ஆட்டம்-50
ஆட்டம்-50
ஆட்டம்-50
“மேடம்! கெஞ்சி கேக்கறோம்… என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் பாருங்க” என்று நீரஜாவிடம் சேரன் கெஞ்சிக் கொண்டிருக்க,
“ஸார் புரிஞ்சுக்கோங்க… இது ஆக்ஸிடென்ட் கேஸ்… நாங்க பாக்க முடியாது… அதுவும் இல்லாம நான் யூஜி ஸ்டூடன்ட்… நான் பாத்தா கேஸ் ஆகும்… எமர்ஜென்சி வார்டுக்கு எடுத்திட்டு போங்க… டைம் வேஸ்ட் பண்ணாதீங்க… ப்ளட் லாஸ் அதிகமா இருக்கு” நீரஜா எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.
“அப்ப நீ என்ன மயிறுக்கு இங்க டாக்டரா இருக்க?” என்று எகிறிக் கொண்டு வந்தான் பின்னே இருந்த ஒருவன். அவன் சங்கர்!
அடிபட்ட பெண்ணுடைய அண்ணன்!
அவனின் பேச்சில் கோபம் வந்தாலும், அவனின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தன்னை அடக்கிய நீரஜா, “ஸார் இங்க ஒவ்வொரு கேஸும் ஒரு சிலர் தான் பாப்பாங்க… நாங்க பாக்கக்கூடாது… புரிஞ்சுக்கோங்க” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, விஜய் அங்கு வந்து சேர்ந்தார்.
“என்ன பிரச்சனை?” அவர் கேட்க, அவரின் கரங்களை பிடித்துக் கொண்டு கெஞ்சத் துவங்கிவிட்டான் சேரன்.
உடனேயே அருகில் இருந்தவர்களை ஆராய்ந்த விஜய்யிற்கு புரிந்து போனது, அவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்பது. இருந்தும் இறுதி வரை போராட முடிவெடுத்தவர், நீரஜாவிடம், “எமர்ஜென்சி வார்டுக்கு சிப்ட் பண்றதுக்குள்ள… ஆக்சிஜன் மட்டும் கொடுத்து அனுப்பலாம்” என்று முன்னே வர, நீரஜாவிற்கும் அதுவே சரியென்று பட்டது.
பொதுவாக மருத்துவம் படிப்பவர்கள் அனைவரும் அனைத்தையும் பார்க்க இயலாது. இளங்கலை படித்தவர்கள் சில விஷயங்கள் அறிவு ரீதியாக தெரிந்தாலும், பேஷன்ட்டின் மேல் கை வைக்கக் கூடாது. அது சட்டப்படி தவறாகும். அதனால் தான் நீரஜா கூறியது. இன்னும் கூறப்போனால், இதய நோயாளியை கண் மருத்துவர் பார்க்க கூடாது. கண் நோயாளியை இதய மருத்துவர் பார்க்க கூடாது.
முதலுதவி செய்து தகுந்த மருத்துவரிடம் அனுப்பலாமே தவிர மேற் கொண்ட சிகிச்சையை செய்ய முடியாது. செய்யவும் கூடாது. சட்டப்படி தவறு என்பதைத் தாண்டி, ஒரு நிபுணருக்கு மற்ற இடத்திற்கான சிகிச்சை தெரியவும் தெரியாது.
விஜய் சரியாக இருவருக்கும் ஆக்ஸிஜன் பொருத்த வர, அவர்களின் இறுதி மூச்சு நின்றுவிட, விஜய்யின் சட்டையை கொத்தாக பற்றினான் சேரன். விஜய் ஒரு முதுகலை மருத்துவம் படிக்கும் மருத்துவர். அதனால் அங்கு சென்று கொண்டிருந்த மற்ற டிபார்ட்மென்டினுடைய முதுகலை மாணவர்கள் சூழ்ந்துவிட, பெரும் களேபரம் கண்டது அவ்விடம்.
சங்கர் வேறு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்துக் கொண்டு வந்து விஜய்யின் மேல் எறிய முயல, விஜயவர்தனின் கரம் அவனின் கன்னத்தைப் பதம் பார்த்திருக்க, அங்கிருந்த பெரிய மருத்துவர்கள் கூட கூடிவிட்டார்கள்.
