ஆட்டம்-49

ஆட்டம்-49

ஆட்டம்-49

“ம்மா” என்று முனகிய மித்ரா மயக்கத்தில் இருந்து விழிகளை திறக்க, அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது. கண்களை கசக்கிக் கசக்கிப் பார்த்தவள், அறையை சுற்றி பார்த்தாள்.

என்ன நடந்தது என்று நினைவு கூறவே அவளுக்கு ஐந்து நிமிடங்கள் பிடித்துவிட்டது.

கண்கள் தாமாக கட்டுப்பாட்டின்றி சுழல்வது போன்று இருக்க, மற்றவர்களைத் தேடினாள். திலோத்தமை ஒரு மூலையில் சுருண்டு கிடக்க, மீதியிருந்தவர்களை காணவில்லை.

உள்ளம் சுற்றியிருந்த இடத்தைப் பார்த்து அதிர, அருகிலிருந்த மிகப் பெரிய மணியைப் பார்த்தவளுக்கு அது என்ன இடமென்று புரிந்தது. கண்கள் தாமாக மூடி அச்சத்தில் நடுங்கும் கருவிழிகளோடு வேண்டியது.

அவர்களை வைக்கப்பட்டு இருந்த இடம் ஒரு சர்ச்!

காட்டுப்பகுதிக்குள் இருந்த பாழடைந்த ஒரு பழைய சர்ச்!

இருளடைந்த பகுதி சின்னவளுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும் முதலில் அவள் சிந்தித்தது என்னவோ இங்கிருந்து எப்படி தப்பிக்கலாம் என்றுதான். கரத்தை பார்த்தாள். கையிலிருந்த ஸ்மார்ட் வாட்ச் காணாமல் போயிருந்தது.

இல்லையைனில் கூட அதிலிருந்து புளூட்டூத் மூலமாக யாருக்காவது மெசேஜ் அனுப்பலாம் அல்லவா.

தண்ணீரின் தாகம் வேறு எடுக்க, திலோத்தமையை நோக்கி நகரப் பார்த்தாள். முடியவில்லை. தலையை சற்று திருப்பிப் பார்த்தாள். அவளை இரும்பு சங்கிலி கொண்டு சன்னலில் இருக்கும் கம்பியோடு கட்டப்பட்டு இருப்பது புரிந்தது.

அச்சம் கொள்ளும் மனதை சாந்தப்படுத்தியவள், “கடவுளே ஏதாவது வழி காமி” என்று வேண்டினாள்.

கம்பியை இழுத்துப் பார்த்தாள். முடியவில்லை. தன் சக்தி மொத்தத்தையும் திரட்டிக் கூட முயன்று பார்த்தாள். கரங்கள் கன்றி போனது தான் மிச்சம்.

கன்றிப் போன இடங்கள் எரியத் துவங்க, உதட்டைக் குவித்து ஊதியவளுக்கு முதலில் திலோத்தமையை எழுப்புவதே சரியென்று பட்டது. அருகில் ஏதாவது இருக்கிறதா என்று தேடினாள். அருகில் பழைய பொருட்கள் மட்டுமே இருந்தது.

அது அவளுக்கு எட்டவும் எட்டாத தூரத்தில் இருக்க, அமைதியாக திலோத்தமை எழும்வரை அமர்ந்துவிட்டாள். அவளுக்கு வேறு வழியும் இல்லை. அவளை நீண்ட நேரம் காக்க வைக்காது விழிகளைத் திறந்தாள் திலோத்தமை.

மெல்ல மெல்ல விழிகளை திறந்தவளுக்கு தலை சுற்ற, மீண்டும் தலை சாய்த்தவளுக்கு பட்டென்றுநெற்றி தரையில் அடிக்க, “ம்மா” என்று முனகியவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் மித்ரா.

சத்தமாக பேசவும் பயமாக இருந்தது. பேசும் சப்தம் கேட்டு யாரேனும் உள்ளே வந்து மீண்டும் மயக்கமடையச் செய்துவிட்டால் கதை கந்தல் என்று நினைத்தவள், வாய் திறக்கவில்லை.

