ஆட்டம்-36

ஆட்டம்-36

ஆட்டம்-36

அடுத்த நாள் மாலை, இந்தியாவின் மிகப் பிரபலமான டிசைனர் உத்ராவிற்கான உடையோடு பொள்ளாச்சியில் வந்திறங்க, காரில் இருந்து இறங்கியவுடன் தனது கூலர்ஸை கழற்றியவர், தனக்கு முன்னிருந்த பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான செட்டில் அசந்து தான் போனார்.

தங்களுக்கு இருக்கும் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களில் தெரிந்தவர்களும், தொழில் ரீதியில் என்று அழைப்பிதலே சுமார் மூவாயிரம் பேருக்குச் சென்றிருக்க, மண்டபம் பத்தாது என்பதால், பொள்ளாச்சியில் தங்களுக்கு இருந்த இருபது ஏக்கர் காலி இடத்தில், பிரம்மாண்டமான வரவேற்பு செட் அமைத்து, அன்று அந்த ஊரையே அலற விட்டுக் கொண்டிருந்தது அபிமன்யு-உத்ராவின் வரவேற்பு நிகழ்ச்சி.

காரிலிருந்து இறங்கிய டிசைனர், “வாவ்!!!” என்று வாய் பிளக்க, அவரை வந்து வரவேற்ற ஒருவர், மணப்பெண் இருந்த இடத்திற்கு அவரை அழைத்துச் செல்ல, டிசைனரின் அசிஸ்டெண்ட் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரை பின் தொடர்ந்து வந்தார்.

மணப்பெண் இடத்தை காட்டியவர், தனக்கு அடுத்து கொடுக்கப்பட்ட வேலையை பார்க்க சென்றுவிட, அங்கு இருந்த கேரவனுள் ஏறியவர், ‘தி ப்ரைட் (The bride)’ என்று பொறிக்கப்பட்ட பாத்ரோபில்(Bathrobe) இருந்த உத்ராவை பார்த்து புன்னகைக்க அவளும் தன் கன்னங்கள் மிளிர அழகு பெட்டகமாய் புன்னகைத்தாள்.

முதலில் பாதியாக மேக்கப்பை முடித்தவர்கள், டிசைனரிடம் உடையை கேட்க, அந்த ஆறு கிலோ எடையுள்ள டிசைனர் லெஹங்காவை, அதற்கென இருந்த பையில் இருந்து பிரித்து எடுக்க, லெஹங்காவின் பகட்டான வடிவமைப்பில், உத்ராவிற்காக வந்திருந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டே வாய்பிளந்து தான் போனார்.

எத்தனையோ பிரபலங்களுக்கு மேக்கப்பிற்காக சென்றவர், இதுநாள் வரை இப்படியொரு அழகான, செழிப்பும் வடிவமும் இரைத்து இருந்த ஹெலங்காவை பார்த்தது இல்லை.

ரத்தின சிவப்பில் இருந்த ஹெலங்காவில் ஆங்காங்கே மெய்யான தங்கங்கள் வைத்து, இலைகள் போன்றும், பூக்கள் போன்றும், அதே தங்கத்தாலான ஜமிக்கிகள் போன்றும் வைத்து, மேலே வி வடிவ கழுத்து கொண்ட ஹெலங்காவின் டாப்பும், என்று அட்டகாசமாக வந்திருந்த லெஹங்காவில் அனைவரும் வாய்பிளக்க, டிசைனரின் வதனத்தில் ஒரு சிறு கர்வம்.

உடையை அணிய அனைவரும் பெண்ணவளுக்கு உதவ, மீதியிருந்த மேக்கப்பை பரபரப்பாகத் துவங்க, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆளாய் பெரியோர்கள் சொல்லிய நேரத்திற்குள் பெண்ணவளை தயார் செய்து முடிக்க, ஒரு பெட்டியுடன் கேரவனுள் ஏறினார் அழகி.

கேரவனுள் நுழைந்தவர் விழிகளில் கை தேர்ந்த சிற்பி செதுக்கியது போன்று நின்ற மருமகளின் அழகு விழ, அதில் சொக்கிப் போய் நின்றவர், உத்ராவின் அருகே வந்து, “ரொம்ப அழகா இருக்க உத்ரா” என்று கொஞ்சியவர், கரத்தில் இருந்த பெட்டியை திறந்து,

“அபி உன்னை இந்த ஜூவல்ஸ் எல்லாம் போட சொல்லி குடுத்துவிட்டான்” என்று கூற, பெட்டியை பார்த்த மங்கையவளின் விழிகள் பெட்டிக்குள் இருந்த நகைகளை பார்த்து அதிசயத்தில் மலையாக விரிந்து கொண்டன.