அவர்கள் நடந்ததை விசாரிக்க, “எமர்ஜென்சி வார்டுக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே” ஒரு பெரிய மருத்துவர் திட்ட,
“ஸார் நாங்க பர்ஸ்ட்ல இருந்து சொன்னது அதுதான்… இவரு கைனகோலஜி டிபார்ட்மென்ட்ல வந்துட்டு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண சொன்னா… வாட் வீ வில் டூ…” என்று நீரஜா கூற,
“ஷட் அப்” என்றிருந்தார் பெரிய மருத்துவர். கோபத்தை தன் மாணவர்களிடம் காட்டினால் இவர்கள் தணிந்து போவார்கள் என்ற எண்ணம்.
சேரனை பார்த்த பெரிய மருத்துவர், “நீங்க முன்னாடியே கொண்டு வந்திருக்கணும்… இங்க கொண்டு வந்திருக்கவும் கூடாது… டைம் ரொம்பவே வேஸ்ட் பண்ணீட்டீங்க… உங்க இழப்பு பெருசு தான்… அதுக்காக இங்க பிரச்சனை பண்ணாதீங்க… பாடியை எடுத்திட்டு போய் நடக்கிறதை பாருங்க” என்று கூறியவரை பெரியவர் என்றும் பாராது அறைந்திருந்தான் சேரன்.
“என் பொண்டாட்டி புள்ளையை கொன்னுட்டீங்களே டா” என்று கத்தியவனை சுற்றியிருந்த அனைவரும் பிடித்து அடிக்கத் துவங்க, பாதுகாவலர் என அனைவரும் ஓடி வர, நீரஜா போலீஸிற்கு தகவலை அனுப்பிவிட்டார்.
வந்த போலீஸும், “என்ன தைரியம் இருந்தா டாக்டர் மேல கையை வைப்ப?” என்று சேரனையும் சங்கரையும் அடித்து இழுத்துச் செல்ல, அடி வாங்கிய மருத்துவரோ மிகப் பெரிய இடம். அவர்களை பெயிலில் கூட வெளியே வராத மாதிரி செய்துவிட, சேரனின் மனைவி, பிள்ளைக்கு வேறு ஒரு உறவினர் கொள்ளி வைக்கும்படி ஆனது. சும்மாவே நீரஜாவின் மீதும், விஜய்யின் மீதும் கொல்லும் ஆத்திரத்தில் இருந்தவன், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளையை இறுதியில் பார்க்கக் கூட முடியவில்லை என்ற வேதனையில், வெறி பிடித்துப் போனான்.
கூடவே சங்கர். அவன் சிறு வயதில் இருந்தே சற்று கோணல் புத்திக்காரன். அவன் வேறு அடிக்கடி பழையதை சேரனுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்க, நீரஜாவின் வாழ்க்கையை நன்றாக இருக்க விடக்கூடாதென்ற லட்சியம் அவனுள் எழுந்தது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்தவன், நீரஜாவையும் விஜய்யையும் கவனிக்கத் துவங்கினான். நீரஜாவின் புன்னகை பிரியாத வதனத்தைக் கண்டு கை முஷ்டிகள் இறுக தினமும் தூரமாக நிற்பவன், “உன்னை வாழ விடமாட்டேன்” என்று தினமும் அதை மந்திரமாய் உச்சரிக்கத் துவங்கினான்.
ஊரை காலி செய்தது போன்று அக்கம் பக்கத்தில் எல்லாம் கூறியவன், சிட்டிக்கு வெளியே ஒரு சிறிய வீட்டை அவனே கட்டி முடித்தான். தன் அடையாளங்களை மாற்றிக் கொண்டான். நிறைய உழைத்து சம்பாதித்தான். அரசியலிலும் இறங்கினான். மனைவியின் நகைகளையும் விற்று கையில் பணம் வைத்திருந்தான்.