மெல்ல மெல்ல தன்னை நிலை படுத்திக் கொண்டு எழுந்து அமர்ந்த திலோத்தமை, மித்ராவை பார்க்க, மித்ராவோ இதழ்களின் மேல் விரல் வைத்து, ‘பேச வேண்டாம்’ என்று எச்சரித்து தலையாட்டினாள்.

திலோத்தமையும் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு மிக மெல்லிய குரலில், “மத்தவங்க எங்க?” என்று கேட்க, “தெரியல திலோ” என்றவளுக்கு குரல் நடுங்கியது.

“பர்ஸ்ட் கைல இருக்க சங்கிலியை அவிழ்க்கனும்” என்று கூறிய திலோத்தமை சுற்றியும் முற்றியும் பார்க்க, மித்ரா, “நான் எல்லாம் பாத்துட்டேன்… எதுவும் இல்ல” என்றாள் அழுகை வரும் குரலில்.

“ஷ்ஷ்… ஏதாவது கிடைக்கும்” என்றவள் கரத்தில் சுற்றியிருந்த சங்கிலியை பார்த்தாள்.

“கயிறு கட்டியிருந்தா கஷ்டம்… சங்லினா ஈசியா பண்ணிடலாம்” என்று கூற,

“எப்படிடி முடியும்… ஜன்னல் கம்பியோட சேத்திகட்டி வச்சிருக்கான்” என்று அடிக்குரலில் திட்ட, சின்னவளை முறைத்தவள், “அதோட பிச்சு எடுக்கணும்னு நினைச்சா கண்டிப்பா ஏழு ஜென்மத்துக்கும் முடியாது… உன் கையை இதுல இருந்து உருவ தான் ட்ரை பண்ணனும்” என்றவள் தனது கரத்தை இரும்பு சங்கிலியில் இருந்து உருவ முயல, அதுவோ சற்று சிரமமாக இருந்தது.

சட்டென இருள் சூழ, இடியும் மின்னலும் இந்த பிரபஞ்சத்தில் இருப்போரின் விழிகளையும் செவிகளையும் கூசி நடுங்கச் செய்ய, மித்ராவின் விழிகள் சன்னலின் வழியாக வெளியே விழிகளை சுழலவிட, அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பகுதியில், கும்மிருட்டின் மத்தியில், விருட்டென்று பாய்ந்த மின்னல் ஒளியில் ஏதோ ஒரு கறு உருவம் சிலை போன்று இந்த சர்ச்சையே பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள், வாய்விட்டு அலறப்போக, தன் வாயையே அடுத்த விநாடி பொத்திக்கொண்டவள், மூச்சு வாங்க, நொடிப் பொழுதில் வியர்வைப் பூக்கள் அச்சத்தில் பூக்க திலோத்தமையை பார்த்தாள்.

மீண்டும் வெளியே பார்க்க, அதுவொரு ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்த மரக்ககிளை.

அடுத்து திலோத்தமையை பார்க்க தரையில் கிடந்த எதிலோ கரங்களை தேய்க்க, “ச்சி என்ன பண்ற?” என்று அருவெறுப்புடன் முகத்தை சுளித்தவளுக்கு அதைப் பார்க்க உமட்டுவது போல இருந்தது.

மித்ராவை முறைத்த திலோத்தமை, “இங்க புல்லாபாசம் புடிச்சு கிடக்கு… பேசாம அதை கையில சங்கிலி இருக்க இடத்துல தடவிட்டு இழுத்தா ஈசியா வந்திடும் மித்து… நீ இப்படி முகத்தை சுளித்து எந்த யூஸும் இல்ல… நம்ம தப்பிக்கிறதுக்கு வேற வழியும் இல்ல…” என்றவள் சங்கிலியில் இருந்து கரத்தை உருவ, மிகவும் சிரமமாக இருந்தது.

