ஆட்டம்-47
ஆட்டம்-47
ஆட்டம்-47
அன்று மாலை ஒன்றாய் வீட்டிற்குள் நுழைந்த சகோதரர்களை திருட்டுப் பார்வை பார்த்த திலோத்தமை அவர்கள் பார்க்கும் பொழுது, டிவியில் பார்வையை பதித்துவிட, தங்கையின் இரு பக்கமும் வந்து அமர்ந்தனர், இருமாப்பே தங்களின் கிரீடம் என்று வலம் வரும் இரட்டை இராஜ வேங்கைகள்.
இப்போதெல்லாம் இரு வீட்டிற்கும் இடையே மேலே பாலம் போன்று கட்டப்பட்டிருக்க, அபிமன்யுவின் வீட்டில் தான் மொத்த சமையலும். காலை டீ, காபி மட்டும் தான் கோதை அங்கு கணவருக்கும், மகன், மகள் அனைவருக்கும் தருவார். மற்றபடி அனைத்தும் இங்கே தான்.
அண்ணன்கள் இருவரும் அதிசயமாய் தன் இருபுறமும் அமர்ந்திருப்பதை உணர்ந்தவளுக்கு அகமகிழ்ந்து போக, பாவம் அவளுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நிமிடங்களில் அவள் அடையப் போகும் பீதியை.
சற்று நேரத்தில் நீரஜாவும் வந்துவிட, “என்ன இரண்டு பேரும் சீக்கிரமே வந்துட்டீங்க?” என்று வினவியபடி அமர, பின் கழுத்தை அழுந்த வருடிய அபிமன்யு,
“திலோவுக்கு நல்ல சம்மந்தம் வந்து இருக்கு அத்தை… அதுதான் தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லாம் வந்தோன பேசி முடிச்சிடலாம்னு” கூறியது தான் தாமதம், திலோத்தமைக்கு புரையேறிவிட, தங்கையின் தலையை தங்கு தங்கு என்று தட்டிய விக்ரம், “வெக்கம் வருது கல்யாணப் பொண்ணுக்கு” என்றானே பார்க்கலாம்.
திலோத்தமையின் விழிகள் கலங்குவது போன்றுஆக, நீரஜாவின் அருகே அமைதியாக அமர்ந்திருந்த விஜய்யின் ஈட்டி போன்ற பார்வை பெண்ணவளை துளைத்தது.
அபிமன்யு கூறியவுடன் அதிர்ச்சியை சுமந்த முகமும், கலக்கத்தை ஏந்திய கண்களுமாக அமர்ந்திருந்தவளின் மேனி விக்ரம் பேசியவுடன் நடுங்குவதை உணர்ந்த விஜய், “திலோத்தமை” என்றழைக்க, “மாமா” என்றாள் சின்னக்குரலில்.
இடைப்பட்ட நாட்களில் திலோத்தமை விஜய்யிடம் நன்கு நெருங்கியிருந்தாள். பேசுவது, சிரிப்பது, ஆலோசிப்பது, புதிதாக வந்திறங்கும் எந்தவொரு பொருளை பற்றியும் பகிர்ந்து கொள்வது என்று அவருடன் செல்ல பெண்ணாய் நெருங்கியிருந்தாள்.
“ஆர் யூ ஓகே?” என்று அவர் வினவ,
“எஸ் மாமா” என்றவளிடம் விஜய், நீரஜாவின் பையில் இருந்த பெரிய சாக்லேட் பாரை எடுத்து நீட்ட,
“அதெல்லாம் திலோ மதியமே பெரிய சாக்லேட்டா சாப்பிட்டாளே” என்று விக்ரம் இலகுவாக கூற, பூவையவளின் மென் மனம், சகோதரன் பேசிய வார்த்தைகளில் அதிர்ச்சி எனும் வெடி தாக்கி வெடித்துச் சிதற, நெற்றியில் பூத்த வியர்வையுடன் விழித்தவளிடம்,
அபிமன்யு, “அதுவும் நல்லா காலேஜ் கட் அடிச்சிட்டு சாக்லேட் சாப்பிட்டிருக்காங்க” என்றதில், எழுந்து ஓடிவிடலாமா எனும் அளவுக்கு பெண்ணவளின் உள்ளம் தாறுமாறாக ஓடித் துடித்தது.