நினைத்தது போலவே கரும்பு காட்டில் ஒளிந்து நின்று நீரஜாவின் திட்டத்தை அறிந்து கொண்டவன், சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுத்து அனாதை பிணத்தை வாங்கியவன், அவ்விடத்தில் துளி சந்தேகமின்றி ஆளை மாற்றி, விஜய்யை தூக்கியிருந்தான்.
அதன்பிறகு விஜய் தினமும் அனுபவித்தது துன்பங்களே. அவருக்கு ஆறுதலாக எப்போதும் இருந்தது சேரன் வந்து அவனாக கூறும் செய்திகளே.
“உன் நீரஜா கர்ப்பமா இருக்கா போல?” என்று அவன் கூறியபோது கூட விஜய் தன்னவளை சந்தேகிக்கவில்லை.
“உன் குழந்தைதானாம்… எல்லாருக்கு குறையா இருக்கு உனக்கு நிறை போல” என்று மதுவின் தள்ளாட்டத்தில் ஆடியவன், “குழந்தையை தனியா எப்படி இந்த சமூகத்துல வளக்கிறானு பாக்கறேன்” என்று வக்கிரத்துடன் கத்தினான்.
அடுத்து சில தினங்களில், “உன் நண்பனுக்கு தத்து கொடுத்திட்டா குழந்தையை… இந்த மாதிரி ஒரு தண்டனை அவ வாழ்க்கைல அனுபவிக்க வேண்டியது தான்… என்னோட வலி அவளுக்கு புரியட்டும்…” என்று ஒவ்வொரு முறையும் தன்னவள் அனுபவிக்கும் வலியை பார்த்து அவன் ரசித்துச் சிரிக்க, விஜய்யால் எதுவுமே செய்ய இயலவில்லை. தப்ப முடியாதவாறு அடைத்து வைத்திருந்தான்.
காரணம் தப்பித்தால் தன்னுடைய அன்னை தந்தையை சேரன் குறி வைத்திருந்ததை விஜய் அறிவார்.
அதனால் தான் அமைதியாக இருந்தது. நீரஜா வேறொரு திருமணம் செய்து நன்றாக வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாளும் எண்ணினார். ஆனால், நறுமுகை என்ற குழந்தையை நீரஜா தத்தெடுத்திருப்பது கேள்வி பட்டவருக்கு உடல் எல்லாம் சிலிர்த்து போனது.
என்ன மாதிரியான காதல்!
இங்கு திருமணமாகி சண்டையிட்டு பிரிந்து வேறொரு மணம் புரிந்து வாழ முன்னேறிக் கொண்டிருந்த சமூகத்திற்கு மத்தியில், நீரஜாவின் காதல் விஜய்யிற்கு அன்றெல்லாம் பெரும் பிரம்மிப்பை கொடுத்தது.
அதே போலத்தான் உத்ராவை அவர்கள் கடத்திக் கொண்டு வந்தபோது முதலில் பார்த்தது. அப்போது தான் அவர் தன் பொறுமையை எல்லாம் பறக்கவிட்டது.
‘தனக்கு எனும்போது வராத கோபம் கூட தன் உதிரம் எனும் பொழுது வரும்’ என்பதற்கேற்ப சங்கரின் கரத்தில் இருந்த துப்பாக்கியை தன் மகளை துகிலுரித்த பின், உத்ராவின் மீது கரம் வைக்க போன ஒருவனை சுட்டிருந்தார் விஜய்.
துப்பாக்கிச் சப்தத்தில் நடுங்கிப் போனவள் அதன் பின்பு தான் சீசர்ஸ் வந்து கீழே விழுந்தது. விழிகளை மூடும் பொழுது கூட தன்னைக் காப்பாற்றியது தனது தந்தை என்று அறியாமல், அவரின் உருவத்தை மட்டும் நன்றியுடன் விழிகளுக்குள் சேமித்துக் கொண்டு கீழே விழுந்திருந்தாள் பெண்ணவள்.
அதன்பிறகு தன் அன்னை தந்தையே சில தினங்களுக்கு முன் இறந்தவிட்டதை அறிந்தவர், தப்பித்துவிட்டார்.