சில மணித் துளிகள் கடக்க, ஒற்றை கரத்தை மட்டும் முதலில் இழுத்தாள். கண்களை இறுக மூடிக்கொண்டு, வலியைத் தாங்கிக் கொண்டு அவள் இழுக்க, பாசம் கொடுத்த வழுக்கலில், நழுவிக்கொண்டு வந்து விழுந்தது திலோத்தமையின் ஒரு கரம்.

ஒரு கரம் அவிழ்ந்ததில் மற்றொரு கரமும் லூஸ் ஆக, சட்டென அதையும் உருவிக் கொண்டு எழுந்தவள், மித்ராவிடம் ஓடி அவளின் கரத்திலும் பாசத்தில் வைத்து தேய்க்க, சிறியவளுக்கோஅருவெறுப்பு தாளாது உமட்ட, அன்று காலை உண்டிருந்த அனைத்தையும் வாமிட் எடுத்துவிட்டாள்.

அவளின் தலையை பிடித்த திலோத்தமை, “நீ கண்ணை மூடு… எதையும் பாக்காத” என்றவள் அடுத்த சில நொடிகளில் மித்ராவின் கரங்களை சங்கிலியில் இருந்து உருவி எடுத்திருக்க, விழிகளைத் திறந்த சின்னவளோ, வெளியே பெய்து கொண்டிருந்த மழை நீரில் கரத்தை காட்ட, திலோத்தமையும் மழை நீரில் கரங்களை காட்டினாள்.

‘அடுத்து என்ன?’ என்று இருவருமே முகத்தை பார்க்க, கதவை உடைக்க முயன்றனர். ஏற்கனவே பாழடைந்திருந்த மர கதவுகள், அதுவும் தண்ணீர் அது இதுவென்று ஊறிப் போய் கிடந்திருந்தது. திலோத்தமை பிடித்த ஒரு இழுவையில் பூட்டு உடைந்து போய் கதவுகள் திறக்கப்பட, வெளியே எட்டிப் பார்த்த இருவரும், கண்மண் தெரியாது ஓடத் துவங்கினார்கள்.

யாரோ வரும் சப்தம் கேட்க, சட்டென அருகே இருந்த சந்தில் ஒளிந்து கொண்டவர்கள் அவன் செல்லும் வரை காத்திருக்க, திலோவின் முகத்தைப் பார்த்த மித்ரா, “அவங்க எல்லாம் எங்க இருப்பாங்க?” என்று கேட்க, விழிகளில் நீர் கோர்க்க, “தெரியல” என்றவள், மித்ராவின் கரத்தை இழுத்துக் கொண்டு மீண்டும் ஓடினாள்.

பின்னே பார்த்துக் கொண்டே ஓடிய இருவரும், அங்கிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓட, சட்டென யாரோ மீது மோதி கீழே விழப் போனார்கள். சட்டென நிதானித்து நின்றவர்களின் உயிர்களும் எதிரில் நின்றிருந்த உயரமானவனை பார்த்து உறைந்து போக, பயத்தில் இரு பெண்களின் தொண்டைகளும் வறண்டு போனது.

எதிரே இருந்தவனின் கீழ் முகம் மட்டும் பெண்களுக்குத் தெரிய, மேல் முகத்தை இருள் மறைத்திருக்க, அவனின் கோர விழிகளை மட்டும் பார்த்த பெண்களுக்கு சகலமும் நடுங்க, உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர், சிம்மவர்ம பூபதி வீட்டுக் கடைக்குட்டிகள்.

திலோத்தமை யோசிக்கும் முன் திலோத்தமையின் கன்னத்தில் விழுந்த இடியில், பெண்ணவள் நான்கடி தள்ளிச் சென்று தொப்பென்று விழ, அவளின் கண்களில் பூச்சி பறக்க, கீழே விழுந்ததில் கரத்தில் உராய்வுகள் ஏற்பட்டு, இதழ்களின் ஓரம் இரத்தத் துளிகள்.

