மனதோடு மனதாக – 20

1432691

மனதோடு மனதாக – 20

20  

“ஜீவி..” சுபத்ராவின் திகைப்பான குரலில், உண்டுக் கொண்டிருந்த வெண்ணிலா அவரைக் கேள்வியாகப் பார்க்க,

“இப்போ என்னத்துக்குடி எனக்கு போன் செய்யற? இன்னும் நான் உயிரோட இருக்கேனா இல்ல செத்துட்டேனான்னு பார்க்க கூப்பிட்டியா? போனை வை..” வெகுநாட்களுக்குப் பிறகு கேட்ட அவளது குரலில் உள்ளம் நடுங்க சத்தமிட, அவரது கையைப் பிடித்துக் கொண்ட வெண்ணிலா,

“யாரு பெரியம்மா?” என்று கேட்க, அவளது குரலை இனம் கண்டுக் கொண்ட ஜீவிதா,  

“நிலா.. நிலா இங்க இருக்காளா? ஏன்ம்மா அவ ஏன் இங்க இருக்கா? என்னாச்சு?” ஜீவிதா பதில் கேள்விக் கேட்க,

“அவ இங்க இருந்தா என்ன? எங்க இருந்தா என்ன? அதைப் பத்தி உனக்கு இப்போ என்ன வந்தது? உனக்கு அவளைப் பத்தி எதுக்கு கவலை? எங்களை எல்லாம் வேண்டாம்ன்னு விட்டு போனவ தானே.. இப்போ எதுக்கு போன் பேசற?” சுபத்ரா சத்தமிட, வெண்ணிலா அவரைப் பிடித்து அமர வைத்து, அவரது படபடப்பு அடங்க தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

“அவளை என்கிட்டே பேச வேண்டாம்ன்னு சொல்லு நிலா.. எனக்கு அவ கூட பேச இஷ்டமில்ல.. அன்னைக்கு அத்தனை பேருக்கு முன்னால எங்களை அசிங்கப்படுத்தி தலைகுனிய வச்சிட்டு, இப்போ எதுக்கு அவ பேசறா? அவளுக்கு அம்மான்னு கூப்பிட என்ன உரிமை இருக்கு?” சுபத்ரா சத்தமிட, அவரது உடல் பதட்டத்தில் நடுங்கவும், வெண்ணிலா தனது மொபைலில் இருந்து திலீபனுக்கு அழைத்தாள்..

தனது அறையில் இருந்தவன், அவளது போனைப் பார்த்ததும், வெளியில் எட்டிப் பார்க்க, ‘சீக்கிரம் வா..’ என்று அவனைக் கையசைத்து அழைக்கவும், அவளது முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்தவன்,  வேகமாக அவளது அருகே வந்தான்.

“என்னாச்சு நிலா? ஏன் அம்மா அழுதுட்டு இருக்காங்க?” என்றபடி அவளது அருகில் வந்தவனிடம்,  

“ஜீவிக்கா போன் பேசறா..” அவள் சொல்லவும், அவரது தோளோடு பிடித்துக் கொண்டு தலையை வருடிக் கொடுத்தான்.   

“இவளை யாருடா என்கிட்டே பேசச் சொன்னது? இப்போ எதுக்குடா இவ கால் பண்ணி இருக்கா?” சுபத்ரா மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவரது முகத்தை நிமிர்தியவன்,

“அம்மா.. அவக்கிட்ட பேசும்மா.. அவ உன்னை ரொம்ப மிஸ் பண்றா.. அழாம பேசும்மா.. அவளும் பாவம் தானே.. யாரும் இல்லாம தனியா இருக்காம்மா..” திலீபன் மெல்ல அவரைச் சமாதானப்படுத்தவும், அவனது தோளில் சாய்ந்தவர்,