திலோத்தமையின் மீது பார்வையை அகற்றாத விஜய், அபிமன்யுவையும் விக்ரமையும் மாறி மாறி பார்க்க, “எக்ஸீக்யூஸ் மீ” என்று எழுந்த அபிமன்யு, “உன்கிட்ட பேசணும்… ஆபிஸ் ரூமுக்கு வா” என்று திலோத்தமையை அழைக்க, விக்ரமும் தங்கையை அழுத்தமாய் பார்த்தபடியே எழ, பெண்ணவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது.
இருவரும் முன்னே செல்ல, எச்சிலை கூட்டி விழுங்கி அவள் விஜய்யையும், நீரஜாவையும் திரும்பிப் பார்க்க, இருவரின் கேள்வியை சுமந்த முகங்களை நோக்கியவள், “நானும் கௌதமும் லவ் பண்றோம்… அண்ணங்களுக்கு தெரிஞ்சிடுச்சு போல” என்று சன்னமான குரலில் கூறிவிட்டு செல்பவளை பார்த்த இருவரும் சிலையாகி அமர்ந்துவிட்டனர்.
நீரஜா விஜய்யை பார்க்க, “ஏன் அம்மாடி! நல்ல பையன் தானே கௌதம்?” என்று வினவ,
“ரொம்ப ரொம்ப நல்ல பையன்ங்க… ஆனா இங்கவீட்டுல இருக்க எல்லாரும் எப்படி எடுத்துக்க போறாங்களோ!” கூறியவரின் கரத்தை தட்டிக் கொடுத்தவர், “ம்ம்… என்ன பேச கூப்பிட்டு இருக்காங்கனு பாப்போம்” என்றார்.
அப்போது தான் தூக்கத்தில் இருந்து வந்த நறுமுகை, “கார் வந்திருச்சு போல… இரண்டு பேரும் வந்துட்டாங்களா?” என்று வினவ, நீரஜா, “ம்ம்” என்று தலையாட்ட, அப்போது தான் வீட்டினுள் நுழைந்தாள் உத்ரா.
தினமும் ஒன்பதிலிருந்து மாலை மூன்று வரை மருத்துவமனை செல்பவள், மூன்றரை முதல் நாலரை வரை அருகில் உள்ள நாட்டியாலயாவில் குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுக்க சென்று கொண்டிருந்தாள். அவளுடனே எப்போதும் கன்வைத்த இரு பாடி கார்ட்ஸ் வேறு.
சோர்வாக வந்த உத்ராவிற்கு, நறுமுகை பழச்சாறை எடுத்து வந்து நீட்ட, “நானே எடுத்துப்பனே” என்று சகோதரியின் மேடிட்ட வயிற்றை பார்த்தபடி கூறியவளை முறைத்தவள்,
“நான் ப்ரெக்னென்டா தான்டி இருக்கேன்… பேஷன்ட் இல்ல” என்று தலையை சிலுப்பிக் கூற,
“அப்படியா?” என்றிழுத்த உத்ரா, “அப்படியே பாட்டி செஞ்ச மிக்சரை மட்டும் எடுத்து வந்து வையேன்” என்று கேட்க, அங்கு வந்த இமையரசி, “பாரேன்இந்த புள்ளைகள” என்று சிரித்தவர்,
“இந்த திலோ புள்ளை எங்க காணோம்… புட்டு செய்ய சொல்லுச்சு…” என்று தேட, கணவரின்முகத்தை பார்த்தார் நீரஜா.
“மாப்பிள்ளைக ஏதோ பேசணும்னு உள்ள கூட்டிட்டு போனாங்க” என்று விஜய் கூற, அங்கிருந்த மற்றவர்களின் புருவங்களும் சுருங்கியது.
இமையரசி யோசித்துக் கொண்டே அங்கிருந்து நகர, அறைக்குள் உதட்டின் மேல் வியர்வைப் பூக்கள் பூக்க நின்றிருந்தாள் திலோத்தமை. தலை குனிந்து நின்றிருந்தவளை பார்த்த சகோதரர்கள் தங்களுக்குள் சிரிப்பை பரிமாறிக் கொண்டு மீண்டும் முகத்தை மாற்றி நின்று கொண்டனர்.
“திலோத்தமை!” என்ற மூத்த அண்ணனின் அழைப்பில் அஞ்சிப் போய் பதட்டத்துடன் நிமிர்ந்தவளை அபிமன்யுவின் பார்வை பஸ்பமாக்க, “ண்… ணா…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
மயக்கம் வருவது போன்று இருந்தது.