“ஐயோ!” என்ற அலறலுடன் திலோத்தமையின் அருகே ஓடிச் சென்ற மித்ராவின் சிகையை கொத்தாக பற்றியவன், அவளை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட, கீழே போய் விழுந்தவளுக்கு எங்கிருந்தது வந்ததோ அப்படியொரு தைரியம், அடுத்த விநாடி திரும்பியவள், தன்னை மிதிக்க ஆங்காரமாய் கால் ஓங்கியவனின் உயிர் நாடியில்தன் காலை ஓங்கி அடித்தவள், அங்கிருந்து எழுந்து ஓட, சின்னவள் தாக்கியதில் அதற்கு மேல் அவன் அசைவற்று போனான்.

எழுந்து கண் மண் தெரியாது ஓடிய மித்ராவிற்கு எப்படியாவது இங்கிருந்து வெளியே சென்று அபிமன்யு அல்லது விக்ரமிற்கு அழைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு மனவோட்டம் மட்டுமே.

முதலில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைக்கே ஓடியவள், அங்கு இருந்த ஒரு பெரிய ஓட்டையின் வழியாக வெளியே தாவ, ஈர இலைகளும், கற்களும், பாசமும் இருந்த இடம் அவளின் காலை வழுக்கச் செய்ய, தாழ்வான பகுதியை நோக்கி வழுக்கியும், உருண்டு கொண்டும் சென்றவள், இறுதியாக ஒரு மரத்தில் அடித்து நிற்க, அடித்த வேகத்தினில் மயக்கத்திற்குச் சென்றாள் அந்த பாவை.

உள்ளே கிடந்த திலோத்தமையை பிடித்து வெறியுடன் எழுப்பியவன், அவளின் பின் முடியை இறுக்கிப் பற்றி இழுத்துச் செல்ல, வலியில் கத்தியவளின் சப்தம் அந்த சர்ச்சினுள் இருந்த நீரஜா, உத்ரா, நறுமுகையை அடைய, சின்னவளின் அலறல் அவர்களை வேரோடு அசைத்துப் பார்க்க, ஓர் அறையின் கதவைத் திறந்தவன், திலோத்தமையை உள்ளே தள்ளிவிட்டு செல்ல, நீரஜாவின் மடியில் போய் விழுந்தாள் இரட்டை வேங்கைகளின் தங்கை.

அவன் சென்ற பின் நிமிர்ந்த திலோத்தமை, “அத்தை” என்று வாய் அசைக்க, அவளின் வாயை பொத்திய நீரஜா இறுக்கமாக அமர்ந்திருந்தார். சுற்றியும் பார்த்தவளுக்கு நறுமுகை ஓர் இடத்தில் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது புரிய, அந்த அறைக்கோ ஜன்னல் என எதுவுமே இல்லை.

முழுதாக மூடப்பட்டு இருந்த அறையில் சிறிய வெளிச்சம் மட்டும் கசிந்து கொண்டிருந்தது. அதுவும் அங்கிருந்த ஒரு ஓட்டை வழியாக. நறுமுகையின் அருகே சென்ற திலோத்தமை, “அண்ணி” என்றழைத்தவள் அனைத்தையும் கூறி முடித்து, “மித்து மட்டும் எங்க போனான்னு தெரியல” என்று கண்கள் பனிக்கக் கூற, நறுமுகைக்கு வயிற்றில் மகன் எட்டி உதைக்கத் துவங்கினான்.

வயிற்றைத் தட்டிக் கொடுத்தவள், “எப்படி நம்மள இங்க தூக்கிட்டு வந்தாங்கனு கூட மறந்து போச்சு” என்றவள் மயக்கம் கொடுத்த வீரியத்தில் இருந்து வெளியே வரவில்லை.

மீண்டும் அவன் படாரென்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர, கூரிய வாளோடு வந்திருந்தவன், அழுத்தமும் திமிருமாய் அமர்ந்திருந்த நீரஜாவை பார்த்து, “உங்க வீட்டுல எல்லா பொண்ணுகளுமே ரொம்ப அழகு… இந்த வயசுலையும் நீ எப்படி இருக்க பாரேன்” என்று கூற, நீரஜாவின் மனதில தகித்துக் கொண்டிருந்த தீயின் ஜூவாலைகள், எதிரில் இருப்பவனை சுட்டுப்பொசுக்கும் ஆத்திரத்தோடு காத்துக்கொண்டிருந்தது.

