kv-13
kv-13
13
அன்று காலை தான் விஜய் வரும் தகவல் வந்திருக்க, மறுநாளே அவன் நிற்பான் என்று அவள் நினைக்கவில்லை. காலையில் எப்போதும் போல அந்த பத்மநாபனை சந்தித்துவிட்டு வழக்கம் போல அந்தப் பொக்கிஷம் தனக்கே கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டவள், வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் காலை உணவை முடித்தாள்.
நேற்றிலிருந்து தீவிர சிந்தனையில் இருப்பவளை, அவளது தாய் கவனித்தாலும் பெரிதாகக் கேட்கவில்லை. பிரச்சனை என்றால் அவளே சொல்லுவாளே என்று விட்டார். தந்தையோ உடல் வலியில் இருக்க இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. அவள் விஜயின் நினைவில் சாப்பிட்டு எழுந்து தன் அறைக்குச் சென்றாள், அதற்கு முன் அவளது அலைபேசி ஒலிக்க, புதிய எண்ணைக் கண்டு புருவ முடிச்சுடன் அதை இயக்கினாள்.
இவள் ஹல்லோ சொல்லும் முன்பே,
“ஹலோ , ஐ அம் விஜய். விஜயபூபதி. அம் ஐ ஸ்பீகிங் டு மிஸ். ஜான்விவர்மா?” நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசராமல் பேசியவனின் கம்பீரக் குரல் அவளது காதுகளையும் தாண்டி நெஞ்சுக்குள் இறங்கியது.
அவனது பெயரைக் கேட்டதுமே, ஏனோ உடல் சிலிர்த்து நா வரண்டது. அதுக்குள்ள இங்க வந்துட்டானா! என வியந்தவள் அவன் இரு முறை ஹலோ ஹலோ என்று கேட்பது நடப்பிற்கு கொண்டு வர,
“எஸ். ஜானவி ஹியர்.” அவளுக்கே உரிய நிமிர்வும் தைரியமும் துளியும் குறையவில்லை அவள் குரலில்.
“நான் அந்த ஆறாவது அறையை ஆராய வந்துட்டு இருக்கேன். உங்களுக்கும் தகவல் வந்திருக்கும்னு நினைக்கறேன். நீங்க தான் இப்போ இன்சார்ஜ்ன்னு சொன்னங்க. நான் கோவில்ல இருக்கறவங்க கிட்ட எதுக்காக வந்திருக்கேன்னு சொன்னா அது கண்டிப்பா பப்ளிக்குக்கு பரவிடும். நீங்க என்ன நினைக்கறீங்க?” அவளை வரச் சொல்ல நேரடியாகக் கேட்காமல் இப்படிக் கூற,
‘ஓ! இவரு என்னை வா ன்னு கூப்பிட்டா கெத்து குறஞ்சிடுமோ! வரேன் டா.. உன்னை வெச்சு செய்யறதுக்குத் தான இருக்கேன்.’
“ பப்ளிக்குக்கு தெரியற மாதிரி நானும் விடமாட்டேன் மிஸ்டர்.விஜய். நீங்க ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க, நான் அங்க இருப்பேன்.” பதிலுக்குக் அவனை காக்க வைக்க நினைத்தாள்.
“நான் இனிமே தான் கிளம்பனும். சோ , அங்க வர பத்து நிமிஷம் ஆகும். வெய்ட் பண்ணவேண்டிய அவசியம் இல்ல. சி யூ” என இணைப்பைத் துண்டித்தான்.
‘என்ன திமிர் உனக்கு. வெய்ட் பண்ண முடியாதோ. என்ன தோரணையா பதில் சொல்றான். இரு டா, உன்னை கீ குடுக்கற பொம்மை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்ட வைக்கறேன்.’ பொருமிக்கொண்டே கிளம்பத் தயாரானாள்.
அவனிடம் ஏற்கனவே பத்து நிமிடம் என்று கூறிவிட்டதால், அதற்கு மேல் தாமதித்தால் தெரிந்துவிடும் என்று , அவனை சற்று விட்டுத் தான் பிடிக்க வேண்டும் மூச்சை வெளியிட்டுத் தன்னை சமன் செய்து கொண்டாள்.
கோவிலுக்குள் பெண்கள் புடவையோ அல்லது தாவணியோ தான் அணியவேண்டும் என்பதால் அவள் போட்டிருந்த அந்த சுடிதாரை விடுத்து, ஓர் அழகிய சிகப்பு நிறப் புடவையைக் கட்டிக் கொண்டாள்.