“எப்படிடா அவக்கிட்ட பேசச் சொல்ற திலீபா? அன்னைக்கு நானும் உங்க அப்பாவும் அவ்வளவு பேர் முன்னால தலைகுனிஞ்சு நின்னோமே? உனக்கு அது மறந்துப் போச்சா? எங்களைப் பத்தி நினைக்காம அவளோட வாழ்க்கையைப் பார்த்துட்டு போனாளே. அது உனக்கு மறந்துப் போச்சாடா? இப்போ இவ எந்த முகத்தை வச்சிக்கிட்டு என்கிட்ட பேசறா? மாப்பிள்ளை குடும்பத்தைப் பத்தி அவ கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தாளா? அவளால ஓடியாடி திரிஞ்சிட்டு இருந்த பொண்ணு, திடீர்ன்னு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு இருக்கா.. அவளைப் பத்தி நினைச்சாளா?” சுபத்ரா கதறத் துவங்க, இறுதியாக அவர் கேட்ட கேள்வியில், வெண்ணிலா அங்கிருந்து எழுந்துக் கொள்ள, திலீபன் அவளது கைப் பிடித்து தடுத்தான்.

“நீ எங்க போற? இங்க உட்காரு..” அவளை அதட்டியவன், சுபத்ராவின் கையில் இருந்த போனை வாங்கி, வீடியோ காலில் போட, சுபத்ராவோ அருகில் இருந்த வெண்ணிலாவைக் கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார்..

“அம்மா.. ஏன்ம்மா இப்படி அழற? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்மா.. என்னை ஜீவின்னு கூப்பிட்டு பேசும்மா. உங்ககிட்ட பேசாம கஷ்டமா இருக்கும்மா. நான் உங்கக்கிட்ட சொல்லாம வந்தது தப்பு தான். நான் முன்னாலேயே உங்ககிட்ட சொல்லி இருக்கணும். ஆனா.. எங்க என்னையும் ராமையும் பிரிச்சிடுவீங்களோன்னு ரொம்ப பயந்து போயிட்டேன்மா. அது தான் நான் சொல்லல.. உங்களை விட்டுட்டு வரதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தேன்னா எங்க எல்லாரோட வாழ்க்கையும் போயிருக்கும்.. அது தான் கடைசி நிமிஷத்துல மனசை கல்லாக்கிட்டு நான் கிளம்பிட்டேன்…” ஜீவிதா சொல்லிக் கொண்டிருக்க, வெண்ணிலா அங்கிருக்க முடியாமல் எழப் போக, மீண்டும் அவளைப் பிடித்து அமர வைத்த திலீபிற்கு சிரிப்பாக இருந்தது..

‘இவளுக்கு மாமா மேல இவ்வளவு பொசசிவ்வா? இப்போ மாமா இருந்திருக்கணும். அவரை அடிச்சு துவைச்சு இருப்பாளோ?’ என்று நினைத்துக் கொண்டவன், அவளது கையை இறுக பிடித்துக் கொண்டான்.

அவனிடம் இருந்து கையை உருவிக் கொள்ள முயல, “இப்போ எங்க ஓடற? இங்கயே என் பக்கத்துல உட்காரு..” திலீபன் அவளிடம் சொல்லவும், அவனை கெஞ்சலாக பார்க்க, திலீபனோ அதைக் கண்டுக் கொள்ளாமல், ஜீவிதாவைப் பார்த்தான்.

“அம்மா.. நான் சொல்றதைக் கேளும்மா.. ராம் நல்லவன்மா.. என்னை நல்லா பார்த்துக்கறான். நானும் அவனும் காலேஜ்ல இருந்தே லவ் பண்றோம்மா.. என்னால அவனை விட்டு வேற யார் கூடவும் வாழ்ந்து இருக்க முடியாது. அவனும் என் மேல உயிரையே வச்சிருக்கான்மா. நீ அவன்கிட்ட பேசிப் பாரு. உனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்மா.. ப்ளீஸ்ம்மா.. கொஞ்சம் எங்களை மன்னிக்கக் கூடாதா?” ஜீவிதா சொல்லச் சொல்ல, சுபத்ராவிற்கு கோபம் பொங்கியது..