“உன் இரண்டு பொண்ணுகளுமே வாழக்கூடாது… ஒருத்தி உயிரோட இருக்கக் கூடாது… இன்னொருத்தி உன்னை மாதிரி புருஷன் இல்லாம இருக்கணும்” என்று கடைசி வரியைக் கூறும்போது நறுமுகையை பார்த்து புருவங்கள் உயர்த்தி நக்கலாய் சிரித்தவனின் உடல் மொழியில், நறுமுகையின் உள்ளத்தில் அவனை கொன்றுவிடும் கொடிய வெறி உண்டாக,

“யூ சன் ஆஃப் எ பிட்ச் (You son of a bitch)” என்று தன் மொத்த ஆங்காரமும், ஆத்திரமும் இணைய கத்தியவள்,

“என் குழந்தை மேல சத்தியமா சொல்றேன்டா… உன் சாவை நீ தேடிட்டு இருக்க… துடிதுடிச்சு போய் இருக்கும் உன்னோட இறப்பு” என்று சபித்தவளின்அருகே வந்தவன், நறுமுகையின் கன்னத்தில் அறையப் போக, மீண்டும் கரத்தை இறக்கியவன், “உன் புருஷனை கொன்னுட்டு உன்னை பாத்துக்கறேன்டி” என்று அடுத்த விநாடி வெளியேறினான்.

“உத்ரா எங்க?” திலோத்தமை வினவ,

“தெரியல…” என்றது தான் தாமதம், உத்ராவின்அறைக்குள் நுழைந்தவனின் விழிகளில் மின்னிய அகோரத்தில், உத்ராவின் உள்ளம் கடினமாக, பார்வை கூர்மையாக எதிரில் நின்றிருந்தவனை நிமிர்வுடன் பார்த்தாள்.

உள்ளே வந்தவன், உத்ராவின் தலையில் பெட்ரோலை ஊற்ற, தன் மீது ஊற்றுவது என்னவென்று உணர்ந்த உத்ராவின் விழிகள் தாமாக மூடிக் கொண்டன, தன்னவனை நினைத்து.

விழிகளில் நீர் சொரிய, அசையாது, ஒரு பொட்டு சப்தம் வராது அமர்ந்திருந்தவள் தன் கணவனிடம் மனதோடு, ‘உங்க கூட ஒரு நாளாவது வாழ்ந்திருக்கலாம்’ என்று பேசியவளின் உள்ளம் யாரோ தன் இருதயத்தை இரண்டாக வெட்டிப்போட்டது போன்று வலித்தது.

விழிகளை மூடி அமர்ந்திருந்தவளின் அழுத்தம் கண்டு எதிரில் இருந்தவனின் உதட்டில், ஒரு கொடூரமான புன்னகை!

மனித உருவில் இருக்கும் இரக்கமற்ற ராட்சஷனே இவன்!

கொடியவன்!

கேடு கெட்ட பிறவி!

அடுத்த கணம் உத்ராவின் பெரும் அலறல் அந்த இடமெங்கும் அதிர, ‘அதாவது யார் வந்தாலும் நான் பயம் கொள்ள மாட்டேன்’ என்று அழுத்தமாய் அமர்ந்திருந்த நீரஜாவின் உள்ளத்தையே பனிப்பாறையாய் சில்லிட்டுப் போக வைத்தது.

உத்ராவின் அலறலில் மற்ற இரு பெண்களின் இதயங்களும் ஸ்தம்பித்து திகில் சூழ, அழுகையும் எட்டிப் பார்க்க அமர்ந்திருக்க, சிறிது நேரத்திலேயே உத்ராவின் குரல் மட்டுப்பட, உடல் தீயும் வாசனை அனைவரின் நாசியையும் தீண்ட, நீரஜாவின் உடல் சிலையாகிப் போக, விழிகளில் நீர் மட்டும் வழியத் துவங்கியது.