அனைத்தும் மரகதமும், வைரங்களும் பதித்த நகைகள். அவனவளுக்காக அவளவனே வடிவமைத்து ஆர்டர் கொடுத்திருந்த நகைகள்.

அதுவும் உத்ரா அணியப் போகும் சிவப்பு நிற லெஹங்காவிற்கு, கான்ட்ராஸ்ட் நிறமாய் பொருந்த தன்னவளுக்காக தங்களது முக்கிய தருணத்திற்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்திருந்தான் இந்த உலகையே தன் கைக்குள் வைத்திருந்த அந்த ஏகாதிபதி.

அதனால் தான், “தி ஜுவல் ஆஃப் கிங்க் (The jewel of King)” என்ற மரகதத்தை தேர்வு செய்திருந்தான் தன்னவளுக்காக. அதுவமின்றி மரகத சின்னம் அரச குடும்பத்தை மட்டுமல்லாது புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றை உள்ளடக்கியது.

உத்ரா பார்த்துக் கொண்டே நிற்க, பெட்டியில் இருந்த நகையை எடுத்த அழகி தானே மருமகளுக்கு அணிவித்துவிட, அவருக்கு அங்கிருந்த பெண்களும் உதவி புரிய, அனைத்து நகைகளையும் அணிந்து முடித்த பின், அங்கிருந்த முழு உயர கண்ணாடியில் தன்னை பார்த்த உத்ராவின் சிவப்பு நிறம் பூசியிருந்த செப்பு இதழ்கள், தனக்கு பின் நின்றிருந்தவர்கள் தன்னை மெய் மறந்து பார்த்ததில் நாணத்தில் துடித்தது.

அழகியின் அலைபேசி அடிக்க, எடுத்துப் பேசியவர், “ரெடி ஆகிட்டாங்க.. வந்திடறோம்” என்றவர் மருமகளின் கரம் பிடித்து அழைத்துச் செல்ல, அங்கே அரிமா பூபதியின் ஆடி கார் நின்றிருந்தது.

உத்ரா அத்தையை பார்க்க, “செட்டுக்கு பின்னாடி அபி வெயிட் பண்றான் உத்ரா.. நீங்க அங்க போய் கார்ல ஏறிட்டு முன்னாடி வந்து என்ட்ரி தருவீங்க” என்று கூற, தலையை ஆட்டியவள், அரிமா பூபதியுடன் காரில் சென்று இறங்க, அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்த அபிமன்யு கார் சப்தத்தில் திரும்பவும், உள்ளே இருந்து லெஹங்காவை இரு புறமும் பிடித்துக் கொண்டு தயக்கமும் மேக்கப்பினால் உண்டான பதட்டமுமாக, வைரச் சுரங்கமாய் இறங்கிய தன் உள்ளத்தை கொள்ளை கொண்டவளின் அழகு அந்த அபிமன்யுவையே விநாடியில் சுழற்றியடிக்க, எப்போதடா இவளது கழுத்தில் மங்கள நாணை அணிவிப்போம் என்றானது அந்த அரண்மனையின் மூத்த வாரிசிற்கு.

இறங்கியவள் அபிமன்யுவின் விழிகளை நிமிர்ந்து பார்க்கக் கூட சத்தில்லாது, தனது ஸ்மோக்கி மேக்கப்பில் இருந்த குடை இமைகளை தாழ்த்திக் கொள்ள, அது கோபத்தினாலா இல்லை நாணத்தினாலா என்று அவளுக்குத்தான் தெரியவில்லை.

அவளின் கரத்தைப் பற்றிய அரிமா பூபதி, அவளை வந்து காரில் ஏற்றிவிட, உடை கலையாது அமர்ந்தவளின் அருகே அபிமன்யு அமர, மகனை பார்த்து தந்தையாய் புரிந்து கொண்டவர் அழுத்தமாய் ஒரு புன்னகையை அவனிடம் வீசிவிட்டு நகர, மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நகர்ந்தது.

செட்டின் பின்னே சுற்றி கார் முன் வழியாக வர, அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி வரும் பாதை முழுதும் அலங்காரங்கள் விழிகளை பறிக்க, அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்த உத்ராவின் மனம் ஒரு விநாடி கூட நிற்காமல் துடித்துக் கொண்டிருந்தது.

‘இந்தியாவில் இறங்கும் போது நினைத்தாளா, இன்னும் சில மாதங்களில் தான் திருமதியாகப் போகிறோம் அதுவும், அபிமன்யுவின் மனைவியாகப் போகிறோம் என்று?’

வாழ்க்கை எப்போது, எப்படி திசை திரும்பும் என்பது கணிக்க முடியாத விதியின் கணக்கல்லவா!

இங்கு வந்ததில் இருந்து நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு, அனைத்தும் மேஜிக் போன்றே தோன்றிக் கொண்டிருந்தது.