“அதை முன்னாலையே சொல்லிச் தொலைச்சு இருக்க வேண்டியது தானே.. கல்யாண மண்டபம் வரை வந்து எங்களை அவமானப்படுத்தி இருக்க வேண்டாமே. அது எப்படிடி அடுத்த நாள் கிளம்பி அவன் கூட வெளிநாட்டுக்கு போறதுக்கு எல்லாம் பிளான் பண்ணி ப்ளைட் டிக்கெட், விசா எல்லாம் வாங்கி இருக்க? அது கடைசி நிமிஷத்துல எடுத்த முடிவுன்னு என்னை நம்பச் சொல்றியா? கடைசி நிமிஷத்துல எங்க கழுத்தை அறுத்துட்டு இப்போ பேசிட்டு இருக்கியா? எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? இப்போ சொல்றியே பேசிப்பாருன்னு.. அதை நீ அப்போ அவனை கூட்டிட்டு வந்து சொல்லி இருக்கணும்..” சுபத்ரா சத்தமிட, அப்பொழுது பூரணியும் அங்கு வர, ஜீவிதா தேம்பத் துவங்கினாள்..    

“அம்மா கொஞ்சம் யோசிச்சு பாரும்மா.. ஒருவேளை உனக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரு என்னை சரியா பார்த்துக்கலன்னா…” ஜீவிதா சொல்லி முடிப்பதற்குள்,  

“மாமாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு நீ பேசற ஜீவிக்கா? உனக்கு ராம் அண்ணாவைப் பத்தி பெருமையா சொல்லணும்ன்னா அதை மட்டும் பேசு.. என் மாமாவை இழுக்காதே..” வெண்ணிலா கோபமாகச் சொல்ல, அழுதுக் கொண்டிருந்த சுபத்ரா வெண்ணிலாவை திகைப்பாகப் பார்த்தார்.  

“நிலா..” ஜீவிதாவும் திகைப்பாக அழைக்க, 

“நீ ராம் அண்ணா…” என்று கூறியவள், தலையில் தட்டிக் கொண்டு,

“ராம் மாமா பத்தி பேசி சமாதானம் செய் ஜீவிக்கா.. சம்பந்தமே இல்லாம என் மாமாவை இதுல இழுக்காதே. அவரைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது..” தனது கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாகச் சொன்னவள், சுபத்ரா கொடுத்த தோசையை உண்ணத் துவங்கினாள்..

“நிலா.. நான் தப்பா சொல்லல.. அவரு நல்லவரு தான்.. நான் ஒரு பேச்சுக்கு சொல்றேன்..” என்றவள், நிலா அவளைப் பார்க்கும் பொழுதே,

“அம்மா.. ப்ளீஸ்ம்மா.. என்கிட்டே பேசுங்க.. எங்களை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்கம்மா..” ஜீவிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ‘ஆமா.. அத்தை.. ப்ளீஸ்.. எங்களை மன்னிச்சிருங்க..’ என்ற குரல் கேட்க, வெண்ணிலா பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.     

‘ராம் அண்ணா..’ வெண்ணிலா முணுமுணுக்க, ஜீவிதாவின் அருகில் இருந்து ராம் எட்டிப் பார்க்க, பூரணியும், சுபத்ராவும் அவனைப் பார்த்து திகைத்தனர்.

“அத்தை ப்ளீஸ் அத்தை.. ரொம்ப சாரி.. நான் உங்ககிட்ட எல்லாம் முன்னாலேயே பேசி இருக்கணும். ஆனா.. எங்களை பிரிச்சிடுவீங்களோன்னு பயமா இருந்தது அத்தை. அதனால தான் நாங்க வேற வழி இல்லாம இப்படி செஞ்சிட்டோம். ஜீவி தினமும் உங்களை எல்லாம் நினைச்சு அழுதுட்டு இருக்கா. உங்களை ரொம்ப மிஸ் பண்றா.. கொஞ்சம் எங்களை மன்னிச்சு பேசுங்க அத்தை..” ராம் படபடவென்று சொல்ல,  

“நீங்க செஞ்சத் தப்புக்கு ஈசியா மன்னிப்பு கேட்டுட்டீங்க தம்பி.. எங்களுக்கு காயம் ஆற நாள் ஆகும்.. அதுவும் ராவோட ராவா வந்து பொண்ணைக் கூட்டிட்டு போயிருக்கீங்க.. அவங்களோட குடும்பம், அவளுக்கு ஒரு தங்கை இருக்காளே அவ நிலைமை எல்லாம் யோசிச்சு பார்த்தீங்களா?” என்ற சுபத்ரா, போனை அப்படியே வைத்துவிட்டு எழுந்துக் கொள்ள,

“சித்தி.. நீங்களாவது அம்மாக்கிட்ட சொல்லுங்க சித்தி..” ஜீவிதா, அங்கு நின்றுக் கொண்டிருந்த பூரணியிடம் கெஞ்சவும், அவளது முகத்தைப் பார்த்த பூரணிக்கு பாவமாக இருந்தது.