கண்ணாடி முன் நின்று தன் அழகை சரிபார்த்தவள், அவளது தங்கக் கைகளில் ஒரு மெல்லிய வைர வளையல் அணிந்து, தன்னுடைய சிவந்த முகத்தில் அதற்கு ஏற்றார் போல சிகப்பு வட்டப் பொட்டிட்டு கருங்கூந்தலை ஒரு சிறிய அளவு க்ளச்சில் அடக்கி கண்களில் மை தீட்டினாள். தனது அழகிய ஓவியம் போன்ற உதட்டில் மெல்லிதாக க்ளாஸ் மட்டும் போட்டு அதைப் பளபளக்கச் செய்தாள்.
அவளுக்கே உரிய , பிரத்யேகமாக அவளுக்காக மட்டுமே தயாரித்துத் தரப் படும் பர்ஃபியூமை மணிக்கட்டிலும் , கழுத்து வளைவிலும் சிறு உடையிலும் தெளித்தவள், இதோ கிளம்பிவிட்டாள்!
அவளது வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக் காத்திருந்தவனை சந்திக்க அவள் சென்றாள்.
அவளது அரண்மனைக்கும் கோவிலுக்கும் வெகு தூரம் இல்லை. நடந்தே வந்துவிடலாம். அவள் வாசலை அடையும் நேரம், சரியாக அவனும் எதிரே வந்தான். இவள் வடக்கு என்றால் அவன் தெற்கு. எதிரெதிரே நின்றனர்.
ஆறடியில் அம்சமாக , வெண்ணிற வேட்டி உடுத்தி, மேல் துண்டை தன் முதுகையும் புஜங்களையும் மறைந்தவாறு போர்த்தி, அடர்ந்த கேசத்தினை அழகாக வாரினாலும் அது காற்றில் கலைந்து தனி அழகைக் கொடுத்தது. நெற்றியில் சந்தனம் கீற்றாகத் தீட்டி, நாங்க நாள் தாடியுடன், ஒரு கையில் மட்டும் டாக் ஹோயர் வாட்ச் அணிந்து, ஆண்மையின் திமிரோடு , கூறிய விழிகளால் அவளைத் துளைத்தபடி அவள் எதிரே நின்றான்.
அவளோ மனதில் இருப்பதை வெளியில் காட்டாதவாறு முகத்தை நிர்மலமாக வைத்திருந்தாள். ராஜவம்ச அழகு அவளிடம் கொட்டிக் கிடந்தது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அழகுக்கு பச்சமில்லை அவளிடம். செருப்பில்லாத அவளது பாதம் அந்த மண் தரையில் பதிந்து இருக்க, அவை தும்பைப் பூப் போல இருந்தது.
அனால் அவள் கண்களில் ஒரே நொடி! ஒரே நொடி தெரிந்த அகத்தை, திமிர், விஜயின் கண்களில் இருந்து தப்பவில்லை. இவள் தான் அவள் என்று கண்டதும் கண்டுகொண்டான்.
“மிஸ்டர்.விஜய்வர்மா…!” மெல்லிதாக அவள் சந்தேகமாகக் கேட்க,
“எஸ் மிஸ்.ஜானவி.” மருந்துக்கும் சிரிப்பில்லை அவனிடம்.
‘ஒரு பாவமும் செய்யாத என் தந்தையைக் கொன்ற சூர்பனகை. ஆபத்து எப்போதும் அழகாகவே இருக்கும் என்பதுக்கு இவளே சாட்சி. உன்னை எல்லாம் கொலைகாரின்னு சொன்னா கொழந்த கூட நம்பாது.. ச்சை.. பதவிக்காக கூடப் பிறந்தவங்களயே கொல்ற ராஜவம்சம் தான நீ. அதன் அந்த புத்தி. உன்னை … ’ பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முன் நின்றான்.
“வாங்க,உள்ள போகலாம்.” அடக்கத்தின் மறு உருவமாக அவள் பேச, அவனும் அகத்தினை மறைத்து நடந்து கொண்டான்.
அவள் உள்ளே செல்ல, இவனும் பின் தொடர்ந்தான்.
யாருக்கும் அவள் அங்கே பதில் சொல்லவோ அல்லது அனுமதி பெறவோ வேண்டியது இல்லை. நேராக கற்பகிரகத்தில் இருக்கும் சுவாமியை தரிசிக்கும் உரிமையும் அதிகாரமும் அவளுக்கு உண்டு. அப்படி அவள் செல்ல, விஜய்க்கு அவளின் செயலைக் கண்டு உதடு வளைந்தது.