நறுமுகையும், திலோத்தமையும் கூட அழத் துவங்க, வெளியே தப்பித்திருந்த மித்ராவை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளை ஒரு புதர் மூடியிருக்க, சிறிது நேரத்தில் மழை நீர் முகத்தில் விடாது அடித்துக் கொண்டிருக்க விழித்தவள், சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு மீண்டும் எழுந்து ஓடத் துவங்கினாள்.

பாதையில் அல்லாது மலைச் சரிவிலேயே இறங்கி ஓடியவள், பாதையில் இறங்கி மீண்டும் மலைச் சரிவில் இறங்குவதற்குள் பெண்ணவளின் உடையின் மேல் உறுமலுடன் சடன் ப்ரேக் போட்டு நின்றது அபிமன்யுவின் கருநிற புகாட்டி சிரான்ஸ் ஸ்போர்ட்ஸ்.

காரிலிருந்து முதலில் இறங்கிய அபிமன்யுவை பார்த்து கடவுள் வந்தது போன்று உணர்ந்தவள், “மாமா!” என்ற அலறலோடு அவனிடம் தலை தெறிக்க ஓடி தஞ்சமடைய,

“இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே… யூ ஆர் சேஃப் (It’s okay It’s okay… You’re safe)” என்று சின்னவளின் தலையை தட்டிக் கொடுத்த அபிமன்யு அவளைக் காரின் உள்ளே அமர வைக்க, அவளின் உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.

மித்ராவை தேடிக் கொண்டு வந்த ஐவர் காரின் முன்பு வரிசையாக நிற்க, ஐவரையும் துச்சமாக பார்த்த விக்ரம், காரில் இருந்த தன்னுடைய வேட்டையாடும் துப்பாக்கியை எடுத்துப் பிடிக்க, மித்ராவின் கை, கால்கள் அனைத்தும் தான் கண்டு கொண்டிருப்பதில் அசைவற்று போக, அடுத்த ஐந்து விநாடிகளில் ஐவரும் கீழே விழுந்து கிடந்தனர்.

உள்ளே சர்வ சாதாரணமாக அமர்ந்த விக்ரம், அபிமன்யுவிடம், “ப்ளட் லாஸ் ஆகற மாதிரி தான் ஏய்ம் பண்ணி ஷூட் பண்ணேன்…” என்றவன் கௌதமுக்கு அழைத்து ஆம்புலன்ஸை அனுப்பக் கூறினான்.

மித்ராவிடம் அபிமன்யு விசாரிக்க, “அது ஒரு சர்ச்மாமா… பழைய சர்ச்” என்றாள்.

மூவரும் சர்ச் இருக்கும் சில தூரங்களுக்கு முன்னே சர்ச்சை கண்டவர்கள், காரை முன்னேயே நிறுத்திவிட்டு இறங்க, காரின் டிக்கியை திறந்த விக்ரம், அதிலிருந்த கூர் வாளையும், வேட்டைத் துப்பாக்கியையும் சகோதரனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

மித்ராவிடம் ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டே சென்றவர்களுக்கு தங்கையை ஒருவன் அறைந்திருக்கிறான் என்பதை கேட்கவே மனம் அக்னி மலையாய் கொதித்தது. இரத்த நாளங்கள்அனைத்தும் சினம் கொண்டு வெடித்துச் சிதற, கானகத்தில் சரியான நேரம் பார்த்து பதுங்கியிருந்த வேங்கைகள் தனது இரையை கண்ட பளபளப்புடன் வேட்டைக்குப் பாயத் தயாரானது.

மித்ரா குதித்த வழி, மரத்தின் விழுது ஒன்று தொங்கிக் கொண்டிருக்க, முதலில் விக்ரம் ஏற, அடுத்து மித்ராவை தூக்கிவிட்ட அபிமன்யு, அடுத்து தானும் ஏறி உள்ளே குதித்தான்.

உள்ளே குதித்த பின் மித்ரா வழி கூற, மூவரும் முன்னே செல்ல, கருகிய வாடை மூவரின் நாசியையுமே தீண்ட, விழிகள் நடனமாட பயத்துடன் அபிமன்யுவின் கரத்தையும், விக்ரமின் தோளையும் பற்றிப் பிடித்தாள் மித்ரா.