“ஜீவிம்மா.. நீ கவலைப்படாதேடா.. நீ அம்மாக்கிட்ட தினமும் பேசு.. அவங்க கோபம் குறைய கொஞ்ச நாள் ஆகும். உன்னோட கல்யாணத்தை அவ்வளவு கனவு கண்டு ஏற்பாடு செஞ்சாங்க இல்ல.. அந்த வலி தான்..” அவளை சமாதானம் செய்து,

“நீ சொல்லு எப்படி இருக்க? என்ன பண்ணிட்டு இருக்க? வீட்டு வேலை எல்லாம் ஈசியா இருக்கா? சமைச்சிட்டியா?” பூரணி அவளைப் பற்றி விசாரிக்கவும்,  

“இன்னைக்கு காலையில வேலை எல்லாம் ஆச்சு சித்தி.. ராம் காரக்குழம்பு செஞ்சிட்டான்.. நான் உங்கக்கிட்ட பேசிட்டு போய் காய் ஏதாவது செய்யணும்.. நான் இங்கயே வேலைக்குப் போறேன்.. ரெண்டு பேருமா வேலை செய்துடறோம்… அதனால ஈசியா தான் இருக்கு..” என்று சொல்லவும், அதற்கு மேல் என்ன பேசுவது என்று யோசித்த பூரணியும்,

“சரி.. பார்த்துக்கோ.. நான் போய் அக்காவைப் பார்க்கறேன்..” என்று நகர்ந்துச் செல்ல, ராம் அமைதியாக அமர்ந்திருந்த வெண்ணிலாவைப் பார்த்தான்..

“ஒய் வெண்ணிலா.. என் மேல கோபமா?” ராம் கேட்க, மறுப்பாக தலையசைத்த வெண்ணிலா,

“எதுக்கு?” என்று கேள்வியாக அவனைப் பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“சும்மா தான்.. எங்களால உன்னோட கல்யாணம் திடீர்ன்னு நடந்ததுக்கு..” ராம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

“ச்சே.. ச்சே.. அதுக்கு எல்லாம் கோபம் இல்ல.. ஏன்னா..” என்று தொடங்கியவள், நாக்கைக் கடித்துக் கொண்டு அமைதியாக, திலீபன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“என்ன மேடம் சைலென்ட்டாகிட்டீங்க? ஆமா.. ஆரி எங்க?” ராம் விசாரிக்க,                  

“ஹையோ ராம் மாமா.. இப்போ அவரைப் பத்தி கேட்டா இவ அழ ஸ்டார்ட் பண்ணிடுவா.. மாமாவும் ஆபீஸ் போயிருப்பார். என்னால அவரை கூப்பிட்டு கூட சமாதானம் செய்ய முடியாது. அவர் இல்லாம இவளை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம்..” திலீபன் கேலி செய்ய, வெண்ணிலா அவனை முறைத்தாள்.

“என்னாச்சு” ராம் குழப்பமாக விசாரிக்க,

“மாமா ஆபிஸ் வேலையா ரெண்டு மாசத்துக்கு ஆஸ்திரேலியா போயிருக்கார்.” வெண்ணிலாவின் பதிலில், ராம் சிரிக்கத் துவங்கினான்.

“இப்போ எதுக்கு சிரிக்கறீங்க ராம் அண்ணா? ச்சே.. மாமா.. அவரு என்னை விட்டு போனது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா?” வெண்ணிலா கேட்க, திலீபன் இருவரையும் கேள்வியாகப் பார்த்தான்..