இருவரின் வரவேற்பு நடக்கும் இடத்திற்கு வந்து அபிமன்யுவின் ரோல்ஸ் ராய்ஸ் நிற்க, வரவேற்பறையின் முன்னே பார்த்த உத்ராவின் விழிகள் முன்னே இருபது அடியில் நின்றிருந்த பிரம்மாண்டமான, யானை சிலைகளை பார்த்து பேச முடியாத அளவு அதிர்ச்சியில் தெறித்து போனது.

உத்ராவுக்கு ஏற்றது போன்ற சிவப்பு நிற ராயல் கோட் சூட்டில் ஹீரோ போன்று ஆளுமையுன், கம்பீரமுமாக இறங்கிய அபிமன்யுவை அங்கிருந்த மீடியாவின் கேமிராக்கள் படம்பிடிக்க, கேமிராவின் ப்ளாஷ்கள் ஓயாது அடித்துக் கொண்டிருக்க, இலேசாக திரும்பிய அபிமன்யு தன் கரத்தை நீட்ட, உள்ளிருந்து அனைத்தையும் மூச்சடைக்க பார்த்துக் கொண்டிருந்தவள், தன் நாயகனிடம் கரத்தை கொடுக்க, அபிமன்யுவின் கரம் அழுத்தமாக உத்ராவின் கரத்தை பிடித்துக் கொண்டது.

இருவரையும் அங்கிருந்த மீடியா கும்பல்கள் படம் பிடிக்க, இத்தனை பேரை எதிர்பார்த்திடாத உத்ரா சிறு அச்சத்தில் அபிமன்யுவின் கரத்தை இறுக பற்றிக் கொள்ள, பெண்ணவளின் இடையைச் சுற்றி பிடித்து தனது கோட் பாக்கெட்டில் கை நுழைத்தடி அபிமன்யு போஸ் கொடுக்க, உத்ராவும் பெண்மையின் இலக்கணமாய், அழகின் சாமுத்ரிகா சாஸ்திரமாய் நின்று, அபிமன்யுவின் கம்பீரத்திற்கும் ஆளுமைக்கும் இணையாய் புன்னகைக்க, மீடியாக்களை அங்கிருந்து சிறிது நேரத்தில் அகற்றினார்கள் அபிமன்யுவின் ஆட்களும் விக்ரமின் ஆட்களும்.

அதற்கு மேல் ஊடகங்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

உத்ராவின் கரம் பிடித்து அபிமன்யு அழைத்துச் செல்ல, வழி முழுதும் அவர்களை வரவேற்க பிரமாண்டமான வகையில் அனைத்தையும் ஏற்பாடு செய்திருத்தான் விக்ரம் அபிநந்தன். கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜன்டா மேளங்களும், மலர் இதழ்களைக் குவித்த காலடிகளும், வண்ண விளக்குகளும், வான வேடிக்கைகளும், கதக் ஆடும் பெண்களும் என்று வரவேற்க, இறுதியாக நடுவே இருந்த ஒரு மிகப் பெரிய தாமரை மொட்டு விரிந்தது.

அதிலிருந்து வந்த பெண் பரதத்தை ஆடத் துவங்க, அவரையே சில விநாடிகள் உற்றுப் பார்த்த நறுமுகைக்கு அப்போது தான் தெரிந்தது, அவர் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்று. அவரை வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த மங்கையவளுக்கு, அவர் தன் திருமணத்தில் நடனமாடுகிறார் என்றால் கேட்கவா வேண்டும்.

அபிமன்யுவின் கரத்திற்குள் இருந்த பெண்ணவளின் கரம் சிலிர்த்து அடங்க, தன் முன் நடனமாடுபவரையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த உத்ராவினை தன் விழிகளுக்குள் அபிமன்யு காதலுடன் நிரப்பிக் கொண்டிருக்க, நடனமாடி முடித்து அனைவருக்கும் நன்றி செலுத்தியவர், உத்ராவிடம் ஒரு அழுத்தமான புன்னகையை கொடுத்துவிட்டுச் செல்ல, உத்ராவின் இதயம் தன்னை சுற்றி நிகழும் அனைத்திலும் லயித்துப் போக, மற்ற அனைத்தையும் மறந்து புறம் தள்ளியவள், இப்போது தாராளமாய் புன்னைக்க, இருவரும் தங்களுக்காக போடப்பட்டிருந்த மேடையில் ஏறினர்.

அதற்கு பின் நடந்தது அனைத்திலும் உத்ரா புன்னகையுடன் நின்றிருக்க, கூட்டம் நிற்காது வந்து கொண்டே இருந்தது. சொல்லப் போனால் மூச்சுத் திணற திணற வரவேற்பு நிகழ்ந்து கொண்டிருக்க, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் வந்தவர்களை உபசரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்க, மேலே அபிமன்யுவுடன் நின்றிருந்த உத்ராவிற்கு எப்போதடா முடியும் எனும் நிலை ஆகிவிட்டது.