சேரன் மொத்த குடும்பத்தையும் குலைக்க நினைத்து ஒன்றை செய்திருக்க, அனைத்தும் அவர்களுக்கு நல்லதாகவே முடிந்து கொண்டிருந்தது. அந்த வெறியில் தான் அவன் இப்போது அனைத்தையும் செய்து கொண்டிருப்பது.
நினைவில் இருந்து வெளியே வந்த நீரஜாவின் விழிகள் செம்பிழம்பாய் சிவந்து போக, கண்களில் நீர் தேங்க, செவ்வரிகளில் பளபளத்த விழிகளோடு சங்கரின் தலையோடு இருந்த வாளை இறுக்கிப் பிடித்தவர், சங்கரின் தலையை காலால் எட்டித் தள்ளிவிட்டு, பத்ரகாளியாய் வாளை எடுத்து சேரனை நோக்கி அதி வேகத்துடன் வீச, அவனோ விக்ரமின் அழுத்தத்தையும் மீறி, வாளை பிடித்துவிட்டான்.
விக்ரமை தள்ளிவிட்டவன், நீரஜாவின் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அழுத்தித் தூக்க, திலோத்தமையும் நறுமுகையும் அபிமன்யுவை கதறி உலுக்க, விக்ரம் சென்று சேரனின் பின் மண்டையில் அடிக்க, சட்டென நீரஜாவை விட்டவன், அந்த வலியிலும் இரத்தம் வாயில் வழியத் துவங்கிய போதும் சத்தமாய் சிரித்தவனின் குரல்வளையை பிடித்திருந்தது அபிமன்யுவின் கரம்.
அங்கிருந்த அனைவரும் அபிமன்யுவின் ஈரமான விழிகள் ஒரு உலுக்கு உலுக்கிவிட, அவனின் தீப்பிழம்புகளாய் ஜொலித்துக் கொண்டிருந்த விழிகளை கண்ட சேரன், தன் மரணத் தருவாய் வந்ததை உணர்ந்து கொண்டவன், “உன்னை கடைசி வரை தனியா நிக்க வச்சனா அபிமன்யு” என்று சிரிக்க, அவனை சுவற்றில் அடித்துச் சாத்திய அபிமன்யு, விடாமல் அவனின் முகத்தில் அடிக்க, அடி விழுந்த சப்தத்தில் அங்கிருந்த திலோத்தமையின் தோளில் மித்ரா நடுக்கத்துடன் சாய்ந்து கொள்ள, நீரஜா இமை மூடாது அதை பார்த்துக் கொண்டிருந்தார்.
அபிமன்யு கண்மண் தெரியாது அடித்துக் கொண்டிருக்க, “மாமா!” என்ற குரல் அந்த சர்ச் எங்கும் எதிரொலிக்க, சட்டென அடித்துக் கொண்டிருந்த கரத்தை நிறுத்திய அபிமன்யுவின் செவிகள் தன்னவளின் குரலில் அசைய, தன் எதிரில் இருந்த நரியின் திருட்டு முழியில், அபிமன்யுவின் விழிகள் வாகையுடன் புன்னகைக்க, ஏற்கனவே இரத்தம் வழிந்து கொண்டிருந்த முகத்தில் மேலும் ஒரு இடியை இறக்கியவன் அங்கிருந்து நகர முயற்சிக்க, அபிமன்யுவின் மேல் பாய்ந்தவன், அபிமன்யுவை தாக்க முயற்சித்தான்.
வெறி பிடித்தது போன்று சேரன் அபிமன்யுவின் கழுத்தை நெறித்து கடிக்க முயற்சிக்க, அவனின் தலையில் விக்ரம் எத்தனை அடி கொடுத்தும் பயனில்லை.
சேரனை கீழே போட்டு மேலே வந்த அபிமன்யு அடுத்து கொடுத்த அடியில் மயக்கத்தைத் தழுவ, சப்தம் வந்த திசையை நோக்கி அனைவரும் செல்ல, “உத்ரா!” என்று விழிகளில் இலேசாக உருவான நீருடன் தன்னவளை கத்தி அழைத்தான் அபிமன்யு.
