மனதோடு மனதாக -22

Free-Vector-Big-Love-Happy-Couple

மனதோடு மனதாக -22

22                 

மறுநாளைய பொழுது அழகாக விடிய, தனது மார்பில் உறங்கிக் கொண்டிருந்தவளை கண் விழித்ததும் பார்த்த ஆர்யன், அவளது நெற்றியில் இதழ் பதித்து மென்மையாக அணைத்துக் கொண்டான்..

“ம்ப்ச்.. தூக்கம் வருது மாமா..” அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள், உறக்கத்திலேயே சொல்லிவிட்டுத் திரும்பிப் படுக்கவும், இதழில் தோன்றிய உல்லாச புன்னகையுடன் எழுந்து குளித்துவிட்டு வந்தவன், அவளது அருகில் அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..

வெள்ளை க்வில்டிற்குள் இருந்து தலையை மட்டும் நீட்டி உறங்கிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் ரோஜா இதழ்கள் ஒட்டி இருக்க, அதை மெல்ல தனது இதழ் கொண்டு, ரசித்து எடுத்தவனின் மீசையின் குறுகுறுப்பில், உடலைச் சுருக்கிக் கொண்டு, கண் திறந்துப் பார்த்தாள். அருகில் தெரிந்த அவனது முகத்தைப் பார்த்து, நாணத்துடன் போர்வைக்குள் தலையை நுழைந்துக் கொள்ள, ஆர்யன் சிரிக்கத் துவங்கினான்..

“போங்க மாமா. சிரிக்காதீங்க.. சிரிக்காதீங்கன்னு சொல்றேன் இல்ல.. ஹ்ம்ம்.. இங்க இருந்து நகர்ந்து போங்க..” கையை மட்டும் நீட்டி அவனை அடிக்க, சிரித்துக் கொண்டே அடிகளைப் பெற்றுக் கொண்டவன், இறுதியில் அவளது கையைப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே,

“எதுக்குடா தேனு என்னை அடிக்கிற? நான் என்ன செஞ்சேன்? நான் பாட்டுக்கு என் செல்லப் பொண்டாட்டியை ரசிச்சிட்டு இருக்கேன்.. வாட் எ மார்னிங்யா.. ஆரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன்..” குறும்பாக சிரித்துக் கொண்டே கேட்க, அவனது குரலில் இருந்த குறும்பில்,

“யாரு நீங்க பாட்டுக்கு ரசிச்சிட்டு இருந்தீங்களா? அப்போ இங்க என்ன வேலை?” கேட்டுக் கொண்டே போர்வையின் உள்ளே தனது கன்னத்தைத் தொட்டுக் காட்ட, அவளது கையசைவை போர்வையின் வெளியில் உணர்ந்தவன்,

“எனக்கு வெளிய இருந்து தெரியலையே.. எங்க காட்டு.. நீ எங்க காட்டறன்னு நான் ஒழுங்கா பார்க்கறேன்..” என்று போர்வையை விலக்க, மீண்டும் போர்வையை இழுத்து தனது முகத்தை மூடிக் கொண்டவள்,

“நீங்க ஒண்ணும் பார்க்க வேண்டாம்.. நான் எங்க சொல்றேன்னு உங்களுக்குத் தெரியும்.. நீங்க எங்க பெரியப்பாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தவே இல்ல.. போங்க..” போர்வைக்குள் முகம் சிவக்கச் சிணுங்க, வாகாக அவளை அணைத்துக் கொண்டவன்,

“உங்க பெரியப்பாவுக்கு நான் என்ன வாக்கு கொடுத்தேன்?” என்று யோசிக்க, தலையை வெளியில் நீட்டியவள்,

“அது தான் என்னை காலேஜ் முடிக்க வைக்கிறேன்னு.. இப்படி பண்ணினா நான் எப்படி காலேஜ் முடிக்கிறது?” அவளது குரல் உள்ளே சென்றுவிட, ஆர்யன் அவளது கன்னத்தைக் கடித்தான்.

“உங்க பெரியப்பாவுக்கு உன்னை காலேஜ் முடிக்க வைக்கிறேன்னு தான் சொன்னேன்.. அதுக்காக நான் சாமியாரா இருப்பேன்னா சொன்னேன்? உங்க பெரியப்பா ஜென்டில் மேன்.. அதுனால தான் அப்படி எல்லாம் சத்தியம் வாங்கல.. ஒரு பையனோட மனசு அவருக்கும் தெரியும் இல்ல..” என்று கேலியாகக் கேட்க,

“சீ.. பேட் பாய்.. இப்படியா பேசுவீங்க?” அவள் கேட்கவும், போர்வையுள் புகுந்தவன், மீண்டும் அவளை வம்பிழுத்து, அவளுடன் கொஞ்சத் துவங்கினான்..