நேரம் சிறிது நேரம் கடந்த பின் கூட்டத்திற்குள் ஒரே சலசலப்பாக இருக்க, சிம்மவர்ம பூபதியின் நெருங்கிய நண்பரான விஸ்வேஷ்வரர் தான் வந்து கொண்டிருந்தார். அவர் மனைவியான பார்வதி விஸ்வேஷ்வரருடன்.

விக்ரமும் அப்போது மேலே இருக்க, “அடடே விக்ரம்.. எல்லாம் உன் தாத்தா சொன்னான்.. ரொம்ப சந்தோஷம்” என்று நறுமுகையையும் பார்த்தபடி கூற, இருவரும் பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, விக்ரம், “எங்க அவனை காணோம்?” என்று அவருடைய பேரனை வினவ,

முகத்தில் பெருமை பொங்க விக்ரமை பார்த்தவர், “சும்மாவே கையில பிடிக்க முடியாது.. இப்ப சிஎம் வேற.. உங்க பிரண்டை கேக்கவா வேணும்” என்று தனது பேரனின் புகழ் பாடிய விஸ்வேஷ்வரர் மனையாளை பார்க்க,

பார்வதியும், “கண்டிப்பா மறுபடியும் உங்களை பாக்க வருவான் விக்ரம்.. நீயும் அபிமன்யுவும் வீட்டுக்கு வாங்க.. பெரிய பசங்க ஆனதுல இருந்து ரொம்ப பிசி ஆகிட்டீங்க” என்றவரிடம் சிரிப்புடன் தலையாட்டிய விக்ரம், அபிமன்யுவிடமும் உத்ராவிடமும் அவர்களை அழைத்துச் செல்ல, இருவரின் பாதங்களிலும் விழுந்து எழுந்தபின், அபிமன்யுவின் விழிகள் ஒருவனைத் தேட, அதை புரிந்து கொண்ட விஸ்வேஷ்வரரும்,

“ஒரு அவசர வேலை வந்திடுச்சு அபி.. மறுபடியும் உங்களை பாக்க வர்றேன்னு சொல்லியிருக்கான்” என்று கூற, உள்ளத்தில் நெருங்கிய நண்பன் வராத கோபத்திலும் வெளியே புன்னகையை சிந்தியவன்,

“இரண்டு பேருக்கும் இருக்குன்னு சொல்லுங்க..” என்று கூற, உத்ராவின் அருகே வந்த பார்வதி,

“ரொம்ப அழகா இருக்கடா” என்று உத்ராவின் கரம் பிடித்து கூறியவர் இமையரசியிடம், “கல்யாணம் முடிஞ்சு சுத்தி போட்டுருங்க” என்று கூறிவிட்டு இருவரிடமும் புகைப்படத்திற்கு நிற்க, விக்ரமை இழுத்து அபிமன்யுவின் அருகே விஸ்வேஷ்வரர் நிற்க வைத்து கேலியாய் புன்னகைக்க,

அவரை தலை திருப்பி பார்த்த விக்ரம், “உங்களுக்கும் உங்க பேரனுகளுக்கும் வேற வேலையே இல்லை” என்று கூறிச் சிரிக்க, அபிமன்யுவின் இதழ்களும் மெலிதாக நகைத்தது.

விஸ்வேஷ்வரரையும், பார்வதியையும் பார்க்க மேலே வந்த நீரஜா, அவர்களிடம் வந்து பேச, நீரஜாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்ட இருவரும் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டனர். ஒரு நாள் தனிமையில் நண்பர்கள் சந்தித்து மதுபானம் அருந்திய போது சிம்மவர்ம பூபதி விஸ்வேஷ்வரரிடமும், பார்வதியிடமும் அனைத்தையும் ஒப்பித்து இருக்கிறார்.

அதை அடுத்த நாள் சிம்மவர்ம பூபதி கேட்டபோது கூட, “ஆமா நீ ஏதோ சொன்னடா.. ஆனா, நீரஜா என் மக மாதிரி. இந்த விஷயம் என்னையும் இவளையும் தவிர யாருக்கும் போகாது” என்று சத்தியம் செய்திருந்தவர் சிம்மவர்ம பூபதி மேல் கொண்ட நட்பாலும், நீரஜாவை தன் மகள் போலவே பார்த்ததாலும் அது ரகசியமாகவே போனது.