“எத்தனை நாளா நடக்குது?” என்ற விக்ரமின் சுக்குநூறாக்கும் குரலில் சிறு குழந்தை போன்று பேந்த பேந்த பயத்தில் விழித்தவளை கண்ட இருவருக்கும், உள்ளுக்குள் சிரிப்பு மூண்டாலும், அடக்கிக் கொண்டு நின்றிருக்க, எதிரில் மடவோளோ உடல் தூக்கிவாரிப் போட நின்றிருந்தாள்.
“கேக்கறான் இல்ல?” என்ற அபிமன்யுவின் அடுத்த ஒற்றை அதட்டலில், கண்களில் இருந்து கண்ணீர் சரம் சரமாய் அருவியாய் கொட்ட, நாசியும் கன்னங்களும் தக்காளிப்பழம் போன்று சிவந்து போக, விக்கி விக்கி அழத் துவங்கினாள் கௌதமின் காதலி.
இருவரும் கல் நெஞ்சக்காரர்களாகவே அசையாது நிற்பதை கண்ட திலோத்தமையின் மனம் மேலும் பயத்தில் சில்லிட்டு போக, அபிமன்யு, “நாங்க பாத்தோம் சரி… அப்பாவோ தாத்தாவோ பாத்திருந்தா?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு டேபிளின் மேல் சாய்ந்து நின்றபடி கேட்க, சின்னவளின் விரல்களோ நிற்காது நடுங்கிக் கொண்டிருந்தது.
“அதெல்லாம் யோசிச்சு இருந்தா நம்மகிட்ட மாட்டி இருப்பாங்களா?” என்ற விக்ரமின் அடுத்த சொற்களில் சின்னஞ்சிறு மனம் கொண்டவள், மேலும் அழுகையில் தேம்பினாள்.
மேலும் அவர்கள் கேட்டுவிடும் முன் தாமே கூறிவிடலாம் என்று நினைத்தவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்சமாக நிமிர்ந்தாள்.
“நான் கௌதமை தான் ண்ணா லவ் பண்றேன்… நம்ம குடும்பத்தை மீறி இப்படி பண்ணது தப்பு தான் ண்ணா… வெளிய போனதும் தப்புதான்… ஆனா, ப்ளீஸ் எங்களை பிரிச்சிடாதீங்க” என்று தேம்பிக் கொண்டிருந்தவளின் அழுகை உயர கெஞ்சியவளிடம் விக்ரம்,
“நீயா நாங்களான்னு வந்தா கௌதம் நாங்க சொல்றதை கேப்போம்னு சொல்லிட்டான்… அதனால…” என்றிழுத்த அண்ணனை விக்கித்துப் போய் பார்த்தவளின் இதழ்கள், இதயம் வெடிப்பது போன்று துடிக்க, உடலில் இரத்தம் பாய்வது கூட வலியைக் கொடுப்பது போன்று இருக்க, கண்ணீர் வழிந்து பெண்ணவளின் கால் நகங்களில் பொட்டு பொட்டாய் விழுந்தது.
“அ… த… னா… ல… “ என்று அழுகைக்கும் கதறலுக்கும் இடையே பேச முடியாமல் தவித்துப்போனாள் அந்த வீட்டின் கடைக்குட்டி.
“நீயே சொல்லு…” என்று அபிமன்யுவின் அருகே தலையை கோதியபடி சென்று நின்று விக்ரம் கூற, இவளுக்கு தொண்டைக் குழியில் வந்து இதயம் அடைத்து நின்றது.
அவளுக்கு நிச்சயமாக தெரியும். சகோதரர்கள் சொன்னால் கௌதம் அவர்களின் நட்புக்குத் தான் முக்கியத்துவம் தருவான் என்று. கௌதமை காதலித்த இத்தனை நாட்களில் ஒரு வார்த்தை நண்பர்களுக்கு எதிராக கௌதம் பேசியது கிடையாது.
ஏன் ஒரு முறை, ‘அபியும் விக்ரமும் மனசார நம்ம லவ்வை அக்ஸெப்ட் பண்ணாதான் கல்யாணம்’ என்றிருந்தான். அதாவது எத்தனை வருடங்கள் ஆனாலும் காத்திருப்போம் என்ற எண்ணத்தில் அவன் அன்று கூறியது. அன்றே அவள் மனதில் அது வேறு மாதிரியாகத்தான் பதிந்திருந்தது.