நிமிடங்கள் கரைய, “இன்னைக்கு வெளிய போகலாம்ன்னு சொல்லிட்டு இங்க இப்படி பண்ணிட்டு இருந்தா என்ன செய்யறது? அப்போ எனக்கு சுத்திக் காட்ட மாட்டீங்களா?” மீண்டும் அவனது மார்பில் சாய்ந்துக் கொண்டு அவள் கேட்க,

“போகலாம் தான்.. ஆனா.. மனசு வரவே மாட்டேங்குதே.. நீ தான் எழுந்துக்கவே மாட்டேங்கிற.. நான் குளிச்சு எல்லாம் ரெடி ஆகிட்டேன்..” என்று கேலி செய்தவன், அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,

“சீக்கிரம் எழுந்து ரெடி ஆகி வா.. நாம வெளிய போகலாம்.. லஞ்ச் இன்னைக்கு வெளிய சாப்பிட்டுக்கலாம்.” என்றவன், இருவருக்கும் உடையை எடுத்து வைக்க, குளித்துவிட்டு வந்தவள் கண்ணாடியின் முன்பு நிற்கவும், அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், அவளது கன்னத்தில் இதழ் பதித்து, அவளது கழுத்தில் ஒரு சிறிய சங்கிலியைப் போட, அதை வருடிக் கொண்டே அவனது முகத்தைப் பார்த்தவள்,

“சூப்பரா இருக்கு மாமா..” என்றபடி திரும்பி அவனது இதழ்களில் இதழ் பதித்தவள், அவன் ‘ஓய்..’ என்று அழைக்கும் பொழுதே, சமையல் கேபினட்டின் அருகில் சென்று நின்றாள்.

“எனக்கு பசிக்குது.. சூடா காபி வேணும்..” எனவும், ஆர்யன் அவளுக்கு கலந்துக் கொடுக்க, அதை மெல்ல அவள் குடிக்கவும், தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

வெண்ணிலா அவனது தோளில் சாய, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் இதழ் பதித்து, “நாம கிளம்பலாமா? எதுகும் கையில இந்த ஜாக்கட் எடுத்துக்கோ..” என்று சொல்லிக் கொண்டே, அவளுக்கு வாங்கியதைக் கொடுக்க, அதை கையில் எடுத்துக் கொண்டவள், தனது பையை எடுத்துக் கொள்ளவும், வீட்டைப் பூட்டி விட்டு, ஸ்ருதியின் கதவைத் தட்ட,

“அப்பாடா.. எங்க ரெண்டு பேரும் லஞ்ச்சுக்கு தான் வெளிய வருவீங்களோன்னு நினைச்சிட்டேன்.. நல்ல வேலை சீக்கிரம் வந்துட்டீங்க…” ஸ்ருதி கேலி செய்துக் கொண்டே வெளியில் வர, வெண்ணிலா முகம் சிவந்து ஆர்யனைப் பார்த்தாள்.

“நாங்க எல்லாம் டைம்க்கு வந்துட்டோம்.. நீ தான் இன்னும் தூங்கிட்டு இருக்கியோ? இன்னும் போன் வரலையேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். பொறுத்துப்பார்த்து நாங்களே வந்து கதவைத் தட்டிட்டோம்.. அப்படித் தானே தேனு..” என்று கேட்க, வெண்ணிலா வேகமாகத் தலையாட்டவும், ஸ்ருதி சிரிக்கத் துவங்கினாள்..  

“எனக்கு பசிக்குது.. முதல்ல சாப்பாடு. அப்பறம் தான் வெளிய சுத்தப் போறோம்.. ஓகே வா..” என்று கேட்டவள், அவர்களுடன் காலை உணவிற்குச் சென்று விட்டு, ஊரைச் சுற்றத் துவங்கினர்..