நீரஜாவின் கன்னம் தட்டிய விஸ்வேஷ்வரர், “மகாலட்சுமி மாதிரி இருக்கா உன் பொண்ணு.. சொல்லாம இருக்க முடியல.. இன்னொரு பொண்ணு இருந்திருந்தா என்னோட பேரன் ஒருத்தனுக்கு எடுத்திருப்பேன்” என்று நீரஜாவிற்கும், பார்வதிக்கும் மட்டும் கேட்கும் குரலில் கூற, முதலில் அதிர்ந்தாலும், இவ்விடயம் அவரைத் தவிர யாருக்கும் செல்லாது என்பதால், “எல்லாம் உங்க ஆசிர்வாதம் ப்பா” என்று நீரஜா சொல்ல, இருவரும் கிளம்பினர்.

கீழே இருந்த மித்ராவும், திலோத்தமையும் செல்பி, சாப்பிடுவது என்று சுற்றிக் கொண்டிருக்க சாப்பிடும் இடத்தின் பின்னே சென்ற திலோத்தமையின் கரத்தை மறைவான இடத்தில் ஒருவன் இழுக்க, “ஐயோ” என்று கூவ வாயெடுத்த மித்ராவின் வாயை பொத்தியவன், திலோத்தமையின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதிக்க, மித்ராவின் திராட்சை விழிகள் உலக உருண்டை அளவிற்கு விரிய, அவனை சிரித்தபடியே தள்ளிவிட்ட திலோத்தமை அவனின் நெஞ்சில் செல்லமாய் அடித்து, கட்டியணைத்துக் கொண்டு, “எப்ப வந்தீங்க?” என்று வினவ, வாய் பிளந்து நின்றாள் மித்ரா.

சட்டென நினைவு வர, “இவங்க தான் கௌதம் பிரணவ்வா?” என்று கேட்க, சட்டென மித்ரா இருப்பதை மறந்து போனவள் கௌதமிடம் இருந்து விலக, அவளை இழுத்து அருகே நிற்க வைத்த கௌதம்,

“எஸ்.. ஐம் கௌதம் பிரணவ்” என்று கூறினான். ஆம் திலோத்தமையின் காதலன். அபிமன்யு, விக்ரமின் நண்பன். அவர்களை விட இரு வயது சிறியவன். பள்ளியில் ஒன்றாக விளையாடி நண்பரானவர்கள். இப்போது சென்னை மாநகராட்சியின் கலெக்டர். அவ்வப்போது விக்ரமை பார்க்க வீட்டிற்கு சென்றவனின் விழியல் திலோத்தமை விழ, அங்கு தொடங்கியது அனைத்தும்.

தன்னுடைய அலைபேசியை எடுத்த திலோத்தமை மித்ராவிடம் கொடுத்து, “எங்களை ஒரு ஃபோட்டோ எடுடி” என்று கொடுக்க, இருவரும் அருகருகே நின்றிருக்க அழகாய் கேமிராவில் அதைப் பிடித்துக் கொடுத்த மித்ரா,

“லவ்லியா இருக்கு உங்க பேர்” என்று புகழ் சூட, அதில் கர்வம் கொண்டவள் இரு வேங்கைகளின் தங்கையாய் தன்னவனை திமிரும், நாணமுமாய் நிமிர்ந்து பார்க்க, அவனுக்கோ எப்போதடா அவளை திருமணம் செய்வோம் என்றிருந்தது.

மூவரும் வரவேற்பிற்கு வர, திலோத்தமை இவன் யார் என்றே தெரியாதது போன்று சென்றுவிட, மேடையேறிய கௌதம் அபிமன்யுவை அணைத்து, “கங்கிராட்ஸ்” என்றிட, அவனை துளைக்கும் பார்வை பார்த்த அபிமன்யு,

“அடுத்த கல்யாணம் உனக்கு தான் போல” என்று கேலி செய்ய, விழிகளை, ‘ஆமாம்’ என்பது போல சிமிட்டியவனை கேலியாக பார்த்த அவர்களுக்கு பின்னால் இருந்த விக்ரம், “உன் சட்டைல இருக்க லிப்ஸ்டிக் மார்க் பாத்தாலே தெரியுது” என்று கூற அப்போது தான் தனது சட்டையை குனிந்து பார்த்தவனுக்கு புரிந்து போனது, தன்னவளின் உதட்டின் அச்சு சட்டையில் விழுந்துவிட்டது என்று.