அதை நினைக்க நினைக்க, அழுகையில் மேலும் விசும்பியவள், “அதுனால நாங்க நாளைக்கு கௌதமை குடும்பத்தோட பொண்ணு பாக்க வர சொல்லிட்டோம்” என்றானே!
சட்டென அழுகையில் பிதுங்கிக் கொண்டிருந்த இதழ்கள் பொத்தானை அழுத்தியது போன்று நின்றுவிட, தன் செவிகளை நம்ப முடியாதவளாய், தன் முன் நின்றிருந்தவர்களையே பெண்ணவள் இமைக்காது பார்த்திருக்க, “என்ன ஸ்டாச்சு ஆகி நின்னுட்ட…” என்று விக்ரம் அடக்கமாட்டாத புன்னகையுடன் சீண்ட, சட்டென உயிர் பெற்ற சிலை போன்று இருவரிடமும் ஓடியவள், இருவரையும் இறுக அணைத்துக் கொண்டாள்.
“தாங்க்ஸ் அபி ண்ணா… தாங்க்ஸ் விக்ரம் ண்ணா” என்று இருவரிடமும் கூறியவள் இருவரிடமும் இருந்து பிரிந்து, “ஸாரி” என்று கேட்க,
“இரண்டு பேரும் பேசி வச்சு ஸாரி கேப்பீங்களா?” என்று அபிமன்யு வினவ, புரியாது பார்த்தவளிடம், விக்ரம் அனைத்தையும் கூற,
“அப்ப இப்ப வேணும்னுதான் மிரட்டுனீங்களா?” என்று வினவ, இருவருமே கண் சிமிட்டினர்.
கண்களை அழுந்த துடைத்தவள், “ம்கூம்” என்று தலையை சிலுப்ப, சட்டென ஞாபகம் வந்தவளாய்,
“தாத்தா… ஒத்துப்பாரா?” என்று பரிதாபமாக வினவ, இருவருமே அது எங்கள் வேலை என்பது போல நின்றிருக்க, இருவரிடமும் புன்னகைத்தபடியே வெளியே வந்த திலோத்தமையின் விழிகளை பார்த்த உத்ராவும், நறுமுகையும் அவளை அழைத்து விசாரிக்க, உண்மையை உடைத்தாள் பெண்ணவள்.
உத்ராவிற்கு முன்பே தெரியும். ஆனால், நறுமுகைக்கு தெரியாது. தெரிந்தால் அண்ணனிடம் சொல்லிவிடுவாளோ என்று திலோ கூறவில்லை.
அதனால் மூவரும் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க, “எது மிரட்டுனாங்களா? உங்க அண்ணனுக மாதிரியா கௌதம் அண்ணா… கடத்திட்டு போயிட்டு பேச்சை பாரு” என்று உத்ரா பொரிந்து கொண்டிருந்த சமயம், உத்ராவின் முதுகில் அடி விழுந்தது.
“ஆஹ்!” என்று திரும்பியவளின் பின் விக்ரம் நின்றிருக்க, “ஸோ மேடமுக்கு முன்னாடியே தெரியும் போலையே?” என்று கேட்டான் ஒய்யாரமாய் நின்று கொண்டு.
உத்ராவோ நறுமுகையை பார்த்து, “சிலர் எல்லாம் என்கிட்ட பேச வேணாம்னு நான் சொல்லி இருக்கனா இல்லியா? அவங்க அண்ணன் பண்ணதுக்கு என்கிட்ட பேசாம இருந்தவங்க உன் ஹஸ்பன்ட்… இப்ப மட்டும் அடிக்கறாரு” என்று முறைக்க,
“உத்ரா!” என்று அதட்டினார் நீரஜா.
அபிமன்யுவிடம் பேசிய அடுத்த நாளே விக்ரம் உத்ராவிடம் பேசியிருக்க, பெண்ணவள் தான் திருப்பிக் கொண்டு போனது. ‘நினைத்தால் பேசக்கூடாது… நினைத்தால் பேசனும்’ என்று அவளுக்கும் கோபம் வந்திருக்க அவளும் பேசவில்லை.
விக்ரம் ஏதாவது இடையில் பேச்சில் சீண்டினால் கூட நறுமுகையிடம் பதில் கூறிவிட்டு சென்றுவிடுவாள். இப்போதும் அதுதான் நடந்தது.