“ஹே.. வெயிட் வெயிட்.. உனக்கு இவரை முன்னையே தெரியுமா?” அவன் இடையில் புகுந்து கேட்க, 

“தெரியும்.. சின்னப் பிள்ளைல என்னை வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஜீவிக்கா கூட்டிட்டு போவா இல்ல.. அப்போ பார்த்து இருக்கேன்.. பேசி இருக்கேன்.. ஃப்ரென்ட்ன்னு சொல்லி இருக்கா..” வெண்ணிலா பதில் சொல்ல,

“இப்போ நீ அதுக்குள்ள வளர்ந்துட்டியா நிலா?” ராம் விடாமல் கேலி செய்ய,

“ஆமா.. நான் பெரிய பொண்ணு தான்.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு..” என்றவள், ராமை முறைக்க, ராம் அவளை மென்மையாகப் பார்த்தான்..

“ஏன் நிலா.. உன்னையும் ஆரி கூட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல.. அவன் ஏன் விட்டுட்டு போனான்? அவனுக்கு உன்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா?” ராம் இதமாகக் கேட்க,

“இல்ல.. எனக்கு அடுத்த வாரத்துல இருந்து எக்ஸாம் ஆரம்பிக்குது.. அது முடிஞ்ச உடனே மாமாவோட ஃப்ரெண்ட் கூட நானும் போகப் போறேன்.. எனக்கு எல்லாமே மாமாவே பேக் பண்ணி ரெடி பண்ணி வச்சிட்டாங்க. இப்போ எக்ஸாம் இல்லன்னா நானும் மாமா கூட போயிருப்பேன்.. அவருக்கும் என்னை விட்டுட்டு போறதுல இஷ்டமில்ல தான்.. ஆனா.. வேற வழி இல்லையே..” வெண்ணிலா ராமிடம் விளக்கம் சொல்ல, ராம் ஜீவிதாவின் முகத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்க,

“என்ன கேலி செய்யறீங்களா?” வெண்ணிலா ரோஷமாகக் கேட்டாள்..

“இல்ல.. இல்ல.. கேலி எல்லாம் செய்யல.. அவன் உன்னை விட்டுட்டு போறதுக்கு கண்டிப்பா கஷ்டப்பட்டு தான் இருப்பான்.. ஏன்னா நீ தான் அவனோட உயிராச்சே.. நான் அதை கேலி செய்யல.. நான் உதட்டைப் பிதுக்கினது நீ வார்த்தைக்கு வார்த்தை சொன்ன மாமாவுக்காக.. நானும் ஜீவியை கூப்பிடச் சொன்னா கூப்பிட மாட்டேங்கிறா வெண்ணிலா.. நீ கொஞ்சம் அவளுக்கு எப்படி கூப்பிடறதுன்னு சொல்லிக் கொடேன்..” என்று வம்பு வளர்க்க, வெண்ணிலாவின் இதழ்களில் புன்னகை வரவா வேண்டாமா என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தது.

“வெண்ணிலா சிரிப்பு வந்தா சிரிக்க கூட மாட்டேங்கிற? எங்க மேல அவ்வளவு கோபமா இருக்கியா என்ன?” ராம் கேட்க,

“அதெல்லாம் இல்ல.. மாமாவ மிஸ் பண்றேன்” என்று அவள் இழுத்துக் கொண்டிருந்த நேரம், ஆர்யனிடம் இருந்து இருந்து கால் வர,

“பை ராம் அண்ணா.. மாமா கூப்பிடறார்.. நான் போய் பேசறேன்..” என்று அவசரமாகச் சொன்னவள், தனது போனை எடுத்துக் கொண்டு, ‘ஹலோ. மாமா.. சாப்பிட்டீங்களா?’ பேசிக் கொண்டே நகர்ந்துச் செல்ல, இறுதியாக போன் திலீபனின் கைக்கு வந்தது..

“என்ன திலீபா பேசிட்டே இருந்தவ மாமான்னு ஓடிப் போயிட்டா?” ராமின் கேலியில்,

“அவ ஓடாம இருந்தா தானே அதிசயம்? மாமா நேத்து நைட்டுக்கு அப்பறம் இப்போ தான் கூப்பிடறார்.. ரெண்டு பேரும் பன்னிரண்டு மணி நேரமா பேசாம இருக்காங்களே. அதுவே பெருசு..” நெகிழ்ச்சியாக சொன்ன திலீபன்,   