“மாமா!” என்று மீண்டும் குரல் கொடுத்த திசையை நோக்கி ஓடிய அபிமன்யு, பின்னே யாரும் வருகிறார்களா என்றுகூட பார்க்கவில்லை. அபிமன்யு ஆதி முதல் அந்தம் வரை காணாத பயத்தை எல்லாம் இந்த ஒற்றை பேராபத்தான மாலையில் கண்டுவிட்டான்.
“மாமா” என்று மீண்டும் அழைத்த உத்ரா இருக்கும் அறையை எட்டி உதைத்து உடைத்தவன் உள்ளே செல்ல, உள்ளே முழுதாக நனைந்து வெடவெடத்துப் போய் அமர்ந்திருந்தாள் அந்த ஏகாதிபதியின் மனைவி. ஆனால், அந்த ஏகாதிபதியே அவள் இப்போது என்ன கூறினாலும் கேட்கும் அளவில் வைத்திருந்தது விதி நடந்தி முடிந்திருந்த ஆட்டம்.
உத்ராவை கண்டவுடன் அவளை ஓடிச் சென்று கைகளில் இருந்த கட்டுகளை அவிழ்த்தவன், முழுதாக அவிழ்ந்து முடித்துவிட்டு தன்னவளை பார்க்க, அபிமன்யுவின் ஈர விழிகளை பார்த்தவளுக்கு தொண்டை அடைத்தது.
சில விநாடிகளே நிசப்தம்…
அடுத்த நொடி இரு காதலை சுமந்திருந்த நெஞ்சங்களும் ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக்கொள்ள, “உங்கள இனி பாக்கவே மாட்டேன்… செத்து போயிடுவனோன்னு பயந்தேன்… ஒரு நாளாவது வாழ்ந்திருக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு வச்சிடுச்சு விதி” என்று கூறி விக்கி விக்கி அழும் மனையாளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவனின் காதல் தன்னவளின் வார்த்தைகளில் சுனாமியாய் எழ, அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், அப்போது தான் அவளின் மேல் வந்த வாசத்தினை உணர்ந்தான்.
“பெட்ரோல் ஊத்துனானா?” என்று அபிமன்யு வினவ, அருகில் வந்த விக்ரம் உத்ராவின் தலையில் அருகில் இருந்த தண்ணீர் பக்கெட்டுகளை எடுத்து ஊற்ற,
“ஸாரி மாமா” என்றாள் விக்ரமிடம்.
மற்றவர்கள் எல்லாம் ஷாப்பிங் சென்றிருக்க, தானும் செல்வேன் என்று அனைவருக்கும் உத்ரா சர்ப்ரைஸ் கொடுக்க மாலிற்கு சென்றிருக்க, அங்கு அவளின் பாடி கார்ட்ஸை அடித்துவிட்டு மொத்த பெண்களையும் தூக்கியிருந்தான் சேரன்.
உத்ராவின் மேல் தண்ணீரை ஊற்றி முடித்த விக்ரம், “இதைதான் உத்ரா நான் முன்னாடி இருந்து சொல்லிட்டு இருந்தேன்… நான் சொல்றதை கேளுன்னு” என்று கடிய, கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை அபிமன்யு தட்டிக் கொடுக்க, அனைவரும் வெளியே வந்தனர்.
அனைவரும் வெளியே வர, தன்னவளின் இதழில் அழுந்த முத்தமிட்ட அபிமன்யு, “பர்ஸ்ட் டைம் ஸாரி கேக்க வச்சதும் இல்லாம அழ வச்சுட்ட டி.. நீன்னு நினைச்சு அங்க கிடந்த உடம்பை பாத்தப்ப தான்டி புரிஞ்சுது.. இந்த உத்ரா இல்லாம இந்த சித்தார்த் அபிமன்யு இல்லைனு” என்று தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை அழுந்த வருடி விழியில் உருவான கண்ணீர் ரேகையை மறைத்துக் கூற, தனது இல்லாத மீசையை அழுது முடித்த விழிகளோடு முறுக்கியவள், “சித்தார்த் அபிமன்யு பொண்டாட்டினா சும்மாவா.. அபிமன்வையே மாத்திட்டா இல்ல” என்று கேட்க, அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மகளைப் பார்த்து திரும்பிய நீரஜா, “அப்புறம் ஏன்டி கத்துனா?” என்று கோபத்துடன் கேட்க,
“பின்னே என் கண்ணு முன்னாடி ஒரு உடம்பை போட்டு எரிச்சா… பயம் வராதா.. நான் என்ன என் புருஷனோட மாமியாரா.. எது வந்தாலும் பீரங்கி மாதிரி நிக்க” என்று அன்னையை சீண்டியவள் கணவனை பார்க்க, மகளின் அருகே வந்த நீரஜா, மகளின் கன்னத்தை கொட்டிவிட்டே சென்றிருந்தார்.
