது. அது அப்படியே முகத்திலும் பிரதிபலித்தது.
“அண்ணா யார் லைன்ல?”
“இனியா மா… உடனே என்னை டிஸ்சார்ஜ் பண்ண என்னென்ன ப்ரோசிஜர்னு பாரு டா” சொல்ல, புரியாது கேள்வி எழுப்பினாள்.
“எதுக்கு அண்ணா? டாக்டர் உங்களை ரெண்டு நாள் இங்க இருக்க சொல்லியிருக்காங்க”
“ப்ளிஸ் டா. அங்க என்னோட ரோஷிக்கு பிரச்சனை. நான் அவளோட இருக்கணும் டா. பங்கஜம் ஆண்டி என்னென்னமோ சொல்றாங்க” தங்கையிடம் கெஞ்சலாக கேட்க,
அதற்குள் தட்டு கழுவவென வெளியே சென்று வந்த வெற்றி,” என்ன டா?” என்றான்.
“ஏங்க, அண்ணா டிஸ்சார்ஜ் செய்யனும்னு சொல்றாங்க…”
“எதுக்கு…?”
“ரோஷினி ஏதோ பிரச்சனைல இருக்கா டா மச்சான். நான்… நான்… அவ கூட இருக்கணும் டா. ப்ளிஸ்” கண்கள் சிறிது கலங்க கூட செய்தது அவனுக்கு.மனம் காதலிக்காக அடித்து கொண்டது.
நண்பன் பேச்சில் என்ன கண்டானோ, சரியென்று அவனை அந்த இரவு நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்தான்.
அவர்கள் முடியாது என்று சொன்ன போதிலும் எப்படியோ அடுத்த ஒரு மணி நேரத்தில் கௌதமை வெளி கொண்டு வந்து விட்டான்.
ஒரு கார் பிடித்து மூவரும் வேளச்சேரி வரும்போதே மணி பதினொன்றைஎட்டியிருந்தது.
அந்த தெருவே நிசப்தமாக இருக்க, காரிலிருந்து இறங்க முடியாமல் இறங்கினான் கௌதம். அவனிற்கு உதவி செய்தான் வெற்றி.
அவளின் வீட்டில் மட்டும் விளக்கு எறிந்த நிலையிலே இருக்க, மெல்ல வெற்றியின் உதவியினாலும்ஸ்டிக்கின்உதவியினாலும் அவள் வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்த நிலையென, இப்போதியநிலையென.
மனம் வஞ்சியை நினைத்து அடித்து கொண்டது. ஏனோ தவறாக நடக்க இருப்பது போலான ஓர் அபாயம் மணி அவனுள்.
அதனோடே அவளின் வீட்டு கேட்டினை திறந்து மெல்ல உள்ளே நுழைந்தவன், அப்படியே நின்றுவிட்டான்.