“அவர் கிளம்பப் போறேன்னு சொன்னதுல இருந்தே இவ ஒரே அழுக. மாமாவுக்கும் இவளை விட்டுட்டு போறது ரொம்ப கஷ்டமா இருந்தது. கண்ணு கலங்கி தான் அவரு ஏர்போர்ட் உள்ள போனார்.. இன்னும் ஒரு மாசம் தானேன்னு தன்னையே சமாதானம் பண்ணிக்கிட்டு தான் இவளை விட்டுட்டு போனார். எக்ஸாம் முடிஞ்ச உடனே இவளும் லீவ்க்கு அங்க கிளம்பரா.. எல்லாமே பேக் பண்ணி ரெடியா வச்சிருக்கார்.. மேடம பத்திரமா அவரோட ஃப்ரென்ட்கிட்ட ஒப்படைக்கிறது தான் பாக்கி.. எனக்கே அவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன்.. இன்னும் அவங்க கிட்ட எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன் போயிருக்குன்னு தெரியல.. விட்டா வந்து கூட கூட்டிட்டு போனாலும் போவாரு போல.. அவரை நம்ப முடியாது.. வந்து நின்னாலும் நிப்பாரு..” என்ற திலீபனைப் பார்த்து ராம் சிரிக்க,

“ஆனா.. இந்த ஆர்யன் என்கிட்டே எல்லாம் ஒரு வார்த்தை பேசினது இல்ல திலீபா.. ஏன் ஒரு மெசேஜ்ல கூட பேச ட்ரை பண்ணினது இல்ல.. நீ சொல்றதைக் கேட்டா அந்த மனுஷனா இதுன்னு இருக்கு.. அவளை நல்லா பார்த்துக்கறார்ல..” ஜீவிதா சந்தோஷமாகக் கேட்க,

“பின்ன.. என் மாமாவை இழுக்காதேன்னு அவ பொங்கிட்டு வந்ததுல இருந்தே தெரியலையா அவர் அவளை எப்படி பார்த்துக்கறார்ன்னு?” அவனது கிண்டலில்,

“ஹே ஆமாடா.. என்ன பொசசிவ் இந்த நண்டுக்கு? என் மாமாவைப் பத்தி தெரியாதுன்னு வேற..” ஜீவிதா வியக்க,

“அது அப்படி தான்.. அவரும் இவ மேல பொசசிவ் தான்.. அவளை யாருக்கிட்டயும் எதுக்கும் விடவே மாட்டார்.. அவரு தான் அவளுக்கு எல்லாமே பார்த்துப் பார்த்து செய்யணும். அவரோட நினைப்பு முழுக்க இவ மட்டும் தான் ஜீவி. இவளை அவ்வளவு லவ் பண்றார்.. ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது பார்க்கணுமே.. சுத்தி யாரு இருந்தாலும் அவங்க கண்ணுக்குத் தெரியாது..” திலீபன் மனம் நிறைந்து சொல்லிவிட்டு,

“நீ தினமும் அம்மாவுக்கு கூப்பிட்டு பேசு ஜீவி.. ஒரு ரெண்டு மூணு நாள் கோபப்படுவாங்க.. அப்பறம் சரியா போயிடும்.. ஆர்யன் மாமா அன்னைக்கு உன்கிட்ட பேசச் சொல்லி சொல்லைன்னா நானுமே உன்கிட்ட பேசி இருக்க மாட்டேன். எனக்கே அவ்வளவு கோபமா இருந்தது.. அம்மா அப்பாவுக்கு இருக்காதா என்ன? அப்பாவுக்கும் கூப்பிட்டு பேசு.. நாம எல்லாரும் சேர்ந்து ஹாப்பியா இருக்கலாம். ஆளுக்கு ஒரு திசையில இருந்தா எனக்கும் கஷ்டமா இருக்கு இல்ல..” திலீபன் ஜீவிதாவுக்கு வழிவகை சொல்லித் தந்தான்.  

“சரிடா.. நான் பேசறேன்.. இப்போ நான் போனை வைக்கிறேன்டா.. ஆபிஸ் வேலை ஆரம்பிக்கணும்..” என்ற ஜீவிதா, போனை வைக்கவும், ஜீவிதா அழைத்ததைப் பற்றி வெண்ணிலா ஆர்யனிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்து இதழ்களில் புன்னகை தருவித்தது..

