அறையின் கதவு விடாமல் தட்டப்பட்டதில் அவசரமாக கதவைத் திறந்தார் சோலையம்மாள். “அப்பத்தா!” கதறிக்கொண்டே தனது நெஞ்சில் விழுந்த பேத்தியை ஆறுதலாய் அணைத்து விட்டு விலக்கினார்.
“என்ன கண்ணு? இந்த நேரத்துல வந்து நிக்கிற!” வார்த்தையில் வாஞ்சை இருந்தாலும் கடினப்பட்டு வந்தன.
பேத்தி திருமணம் முடித்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக மெய்யப்பன், சம்மந்தி நண்பரோடு உறவுகளையும் அழைத்துக் கொண்டு தீர்த்தத்துடன் தோப்பு வீட்டில் தஞ்சமடைந்திருக்க, யாரும் இவள் இப்படி வெளிவந்ததை பார்க்கவில்லை. இந்தளவில் நிம்மதி பெருமூச்சு விட்டார் சோலையம்மாள்.
“எனக்கு பிடிக்கல அப்பத்தா… நான், உன் கூடவே படுக்கறேன்.” தேம்பிக்கொண்டே அறைக்குள் செல்ல முயன்றவளை தடுத்து, முழுதாய் ஆராய்ந்தார்.
அழுது வடிந்த முகத்தில் ஆங்காங்கே நகக்கீறலின் தடம் பதிந்திருக்க, உடுத்தியிருந்த பட்டுப்புடவையும் கலைந்து முக்கால்வாசி அலங்கோலமான நிலையில் வந்திருந்தாள்.
‘அவசரக்காரன், புது மாப்பிள்ளை புத்தியை காண்பித்து விட்டான்’ கடிந்து கொண்ட மனமும், ‘இந்தளவுக்கு கூட தொட்டுப் பார்க்காமல் இருப்பவன் ஆம்பளை ஆவனா?’ மாப்பிள்ளையின் லட்சணத்தை மெச்சிக் கொண்டவராக பேத்தியை முறைத்தார்.
“நான் என்ன சொல்லி அனுப்பினேன், நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க?” அதட்டலுடன் கேட்க, ஓவென்று அழுதாள் ஸ்வாதி.
“அது என்னன்னா… ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா இதெல்லாம் சகஜம் கண்ணு. ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். அப்புறம் பழகிரும். இதுக்கு போயி அழுதுட்டு வரலாமா? நீ இப்படி வந்து நிக்கிறதை பார்த்தா உன் அப்பன், உன்னை இப்பவே கையோட ஊருக்கு கூட்டிட்டு போயிடுவான்.
உனக்கு தாலி கட்டினவனும் இதுதான் சாக்குன்னு உன்னைத் தள்ளி வச்சுட்டு, இன்னொரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த ஆரம்பிச்சுடுவான். கடைசியில நீதான் ஒத்தையில நிக்கணும். தேவையா உனக்கு? கொஞ்சம் அனுசரிச்சு போ ராசாத்தி!” மிரட்டலாக ஆரம்பித்து பாசத்தில் முடித்த பாட்டியின் சமாதானங்கள் பேத்தியின் காதுகளுக்கு எட்டவே இல்லை.
கணவனுடன் இருந்த கொஞ்ச நேரத்திலேயே அத்தனை அவஸ்தைகளை சந்தித்திருந்தாள். இளமாறன், தனது ஆசைகளை அதிரடியாக செயல்படுத்தி மிரட்டியதில், பலம் கொண்ட மட்டும் அவனது கைகளில் கடித்துவிட்டே ஓடி வந்திருந்தாள்.
மீண்டும் அதுவே தொடருமென்றால் தனியாகவே இருந்து விடலாமென்ற திடீர் ஞானோதயத்தில் பாட்டியின் பேச்சுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாள்.
“எனக்கு எதுவும் வேண்டாம். நான் அப்பாகிட்ட போறேன்.” அடமாய் செல்ல முயன்றவளை இழுத்துப் பிடித்து நிறுத்திய சோலையம்மாள் சப்பென்று கன்னத்தில் அறைந்தார். திடீரென கிடைத்த அடியில் அரண்டு விழித்தவளுக்கு பாட்டியின் கடுமையான பாவனை புதுவித பயத்தை உண்டு பண்ணியது.