அலுவலக நாட்களில், அலுவலகம் சென்று வருபவன், மாலையில் அவர்கள் தங்கி இருந்த இடத்தின் அருகே இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவான். சில நாட்கள் அவர்களுடன் செல்லும் ஸ்ருதி, பல நாட்கள் அவர்கள் இருவருக்கும் இடையில் செல்லாமல், வீட்டிலேயே தங்கிக் கொள்வாள், அல்லது வேறு சில நண்பர்களுடன் சுற்றிப் பார்க்கச் சென்றுவிடுவாள்.

“ஏன் அவங்க நம்ம கூட வராம வேற யாரு கூடவோ போறாங்க?” ஒருமுறை ஊரைச் சுற்றிவிட்டு வந்த பிறகு வீட்டில் இருந்த ஸ்ருதியைப் பார்த்துவிட்டு வெண்ணிலா கேட்க,

“ஹான்.. அவ நமக்கு ப்ரைவசி தரளாம்.. நாம ஹனிமூன் கப்பில்ஸ்ல அதுனால..” குறும்பாக ஆர்யன் சிரிக்க, அவனது தோளில் அடித்தவள்,

“உங்க லொல்லு இருக்கே லொல்லு.. அவங்க அப்படிச் சொன்னாங்களா?” என்று கேட்க,

“ஆமாடி என் தேனு..” சொன்னவளின் இதழைச் சிறைச் செய்தவன், அடுத்து அவளையும் சிறை செய்தான்..

நாட்கள் அழகாக நகர, இருவருமே தங்களது நாட்களை இனிமையாக ரசித்து அனுபவித்தனர். வார இறுதியில் முக்கியமான சுற்றுலாத் தளத்திற்கு செல்வதுமாக ஊருக்குத் திரும்பும் நாளும் நெருங்கியது.

இருவருமாக அனைவருக்கும் ஷாப்பிங் சென்று பொருட்களை வாங்க, அதை விட மகிழ்ச்சியாக அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து, தங்களது உறவுகளைக் காண தயாராகினர்.

“ஆரி.. லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணியாச்சு.. எத்தனை மணிக்கு நாம கிளம்பனும்ன்னு சொல்லு. நாம போகலாம்.. அது வரை நான் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வரேன்..” ஸ்ருதி சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்குச் செல்ல,

“ஹே சோம்பேறி.. முதல்ல குளிச்சிட்டு பேக்ல எல்லாம் எடுத்து வச்சிட்டு கிளம்பு.. அப்பறம் பாதி தூரம் போன பிறகு, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன்னு சொல்லி திரும்பி வரச் சொல்லக் கூடாது.. நாம டின்னெர் முடிச்சிட்டு அப்படியே ஏர்போர்ட் போயிடலாம்.. முதல்ல பேக்கிங் முடி. எல்லாம் ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம்.. ஆச்சு நாங்களும் எல்லாமே பேக்ட்.. எடுத்து வெளிய வச்சிட்டு ஒன்ஸ் கிளீன் பண்ணி பார்த்தா தான் ஏதாவது மிஸ் ஆகி இருக்கான்னு தெரியும்..” என்று சொல்லிக் கொண்டே, தங்களது உடமைகளை எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவன், ஸ்ருதியை நகர்த்திவிட்டு, அவளது அறையையும் சென்று பார்த்துவிட்டு, அவளது செல்போன் சார்ஜரைத் தூக்கிக் கொண்டு வர, ஸ்ருதி தலையில் தட்டிக் கொண்டாள்.

“போச்சு.. இப்போ ஒருத்தன் தாளிக்க போறான்..” ஆர்யனைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவிடம் அவள் புலம்ப, அவளது கையில் அந்த சார்ஜரை வைத்துவிட்டு, மீண்டும் தங்களது முக்கிய உடைமைகளை சரி பார்த்தவன்,

“டாக்ஸி வந்துடும். ரெடி ஆகலாம் ஸ்ருதி.. டைம் ஆச்சு..” என்றவன், வெண்ணிலாவைப் பார்க்க, வெண்ணிலா ஆர்யனின் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

டாக்சி வரவும், அவர்கள் மூவரும் ஏர்போர்ட் வந்து இறங்க, ஸ்ருதி தனது செல்போனுடன் குடிபுக, வெண்ணிலா ஆர்யனின் கையைக் கோர்த்துக் கொண்டு, அவனது தோளில் சாய்ந்தாள்..