இவர்கள் முன் வழியாக செல்ல, இயேசுவின் முன்னே நின்றிருந்த நறுமுகை, “எங்க குடும்பத்தை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி” என்று கடவுளிடம் மானசீகமாக உருகி நன்றி உரைத்தவள் திரும்ப, அபிமன்யுவும், உத்ராவும் சர்ச்சின் வாசற் கதவில் அனைவருக்குமாக நின்றிருந்தனர்.
விக்ரமின் விழிகளும் அபிமன்யுவின் விழிகளும் சிறு புன்னகையுடன் உரசிக் கொள்ள, அப்போது மீண்டும் உள்ளே வந்தான் அந்த கடும் பாதகன். சர்ச்சின் இடையே உள்ள வழியாக வந்தவன், “இந்த இடத்தை விட்டு உங்களை உயிரோட அனுப்பமாட்டேன்” என்று சொட்டும் குருதியோடு அந்த சர்ச்சே வீறிட்டு அலறும் வண்ணம் கத்த, நீரஜாவின் கரங்களில் இருந்த வாள்களை வாங்கிய விக்ரம், தூரத்தில் இருந்து சரியாக அபிமன்யுவிடம் ஒன்றை வீசினான்.
இரு வேங்கைகளும் இரு புள்ளிகளில் நிற்க, இடையே இரை கொக்கரிக்க, பாயத் தயாராகிய இரு வேங்கைகளின் வலது கால்கள் பின்னே பாய ஒரு எட்டு வைக்க, கண்களால் அரங்கேறிய சம்பாஷணைகளிலேயே புரிந்து கொண்ட இரு காளைகளும் அடுத்த விநாடி வில்லனை நோக்கி சீறிப் பாய, இருவரின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்திலும், அதிவேக ஓட்டத்தில் தெறித்த வெறியிலும், மரணத்தை தழுவ இருந்த நேரத்திலும்,
ஆங்காரமாய் கத்தியவனை ஒரே நேரத்தில் நெருங்க, அபிமன்யு வேங்கையை போன்றே பாய்ந்து கரத்தில் இருந்த பளபளக்கும் நீள் வாளை தன் தலைக்கு மேல் கொண்டு சென்றவன், சேரனின் உச்சந்தலையில் வாளை இறக்கி, செங்குத்தாக அவனின் உடலை இரண்டாக பிளக்க, வரும்பொழுதே ஓட்டத்தை நிறுத்தி, தீப்பொறிகள் அணிந்திருந்த ஷூவில் பறக்க வந்த விக்ரம், சேரனின் இடையில் வெட்ட, அதாவது கிடைமட்டமாக அவனின் உடலை பிளக்க, நான்கு பாகங்களாய் இரத்தம் சிதற கீழே விழுந்தது அந்த ராட்சஷனின் உடல்.
யுத்தத்தின் இறுதியில் சின்னபின்னமாகி விழுந்து கிடந்தவனை பார்த்த இருவரின் உள்ளங்களும், ஆத்திரம் தீராத எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்க, மனையாளை திரும்பிப் பார்த்த விக்ரம், ஒற்றை தலையசைப்பில் வெளியே செல்ல கட்டளையிட, அனைவரும் வெளியே சென்றதும், அபிமன்யுவை பார்த்தான்.
சுடாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக் கங்குகள் எவ்வாறு இருக்குமோ அப்படி இருந்தது அவனின் வதனம். குருதி சிறிது வதனத்தில் தெறித்திருக்க, அருகில் இருந்த பலகையில் சென்று அமர்ந்து வாளை திருப்பி வைத்து கம்பீரமாக அமர்ந்த அபிமன்யுவை பார்த்த விக்ரமின் மனம், ‘இவன் என் அண்ணன்’ என்று பெருமிதம் கொள்ள, எதிரே இருந்த பலகையில் அமர்ந்தான் விக்ரம்.
சிறிது நேரத்திலேயே வந்த கௌதம் சர்வ சாதாரணமாக கீழே கிடந்தவனை பார்த்துவிட்டு, அபிமன்யுவை பார்க்க, “இந்திரஜித்தை வர சொல்லு கௌதம்” என்று உறும, சிம்மத்தின் வருகையை உணர்ந்த அவ்விடம், உலகில் உள்ள அத்தனை கடவுள்களையும் துணைக்கு அழைக்க, கௌதம் அழைத்த அரைமணி நேரத்தில் வந்து நின்றது, வெண்மை வர்ண ராட்சஷ லம்போர்கினி அவென்டடோர்.
வெளியே அனைவரையும் சமாதானம் செய்து கொண்டிருந்த நீரஜா வந்தது யாரென்று அறிந்தவுடன் எழ, காரில் இருந்து அசாத்தியமான உயரத்திலும், அபரிதமான மையலுடன், கம்பீரமான தோரணையுடன் தன் பதவிக்கே உண்டான பெருஞ்செழிப்புடன் இறங்கினான் இந்திரஜித் பிரபஞ்சன்.
இறங்கியவன் விநாடி கூட தாமதிக்காது வர, அவனிடம் ஓடிச் சென்ற நீரஜா பதட்டத்துடன் அனைத்தையும் கூற, ஒற்றை புன்னகையில், “நான் எதுக்கு இருக்கேன் ஆன்ட்டி…” என்று அவர் கரம் பிடித்து கூறியவன் உள்ளே நண்பர்களிடம் செல்ல,
யோசனையாய் பார்த்த உத்ரா,
“இது நம்ம சீஃப் மினிஸ்டர் இந்திரஜித் பிரபஞ்சன் தானே” என்று கேட்க, நறுமுகை ஆம் என்பது போல தலையசைத்தாள்.
(இந்திரஜித் பிரபஞ்சன் – என்னுடைய அடுத்த நாவலான கடாரம் கொண்டானின் கதாநாயகன். இப்போதே அறிமுகம் செய்துவிட்டேன் அபிமன்யு, விக்ரம், கௌதமின் நண்பனாக.)
உள்ளே நுழைந்த இந்திரஜித், அபிமன்யுவையும் விக்ரமையும் பார்க்க, வேங்கைகளுக்கு எதிரே இருந்த சிம்மத்திற்கு புரிந்தது, வெறியில் இருவரும் குருதி குடித்ததை பற்றி.
கௌதமை பார்த்தவன், “நீ கேஸ் பைல் பண்ண வேணாம் கௌதம்… இருக்க தடயத்தை எல்லாம் அழிச்சிடுங்க… மத்ததை நான் பாத்துக்கறேன்” என்றவுடன் எழுந்த அபிமன்யு,
“இவன் உன் கட்சியோட எக்ஸ் எம்எல்ஏ… இப்ப பத்து வருஷமா இல்லைனாலும் இவனோட இறப்பை தோண்ட காத்திட்டு இருப்பாங்க…” என்றவனின் தோளில் தட்டிய இந்திரஜித்,
“பத்து வருஷம் இருந்தாலும் சரி பத்து செகன்ட் இருந்தாலும் சரி அபி… அப்படி ஒரு ஆளே இல்லாம என்னால செய்ய முடியும்… இல்லாதவனை உருவாக்கவும் தெரியும்… ஸோ டோன்ட் வொர்ரி” என்றவன்,
“வெளியே லேடிஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க… வீட்டுக்கு அனுப்பலாம் பர்ஸ்ட்” என்றவன் அடுத்து யாருக்கோ அழைத்து கட்டளை பிறப்பிக்க, அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்ற இரண்டு கார்களில் பெண்களை ஏற்றி அனுப்பினர் ஆண்கள் நால்வரும்.