சிறு வயதில் அடாது குறும்பு செய்தவளை அப்படிச் சொல்லி பயமுறுத்தியே வழிக்கு கொண்டு வந்து விடுவார். அந்த பயத்தை மனதில் பதிய வைக்க, ஒருமுறை வீட்டு நாய்குட்டிக்கு சூட்டுக் கம்பியால் ஒரு இழு இழுத்துவிட்டு அந்த வாயில்லா ஜீவன் துன்பப்பட்ட அவதியை பேத்திக்கு கண்முன்னே காட்டியிருந்தார். அந்த பயத்தில் பாட்டி சொல்லுவது எதுவென்றாலும் தட்டாமல் செய்ய பழகிக் கொண்டாள்.
“போகப்போக பழகிடும் தங்கம். இதுக்கு போயி அலட்டிக்கலாமா?” பயத்தோடு பாசத்தையும் ஊட்டி மீண்டும் அறையின் வாசல் வரை பேத்தியை விட்டுவிட்டு வந்தார் சோலையம்மாள்.
அறையின் வெளியே பாட்டியின் கம்பிச் சூடு பயங்காட்ட, பழையபடி அறைக்குள் வெடவெடத்த கோழியாக நடுங்கிக் கொண்டே நுழைந்தாள்.
மறுநாளின் விடியல் அவளுக்கு அஸ்தமனத்தையே கொடுத்திருந்தது. எங்கெங்கோ ரணமாய் வலித்த இடங்களை பெற்றவளிடம் சொல்வதற்கும் கூசிப் போனாள். “சேலையை கட்டி விடுகிறேன்.” என்று காஞ்சனா அருகில் வந்தாலும் தவிர்த்துப் பின்னடைந்தாள்.
அருகில் வந்து உரசும்படி யார் நின்றாலும் கணவனின் ஆக்ரோஷ தீண்டலையே நினைவுறுத்த, தயங்கியே இருப்பவள் முழுதாய் நடுங்கி ஒதுங்கி நிற்கத் தொடங்கினாள்.
முன்தின உடல் சூட்டின் நினைவில் காஞ்சனா அவளைத் தொட்டுப் பார்த்தாலும் தள்ளி விட்டாள். ஏனென்ற பார்வைக்கே முணுக்கென்று கண்களில் நீர் தேங்கிக் கொள்ள எதையும் பெற்றவர்களால் அழுத்திக் கேட்க முடியவில்லை.
‘பெற்றோருடன் இருந்து விடுகிறேன்.’ வாய்வரை தைரியமாய் வந்த வார்த்தைகள், பாட்டியின் கண்டனப் பார்வையில் அடங்கிப் போனது. அந்தளவுக்கு காலை எழுந்ததும் பேத்தியை எச்சரித்து வைத்திருந்தார்.
“அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, புருஷன் கூட வாழத் தெரியாத பொண்ணா வளத்திருக்கேன்னு எனக்கு கெட்டபேரு வாங்கிக் கொடுத்த… அப்புறம் அப்பத்தாவை உசுரோட பார்க்க முடியாது. இருக்கவே இருக்கு, தோட்டத்து அரளி விதை.” மீண்டும் மிரட்டி இருக்க மனதில் இருப்பதை சொல்ல முடியாத கோழையாக முதன்முதலாய் உணர்ந்தாள்.
பாலக்காடு, மலம்புழா கிராமத்தில் இளமாறனின் வீடு மிகப்பெரிதாக செல்வாக்குடன் இருந்தது. ஊருக்குள் சென்று இறங்கியதும் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கும்பிட்டு, ஊருக்கே விருந்து வைத்ததில் பெண்வீட்டாருக்கும் ஏகதிருப்தி. அந்த மகிழ்வுடன் ஸ்வாதியை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினர்.