“மாமாவைச் சொன்ன உடனே என்ன கோபம் வருது இவளுக்கு.. அதை மாமாவுக்கு மெசேஜ் செய்து சொல்லணும்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தனது அறைக்குள் சென்று, தனது தேர்வுக்குத் தயார் செய்யத் துவங்கினான்..  

“அவங்களைப் பத்தி நாம இப்போ எதுக்கு பேசணும்? ஐ மிஸ் யூ மை தேனு.. உன்னை ஹக் பண்ணிக்காம எனக்கு சரியாத் தூக்கமே வரல..” ஆர்யன் சொல்ல,

“எனக்கும் தான்.. உங்க தோள்ள படுக்காம தூக்கமே வரல..” எனவும்,   

இரவுகள் நீள இமைகளும் மூட

இடைவெளி ஏனோ கண்மணியே

யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி

முத்தங்களை தின்போம்

அடியே சாளரத்தின் வெளிச்சத்திலே

அரும்புகிறேன்

மெய் கடலில் அலைகளிலே

சுழலுதே கவிழுதே மனமதுவே

அடியே நீதானடி என் போதை தேனே

முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

ஆர்யன் பாட, வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது..

 

“ஐ மிஸ் யூ மாமா.. மிஸ் யோ சோ மச்.. எங்க வீட்ல இருக்கறதுக்கு எனக்கு எங்கயோ இருக்கற மாதிரி இருக்கு. நீங்க இல்லாம இங்க இருக்கவே பிடிக்கல.. எப்போ இந்த ஒரு மாசம் போகும்?” என்று தனது ஏக்கத்தை அவள் பகிர, ஆர்யன் தனது தலையிலேயே அடித்துக் கொண்டான்..

“சாரி.. சாரிடி தேனு.. நானும் எமோஷனல் ஆகி.. உன்னையும் அழ வைக்கிறேன்.. அழாதேடா பட்டு.. கண்ணைத் துடைச்சிக்கோ.. தூங்கறதை விட, உன் கையாள காபி குடிக்காம குடிச்சது போலவே இல்ல. எனக்கு ஒரு காபி போட்டு அப்படியே அனுப்பேன்.. நான் எனர்ஜி ஆகிடுவேன்..” அவளை சமாதானம் செய்ய வம்பு பேச,

“வாங்க அப்படியே காபிய மொபைல் மேல ஊத்தறேன்..” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டு,

“காலையில என்ன சப்பிட்டீங்க? சமையல் சாமான் எல்லாம் வாங்கிட்டீங்களா?” என்று கேட்க,   

“காலையில ஒரு சான்ட்விச் சாப்பிட்டு ஆபிஸ் வந்துட்டேன்.. ஈவெனிங் வீட்டுக்கு போகும்போது தான் ஏதாவது வாங்கிட்டு போய் சமைக்கணும்.. நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்.. வீட்டை காட்டறேன்..” என்ற ஆர்யன், சிறிது நேரம் பேசி விட்டு போனை வைக்க, அந்த நாள் அதற்கு மேல் அமைதியாக கழியத் துவங்கியது..

மாலையில் வீட்டிற்கு வந்த உடன், வீடியோ காலிலேயே வழக்கம் போல அவள் படிக்கும் பொழுது ஆர்யனும் அமர்ந்திருக்க, நாட்கள் ரக்கைக் கட்டிப் பறந்தது.. வெண்ணிலாவின் தேர்வுகளும் தொடங்கி நடக்கத் துவங்கியது.. ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகு, “இன்னும் ரெண்டு எக்ஸாம் தான் இருக்கு மாமா.. அப்பறம் நான் உங்களைப் பார்க்க பறந்து வந்துடுவேன்..” சந்தோஷமாக சொல்லிக் கொண்டு, தேர்வுகள் முடிந்து ஆர்யனைக் காணும் நாளிற்காக அவள் ஏங்கத் துவங்கினாள்..

ஜீவிதாவும் தனது விடாமுயற்சியாக, தனது அன்னைக்கும், தந்தைக்கும், அவர்கள் பேசாமல் போனாலும், அழைத்துப் பேசி, அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்..

நாட்கள் வேகமாக ஓடி மறைய, வெண்ணிலாவின் தேர்வுகள் முடிந்து, அவள் கிளம்பும் நாளும் வந்தது..

error: Content is protected !!