ஏதோ கூற வந்த உத்ராவின் கரம் பிடித்த அபிமன்யு, “கிளம்பு… வந்து பேசலாம்” என்று அனுப்பி வைக்க, ஐவரையும் அனுப்பி வைத்தவர்கள் உள்ளே வர, இரத்தம் படிந்திருந்த சட்டையை கழற்றிய விக்ரம், அதைத் தூக்கி எறிய, இந்திரஜித்தை பார்த்த அபிமன்யு, “சட்டை இருந்தா கொடு மச்சி” என்று வினவ, தனது காரில் எப்போதும் வைத்திருக்கும் சட்டை பையை எடுத்தவனை பார்த்து மற்ற மூவரும் சிரித்தனர்.
“இதுக்குதான் அரசியல்வாதி ஆகனும்னு சொல்றது… இப்படி சட்டை சட்டையா வச்சுட்டு சுத்தலாம்” கௌதம் கேலி செய்ய,
“நீ கலெக்டர் என்ன வேணாலும் பேசுவ” என்ற இந்திரஜித் தன்னுடைய ஒரு சட்டையை எடுத்து விக்ரமிற்கு முதலில் கொடுத்தவன், அடுத்து ஒரு சட்டையை எடுத்து அபிமன்யுவிடம் நீட்டினான்.
பின் என்ன நினைத்தானோ, ஒரு புன்னகையுடன், “அபி இஃப் யூ டோன்ட் மைன்ட் நான் இப்ப போட்டிருக்க சட்டையை போட்டுக்கறியா? இப்ப நான் எடுத்தது என்னோட ஸ்பெஷல் சர்ட்” என்றிட, மூவரும் ஒன்றாக, “ஓஹோ” என்று கோரஸ் பாட, கரத்தை நீட்டினான் அபிமன்யு.
இப்படி யாரின் சட்டையையும் அணிய மாட்டான் அபிமன்யு. ஆனால் இந்திரஜித்திடம் தனி தான். நண்பனின் மேல் கொண்ட பாசம், குடும்பத்தின் மேல் கொண்ட அளவிற்கு இருந்தது. அதனாலேயே மறு பேச்சு பேசாது கரத்தை நீட்டினான்.
தன்னுடைய சட்டையை அபிமன்யுவிடம் கழற்றி கொடுத்த இந்திரஜித், தன்னுடைய வெண்மை நிற சட்டையை எடுக்க, அதிலோ ஒரு கடுகளவு சிவப்பு பொட்டு ஒட்டியிருக்க, முதலில் அதை பார்த்த விக்ரம், “இப்ப எல்லாம் ஊட்டிக்கு பக்கத்துல அதிகமா போறியாமே?” என்று வினவ,
அபிமன்யுவும், “தங்கிட்டு வர்றதாவும் நியூஸ்” என்றான் சட்டையின் பட்டனை அணிந்து கொண்டே.
“ஒரு நாள் இல்ல… இந்த தடவை ஒரு வாரம்னு கேள்விப்பட்டேன்” என்று கௌதமும் கூற, வரிசை பற்கள் தெரிய சத்தமாய் சிரித்தான் இந்திரஜித்.
அபிமன்யுவின் உடல் இங்கிருந்தாலும், உள்ளம் முழுவதும் மனையாளையே தேடிக் கொண்டிருக்க, எப்போதடா செல்வோம் என்றிருந்தது அவனுக்கு.
‘A Chess is like husband and wife,
Where king moves one step at a time,
While the queen can do whatever she wants’
என்ற வரிகள் அபிமன்யுவின் தலையில் அடிக்க, தன்னை காதலெனும் கட்டுக்குள் இறுக்கி பிடித்து வைத்தவளை, நினைத்த அபிமன்யுவின் உள்ளம் தன்னவளை இப்பொழுதே தேட, குளியல் அறையில் இருந்து வெளியே வந்த உத்ரா, தன்னுடைய இரவு உடையை அணிந்து வந்து, அபிமன்யுவின் படுக்கையில் விழுந்தாள்.