அன்னையின் அதட்டலில் வாயை மூடிக்கொண்டவள் விக்ரமை பார்க்க, “இப்ப வரைக்கும் என்னோட கோபம் எதுக்குன்னே உனக்கு புரியல உத்ரா… நான் சொன்னதை மீறியும் போய் தான் நடக்க கூடாதது எல்லாம் நடந்துச்சு… இப்ப இதை சொல்ல கூடாது தான்… ஆனா, அதுதான் உண்மை…” என்றவன் நறுமுகையின் அருகே வந்து அமர்ந்து கொள்ள, உத்ரா அறைக்குச் சென்றுவிட்டாள்.
அறைக்குள் நுழைந்தவளை சட்டை பட்டன்களை கழற்றி கொண்டிருந்த அபிமன்யு பார்த்துவிட்டு, திரும்பி நின்று சட்டையை கழற்ற,பெண்ணவளுக்கோ உச்சக்கட்ட கடுப்பு ஆகிவிட்டது.
“இப்ப இந்த மன்மதனை யாரு மயக்க போறாங்களாம்” என்று கணவனுக்கு கேட்கும்படியே முணுமுணுத்துக் கொண்டு நகர முற்பட, சும்மாவே அடங்காத திமிறும் காளை அவன்!
இப்போது அமைதியாகவா இருப்பான்!
“ஆனானப்பட்ட விஸ்வாமித்ரரையே ஒருத்தி மயக்கிட்டாளாம்… இந்த அபிமன்யு எம்மாத்திரம்… அதுவும் மேனகையை விட ஹாட்டா இருக்கவ முன்னாடி நின்னா…” என்று பெரு மூச்சுவிட்டபடியே கூறியவன் வெற்று மார்புடன் திரும்ப, இப்போது மயங்கி நின்றது என்னவோ உத்ரா சித்தார்த் அபிமன்யு தான்.
ஆடவனுடைய வெற்று உடல், பெண்ணவளுக்கு கப்பலில் அவர்கள் இருந்தபோது ஜிம்மில் நடந்த சம்பவத்தை நினைவூட்ட, கண்கள் சட்டென இறுக்கி தலையை சிலுப்பியவள், “நீங்க என்னை வம்பு இழுத்துட்டே இருக்கீங்க” என்று காது கிழிய கத்தினாள்.
“வந்தவுடனே பேசுனது நீதான்” என்றான் கையில்லாத கருப்பு நிற வெஸ்டை எடுத்து அணிந்தபடியே.
“உங்க கூட எல்லாம் பேசி ஜெயிக்க முடியுமா?” என்றவள் தனது அறைக்குள் செல்ல முற்பட,
“உனக்கு திலோ லவ் பண்ணது முன்னாடியே தெரியுமா?” என்று வினவ, சட்டென கால்கள் தரையோடு ஒட்டிவிட்டதை போன்று நின்றவள், அபிமன்யுவை திரும்பி பார்க்க, அவனின் வதனத்திலோ எந்த விதமான உணர்வையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தன்னை பார்த்துக் கொண்டிருப்பவளின் அருகே முன் வந்து சொடக்கிட்டவன், “தெரியுமா தெரியாதா?” என்று வினவ, பொய் உரைக்க பிடிக்காதவள், “தெரியும்” என்றாள்.
“அதுக்குள்ள மேல நியூஸ் வந்திடுச்சா?” என்று கேட்டவளைப் பார்த்து கேலியாக புன்னகைத்தவன், “அவ வெளிய வந்தோன உன் காதுல வந்து ஓதுனதை பாத்து எனக்கு மட்டும் இல்ல… அங்க இருந்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்” என்றவன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான்.
“ஆமா லேப்டாப்பை கட்டிட்டு நல்லா அழுங்க… அதுக்கு தானே என்னை கல்யாணம் பண்ணீங்க” என்று மேல் கூரை பிய்ந்து பறக்கும் அளவிற்கு கத்தியவளை அவன் மதிக்காது அமர்ந்துகொள்ள,
“ச்சை உங்களை போய் கல்யாணம் பண்ணியிருக்கேன் பாருங்க… என்னை செருப்பால அடிச்சுக்கணும்” என்று தலையில் அடித்துக்கொள்ள,
“கீழ விதவிதமா இருக்கும்” என்று நக்கலடித்தவனின் மேல் தலையணையை தூக்கி எறிந்தவள், “மனுஷனே இல்ல” என்று மூச்சுக்கள் பலமாக வாங்க உள்ளே கோபமாக சென்றவளின்செயலில் உதட்டில் உறைந்த புன்னகையுடன் வேலையில் மூழ்கினான்.