அவள் யாரையோ அழைத்துக் கொண்டு உள்ளே செல்வதை அங்கிருந்த கோவில் அதிகாரிகளும் அங்கு வேலை செய்பவர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். சிலர் மரியாதைக்கு அவளைப் பார்த்து தலையசைத்து வணக்கம் சொல்ல, இவள் பதிலுக்கு உதட்டை சிரித்தபடி வைத்தே நகர்ந்தாள். ஒரு தலையசைப்புக் கூட இல்லை. சிலருக்கு அதுகூட இல்லை.
‘ராஜ வம்சம்னா திமிர் வந்துடுமா? இந்தக் காலத்துல ஏது ராஜாவும் கூஜாவும்.. அடக்கறேன் இரு டி‘ கருவினான்.
அவளுக்கோ அவனை நேராக அந்த அனந்த சயனத்தில் இருக்கும் சுவாமியைக் காட்டும் விருப்பம் இல்லாததால் அவனை அந்தப் பிரகாரத்தின் பின் பக்கம் வழியாக அழைத்துச் சென்றாள்.
அவன் ஒரு நிமிடம் நிற்க, அவளோ அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளைக் கேள்வியாகப் பார்த்தான். அவன் பார்த்ததின் அர்த்தம் ஜானவிக்கு நன்றாகவே புரிந்தது. அவனை ஏன் நேர் வழியில் அழைத்துச் செல்லவில்லை என்பது தான் அவன் பார்வையின் மொழி.
“இது எங்க குடும்பத்துல இருக்கறவங்க மட்டும் போற வழி. நீங்க தரிசனம் பண்ணனும்னா வேற வழில தான் போகணும். ஆனா, இப்ப நீங்க பார்க்க வந்திருக்கறது ஆறாவது நிலவறை தானே. அதுக்கு வேற வழி இருக்கு.” அலட்சியம் அவள் குரலில் வழிந்தது. நீ இந்த வழியாக செல்ல அருகதையற்றவன் என்பதை சொல்லாமல் சொன்னாள்.
“ஓஹோ! நிலவறை மூலவரோட சிலைக்கு கீழ இருக்கறதா சொன்னங்க!?”
“ஆமா. ஆனா இந்தக் கதவுகளைத் திறக்க உத்தரவு வந்த போது, எல்லாராலையும் அந்த வழியா கூட்டிப்போக முடியாதுன்னு தான் பின் பக்கம் பூட்டி இருந்த படிக்கட்டு வழியை சரி பண்ணி இருக்கோம்.” விளக்கம் தந்தவள், மேலும் நடந்த படியே சொல்ல,
அவளை தொடர்ந்து சென்றான் விஜய். அவள் செல்லும் வழியில் அந்தச் சுவற்றில் நிறைய சிற்பங்கள் செதுக்கப் பட்டிருப்பதை கவனித்தான் விஜய், அவை அனைத்துமே அந்தக் கதவுகளைப் போலத் தான் இருந்தது.
இதில் கூட மூடிய கதவுகளைத் தான் செதுக்கி இருந்தார்களே தவிற, அவை திறக்கப் பட்டது போல எதுவும் இல்லை என்பதை அவன் கவனித்தான்.
அவசரமாக ஓடி வந்த ஒருவர், “அம்மா, கூட வரட்டுமா..?” மூச்சுவாங்க விஜய்யை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நின்றான்.
“இல்ல, வேண்டாம் சாமிகண்ணு , நானே பாத்துக்கறேன்” அவனை அனுப்பிவிட்டாள்.
கீழே இறங்கிய கல் படிகளுக்கு ஒரு கதவு இருக்க அதைப் பூட்டியே வைத்திருந்தனர். தான் கையேடு கொண்டு வந்திருந்த சாவியைக் கொண்டு அவள் கதவைத் திறந்தாள்.
படிகள் கற்களால் இருந்தது. ஒரு ஐம்பது படிகள் இறங்கி செல்லும்படி இருந்தது. அவற்றை கடந்தபின் சமதளம் வந்தது. அங்கே வரிசையாக பல கதவுகள் ஆங்காகே இருந்தது. திறக்கப்பட்ட கதவுளை அரசாங்கமே பூட்டி சீல் வைத்திருப்பதைப் பார்த்தான்.