அந்தப் பெரிய வீட்டில் மூத்த தலைமுறையான தணிகாசலம், மருதாயி தம்பதிகள் அடங்கி, ஒடுங்கி நடமாடினார்கள். இளமாறனின் அம்மா பஞ்சவர்ணம் சொல்வதே சட்டமாகவும் சாசனமாகவும் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்பா கந்தனும் தன்பங்கிற்கு அதட்டி உருட்டி குடும்பத்தினரை பயங்காட்டிக் கொண்டிருந்தார்.
புகுந்த வீட்டில் கொடுமை செய்யாவிட்டாலும் ஸ்வாதியை தாங்கிக் கொள்ளவில்லை. ‘எதற்கும் தயங்கி நிற்கிறாள். பேசவும் யோசிக்கிறாள்’ என்று மருமகளின் முதுகில் அடிகளை வஞ்சனையில்லாமல் கொடுத்தே சின்னச் சின்ன வேலைகளை கற்றுக் கொடுக்கத் தொடங்கியிருந்தார் மாமியார்.
ஸ்வாதியின் பிள்ளை மனதின் ஏக்கங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வார் யாரும் இல்லை. தனது தேவைகளை வெளியில் சொல்லவும் பயம், தயக்கம். எல்லாவற்றுக்கும் மேல் கணவனாக வாய்த்தவன் கண்மண் தெரியாத முரட்டு ஆசாமியாகவே அவளிடம் நடந்து கொண்டான்.
மனைவி என்பவள் கட்டிலில் சுகப்பட மட்டுமே என்ற உரிமையில் உணர்வில் அவளை வக்கிரமாய் நாடினான். இரவு நேரத்தில் அவன் மில்லியை(சாராயம்) கணக்கின்றி ஏற்றிக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், புட்டியை கையிலும் ஏந்திக் கொண்டு வந்தான்.
விடாது உதட்டில் குடியிருக்கும் பீடி நாற்றமும் ஸ்வாதியின் குடலைப் புரட்டி எடுத்து விடும். அவளைக் கசக்கிவிட்டு பீடி இழுப்பில் சுயநினைவின்றி கிடப்பது இளமாறனின் வாடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
“இந்த வாடை பிடிக்கல… இப்படி இருக்காதீங்க!” இவள் முகம் சுழித்து தள்ளி விட்டால்,
“சரக்கை டெஸ்ட் பண்ணிப் பாக்க வேணாமா?” புது குண்டைப் போட்டு சுருதி ஏற்றிக் கொண்டான்.
“நீங்க என்ன வேலை பாக்கறீங்க?” திடீரென்று முளைத்த துணிவோடு கேட்க, “அட, உனக்கும் பேசத் தெரியுதே!” என அசந்து போனான் இளமாறன்.
“இது தெரியாமயா கட்டிகிட்ட?”
“அப்பத்தா, தாத்தா சொல்லி…” என மென்று முழுங்கி, அதற்கு மேல் எப்படிச் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை.
“அப்போ, நானா சொல்ற வரைக்கும் எதுவும் கேக்காதே!” என்றதும் புரியாமல் விழித்தாள்.
“புருஷனை கேள்வி கேக்குறவ நல்ல பொண்டாட்டிய இருக்க மாட்டா… உங்க பாட்டி சொல்லி அனுப்பலையா?” திமிராகக் கேட்க, வாயடைத்துப் போனாள். அவனது செயல்பாடுகள் எதுவும் இவளுக்கு பிடிபடவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் பெண்ணுடலை ரணப்படுத்தினான். தன் வேதனையை ஜாடைமாடையாக வீட்டுத் தொலைபேசியின் வழியாக பாட்டியிடம் சொன்னாலும் “ஆம்பளைன்னா அப்படிதான் இருப்பான். பொம்பளை பிள்ளை நீதான் பொறுத்துட்டு போகணும்.” ஒரே அறிவுரையில் ஊமையாக்கி விடுவார் சோலையம்மாள்.
இவர்கள் இருந்த ஊருக்கு அவ்வளவாக அலைபேசிக்கான அலைவரிசை கிடைக்காத நிலை. செல்பேசி கோபுரங்கள் அதிகமாய் நிறுவப்படாத காலம் அது. எளிமையான பட்டன் ஃபோனும், 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை வசதிகளும் வெகு அபூர்வமாக மட்டுமே புழக்கத்தில் இருந்தன.