அன்று அவனின் மனதில் இருந்ததை பெண்ணவளிடம் கொட்டிய பின்பு, அவனாகஅவளிடம் பேசுவதில்லை. அவளாக இப்படி ஏதாவது வம்பிழுத்தால் மட்டுமே. அன்று அப்படி அவன் வெடித்தது அனைத்துமே மதுவால் தான். அவனின் மாதுவாலும் கூட.
அதிலிருந்து அவன் எடுத்த முடிவு, அவளாக வந்து பேசி, அவளாக வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று சொன்னால் மட்டுமே நெருங்க வேண்டும் என்று வீம்பாக சுற்றிக் கொண்டிருந்தான்.
அதிலிருந்து உத்ராவாக அவனிடம் சென்று பேசினால் கூட ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவான். மற்ற எதுவும் பேசியதில்லை. திருமணமான புதிதில் அவள் எப்படி இருந்தாளோ, இப்போது அபிமன்யு அப்படி இருக்கிறான்.
மொத்தத்தில் எதை கொடுத்தாலும் இரு மடங்கு தான் அடுத்தவருக்குக் கொடுக்கிறான். அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி.
எதையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பவன் இந்த அபிமன்யு!
ஒருவனை மாவீரன் என்று சொல்வது அவனது வெற்றி தோல்விகளை பொருத்தல்ல. அவன் போரிட்ட விதமும், வீரத்தையும் பொருத்தே ஆகும்.
பதினாறு வயதில் போருக்கு சென்று பங்காளிகளை கலங்கடித்த மகாபாரத அபிமன்யுவிற்கும், சந்திரஞ்சா அபிமன்யுவிற்கும் பெரும் வித்தியாசம் இல்லை.
இருவரின் அன்பும் ஒன்றே!
இருவரின் நோக்கமும் ஒன்றே!
இருவரின் பராக்கிரமும் ஒன்றே!
குருக்ஷேத்திர போரில் யுத்தம் முடியும் தருவாயில் பாண்டவர்கள் வெல்ல இருந்த கணத்தில்அவர்களை திசை திருப்ப, அர்ஜூனனும் கிருஷ்ணரும் வேறு திசையில் போர் புரிய சென்ற சமயத்தில், சக்கர வியூகத்தை துரோனர்அமைத்ததால், பஞ்ச பாண்டவர்களின் சேனை தடுமாறிப் போனது.
அப்போது அன்னையின் வயிற்றில் இருந்தபோது சக்கிர வியூக கதையை கேட்டவனே மகாபாரத அபிமன்யு. சேனை தடுமாறிய பொழுது சக்கர வியூகத்தை உடைக்க முன் வந்தான்.
துரியோதனன், துச்சாதனன், கர்ணன், அஷ்வத்தாமன் என இப்படி ஏழு பேருடன் தந்தையும், தந்தையின் சகோதரர்களும் இன்றி சக்கர வியூகத்தை துவசம் செய்து தனியாளாக போரிட்டவன் மகாபாரத அபிமன்யு.
இறக்கும் தருவாயில் கூட, கர்ணனனால் அணைக்கப்பட்டு, “இந்த மகாபாரத போரில் நானோ உன் தந்தையோ பெரிய வீரன் அல்ல… நீ ஒருவனே சிறந்த வீரன், உன்னை இந்த உலகம் போற்றும்” என்று மரணத்தை பரிசளித்தார்.
அதுவும் கௌரவர்களால் ஆணையிடப்பட்ட காரணத்தை மீற முடியாத காரணத்தாலும் மற்றும் அதர்ம வழியில் சுற்றி இருந்த அனைவரும் அவனை தாக்கிய பொழுது!
ஆனால், சந்திரஞ்சா அபிமன்யுவிடம் தர்மம் என்ன அதர்மம் என்ன?
அவனே அவன் கதையில் சகுனி, அவனே அவன் கதையில் இராஜ தந்திரி!
பங்காளிகள் கரங்களினால் அதர்ம வழியில் தன் உயிரை விட்ட மகாபாரத அபிமன்யுவாக இந்த அபிமன்யு இருக்க மாட்டான்.
அவனிடம் நேர்மையாக நின்றால் பாண்டவர்களாக தர்மத்துடனே போரிடுவான்!
அவனிடம் நேர்மையின்றி நின்றால் கௌரவர்களாக அதர்மத்தோடே போரிடுவான்!
அதற்கான நாளும் வெகு தொலைவில் இல்லை!