“இந்த கதவுகள்ல கிடைத்த நகைகள் நாணயங்கள் எல்லாம் இப்போ எங்க இருக்கு? அதுக்கும் நீங்க தான் இன்சார்ஜ்ஜா?” அவளைப் பார்க்காமல் அந்தக் கதவினைப் பார்த்த படி அவன் கேட்க,
“ அது எல்லாமே கோவில் சொத்து. எங்க பரம்பரை இந்த ஊரையே அந்த பத்மநாபனுக்கு அற்பனிச்சாச்சு. அதுனால எல்லாமே கடவுளுக்குத் தான் சொந்தம். எல்லாம் அந்தந்த அறையிலேயே வெச்சு பூட்டி இருக்கோம்.” அவளை சந்தேகமாக அவன் கேட்டது பிடிக்காமல் கோபமாக பதில் தந்தாள்.
“ஒ! இப்பவும் நீங்க தான் காவலா?” நக்கலாக அவன் சிரிக்க, அது கூட அவனுக்கு அழகைத் தந்தது.
அதை அவள் உணர்ந்தாலும் ரசிக்கும் நிலையில் இல்லை.
“ஹல்லோ.. என்ன சொல்றீங்க? நாங்க அதுக்கு ஆசைப் படரோம்னு சொல்றீங்களா? அப்படி உரிமை கொண்டாடனும்னா எப்போதோ அதை எங்களால எடுத்து இருக்க முடியும்.நாங்க அதை எல்லாருக்கும் தெரியும்படி தான் வெச்சிருக்கோம். இப்பவும் கணக்கு சரியா அரசாங்கத்துக்கு கொடுத்திருகோம்.” குரல் சற்று உயர,
“ அப்படியா… கணக்கு சரியா இருந்தா சரி.” மீண்டும் எள்ளல் அவனது குரலில்.
இப்போது பல்லைக் கடிப்பது அவள் முறை ஆயிற்று.
“சரி அந்த ஆறாவது கதவு?” அவள் அடுத்து விளக்கம் கொடுக்கும்முன்
அவளை தவிர்ப்பது போலத் தன் வேலையில் கவனம் வந்தது போல நின்றான்.
“உங்களுக்குப் பின்னாடி தான் இருக்கு.” அவனை முந்திக் கொண்டு சென்றாள்.
அந்தக் கதவின் அருகே சென்றவனுக்கு உள்ளுக்குள் ஒரு அதிர்வு உண்டாவதை உணர முடிந்தது. அது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.
அவனுக்கு ஜானவி முது காட்டி நிற்க, இவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் கதவைப் பார்த்தபடி நின்றான்.
நாகங்களின் முகங்கள் மட்டும் அந்தக் கதவில் இருந்தது. ஆனால் அவன் கனவில் பார்த்தது போல இல்லை. அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. இந்தக் கதவிற்குள் தான் இன்னொரு கதவு இருந்தது அதை தான் அவர்களால் திறக்க முடியவில்லை என்று அவான் தந்தையின் கோப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. உடனே அவளைப் பார்த்து,
“இத ஓபன் பண்ணுங்க.” என்றான்.
அவளது பெரிய கண்கள் இன்னும் பெரிதாக விரிய,
“வாட்..!??” புருவத்தை சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“இத ஓபன் பண்ணது எனக்குத் தெரியும். சோ …” தாடையை ஒரு விரலால் தடவியபடி அவன் நிற்க,
“ஆமா, இத ஓபன் பண்ணங்க.. அதுக்குள்ள இதே மாதிரி ஒரு கதவு.. அவ்வளோ தான். சோ எல்லாம் ஒன்னு தான்.” தோளைக் குலுக்கி ஜானவி சொன்னது அவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“நான் நீங்க சொல்ற ஸ்டோரிய கேட்க வரல, அரசாங்க உத்தரவோட இதை ஆராய வந்திருக்கேன். ஹோப் யூ காட் இட்(hope you got it)” குரலில் கடுமை கூடியது.
கண்களை மூடித் திறந்தவள் அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல், அந்தக் கதவின் வலது பக்கம் இருந்த சிறு பொந்தில் கை வைக்க, அந்தக் கதவு சிறு சத்தம் எழுப்பியது. பின் அந்த நாகங்களின் முகத்தை இரு கைகளாலும் ஒரே நேரத்தில் அழுத்த கதவு திறந்து கொண்டது.
உள்ளே கும் இருட்டு. அத்தோடு மனதை மயக்கும் நல்ல வாசம் வேறு வந்தது.அதை இழுத்து சுவாசித்து உள் வாங்கிக் கொண்டான் விஜய்.
ஜானவியாலும் அதனை தவிர்க்க முடியவில்லை. அவளும் சுவாசிக்க, தன்னிச்சையாக இருவரின் வலது காலும் ஒரே நேரத்தில் உள்ளே வைக்கப்பட்டது.