மகளுக்கென்று தனியாக செல்பேசியை வாங்கிக் கொடுத்திருந்தார் விஸ்வநாதன். ஆனாலும் நினைத்தவுடன் பேசுவதற்கோ காணொளி அழைப்புகளில் பார்த்துக் கொள்வதற்கோ வாய்ப்புகள் கிட்டவில்லை.
ஸ்வாதியை வீட்டை விட்டு அனுப்புவதே இல்லை. தொலைபேசியிலும் அடிக்கடி பேசக்கூடாது. கூண்டுக்கிளியாக வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தாள். வீட்டுப் பணியாட்களிடம் பேசுவதற்கு மொழி மிகப்பெரிய தடையாக இருந்தது. அவளிருந்த மனநிலையில் மலையாளத்தை கவனித்து கேட்கக்கூட முயற்சி செய்யவில்லை.
அவளின் மனமெல்லாம், ‘ரிசல்ட் எப்போ வரும்? அப்பா எந்த ஸ்கூல்ல சேர்ப்பார்? யூனிஃபார்ம் பாவாடை தாவணியா, சுடிதாரா?’ போன்ற கனவுகளில் மிதந்தது.
அவளது பதினாறாவது பிறந்தநாளினை தஞ்சாவூரில் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு, புது தம்பதிகளை அங்கே வரவழைத்தார் மெய்யப்பன். கணிசமான நகைகளும் வெகுமதிகளையும் விஸ்வநாதன் அள்ளி வழங்க, இளமாறனும், ஸ்வாதியின் பெயரில் தோப்பு வாங்குவதற்காக போட்ட டோக்கன் அட்வான்ஸ் பத்திரத்தை எடுத்துக் காட்டினான்.
பிறந்த வீட்டினருக்கு அதுவே நிறைவான சந்தோசத்தை கொடுத்தது. தங்கள் வீட்டுப் பெண்ணை தனியே அழைத்துச்சென்று எப்படியிருக்கிறாய் என்றுகூட விசாரிக்கவில்லை. நிறைவான மனதுடன் மீண்டும் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வேலையின் நிமித்தம் முழுதாய் ஒன்றரை மாதம் கழித்து மகளைப் பார்க்க வந்தார் விஸ்வநாதன். நாள் தவறாமல் அன்னையிடமும், இளமாறனிடம் மகளைப் பற்றி விசாரித்துக் கொள்வார். நல்லவிதமாக அவர்கள் சொல்லும் பொய்மொழியை நம்பியே இருந்து விட்டனர் பெண்ணின் பெற்றோர்.
பத்தாம் வகுப்பில் தொன்னூறு விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள் ஸ்வாதி. மகளிடம் சொன்னபடியே மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு அவளை அழைக்க வந்திறங்கினர் விஸ்வநாதனும் காஞ்சனாவும்.
நெடுநாட்கள் கழித்து பிறந்த வீட்டினரைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வந்து நின்றவளை, நீராகம் கொண்டு வரச் சொல்லி விரட்டியடித்தார் பஞ்சவர்ணம். பொம்மையாக அவரின் பேச்சிற்கு அடிபணிந்த மகளை பார்த்து பெரிதும் வருத்தம் கொண்டார் விஸ்வநாதன்.
இத்தனை நாள் குடித்தனம் நடத்தியதில் புகுந்த வீட்டில் உள்ளவர்களின் அதட்டல்களுக்கு பழகிக் கொண்டிருந்தாள் ஸ்வாதி. இதுவும் வளர்ச்சியின் ஒரு நிலை. மனம் பக்குவமடையத் தொடங்கியதின் வெளிப்பாடே!
மதிப்பெண் பட்டியலையும், மேல்நிலை(பதினோராம் வகுப்பு) வகுப்பிற்கான சேர்க்கைப் படிவத்தையும் இளமாறனிடம் கொடுக்க, “நானே இவ்வளவு படிக்கல… என்னை விட அதிகமா படிச்சு இவ என்ன பண்ணப் போறா?” இகழ்ச்சியாய் தட்டிக் கழித்தான்.