ஏற்கனவே கௌதமை ஃபோட்டோவில் பார்த்திருந்ததால், அது யாருடைய உதட்டின் அச்சு என்பதை புரிந்து கொண்ட உத்ரா, கேலியாய் கௌதமை பார்க்க, அவனோ அதை கை வைத்து மறைக்க முயல, விக்ரம், “இங்க பிரச்சனை இல்ல.. இப்படியே வெளிய போய் மீடியா கண்ணுல விழுந்துச்சு நாளைக்கு நீதான் ப்ளாஷ் நியூஸ்.. யாருடா அந்த பொண்ணு?” வினவி கேலி செய்ய, விரைவாக அவர்களுடன் புகைப்படத்தை எடுத்துவிட்டு கிளம்ப எத்தனித்தவனை பிடித்த அபிமன்யு,

“மார்னிங்கும் வந்திடு” என்று ஆணையிட்டு அனுப்ப, கௌதமின் மனசாட்சியோ நீ சொல்லலைனாலும் அவன் வருவான் என்றே உரைத்தது.

தூரத்தில் இருந்தே கௌதம் விழிகளால் தன்னவளிடம் விடைபெற்றுச் செல்ல, சற்று நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைய, கீழே இறங்கிய இருவரையும் சாப்பிட வைத்தவர்கள், அவர்கள் வந்த காரிலேயே ஏற்ற, அபிமன்யுவுடன் ரோல்ஸ் ராய்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு தூக்கம் விழிகளை பிடித்து இம்சிக்க, எப்படியும் அரண்மனைக்கு செல்வதற்கு இருபது நிமிடங்கள் ஆகிவிடும் என்று நினைத்தவள் விழிகளை மூட, சற்று நேரத்தில் அபிமன்யுவின் தோளில் நித்திரா தேவி கொடுத்த மருந்தில் சாய்ந்துவிட்டாள்.

தன் தோளில் சாய்ந்திருந்த தன்னவளின் தோளில் கரத்தை எடுத்துப் போட்ட அபிமன்யு, தன் உள்ளத்தின் ஒவ்வொரு விநாடியும் அவளை நினைத்துக் கொண்டே துடிக்க, இப்படி தன்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவளை தன் நெஞ்சின் மேலேயே சாய்த்துக் கொள்ள, அவனின் நெஞ்சத்தை மஞ்சம் என்று நினைத்தாளோ என்னவோ அவனவள், அவன் மீது ஆழப் புதைந்துகொண்டாள்.

‘கண்டிப்பாக இந்த லெஹங்காவை அணிந்து இத்தனை நேரம் நின்றதில் கால் வலித்திருக்கும்’ என்று நினைத்தவன், அவளின் தலையை வருடி உச்சந்தலையில் தன் இதழைப் பதிக்க, கார் அரண்னையை அடைந்து நின்றதும் தான் விழித்த உத்ரா, அபிமன்யுவின் மார்பில் தான் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து படாரென அவனிடம் இருந்து விலக, அவளை விலக விடாது தடை செய்திருந்தது அவள் கரததில் அணிந்திருந்த மகரதமும், வைரமும் இணைந்திருந்த வளையல்கள்.

அபிமன்யுவின் கோட்டில் மாட்டிவிட, அவளின் கரத்தை அழுத்தமாக பற்றிய அபிமன்யு, மெல்ல அவளின் வளையலை விடுவிக்க, கீழே இறங்கிய இருவரையும் பெரியோர்கள் அவரவர் அறைக்கு அழைத்துச் செல்ல, அன்று இரவு உத்யா ஒரு மணி நேரம் தான் உறங்கியிருப்பாள்.

பிரம்ம முகூர்த்தம் என்பதால் ஒரு மணிக்கே மேக்கப் போடுவதற்கு அமர வேண்டுமல்லவா!

உத்ராவின் அறையில் அவளை ஆர்ட்டிஸ்ட் அனைவரும் தயார்ப்படுத்திக் கொண்டிருக்க, அவளுக்கு முன் தயாராகிய அபிமன்யுவை அழகி முதலில் அனுப்பி வைக்க, அபிமன்யுவிடன் திலோத்தமை, மித்ரா, கோதை, அதியரன் பூபதி, சிம்மவர்ம பூபதி, இமையரசி அனைவரும் சென்றுவிட மற்ற அனைவரும் அரண்மனையில் உத்ராவுடன் செல்லக் காத்திருந்தனர்.

ராணி பிங்க் நிற காஞ்சிப் பட்டுச் சேலையில் ரவிவர்மனின் ஓவியங்கள் வைத்து நெய்யப்பட்ட தன்னவன் தேர்வு செய்திருந்த சேலையில் தங்க மயில் வைத்த ஆபரணங்களில் தயாராகி வந்த நறுமுகை, “மாமா நல்லா இருக்கா?” என்று வினவ,

ஆளுயுரக் கண்ணாடியின் முன் பட்டு வேஷ்டி சட்டையில் பெண்களை தன் வசீகரத்தாலும், சிரிப்பாலும் மயக்கி வீழ்த்தும் அந்த புவன சுந்தரனாய், அதாவது கிருஷ்ணனாய் நின்றிருந்தவனை அவனுக்கு பின் நின்றிருந்த அவனின் ருக்மணி தன் மனதினுள் ரசித்து ரசித்து தன்னவனின் கொள்ளை அழகில் மயங்க,