“அப்போ நீங்க திரும்ப இன்னும் கொஞ்ச நாள் அப்பறம் வரணுமா? அப்போ வந்தா எவ்வளவு நாளைக்கு இருக்கணும்?” வெண்ணிலா கேட்க,

“ஆக்சுவலா.. நான் வந்தா இங்கயே இருக்கற போல கூட இருக்கும்.. அது தான் இப்போதைக்கு உன்னை விட்டு வர முடியாம மாத்தி மாத்தி வந்து போயிட்டு இருக்கேன். உன் காலேஜ் முடியற அப்போ நாம இங்க வந்துடலாம்..” அவளை சமாதானம் செய்துக் கொண்டே, அவளது தலையை வருட, தலையை சம்மதமாக அசைத்தவள்,

“நான் ஊருக்கு போன அப்பறம் எங்க அம்மா கூட ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வரவா? ஒரு மாசம் அம்மாவைப் பார்க்காதது ஒரு மாதிரி இருக்கு. எனக்கு அங்க போகணும்..” ஊருக்குச் செல்லப் போகிறோம் என்றதும் அம்மாவின் நினைவில் அவள் கேட்க, ஆர்யன் தலையசைத்தான்..

விமானம் ஏறியதும், ஆர்யனின் மொபைலில் இருந்த கேமை வெண்ணிலா விளையாடிக் கொண்டே வர, அவள் அன்னை வீட்டிற்குச் செல்லக் கேட்டதில் இருந்தே அமைதியாக கண்களை மூடிக் கொண்டான்.

மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தவள், வாட்சபில் ராம் என்ற பெயரில் வந்திருந்த மெசேஜ் திறக்கப்படாமல் இருக்கவும், “ராமா? யாரு ராம்?” என்று கேட்டுக் கொண்டே திறந்துப் பார்க்க, அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவள், திகைத்துப் போனாள்..

‘அவ கூட எல்லாம் பேசலைன்னு சொல்லிட்டு இவங்க கூட என்ன பேச்சு?’ என்று யோசித்துக் கொண்டே, அதில் இருந்த மெசேஜ்களைப் படிக்கத் துவங்கினாள்..

“என்ன சகல.. ஹனிமூனா?’, ‘என்ன சகல.. என் மச்சினிச்சி என்ன செய்யறாங்க?’, ‘நானும் ஜீவிதாவும் அடிக்கடி அவங்க அம்மாகிட்ட பேசறோம். கூடிய சீக்கிரத்துல நாங்க சென்னை வந்து அவங்களை எல்லாம் மீட் பண்ணப் போறோம். அப்போ நீங்களும் வருவீங்களா சகல?’, ‘நாங்க நாளைக்கு காலையில சென்னைக்கு வரோம்.. நீங்களும் வந்துடுவீங்க தானே.. நாங்க வர டைம் சொல்றோம்.. நீங்களும் வாங்க.. எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்..’ தாங்கள் சென்னை வரும் விஷயத்தைச் சொல்லி இருந்தான்..

மேலும் அதில் இருந்த மெசேஜ்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.  ‘என்ன ப்ரோ.. பொசுக்குன்னு இப்படி வெண்ணிலா கழுத்துல தாலியைக் கட்டிட்டீங்க.. வெண்ணிலா உங்களுக்கு செட் ஆவாளா? அது சின்னப்பிள்ளை..’, ‘என்ன ப்ரோ காலேஜ்க்கு எல்லாம் நல்லா போயிட்டு வரீங்களா?’ என்று முதலில் கிண்டலும் கேலியுமாக ஆர்யனுக்கு மெசேஜ் போட்டிருந்தவன், இறுதியில் நட்புடன்  அவனுக்கு விஷயத்தைத் தெரிவித்து இருக்க, அதைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு உள்ளுக்குள் கோபம் மூளத் துவங்கியது..

அதற்கு விளையாட்டாகவே ஆர்யன் அளித்திருந்த பதிலையும் பார்த்தவள், கண்களை மூடிக் கொண்டிருந்த ஆர்யனின் கையைச் சுரண்டினாள்.