சட்டென்று அவற்றைப் பிடுங்கிக் கொண்ட பஞ்சவர்ணமும் சுக்குநூறாக கிழித்து எறிந்தார்.
“இவ படிச்சு தான் இந்த ஊருக்கு விளக்கேத்தி வைக்கப் போறாளா? அப்படியென்ன அவசியம் வந்தது?” அலட்சியமாக கேட்க, விஸ்வநாதன் நிபந்தனையை நினைவுபடுத்தினார்.
“கல்யாணம் நின்னு போகாம இருக்க ஒத்துக்கிட்டோம். சொன்னதெல்லாம் அப்படியே நடத்திக்கணுமா என்ன? உங்க பொண்ணு பேருல தோப்பு வாங்கி பண்ணையம் பண்றான் எங்க புள்ள… இதெல்லாம் பெருசா தெரியலையா?” கந்தன் சொன்னதும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை.
ஊரார் முன் நிலத்தை வாங்கி இவளின் பெயரில் பதிவு செய்து, மேஜர் ஆகாத காரணத்தால் இளமாறனின் பவருக்கு மாற்றிக் கொண்டது யாருக்கும் தெரியாத உட்கதை.
“இப்ப உள்ள சூழ்நிலையும் படிக்க சரிபடாது. உங்க பொண்ணு இந்த மாசத்துல இன்னும் தலைக்கு ஊத்திக்கல. விவரம் கேட்டதுல பத்துநாள் தள்ளிப் போயிருக்குன்னு சொல்றா! நல்லநாள் பார்த்து மருத்துவச்சி கிட்ட கூட்டிட்டு போகலாம்னு இருக்கோம். வம்சம் விளங்கியிருக்குன்னு சந்தோசத்தோட கிளம்புங்க… வேற எதையும் சொல்லிட்டு வந்து நிக்க வேணாம்.” பஞ்சவர்ணம் விரட்டியடிக்காத குறையாக பேசி முடிக்க, பெற்றோர் அதிர்ந்து நின்றனர்.
“இவளே ஒரு குழந்தைங்க சம்மந்தி… இவளுக்கு ஒரு குழந்தையா?” விஸ்வநாதன் பதறிப் போனார்.
“நடந்ததைப் பேசி பிரயோசனமில்ல… அவ இப்ப குழந்தை பெத்துக்க வேணாம். அது ரெண்டு உசுருக்கும் நல்லதில்ல…” பேசிவிட்டு மெதுவாக நிறுத்தியவர்,
“அதுக்கு என்ன செய்யணுமோ, நல்ல முறையில பார்த்து அனுப்பி வைக்கிறோம். பொண்ண அனுப்பி வைங்க!” தயங்கியபடி கூற,
“எதுவா இருந்தாலும் நேரடியாக பேசுங்க!” வெடித்தார் இளமாறனின் தந்தை கந்தன்.
“அதான்… இப்போதைக்கு பிள்ளை வேண்டாம்னு வயித்துல இருக்கிறதை கலைச்சு விட்டு…” என்று காஞ்சனா பேச ஆரம்பிக்கவும்,
“வெளியே போடா நாயே… என்ன தைரியம் இருந்தா, எங்க வீட்டு வாரிசை கலைக்கிறேன்னு எங்க கிட்டயே சொல்லிட்டு நிப்ப? யார் கொடுத்த தைரியம் இது? படிச்சவன் திமிரை எங்கிட்டயே காமிக்கறியா?” ஆக்ரோசமாய் கனன்றார் கந்தன்.
சொல்லக்கூடாத வார்த்தைகள் தான். மகளின் நலனை மட்டுமே பெரிதாக நினைத்த பெற்றோருக்கு வார்த்தையின் வீரியமோ, குடும்பத்தின் அறமோ தெரியவில்லை.
“ஏன்டா மாறா… ரூமுக்கு போனா பொஞ்சாதியோட போர்த்திட்டு படுக்க மட்டுந்தான் செய்வியா? நம்ம குடும்பம் எப்படின்னு அவளுக்கு புரிய வைச்சு, மாமனார் வீட்டுலயும் சொல்லி வைக்கறதில்லையா?” வரம்பற்ற பேச்சில் விஸ்வநாதனின் மூக்கை உடைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.