தலையை சிலுப்பியபடி ஸ்டைலாக திரும்பியவன், “எப்படி இருக்கேன்னா?” என்று மேலிருந்து கீழ் ஒரு இன்ச் விடாது அவளை பார்த்தவனின் பார்வையில் உடலை குறுக்கியவள், வெளியே செல்ல எத்தனிக்க, தன்னவளை பிடித்து இழுத்து ஒட்டிக் கொண்டு நின்றவன்,

இளையாளின் அதரங்களை பிடித்து இழுத்து, “சிலுக்கு மாதிரி கும்முனு இருக்க” என்றிட, அதில் வெட்கமும் கோபமும் ஒருங்கே சங்கமிக்க, கணவனிடம் சிணுங்கியவள், அவனின் கரங்கள் எல்லை மீறுவதை உணர்ந்து, அவனைத் தள்ளிவிட்டு,

“உங்கள விட்டா.. எல்லாரும் கல்யாணம் முடிச்சுட்டு பர்ஸ்ட் நைட்டுக்கே இங்க வந்திடுவாங்க… நீங்க என்னை விட மாட்டிங்க” என்றவள் கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு வெளியே ஓட, புன்னகைத்தபடியே வெளியே வந்தவன்,

“உத்ரா ரெடியா பெரிம்மா?” அழகியிடம் கேட்க, அப்போதென்று மேலே பார்த்த அழகியின் விழிகள் ‘எத்தனை முறைதான் என்னை பனிகட்டியாய் உறைய வைப்பாய்’ என்று கேட்டு கோபம் கொண்டது.

அழகியின் விழிகள் தொலைந்த இடத்தை நோக்கி மற்றவர்களின் விழிகள் செல்ல, மேலே படிகளில் இருந்து முழுதாக தூய வெள்ளியில் நெய்த பட்டு புடவையில், இமையரசி கொடுத்த பரம்பரை தங்க ஆபரணங்கள் அணிந்து, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டின் கை வண்ணத்தில் மேலும் மெருகேறிப் போய், வதனம் சற்று நேரத்தில் அவனவள் ஆகிவிடுவோம் என்ற தேஜஸை அவள் மறைத்தாலும் அடி மனதில் இருந்தது எடுத்துக் காட்ட, நளினமாய் இறங்கி வந்து கொண்டிருந்த அந்த அரண்மனையின் தங்க விளக்கை, அனைவரும் அசந்து போய் பார்க்க, நீரஜாவின் விழிகள் அவரின் விஜய்யை நினைத்து பனிக்க, ரஞ்சனிக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.

கீழே இறங்கி வந்தவளை வரவேற்பு நடந்த இடத்திற்கே அழைத்துச் செல்ல, இப்போது அது லைட்டிங்ஸ் மாற்றி, முகூர்த்தத்திற்கு உண்டான இடமாய் மாறியிருந்தது.

சிம்மவர்ம பூபதி வரவழைத்திருந்த பெரிய பெரிய கோவில்களில் பூஜை செய்யும் ஐயர்கள் மைக்கில் மந்திரிகளை உச்சரித்துக் கொண்டிருக்க, மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த, அந்த அரண்மனையின் மூத்த வாரிசான அபிமன்யு தன்னவளை காக்கும் கற்பூர கௌரமாய் அமர்ந்து, மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தவனின் விழிகள் விஜயவர்தனின் கார் வந்ததும், காரிலிருந்து வானில் இருந்து இறங்கி வந்த முழு நிலவாய், அச்சம், நாணம், பதட்டம் இணைந்த கலவையாய் தான் தேர்வு செய்த பட்டுப் புடவையில், அழகின் பிறப்பிடமாய் தன் அன்னையின் கரத்தை பிடித்தபடி நடந்து வந்து இந்த மன்மதனையே வீழ்த்திவிட்டாள் அவனின் ரதியின் அழகை ஒத்தது போன்று இருந்த உத்ரா.

உள்ளே நுழைந்த போதே தன் மேல் விழிகளை வைத்த அபிமன்யுவின் பார்வையை பார்க்கமலேயே உணர்ந்து கொண்ட உத்ரா, தலை கவிழ்ந்திருந்தவாரே நடந்து வர, அந்த மன்மதனின் பார்வை அவளை பயணித்து வந்து உரசியதோ என்னவோ. மேனி எல்லாம் புல்லரிக்க, மீள முடியாத உணர்வுக் கடலில் சிக்கித் தவிக்க, அனைவரும் தன்னையே இமைக்காது பார்க்கும் நாணம் மறுபுறம் என்று உணர்ச்சிகளின் குவியலாய் மணமேடைக்கு வந்து அனைவருக்கும் வணக்கம் செலுத்தியவள், அபிமன்யுவின் அருகே அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரிக்கத் துவங்கினாள்.