“என்னடா தேனு?” ஆர்யன் கேட்க, அவனது மொபைலை காட்ட, அதில் இருந்த ராமின் மெசேஜ்களைப் பார்த்தவன்,

“ராம். ஜீவிதாவோட ஹஸ்பன்ட்.. ஏதாவது மெசேஜ் பண்ணி இருக்கானா?” இயல்பாய் அவன் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தவள்,

“அவங்க வராங்களாம்.. அதுக்கு உங்களை சப்போர்ட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க..” ஏளனமாகச் சொன்னவள்,

“இவங்க கூட எல்லாம் நீங்க பேசறேன்னு சொல்லவே இல்லையே.. என்னவோ அன்னைக்கு எனக்கும் உங்களுக்கும் நடுவுல ஜீவிதா வர வேண்டாம்.. இதோட அவளைப் பத்தி பேசறதை நிறுத்திக்கலாம்ன்னு சொன்னீங்க. நீங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ராம் மாமாவோட நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது? அப்போ நீங்க இன்னும் அவங்க கூட எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்களா? இதை என் கிட்ட சொல்லவே இல்லையே. எனக்கும் உங்களுக்கும் நடுவுல எந்த ரகசியமும் இல்லைன்னு சொன்னீங்க? ஆனா. இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லவே இல்லையே..” படபடவென்று அவள் கேள்விகளைக் கேட்க, ஆர்யன் அவளது கையை அழுத்தினான்..  

“ஆமா.. இதுல ராம் தானே பேசி இருக்கான்.. ஜீவிதா இதுல ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே..” ஆர்யன் கேட்க,

“ஹ்ம்ம்.. ஆமா.. ஆனா.. ராமோட நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது? அப்போ நீங்களும் ராமும் ஏற்கனவே ப்ரெண்ட்சா? உங்களுக்கும் தெரிஞ்சு தான் கல்யாணத்து அப்போ அவ வெளிய போனாளா?” மீண்டும் அவள் கேள்விகளை அடுக்க,   

“எனக்கு ராம் யாருன்னே தெரியாது.. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நான் ஏற்கனவே சொன்னது போல தூக்கம் வராம நான் தவிச்சிட்டு இருந்த பொழுது வெளிய நான் திரிஞ்சேன். அப்போ ஜீவிதா யாரு கூடவோ பேசிட்டு இருந்தாங்க. யாருன்னு பக்கத்துல போய் பார்த்த பொழுது தான் அவங்க அந்த இடத்தை விட்டு கிளம்பப் போறாங்கன்னு எனக்குத் தெரிஞ்சது.. என் கண்ணு முன்னால, எனக்கு யாருன்னே தெரியாதவன் கூட ஜீவிதா கிளம்பும் போது, அவங்களோட சேஃப்டியை நான் பார்க்க வேண்டாமா? அது தான் ராமோட நம்பரை வாங்கிக்கிட்டேன். அவன் ஜீவிதாகிட்ட என் நம்பரை வாங்கி இருப்பான் போல.” ஆர்யன் விளக்கம் சொல்லவும், அவனைப் பார்த்து,

“ஓ..” என்றவள்,

“திலீபன் கிட்ட சொல்லி அவங்க கூட எல்லாம் பேசச் சொல்லவும் செய்தேன்.. திலீப் கூட இப்போ அவங்க கூட பேசறான்..” ஆர்யன் சொல்லவும், வெண்ணிலா எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

“என்ன செய்யறது? உன்னைப் பார்த்த நிமிஷத்துல இருந்து நான் நானா இல்ல.. அது உனக்கு நானே பலமுறை சொல்லி இருக்கேன் தானே.. என் தூக்கத்துல எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டையே..” அவளது காதின் அருகே சாய்ந்து சொல்லவும், வெண்ணிலா அசையாமல் அமர்ந்திருக்க,

“இப்போ உனக்கு நான் ஏன் இதை முன்னாலயே சொல்லலைன்னு தெரியனும்.. அது தானே..” என்று கேட்டவன், அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டு,

“எனக்கு இதை முன்னயே சொல்றதுல ஒண்ணும் இல்ல.. ஆனா.. நீ என்னை முழுசா புரிஞ்சிக்கணும்ன்னு நான் நினைச்சேன்.. உன் மேல் நான் வச்சிருக்கிற லவ்வை நீ உணரணும்.. நீயும் என்னைப் போலவே லவ் பண்ணனும்ன்னு நான் நினைச்சது தப்பா சொல்லு? நான் அப்போ சொல்லி இருந்தா நீ எந்த அளவுக்கு, எப்படி புரிஞ்சிக்கிட்டு இருந்திருப்பன்னு எனக்குத் தெரியல.. ஒருவேளை ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டு என்னை விட்டுப் போயிடுவியோன்னு கொஞ்சம் பயந்தேன்.. அதனால தான் சொல்லல.