அன்றிலிருந்து ஸ்வாதிக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். பிறந்த வீட்டினருடன் பேசக்கூடாதென்கிற தடை உத்தரவும் அமுலுக்கு வந்தது. சொல்லத் தெரியாத வேதனையில் அமைதியுடன் நடமாடியவளின் வயிற்றுப்பிள்ளை தாயின் மனஅழுத்தத்தை தாளமுடியாமல் உதிரமாய் வழிந்து வெளியேறியது.
அதற்கும் பிறந்த வீட்டையே குறையாகக் கூறினர். ஸ்வாதியின் தாத்தா பாட்டி வந்து விசாரித்த போது அவர்களையும் கரித்துக் கொட்டினர்.
“உங்க மகனும் மருமகளும் கண்ணு வச்ச நேரம், வம்சம் தழைக்காம போயிடுச்சு!” மருதாயி குத்தி காட்டிப் பேசினார் உடல்நிலையை தேற்றிக்கொள்ள பேத்தியை அவர்களுடன் அனுப்பி வைக்கவில்லை.
“உம் புள்ள பேசின பேச்சுக்கு உம் பேத்தியை நாங்க வீட்டுல வச்சிருக்கிறதே பெரிய விசயம். வேற எதுவும் சொல்ல வைக்காதே மெய்யப்பா!” வந்திருந்தவர்களின் முகத்திற்கு நேராகப் பேசி, அவர்களை வெளியேற்றினார் தணிகாசலம்.
இதே நிலையில் மேலும் ஆறு மாதங்கள் கடந்தது. பிறந்த வீட்டின் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஊமையாகவே நடமாடத் தொடங்கினாள் ஸ்வாதி. குடிபோதையில் அடிப்பது, திட்டுவது என கணவனின் கைவரிசையை காண்பிக்கத் தொடங்கி இருந்தான் இளமாறன். வலிகளை, வேதனைகளைச் சொல்லாமல் மறைத்துக் கொண்டாலும் அதற்கான பலன் அவளது உடலில் எதிரொலித்தது.
இரண்டாம் முறையாக கரு தங்கி அதுவும் கலைந்து போய்விட, ராசியற்றவள் என்பதில் தொடங்கி அளவில்லாத வசைமொழிகளை அள்ளிவீசத் தொடங்கினர் மருதாயியும் பஞ்சவர்ணமும். எதற்கும் மறுமொழி கொடுக்க துணிவு வரவில்லை. கண்களில் ஒளியிழந்து அரை உயிராகிப் போனாள்.
எதிர்த்துப் பேசினால் அடிகளும் வசவுகளும் அதிகமாகும் என பயந்தே கோழையாக மெளனம் காத்தாள். மனம் கேளாமல் மகளைப் பார்க்க வாசல் வரை வந்த பெற்றோர் மீண்டும் விரட்டி அடிக்கப்பட்டனர்.
திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்த நிலையில் மூன்றாம் முறையாக கரு தங்கியது. இம்முறை மருத்துவர் எச்சரித்து வைத்திருந்ததால் கெடுபிடிகள் தளர்ந்தன. அவளை அன்புடன் தாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் இடித்துப் பேசுவதையும் அடிப்பதையும் குறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பிறந்த வீட்டினர் வருவதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.
முக்கியமாக கணவனின் ஆக்கிரமிப்பிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருந்தது. அந்த ஒற்றைச் சந்தோசமே பிறக்கப் போகும் பிள்ளையின் மேல் ஆசையை, அன்பை விதைத்து விட்டது.
“நீ வெளியே வந்தததும் பழையபடி என்னை அடிக்க ஆரம்பிப்பாங்களா மிக்கி? நீ நிறையநாள் உள்ளேயே இருந்து என்னை காப்பாத்துடா… நாம திக் ஃபிரெண்ட்ஸா இருப்போம்.” வயிற்றுப் பிள்ளைக்கு செல்லப்பெயர் வைத்து பேசத் தொடங்கியிருந்தாள் ஸ்வாதி.