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்று ஐயர் மைக்கில் உரக்கக் கூற, மங்கள வாத்தியங்கள் யாவும் அதிக சப்தத்துடன் முழங்க, விஜயவர்தன் ரஞ்சினியின் செல்ல புதல்வியும், விஜய் நீரஜாவின் இயற்கை வரமான ஆசை புதல்வியுமாக,

அபிமன்யுவின் அருகே அமர்ந்திருந்த உத்ராவின் இதயத் துடிப்புகள் தாளமாய் கொட்ட, தலை கவிழ்ந்து விழிகள் சிறிதாக கலங்கியிருங்க அமர்ந்திருந்தவளை ஒரு விநாடி பார்த்த அபிமன்யுவின் கரத்தில், சிம்மவர்ம பூபதியும், இமையரசியும் ஆசிர்வதித்து மங்கள நாணை எடுத்துக் கொடுக்க, தன்னவளின் செவியருகே சென்ற அபிமன்யு எதையோ கிசுகிசுக்க, அதுவரை தாலி கட்டும் பொழுது மணப்பெண்ணுக்கே உரிய உணர்ச்சிகளுடன் அமர்ந்திருந்தவள், பக்கென்று சிரித்துவிட,

அந்த கடவுள்களின் சாட்சியாக தன்னவளின் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, ‘இனி இவள் என்னவள். இவள் என் பொறுப்பு’ என்று சத்தியம் செய்து உரிமையாக அவளை மனைவியாக்கியவன், அவளை பால் வதனத்தை மென்மையாய் பற்றி, உரிமையும் கம்பீரமுமாக, மடவோளின் நெற்றியில் தன் இதழைப் பதிக்க, பெண்ணவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, நீரஜாவின் விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் கசிந்தது.

அடுத்து அக்னியை வலம் வந்து பெண்ணை தாரை வார்க்கும் முறை வர, விஜயவர்தன், ரஞ்சனி, நீரஜா மூவரும் ஒரு பக்கம் நின்று கொள்ள, மறுபக்கம் அரிமா பூபதியும், அழகியும் நிற்க, அவர்களுக்கு பின்னால் மொத்த குடும்பமும் நின்றிருக்க,

விஜயவர்தனின் கரத்தோடு ரஞ்சனியின் கரத்தை வைத்த ஐயர், அடுத்து நீரஜாவின் கரத்தையும் வைக்க, கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் முகத்தைப் பார்த்து வைக்க, நீரஜாவின் கரத்தோடு வந்து ஒரு கரம் இணைந்தது.

நீரஜாவும் மற்ற அனைவரும் யாரென்று பார்க்க, அனைவரின் இதயத் துடிப்புகளும் ஒரே கணத்தில் அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதற, சிலை போல் தன் முன் நிற்பவரையே பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவின் இதழ்கள் நடுங்க, தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் காதலியை கண்ட விஜய்க்கும் சரி நீரஜாவிற்கும் சரி நினைவில் வந்தது, ‘என்னை காக்க வைக்காம வந்திடுங்க’ என்று நீரஜா அவரை கடைசியாக சந்தித்த போது கூறியது.

நீரஜாவின் விழிகளோடு விழிகள் கலந்தவர், “ரொம்ப காக்க வச்சுட்டேன் அம்மாடி.. ஆனா, நம்ம இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு சரியா வந்துட்டேன் பாரு” என்று கூற, கரகரவென்று விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோட, நீரஜா தன்னவரிடம் தலையை அழுகையுடனே, ‘ஆம்’ என்பது போல அசைக்க, உத்ராவை அவளது பெற்றோர்கள், தாரை வார்த்துக் கொடுக்க,

உத்ராவின் மொத்த உணர்வுகளும் விழியில் இருந்து மொத்தமாக நான்கு சொட்டு நீராய் அவளைப் பெற்றவர்களின் கரத்திலும், வளர்த்தவர்களின் கரத்திலும் சிதற, உத்ரா.வி (விஜயவர்தன்/விஜய்) இப்போது மொத்தமாக மிஸஸ்.உத்ரா சித்தார்த் அபிமன்யுவாக, திருமண வாழ்வில் தன் முதல் அடியை எடுத்து வைத்திருந்தாள், அந்த மானினி.

விஜய் அபிமன்யுவையும், விக்ரமையும் பார்க்க, மூவரின் விழிகளும் ஒரே நேரத்தில் சங்கமித்து அர்த்தங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொள்ள, மூவரும் வாகையுடன் இமை சிமிட்டிக் கொண்டனர்.

error: Content is protected !!