இப்போ அவங்க வந்தாங்கன்னா ‘யாருடா குழந்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொல்லி கிண்டல் செஞ்சது’ன்னு கேட்டு அவனைக் கிண்டல் செய்யலாம்ன்னு இருந்தேன்..” என்றவன் ஒரு பெருமூச்சுடன்,

“இப்போ உன்னை விட என்னை யாருமே புரிஞ்சிக்க முடியாதுன்னு நம்பறேன். அதுனால இந்த விஷயத்தை இதுவரை உன்கிட்ட சொல்லாத காரணமும் உனக்குப் புரியும்ன்னு நான் நம்பறேன்.. இதுக்கும் மேல எனக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. ஆல் ஐ கேன் சே இஸ் ஐ லவ் யூ சோ மச்..” என்றவன், அதற்கு மேல் ஃப்ளைட்டில் உள்ளவர்களுக்கும், அருகில் இருந்த ஸ்ருதியின் கவனத்தையும் கவராமல், தனது காதில் ஹெட்போன்சை மாட்டிக் கொண்டு படம் பார்த்துக் கொண்டே வர, அவன் சொன்னதை, அவன் பக்கம் திரும்பாமலேயே யோசித்துக் கொண்டே வந்தவள், அப்படியே உறங்கியும் போனாள்..

அதற்குப் பிறகு, ஸ்ருதியுடன் ஏதோ பேசிக் கொண்டே வந்தவள், திடீரென்று ஏதோ யோசனையுடன் மிகவும் அமைதியாக வந்தாள்.   சென்னை வந்து சேரும் வரையுமே அவள் அமைதி தொடர, ஆர்யனும் அவளது அமைதியைக் கலைக்காமல் வந்தான்.

சென்னை வந்து சேர்ந்ததும், “பை ஆரி.. வெண்ணிலா.. வீட்டுக்கு போயிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.. நானும் ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்றேன்.. நாளைக்கு ஆபிஸ்ல பார்ப்போம்..” என்ற ஸ்ருதி அவர்களிடம் இருந்து விடைப்பெற, வெண்ணிலா ஆர்யனின் முகத்தைப் பார்த்தாள்..

“நம்மளைப் பிக்கப் பண்ண திலீப் வந்திருக்கான்.. நான் கால் பண்றேன்.” என்றவன், தனது மொபைலை எடுத்து கால் செய்ய, சந்தோஷத்துடன் திலீபன் அவர்கள் முன்பு காரை கொண்டு நிறுத்தினான்..

“ஹாய் மாமா.. ஹாய் நிலாக்குட்டி. எப்படி இருக்கீங்க?” கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்க,

“அண்ணா.. எப்படி இருக்க?” என்றவள், அவனிடம் ஓடிச் செல்ல, ஆர்யன் பெட்டியை காரில் ஏற்றினான்.

“என்ன நிலா மாமா உன்னை செமையா கவனிச்சு இருக்கார் போல. வெயிட் போட்டு இருக்க? அங்க எல்லாம் நல்லா சுத்திப் பார்த்தியா?” என்று கேலி செய்துக் கொண்டே, அவன் கார் சீட்டில் அமர,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. நான் அப்படியே தான் இருக்கேன்..” என்றவள் காரில் ஏற, ஆர்யனும் ஏறிக் கொண்டான்.. காரில் ஏறியதும் வெண்ணிலா மீண்டும் கண்களை மூடிக் கொள்ள,

“என்ன மாமா இவ இப்படி அமைதியா இருக்கா? என்ன விஷயம்? அவளுக்கு ஏதாவது கோபமா?” திலீப் கேட்க,

“ஹ்ம்ம்.. ராம் எனக்கு சென்னை வரப் போறேன்னு சொல்லி அனுப்பின மெசேஜ் பார்த்துட்டு எனக்கு அவனை ஏற்கனவே தெரியுமான்னு கேள்வி கேட்டா. நான் எல்லாம் சொன்னேன்.. இதுவரை ஏன் சொல்லலைன்னு அவளுக்கு கொஞ்சம் வருத்தம்.. அது தான்..” ஆர்யன் சொல்லவும், திலீபன் சிரிக்கத் துவங்கினான்..