கருகிய உடலை பெரிய ஜமக்காளத்தை போட்டு சுற்றியவன், உடலை நீரஜாவிடம் எடுத்துச் செல்ல, கதவை எட்டி உதைத்து உள்ளே சென்றவன், கரங்களில் ஏந்தியிருந்த உடலை கீழே விட, நீரஜாவின் விழிகள் கீழே விழுந்த ஜமக்காளம் போர்த்திய உடலை வெறித்தது.

முதுகில் மாட்டியிருந்த வாளை எடுத்தவன், ஜமக்காளத்தில் இருந்த கட்டுகளை வெட்டிவிட்டு நிமிர, உடல் அச்சத்தில் அதிர, தன் முன் அபரிதமான பெண் வனபத்ர காளியாக நின்றிருந்த நீரஜாவை கண்டவனின் சப்த நாடியும் ஆடிப் போக, அவன் அடுத்த கட்டம் போவதற்குள் அவன் கரத்தில் இருந்த வாளை இராஜ குலத்திற்கே உண்டான உடல் மொழியில் தன்னிடம் கொணர்ந்தவர், அடுத்த விநாடி அவன் கழுத்தில் கத்தியை இறக்கியிருந்தார்.

சிறிய வயதில் சிம்மவர்ம பூபதி கற்றுக் கொடுத்தது இப்பொழுது நீரஜாவிற்கு அரக்கனை வதம் செய்ய பயன்பட்டது!

இரு பெண்களும் நீரஜாவின் வதத்தில் குரல்வளை நடுங்கி உயிருள்ள சிலையாய் உறைந்து போய் நின்றிருக்க, அவனின் கழுத்தினுள் சொருகியிருந்த கத்தியை அப்போதும் ஆக்ரோஷமும், ஆத்திரமும் தீராது, ஆங்காரத்துடன் திருகி மேலே அவர் இழுக்க, கூரிய பளபளக்கும் வாளோடு அந்த அரக்கனின் தலை தனியாக வர, அபிமன்யுவும், விக்ரமும், மித்ராவும் உள்ளே நுழைந்து இக்காட்சியை பார்க்கவும் சரியாக இருந்தது.

அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றிருக்க, முதலில் சுயநினைவிற்கு வந்தவனோ, அன்னையின் வயிற்றில் இருந்து அனைத்தையும் உணர்ந்து கொண்டிருந்த விக்ரமின் மகன் தான்.

பாட்டியின் பெருவீரத்தில் களிப்பு கொண்டவன் அன்னையின் வயிற்றில் அசைய, அதில் சுயநினைவு கொண்ட நறுமுகை, “ம்மா” என்று அழுகையுடன் அன்னையின் அருகே செல்ல, கீழே கிடந்த உடலை பார்த்து விழுந்து,

“உத்ரா…!” என்று நீரஜா கதறி அழுத் துவங்க, அபிமன்யுவின் இதயம் அதிர்ச்சியில் கிடுகிடுத்து போக, வாழ்வில் வெற்றியையே பார்த்து பழக்கப்பட்டவன், இப்போது முதல்முறையாக தன்னவளை இந்நிலையில் பார்த்ததில், தொப்பென்று தரையில் அமர்ந்தான். அனைவரும் சூழ்ந்துகொள்ள, அபிமன்யுவின் ஆன்மா ஆட்டம் கண்டு அடங்கிப் போயிருக்க, அடுத்த விநாடி ஆக்ரோஷத்துடன் எழுந்த விக்ரம், அபிமன்யுவை தாக்க அவன் பின்னே நின்றிருந்தவனிடம், “யூ ப்ளடி பா*** (You bloody ***) என்று கர்ஜித்தவன் அவனை சுவற்றோடு சாய்த்து அழுத்திப் பிடிக்க, அவனின் வதனத்தை பார்த்த நீரஜா அதிர்ச்சியின் உச்சியைத் தொட்டார்.

இவனா?

error: Content is protected !!