“சோ.. அவங்ககிட்ட ஏன் சொல்லைன்னு கோபமா? இல்ல.. என்னைப் போலவே ஏன் அவங்களை எல்லாம் உள்ள கூட்டிட்டு வரலைன்னு அவளுக்குக் கோபமா?” திலீபன் கேலி செய்ய,

“ஹ்ம்ம்.. ராம்கிட்ட எல்லாம் பேசறதை ஏன் சொல்லலைன்னு தான் கோபம்.. கொஞ்ச நேரம்யோசிச்சா அவ புரிஞ்சிப்பா..” என்ற ஆர்யன், தங்களது பயணத்தைப் பற்றி பேசிக் கொண்டே வந்தான்..   

நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்று திலீபன் காரை நிறுத்த, “மாமா.. நான் அப்படியே அண்ணா கூடா அம்மாவைப் பார்க்கப் போறேன். அப்படியே ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்.. நீங்களே டயர்டா இருப்பீங்க. எதுக்கு நீங்க ஒரு தடவ அலைஞ்சிக்கிட்டு.. நான் அண்ணா கூடவே போறேன்.. நீங்க உங்க பெட்டியை மட்டும் எடுத்துக்கோங்க..” காரில் இருந்து இறங்கமாலேயே அவள் சொல்லவும், அவளை ஒரு பார்வை பார்த்த ஆர்யன், எதுவும் பேசாமல் தனது பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, திலீபனைப் பார்த்து தலையசைக்க, திலீபன் வெண்ணிலாவைப் பார்த்து முறைத்தான்.

“இப்போ தானே ஊருல இருந்து வந்திருக்க? கொஞ்சம் நேரம் வீட்டுக்குள்ள போயிட்டு அப்பறமா வந்தா தான் என்ன? இப்போவே அங்க நம்ம வீட்டுக்குப் போகனுமா?” என்று திலீபன் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, ஆர்யனோ அவளைத் திரும்பியும் பார்க்காமல், தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு, லிப்டில் ஏறிச் சென்றான்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? உன்னை எல்லாம் அவரு கொஞ்சறாரு இல்ல.. அந்தத் திமிரு தான்..” திலீபன் அவளைத் திட்ட,

‘நீ வேற ஏண்டா. நானே டென்ஷன்ல இருக்கேன்.. இதுல நீ வேற என்னைப் படுத்தாதே.” என்றவள், வேகமாக இறங்கி ஆர்யனின் பின்னோடு செல்ல, வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டிருந்தவன், தனது பின்னோடு வந்தவளைக் கேள்வியாகப் பார்க்க,

“நான் அங்க வீட்டுக்குப் போறேன்னு சொல்றேன்.. நீங்க பை கூட சொல்லாம உங்க பெட்டியை மட்டும் எடுத்துட்டு வந்துட்டீங்க?” குறியாக அவள் கேட்க,

“ஓ.. நீ தானே என்னோட பெட்டியை மட்டும் எடுத்துக்கச் சொன்ன? அதான் எடுத்துட்டு வந்துட்டேன்.. இப்போ என்ன உனக்கு பை சொல்லனுமா? சரி பை.. ஜாலியா இருந்துட்டு வா..” என்றவன், வீட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே செல்ல, வெண்ணிலாவிற்கு கோபம் கோபமாக வந்தது.

“மாமா..” கோபமாக காலை உதைத்துக் கொண்டு அவள் அழைக்க,

“சரி வா.. நான் கார் வரை வந்து உன்னை வழியனுப்பறேன்.. உனக்கு அது தானே வேணும்?” என்றவன், பெட்டியை வைத்து விட்டு, மீண்டும் சாவியை எடுத்துக் கொண்டு, லிபிட்ன் அருகே செல்ல, வெண்ணிலா அவனைப் பின்தொடர்ந்துச் சென்றாள்.

கார் வரைச் சென்றவன், திலீபன் கேள்வியாகப் பார்க்கவும், “பை திலீப்.. அவளை பத்திரமா அவங்க அம்மா கிட்ட கொண்டு விட்டுடு..” என்று அவனிடம் சொல்லிவிட்டு,

“பை வெண்ணிலா.. பத்திரமா காருல ஏறிக்கோ.. நான் திலீப்பை பத்திரமா கொண்டு விடச் சொல்லிட்டேன்..” என்றவன், அவனைப் பார்த்துக் கொண்டிருந்த திலீபைப் பார்க்க, திலீபன் ஒரு தலையசைப்புடன் காரில் ஏறிக் கொண்டு, வண்டியைக் கிளப்பினான்.

ஆர்யனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வெண்ணிலா காரில் ஏற, உதட்டை இழுத்து வைத்து புன்னகைத்து, பை என்று கை அசைக்க, அவளுக்கோ அழுகை பீரிட்டு வந்தது..

சிறுது தூரம் சென்றதும், “பை வெண்ணிலாவாம் இல்ல.. பை வெண்ணிலா.. கொஞ்சம் கூட நான் போறேன்னு வருத்தமே இல்லப்பாரு..” அவள் புலம்ப,

“நீ தானேம்மா நான் அப்படியே போறேன்.. நீங்க பெட்டியை எடுத்துக்கோங்கன்னு சொன்ன? அப்போ அவரு வேற என்ன செய்யணும்ன்னு சொல்ற? அது தான் ஜாலியா இருந்துட்டு வான்னு சொல்றார் இல்ல.. வா.. ஜீவிதாவும் ராம் மாமாவும் வேற வராங்களாம்.. எல்லாரும் சேர்ந்து இருந்து ரொம்ப நாளாச்சு..” திலீப் சொல்லிக் கொண்டே வர,

“என்னோட டென்ஷன் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியப் போகுது? போங்கடா..” என்றவள், கண்ணீருடன் திரும்பிக் கொள்ள,

“சொன்னா தெரிஞ்சிக்கறேன்..” திலீபன் கேட்க,

“உனக்கு எல்லாம் புரியாது.. நீ சின்னப் பையன்..” என்றவள், கண்களை மூடிக் கொள்ள, திலீபனுக்கு அவளைப் பார்க்க பாவமாகவும், ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது..

வீட்டிற்குச் சென்றதும், காரை விட்டு இறங்கியவள், நேராக வீட்டிற்குள் நுழைய, அவளை அந்த நேரம் எதிர்ப்பார்க்காத பூரணி, “நிலாக்குட்டி.. என்னடா எப்படி இருக்க? ஆஸ்திரேலியா எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்க,

“அதெல்லாம் நல்லா தான் இருந்தது. எனக்கு ஒரு காபி கொடு.. நான் போய் தூங்கறேன்..” என்று சொல்லிவிட்டு, முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவள், அவர் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, தனது அறைக்குள் சென்று புகுந்துக் கொள்ள, பூரணி திலீபைக் கேள்வியாகப் பார்க்க, அவன் சிரித்துக் கொண்டே,

“உங்க பொண்ணு உங்களைப் பார்க்க அப்படியே ஏர்போர்ட்ல இருந்து ஓடி வந்திருக்கா சித்தி.. வேற என்ன? எதாவது கேட்டா, நான் சின்னப்பையன் எனக்கு புரியாதுன்னு சொல்றா.. அதனால நீங்களே கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க..” என்று சொல்லிவிட, பூரணிக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது..

“ஏண்டா இவ இங்க வரேன்னு சொன்னதுக்கு மாப்பிள்ளைக்கு ஏதாவது கோபமா?” பதட்டமாகக் கேட்க,

“கொஞ்சம் அவரும் டல்லாகிட்டார் தான்.. ஆனா.. இவ காருல இருந்து இறங்காம ‘நான் அம்மா வீட்டுக்கு போறேன்’னு சொன்னா அவரும் என்ன செய்வார்? ‘போய் ஜாலியா இருந்துட்டு வா’ன்னு என் கூட அவளை அனுப்பிட்டார்.. அதுக்கும் இவ புலம்பிக்கிட்டு வரா.. அவரு என்ன தான் செய்வாரு சொல்லுங்க சித்தி..” என்று கேட்க, ஒருபெருமூச்சுடன் பூரணி அவளுக்கு காபியைக் கொண்டு கொடுக்க, அதை குடித்து முடித்தவள், அமைதியாக படுத்துக் கொண்டாள்..

மதியம் உணவை முடித்ததும், அவர்களுக்கு வாங்கிக் கொண்டு வந்த பொருட்களைப் எடுத்துக் கொடுத்தவள், மீண்டும் படுத்துக் கொள்ள, சுபத்ராவும் பூரணியும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்..

மாலை வரை இப்படியேச் செல்ல, ஆர்யனும் அவளுக்கு அழைக்காமல் போக, இவளும் அவனுக்கு அழைக்காமல் இருக்கவும், “இனிமே டெலிவெரிக்கு கூட என்னை விட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய் தங்கறேன்னு சொல்லக் கூடாதுடி என் தேனு.. அதுக்கு வழி செய்யறேன்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தனது அன்னையைக் காண ஊருக்குப் புறப்பட்டான்..

error: Content is protected !!